மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 70 - யானை தடவுதல்

யானை தடவுதல்
பிரீமியம் ஸ்டோரி
News
யானை தடவுதல்

இந்திய நாகரிகம் உயர்ந்தது. இந்தியாவுக்கு நாகரிகம் என்றொன்று கிடையாது. இந்திய வரலாறு பிரமிக்கத்தக்கது. இந்தியாவுக்கு வரலாறு கிடையாது.

கிரேக்கம் கண்டறிந்த இந்தியாவில் தொடங்கி, கிரேக்கப் பதிவுகளைக்கொண்டு இந்தியாவைக் கண்டறிந்த பிரிட்டனிடம் வந்துசேர்ந்திருக்கிறோம். ஹெரோடோட்டஸில் ஆரம்பித்த பயணம் கன்னிங்காமிடம் வந்து முடிவடைந்திருக்கிறது. முடிவடைந்திருக்கிறதே தவிர, நிறைவடையவில்லை. இன்னும் ஆயிரம் அத்தியாயங்களுக்கு விரித்துச் சென்றாலும் இந்தியாவைப் போதுமான அளவுக்கு விளக்கிவிட முடியாது. நூறு அல்பெரூனிகள் திரண்டு வந்தாலும், நூறு வில்லியம் ஜோன்ஸ்கள் பிறந்து வந்து ஆராய்ந்தாலும் இந்தியா அவர்கள் கரங்களுக்கு முழுமையாக அகப்படப்போவதில்லை.

இந்தியா என்பது ஒரு நாடா, துணைக்கண்டமா அல்லது உலகமா? இந்தியா என்பது அதன் வரலாறா, மதமா, பண்பாடா, அரசியலா? இந்தியா என்பது அதன் பழைமையா, புதுமையா, இரண்டின் கலவையா? இந்தியா என்பது நிலமா, கடலா, பள்ளத்தாக்கா, காடா? இந்தியா என்பது மொழியா, மக்களா, உணர்வா? இந்தியா என்பது கிராமமா, நகரமா, பெருநகரமா? இந்தியா என்பது காவியமா, பாடலா, இசையா? இந்தியா என்பது தொன்மமா, கதையா, பழங்காலத்து நினைவா? இந்தியா என்பது வறுமையா செழுமையா? இந்தியா என்பது ஒன்றா, பலவா? இந்தியா என்பது நம்பிக்கையா, கனவா, கருத்தா? அல்லது எல்லாமேவா? எல்லாமே என்றால் இதில் எதுவொன்றைத் தொட்டாலும் கடல்போல் அல்லவா விரிகிறது?

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 70 - யானை தடவுதல்

இந்தியாவின் மொழிகள் அனைத்தையும் அறிந்தவர் யார்... வரலாறுதான் இந்தியா என்றால் அதைக் கற்றுத் தீர்த்தவர் யார்... மதம்தான் இந்தியா என்றால் அதைப் பருகித் தீர்த்தவர் யார்... இந்தியாவின் நீள, அகலங்களை அளந்து முடிக்க ஒருவருக்கு எவ்வளவு ஆயுள்கள் போதும் என்று உத்தேசமாவது சொல்ல முடியுமா... இதுதான் இந்தியாவின் சாரம் என்று திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுவதற்கு இன்னும் எத்தனை ஆயிரம் நூல்கள் எழுதப்பட வேண்டும்?

நாம் சந்தித்த பயணிகள் கலக்கம் கொள்ளவில்லை. மேற்குப் பகுதியில் காலடி பதித்தவுடன் `இதுதான் இந்தியா’ என்றார்கள். வடக்கைக் கண்டதும் `இல்லை இதுதான் இந்தியா’ என்றார்கள். `இல்லை, தெற்குதான் இந்தியா’ என்றார்கள் அங்கு சென்றவர்கள். சிலர் சமஸ்கிருதத்தைக் கற்றுத் தெரிந்துகொண்டு `இதுதான் இந்தியா’ என்றனர். சிலர் இந்து மதத்தைச் சுட்டிக்காட்டி `இதுதான் பண்டைய இந்தியாவின் அடையாளம்’ என்றனர். கடவுள்களையும், கட்டுமானங்களையும், சடங்கு களையும், நம்பிக்கைகளையும் விவரித்துவிட்டு `இந்தியாவை விவரித்துவிட்டேன்’ என்றனர். `புத்தர் தான் இந்தியாவின் இதயம். அவரை உணர்ந்தால் இந்தியாவை உணர்ந்துவிடலாம்’ என்றார்கள் வேறு சிலர். விகாரைகளிலும், ஜாதகக் கதைகளிலும், திரிபிடகத்திலும் இந்தியா ஒளிந்திருப்பதை அவர்கள் கண்டறிந்து வெளிப்படுத்தினார்கள்.

