மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 6 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
News
வெந்து தணிந்தது காடு

“தேங்க்ஸ்’’ - வேண்டா வெறுப்பாகச் சொல்லிவிட்டு வெளியேறினான்.

“ஞாயித்துக்கிழமை கள்ளக் குறிச்சிக்கு பொண்ணு பார்க்கப் போறிங்க தானே... அந்தப் பொண்ணு டீச்சராமே... அந்த ஸ்கூல் புள்ளைங் களுக்கு என் அன்பளிப்பா குடுங்க” என்றார் ஜெயபால். திடுக்கிடலுடன் அவரைப் பார்த்தான் உதயகுமார். சம்பந்தமே இல்லாத இவருக்கு என் சொந்த விஷயம் எப்படித் தெரியும் என்கிற ஆச்சர்யமும் அதிர்ச்சியுமே அவர் மீது ஒரு சின்ன பயத்தை உருவாக்கியது.

‘‘சார்... உங்களுக்கு எப்படித் தெரியும்?’’ என்றான் உதயகுமார்.

“சொல்லலைன்னா இந்தக் கேள்வி உங்களைக் குடைஞ்சிக்கிட்டே இருக்குமில்ல? அவசியம் சொல்லணுமா?’’ என்று அவர் சிரித்தது வெறுப்பாக இருந்தது.

வெந்து தணிந்தது காடு - 6 - பட்டுக்கோட்டை பிரபாகர்

‘முறைக்காதிங்க. சொல்லிடறேன். பொண்ணோட அப்பா தமிழ்மணி எனக்கு வேண்டியவர். இந்த ஊர்ல நீங்க வேலை பார்க்கறதால என்னைக் கூப்புட்டு விசாரிச்சார். பொண்ணைப் பெத்தவங்க நாலு பேர்கிட்ட விசாரிக்கத்தானே செய்வாங்க... எனக்குத் தெரிஞ்சவரைக்கும் ரொம்ப நேர்மையான ஆபீஸர்னு நல்லபடியாதான் சொன்னேன்.’’

‘`அப்படியா... வர்றேன் சார்.’’

‘`ஒரு தேங்க்ஸ் சொல்ல மாட்டிங்களா?’’

“தேங்க்ஸ்’’ - வேண்டா வெறுப்பாகச் சொல்லிவிட்டு வெளியேறினான். தன்னைப் பற்றி விசாரிக்க இந்த ஆள்தானா கிடைத்தார் என்று ஒரு சின்ன கசப்பு மனதில் சேர்ந்திருக்க, பைக்கை ஸ்டார்ட் செய்து புறப்பட்டான்.

மருதுகாட்டூரின் ஊர் எல்லையில் அமைந்திருந்த தனது காட்டிலாக்கா அலுவலகத்துக்கு உதயகுமார் வந்து பைக்கை நிறுத்தினான்.

கார்டு வேலுச்சாமி சொன்ன ‘குட் மார்னிங்’ மனதில் பதியாததால் பதிலுக்குச் சொல்லாமல் தன் அறைக்குள் நுழைய... அங்கே அவன் வந்ததைக் கவனிக்காமல் அவனுடைய மேஜையின் டிராயரைத் திறந்து வைத்துக் கொண்டு எதையோ தேடியபடியிருந்த ருத்ரபாண்டி யனைப் பார்த்தான்.

‘`என்ன சார் பண்ணிட்டிருக்கிங்க?’’ - ஒரு சின்ன திடுக்கிடலுடன் நிமிர்ந்த அவர் உடனே சமாளித்தார்.

‘`பென்சில் ஷார்ப்பனர் இருக்கான்னு பார்த்தேன்.”

‘`பென்சில் ஷார்ப்பனரை மேஜை மேல தேடுவிங்களா... இல்லை, சாவி போட்டு டிராயரைத் திறந்து தேடுவிங்களா?’’

