மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பத்தல... பத்தல... மினிமலிசம் - 4 - புத்தாண்டை புதுமையாக வரவேற்கலாம்... வாருங்கள்!

புத்தாண்டை புதுமையாக வரவேற்கலாம்... வாருங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தாண்டை புதுமையாக வரவேற்கலாம்... வாருங்கள்!

- சஹானா

புத்தாண்டு நெருங்கி வருகிறது. ஓர் எளிய விளை யாட்டோடு புத்தாண்டை வரவேற்போமா?

புத்தாண்டின் முதல் நாளில் இந்த ஆட்டம் ஆரம்பமாகட்டும். உங்களுடன் இணைந்து தங்கள் பொருள்களைக் குறைக்கத் தயாராக இருக்கும் நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது சக ஊழி யரைக் கண்டறிவதுதான் ஆட்டத்தின் முதல் படி.

நீங்கள் இருவரும் முதல் நாளில் ஒரு விஷயத்திலிருந்து (அதாவது ஒரு பொருள்) விடுபட வேண்டும். இரண் டாவது நாளில் இரண்டு விஷயங்கள். மூன்றாவது நாளில் மூன்று விஷயங்கள் இப்படி ஒரு மாதம் முழுக்க விளையாட வேண்டும். இந்த ஆட்டத்தை இந்த டிசம்பர் மாதமே தொடங்க லாம். இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும்போது கிட்டத்தட்ட ஒரு வாரம் ஓடிவிட்டது என்றாலும் பரவாயில்லை ஆரம்பிக்கலாம். நீங்கள் இதைத் தொடங்குவது டிசம்பர் 7 என்று வைத்துக்கொண்டால், டிசம்பர் 31 அன்று மட்டுமே தலா 25 பொருள் களை நீங்கள் இருவரும் கைவிட்டுவிட்டு, புத்தாண்டை கைகோத்து வரவேற்க வேண்டி யிருக்கும்.

பத்தல... பத்தல... மினிமலிசம் - 4 - புத்தாண்டை புதுமையாக வரவேற்கலாம்... வாருங்கள்!

நீங்கள் கைவிடும் பொருள்கள் சேகரிப்புகள், அலங்காரங்கள், சமையலறைப் பாத்திரங்கள், மின்னணுவியல் பொருள்கள், மரச்சாமான்கள், படுக்கையறைப் பொருள்கள், உடைகள். கருவிகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றை நீங்கள் நன்கொடையாக அளித்தாலும் சரி, விற்றாலும் ஓகே, குப்பையில் போட்டாலும் சரிதான்... ஒவ்வொரு பொரு ளும் ஒவ்வொரு நாளும் நள்ளிரவுக்குள் (23:59 மணி) உங்கள் வீட்டை விட்டும் உங்கள் வாழ்க்கையிலிருந்தும் வெளியேறிவிட வேண்டும். அவ்வளவுதான்!

இது முதலில் எளிதான விளையாட்டாகவே தொடங்கும். டக்கென்று சில பொருள்களை நீக்கிவிட்டு சுத்தம் செய்துவிடலாம், இல்லையா? ஆனால், முதல் நாள்… 1, இரண் டாம் நாள்… 2 என அடுத்தடுத்த நாள்களில் கூடிக்கொண்டே செல்வதால், இரண்டாவது வாரத்திலிருந்து இது மிகவும் சவாலானதாகவே வளரும். மேலும் நாள்கள் செல்லச் செல்ல இது கடினமாகிக்கொண்டே போகும். நீங்கள் இருவரும் மாத இறுதியில் வெற்றி பெறுவீர்கள். இரண்டு பேருக்கு மேல் விளையாடினால் போனஸ் புள்ளிகள் வைத்துக் கொள்ளலாம். அதிக நாள்கள் தாக்குப்பிடிப்பவர் இந்த விளையாட்டில் மட்டுமல்ல; மினிமலிஸ்ட் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவார்!