காலவரிசைப்படி நிகழ்வுகளைப் பட்டியலிட்டுவிட்டு `இதுதான் இந்தியா’ என்றார்கள் சிலர். மகாராஜாக்களின் கதைகளைத் தொகுத்துவிட்டு இந்தியாவின் வரலாற்றைத் தொகுத்துவிட்டதாகச் சிலர் நம்பினர். எங்கெங்கும் நிறைந்து வழியும் வறுமையின்மீது கவனத்தைக் குவித்த சிலர் `வறுமையின் கதைதான் இந்தியாவின் கதையும்’ என்றனர். வாரணாசியில் உடலெல்லாம் சாம்பல் பூசிக்கொண்டு தாடி மீசையோடு திரியும் சாதுக்களின் கூட்டத்தை எழுதிவிட்டு `இந்தியாவின் கதையை எழுதிவிட்டேன்’ என்றார்கள்.

இந்திய நாகரிகம் உயர்ந்தது. இந்தியாவுக்கு நாகரிகம் என்றொன்று கிடையாது. இந்திய வரலாறு பிரமிக்கத்தக்கது. இந்தியாவுக்கு வரலாறு கிடையாது. இந்தியாவில் எல்லாமே ஏற்கெனவே கண்டுபிடிக்கப் பட்டுவிட்டன. இந்தியா எதையும் கண்டுபிடிக்க வில்லை. இந்தியா என்றால் மூடநம்பிக்கை. இந்தியா என்றால் அற்புதம். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. இந்தியா ஒரு மதவாத நாடு. இந்தியா ஒரு புண்ணிய பூமி. இந்தியா ஓர் அழுக்கு மூட்டை. இந்தியா பகுதியளவிலும் முழுமையாகவும் அந்நியர் களால் ஆளப்பட்டிருக்கிறது; எனவே அது ஒரு பலவீனமான நாடு. அலெக்சாண்டர் தொடங்கி ஆங்கிலேயர் வரை உள்ளே நுழைந்த எல்லா ஆக்கிரமிப்பாளர்களையும் இந்தியா நொறுக்கி அனுப்பியிருக்கிறது; எனவே இந்தியா ஒரு பலமான தேசம்.

அயல்தேசத்துப் பயணிகளால் இந்தியாவை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் இப்படிப் பிழையாகவும் முன்னுக்குப் பின் முரணாகவும் அரைகுறையாகவும் அவர்கள் பதிவுகள் அமைந்துவிட்டன என்று அவசரப்பட்டு முடிவு கட்டிவிட வேண்டாம். இந்தியர்களின் பார்வையில் இந்தியாவின் கதையைச் சொல்லத் தொடங்கினாலும், கிட்டத்தட்ட இதே போன்ற முரண்களையும், இதே போன்ற பிழைகளையும், இதே போன்ற முழுமையற்ற பார்வைகளையும்தான் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனில், இந்தியர்களாலும் இந்தியாவைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று சொல்லிவிடலாமா?

இன்றும் வடக்கிலிருக்கும் ஒருவரின் இந்தியாவும், தெற்கிலிருக்கும் ஒருவரின் இந்தியாவும் ஒன்றுபோல் இருப்பதற்கு வாய்ப்பு குறைவுதான். சம்ஸ்கிருத இந்தியாவும். பாலி இந்தியாவும், பிராகிருத இந்தியாவும் தமிழ் இந்தியாபோல் இருக்கப்போவதில்லை. ஓர் ஆணின் இந்தியாவும், பெண்ணின் இந்தியாவும் ஒன்றல்ல. சாதிப் படிநிலையில் மேலே இருப்பவரும், கீழே இருப்பவரும் ஒரே இந்தியாவில்தான் வாழ்கின்றனரா, என்ன? ஓர் ஆதிவாசியிடம் இந்தியாவை விளக்கச் சொன்னால் அவர் வேறோர் இந்தியாவை நமக்கு அளிப்பார். அது அவர் இந்தியா. ஒரேயொரு பெண் பயணியைக்கூட நாம் இங்கே சந்திக்கவில்லை. இதன் பொருள், நம் இந்தியா நமக்குக் கிடைக்கவேயில்லை என்பதுதான்.

