
- கவிப்பித்தன்
தனது வீட்டின் இடுப்புயரத் திண்ணையில் வடக்கைப் பார்த்துச் சம்மணமிட்டு உட்கார்ந்தார் அய்யாசாமி. அவருக்கு எதிரில் நான்கு வெற்றிலைகளையும், நான்கு கொட்டைப் பாக்குகளையும் வைத்தான் குமாரசாமி. தனது பேன்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் நாணயம் ஒன்றையும் எடுத்து தட்சணையாக அதில் வைத்தான்.
அவற்றைத் தொட்டு வணங்கிய அய்யாசாமி, கண்களை மூடி வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தார்.
தனது கைப்பேசியின் ரெக்கார்ட் பட்டனைத் தட்டி அதையும் அவர் எதிரில் வைத்தான். அய்யாசாமியின் வாய் தொடர்ந்து முணுமுணுத்துக்கொண்டே இருந்தது.
சட்டென தனது ஸ்கூட்டரின் பெட்டியைத் திறந்து, அதிலிருந்த இரண்டு குவாட்டர் பாட்டில்களை எடுத்து வந்து வெற்றிலையின் அருகில் வைத்தான். கண்களைத் திறந்த அய்யாசாமி அவற்றைப் பார்த்ததும் புருவங்களைச் சுருக்கினார்.
“எதுக்கு தொர... பிராந்தியப் பார்த்தாதான் பாடுவன்னு நென்ச்சியா?’’
“அய்ய... அப்டிலாம் இல்ல. பாடி முடிச்சப்பறம் ஜாலியா சாப்டுங்க…’’
‘‘இப்டிலாம் அந்தப் பாட்ட பாடக் கூடாதுன்னு எத்தினிவாட்டி சொன்னங்… உடமாட்டன்னு ஒத்தக் கால்ல நிக்கறியே தொர… எதுனா கீடு ஆய்டுமோன்னு பயமாவே கீது. அதாங்... சட்னு நாக்கு பெரள மாட்டன்து.’’

‘‘சாமி மேல பாரத்தப் போட்டுட்டு தைரிமா பாடுங்க… ஒண்ணும் ஆவாது!’’
அவனை உற்றுப் பார்த்தவர், தலையைத் திருப்பி, கிழக்கில் கரகரவென உயர்ந்து கொண்டிருந்த சூரியனைப் பார்த்துக் கைகள் கூப்பி வணங்கினார்.
திண்ணையை ஒட்டியிருந்த சிமென்ட் சாலையின் வடக்கில் ஒரு பெரிய புங்க மரம் நின்றிருந்தது. அதில் சரம் சரமாய் வெண்ணிறப் பூங்கொத்துகள் சிரித்துக் கொண்டிருந்தன. அதன் அருகிலிருந்த ஒற்றைப் பனையின் ஒரு கருக்கு மட்டையில் இரண்டு புறாக்கள் அலகுகளைக் கோதி விளையாடிக் கொண்டிருந்தன. அவரது கூரை வீட்டின் உள்ளேயிருந்து கிளம்பிய வெளிர் சாம்பல் நிறப் புகை, அந்தப் பனை மரத்தின் உயரத்திற்கு அடர்த்தியாக எழும்பிக் கொண்டிருந்தது. அதை ஒரு முறை உற்றுப் பார்த்தார்.
ஏற்கெனவே இரண்டு முறை இந்த ஊருக்கு வந்து சும்மாவே திரும்பிப் போய்விட்டான் குமாரசாமி. அவனுடைய ஊரிலிருந்து மூன்று மைல் தூரத்திலேயே இருந்தாலும் இங்கெல்லாம் இதற்கு முன்பு அவன் வந்ததே இல்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் குமாரசாமியின் ஊருக்கும் சேரிக்கும் பெரிய சண்டை மூண்டுவிட்டது. ஊரிலும் சேரியிலும் போலீஸ் பந்தோபஸ்து, விசாரணை எனப் பெரிய களேபரமே ஆகிவிட்டது. அதனால், ஊரில் நடக்கும் எந்தத் திருவிழாவுக்கும் சேரிக்காரர்கள் வந்து பறைமேளம் அடிக்கக் கூடாது என ஊர்க்காரர்கள் தீர்த்துச் சொல்லி விட்டார்கள். ‘‘அப்டினா உங்க பொணத்தையும் நீங்களே குழி நோண்டி பொதச்சுக்குங்க…’’ என சேரிக்காரர்களும் விறைப்பாகச் சொல்லிவிட்டனர்.
