Published:Updated:

``எதையும் மற்றவரிடம் தெரிவிப்பதற்குப் புத்தக வாசிப்பு அவசியம்!'' - செல்லூர் ராஜு

"திராவிட இயக்கம் தோன்றிய பிறகுதான் வாசிக்கும் பழக்கம் தமிழக மக்களிடம் வந்தது. அறிஞர் அண்ணா முதல் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரை எல்லோரும் அதன் வழி வந்தவர்கள்தான்."

Sellur K. Raju
Sellur K. Raju ( வி.சதீஷ்குமார் )

"திராவிட இயக்கம் தோன்றிய பிறகுதான் புத்தகம் வாசிக்கும் பழக்கம் தமிழக மக்களிடம் ஏற்பட்டது'' என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

Sellur K. Raju
Sellur K. Raju
வி.சதீஷ்குமார்

சமீபகாலமாகத் திராவிடக் கொள்கைகளுக்கு எதிராக அ.தி.மு.க போய்க்கொண்டிருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதற்குத் தகுந்தாற்போல் அ.தி.மு.க அரசும் பி.ஜே.பி எடுக்கும் கொள்கைகளை ஆதரித்தே வருகிறார்கள். இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு இப்படிப் பேசியுள்ளதை அனைவரும் வியப்புடன் பார்க்கிறார்கள்.

மதுரை தமுக்கத்தில் புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய செல்லூர் ராஜு, "புத்தகக் காட்சியில் கலந்துகொள்வதுபோன்ற மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை. எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், செல்வந்தராக இருந்தாலும், தான் கற்றதை மற்றவரிடம் சொல்கிற திறமை வேண்டும். அதற்குப் புத்தக வாசிப்பு அவசியம்.

Madurai Book Festival - Sellur Raju
Madurai Book Festival - Sellur Raju
வி.சதீஷ்குமார்

திராவிட இயக்கம் தோன்றிய பிறகுதான் வாசிக்கும் பழக்கம் தமிழக மக்களிடம் வந்தது. அறிஞர் அண்ணா முதல் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரை எல்லோரும் அதன் வழி வந்தவர்கள்தான். அம்மா தினமும் ஒரு மணி நேரம் படித்துவிட்டுத்தான் தூங்கச்செல்வேன் என்று சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில்தான் அறிவாளிகள் அதிகம் இருக்கிறார்கள்.

எந்த வளர்ந்த நாடாக இருந்தாலும் அவர்களுடன் போட்டிபோட திறமையுள்ளவன் தமிழன். கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. கணினி அறிவு இன்று வளர்ந்துள்ளது. விஞ்ஞானி சிவன் பெரிய சாதனையைப் படைத்துக் காட்டியுள்ளார். அதற்குக் காரணம் படிப்புதான். அதுதான் அவருக்கு உந்து சக்தி. அப்துல் கலாம் பெரிய ஆளாக உயரக் காரணம், புத்தக வாசிப்புதான். மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை இன்று உலகின் பெரிய நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். அதற்குக் காரணம், கல்வியும், புத்தக வாசிப்பும்.

Madurai Book Festival - Sellur Raju
Madurai Book Festival - Sellur Raju
வி.சதீஷ்குமார்

மதுரையில் பல அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் பிறந்துள்ளார்கள். உலகத்துக்கே ஒரு நகரத்தின் அமைப்பு எப்படியிருக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டியது மதுரை. படிக்கப் படிக்க அறிவும், மனத்தெளிவும் உண்டாகும். அண்ணா, அம்பேத்கர் போன்றவர்கள் எப்போதும் படித்துக்கொண்டே இருந்தனர்.

இன்றுள்ள நம் சந்ததியினருக்கு உறவினர்களைப் பற்றித் தெரிவதில்லை. கைப்பேசிக்குள் மூழ்கிக் கிடக்கிறார்கள். நவீனமும் வேண்டும், அதே நேரம் நம் பண்பாட்டையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஊடகங்களே... எங்கள் படங்களை வெளியிடுவதைவிட இந்தப் புத்தகத் திருவிழாவைப்ப்பற்றி எழுதுங்கள்.

Sellur Raju
Sellur Raju
வி.சதீஷ்குமார்

புத்தக வாசிப்பு எப்படிப்பட்டது என்பதற்குச் சில உதாரணங்களைக் கூறலாம். தூக்கில்போடும் நேரத்தில்கூட, 'அரை மணி நேரம் அனுமதி கொடுங்கள். லெனின் பற்றிய புத்தகத்தைப் படித்து முடித்தபின் தூக்கில் போடுங்கள்' என்று பகத்சிங் கோரிக்கை வைத்திருக்கிறார். அதுபோல் அண்ணாவுக்கு ஆபரேஷன் செய்யும் நேரத்திலும், 'ஒருநாள் தள்ளி வையுங்கள். ஒரு புத்தகத்தை முடிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

எனக்கும் சின்ன வயதிலிருந்தே வாசிக்கும் பழக்கும் தொடங்கிவிட்டது. அதற்குக் காரணம், எங்கள் விடுதியின் ஆசிரியர். என்னைத் தினமும் நாளிதழ்களில் வரும் தலைப்புச் செய்திகளை எழுதி, பள்ளியில் வாசிக்கச் சொல்வார். இதற்காக தினமும் காலையில் உசிலம்பட்டிக்குச் சென்று புத்தகக் கடையில் நாளிதழ்களைப் பார்த்து அதிலுள்ள தலைப்புச் செய்திகளைக் குறித்துக்கொண்டு வருவேன். நான்கு ஆண்டுகள் இப்படிச் செய்தி வாசித்தேன்.

Sellur Raju
Sellur Raju
வி.சதீஷ்குமார்

புரட்சித் தலைவரே 'முரசொலி', 'சமநீதி' போன்ற இதழ்களைப் படிப்பதுபோல படங்களில் காட்சி வைத்திருப்பார். அதைப் பார்த்து மக்களும் புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினார்கள். நானும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் புத்தகம் வாசித்து வருகிறேன். தற்போது நம் மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் புத்தகங்கள் அனைத்தையும் படித்து வருகிறேன்'' என்றார்.

அரசியல் இல்லாமல் புத்தக வாசிப்பு பற்றிச் செல்லூர் ராஜுவின் வெளிப்படையான பேச்சு அவரை வேறொரு கோணத்தில் பார்க்க வைத்துள்ளது.

Madurai Book Festival - Sellur Raju
Madurai Book Festival - Sellur Raju
வி.சதீஷ்குமார்

அதே நேரம், செல்லூர் ராஜுவிடம் கவித்துவம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், அன்றைய தினம் தன் தாயாரின் நினைவு நாளுக்கு அவர் கொடுத்த நாளிதழ் விளம்பரங்களில்,

'நான் மெருகேறி வளர

தான் மெழுகாக உருகியவளே

கூட்டத்தில் குறைவின்றி நான் உயர

தனியாய்த் தகிக்கும்

தரையமர்ந்து உழைத்தவளே

பார்வைக்கு நீ மறைந்து

ஆண்டொன்று கடந்தாலும்

தாயே ஒச்சம்மா...

ஒட்டிய உடம்போடே

நீ கொட்டி வளர்த்த பாசம்

இன்னும் குறையாமே இருக்குதே மிச்சம்மா...

- என்று எழுதியிருந்தார்.