சினிமா
தொடர்கள்
Published:Updated:

ராஜி டீச்சர் - சிறுகதை

ராஜி டீச்சர் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜி டீச்சர் - சிறுகதை

டீச்சரும் சாரும் வாழ்க்கையைத் தொடங்கிய போதிலிருந்து 6 வருடங்களுக்கு முன் அவள் மறைந்தது வரையிலும் அவர்களின் எல்லா சுகதுக்கங்களிலும் எங்கள் குடும்பத்தின் பங்கு உண்டு.

“கிளம்பியாச்சா? சரி... அவர் வயசானவர். பார்த்து நிதானமா ஓட்டிட்டு வாங்க” என்றபடி போனை வைத்தேன்.

இன்னும் சற்று நேரத்தில் என் டிரைவருடன் வீட்டுக்கு வரப்போவது பாண்டியன் சார்!

நேற்று என்னை அழைத்த போது குரல் கம்ம, ‘‘ஆண்டாள் ராஜி டீச்சர் வீட்டு சார் பேசறேன்பா. நீயும் உன் வீட்டம்மாவும் நல்லாருக்கீங்களா?’’ என்றவரின் முழுப் பெயர் பொன் மாணிக்கப்பாண்டியன்.எனது பள்ளித் தலைமையாசிரியர். பாண்டியன் சார் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் எழுந்து நின்றவர்களுண்டு. காரணம் - அவரது நடத்தையும், மனிதர்களை அணுகும் முறையும். பிரச்சினைகளின் போது அவர் எந்தப் பக்கமாக நிற்கிறாரோ அங்கே நியாயம் அதிகம் என ஊரார் உறுதியாகச் சொல்லும்படியான பெயரை அவர் சம்பாதித்திருந்தார்.

6 அடி உயரம், கறுத்த தேகம், இடது புற வகிடு எடுத்து வாரப்பட்ட அடர்ந்த தலை மயிர் வலது புற நுனியில் மாத்திரம் சுருள்சுருளாக கொத்துதிராட்சை போல சுருண்டு தொங்கும். கூர் நாசி, எதிரிலிருப்பவரின் கண்களை ஊடுருவம் பார்வை, அடர்த்தியான அளவான மீசை, முழங்கை வரையிலும் மடித்து விடப்பட்டிருக்கும் முழுக்கைச் சட்டை, பள்ளிக்கு வரும் நேரம் போக மீதி நேரங்களில் எல்லாம் அவர் சார்ந்திருந்த கட்சிக்கரையிட்ட வேஷ்டி என அவரைப் பார்த்தவுடனேயே மரியாதை நம் மனதுள் சப்பணமிட்டமர்ந்திடும். ஒரு சில சமயங்களைத் தவிர அவர் தன் வசம் இழந்தோ கோபப்பட்டோ நான் பார்த்ததேயில்லை. வாராது வந்த மாமணி போலதான் சாரின் கோபமும். ஆனால் கோபப்பட்டாரென்றால் வார்த்தைத் திராவகத்தைக் கொட்டிச் சாகடித்துவிடுவார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் பக்கமிருக்கும் வத்திராயிருப்புதான் எனது சொந்த ஊர். சாரும் டீச்சரும் வாழ்க்கையைத் தொடங்கிய ஊரும் அதுவே. சார் நாகர்கோவில்காரர். என் அப்பா சாரிடம் அடிக்கடி, ‘‘நீ சேர நாட்டிலிருந்து வந்த பாண்டியன்யா’’ என்பார். ஸ்ரீ.வி அரசுப் பள்ளியில் வேலை பார்த்தபோது உடன் பணிபுரிந்த ராஜி டீச்சரை விரும்பி மணந்தார்.

ராஜி என்ற ராஜலக்ஷ்மி!