அதிலிருந்து ஊருக்கும் சேரிக்குமான விரிசல் பெரிதாகிவிட்டது. வெளியூர் பேண்டு செட்டுகள் வந்து காதைக் கிழிக்க, ஊர்த் திருவிழாக்கள் கோலாகலமாகவே நடந்தன. ஆனால் இந்த இரண்டு வருடத்தில் மட்டும் ஊரில் ஏழு சாவுகள் விழுந்தன. எந்தச் சாவுக்குமே பறைமேளம் இல்லை, வெட்டியான் இல்லை. மயானத்தில் அரிச்சந்திரன் கல் முன்பாக வீர ஜாம்புகனின் புராணம் பாடவில்லை.
முன்பெல்லாம் ஊரில் சாவு விழுந்தால் சேரியைச் சேர்ந்தவர்கள்தான் பாடை கட்டுவார்கள். செத்தவனின் வசதிக்கேற்ப தேர்ப் பாடையோ, கைப் பாடையோ தெருவை அடைத்துக்கொண்டு நிற்கும். புதைக்கக் குழியையும் அவர்கள்தான் வெட்டுவார்கள். சாவு விழுந்ததிலிருந்து, பிணம் குழிக்குள் இறங்கும்வரை பறை மேளம் ஓயாமல் காதைக் கிழிக்கும்.

ஊரும் உறவும் சேர்ந்து பிணத்துக்கு மாலை போட வரும்போதெல்லாம் ‘ஜன்ஜனக்கு… ஜன்ஜன் ஜன்ஜனக்கு…. ஜன்ஜன் ஜன்ஜனக்கு’ என அதிரும் பறையோடு சேர்ந்து ஊரே குதித்துக் குதித்து ஆடும்.
சேரி கண்ணாயிரம் சாவுப்பாட்டு பாடுவதில் கில்லாடி. அவன் பாடப் பாட, அவன் குரலில் தோய்ந்திருக்கும் சோகத்தில் ஊரே நெக்குருகி நிற்கும். மயானத்தில் அரிச்சந்திரன் கல் முன்பாக பிணத்தை இறக்கி வைத்ததும், வீர ஜாம்புகனின் வரலாற்றை மட்டும் அரை மணி நேரம் பாடுவான். ஊர் ஜனம் அவனைச் சுற்றி நின்றும், சமாதிகளின் மீது குந்தியும் அந்தப் பாட்டை ஊன்றிக் கேட்கும். இறுதியாக, ‘‘காளியாத்தா கதவத் திற… அரிச்சந்திரா வழி உடு...’’ என அவன் முடித்த பிறகுதான் பாடையிலிருக்கிற பிணம் குழிக்குள் இறங்கும்.
எல்லாம் பழைய கதை. இப்போது ஒவ்வொரு முறையும் பிணத்தைப் புதைக்க ஊர்க்காரர்களே குழி வெட்ட, பக்கத்து டவுன் பூ மார்க்கட்டிலிருந்து ஆட்கள் வந்து தேர்ப் பாடை கட்டினார்கள். அடுத்தடுத்த சாவுகளுக்கு அங்கிருந்தே சொர்க்க ரதம் வந்தது. பிணத்தைத் தூக்கி அதில் படுக்க வைத்துவிட்டால், அதுபாட்டுக்கு மயானத்தை நோக்கிச் சல்லென நகர்ந்தது. பாடையைச் சுமக்க ஆட்களைத் தேட வேண்டியதில்லை. பச்சை மூங்கிலுக்கும், தென்னை ஓலைக்கும் அலைய வேண்டியதில்லை.
