
ஒரே பழங்குடியினம் எப்படி சாதிப்படி நிலையில் மேல், இடை, கீழ் சாதி அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டது
தமிழில் சரித்திர நாவல்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. நவீனத் தலைமுறைக்குத் தமிழ்ப் பாரம்பர்யம் குறித்த பெருமிதங்களைக் கட்டமைத்த பெருமை அவற்றுக்கு உண்டு. உதாரணமாக பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம் போன்ற நாவல்கள் இன்றும் வாசக மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாகப் பலரும் புற்றீசல்போல வரலாற்று நாவல்களை எழுதத் தொடங்கினர். அதுவே சரித்திர நாவல்களின் வீழ்ச்சிக்குக் காரணமாயின.
கடந்த 30 ஆண்டுகளில் வரலாற்றுப் புனைவுகள் குறித்த பார்வை மாறியிருக்கிறது. மன்னர்களின் வரலாற்றிலிருந்து மக்களின் வரலாற்றை நோக்கி நாவலாசிரியர்கள் திரும்பியிருக்கிறார்கள். அப்படி மக்களின் வரலாற்றையும் சமூக வரலாற்றையும் கலந்து விருப்புவெறுப்பின்றிப் பதிவு செய்திருக்கும் நாவலே இரா. முருகவேளின் ‘புனைபாவை.’
மிளிர் கல், முகிலினி, செம்புலம் ஆகிய நாவல்களின் மூலம் தமிழின் மிகச் சிறந்த நாவலாசிரியர்களுள் ஒருவராக அறியப்படும் முருகவேளின் இந்த நாவல், 11-ம் நூற்றாண்டிலிருந்து 14-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழக அரசியலில் நிகழ்ந்த சமூக மாற்றங்களைப் பேசுகிறது.
மூன்றாம் குலோத்துங்கச் சோழனுக்கும் கொங்குச் சோழனுக்கும் இடையே நடந்த போரிலிருந்து மாலிக்காபூரின் படையெடுப்பு வரையிலான இந்தக் காலகட்டத்தில் தமிழ்ச் சமூகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன. பழங்குடிச் சமூகத்தின் நிலம் அபகரிக்கப்படுகிறது. காடுகள் அழித்து வேளாண் நிலங்களாக மாற்றப்படுகின்றன. மிகை வேளாண்மையும் உபரி உற்பத்தியும் சாதியக் கட்டமைப்பை இறுக்கமாக்குகிறது. இந்தச் செயல்பாடு அரசியல், மதம், வணிகம், வாழ்க்கை, போர் எனும் பல்வேறு கூறுகளில் உருவாக்கும் தாக்கமும் தமிழ்ச் சமூகத்தின் வீழ்ச்சியுமே ‘புனைபாவை’ நாவல்.
ஒரே பழங்குடியினம் எப்படி சாதிப்படி நிலையில் மேல், இடை, கீழ் சாதி அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டது என்பதையும், அதற்கு எல்லா மத நிறுவனங்களும் எவ்வாறு துணை நின்றன என்பதையும் நாவல் மிக அழகாக விவரிக்கிறது.
மூவேந்தர்களின் வரலாற்றைப் புனைவுக்குட்படுத்தும் பலரும் மிகை வீரத்தையே பேசுகையில் யதார்த்த சமூகத்தை முன்வைக்கிறார் முருகவேள். வரலாறு சார்ந்த ஆய்வுக் கருத்துகள் தரவுகளாக பிரதியில் ஆங்காங்கே தொக்கி நிற்காமல், உள்வாங்கிப் புனைவில் கலந்து கலையாகும் நேர்த்தி நாவலில் கைகூடியிருக்கிறது. எங்கும் வரலாற்றை வாசிக்கிறோம் என்கிற சலிப்பு தோன்றாமல் சுவாரஸ்யமான புனைவின் பாதையில் பயணிக்கிறது நாவல். தமிழர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புனைவு இது என்பதில் சந்தேகமில்லை.

புனைபாவை
இரா.முருகவேள்
வெளியீடு:
ஐம்பொழில் பதிப்பகம்
634, லாலி சாலை,
கோவை - 641 006
தொடர்பு : 94430 14445
பக்கங்கள்: 365
விலை: ரூ 250/-