
இந்தியாவின் 10 கோடிக்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் வனங்களை அடிப்படையாகக்கொண்டு வாழ்கிறார்கள். தங்களைச் சுற்றிய காடுகள்தான் இவர்களின் வாழ்வும் வாழ்வாதாரமும்.
விடிகின்ற ஒவ்வொரு நாளிலுமே, உலக வரைபடத்தின் ரேகைகள் விரியும் எல்லா திசைகளிலுமே, ஏதேனும் ஒன்றை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம்தான் இருக்கின்றன. போராட்டங்கள், மக்களாட்சியின் இன்றியமையாத ஒரு பகுதி. போராட்டம் என்பது கேட்காத காதுகளை நோக்கிய ஒரு குழந்தையின் குரலுயர்த்திய அழுகை... பார்க்க மறுக்கும் கண்களை நோக்கி கவனம் ஈர்க்கும் செயல்... ஒரு மனிதனோ குழுவோ தன் பிரச்னையை, தேவையை, நியாயத்தை உலகுக்கு அறிவிக்கிற முரசு... போராட்டம் என்பது சமூக வாழ்வியலில் மனிதனின் முதல் உரிமை மற்றும் கடைசி நம்பிக்கை, ஆயுதம்!
சமூக, அரசியல், பொருளாதார உரிமை மறுப்புகள், வன்முறை, அதிகாரக் கட்டுப்படுத்தல்கள், சுரண்டல்கள் என அநீதிகள் பல்வேறு வடிவங்களில் ஒவ்வொரு சமூகத்திலும் இருந்தன / இருக்கின்றன. தங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது எனக் கருதிய தனிமனிதர்கள், குழுக்கள் உலகம் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்த்திய மிக முக்கியமான போராட்டங்களையும் அதன் பின்னணியில் அந்தச் சமூகத்தில் நிலவிய பிரச்னைகளையும், அந்தப் போராட்டங்கள் இந்தச் சமூகத்துக்குப் பெற்றுத்தந்த உரிமைகளையும் அனுபவங்களையும் இந்தத் தொடர் ஒவ்வோர் இதழிலும் சித்திரிக்கக் காத்திருக்கிறது.
சிப்கோ: மரங்களைக் கட்டித்தழுவிக் காத்த மக்கள்!
மன்னரின் கோடாலிகளுக்கு எதிராக, தங்கள் உயிரைத் துச்சமென எண்ணி, மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று மரங்களைக் கட்டித் தழுவுகிறார்கள். மரங்களைக் காக்க, தங்கள் உயிரைவிடவும் துணிகிறார்கள். இந்தக் காட்சியை யோசித்துப் பாருங்களேன்... மரங்களின் மீது எவ்வளவு நேசமிருந்தால், ஆயுதங்களுக்குத் தன் உடலைக் காட்டியபடி ஒருவர் மரத்தைக் கட்டித் தழுவுவார்... என் கண்களில் இந்தக் காட்சி விரிந்து நிற்கிறது, அகல மறுக்கிறது!
1730-களில் ராஜஸ்தானை ஆட்சிசெய்த ஒரு மன்னர், தனக்குப் புதிய அரண்மனை ஒன்றைக் கட்டுவதற்காக, காட்டை வெட்ட உத்தரவிடுகிறார். மன்னரின் உத்தரவை நிறைவேற்ற, பெரும் படை பரிவாரங்கள் காட்டை நோக்கிச் செல்கின்றன. “இந்தக் காட்டை வெட்ட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று அம்ரிதா தேவி எனும் பெண்மணியின் தலைமையில் அங்கு வாழும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மரங்களைக் கட்டித் தழுவியபடி நிற்கிறார்கள்.
மன்னரின் படை, சாமானியர்களின் கோரிக்கையை மதிக்குமா... மன்னரின் உத்தரவை மதிக்குமா? அம்ரிதா தேவி, அவரின் இரண்டு மகள்கள் உள்ளிட்ட 260 பேரை வெட்டிச் சாய்க்கிறார்கள். அந்தக் காடு ரத்த வெள்ளத்தில் மிதக்கிறது. அந்தக் கோரக் காட்சி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மன்னர் மனம் மாறி, தனது புதிய அரண்மனை கட்டும் திட்டத்தைக் கைவிடுகிறார்.
