
இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்
‘`ஒரு நல்ல பயணி ஊருக்குள் நுழையும் பாதையைவிட
வெளியேறும் பாதையைத்தான் அறிந்துவைத்திருப்பான்’’
~ பராரிகள்
தந்தை வழி (1951 - பனிக்காலம்)
கோவில்பட்டி நெல்பேட்டை சாலையில் கொம்பையாவும் கரியனும் பாரவண்டியிலிருந்து இறங்கி ரயிலடி நோக்கி நடக்கத் துவங்கினார்கள். ரயிலடி ஊரின் வெளியே இரண்டு மைல் தூரத்திலிருந்தது. ரயிலடிக்குச் செல்லும் வழியெல்லாம் காட்டுப் பாதையாக புங்கையும் புளிய மரங்களும் வேம்பும் அடர்ந்து வளர்ந்து தூரத்தில் குடியிருப்புகள் தெரியாமல் மூடியிருந்தது. செல்லும் வழியில் கண்மாயில் இறங்கி இருவரும் குளித்து முடித்து ஈர உடையைப் பிழிந்து உதறி மீண்டும் அதையே அணிந்துகொண்டு நடந்தார்கள். தூரத்தில் வன்னி மரங்கள் சூழ்ந்த ரயிலடி இருக்கும் திக்கிலிருந்து கறுத்த மேகம் தரையிலிருந்து ஊர்ந்து சுருள் சுருள் புகைகளாக வானுக்கு ஏறிக்கொண்டிருந்தது. கூடவே ``ப்பான்ன்ன்ன்...’’ என்று ஊரையே பிளப்பது போல ராட்சத சப்தம். ``கரியா, வேகம்லே ரெயிலு வந்திட்டு போல...'' இருவரும் நடையை வெரசாக எட்டிப் போட்டார்கள்.

ரயிலடிக்குள் அவர்கள் நுழைந்தபோது ரயில் கிளம்ப சிறிது நேரம் ஆகும் என்பதுபோல் சிறு மூச்சு விட்டுக்கொண்டிருந்தது. நீராவி ரயிலின் கறுத்த உருண்டையான தலைக்குள் மேலே நீர்த் தொட்டியிலிருந்து குழாயின் வழியாக நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்கள். கரியன் வாழ்நாளில் முதல் முறையாக ரயிலடிக்கு வருகிறான். தூரத்திலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களையே அவன் பார்த்திருக்கிறான். முதன்முறையாக இரும்புப்பேயைப்போல் அல்லது ராட்சதப் பாம்பைப்போல் படுத்திருக்கும் நீராவி ரயிலை இப்போதுதான் தொடும் தூரத்தில் இவ்வளவு அருகிலிருந்து பார்க்கிறான்.
ரயிலின் முன் பகுதியிலிருந்து அடுப்புக்குள் நிலக்கரி அள்ளிப் போடுபவர்கள் கீழிறங்கி நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களின் முகமும் உடலும் உடையும் கரிப்பிடித்து இருந்தன. அவர்கள் அங்கு விற்றுக்கொண்டிருக்கும் சூடான சுக்கு மல்லி நீரை வாங்கி அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தார்கள். கொம்பையா அவர்களிடம் ``இந்த ரயிலு விருதுநகருக்குப் போகுமா?’’ என்று கேட்டார். ``வடக்க போறதுதான். விருதுநகருக்கும் போகும். கிளம்பப் போவுது. வெரசா அங்க போயி ரெண்டு பேருக்கும் பயணச்சீட்டு வாங்கிட்டு வாங்க'' என்று சொல்லி பயணச்சீட்டு வழங்கும் இடத்தை நோக்கி அவரை அனுப்பி விட்டார்கள்.
