
அடிக்கடி இங்க குளிச்சு குளிச்சு அலுத்துப்போச்சுங்க சார். உங்களுக்குப் புதுசு. அதனால் பரவசப்படுறிங்க. இப்போ இஞ்சி டீ ஊத்தித் தரவா? துணி உடுத்திக்கிறிங்களா

குயில் அருவி... அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் சீராகக் கொட்டிய அருவியில் அதன் சில்லிப்பை ரசித்தபடி நின்றிருந்தான் உதயகுமார். திறந்து திறந்து மூடும் விழிகளுக்கு முன்பாக நெசவு செய்த தண்ணீர் மங்கலாகக் காட்டிய காட்சியிலும் ஒரு நவீன சித்திரம் உணர்ந்தான். அருவியின் மிதமான சத்தத்துடன் குயில்களின் சத்தமும் இணைந்து காதுகளை நிறைத்தது. மூலிகை வாசனை நாசியில் இடறியது. கொஞ்சமாகக் குடித்துப் பார்த்த சுத்தமான அருவித் தண்ணீர் பெருமாள் கோயிலில் தரும் பச்சைக் கற்பூரம் கலந்த தீர்த்தம் போல அத்தனை சுவையாக இருந்தது.
அந்த அருவி ஐம்புலன்களையும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சிப்படுத்துவதை நினைத்தபடி வெளியே வந்து சின்ன பாறைப் பாதையில் வழுக்கிவிடாமல் கால் வைத்து தன் பைக்கை நிறுத்தியிருக்கும் இடத்துக்கு வந்து துண்டை எடுத்தான். அருவிக்குள் நிற்கும்போது எதுவும் செய்யாத குளிர், இப்போது அவன் உடலையும் பற்களையும் அவன் சம்மதமில்லாமலேயே மெலிதாக நடுங்க வைத்தது.
கழுத்தில் ஒரு மஃப்ளரைச் சுற்றி முன்புறம் இரட்டை ஜடை போல தொங்கவிட்டிருந்த வாட்சர் சுந்தரம் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான்.
‘`ஏன் சுந்தரம் நீ குளிக்கலை?’’ என்றான் உதயகுமார் தலையைத் துவட்டியபடி.
``அடிக்கடி இங்க குளிச்சு குளிச்சு அலுத்துப்போச்சுங்க சார். உங்களுக்குப் புதுசு. அதனால் பரவசப்படுறிங்க. இப்போ இஞ்சி டீ ஊத்தித் தரவா? துணி உடுத்திக்கிறிங்களா?’’
‘`குடு. உனக்கும் ஊத்திக்கோ’’ கொண்டு வந்திருந்த ஃபிளாஸ்கிலிருந்து இரண்டு காகிதக் கோப்பைகளில் ஆவி பறக்க டீயை ஊற்றி அவனிடம் ஒன்றைக் கொடுத்தான் சுந்தரம்.
இடுப்பில் நனைந்த ஷார்ட்ஸுடன், அப்படியே அங்கே புல்வெளியில் அமர்ந்த உதயகுமார் டீயின் இளம்சூட்டையும் இஞ்சியின் சுர்ரென்ற காரத்தையும் ரசித்துப் பருகத் தொடங்கினான்.
பைக்கின் மேல் வைத்திருந்த சிகரெட் பாக்கெட் நோக்கி கை நீட்ட... எடுத்துக்கொடுத்த சுந்தரம் பற்றவைத்தும் விட்டான்.
ஒரு சிப் டீ, ஒரு பஃப் சிகரெட் என்று மாறி மாறி சுவைத்த உதயகுமாரின் போன் ஒலிக்க...
பெயர் பார்த்த சுந்தரம் புன்னகைத்தபடி எடுத்து நீட்டியபடி, “உங்காளு சார். நிதானமா பேசுங்க... இங்க ஒரு நாவல் மரம் இருக்கு. நான் போய் நிதானமா பழம் பறிச்சுக்கிட்டு வர்றேன்’’ என்று விலகினான்.
‘`ஹாய்... குட் மார்னிங்’’ என்றான் உதயகுமார்.
‘`குட் மார்னிங்’’ என்றாள் அமுதா கள்ளக் குறிச்சியில் தன் மொட்டை மாடி மலர்த் தோட்டத்தில் நின்றபடி.
‘`அப்படியே குட் நியூஸும் சொல்லிடுங் களேன்...’’