`இதில் எதுவுமே இந்தியா அல்ல’ என்று சொல்லலாம். அல்லது `எல்லாமே இந்தியாதான்’ என்றும் சொல்லலாம். அலெக்சாண்டர் கண்டது ஓர் இந்தியாவை. மெகஸ்தனிஸ் எழுதியது ஓர் இந்தியாவை. பாஹியானைப் பின்பற்றி வந்தவர்தான் என்றாலும், யுவான் சுவாங் வேறொரு இந்தியாவில் தான் கால்களைப் பதித்தார். அல் மசுடி கண்ட இந்தியாவை இபின் பதூதா காணவில்லை. அல் பெரூனி கண்டுபிடித்தது முற்றிலும் புதியதோர் இந்தியாவை. கஜினி முகமதுவின் இந்தியாவும், விஜயநகரத்து இந்தியாவும் வெவ்வேறானவை. தென்னிந்தியாதான் என்றாலும் மார்கோ போலோவும் வாஸ்கோ ட காமாவும் வெவ்வேறு இந்தியாக்களையே கண்டனர். வெவ்வேறாகவே அதை எதிர்கொண்டனர். கிரேக்கர்கள் காணாத இந்தியாவை அவர்களுடைய பதிவுகளைக் கொண்டே வில்லியம் ஜோன்ஸும் அவர் சகாக்களும் கண்டுபிடித்தனர்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பண்டைய இந்திய வரலாற்றை ஆராய்ந்துவரும் ரொமிலா தாப்பரிடம் கேட்டால், `பண்டைய இந்தியா இன்னமும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட வில்லை’ என்றே சொல்வார். புதிய ஆய்வு முறையியலைக்கொண்டு, இந்திய வரலாற்றை எழுதியவர் அவர். அவருடைய புத்தகங்களைப் பிரித்தால் அலெக்சாண்டருடன் இணைந்து இந்தியாவுக்கு வந்து பல விநோதக் கதைகள் எழுதிய கிரேக்கர்களை நாம் சந்திக்கலாம். அசோகர் குறித்து அவர் எழுதிய ஆய்வு நூலைப் புரட்டினால் அதிலிருந்து மெகஸ்தனிஸ் உயிர்பெற்று வருகிறார். குறைகளும், குற்றங்களும், போதாமைகளும் நிறைந்த அவர்களுடைய பதிவுகளை இன்னமும் ஏன் அவரும், அவரைப்போல் பிறரும் இன்றும் வாசிக்கிறார்கள்? சீன பௌத்தர்களையும், அரபுப் பயணிகளையும், ஐரோப்பியப் பயணிகளையும் ஏன் நாம் இன்னமும் வாசிக்க வேண்டும்... ஆங்கிலேயர் வெளியேறிச் சென்றுவிட்ட பிறகும் அவர்கள் படைப்புகள் ஏன் நம்மிடம் இருக்கின்றன... புதிய ஆய்வாளர்களை அவை இன்றும் ஈர்ப்பது ஏன்?

மேற்கத்தியச் சமூகம், இந்தியா போன்ற ஆசிய நாடுகளை அணுகி ஆராய்ந்த முறையை விரிவாக ஆய்வுசெய்த எட்வர்ட் செய்த், ‘கீழைத்தேயவியல்’ என்னும் செல்வாக்குமிக்க கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தினார். அதைக்கொண்டு அணுகும்போது, இந்தியாவைக் கண்டும். உணர்ந்தும், ஆராய்ந்தும் எழுதி அயலவர்கள் பெருமளவில் மனச்சாய்வோடு இயங்கியிருப்பதைக் காண முடிகிறது. `இந்தியா இப்படித்தான் இருக்கும்’ அல்லது `இருக்க வேண்டும்’ என்னும் முன்முடிவோடு அவர்கள் இந்தியாவை எழுதியிருக்கிறார்கள். குறைவான தரவுகளைக்கொண்டு, குறைபாடுள்ள முறையியலைக் கையாண்டு, பிழையான புரிதலோடு இந்தியாவின் தத்துவத்தை, மதத்தை, வரலாற்றை, பண்பாட்டை, கலையை, சமூகத்தை, வாழ்வை, அரசியலை, பொருளாதாரத்தை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் அவர்கள்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 70 - யானை தடவுதல்