ராஜி டீச்சர் - சிறுகதை

இடைநிலை வகுப்பாசிரியை. ஸ்ரீ.வி. கோவிலில் வேலை பார்த்தவரின் மகள். இருவரும் வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் இருதரப்புக் குடும்பங்களின் துணையும் இல்லாமல் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். என் அப்பா வழி தாத்தா, சார் ஆசிரியராக இருந்தபோது பள்ளித் தலைமையாசிரியராக இருந்ததாலும், என் அப்பா அவர்களிருவரும் கணக்கு வைத்திருந்த வங்கியின் மேலாளராக இருந்ததாலும், அதிலும் இருவீட்டாரின் எதிர்ப்பை சம்பாதித்து அவர் டீச்சரை மணம்முடித்து நின்றபோது அவர்களை அரவணைத்து எங்கள் வீட்டின் மாடியில் குடி வைத்தவர் என் அப்பா என்பதாலும், அலுவலக ரீதியான உறவைத் தாண்டி இரு குடும்பத்திற்கும் உணர்வுபூர்வமான பந்தமிருந்தது.

டீச்சரும் சாரும் வாழ்க்கையைத் தொடங்கிய போதிலிருந்து 6 வருடங்களுக்கு முன் அவள் மறைந்தது வரையிலும் அவர்களின் எல்லா சுகதுக்கங்களிலும் எங்கள் குடும்பத்தின் பங்கு உண்டு. டீச்சரின் பிரசவமே என் அப்பத்தாவும் அம்மாவுமாகத்தான் பார்த்தனராம். பிறந்த சில தினங்களில் அக்குழந்தை துரதிர்ஷ்டவசமாக இறந்த பின் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. திராவிட சித்தாந்தங்களாலும் இறைமறுப்புக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்ட சார், அக்கிரஹாரத்தில் பிறந்து வளர்ந்தவளை எப்படி விரும்பினாரென்பதும், அதைவிட அவள் சாரை எப்படி விரும்பினாள் என்பதும் இன்றளவும் எனக்கு வியப்பூட்டும்.

கோவிலுக்குப் போவது, சாமி கும்பிடுவது என எதிலுமே நம்பிக்கையற்றவர் அவர். டீச்சரோ, விடிகாலமே எழுந்து ‘கதிரவன் குண திசை சிகரம் வந்தடைந்தான்’ என்ற பாசுரத்துடன்தான் நாளைத் தொடங்குவாள்.

டீச்சருக்கும் என் அம்மாவுக்குமான உறவு ஆழமானது. விவரமறியாச் சிறுவனாக வீட்டைச் சுற்றிக்கொண்டிருந்த போது அவர்கள் கிசுகிசுத்த ‘காதல், கல்யாணம், சார் இவளுக்காக முழுச் சைவமாக மாறியது, இவள் சாருக்காக கோவிலுக்குப் போகாதது’ என எதுவுமே என் அப்போதைய புத்திக்குப் புரிந்ததில்லை.

ராஜி டீச்சரிடம் தனி வசீகரம் ஒன்று இருந்தது. காதுக்குப் பின்பக்கமாக ஒற்றைப் பூவைச் செருகி, கஞ்சி போட்ட காட்டனை நேர்த்தியாக உடுத்தி, குடையைப் பிடித்தபடி அவள் நடந்து போவதே அழகு. எதைச் செய்தாலும் துலங்கும் கை அவளுக்கு வாய்க்கப்பெற்றிருந்ததாகவே அம்மாவும் நானும் நம்பினோம். உதாரணமாக, புளியைக் கரைத்து எங்கள் வீட்டில் என் அம்மா வைக்கும் அதே குழம்பைத்தான் டீச்சரும் செய்வாள். ஆனால் வீட்டின் பூஜை அறையில் ஏற்றப்பட்ட சாம்பிராணி வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று மணத்தை நிறைப்பதுபோல், அவள் செய்யும் குழம்பின் வாசம் மாடியிலிருந்து கீழிறங்கி வந்து எங்கள் வீட்டையே நிறைக்கும்.