சுடுகாட்டிலிருக்கும் அரிச்சந்திரன் கல் முன்பு பிணத்தை இறக்கி வைத்து, கற்பூரம் கொளுத்தி, கொள்ளிப் பானையில் இருக்கும் பிண்டா சோற்றை வாரி நான்கு மூலைகளுக்கும் இறைத்துவிட்டு, “காளியாத்தா கதவத் திற… அரிச்சந்திரா வழி உடு…’’ என ஒற்றை வரியில் ஊர் சலவைத் தொழிலாளி ஆனந்தன் ஒப்பித்துவிட்டால் போதும்… மறு பேச்சில்லாமல் பிணம் குழியில் இறங்கிவிடுகிறது.
‘‘இப்டி அரகொற சாங்கியமா அனுப்பி வெச்சா… போற ஆத்மா கைலாசத்துக்குப் போயிச் சேருமா?’’ என சில பெரிசுகள் மட்டும் அங்கலாய்த்தன.
குமாரசாமிக்கும் அதுதான் கவலையாக இருந்தது. சிப்காட்டில் ஒரு தோல் தொழிற்சாலையில் வேலை செய்தாலும், கூத்து, பாட்டு என அவனுக்கும் கொஞ்சம் ருசி இருந்தது. மயானத்தில் பாடும் அரிச்சந்திரன் பாட்டை ஏற்கெனவே ஊன்றிக் கவனித்திருந்தால் இப்போது அவனேகூட பாடிவிடுவான். ஆனால் இப்போது யாரிடம் போய் அந்தப் பாட்டைக் கற்றுக்கொள்வது? கண்ணாயிரத்திடம் போக முடியாது. போனால் அதுவே பிரச்சினை ஆகிவிடும்.
வெளியூரில் ஒரு சாவுக்குப் போன போது அங்கேயும் கவனித்துப் பார்த்தான், வீர ஜாம்புகன் பாட்டை அவர்களும் முழுமையாகப் பாடவில்லை. அரைகுறைதான்.
இவர்கள் ஊரிலிருந்து மூன்று மைல் தள்ளி இருக்கிற இந்த ஊர் அய்யாசாமி சாவு பாட்டும், அரிச்சந்திரன் பாட்டும் பாடுவதில் கில்லாடி எனச் சொன்னார்கள். எப்படியாவது இவரைப் பாடவைத்து, கைப்பேசியில் பதிவு செய்துகொண்டால் போதும். அதைக் கேட்டு அப்படியே சுடுகாட்டில் போய்ப் பாடிவிடுவான். இனிமேல் சாகிறவர்களாவது கைலாசத்துக்கோ, வைகுண்டத்துக்கோ நிம்மதி யாகப் போய்ச் சேருவார்கள்.
இந்த ஊருக்கு வருவதைப் பற்றி நினைத்ததுமே அவனுக்கு முதலில் மேனகாவின் நினைவுதான் வந்தது. அவள் நினைப்பு வந்ததுமே அவனுக்குள் சட்டென ஒரு சில்லிப்பு எழுந்தது.
மேனகா இந்த ஊரிலிருந்து வந்துதான் பன்னிரண்டாவது வரை அவனுடன் படித்தாள். வறுத்த உளுத்தம் பருப்பைப் போல மாநிறம். அளவான உயரம். வழுவழுக்கும் மூங்கிலைப் போல நீளநீளமான கைகள். குளத்து நீரில் நெளியும் அலைகளைப் போல கருகருவென்ற கூந்தல். நாவல் பழத்தைப் போல மினுக்கும் உதடுகளுக்கு மேலே ஒரு சின்ன வடு. துறுதுறுவென அலைகிற பெரிய பெரிய கண்கள்.
யாருடனும் பேச மாட்டாள். படிப்பில் இவனுக்கும் அவளுக்கும்தான் போட்டியே நடக்கும். போட்டி எல்லாம் மனசுக்குள்தான். ஒரு நாள்கூட வெளிப்படையாகப் பேசிக்கொண்டதே இல்லை. அவள்மீது இவனுக்கு ஒரு போதை இருந்தது. கூடவே பயமும் இருந்தது. அவளுக்கும் இவன்மீது ஒரு கண் என இவனுடன் படித்த பாபு சொல்வான். வெளியில் தெரியாமல் இவர்கள் ரகசியமாகக் காதலிப்பதாக சுந்தர் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திரிந்தான்.