இதன் பொருள் அவற்றையெல்லாம் மொத்தமாக நீக்கிவிட வேண்டும் என்பதல்ல. எழுத்தில் உள்ளவையெல்லாம் உண்மை என்று ஏற்றுக்கொண்டுவிடாமல், கவனமாக ஒவ்வொரு பதிவையும் விரிவான, ஆழமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் பார்க்காமல், ஏன் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் தகுந்த பின்னணியோடு புரிந்துகொள்ள முயல வேண்டும். அந்நியரின் பதிவுகளை மட்டுமல்ல, இந்தியா குறித்து இந்தியரே எழுதும் பதிவுகளும் ஆராயப்பட வேண்டும், கேள்விகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மனச்சாய்வுக்கு எவரும் ஆட்படலாம்.

புதிய கேள்விகள் எழும்போது வரலாறு மாறுகிறது. புதிய தரவுகள் கிடைக்கும்போது வரலாறு மாறுகிறது. ஆய்வுக் கோணங்கள் மாறும்போது வரலாறு மாறுகிறது. இந்திய வரலாறு என்றொன்று கிடையாது. இந்திய வரலாறுகள்தான் உள்ளன. அவையும்கூடத் திரும்பத் திரும்ப எழுதப்படுகின்றன. திரும்பத் திரும்ப ஆராயப்படுகின்றன.

உருண்டு, திரண்டு நின்றுகொண்டிருக்கிறது இந்திய யானை. `என் கதையை இதுவரை முழுவது மாகச் சொன்னவர் ஒருவருமில்லை’ என்கிறது அது!

(நிறைந்தது)

*****

பாதங்களின் சொற்கள்!

விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் அனைத்து இதழ் களிலும் தொடர்கள் எழுதியிருக் கிறேன். ஜூனியர் விகடனில் எழுதுவது இதுவே முதன்முறை. இதுவரை எழுதியதில் அதிக அத்தியாயங்கள் நீண்டு சென்ற தொடரும் இதுவே.

பள்ளி மாணவர் தொடங்கி ஓய்வுபெற்ற பல்கலைக் கழகப் பேராசிரியர் வரை பலரிடமிருந்து வாழ்த்துகளும் ஆலோசனைகளும் வந்துகொண்டிருந்தது மறக்க முடியாத அனுபவம்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 70 - யானை தடவுதல்

பயணக் குறிப்புகள் தொடங்கி வரலாற்று ஆய்வுகள் வரை முழுக்கப் பிரதிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இது. இதற்காக நான் மேற்கொண்ட பயணம் என்பது என் வீட்டு அலமாரியில் தொடங்கி கன்னிமாரா நூலகத்தில் நிறைவடைந்து விட்டது. உயிரைப் பணயம்வைத்து இரவும் பகலுமாக ஆண்டுக்கணக்கில் பயணம் செய்து இந்தியாவை வந்தடைந்தவர்களின் கதைகளை, இருக்கும் இடத்தைவிட்டு அகலாமல் எழுதியது நிச்சயம் முரண்தான்.

ஆனால், கிட்டத்தட்ட பயணிகளின் கரங்களைப் பற்றிக்கொண்டு அவர்களோடு சேர்ந்து நடந்தும், திரிந்தும், அலைந்தும் இந்தியாவைத் தரிசித்த உணர்வை அவர்களுடைய படைப்புகள் எனக்கு அளித்திருக்கின்றன. அந்த உணர்விலிருந்து ஒரு துளியையேனும் வாசகர்கள் இத்தொடரிலிருந்து பெற்றிருந்தால் அதுவே போதும்.

பயணிகளின் கால்தடங்களை அடியொற்றி வாசகர்களோடு 70 வாரங்கள் நடைபோட முடிந்ததில் மகிழ்ச்சி. இதைச் சாத்தியப்படுத்திய ஜூனியர் விகடன் ஆசிரியர் குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றி. வரலாற்றை ஓவியங்கள் மூலம் உயிர்ப்பித்து கொண்டுவந்த ஹாசிப் கானுக்கு மிக்க நன்றி.

வேறொரு பயணத்தில் சந்திப்போம்.

அன்புடன்
மருதன்