ராஜி டீச்சர் - சிறுகதை

தன்னிடம் படிக்கின்ற படிப்பில் மந்தமான பிள்ளைகளுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை சாயங்காலமானால் வீட்டில் வைத்து தனிக்கவனம் எடுத்து இலவசமாகப் பாடம் சொல்லிக் கொடுப்பாள். சனி மற்றும் ஞாயிறுகளில் எங்கள் தெருவில் இருந்த பெண்களுக்குப் பாசுரங்கள் சொல்லிக் கொடுப்பாள். அதனால்தான் அவள் பெயர் ‘ஆண்டாள் ராஜி டீச்சர்.’ மாலையில் அவளிடம் படிக்க வரும் பிள்ளைகளில் குறைந்தது இருவராவது இரவு அவள் கையால்தான் சாப்பிடுவர். அம்மா டீச்சரைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் ‘‘அவளை ஆண்டாள் ராஜின்னு மட்டும் நினைக்காதே. அன்னபூரணியும்தான்’’ என்பாள்.

டீச்சருக்கிருந்த பிரத்யேகமானதொரு பழக்கம், காய்கறி நறுக்கும்போதும் சமைக்கும்போதும் பேசவே மாட்டாள். முறத்தின் மேலே அரிவாள்மணையை வைத்து, முட்டியை மடித்து இரு கால்களையும் ஒரு பக்கமாக மடக்கியமர்ந்து, அரிவாள்மணையை முட்டியினால் அழுத்தி, ஆறு விரல்களுக்கு இடையில் காய்களைப் பிடித்தவாறு அவள் நறுக்க ஆரம்பிக்கும் போது உதடுகள் பாசுரம் பாடத் தொடங்கும். அப்போது தொடங்குவது அவள் சமைத்து முடிக்கும்போதுதான் முடிவுறும். எத்துணை பேச்சுக் கொடுத்தாலும் அச்சமயத்தில் பாசுரத்தைத் தவிர வேறு வார்த்தை அவள் வாயிலிருந்து வராது. அப்படி டீச்சர் பாடக் கேட்டே எனக்கு மனப்பாடமான பாசுரங்கள் ஏராளம். அவர்கள் வீட்டில் பூஜை அறையோ பூஜைகளோ கிடையாது.ஆனால் வீடு முழுக்க பிரபந்தம் பிரவகிக்கும். இவ்வளவு பக்தியிருந்தும் கோவில் பக்கம்கூடப் போக மாட்டாள்.

ஒரு முறை அவளிடமே இதுபற்றிக் கேட்டதற்கு ‘‘கோவிலுக்குப் போனாதான் ஆச்சா, இருப்பிடம் வைகுண்டம் தெரியுமோ’’ என்று சிரித்தபடியே தான் ஏன் கோவிலுக்குப் போவதில்லை என்ற உண்மையைச் சொன்னாள். சாரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று டீச்சர் சொன்னதற்கு அவர்களது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘‘அவனைக் கல்யாணம் பண்ணிட்டா உன்னைக் கோவிலுக்குக்கூடப் போக விட மாட்டான். மீறி நீ போனாலும் உன்னை யாரு கோவிலுக்குள்ள விடுவா?’’ என்றதற்கு, ‘‘நீங்க என்ன என்னைக் கோவிலுக்குள் விடறது. இனி நானே போகப் போறதில்லை. கோவிலுக்குப் போனாத்தான் பக்தியா?’’ என்று சொன்னவள், அதன் பிறகு கோவில் பக்கமே போகவில்லை. அவளுக்கு வைராக்கியம் அதீதம். அனாவசியமாக எதற்கும் கோபப்பட மாட்டாள். ஆனால் ஏதேனும் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதிலிருந்து மாறவே மாட்டாள்.

ஒருமுறை ராஜபாளையத்துக்கு எங்களது காரில் நான் அம்மா மற்றும் டீச்சர் கிளம்பினோம். திடீரென மக்கர் செய்த கார் நின்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தின் முன். கோபுரத்தைப் பார்த்த என் அம்மா கன்னத்தில் போட்டுக் கொள்ள, டீச்சரிடமிருந்து பாராட்டைப் பெறவேண்டுமென்ற முனைப்பில் அவளிடம் கற்ற ஆண்டாள் பாசுரமொன்றை நானும் பாடினேன். ஆனால் டீச்சரோ கோவில் கோபுரம் பக்கமாக முகத்தைக்கூடத் திருப்பாமல் முன்னே சாலையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘‘ராஜி... உன் கோபத்தை கோபுரத்திடமும் ஆண்டாளிடமும் காட்டாதே’’ என்று அம்மா சொன்னதற்கு எதிர்வினையாற்றாமல் அவள் வெறுமையாகச் சிரித்தது இன்றும் மனதில் நிழலாடுகிறது.