தாவரவியல் ஆசிரியர் பரீட்சைத் தாளைத் தருகிறபோதெல்லாம் இவனுக்குப் பூரிப்பு தாங்காது. இவன் வலது கன்னத்தைச் செல்லமாக ஒரு முறை வருடிவிட்டுதான் அவர் பரீட்சைத் தாளைத் தருவார். அந்தப் பாடத்தில் மட்டும் இவன்தான் எப்போதுமே முதல் மதிப்பெண். அப்போதெல்லாம் இவனை ஒரு பார்வை பார்ப்பாள் மேனகா. குச்சி ஐஸ் நுனி நாக்கில் படும்போது உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு பரவுமே... அப்படி ஒரு சிலிர்ப்பு பரவும் இவனுக்குள்.
இவன் வேலூரில் கல்லூரியில் சேர்ந்தபோது அவளும் வருவாள் என எதிர்பார்த்தான். வேலூருக்கு ஒரே பேருந்தில்தான் போகவேண்டும். அப்போது மனம்விட்டுப் பேசலாம் என நினைத்திருந்தான். ஆனால் அவளைக் கல்லூரிக்கே அனுப்பாமல், அடுத்த வருடமே அவசரமாக, காவேரிப்பாக்கத்துக்குக் கிழக்கே ஏதோ ஒரு ஊரில் கட்டிக் கொடுத்துவிட்டனர். சில வருடங்கள் அவள் நினைப்பிலேயே ஏங்கிக் கிடந்தான் இவன்.
வாழ்க்கை எதைத்தான் அப்படியே விட்டு வைத்திருக்கிறது. படிப்பு முடிந்து, சிப்காட்டில் ஒப்புக்கு ஒரு வேலையில் சேர்ந்து, ஏதோ பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது, வீட்டில் நச்சரித்தாலும் கல்யாணத்தை மட்டும் தள்ளிக்கொண்டே வருகிறான்.
இதே ஊரிலிருந்து வந்து இவனோடு கல்லூரி வரை படித்த சுந்தரமூர்த்தியின் மூலம்தான் இந்த அய்யாசாமியைப் பிடித்தான். அவரைப் பார்க்க முதல்முறை வந்தபோதே மேனகாவின் வீட்டையும் காட்டினான் சுந்தரமூர்த்தி.
பாசி படர்ந்த பழைய ஓட்டு வீடு. ஓடுகள் பல இடங்களில் உடைந்து சிதறியிருந்தன. தெற்குப் பார்த்த மண் வாசலுக்கு எதிரில் சிறியதும் பெரியதுமாய் ஆறேழு வாழை மரங்கள். அதன் அருகிலேயே ஒரு பெரிய புங்கமரம். பின்புறமிருந்து வயதான இரண்டு தென்னை மரங்கள் தலை நீட்டிக்கொண்டிருந்தன.
“அவ ஊருக்கு வந்தே ரொம்ப நாளு ஆயிச்சுடா...’’ என்றான் சுந்தரமூர்த்தி.
மேனகா வளர்ந்த வீட்டையும், நடந்த தெருவையும், மிதித்த வாசலையும், விளையாடிய மர நிழலையும் பார்க்கும்போதே இவனுக்குள் மீண்டும் அந்தச் சிலிர்ப்பு ஓடியது.
அவள் வீட்டிலிருந்து கிழக்கில் சற்று தூரம் நடந்து திரும்பினால், இன்னொரு தெருவின் நடுவில் இருந்தது அய்யாசாமியின் வீடு. அய்யாசாமிக்கும் அவள் உறவுதான் என்றான் சுந்தரமூர்த்தி.
தயங்கித் தயங்கி வந்த விஷயத்தைச் சொன்னதும், இவனை விசித்திரமாகப் பார்த்தார் அய்யாசாமி. ‘‘ரொம்ப தப்பு தொர. சாவுப் பாட்ட சாவுலதாம் பாடணும். அரிச்சந்திரன் பாட்ட அரிச்சந்திரங் கோயில்லதாம் பாடணும்.”