இவையெல்லாம் இருக் கின்றனவா, உங்கள் வீட்டில்?

பல வருடங்களாக அடைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள், லேமினேஷன் ஒன்றோடு ஒன்று ஒட்டிப் போன புகைப்பட ஆல்பங்கள், மறுமுறை பார்த்து ரசித்திராத அல்லது ஒரு முறைகூட பயன்படுத்தப்படாத பரிசுப் பொருள்கள், ட்ரையலுக்குப் பிறகு அணிய மறந்துபோன உடைகள்... இவையெல்லாம் வீட்டின் மூலையிலுள்ள ஏதோ ஓர் அறையிலோ, லாஃப்டிலோ, வார்ட்ரோப்பிலோ, அலமாரியிலோ, டிராயர்களிலோ தூசியைச் சேகரித்துக் கொண்டிருக்கின்றன. காலங்காலமாக அங்கேயே கிடந்து, ‘என்னைப் பயன்படுத் தாமல் இருக்கிறீர்களே’ என்று புலம்பிக் கொண்டு காத்திருக்கின்றன. அவற்றுக்கும் ‘ஒரு நாள்’ வராதா? அந்த நாள்... எந்த நாள்?

அதற்கு அதிக காலம் இல்லை. வரும் கிறிஸ்துமஸுக்குள் அந்தப் பொருள்களை மறு ஆய்வுசெய்து, மிக மிக மிக அவசியமானதை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவற்றை அப்புறப்படுத்தி விடுங்கள்.

பத்தல... பத்தல... மினிமலிசம் - 4 - புத்தாண்டை புதுமையாக வரவேற்கலாம்... வாருங்கள்!

பொக்கிஷ புகைப்படங்களை என்ன செய்வது?

திருமணம், தேனிலவு, குழந்தையின் முதல் பிறந்தநாள், உறவினர்கள், நண்பர்களோடு சென்றுவந்த இன்பச் சுற்றுலாக்கள் போன்ற வாழ்வின் அற்புத தருணங்கள் நம் மனத்தில் என்றும் அழியாவண்ணம் ஆழமாகப் பதிந் துள்ளன. அதோடு, அவற்றை புகைப்படங்களாக அச்சிட்டு ஆல்பமாக்கியும் வைத்திருக்கிறோம். ஆனால், காலப்போக்கில் இந்த ஆல்பங்களில் பூஞ்சை படர்ந்து பாழாகிப்போகும். இவற்றில் பல ஆல்பங்கள் டிஜிட்டல் யுகத்துக்கு முன்னால் தயாரிக்கப்பட்டவை என்பதும் இதற்கு ஒரு காரணம். ஆல்பங்களில் உள்ள படங்களை ஸ்கேன் செய்து (ஸ்கேனர் வசதி இல்லையென்றால், ஸ்மார்ட் போன்களிலுள்ள ஸ்கேனிங் ஆப் பயன்படுத்தலாம்) டிஜிட்ட லாகப் பத்திரப்படுத்திவிட்டு, அவற்றை சென்டிமென்ட் பார்க்காமல் அகற்றிவிடலாம். வேறுவழியில்லை. ஸ்கேன் செய்த படங்களில் டிஜிட்டல் ஆல்பமாக நண்பர்கள், உறவினர் களுக்குக் காட்சிப்படுத்தலாம். டிஜிட்டல் போட்டோ ஃப்ரேம்களில் இணைக்கலாம். ஆன்லைனில் இந்தப் படங்கள் சேமிக்கப் படுவதால், எந்த இயற்கை சேதத்திலிருந்தும் தப்பிப் பிழைத்து காலங்காலத்துக்கும் நிலைத்திருக்கும். கடந்த காலத்தின் அனைத்து அற்புதமான நினைவுகளையும் இவை மீட்டெடுக்கும். ஆவணங்களையும் இதே போல (டிஜிலாக்கர்) பத்திரப்படுத்தலாம்.