இந்திய-சீனப் பதற்றம் நிலவிய 1963 காலகட்டத்தில், பல வளர்ச்சித் திட்டங்களை அசுர வேகத்தில் செயல்படுத்த அரசு முனைந்தது. இந்தத் திட்டங்களுக்காக ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டன. இந்தக் காடுகளைச் சுற்றி ஏராளமான மக்கள் வசித்தனர். கண்மூடித்தனமாக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டதால், அதன் விளைவுகளை மெல்ல மெல்ல மக்கள் அனுபவிக்கத் தொடங்கினார்கள். அடுத்தடுத்த வருடங்களில் பெரும் நிலச்சரிவு ஏற்படுகிறது; வேளாண்மையில் மகசூல் குறைகிறது; நிலத்தடி நீர் குறைந்துபோகிறது; சிறிய காட்டு ஓடைகள் வறண்டுபோகின்றன; குடிதண்ணீருக்குக்கூட பற்றாக்குறை ஏற்படுகிறது. 1970-ல் பெரு வெள்ளமும் அந்தப் பகுதி இதுவரை பார்த்திராத கடும் சேதங்களை ஏற்படுத்துகிறது.
பழங்குடிகள், வனங்களுக்குள் சென்று காய்ந்த மரங்களை விறகுக்காக வெட்டக்கூடத் தடை விதிக்கிறது அரசு. அதேநேரத்தில், விளையாட்டுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு மரங்களை வெட்ட முழு அனுமதி அளிக்கிறது. 1973-ல் உத்தரப்பிரதேசத்தின் மண்டல் கிராமத்தில், சாந்தி பிரசாத பட் எனும் காந்திய இயக்கப் போராளி, காடுகளை அரசு அழிக்க முற்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அல்கானந்தா பள்ளத்தாக்கு முழுவதும் எதிர்ப்பின் நடவடிக்கைகள் தொடங்கின. சிப்கோ ஓர் இயக்கமாக உருவெடுத்தது. இந்த முறை பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மரங்களைக் கட்டித் தழுவி நின்றார்கள். “இந்த மரங்களை வெட்டுவதற்கு முன் எங்களை வெட்டுங்கள்!” என்றார்கள்.

இந்தப் போராட்ட உத்தி, மெல்ல மெல்ல எல்லாத் திசைகளிலும் பரவியது. ரேனி எனும் ஊரில் கெளரா தேவி என்கிற பெண்மணி, தன் ஊரிலுள்ள பெண்களுடன் இதேபோல் மரங்களைக் கட்டித் தழுவும் போராட்டத்தைத் தொடங்கினார். அங்கே உடனடியாக ‘பத்து ஆண்டுகள் எந்த நிறுவனத்துக்கும் மரம் வெட்ட அனுமதிப்பதில்லை’ என்று அரசு ஒரு தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த முறை உத்தரப்பிரதேசத்திலிருந்து இமயமலை அடிவாரம் வரை, மேற்கே ராஜஸ்தான் வரை இந்தப் போராட்டம் பரவியது. சுந்தர்லால் பகுகுணா இந்தப் போராட்டத்தை இன்னும் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதில் பெரும் பங்காற்றினார்.
அரசு இப்படியான ஒரு போராட்டம் நடைபெறும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. காட்டை வெட்ட வந்த விளையாட்டுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள் இந்தக் காட்சியைப் பார்த்து ஸ்தம்பித்து நின்றார்கள். இந்திரா காந்தி, இந்தப் பெண்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கி 15 ஆண்டுகள் இமயமலைக் காடுகளுக்குள் மரம் வெட்டுவதற்குத் தடை விதித்து சட்டம் நிறைவேற்றினார்.
`சிப்கோ’ என்றால் ‘ஒட்டிக்கொள்ளுதல்’ என்று பொருள். ஆப்பிரிக்காவின் நைரோபியில் 1985-ம் ஆண்டு நடைபெற்ற உலக மகளிர் மாநாட்டில், ‘பெண்களும் சூழலியலும்’ என்ற தலைப்பிலான பெரும் பகிர்வு அமர்வு, உலகம் முழுவதிலிருந்தும் வந்த சூழலியல்வாதிகள், போராளிகள் மத்தியில் நடைபெற்றது. அந்த விவாதத்தின்போதுதான், இந்தியாவின் இமாலயப் பகுதியில் நடைபெற்ற சிப்கோ இயக்கம் உலக மக்களின் கவனத்துக்குச் சென்றது. அனைவரும் அந்தப் பழங்குடிப் பெண்களின் கதையைக் கூர்ந்து கேட்டார்கள்.