‘`அது... அது...’’ - தடுமாறினார் ரேஞ்சர்.

‘`இங்கதான் இருக்கே...’’ என்று மேஜை மீது இருந்த டிரேயிலிருந்து எடுத்து நீட்டினான். வாங்கிக்கொண்டு நகரப்போனவரை நிறுத்தினான்.

‘`குறிஞ்சிக்காடு ஜனங்க கொடுத்த புகாரைத்தானே தேடறிங்க? இப்படி அநாகரிகமா எதுவும் செய்விங்கன்னு எதிர்பார்த்தேன். அதனால் அதை என் வீட்ல கொண்டு போய் வெச்சிருக்கேன்.’’

‘`ஆபீஸ் சம்பந்தப்பட்டதை வீட்டுக்கு எடுத்துட்டுப் போறது தப்பு உதயகுமார்.’’

‘`உளறாதிங்க சார். ஆபீஸ் லேப்டாப்பை தினமும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போகலையா நீங்க? அதுல எல்லா ரெக்கார்ட்ஸும் இருக்கே.’’

‘`அந்தப் புகாரை டி.எஃப்.ஓ ஆபீஸுக்கு அனுப்பப் போற தில்லைன்னுதானே முடிவு செஞ்சோம். அப்படி இருக்கறப்ப அதை எதுக்கு பத்திரப்படுத்தி வைக்கிறே?’’

‘`அனுப்பப்போறதில்லைன்னு நான் இன்னும் உறுதியா முடிவு செய்யலையே சார்.’’

“எல்லாத்துக்கும் பதில் பேசறதை நிறுத்து உதயகுமார்.’’

“கேள்வின்னு ஒண்ணு கேட்டா பதில் சொல்லித்தானே ஆக வேண்டியிருக்கு.”

இதற்கு பதில் எதுவும் சொல்லாமல் ஒரு முறைப்பு மட்டும் வழங்கிவிட்டு நகர்ந்தார் ரேஞ்சர் ருத்ரபாண்டியன்.

கள்ளக்குறிச்சியின் பரபரப்பான கடை வீதியில் அமுதா அச்சகம் என்கிற பெயர்ப் பலகை மாட்டிய கட்டடத்துக்குள் மினி சைஸ் நான்கு வண்ண ஆப்செட் இயந்திரம் ஒரு திருமண அழைப்பிதழை அச்சடித்துக் கொண்டிருந்தது. அருகில் அச்சக ஊழியர் முனுசாமி நின்று கவனித் துக்கொண்டிருந்தார்.

வேட்டியின் முனையைத் தூக்கிப்பிடித்தபடி வந்த தமிழ்மணி, கதர் சட்டையின் பாக்கெட்டில் ஒரு காதை வெளியே தொங்கவிட்டிருந்த கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டார். அச்சடித்த அழைப்பிதழ் ஒன்றைக் கையில் எடுத்துப் பார்த்தார்.

‘`என்னாச்சு முனுசாமி... இங்க் காயறதுக்கு கொஞ்சம் டைமாகுது போலிருக்குதே... பின்னாடில்லாம் ஒட்டுது பாருங்க.”

‘`ஆமாங்கய்யா. நம்ம வழக்கமா யூஸ் பண்ற இங்க் ஸ்டாக் இல்லைன்னு நம்ம டீலர் இதுவும் நல்லா இருக்கும்னு சொல்லி வேற பிராண்டு குடுத்தார். சரியில்லைங்க.”

“மெஷினை நிறுத்துங்க முதல்ல” - இயந்திரத்தின் ஓட்டத்தை நிறுத்தினார் முனுசாமி.

‘`எங்கிட்ட சொல்ல வேணாமா? புதுசா அனுப்பின இங்க் பாக்ஸ் எல்லாத்தையும் பண்டல் கட்டி வைங்க. வேற இடத்துலேர்ந்து நம்ம பிராண்டு உடனே ஆர்டர் பண்றேன்.’’

