Published:Updated:

`நினையாரோ தோழி.. தினையேனும் எனை நினையாரோ?'- புதுக்கோட்டையில் பெருக்கெடுத்த சங்க இலக்கியம் #MyVikatan

சங்க இலக்கிய விழா
News
சங்க இலக்கிய விழா

சங்க இலக்கிய மழையில் நனைய வைத்த அந்தப் பயிலரங்கத்துக்கு பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார் தலைமை வகித்தார்.

Published:Updated:

`நினையாரோ தோழி.. தினையேனும் எனை நினையாரோ?'- புதுக்கோட்டையில் பெருக்கெடுத்த சங்க இலக்கியம் #MyVikatan

சங்க இலக்கிய மழையில் நனைய வைத்த அந்தப் பயிலரங்கத்துக்கு பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார் தலைமை வகித்தார்.

சங்க இலக்கிய விழா
News
சங்க இலக்கிய விழா

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சங்க இலக்கியம் தமிழன் வாழ்வியலின் தங்க இலக்கியம். பழந்தமிழ்ச் சுவடிகளில் படுத்துறங்கும் அந்த இலக்கியப் பெட்டகத்தை, பண்பாட்டுக் கருவூலத்தை, வரலாற்றுச் சுரங்கத்தை இளம் தலைமுறைக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் அதன் பெருமைகளைப் போற்றிப் பாதுகாப்பதும் பரப்புவதும் நம் தமிழர்களின் மகத்தான கடமை. அதைச் சிறப்புறச் செய்யும் பணியில் செவ்வனே ஈடுபட்டிருக்கின்றன புதுக்கோட்டை வேள்பாரி ஆய்வரங்கமும் தமிழகப் புலவர்கள் குழுக் கழகமும். இந்த இரு அமைப்புகளும் இணைந்து கடந்த ஜனவரி 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் சங்க இலக்கியப் பயிலரங்கம் என்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

சங்க இலக்கிய விழா
சங்க இலக்கிய விழா

அதில் நானும் ஒரு பார்வையாளனாய் கலந்துகொண்டேன். சங்க இலக்கிய மழையில் நனைய வைத்த அந்தப் பயிலரங்கத்துக்கு பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார் தலைமை வகித்தார்.

சங்க இலக்கியங்களில் நிகர்மை (சமத்துவம்) எனும் தலைப்பில் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பேசினார். ஒரு சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் என்பது எப்போதும் இருந்திருக்கிறது. ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் எங்கும் இருந்ததில்லை. ஆனால், அந்தப் பாகுபாட்டால் யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை. ஒருவருக்கொருவர் உறுதுணையாகவும் பக்கபலமாகவும்தான் இருந்திருக்கிறார்கள் என்பதை பல சங்கப் பாடல்களின் உதவியுடன் எடுத்துக் கூறினார்.

சங்க இலக்கிய விழா
சங்க இலக்கிய விழா

அடுத்து சங்க இலக்கியங்களில் அறம் மற்றும் இசை எனும் தலைப்பில் உரையாற்ற வந்தார் முனைவர் செல்வ.கணபதி. பாடல்களில் பல்லவியும் சரணமும் சங்க இலக்கியத்தில் எப்படி சதிராடியது என்பதை இசைப் பாடலுடன் பாடி பார்வையாளர்களின் செவிகளைக் குளிர வைத்தார். அதுவும் அருகிப்போன யாழ் எனும் இசைக் கருவியின் சிறப்புகளை அவர் பட்டியலிட்ட பாங்கு வெகு சிறப்பு. புதுக்கோட்டை அருகில் உள்ள நற்சாந்துப்பட்டியில் உள்ள ஒருவரின் இல்லத்தில் யாழ் இசைக் கருவி இன்னும் இருப்பதாகவும், அதை மீட்டத்தான் ஆள் இல்லை என்றும் வேதனையுடன் கூறினார்.

பழந்தமிழனின் வாழ்க்கை இன்னிசைப் பயணத்துடன் இணைந்தே இருந்திருக்கிறது. பறையும் யாழும்தான் ஆதித்தமிழனின் ஆரம்ப இசைக் கருவிகள். ஐவகை நிலங்களுக்கும் முறையே தனித்தனி யாழும் பண்ணும் இருந்திருக்கின்றன. இதைச் சங்க இலக்கியப் பாடல்கள் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறதை ஆதாரங்களுடன் அடுக்கினார்.

சங்க காலத்தில், ஒட்டுமொத்த இந்தியாவிலும் 500 வகை தோல் கருவிகள் இருந்தனவாம். அவற்றும் 300 வகை தோல்கருவிகள் நம் தமிழ் மண்ணிலிருந்து இசைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவித்தார்,

குறுந்தொகை பாடல் ஒன்றில் பொருள்வயிற் பிரிந்த தலைமகனின் வரவை எதிர்நோக்கி காத்திருக்கும் தலைமகள் தோழியிடம்...

``உன்னார் கொல்லோ தோழி கள்வர்தம்

பொன்புழை பகழி செப்பங் கொண்மார்

உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்

செங்காற் பல்லி தன் துணை பயிரும்

அங்காற் கள்ளியங் காடிறந் தோரே...”

இவற்றைப் பாடி அதற்கு அவர் விளக்கம் தந்த விதம் அனைவரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.

சங்க இலக்கிய விழா
சங்க இலக்கிய விழா

தலைவன் பொருள் தேடும் பொருட்டுத் தலைவியை விட்டுப் பிரிகின்றான். அப்போது தலைவி, ``அவர் நம்மை நினைப்பாரோ, நினைக்க மாட்டாரோ?” என்று தோழியிடம் கவலைப்பட்டு வருந்துகிறாள்.