‘‘எவ்ளோ காசு வேணும்னாலும் குடுக்கறங் பெரியவரே…’’
‘‘துட்டு பெர்சில்ல தொர… இதெல்லாம் சாங்கியம்… தப்பாப் பூட்டா ஊருக்கே கீடாய்டும்…’’
‘‘அப்டிலாம் ஒண்ணும் ஆவாது மாமா’’ என்றான் சுந்திரமூர்த்தி.
‘‘நீங்கல்லாம் இந்தக் காலத்துப் பசங்க. அப்டிதாங் சொல்லுவீங்க. ஊர்ல திடுக்குனு எதுனா நடந்துபூட்ச்சினா எம்மேல பழி போட்ருவாங்க...’’ பாட்டைப் பாடாமலே இவனைத் திருப்பி அனுப்பிவிட்டார் அய்யாசாமி.
இவனுக்குள் ஒரே நமநமப்பு. அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் அவர் எதிரில் போய் நின்றான். அப்போதும் தீர்மானமாக குறுக்கில் தலையாட்டிவிட்டார். இவனுக்கு முகம் சுருங்கிப்போயிவிட்டது.
‘‘செரி தொர... அடுத்த வாரம் வா. கடவுளு மேல பாரத்தப் போட்டு பாட்றங்...’’ என்றார்.
இதோ, திண்ணையில் அமர்ந்து அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறான். தவம் செய்யும் முனிவரைப் போல மூடியிருந்த அவர் கண்கள் மெதுவாகத் திறந்தன. வாய் ராகம் போட்டுப் பாடத் தொடங்கியது.
சாமி குருவே… சாமி குருவே….
ஊர் தோன்றி உலகம் தோன்றி
நாடு தோன்றி நகரம் தோன்றி
ஊருக்கு மேலாண்ட உயர்ந்த ஆலமரம் தோன்றி
ஆலமரத்தின் கீழே கனுப்புற்று தோன்றி
கனுப்புற்றுக்குக் கீழே காராம் பசு தோன்றி
காராம் பசுவைக் கரடு கட்டி
பெருவாழ்வு வாழ்ந்து வந்தானாம் வீர ஜாம்புகன்…’’
திடீரென அவரின் கைகள் நடுங்கத் தொடங்கின. முகம் வியர்த்தது. “தொர... மோளம் அடிக்கறவங்க, என்ன மாதிரி சாவுப்பாட்டுப் பாட்றவங்க குட்சிக்கினேதாங் இருப்பாங்க. ஆனா நானு பாடம்போது தொடவே மாட்டங். பொண்த்த எறக்கன பின்னாலதாங் வாய்ல வைப்பேங். ரெண்டு மூணு நாளு மொத்தத்தையும் சேத்துக் குட்சிட்டு இந்தத் திண்ணைலதாங் விழுந்துகினு கெடப்பங். இப்ப இன்னாவோ கையி நடுங்குது, ஒடம்பு ஒதறுது, மனசுக்குள்ள பிலுபிலுன்னு குளுருது… இரு, கொஞ்சூண்டு குட்சிக்கிறங்…’’
ஒரு குவாட்டர் பாட்டிலை எடுத்து மூடியைத் திறந்து, அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டார். பாதி பாட்டில் காலியானதும் கீழே வைத்து மூடினார். தொண்டையைச் செருமிக் கொண்டார்.
ஆதியில் முதல் வெட்டியானாகப் பிறந்து, அரிச்சந்திர மகாராஜனையே அடிமை கொண்ட வீர ஜாம்புகனின் பெருமைகளைப் பாடி, அவன் கைக்கொள்ளும் மாட்டின் பெருமைகளையும், அதன் கொம்பு, அதன் குளம்பு, அதன் வால், அதன் நரம்பு, அதன் சாணம், சாணத்தை எரித்துச் செய்யும் விபூதி என ஒவ்வொன்றின் பெருமைகளையும் பாடினார்.