இந்தியாவின் 10 கோடிக்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் வனங்களை அடிப்படையாகக்கொண்டு வாழ்கிறார்கள். தங்களைச் சுற்றிய காடுகள்தான் இவர்களின் வாழ்வும் வாழ்வாதாரமும். காடுகள் குறித்த நுட்பங்களை இவர்கள் நன்கு அறிவார்கள். கிழங்குகள், தேன் என நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்களை இவர்கள் காடுகளிலிருந்து அறுவடை செய்கிறார்கள். இவர்களது வாழ்வின் அடிப்படையே காடுதான். உணவு முதல் விறகு வரை காடின்றி வாழ்வு இல்லை. இவர்களின் வளர்ப்புப் பிராணிகளுக்குக் காடுகள்தான் மேய்ச்சல் நிலம். ஒரு காடு என்பது நிலைத்த பொருளாதாரம்... எத்தனை ஆயிரம் ஆண்டுகளாகக் காடுகள் பழங்குடிகளையும், பழங்குடிகள் காடுகளையும் காத்துவருகிறார்கள்... இவர்களின் வாழ்வுதானே இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை... காடுகளைப் பாதுகாப்பதும் புதிய காடுகளை உருவாக்குவதும் பெரும் திட்டங்களாகவெல்லாம் இல்லாமல், இவர்களது அன்றாடத்தின் ஒரு பகுதியாகவே நிகழ்ந்த வண்ணம் உள்ளது. வேளாண்மை, சமையல் முதல் மாடுகள் வளர்ப்பு வரை இந்தப் பழங்குடி மக்களின் வாழ்வின் அச்சாணியாகப் பெண்கள்தான் திகழ்கிறார்கள். பழங்குடிப் பெண்களுக்குக் காடுகள்தான் எல்லாமும். அதனால்தான் சிப்கோ, பெண்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டமாக அறியப்படுகிறது.

இந்தியா முழுவதும் பல திட்டங்களுக்காகக் காடுகள் கண்மூடித்தனமாக வெட்டப்பட்டன. ‘காடு என்பது ஒரு பொருள், அதை அழித்தால் நிறைய பணம் கிடைக்கும். முக்கியத் திட்டங்களுக்கான நிலத்தை ஒரு காடு மறைத்து நிற்கிறது அல்லது ஆக்கிரமித்து நிற்கிறது’ - இதுதான் காடு குறித்த அரசின் அல்லது பெரிய நிறுவனங்களின் பார்வை. அவர்கள் காட்டை ஒரு நிலைத்த பொருளாதாரமாக உணர்வதில்லை. மாறாக, ஒரு முறை பணம் ஈட்டும் கருவியாகவே பார்க்கிறார்கள். நகரங்கள் எங்கோ திக்கு தெரியாத திசையில் சென்றுகொண்டிருக்கின்றன. நமக்கும் இயற்கைக்குமான உறவை நகரங்கள் முற்றாக அழித்துவிட்டன. நாம் வெறும் நுகர்வோர்களாக, நுகர்வின் சொகுசில் லயிப்பவர்களாக மாற்றப்பட்டுவருகிறோம், இந்த சொகுசுகளைத் தாண்டி நமக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. நம் சொகுசுகளுக்கு யார் யாரோ இந்த பூமியின் விளிம்பில் மிகப்பெரும் விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரும் காலம் வர வேண்டும்.
மரங்கள் நமக்கு நிழலைத் தருகின்றன, புவியின் வெப்பத்தைக் குறைக்கின்றன, மனிதனுக்கு மருந்தாகவும் உணவாகவும் சுவாசமாகவும் திகழ்கின்றன. இயற்கையின் எத்தனை அற்புதமான படைப்பு இந்த மரங்கள் என்று என்னதான் நாம் அறிந்திருந்தாலும், மரங்களுக்கும் நமக்கும் இன்றைய வாழ்வில் உறவு இருக்கிறதா என்கிற கேள்வியை நீங்களே உங்களுடன் கேட்டுப்பாருங்கள்.
