
`எல்லா வித்தைகளிலும் பெரிய வித்தை தன்னைக் காப்பாற்றிக்கொள்வதுதான்' என்கிற யதார்த்த நிலைக்கு நகர்த்துகிறது. `
போர் நிலத்தில் நிகழ்ந்த சம்பவங்களின் மற்றொரு கோணத்தைக் காட்டுவது ஷோபாசக்தியின் எழுத்து. ‘கருங்குயில்’ சிறுகதைகளும் அப்படியே! மொழி, சாதி, ஒடுக்குமுறை எனப் பல்வேறு தளங்களில் நிகழ்த்தப்படுகிற வக்கிரங்கள் புனைவாக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு துயரை, விமர்சனத்தை, கேள்விகளைத் தீர்க்கமான மொழியில் முன்வைக்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபன் உண்ணாவிரதமிருந்து இறக்கிறார். அவரின் இறுதி ஆசையை நிறைவேற்ற அவரது உடலை புலிகள் கொண்டு சென்ற சம்பவத்தையொட்டி எழுதப்பட்டிருக்கிறது `மெய்யெழுத்து' சிறுகதை. லட்சியவாதமும், அறிவுக்கூர்மையும் கொண்ட தன் நண்பனின் சடலத்தைப் பாதுகாக்கும் ஒரு மருத்துவரின் நினைவாக விரிகிறது கதை. லட்சியவாதியான நண்பனின் மரணம், இறுதி ஆசை, சாமான்ய வாழ்க்கை வாழ்பவனையும் ஒரு லட்சியத்துக்குள் நுழைக்கிறது. `மச்சான், போராடுறது என்ர வேலையில்ல... அது என்ர குணம்!' என்ற திலீபனின் வார்த்தைகள் அவரின் நண்பன் ராகுலனுக்கும் பொருந்துகிறது. `கருங்குயில்' சிறுகதை கவிஞர் பாப்லோ நெரூடாவின் வாழ்க்கைச் சம்பவத்தை மையமிட்டு எழுதப்பட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட, மலம் அள்ளுகிற குடும்பத்தின் பெண் சம்பங்கிக்கு நிகழ்ந்த அநீதியைத் தட்டிக் கேட்க முடியாத அவளின் பெற்றோர், `கருணையுள்ள கடவுள் என் பெண்ணுக்கு மறதியைக் கொடுத்திருக்கிறான். அவள் சீக்கிரமே எல்லாவற்றையும் மறந்துவிடுவாள். காலப்போக்கில் எல்லாரும் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்' என்று தாங்காத பாரத்துடன் சொல்வதாக அந்தக் கதை முடிகிறது.

`ஆறாங்குழி' கதை ராணுவம், புரட்சி இயக்கம் இரண்டிலும் இருக்கிற ஆதரவு மனநிலை, எப்போது வேண்டுமானாலும் மாட்டிக்கொள்கிற கண்ணி, சாகசவாதிகள் ரத்தக்காடாய் வீழ்வது என விரிகிறது. `எல்லா வித்தைகளிலும் பெரிய வித்தை தன்னைக் காப்பாற்றிக்கொள்வதுதான்' என்கிற யதார்த்த நிலைக்கு நகர்த்துகிறது. `வர்ணகலா' சிறுகதை போரால் சிதைந்து தேசங்கடந்து வாழும் மக்களின் மனதிலும் ஊறிப்போய்க் கிடக்கிற சாதியத்தை, சாதி நிகழ்த்துகிற வக்கிரத்தை முன்வைக்கிறது. தன் இறுதிநாள்களில் பிள்ளைகளுடன் வசிக்க விரும்பும் தாய் - அவளை அழைத்து வர மகன் எடுக்கும் முயற்சி - அதில் ஏற்படுகிற குற்றவுணர்வுமாக புலம்பெயர் வாழ்வின் சிக்கலைப் பேசுகிறது `ONE WAY' சிறுகதை. `அன்பின் சாத்தியங்களை நம்புகிறேன். அதனால்தான் அதிலுள்ள குறைபாடுகளையும் வக்கிரங்களையும் கண்டுபிடிக்கக் கடுமையாக முயற்சி செய்கிறேன்' என்கிற Frantz fanon-ன் மேற்கோள் காட்டப்பட்டிருப்பதை இந்தக் கதைகளின் வழியாகவும் செய்திருக்கிறார் ஷோபாசக்தி.
கருங்குயில் - ஷோபாசக்தி
வெளியீடு:
கருப்புப் பிரதிகள்
பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை
சென்னை - 600 005.
மொபைல்: 9444272500
விலை: ரூ. 200
பக்கங்கள்: 164