ராஜி டீச்சர் - சிறுகதை

‘‘நான் வேணும்னா உன்கூட கோவிலுக்கு வரேன்’’ என்று சார் சொல்லியும் அவள் மறுத்ததை நானே பார்த்திருக்கிறேன். கோவிலுக்குப் போகாததைக் குறித்த அங்கலாய்ப்போ வருத்தமோ கடைசி வரையிலும் அவளுக்கு இம்மியும் இல்லை. அவளுக்காக அவள் சாரிடம் கேட்டுப் பெற்றிருந்த ஒன்று உண்டு. ஒவ்வொரு வருடமும் அவர்களின் திருமண நாளன்று மதுரையிலிருந்து பிரபந்தம் பாடும் சிலரை அழைத்து வந்து நாள் முழுவதும் பாசுரங்களைப் பாடச் செய்வது என்று சொன்னால் இன்றைய தலைமுறைக்குச் சிரிப்பு வரும். ஆனால் அதுதான் ராஜி டீச்சர்!

அவளின் தந்தை இறந்த செய்தியறிந்து, சாரும் என் அப்பாவும் அம்மாவும் எத்துணை வற்புறுத்தியும் அவரைப் பார்க்கப் போகவில்லை. ‘‘இவரைக் கல்யாணம் பண்ணிக்கிறதும் நான் சாவறதும் ஒண்ணுன்னு சொல்லி எனக்கு தெவசம் பண்ணினவர்தானே அவர். நான் ஏன் போகணும்? நல்லாக் கேளுங்க மங்கை அக்கா. மனுஷன் கோபத்தில கொட்டற வார்த்தைதான், நம்மைப் பற்றி அவங்க அடி மனசுல நினைச்சுக்கிட்டிருக்கறது. இதான் நான் நம்பும் நிஜம். ஒருத்தர் மனசுல நம்மைப் பற்றி அவங்க நினைச்சுட்டிருக்கும் நிஜம் முழுக்கத் தெரிஞ்சப்புறம் அங்க போய் உறவாட என்னால முடியாது’’ என்று என் அம்மாவிடம் அவள் வாதம் செய்த காட்சி இன்னமும் என் கண்களை விட்டு அகலவில்லை.

இப்படியாக பல வருடங்களாக எங்கள் வீட்டு மாடியில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு கட்டிக்கொண்டு போனார்கள். நானும் பட்ட மேற்படிப்பிற்காக மதுரை சென்றுவிட்டேன். ஆனாலும் வாரக் கடைசியில் அல்லது விடுமுறையில் ஊருக்கு வரும்போதெல்லாம் டீச்சரைப் பார்க்காமல் வந்ததே கிடையாது.

 சார் சார்ந்திருந்த கட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் நிற்கும் வாய்ப்பைப் பலமுறை அவருக்குக் கொடுக்க நினைத்தும் அரசுப் பணியிலிருப்பதைக் காரணம் காட்டி மறுக்க, தன் அரசியல் எதிர்காலத்துக்காக விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டவர் கட்சிக்காகப் பேயாய்ச் சுழன்று வேலை பார்த்தார். அத்துணைக் காலமாக தான் சம்பாதித்து வைத்திருந்த நேர்மையும் நற்பெயரும் தன்னை ஜெயிக்க வைக்கும் என்று தீர்மானமாக நம்பி, பணம் செலவழிக்காமல் தேர்தலைச் சந்தித்தவருக்குத் தோல்வியே கிடைத்தது. காரணம் உட்கட்சிப் பூசல்கள், உள்ளடி வேலைகள் மற்றும் பணம்!