ஆதியில் இந்த பூமியில் பிறந்த மானிடர்கள் எல்லோரும் இங்கேயே தங்கிவிட… பூமியின் பாரம் கூடிக்கொண்டே போகிறது. பாரம் தாங்க முடியாமல் பூமாதேவி தவிக்கிறாள். ஓடிப்போய் இந்திரனிடம் முறையிடுகிறாள். பூமியின் பாரத்தைக் குறைக்க என்ன செய்வது என யோசனை செய்கிறான் இந்திரன். வயதானவர்களை மட்டும் சொர்க்கத்துக்கு அனுப்பி, அதன்மூலம் பாரத்தைக் குறைக்கலாம் என முடிவெடுக்கிறான். அதை உலகுக்குப் பறைசாற்றி அறிவிக்க உடனடியாக வீர ஜாம்புகனை அழைத்து வரச் சொல்கிறான்.
ஆடும் பெண்களும், பாடும் பெண்களும் சூழ சல்லாபத்தில் திளைத்திருந்த வீர ஜாம்புகனிடம் தேவ தூதர்கள் தகவலைச் சொல்கிறார்கள். சுற்றி நிற்கிற அழகிகளை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஓடோடிப் போய் இந்திரனை வணங்கி நிற்கிறான்.
‘‘வீர ஜாம்புகா… பூமி பாரம் தாங்க முடியாமல் புலம்புகிறாள் பூமாதேவி. நீ உடனே எட்டுத்திக்கும் போய், கனி உதிர... கனி உதிர... எனச் சாட்டி வா.” எனக் கட்டளையிடுகிறான் இந்திரன்.
‘‘அப்படி சாட்டி வருவதால் எனக்கென்ன லாபம் சாமி…” எனக் கேட்கிறான் ஜாம்புகன்.
‘‘உனக்குப் பொன்னுக்கு பொன் தருகிறேன், ரோஜனத்துக்கு ரோஜனம் தருகிறேன், இந்த தேவேந்திரப் பட்டணத்தில் பாதி தருகிறேன்…”
“எனக்குப் பொன்னும் வேண்டாம், ரோஜனமும் வேண்டாம். உதிர்கிற ஒவ்வொரு உயிருக்கும் பிணம் போகிற வழியில் பிண்டா சோறு, பொரியரிசி, வாய்க்கரிசி, வாமூட்டு, நான்கு காலுக்கு நான்கு பணம், நடுக் காட்டான் ஒரு பணம், ஏற வாகனமும், வெள்ளித் தமுக்கும், வெங்கலக் கணுப்பும் தந்தால் அவ்விதமே சாட்டி வருகிறேன் சாமி…’’
‘‘அப்படியே தந்தேன்… `கனி உதிர… கனி உதிர…’ எனச் சாட்டிவா.”
அவ்விதமே சாட்டுவதற்காக யானைமீது ஏறிக் கிளம்புகிறான் வீர ஜாம்புகன். அவனைப் பாதி வழியில் நிறுத்துகிறாள் காரூர் கம்மாளப் பெண்.
‘‘வீர ஜாம்புகா, உன் பறைச் சாட்டுக்கு மறு சாட்டு இல்லை. ‘கனி உதிர… கனி உதிர…’ என நீ சாட்டிவிட்டால் பழமாய்ப் பழுத்த வயதானவர்கள் மட்டுமே சாவார்கள். உனக்கு நித்தியப்படி கூலி கிடைக்காது. ‘காய் உதிர… கனி உதிர… பூ உதிர... பிஞ்சு உதிர… ஆறுமாதத்துப் பிண்டம் அதிர்ந்துதிர...’ எனச் சாட்டிவிடு. இதனால் உனக்கு நித்தியப்படி கூலி கிடைக்கும்’’ என ஆசை காட்டுகிறாள்.
அதற்கு மயங்கி, இந்திரனின் கட்டளைக்கு மாறாக ஜாம்புகன் சாட்டிவிடுகிறான். அன்றிலிருந்துதான் காயும் கனியும், பூவும் பிஞ்சுமாய் மனிதர்கள் சாகிறார்கள். பிறந்த குழந்தைகள்கூட சாகத் தொடங்கின.