‘`அதை நீங்களும் சொல்லலாமே... நாலு நாள் போகட்டும், யோசிச்சு முடிவு செய் வோம்னு சொல்லிட்டுதானே நீங்க எல்லாரும் போனிங்க.’’
``என் வீட்ல உள்ள அத்தனை பேரும் எங்கப்பாவை விடாம கரைச்சிக்கிட்டிருக் காங்க. அங்க எப்படி... இன்னும் சூடாதான் இருக்காரா உங்கப்பா?’’
``உனக்கு பையனைப் பிடிச்சிருக்குன்னு சொல்றதாலதான் என்னால சட்டுன்னு ஒரு முடிவுக்கு வர முடியலைன்னு சொல்றார். இல்லன்னா... வருத்தப்படாதிங்க... வேற இடம் பார்த்துக்கலாம்னு பட்டுன்னு சொல் லிடுவேன்னு புலம்பறார்.’’
‘`மகளோட விருப்பத்துக்காக ஒரு மணி நேரம் மனையில் உக்காந்தாதான் என்னவாம்?’’
``மகனோட விருப்பத்துக்காக உங்கப்பாவும் விட்டுக்கொடுக்கலாம்ல?”
‘`பாரதியாருக்கு சாஸ்திர சம்பிரதாயங்கள்ல அவ்வளவா நம்பிக்கை இல்லை. தன் மகளோட கல்யாணம்னு வர்றப்போ... மனையில் உக்காந்து மந்திரம் சொல்லி முறைப்படி கன்னிகாதானம் செஞ்சு கொடுத்தார். உங்க வீட்டு சுவர்ல பாரதியார் படமும் மாட்டி யிருந்ததைப் பார்த்தேன். இந்தப் பாயின்ட்டை சொல்லிப் பாருங்களேன் அமுதா.’’

“இதென்ன பட்டிமன்றமா?’’ என்று சிரித்தாள் அமுதா.
“இல்லைன்னா இன்னொரு விஷயமும் சொல்லலாம்.”
“என்ன?”
‘`வீட்டு வாசல்ல பந்தல் போட்டு நான் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன்னு சொல்லிப் பாக்கறிங்களா?’’
‘`ஆஹா!’’
அவள் நக்கலாகச் சொன்ன அந்த ‘ஆஹா’ நெஞ்சில் ஜில்லென்று இறங்கியது.
‘`நான் சீரியசா சொல்றேன் அமுதா...’’
‘`அப்படி என்ன தீவிரம் இதுல?’’
‘`ரெண்டு தடவைதான் பேசினேன். ஒரு தடவைதான் பார்த்தேன். ஆனா, மனசுல ஒவ்வொரு நிமிஷமும் பார்த்துக்கிட்டிருக்கேன். பேசிக்கிட்டிருக்கேன். இஃப் யூ வாண்டு டு நேம் திஸ் ஃபீல்... தென் ஐ ஷுட் கால் திஸ் லவ்...’’
‘`அய்யோடா!’’ என்றாள் சிணுங்கலாக.
‘`மறைக்காம சொல்லுங்க. அந்த மாதிரில்லாம் அந்தப் பக்கம் எந்த ஃபீலிங்ஸும் இல்லையா?’’
“என்ன பண்ணிட்டிருக்கிங்க இப்போ?’’
‘‘பதில் சொல்ல மாட்டிங்களா?’’

“இந்தக் கல்யாணம் இந்த பிரச்னையால் தடங்கலாயிடக் கூடாதுன்னு ஆசைப்படுறேங்க உதய். அதே சமயம் மனசுல எந்த ஆசையையும் வளர்த்துக்க விரும்பலை. அப்பறம் எனக்குதான் ரொம்ப கஷ்டமாயிடும்.”
‘`புரியுதுங்க.’’
‘`குயில் சத்தமெல்லாம் கேக்குதே... எங்க இருக்கிங்க... காட்டுக்குள்ளேயா?’’
“இங்க குயில் அருவின்னு ஒண்ணு இருக்கு. அந்த அருவில ஜஸ்ட் இப்பதான் குளிச்சிட்டு சூடா இஞ்சி டீ குடிச்சுக்கிட்டிருக்கேன்.”
‘`அட... அங்க அருவியெல்லாம் இருக்கா?’’
‘`பார்க்கிறிங்களா? வீடியோ கால்ல காட்டவா?’’
‘`காட்டுங்களேன்...”