குறிப்பு: டிஜிட்டலிலும் மினிமலிசம் மிக அவசியம். அது பற்றி பின்னர் பேசுவோம்.

ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைன் ஷாப்பிங்கின் வருகையைத் தொடர்ந்து, நம் நுகர்வுப் பழக்கம் உச்சத்தைத் தொட்டுள்ளது. கவர்ச்சிகரமான சலுகைகள், எந்தச் சிரமமும் இல்லாமல் வீட்டு வாசலுக்கு டெலிவரி, பிடிக்கவில்லையென்றால் மாற்றிக் கொள்ளவோ, திருப்பிக்கொடுக்கவோ உள்ள வசதி, காம்போ ஆஃபர், இது வாங்கினால் அது ஃப்ரீ... இப்படி ஏராளமான அம்சங்கள் ஆன்லைன் ஷாப்பிங் பக்கம் நுகர்வோரை ஈர்க்கின்றன. அதனால் நம் வீடுகளில் பொருள் களின் குவியல் முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது. 2022-ம் ஆண்டில் நீங்கள் ஆன்லைனில் வாங்கிய பொருள்களில் உண்மையிலேயே அவசியமானவை எத்தனை? வாங்கியவற்றில் பயன்படுத்தப்பட்டவை எத்தனை? இன்னும் டப்பாவே பிரிக்கப் படாதவை எத்தனை? கொஞ்சம் எண்ணிப் பாருங்களேன்!

ஆன்லைனில் ஒரு சலுகையைப் பார்த்த வுடனே, ஓர் அழகான உடையைப் பார்த்த வுடன் உடனே அதை வாங்கிவிட வேண்டும் என்கிற துடிப்பு நம்மில் எத்தனை பேருக்கு உண்டு? ஆன்லைன் தளத்தில் உள்ள டைமர் வேகவேகமாக சலுகைக்கான நிமிடங்களைக் குறைத்து நம் அட்ரீனலினை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும்.

இந்த ஆவேச ஷாப்பிங்கிலிருந்து மீள என்னதான் செய்வது?

அதுதான் ‘காத்திரு விதி’. நம் பணத்தைப் பாதுகாக்கவும், தேவையற்ற பொருள்களை வாங்குவதைத் தவிர்க்கவும் உதவும் ஓர் அற்புத விதி இது. மதிகொண்டோர் பலரும் இதைப் பயன்படுத்தியே ஷாப்பிங் போதைக்குள் சிக்காமல் தப்பிக்கிறார்கள்.

ஆன்லைனில் நாம் விரும்பும் ஒரு பொருள் 1,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், அடுத்த 30 நாள்களுக்கு அது இல்லாமல் நம்மால் வாழ முடியுமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். பொருளின் விலை 10,000 ரூபாயைத் தாண்டினால், காத்திருப்பு காலத்தை 100 நாள்களாக அதிகரிக்க வேண்டும்.

இந்தக் காத்திருப்புக் காலமானது, நாம் வாங்க விரும்பும் புதிய பொருள் உண்மை யிலேயே நம் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்குமா என்பதை மதிப்பிட உதவுகிறது. இதனால் தேவையற்ற பல பொருள்களை வாங்கிக் குவிப்பதை நிச்சயம் தவிர்க்க முடியும்.

- இனிதே வாழப் பழகுவோம்...

உங்களுடைய புத்தாண்டு உறுதிமொழி இதுதான்...

‘‘இனி நான் ஒரு புதிய பொருளை வாங்கினால், அது என் வாழ்க்கைக்கு வலு சேர்ப்பதாகவே அமையும். இந்தத் தருணத்தின் தூண்டுதலாலோ, சலுகை அறிவிப்புகளில் மயங்கியோ நான் எதையும் வாங்க மாட்டேன்!’’ - இந்த உறுதிமொழியை மூன்று முறை சொல்லுங்கள். வாழ்க்கை வளமாகட்டும்!