இந்தக் கதையைப் பாட்டாக அவர் பாடப் பாட, உடல் சிலிர்க்கிறது குமாரசாமிக்கு. முக்கால் மணி நேரம் பாடி முடித்து, இறுதியாக, “காளியாத்தா கதவத் திற… அரிச்சந்திரா வழி உடு…’’ என்று கைகளைக் கூப்பினார் அய்யாசாமி. கண்களைத் திறக்காமலேயே சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார்.
முழுவதுமாய்ப் பாடி முடிந்து, கைப்பேசியில் பதிவும் ஆகிவிட்டது. யாதொரு அசம்பாவிதமும் இல்லாமல் முடிந்துவிட்டதால் மனசு நிறைகிறது இருவருக்கும்.
‘‘அல்ப துட்டுக்கு ஆசப்பட்டு, இந்திரன் சொன்னத மீறி வீர ஜாம்புகன் சாட்டுனதாலதான இவ்ளோ சாவு நடக்குது நாட்ல…” நீண்ட நாள்களாகத் தனக்குள் உறுத்திக்கொண்டிருந்த கேள்வியைக் கேட்டான் குமாரசாமி.
சட்டெனக் கண்களைத் திறந்தார் அய்யாசாமி. ‘‘அட, போ தொர. பாவம் ஒரு பக்கம்… பழி ஒரு பக்கம்… எல்லாமே தெரிஞ்ச சாமிக்கி இப்டிதாங் நடக்கும்னு தெரியாதா? இவன பலிகடா ஆக்கறதுக்கு அப்பவே நாடகம் நடந்துகீது.”
தலை ஆட்டியபடி கைப்பேசியை எடுத்துப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். வண்டியைக் கிளப்பினான். தூரத்தில் பெண்களும் குழந்தைகளும் அலறும் கூப்பாடு கேட்க, கிழக்குத் தெருவில் திரும்பினான். மேனகாவின் வீட்டின் முன்பு கசகசவென சிறு கும்பல் நின்றிருந்தது. ‘மேனகாவின் அப்பா, அம்மாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ..?’ சற்று தூரத்திலேயே வண்டியை நிறுத்தி, காலூன்றி நின்றான். யாரையாவது கேட்கலாம் என்றால் தயக்கமாக இருந்தது.
சுந்தரமூர்த்திக்குப் போன் போட்டான். நடவு வேலை இருப்பதால் அவனுடன் வரமுடியாது எனக் காலையிலேயே சொல்லியிருந்தான். ‘‘குமாரு, அந்தப் பெர்சு பயந்தமாரியே ஆயிடுச்சுடா…’’ என போனை எடுத்ததுமே படபடவெனச் சொன்னான் சுந்தரமூர்த்தி.
“இன்னாடா சொல்ற… மேனகா ஊட்ல யாருக்குனா எதுனா ஆயிடுச்சா?’’
“மேனகாதாங் மண்ணெண்ணெய ஊத்திக் கொளுத்திக்கிச்சாம்…’’
இவனுக்குக் கண்கள் இருட்டிக்கொண்டன.
“நேத்து சாய்ந்தரம்தான்டா ஊருக்கு வந்திச்சு. கல்யாணமாயி எட்டு வருசமா பசங்களே இல்லன்னு ராத்திரி ரொம்ப நேரம் பஞ்சாய்த்து நடந்துகீது… கடசில அறுத்து உட்றதுன்னு முடிவு பண்ணிட்டாங்களாம்.”
‘‘அறுத்து உட்றதுனா?”
‘‘டைவர்சு மாதிரிடா.”
‘‘கொழந்த இல்லன்னா அதுக்கு எத்தினி ஆஸ்பத்திரி கீது. அதுக்கு ஏன்டா டைவர்சு?”
“அட… இதுவரைக்கும் ஊட்டுக்காரன கிட்டவே சேக்கலியாம்டா இது. தோ… நானு அங்கதா வந்துகினு கீறங்’’ எனத் தொடர்பைத் துண்டித்தான் சுந்தரமூர்த்தி.