‘`வாங்கிட்டமேன்னு பார்த்தேன். இருநூறு பிரின்ட் ஆயிடுச்சுங்கய்யா.”

‘`பரவால்ல... கஸ்டமர் முகம் சுளிக்கக் கூடாது. தரம் முக்கியம். லாபம் ரெண்டாம்பட்சம். ரோலரைக் கிளீன் பண்ணிடுங்க. ஒரு நாள் லேட்டா டெலிவரி கொடுத்தாலும் பரவால்ல... பேர் கெட்டுடும் முனுசாமி.”

வேகமாக அலுவலக அறைக்கு வந்தார் தமிழ்மணி.

அறையில் பிரதானமாகத் தந்தை பெரியாரின் படம் மாட்டியிருந்தது. அருகில் காந்தி, அம்பேத்கர் மற்றும் காமராஜர்.

அங்கே அழகேசன் மற்றும் ரங்கநாதன் என்று இரண்டு நண்பர்கள் அமர்ந்திருந்தார்கள்.

வெந்து தணிந்தது காடு - 6 - பட்டுக்கோட்டை பிரபாகர்

தமிழ்மணி தன் நாற்காலியில் அமர்ந்து, “ஒரு நிமிஷம். போன் பேசிட்டு அப்புறம் நம்ம மேட்டர் பேசலாம்” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு இங்க் சப்ளை செய்த டீலரை அழைத்தார்.

சில நிமிடங்களில் அந்தப் பிரச்னை தொடர்பான விஷயங்களைப் பேசி சரிசெய்துவிட்டு இவர்கள் பக்கம் திரும்பினார்.

‘`இப்ப சொல்லுங்க... என்ன பிரச்னை?’’

‘`புத்தக வெளியீட்டு விழாவை ஒரு வாரம் தள்ளி வெச்சுக்க முடியுமான்னு கேக்கறார்’’ என்றார் அழகேசன்.

‘`யாரு?”

‘`சிறப்பு விருந்தினர்தான்.’’

‘`ஒரு மாசம் முன்னாடியே தொடர்புகொண்டு பேசி தேதி வாங்கினோம். அழைப்பிதழ் அச்சடிக்கிறதுக்கு முன்னாடியும் ஒரு தடவைக் கேட்டு உறுதிப்படுத்திக்கிட்டு அப்புறம்தான் அடிச்சோம். எல்லாருக்கும் கொரியர்ல அனுப்பியாச்சு. இன்னும் நாலு நாள்ல விழா. இப்போ இப்படிக் கேட்டா என்ன அர்த்தம்? என்ன பிரச்னையாம்?’’

‘`அமெரிக்காலேர்ந்து அவரு பொண்ணு வந்திருக்காம். அதோட திருப்பதிக்குப் போறாராம்.”

“இது நியாயமே இல்லைங்க ரங்கா... உடல்நிலை பிரச்னைன்னு சொன்னாலும் பரவால்ல... நமக்குக் குடுத்த தேதியை அவர் மதிக்க வேணாமா? போக வர, சேலம் வரைக்கும் விமான டிக்கெட் போட்டு அனுப்பினோம். அவர் பேர் போட்டு நினைவுப் பரிசு தயார் செஞ்சாச்சு. இனி தேதி மாத்த வாய்ப்பில்லைன்னு சொல்லிடுங்க”

‘`நீங்களே பேசறிங்களா?’’

“தாராளமா பேசறேன். போட்டுக் குடுங்க”

அழகேசன் தன் போனில் அழைத்து, “கவிஞரய்யாவா? செயலாளர் தமிழ்மணி பேசறார். பேசுங்கய்யா.’’