போனை கட் செய்த உதயகுமார் சிகரெட்டை அணைத்துவிட்டு அவசரமாக பேன்ட்டும், காலர் இல்லாத டிஷர்ட்டும் அணிந்துகொண்டு அதன் பிறகு வீடியோ காலில் அவளை அழைத்தான்.
பூக்களுக்கு மத்தியில் உயிர்பூவாக அவள் முகம் பார்த்தபோது ஜிவ்வென்று ஒரு பரவசம் ஏற்பட்டது.
‘`எங்க அருவி?’’
“இருங்க... அழகான பூவை ஒரு நிமிஷம் பார்த்துக்கறேனே...’’
“இதுக்குதான் அருவியைக் காட்டவான்னு கேட்டிங்களா?’’
‘`சரி... பாருங்க.”
அவளுக்கு அந்த அருவியை போன் வழியாக பல கோணங்களில் காட்டிவிட்டு அந்தப் பகுதியையும் சுற்றிக் காட்டினான்.
‘`லவ்லிங்க. ஒரு நாளைக்கு எத்தனை?’’
“என்ன... அருவியில் குளிக்கிறதுதானே? வாரம் ஒரு தடவைதான்.”
‘`நான் அதைக் கேக்கலை.”
“பின்னே?’’
‘`அது உங்க பைக்தானே?’’
‘`ஆமாம்...”
‘`பைக் மேல சிகரெட் பாக்ஸ் இருக்கேன்னு கேட்டேன். பைக் என்னதுதான், ஆனா சிகரெட் என்னது இல்லன்னு சொல்லப் போறிங்களா?’’
“இல்லை. அப்படி சொல்ல மாட்டேன். என்னதுதான். நாலுதான். ரொம்ப டென்ஷனா இருந்தா ஆறு.”
‘`பாக்கெட்டா?’’
‘`சேச்சே... வெறும் ஆறுதாங்க.”
‘`இந்தப் பாயின்ட்டையும் அப்பாகிட்ட சொல்லிடட்டுமா?’’ என்று சிரித்தாள் அமுதா. ‘`கொஞ்சம் கொஞ்சமா குறைச்சு... நிறுத்திடறேன்...’’
“இந்த மாதிரி பழக்கங்களை நிறுத்தறதுல இந்தக் கொஞ்சம் கொஞ்சமா பிசினஸே கூடாது. சடன் பிரேக்தான் போடணும்.’’
“சரி... கொஞ்ச நாள் கழிச்சு போட றேனே...’’
‘`நீங்க எப்ப நிறுத்தினா எனக்கென்ன? இல்லை... நிறுத்தவே இல்லைன்னாதான் எனக்கென்ன? சும்மா கேட்டேன்.”
“அய்யோடா!’’ என்றான்... அவள் சொன்ன அதே ராகத்தில்.
சிரித்துவிட்டாள் அமுதா.
‘`என் மேல அக்கறை இல்லாமயா ஒரு நாளைக்கு எத்தனைன்னு விசாரிச்சிங்க? அமுதா... ரொம்ப சீரியஸா ஒண்ணு கேக்கறேன். ரொம்ப சீரியஸா பதில் சொல்லுங்க...”
“முகத்தையும் சீரியஸா வெச்சிக் கணுமா?’’
‘`அது உங்க முகத்துக்கு செட்டாகாது. கேளுங்க. ஒருவேளை... உங்க வீட்லயும், என் வீட்லயும் பிடிவாதம் மாறாமயே இருந்தாங்கன்னு வைங்க... அன்னிக்கு நீங்க சொன்னிங்களே... அந்த மாதிரி செயல்படுத்திடலாமா?’’
‘`என்ன சொன்னேன்?’’
‘`ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்துல கையெழுத்துப் போட்டு கல்யாணம் நடந்தா கூட எனக்கு ஓக்கேன்னு சொன்னிங்களே...’’
‘`அது சிம்பிளா லீகலா நடக்கறது சம்பந்தமா சொன்னேன். அதுக்காக. நோ உதய்... எங்கப்பா, உங்கப்பா சம்மதம் இல்லாம இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது. அது நல்லதில்லை. அதை நான் விரும்பவும் இல்லை.’’
‘`உங்க மேல உள்ள மரியாதை கூடிக்கிட்டே போகுதே... இப்ப நான் என்ன செய்வேன்?’’
‘`போனை கட் பண்ணிட்டு புறப்பட்டு ஆபீஸ் போங்க.”