‘அரசாங்க வேலையைக்கூட விட்டு கட்சி கட்சின்னு நாய்மாதிரி போன என்னை அம்புட்டு பேரும் சேர்ந்து முதுகுல குத்துவானா?’ என்ற கேள்வி அவரைத் துளைத்ததாக அச்சமயத்தில் அவருடனிருந்த அப்பா பின் வந்த நாள்களில் சொன்னார். ஏற்கெனவே சூடாகிப் போய் இருந்த சாரிடம், இவரைத் தோற்கடிக்க உள்ளடி வேலை பார்த்து ஜெயித்தவன், ‘‘சார், உங்க வீட்டில டீச்சர் பஜனை ஏற்பாடு பண்ணியிருக்காங்க போல. இத்தனை வருஷத்துல பஜனைக்குச் செலவழிச்ச காசைத் தேர்தல்ல இறக்கியிருந்தா ஜெயிச்சிருப்பீரு. வீட்டுக்குப் போய் பஜனை பாடும்’’ என்று பரிகசிக்க, அங்கேயே பெரும் சண்டை உண்டாகியதாம்.

துரோகம் மற்றும் தோல்வியினால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வீடடைந்த அன்று அவர்களின் 25வது திருமண நாள். வழக்கம் போலவே பிரபந்தம் சொல்லும் கோஷ்டியை வீட்டுக்குக் கூப்பிட்டிருந்திருக்கிறாள் டீச்சர்.

அவரின் அப்போதைய மனநிலையில் ‘தானும் கணக்குப் பார்க்காமல் காசைச் செலவழித்திருந்தால் ஜெயித்திருக்கலாம்’ என்பது அவர் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டிருக்க வேண்டும். இல்லையெனில் வீட்டுக்குள் வந்தவுடனேயே நடுக்கூடத்தில் நின்றபடி, ‘‘நான் சாகறவரை இனி இந்த வீட்ல பாசுரம் பஜனை எதுவும் கூடாது. இதுக்குச் செலவழித்த காசைத் தேர்தலுக்குச் செலவழித்திருந்தா இந்நேரம் ஜெயித்திருப்பேன். கல்யாணம் ஆன நாளாக இதெல்லாம் தண்டச் செலவு. 25 வருஷம் முன்னாடி பிடிச்சது இன்னமும் என்னை விட்டுப் போகலை’’ என்று கத்தியிருக்க மாட்டார். அவர் அப்படிக் கத்த, பாசுரம் பாடிக் கொண்டிருந்தவர்கள் மிரண்டு வீட்டை விட்டு அகல, அதுநாள் வரை பாண்டியன் சாரின் மீது கட்டி எழுப்பப்பட்டிருந்த புனித பிம்பம் சடுதியில் சரிந்தது. மேற்சொன்ன சம்பவம் நடந்தேறிய இரவு அவர்களுக்குள் என்ன ஆனதோ யாமறியோம். ஆனால் மறுநாள் காலை டீச்சர் அவர்கள் வீட்டு மாடிக்குக் குடியேறினாள். அத்துணை அன்னியோன்யமானவர்களாக அறியப்பட்ட சாரும் டீச்சரும் ஒரே இரவில் ஒருவருடன் ஒருவர் பேசாமல்போவார்கள் என்று எங்களால் நம்பவே முடியவில்லை.

2013-ம் ஆண்டு அவரைப் பிரிந்து மாடிக்குத் தனிக் குடித்தனம் சென்றவள், 2016 அக்டோபரில் சாகும் வரை ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் அவரிடம் திரும்பவே இல்லை. வீட்டு வேலைகளை முடித்த பின் பள்ளிக்குப் போய் வந்து, அவளின் சம்பளத்தைக் கொண்டு சொந்த வீட்டில் தங்குவதற்கே வாடகை கொடுத்து, சமைத்து... சாப்பிட்டு... தனிக்கோவில் தாயார் போல் வசித்திருக்கிறாள். சாரும், என் அம்மா அப்பாவும் எவ்வளவோ மன்றாடியும்கூட அவள் மனமிறங்கவில்லை; மாடியிலிருந்தும்தான்!

