மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பத்தல... பத்தல... மினிமலிசம் - 2 - உங்கள் வீடு குப்பைக்கிடங்கு அல்ல!

உங்கள் வீடு குப்பைக்கிடங்கு அல்ல!
பிரீமியம் ஸ்டோரி
News
உங்கள் வீடு குப்பைக்கிடங்கு அல்ல!

- சஹானா

‘அத்தனைக்கும் ஆசைப்படு!’

- ஒரு மினிமலிஸ்ட்டாக வாழ வேண்டுமெனில், வாழ்க்கையில் நீங்கள் கடைப்பிடிக்கவே கூடாத ஓர் அறிவுரை இருக்கிறது. அதுதான், மேலே சொன்ன முதல் இரண்டு வார்த்தைகள்!

ஆம்... அத்தனைக்கும் ஆசைப் படுவதில்தானே அத்தனை பிரச்னைகளும் ஆரம்பமாகின்றன; மனத்தைக் கனக்கச் செய்யும் சூழல்கள் அமைகின்றன. ஆசைப் படுவதையெல்லாம் அடைவது என்பது யாருக்குமே சாத்திய மாகாத அசாத்தியம்.

அப்படியெனில், பாரதியே கூறியிருக்கிறாரே ‘பெரி தினும் பெரிது கேள்’ என்று நீங்கள் யோசிக்கலாம். புதிய ஆத்திச்சூடி வாயிலாகக் கூறிய அவர் வார்த்தைகளுக்கு நேரடி அர்த்தம் எடுத்தால் இப்படி குழப்பம்தான் மிஞ்சும். வாழ்க்கையில் நாம் அடைய ஆசைப்படும் விஷயங்கள் பெரும்பாலும் நமக்கானவை... அதிகபட்சம் நம் குடும் பத்துக்கானவை. அதைத் தாண்டி நாம் பெரிதாக என்ன ஆசைப்பட்டிருக்கிறோம்... எதற்காக ஆசைப்பட்டிருக் கிறோம்?

பத்தல... பத்தல... மினிமலிசம் - 2 - உங்கள் வீடு குப்பைக்கிடங்கு அல்ல!

பாரதி இதன் மூலம் சொல்வதுதான் என்ன? `உங்கள் கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும்... அவை உங்களைச் சுற்றியிருப்பவர்களின் உரிமைகளுக்கானதாகவும் இருக்க வேண்டும்... கடின உழைப்பை கொடுத்தேனும் அவற்றைப் பெற வேண்டும்' என்கிறார். இதுதான் சுதந்திர தாகத்தோடு பாரதி பாடிய ‘பெரிதினும் பெரிது கேள்!’ எனும் வார்த்தைகளுக்குள் பொதிந்திருக்கும் மேன்மையான செய்தி.

அத்தனைக்கும் ஆசைப்படாமல், பெரிதினும் பெரிது கேளாமல், ‘போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’ என பழைய ஆத்திச்சூடி படி வாழ வேண்டுமா? அதுதான் மினிமலிசமா? நிச்சயமாக இல்லை. மினிமலிசம் என்பது அதையும் தாண்டி சிறப்பானது.

மூன்று குவியல்களுக்குள் மொத்த வாழ்க்கையும்!

உங்களுக்குச் சொந்தமான அனைத்துப் பொருள்களை யும் மூன்று குவியல்களாக வைக்கலாம் (மனதுக்குள் தான்!).

1. அத்தியாவசியம்

இந்தப் பிரிவில் உணவு, தங்குமிடம், உடைகள்... இப்படி இவை இல்லாமல் நாம் வாழ முடியாத தேவைகள் இடம்பெறுகின்றன. அதே நேரத்தில் ஒவ்வொரு நபருக்கும் ரசனை மாறுகிறது. அதற்கேற்ப பொருள்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன.

அத்தியாவசியமான பொருள்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவே!

2. அவசியமற்றவை

உண்மையில், நமக்குச் சொந்தமான பெரும்பாலான பொருள்கள் இந்தப் பிரிவில் அடங்கும். ஆனால், இவை நம் வாழ்வில் நாம் விரும்பும் பொருள்களாக இருக்கக்கூடும். ஏனெனில் அவை நம் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்கின்றன. உதாரணமாக... என் அறையில் ஒரு படுக்கை, புத்தக அலமாரி, சாப்பாட்டு மேசை ஆகியவை உள்ளன. இவை இல்லா மலும் என்னால் வாழ முடியும். ஆனால், இந்த பொருள்கள் என் வாழ்க்கையை மேம்படுத்து கின்றன.

அவசியமற்ற பொருள்களின் எண்ணிக்கை மிக அதிகமே!