“கோபம் எதுவும் இல்லையே?’’
‘`எதுக்கு கோபம்?’’
‘`நான் அப்படி கேட்டதுக்கு?’’
‘`உங்க பிரியத்தோட தீவிரத்தை எனக்கு அழகா உணர வெச்சதுக்கு சந்தோஷம்தான். இந்த பாரதியார் பாயின்ட்டை இன்னிக்குப் பேசிப் பார்க்கறேன். பை உதய்...’’
“பை அமுதா” என்று போனை வைத்தவன் சூழலின் அதே குளிர்ச்சியை மனதிலும் உணர்ந்தான்.
அப்போது ஒரு பைக்கில் காடையனும் வெட்டுக்கிளியும் அங்கே வந்து பதற்றமாக இறங்கினார்கள்.
“தம்பி... ஒரு பெரிய பிரச்னை தம்பி... நீங்கதான் எங்களைக் காப்பாத்தணும்’’ என்று ஓடிவந்து உதயகுமாரின் கைகளைப் பிடித்துக் கொண்டான் காடையன். அவன் விழிகளி லிருந்து உடனடியாகக் கண்ணீர் பொங்கியது.
‘`என்னாச்சு? நிதானமா சொல்லுங்க...”
‘`சித்தூர் டாஸ்க் ஃபோர்ஸ் போலீஸ் நேத்து என் பையனைப் பிடிச்சிடுச்சு. அவனோட சேர்த்து பதினைஞ்சு தமிழ் ஆளுங்களையும் பிடிச்சு வெச்சிருக்காங்க.’’
``அரசங்கத்துக்கு சொந்தமான காட்ல திருட்டுத்தனமா செம்மரம் வெட்டினா பிடிக்காம என்ன செய்வாங்க?”
‘`வெட்டப் போறதும், போலீஸ் அப்பப்ப பிடிக்கிறதும் எங்களுக்கு சகஜமான விஷயம் தான் சார். பிடிக்கிற போலீஸ்ல எத்தனை பேர் சார் நேர்மையானவங்க?”
‘`பென்சில்காரர்தான் சார் இங்கேர்ந்து ஆளுங்களை அனுப்பி வைக்கிறார். அங்க அவர் பையன்தான் சார் எந்த ஏரியால என்னிக்கு எத்தனை பேர் காட்டுக்குள்ள இறங்கணும்னு ஸ்கெட்ச்சு போட்டு இறக்கு வாரு’’ என்றான் வெட்டுக்கிளி.
‘`வெட்ன சரக்கை எந்த ஸ்பாட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கணும்னு பிளான் போடுறவரும் அவர்தான். பத்து தடவைக்கு ஒரு தடவை கொஞ்சம் பேர் மாட்டுவோம். போலீஸும் வேலை பார்த்தோம்னு காட்டிக் கிறதுக்காக நாலு அஞ்சி பேத்தை மட்டும் பிடிச்சிட்டு மத்தவங்களை கோர்ட்டுக்கே கொண்டு போகாம விட்ருவாங்க. அதுக் கெல்லாம் ரேட்டு இருக்கு. ஏஜென்ட் இருக் காங்க. பென்சில்காரர் புள்ளை யோகேஷ் அதெல்லாம் பாத்துப்பார். கோர்ட்ல கேஸ் போட்டாலும் உடனே ஜாமீன்ல எடுத்துடற துக்கு ரெடியா யோகேஷ் சாரோட வக்கீலுங்க இருக்காங்க. எல்லா பக்கத்துலயும் லட்சம் லட்சமா பணம் விளையாடுற தொழில் சார்.’’
“செம்மரம் மாட்னுச்சு, பத்துப் பேரை பிடிச்சாங்கன்னு நியூஸ் வருமே... அது நடக்கற யானை சைஸ் தப்புல எலி சைஸ்தான் சார்.’’
‘`அப்புறம் என்ன பிரச்னை?’’
“இந்தத் தடவை என் பையனை ஜாமீன்ல வரமுடியாத மாதிரி கேஸ் போட்டு உள்ளே தள்ளப்போறதா பென்சில்காரரு சொல்றார் சார். அவனுக்கு பதினைஞ்சு நாள்ல கல்யாணம் வெச்சிருக்கேன். வெட்டுக்கிளியோட பொண்ணைதான் பேசி பரிசம் போட்டோம்’’ என்றான் காடையன்.
- தொடரும்...