 அம்மாதான் நாள்தோறும் தவறாமல் அவளைப் பார்த்துவிட்டு வந்தபடியிருந்தாள். முன்புபோல பிள்ளைகளுக்குப் பாடமெடுப்பதையும்,பெண்களுக்குப் பிரபந்தம் சொல்லிக் கொடுப்பதையும், சமைக்கும் பொழுது பிரபந்தங்கள் பாடுவதையும் அவள் நிறுத்தி விட்டதாகவும், அவளின் சமையலில் மணமே இல்லை என்றும்கூட அம்மா சொல்லி அழுதாள்.

2016 அக்டோபர் 4-ம் தேதி இரவு. வழக்கம்போல தன் வேலைகளை முடித்துப் படுத்தவள் மீண்டும் எழவில்லை!

வாழ்வின் அனைத்தும் சார்தான் என்று நம்பி வந்தவளவள். அவரின் விருப்பமே தன் விருப்பம் என்று மொத்தத்தையும் மாற்றிக்கொண்டு தன் வாழ்க்கையை அவள் வடிவமைத்தாகவும் அதை ஒரே நாளில் அவர் சிதைத்துவிட்டதாகவும், 25 வருட வாழ்க்கை முழுக்க போலி என்றும், இது எல்லாமே போதுமெனத் தோன்றிவிட்டதாகவும், இறப்பதற்கு முதல் நாள் இரவு ஏதோ யோசனைகளுக்கிடையில் அவள் சொன்னதாக என்னை போனில் அழைத்த அம்மா என்னிடம் வருந்திச் சொன்னது இன்னமும் எனக்குள் ரீங்காரமிடுகிறது. சாகும் வரையிலும் அவள் சாரிடம் பேசாதது பேரதிர்ச்சி. டீச்சர் இறந்த பொழுது நான் அசாமில் உதவி கலெக்டராக இருந்ததால் இங்கு வரமுடியவில்லை.

‘‘ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலும் அவ்வாழ்க்கைக்கான அர்த்தம் பொதிந்திருக்கும். அதைக் கண்டறிவதே இப்பிறப்பின் நோக்கம்” என்று என்னிடம் திரும்பத் திரும்பச் சொன்ன ராஜி டீச்சர் வாழ்ந்த வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பது எனக்கு இன்று வரையிலும் புலப்படவில்லை.

டீச்சர் போன பிற்பாடு சாரின் நடமாட்டமும் பேச்சுவார்த்தையும் வெகுவாகக் குறைந்து விட்டதாகவும் , காலையில் எழுந்ததும் டீச்சருக்கு அவர் கட்டியிருந்த நினைவகத்திற்குப் போவதும் மீண்டும் வீடு வருவதுமாகவுமே அவர் நாள்களைக் கடத்திக்கொண்டிருப்பதாகவும் அம்மா சொன்னாள். ஊரே வியந்து பார்த்த பாண்டியன் சார் மற்றும் டீச்சரின் வாழ்க்கை இப்படி அமையும் என்று யார் நினைத்திருப்பார்கள்?

வடகிழக்கு இந்தியாவில் சில வருடங்கள் பணியாற்றிய பின் மாற்றலாகி இப்போதுதான் என் பூர்வீகத்துக்குப் பக்கத்து மாவட்ட கலெக்டராக வந்திருக்கிறேன்.

நினைவுகளிலிருந்து மீண்டு நிகழ்காலத்திற்கு வந்து மனைவியுடன் சாரை வரவேற்கத் தயாரானேன்.

நான்கு மணிக்கு வந்தார். ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் அவரைப் பார்க்கிறேன். மூப்பும் தளர்ச்சியும் அவரது உடலின் மூலைமுடுக்குகளில் எல்லாம் தன் ஆதிக்கத்தைச் செலுத்தியிருந்தது. கண்களில் ஒளியோ, குரலில் கம்பீரமோ இல்லை. நடையிலும் ஏகதளர்ச்சி. எவரைப் பார்த்தாலும் நேராக நிமிர்ந்து கண் பார்த்துப் பேசும் பழைய பாண்டியன் சாரின் சாயல் இவரிடம் எங்கேனும் எஞ்சியிருக்கிறதா என்று ஆராய்ந்தேன்... இல்லை.நேற்று அவருடன் போனில் பேசும்போதும் இன்று காலையிலும்கூட என்னுள் பிரவகித்த உற்சாகம் இப்போது முழுமையாக வடிந்திருந்தது.அவரும் என் கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பதாகவே பட்டது.