வாங்கி, “தமிழ்மணி பேசறேன். வணக்கம் கவிஞரே... விவரம் சொன்னாங்க. எல்லா ஏற்பாடு களும் செஞ்சாச்சு. விழாவைத் தள்ளி வைக்க வாய்ப்பில்லை. நீங்க ஒப்புக்கிட்டபடி வந்துடுங்க” என்றார். “என்ன உத்தரவு மாதிரி பேசறிங்க?” என்றது எதிர்முனைக் குரல்.

“இல்லைங்க. உறுதியா சொல்றேன். உத்தரவெல்லாம் போடலை. உங்க சம்மதத்தை ரெண்டு தடவை கேட்டுக்கிட்டுதான் ஏற்பாடுகள் செஞ்சோம்.’’

‘`மறுக்கலை. இப்ப சூழ்நிலை மாறிடுச்சு. அதுக்கென்ன பண்ண முடியும்?’’

‘`அப்போ நீங்க அதே தேதியில் வர வாய்ப்பில்லையா?’’

``அதைத்தானே சொல்லிக்கிட்டிருக்கேன்.”

‘`பரவால்லை. நாட்ல சிறப்பு விருந்தினர்களுக்குப் பஞ்சமில்லை. வேற ஏற்பாடு செஞ்சிக்கிறோம். விமான செலவு, அழைப்பிதழ் செலவு, போஸ்டர் செலவு எல்லாம் கணக்குப்போட்டு அனுப்பி வைக்கிறோம். பணம் அனுப்பிடுங்க.”

“என்னங்க இது... என்னை அவமானப்படுத்தறிங்களா?’’

‘`இல்லைங்க. கௌரவப்படுத்த விரும்பிதான் உங்களைக் கூப்புட் டோம். நாங்க ஏங்க நஷ்டப் படணும்?’’

‘`இது மாதிரி யாருமே சொன்னதில்லை”

‘`உங்களுக்கும் இப்படி ஒரு முதல் அனுபவம் இருக்கட்டுமே” - மேற்கொண்டு எதுவும் பேசாமல் எதிர்முனை வைக்கப்பட்டது.

“போனை கட் பண்ணிட்டாரு. மறுபடி போடுய்யா’’ என்றார் தமிழ்மணி கோபத்துடன்.

‘`பெரிய கவிஞருங்க அவரு.”

‘‘அதனால் என்ன? கொம்பா முளைச்சிருக்கு?’’

மீண்டும் கவிஞரின் தொடர்பு கிடைத்ததும் , “என்ன கவிஞரே... பேசிக்கிட்டிருக்கறப்ப டப்புனு மூஞ்சில அடிச்சமாதிரி வெச்சிங் கன்னா எப்படி? இது நாகரிகமா இல்லையே...’’

‘`நீங்க பேசறதுதான் நாகரிகம் இல்லை. எத்தனை விருது வாங்கி யிருக்கேன் தெரியுமா நான்? என் தேதிக்காக எவ்வளவு பேர் தவம் இருக்காங்க தெரியுமா?’’

‘`அதெல்லாம் யாருங்க மறுத்தா? இப்போ நாங்க மறுபடி வேற ஒரு சிறப்பு விருந்தினரை ஏற்பாடு செய்யணும். மறுபடி அழைப்பிதழ் அடிக்கணும். நீங்க எடுத்த முடிவுக்காக அந்தச் செலவெல்லாம் நாங்க எதுக்கு ஏத்துக்கணும்? செலவுத் தொகை அனுப்பலைன்னா இது பத்தி மீடியாவுல தகவல் வரும். அவசியப்பட்டா கன்ஸ்யூமர் கோர்ட்லயும் வழக்கு தொடர்வோம். வெச்சிடறேன்’’ என்று கட் செய்தார் தமிழ்மணி.

அதிர்ந்துபோய் பார்த்த அழகேசனும் ரங்கநாதனும், “என்ன சார் இது இப்படிப் பேசிட்டிங்க?” என்றார்கள்.