பாலை நிலத்தில் உள்ள வழிப்பறிக் கள்வர், இரும்பால் செய்யப்பட்ட தம் அம்பை சாணை ஏற்றுவதற்காக, அதன் நுனியை இப்படியும் அப்படியும் புரட்டுவதால் உண்டாகும் ஒலியைப்போல ஒலி எழுப்பக்கூடிய, சிவந்த கால்களை உடைய ஆண் பல்லியானது, தன் துணையாகிய பெண் பல்லியைக் கலவிக்கு அழைக்கும் இடமாகிய, அழகிய தோற்றம் கொண்ட கள்ளிச் செடிகளோடுகூடிய பாலை நிலத்தைக் கடந்து (பொருள் தேடுவதற்காகச்) சென்ற தலைவன் என்னை நினைக்க மாட்டாரோ? என்று தோழியிடம் தலைவி கேட்பதாக அமைந்த பாடலுக்குள்தான் எவ்வளவு காட்சிப் படிமங்கள், எவ்வளவு உவமை நயங்கள். இதை எல்லாம் அவர் விவரித்தவிதம் பார்வையாளர்களை இலக்கியப் பரவசம் அடையவைத்தது.

இதே பாடலைப் பாவேந்தர் பாரதிதாசனும் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும்விதமாகப் பாடிய நினையாரோ தோழி? தினையேனும் எனை நினையாரோ தோழி? என்ற பாடல்வரிகளை அவர் நினைவூட்டினார். இது கூட்டம் முடிந்த பின்னரும் இன்னும் அந்த வரிகளைப் பலரையும் முணுமுணுக்க வைத்திருக்கிறது.

முனைவர் திருமாறன் சங்க இலக்கியங்களில் தமிழ் தேசியம் என்ற தலைப்பில் பேசினார். தமிழன் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் பூதத்தாழ்வார்தான் என்று சங்கப் பாடலின் மூலம் விளக்கினார்.

சங்க இலக்கிய விழா
சங்க இலக்கிய விழா

சங்க இலக்கியங்களில் விழுமியங்கள் என்ற தலைப்பில் முனைவர் தா.மணி உரையாற்றினார். எதிரிகள்மீது போர் தொடுத்தாலும்கூட அதில் இருந்த தார்மிக எல்லைகளையும் அறக் கோட்பாடுகளையும் மீறவில்லை என்பதை அழகாய் வர்ணித்தார். ஆதித்தமிழனின் போர் முறைகளில்கூட ஓர் ஒழுங்கு இருந்திருக்கிறது. வெற்றிக்காக எதையும் செய்வது தமிழர் மரபல்ல. இதை யாழ்ப்பாணத்தில் கரும்புலிகள் நடத்திய கப்பல் தாக்குதல் சம்பவங்களை உதாரணமாக எடுத்துக்காட்டினார். கரும்புலிகள் கடலில் சிங்கள ராணுவத்தின் கப்பலை தகர்க்க நெருங்கியபோது தலைமையிடம் இருந்து ஒரு உத்தரவு வந்ததாம். அதாவது, ராணுவம் மட்டுமல்லாமல் சிங்களப் பொதுமக்களும் கப்பலுக்குள் இருக்கிறார்கள். எனவே, அந்தக் கப்பலை தற்கொலைத் தாக்குதல் நடத்தி தகர்க்க வேண்டாம். அது தமிழரின் போருக்கான அறம் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டதாம். இதைச் சங்கப் பாடல்களுடன் அவர் ஒப்பிட்டுப் பேசினார். அதேபோல் சங்க காலத்தில் வியாபாரத்திலும் லாபம் ஈட்டி இருக்கிறார்கள். ஆனால், விலையைக் கட்டுக்குள் வைக்காமல் கொள்ளையடித்ததில்லை என்பதற்கும் சங்க இலக்கியச் சான்றுகள் காட்டிப் பேசினார்.

சங்க இலக்கியங்களில் போர்நெறி என்ற தலைப்பில் முனைவர் அமுதன் அடிகளும் சங்க இலக்கியங்களில் சமயம் குறித்து முனைவர் சேதுபதியும் உரையாற்றினார்கள். கம்பரின் மருதநில காட்சிப் பாடலுக்கு அடிப்படையே குறிஞ்சி மலையில் மயில் நடனமாடும் காட்சியைப் பாடிய கபிலரின் பாடல்தான் என்பதையும் பொருத்தமுடன் கூறினார் சேதுபதி.

சங்க இலக்கியத்தை வாசிக்காமல் தமிழரென்று சொல்லிக்கொள்வதில் நமக்கு அர்த்தம் இல்லை என்றார் வேள்பாரி ஆய்வரங்கம் எனும் அமைப்புக்கு வித்திட்ட புதுக்கோட்டை பாவாணன். தொடக்க உரை நிகழ்த்திய புலவர் கும.திருப்பதி அருமையான சங்க இலக்கியப் பாடல்களுடன் எடுத்துக்கூறி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

ஒரு ஞாயிறுக்கிழமையின் பகல் பொழுது முழுவதும் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் சங்க இலக்கியம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இதை ரசித்தனர். இதுபோன்ற சங்க இலக்கிய நிகழ்ச்சிகள், தமிழகம் முழுவதும் தொடர வேண்டும். சங்க இலக்கியத்தின் அழகும் அதற்குள் பொதிந்திருக்கும் ஏராளமான அறிவுசார் தகவல்களும் நம் மக்களைப் போய்ச்சேர வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்றென்றும் தமிழ் நெஞ்சங்களின் பாராட்டுக்குரியவர்கள்..!

- பழ.அசோக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/