என் பயணங்களில் மரங்களை நேசிப்பவர்களை ஏராளமாகப் பார்த்திருக்கிறேன். மரங்களின் கிளைகளைப் பறவைகளுக்கு என ஒதுக்கீடு செய்யும் ஜார்க்கண்ட் பழங்குடிகளை நான் பார்த்திருக்கிறேன். கொங்கன் பகுதியின் ரத்தினகிரியில் மாமரங்களுடன் பேசும் பெரியவர்களைப் பார்த்திருக்கிறேன். அரக்குப் பள்ளத்தாக்கில் மரத்துக்குப் பெயர் வைத்து அழைக்கும் ஒரு பெரியவரைப் பார்த்து வியந்திருக்கிறேன். என் நண்பரின் தந்தை ஒருவர், ‘இந்த மரத்துக்கும், என் நண்பனுக்கும் ஒரே வயது. அவன் பிறந்த அன்றுதான் இந்த மரம் நடப்பட்டது’ என்று மரத்தைத் தழுவி நின்று கூறினார். நான் வசித்த திருப்பரங்குன்றத்தின் மலைக்குப் பின்புறமிருக்கும் பாப்லார் மரங்களை நேசித்திருக்கிறேன். மதுரை திருநகரில் எங்கள் வீட்டு உரிமையாளர், ஒரு மரத்தை வெட்டியதற்கு வீடு மாற்றிச் சென்றிருக்கிறேன். உங்கள் வாழ்வில் நீங்கள் ஏதேனும் ஒரு மரத்துடன் நட்பாக இருந்திருக்கிறீர்களா?
(தொடரும்)

*****
அ.முத்துக்கிருஷ்ணன், தமிழ்ச் சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களின் அதிர்வுகளைத் தனது எழுத்திலும் பேச்சிலும் தொடர்ந்து பதிவுசெய்துவருபவர். வரலாறு, தொல்லியல், விளிம்புநிலை மக்கள், மதவாதம், சுற்றுப்புறச்சூழல், உலகமயம், மனித உரிமைகள், சினிமா எனப் பல தளங்களில் 16 ஆண்டுகளாக ஆழமான கட்டுரைகள் எழுதிவருகிறார். வாசிப்பு, எழுத்து, மொழிபெயர்ப்பு, பேச்சு, பயணங்கள், களச் செயல்பாடுகள் எனச் சுற்றிச்சுழலும் இவர், ஜூனியர் விகடனில் எழுதும் முதல் தொடர் இது!

போராளி வந்தனா சிவா!
இயற்கைமீது தீராத காதல்கொண்டவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன், தண்ணீரை மாசுபடாமல் காத்தல் போன்றவற்றுக்காகத் துணிச்சலுடன் போராடிவருபவர். இந்தியாவின் மூலிகைகள் காப்புரிமை பெறுவதற்கும், பறிபோன காப்புரிமையை மீட்பதற்கும் போராடி பல காப்புரிமைகள் பெற்றுள்ளார். 1991-ம் ஆண்டு முதல் ‘நவதான்யா’ என்ற தேசிய இயக்கம் மற்றும் இயற்கைப் பள்ளியை வழிநடத்திவருகிறார். வந்தனாவின் நூல்கள் உலகின் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’, ‘என்னை மற மண்ணை நினை’ உள்ளிட்ட இவரது பல நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன.
1993-ம் ஆண்டில், நோபல் பரிசுக்கு இணையான Right Livelihood அறிவியலாளர் விருதைப் பெற்றார். இந்தியாவில் 16 மாநிலங்களில், அறுபது விதைப்பண்ணைகளைத் தொடங்கி 3,000 அரிசி வகைகளை அழியாமல் பாதுகாத்துவருகிறார். 2003-ம் ஆண்டு, சூழல் நாயகன் விருதை டைம் பத்திரிகையிடமிருந்து பெற்றார்; 2010-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ஆற்றல் வாய்ந்த பெண்ணாகப் பாராட்டப்பட்டார்.
உலகம் முழுவதுமிருக்கும் பல்கலைக்கழகங்களில் உரையாற்றும்போது, சிப்கோ இயக்கத்தைப் பற்றி வந்தனா சிவா விவரிக்கக் கேட்பது ஓர் அலாதியான அனுபவம். நான் வந்தனாவின் ‘நவதான்யா’ இயற்கைப் பள்ளியில், அவர் சிப்கோ இயக்கத்தைப் பற்றி விவரிக்கக் கேட்டது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்!