3. குப்பைகள்

துரதிர்ஷ்டவசமாக, நம்முடைய பெரும் பாலான பொருள்கள் இந்தக் குவியலில்தான் உள்ளன. இவை நாம் உண்மையிலேயே விரும்பும் அல்லது விரும்புவதாக நினைக்கும் பொருள்களாக உள்ளன. உண்மையில், இவற்றில் பெரும்பாலானவை குப்பையே. இந்தக் குப்பை சில நேரங்களில் இன்றி யமையாததாகத் தோற்றமளிக்கும். அது வெறும் தோற்றம்தான்... அது உண்மையல்ல... அதாவது காட்சிப்பிழை!

நம்மிடம் இருக்கும் குப்பைப் பொருள்களின் எண்ணிக்கை எண்ணிட முடியாத அளவு ஏராளம்!

பொருள் மீதான பற்று!

பொருள்களைக் குறைப்பது அல்லது இழப்பது என்பது நம்மில் பலருக்கு விருப்பமே இல்லாத - சிலருக்கு வலிமிகுந்த ஒரு விஷய மாகவே இருக்கும். ஆனால், நாம் மாற்றத்தை விரும்பினால் வலிகளைத் தாண்டிய வாழ்க் கையைத்தான் முன்னெடுக்க வேண்டும்.

நாம், நம் வாழ்க்கையை எளிமைப்படுத்த முயலும்போதெல்லாம் என்ன நடக்கிறது? நாம் அதைத் தொடங்குவதற்கு முன்பே ஓர் எண்ணச் சுழலுக்குள் சிக்கிக் கொள்கிறோம். எது வேண்டும், எது வேண்டாம் என முடி வெடுப்பதில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. நம் உடைமைகளின் குவியலை எதிர்கொள்ளும் போது, அவற்றில் எவையெல்லாம் பயனுள் ளவை, எவையெல்லாம் நம் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்ப்பவை, எவையெல்லாம் தேவையில்லை என்பதைத் தீர்மானிப்பது கடினமாக இருக்கிறது. இந்த இடத்தில் ரஷ்ய பழமொழி ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.

‘ஒன்றே வாளின் சட்டம்
கூராக இருந்தால் வெட்டும்!’

வந்தியத் தேவனின் வாளாக இருந்தாலும், அண்ணன் ஆதித்த கரிகாலன் அல்லது தம்பி பொன்னியின் செல்வனின் வாளாக இருந் தாலும் இதேதான் விதி. இந்த வாள் விதியை எப்படி வாழ்க்கை விதியாக மாற்றுவது?

உங்களை முடிவெடுக்க விடாமல் தடுமாறச் செய்கிற அந்தப் பொருளை எத்தனை நாள் களாகப் பயன்படுத்தாமல் இருக்கிறீர்கள்? இந்தக் கேள்விக்கான பதில் ‘மூன்று மாதங்களுக்கு மேலாக’ என்றிருந்தால், அது தான் சட்டம். இனி அது உங்களுக்குத் தேவை யில்லை!

இவ்வளவு சொன்ன பிறகும் அதை விட்டு விட மனதில்லையா? அப்படியானால், இந்த அனுபவ மொழி உங்களுக்குத்தான்...

பொருள்களின்மீது அதிகப் பற்று வைத்தால், நம் வாழ்வில் அதிகப் பற்று (கடன்) சேரும்!

உடைவாளிலிருந்து அல்ல... உடையிலிருந்து தொடங்குவோம்!

சென்ற இதழில் நாம் பேசிய ‘புராஜெக்ட் 333’ சவால் நினைவிருக்கிறதா? அதாவது... உங்கள் உடை அலமாரியில் உள்ள மொத்த உடைகளின் எண்ணிக்கையை மூன்று மாதங் களுக்குள் 33 ஆகக் குறைப்பதுதான்!

பொதுவாக நம்மிடம் மிக அதிகமாக இருக்கும் பொருள்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பவை உடைகள்தானே? அவற்றில் இணையின் முதல் பரிசு, திருமண உடை என்பதுபோன்ற சென்டிமென்டான துணிவகைகள் சில இருக்கக்கூடும். அவை பத்திரமாக இருக்கட்டும். மற்ற உடைகளில் நீங்கள் ஒரு முறை மட்டுமே அணிந்த உடைகள் எத்தனை? ஒருமுறைகூட அணியாத உடைகள் எத்தனை? இனி அணியவே முடியாத உடைகள் எத்தனை? அவற்றை என்ன செய்யப் போகிறீர்கள்? யோசித்து முடிவெடுப்ப தற்கு உங்களுக்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் இருக்கிறது. 33 என்கிற எளிமை அழகை எட்டுவதற்கு மூன்று மாதங்கள் இருக்கின்றன!

- இனிதே வாழப் பழகுவோம்...