‘`பின்னே என்னய்யா? அவரு என்னமோ வானத்து லேர்ந்து குதிச்சவர் மாதிரி பேசினா என்ன அர்த்தம்? நியாயத்தைதான் பேசினேன்... விடுங்க. வேற யாரைக் கூப்புடலாம்னு யோசனை சொல்லுங்க” என்றார் தமிழ்மணி சாதாரணமாக.

வெந்து தணிந்தது காடு - 6 - பட்டுக்கோட்டை பிரபாகர்

பள்ளியின் வகுப்பறையில் மேஜையில் சாய்ந்து கைகட்டி நின்றபடி தன் எதிரில் நடுக்கத்துடன் நின்ற அந்த மாணவியைப் பார்த்தாள் அமுதா.

‘`ஏன் ஹோம் வொர்க் செய்யலன்னு காரணம்தானே கேட்டேன் கண்மணி? இதுக்கு ஏன் டென்ஷனாகறே? பதில் சொல்லு.”

‘`வீட்ல எப்பப் பார்த்தாலும் அம்மாக்கும் அப்பாக்கும் சண்டை டீச்சர். அப்பா தினம் குடிச்சுட்டு வந்து அம்மாவை அடிக்கிறாரு. படிக்கவே முடியலை டீச்சர்’’ என்றாள் அவள். பெருமூச்சு விட்டாள் அமுதா. “இது உன் ஒரு வீட்ல மட்டும் நடக்கலைம்மா. ஹோம் வொர்க் செய்யாததுக்கு காரணம் நீ இல்ல... நம்ம அரசாங்கம். போய் உக்காரு” என்ற அமுதா மொடமொடவென்று கஞ்சி போட்ட காட்டன் சேலை கட்டியிருந்தாள். இடுப்புவரை வழிந்த கூந்தலை பின்னலிட்டிருந்தாள். நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு. கைகளில் இரண்டிரண்டு வளையல்கள். காதுகளில் ஜிமிக்கி கம்மல்கள்.

அந்த பீரியட் முடிந்ததற்கான மணி ஒலிக்க... புத்தகங்கங்களை சேகரித்துக்கொண்ட அமுதா வராந்தாவில் நடந்தாள். ஆசிரியர்களுக்கான ஓய்வறைக்கு வந்து அமர்ந்தபோது அவளின் போன் ஒலித்தது. புதிய எண்ணாக இருந்தது. ‘`ஹலோ... அமுதா பேசறேன். யாருங்க?” என்றாள்.

‘`வணக்கங்க அமுதா. நான் உதயகுமார். நாளைக்கு உங்களைப் பெண் பார்க்க வரப்போறவங்க.’’

இதை எதிர்பார்த்திராத அமுதா திகைத்து அமைதியாகிவிட... ‘`ரெண்டு நிமிஷம் பேசலாமாங்க? ஃப்ரீயாத்தான் இருக்கிங்களா? ஒருவேளை எதாச்சும் வேலையா இருந்தா நீங்க எப்ப கூப்புடச் சொல்றிங்களோ... அப்ப கூப்புடறேன்’’

‘`பரவால்ல. பேசலாம்” என்றாள் படபடப்பை அடக்கிக்கொண்டு.

“என் போட்டோவை நீங்க பார்த்துட்டிங்க. உங்க போட் டோவை நான் பார்த்துட்டேன். நாளைக்கு உங்க வீட்ல தனியா கொஞ்ச நேரம் பேச சந்தர்ப்பம் அமையுமான்னு தெரியலை. அதனாலதான்... எதுவும் தர்மசங்கடம் இல்லையே?’’

“இல்லை. சொல்லுங்க. என்ன பேசணும்?’’

“பேசணும்னு நினைச்சுதான் கூப்புட்டேன். ஆனா, இப்போ என்ன கேக்கறதுன்னு தோணலை.’’

‘`நான் கேக்கலாமா?’’

“கேளுங்களேன்”

‘`அபர்ணா யாருங்க?’’ என்றாள் அமுதா.

- தொடரும்