இவளும் ஸ்ரீவில்லிபுத்தூர்க்காரி எனச் சொல்லி மனைவியை அறிமுகப்படுத்தினேன். ‘ஸ்ரீவில்லிபுத்தூர்’ என்ற நொடியில் அவரது முகத்தில் தோன்றி மறைந்தது ரணமா , விரக்தியா, பழைய நாள்களின் நினைவா தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று அவரை வதைத்துக் கொண்டிருந்தது கண்கூடு. காபியைக் கொடுத்த பின் சிறிது நேரம் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தவள் அகன்றாள்.

அவரைப் பார்க்கப் பார்க்க கம்பீரமாய் வாழ்ந்த ஆண் சிங்கம் ஒன்று தன் பொலிவை எல்லாம் இழந்து, சோர்ந்து, அந்திமத்தை எதிர்நோக்கி அமர்ந்திருப்பதைப் போலவே எனக்குத் தோன்றியது. எவர் முயன்றாலும் இணைக்க முடியாத பெரும் இடைவெளி ஒன்றை எங்கள் இருவருக்குள்ளும் டீச்சரின் நினைவுகள் விட்டுச் சென்றிருப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினேன்.

எதைப் பற்றிப் பேச என்று தெரியாமல் நான் தயங்கிக்கொண்டிருந்தபோது, ‘‘எனக்கு உன்னால ஒரு காரியம் ஆகணும். முடியுமா சொல்லு.’’  சாரே தொடங்கினார்.

‘‘சொல்லுங்க சார்!’’

கையில் வைத்திருந்த மஞ்சப்பைக்குள் இருந்து எடுத்த பணக் கட்டுகளை மேஜைமீது வைத்தவர் அழுதார்.

அது... 2013-ம் ஆண்டிலிருந்து தேக்கி வைக்கப்பட்டிருந்த துக்கம் என்பதை என்னால் உணர முடிந்தது. போதிய அளவு அழும் அவகாசத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்ற முடிவுடன் மெளனமாக இருந்தேன். விசும்பலை அடக்கியபடியே பேசத்தொடங்கினார்.

‘‘நானும் இப்போ இந்தப் பணத்தைப்போலதான்... செல்லாக்காசு.’’ மேஜையின் மீது அவர் வைத்திருந்ததைப் பார்த்தேன். அத்தனையும் பழைய 500 ரூபாய் நோட்டுகள்.

‘‘பிரபந்தம்னா அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்’’ தனக்குள்ளாகப் பேசுவதுபோல அவர் என்னுடனான உரையாடலைத் தொடங்கியிருந்தார்.

‘‘உனக்குத் தெரியுமா? என்னைக் கட்டிக்கிட்டு வரும்போது தனக்குன்னு அவ கேட்ட ஒரே விஷயம் இதுதான். ‘எத்தனை வருஷமானாலும் நம்ம கல்யாண நாளன்னிக்கு மட்டும் வீட்டில் பிரபந்தங்களை வாசிக்கச் சொல்லணும்’ என்று அவ கேட்டது எனக்கு இன்னும் கண்ணிலேயே இருக்கு. மகராசி... தூக்கத்திலேயே போயிட்டா. நான்தான் கிடந்து சீந்துவாரற்று சீழ்ப்பட்டுப் போப்போறேன்.