இதயம் காக்கும் மினிமலிசம்!

மினிமலிசம் சார்ந்த மருத்துவம் மற்றும் மனநல ஆராய்ச்சிகள் கூறும் செய்தி இது...

மினிமலிச வாழ்க்கைமுறை உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும். நிறைய நேரத்தையும் இடத்தையும் உங்களுக்கு அளிக்கும். இது தொடரும்போது பிறரை மனம்விட்டுப் பாராட்டுவீர்கள். பிறர் சொல்வதைக் கவனமாகக் கேட்பீர்கள். நிறைய புன்னகைப்பீர்கள்; சிரிப்பீர்கள். மொத்தத்தில் இதயத்துக்கு இதம் அளிப்பீர்கள்!

வெற்றிடமும் அழகுதான்!

நான் மினிமலிஸ்ட்டாக மாறுவதற்கு முன், என் அம்மா அடிக்கடி சொல்வார்... ’வீடு முழுக்க எத்தனை பொருள், எவ்வளவு குப்பை.... எனக்கு மட்டும் சக்தி இருந்தால், இந்த வீட்டை அப்படியே தூக்கி குப்பைக் கிடங்கில் கொட்டிவிடுவேன்’ என்று.

உண்மைதான். நம் ஒவ்வொருவரும் அவ்வளவு குப்பைகளோடுதான் வாழ்கிறோம். உங்கள் வீட்டில் எத்தனை பொருள்கள் இருக்கின்றன? அவற்றை மேலே சொன்ன மூன்று குவியல் பட்டியலில் பிரித்து எழுதிப் பாருங்களேன். அது ஒரு முடிவிலா பட்டிய லாகவே நீளும்!

பட்டியல் போடுகிறோமோ, இல்லையோ... இவை இல்லாமல் இனி என்னால் வாழ முடியும் என்று நீங்கள் விட்டுவிடத் துணிந்த 10 பொருள்களின் பட்டியலை எங்களுக்கு அனுப்புங்கள். அவற்றில் பலர் விட்டுவிடக்கூடிய பொருள்கள் எவை என அலசுவோம். அது மற்றவர்களுக்கும் முடிவெடுக்க வழிகாட்டும்!

பாலுமகேந்திராவின் ‘மறுபடியும்’ படத்தில் தங்கள் கனவு இல்லத்தின் வெற்றுத் தரையில் ரேவதி படுத்து பெருமகிழ்ச்சியடையும் அந்தக் காட்சி நினை விருக்கிறதா? அந்தக் காட்சியில் வேறெந்தப் பொருளும் கிடையாது. வெறும் வீடு மட்டுமே இருந்தது. அதுவே அந்தப் பெண்ணுக்கு மறக்க முடியாத அனுபவத்தைப் பரிசளித்தது. ஆம்... வீட்டின் அழகு என்பது அலங்காரப் பொருள்களால் ஆனதல்ல; வெற்றிடமும் வெகு சில பொருள்களும்கூட அழகுதான்.

உள்ளே 1, வெளியே 10!

மினிமலிஸ்டாக மாற இருப்பதால் நீங்கள் புதிதாக எதையும் வாங்க மாட்டீர்கள் என்று அர்த்தமல்ல. ஷாப்பிங் என்பது நம்மில் சிலருக்கு கட்டுப்படுத்த முடியாத ஒரு போதையாகவே இருக்கக்கூடும். அதிலிருந்து எப்படி விடுபடுவது?

`ஒன்-இன், ஒன்-அவுட்’ என்கிற செயல்முறையை கூட்டம் நிறைந்த இடங்களில் நாம் கண்டிருப்போம். அதாவது உள்ளே உள்ள ஒருவர் வெளியே வந்தால் தான், வெளியே உள்ள ஒருவர் உள்ளே செல்ல முடியும். இதே விதியை ஷாப்பிங் செய்வதற்கும் பயன் படுத்தலாம். இந்த விதி நாம் வாங்கும் புதிய பொருள் களைக் கட்டுப்படுத்த உதவும்.... அதுவும் பத்து மடங்காக! இனி நீங்கள் வாங்கவிருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும், உங்களுக்குச் சொந்தமான பத்து பொருள்களை அகற்ற வேண்டும்!

ஒரு புதிய உடை வேண்டுமா? பத்து பழைய உடைகளை தேவையிருப்பவர்களுக்கோ, நன்கொடை யாகவோ கொடுத்துவிடுங்கள். ஒரு புதிய நாற்காலி வேண்டுமா? வீட்டில் நீங்கள் பயன்படுத்தாத பத்து பொருள்களை வெளியேற்றுங்கள். இந்த விதி உங்கள் அன்றாட நுகர்வுப் பழக்கங்களை மாற்றியமைக்க நிச்சயம் உதவும்.