இவனுக்கு இதயம் தொம் தொம் என அடித்துக்கொண்டது. எதுவோ புரிவது போலிருந்தது. வண்டியிலிருந்து இறங்கி நின்றான். சுற்றிலும் ஒரே கத்தலும், கதறலுமாக இருந்தது. யாரோ நீளநீளமான முழு வாழை இலைகளை அறுத்துக் கொண்டு ஓடினார்கள்.
நான்காவது நிமிடம் அங்கே வந்து சேர்ந்தான் சுந்தரமூர்த்தி. அந்த வீட்டுக்கு இருவரும் நடந்தார்கள். குமாரசாமியால் கால்களைத் தரையில் ஊன்றி நடக்கவே முடியவில்லை.
வாசலிலேயே வாழை இலைகளைப் பரப்பி, அதன்மீது மேனகாவைப் படுக்க வைத்து, உடம்பின் மேலேயும் இலைகளைப் போர்த்தி இருந்தார்கள். வலியில் மேனகா முனகுவது ஈனஸ்வரமாய்க் கேட்டது. முகத்தில் சுத்தமாகத் தீக்காயம் இல்லை... நைலான் புடவை கட்டியிருந்ததால் உடம்புதான் நிறைய வெந்துவிட்டது என யாரோ சொன்னார்கள்.
‘‘மச்சாங்… கிட்டப் போவாத. இப்ப உன்னப் பாத்தா அது இங்கியே உயிர உட்டாலும் உட்ரும்.”
“இல்லடா… என்னப் பாத்தா, போற உயிர புடிச்சு வெச்சாலும் வெச்சிக்குவா…”
அவனைப் புரியாமல் பார்த்தான் சுந்தரமூர்த்தி.
“இல்ல, நீ சைலன்டா வீட்டுக்குப் போய்டு. பாட்டு எறக்கன கதைய யாருகிட்டயும் மூச்சு உடாத. அதான் சாக்குன்னு அதப் புட்சிக்கிவாங்க… நீ கிளம்பு.’’
அவனை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தான் சுந்தரமூர்த்தி. தயங்கித் தயங்கி நகர்ந்த அவனது வண்டி சதுரக்குட்டை மலை வளைவில் திரும்பியபோது அலறியபடி எதிரில் வந்த ஆம்புலன்ஸ் வேகமாக ஊரை நோக்கிப் போனது.

இவன் மனசுக்குள் பிரளயமே நடந்துகொண்டிருந்தது. ‘எப்படியாவது மேனகாவைக் காப்பாத்துடா முருகா’ என எதிரில் தெரிந்த வள்ளிமலையைப் பார்த்து உருகி உருகி வேண்டிக் கொண்டான்.
அன்று இரவு அவனால் தூங்கவே முடியவில்லை. கைப்பேசியைத் தொடவே பயமாக இருந்தது. அந்தப் பாட்டை அழித்துவிடலாமா என்றுகூட நினைத்தான். விடிய விடிய திகிலும், பயமுமாய் நகர்ந்தது இரவு.
மறுநாளும், அதற்கு மறுநாளும் வேலைக்கே போகாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். சுந்தரமூர்த்தியிடம் போனில் பேசக் கூட பயமாக இருந்தது.
மூன்றாவது நாள் மதியம். கைப்பேசி ஒலித்தது. பயத்தோடு பார்த்தான். சுந்தரமூர்த்தி. மீண்டும் மார்பு டம் டம் என அடிக்கத் தொடங்கியது. கைகள் நடுங்கின. மூச்சை இழுத்து அடக்கிக்கொண்டு பட்டனைத் தட்டினான்.
“குமாரு...மேனகா பொழச்சிக்கினாடா. இனிமே உயிருக்கு பயமில்லேன்னு சொல்லிட்டாங்களாம்.’’
அப்படியே சரிந்து கீழே உட்கார்ந்தான். தண்ணீரில் மூழ்கி மேலெழுந்து வந்ததும் அவசர அவசரமாய் மூச்சை இழுப்பவனைப் போல வேக வேகமாக மூச்சை இழுத்துவிட்டான். சட்டென மனசு கரைந்து விம்மியது.
‘‘வீர ஜாம்புகா... காப்பாத்திட்டடா!’’ என வாய்விட்டே அழுதான்.