அவ போனப்புறம் கொஞ்ச நாளில் நானும் அந்த மாடிக்கே குடி போனேன். தெரியுமா? அங்க போனேனே தவிர அவ புழங்கின எதையும் நான் தொடலை. வீடு முழுக்க அவதான் நிரம்பியிருந்தா. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை. வந்தாலும், ‘நான் உன்கிட்ட முதல்முதலாகக் கேட்டதைக்கூட சலிச்சுக்கிட்டேதான் அத்தனை வருஷம் செஞ்சுக்கிட்டு என்னோட வாழ்ந்தியா’ன்னு அவ குரல் அசரீரி மாதிரி கேட்டுச்சு. மிரண்டு இறங்கி கீழே வந்துட்டேன். எல்லாமே சூனியமாயிட்டு. மாடியை அப்பப் பூட்டிப் போட்டதுதான். எனக்கு உடம்புக்கு முடியலை. ஹார்ட் ஆபரேஷன் வேற பண்ணிக்கிட்டேன். பென்ஷன் பணம் மாத்திரை மருந்துக்கே சரியா இருக்கு. அதான்... மாடியைத் துப்புரவாக்கி வாடகைக்கு விடலாம்னு ரெண்டு வாரம் முன்னே வெள்ளையடிக்க வீட்டை ஒழிக்கும் போதுதான் இது கிடைச்சது. ஏறக்குறைய லட்சம் ரூபாய் சேர்த்திருக்கா. 25 வருஷமா நான் என் கைக்காசுல இருந்து பிரபந்த கோஷ்டிக்குக் கொடுத்ததை எனக்குத் திருப்பித் தர்றதுக்காகச் சேர்த்ததாக டைரியில் எழுதியிருக்கா பாரு.”

மீண்டும் உடைந்து... உறைந்து... பிறகு தொடர்ந்தார்.

‘‘என்னதான் சொல்லு... ரோஷமும் வைராக்கியமும் ஜாஸ்தி என் ராஜிக்கு. சும்மாவா, ஆண்டாள் ராஜியாச்சே! ஆண்டாளோட வைராக்கியத்தில துளியாச்சும் இல்லாமப்போயிடுமா... ஆனா என்ன, இப்போ இது மொத்தமும் நானும் செல்லாக்காசு.’’ அவர் வெளிப்படையாகக் குமுற, நானோ உள்ளுக்குள் உடைந்துகொண்டிருந்தேன்.

சுய சமாதானப்படுத்தியபடி, ‘‘வேற எதோ மாவட்ட கலெக்டர் 500 ரூபாய் செல்லாமல் போனது தெரியாமல் கிழவி ஒருத்தி சேர்த்து வச்சிருந்த பணத்தைச் செல்லும்படி ஆக்கினார்னு பேப்பரில படிச்சேன். அதான் எதுக்கும் உன்கிட்ட கேட்கலாம்னு... உன் செல்வாக்கைப் பயன்படுத்தி இதை மாத்த முடியுமா?’’

‘‘உங்களுக்குப் பணம் நானே தரேன் சார்...வாங்கிக்கோங்க.’’

‘‘வேணாம்பா...’’

ராஜி டீச்சர் - சிறுகதை

‘‘நான் தர்றதை வேணாங்கறிங்க. அப்புறம் ஏன் அஞ்சு வருஷம் முன்னே செல்லாக்காசாப் போனதுக்காக என் சிபாரிசு கேட்டு இப்ப வந்திருக்கீங்க?’’ என்று அழுகையை மறைக்க நினைத்துப் பொய்க்கோபத்தை வரவழைத்து சற்று குரலை உயர்த்தினேன்.

‘‘இல்ல... வர்ற ஏப்ரல் 11 அவ பிறந்தநாள். பிரபந்தம் சொல்றவங்களைக் கூட்டி வந்து அவ நினைவகத்தில பிரபந்தம் பாடச் சொல்லி அப்படியே இதை அவங்களுக்குக் கொடுக்கலாம்னுதான்...’’

அவர் சொன்னதைக் கேட்டு மனதை ஏதோ பிசைய, அழுதுவிடுவேனோ என்ற பயத்தில் டயரியைப் பிரித்துப் படிக்கும் சாக்கில் குனிந்தேன்.

‘ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை

பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி

காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்...’

அரிசிமணி போன்ற டீச்சரின் கையெழுத்தில் பிரபந்த வரிகளைக் கண்ட வுடன் கண்களில் நீர் கோக்க… அடக்க மாட்டாமல் வெடித்தேன்.