அதை வாங்கிக்கொண்டு ரயிலை நோக்கி வந்தபோது அங்கு கூட்டம் கூடியிருந்தது. கொம்பையா ஆட்களை விலக்கி விட்டுப் பார்த்தார். அங்கு கிட்டத்தட்ட அவரின் வயதில் நன்றாக உடுத்தி, மீசை மழித்திருந்த ஒருவர் ரயில்வே அலுவலரோடு வாக்குவாதத்திலிருந்தார். அவரைச் சுற்றி பத்துக்கும் மேல் நாய்கள் நின்றுகொண்டிருந்தன. அந்த ரயில்வே அலுவலர் கறாராகச் சொல்லிக் கொண்டிருந்தார். ``மனுஷங்கள மட்டும்தான் ரயிலுல ஏத்திக்க முடியும். நீங்க பிள்ள மாதிரி வளத்ததுக்காக வெல்லாம் இந்த நாய்ங்கள ஏத்திக்க முடியாது. யாரையாவது கடிச்சி கிடுச்சி வெச்சிட்டா யாரு ஜவாப்தாரி ஆகுறது? முடியாது கிளம்புங்க.'' அவரோடு உடன் வந்த இரண்டு பேரில் ஒருவர் அலுவலரிடம் ஒவ்வொரு நாய்க்கும் இரண்டு மனிதர்களுக்குரிய பணம் செலுத்தத் தயாராயிருப்பதாய் சொல்லிப் பார்த்தார். ரயில்வே அலுவலர் மறுத்துவிட்டார். வாக்குவாதத்தாலும், ஆட்கள் கூட்டமாய் இருந்ததாலும் நாய்கள் மிரண்டுபோய் குரைக்கத் துவங்கின. அவர்கள் நாய்களை அழைத்துக்கொண்டு ரயிலடியிலிருந்து கிளம்பினார்கள். கொம்பையாவும் கரியனும் ரயிலுக்குள் ஏறி அமர்ந்தார்கள். ரயில் கிளம்பும் நோக்கில் ``ஊஊஊ...’’ எனப் பெரிதாய் ராட்சத சப்தமிட்டது. புஸ்.....ஸ்....புஸ்.....ஸ் என்று வானத்துக்குப் புகையைக் கொடுத்தபடி நீராவி என்ஜின் நகரத்துவங்கியது. கரியன் இரண்டு புறமும் ஜன்னல் வழியே பார்த்தபடியே வந்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் கரிசல் மண் பரப்பிக் கிடந்தது. இந்த வருடம் ஓரளவு மழையிருந்ததால் அங்கங்கு ஈரக் குளுமையாய் பயிர் பச்சை தெரிந்தது.

கரியன் சிறு மிரட்சியோடு ரயிலுக்குள் சுற்றி சுற்றிப் பார்த்தான். அவர்களின் எதிரே இரண்டு மனிதர்கள் வெள்ளாமை பற்றியும், பருத்திப்பாடு பற்றியும் பேசியபடி வந்தார்கள். கொம்பையாவிற்கு அவரிகளிருவரும் சம்சாரிகளா, யாவாரிகளா என்று சந்தேகமாயிருந்தது. சிறிது நேரத்தில் அவர்களில் ஒருவரே கொம்பையாவிடம் ``இம்புட்டுப்போல பட்டணம் பொடி தர்றீரா'' என்று கேட்டு, பழக்கம் கொடுத்தார். கொம்பையா தனக்குப் பொடிப் பழக்கமில்லை. சுருட்டு மட்டும்தான் என்று சொல்லிவிட்டார். உடன் வந்தவர்களில் ஒருவர் தன் வேஷ்டி மடி சுருட்டலிலிருந்து நாலைந்து வதங்கிய வெற்றிலைகளை எடுத்துத் தொடைத் துணியில் ஈரம் போகத் தேய்த்தார். பொடி கேட்டவர் “வேற ஏதும் வெத்தல வெச்சிருக்கீரா?’’ என்றதும், அவர் இல்லை என்று மறுத்துத் தலையாட்டியபடியே வெற்றிலையில் சுண்ணம் தேய்க்கத் துவங்கினார். அவருக்கு இப்போது ஏதாவது சிறிய லாகிரி வஸ்து எடுத்துக்கொள்ள வேண்டும் போலிருந்து. அவர் மீண்டும் கொம்பையாவிடம் சுருட்டு இருந்தா ஒண்ணு கொடும் என்று கேட்டுப் பார்த்தார். ``தாரேன். ஆனா ரயிலுக்குள்ள பொம்பள ஆட்க, பிள்ளைகலாம் இருக்காக, இங்க பிடிச்சா நல்லா இருக்காது.'' அவர் விடாமல் ``அதெல்லாம் ஒண்ணுமில்ல. நான் பத்த வெய்க்கல. கொஞ்சம் குடும்’’ என்று கேட்டு வாங்கினார். கொம்பையா தன் மடிச் சுருட்டலிலிருந்து ஒரு யாழ்ப்பாணச் சுருட்டை எடுத்துக்கொடுத்தார். எதிரில் அமர்ந்திருந்தவர் சுருட்டை வாங்கிக்கொண்டு அதன் மேலிருக்கும் சுருட்டு கம்பெனியின் விலாசக் காகிதத்தையும் நூலையும் கழற்றிவிட்டு சுருட்டின் ஒரு நுனியிலிருந்து விரிக்கத் துவங்கினார். புகையிலை ஒரு அழுக்கான பழந்துணியைப்போல் விரிந்து வந்தது. அதைச் சிறிது பிய்த்துக் கடைவாயில் ஒதுக்கிக்கொண்டார். கொம்பையா இதுவரை சுருட்டை இப்படி நேரடியாக வாய்க்கு எடுத்துக்கொண்டதில்லை. அவர் கொம்பையாவிற்கும் சிறிது கொடுத்தார். அவர் மறுத்துவிட்டார், புகைக்கையில் வெண்மையாய் சுருண்டு கிளம்பும் சுருட்டுப் புகையும், எரிந்து விபூதிபோல் சுருட்டின் நுனியிலிருக்கும் சாம்பலும்தான் அழகு. அது இல்லாமல் சுருட்டை உண்பது அவருக்குப் பிடிக்கவில்லை. கொம்பையா அவர்களிடம் ``என்ன யாவாரம் செய்றீக'' என்று கேட்டார். வெற்றிலை போடுபவர் ``நாங்க சம்சாரிங்க'' என்று சொல்லிவிட்டு நிறுத்தினார்.
புகையிலை மெல்பவர் தொடர்ந்தார். ``காட்டுல பருத்தி போட்ருந்தோம். இங்க விருதுநகர் பஞ்சுப்பேட்டைலதான் ஒரு யாவாரி கொள்முதல் பண்ணுனாரு. பருத்தி மூடலாம் நேத்திக்கி சாயந்தரமே போயிருச்சு. நாங்க கணக்குப் பாத்து முடிச்சிட்டு வரலாம்னு போறோம்’’ தணிந்த ரகசியக் குரலில் சொன்னார். ``பணத்த வாங்கிட்டு வரலாம்னு’’ வெற்றிலை போடுபவர், புகையிலை போடுபவரைப் பார்த்து முறைத்தார்.
``இவன்கிட்ட ரகசியம்னு ஒண்ணும் தங்காது. நீங்க எங்க பொறப்பட்டீக?'' கொம்பையா தானும் ``பஞ்சுப்பேட்டைலதான் ஆத்தியப்பன்னு ஒருத்தர பாக்கப் போறேன்’’ என்று சொன்னார்.
``ஓ... அவரத் தெரியுமா?''
``இல்லங்க, அவ்வளவு பழக்கம் கிடையாது. இங்கிட்டு தெக்க மாடுக வாங்கலாம்னு வந்தாரு.நாந்தேன் மாடு பிடிச்சி விட்டேன். மலையரசன்னு என்கிட்டே இருந்த பயதான் மாட்ட ஓட்டிக்கிட்டு ஒப்படைச்சிட்டு வரலாம்னு போனான். போற வழில அவன கூட்டிக்கிட்டு அடுத்து மதுர சந்தைக்கிப் போகணும். அதான் கிளம்புனோம்.''
``அப்படியா, பஞ்சுப்பேட்டைல பாதி யாவாரம் ஆத்தியப்ப அண்ணாச்சியோடதுதான். அங்க அவர்தாம் பெரிய யாவாரம். நாங்க கொஞ்சமாதான் பருத்தி போட்டோம். அண்ணாச்சியோட உறவுக்காரர்கிட்டதான் பத்து பதினஞ்சி வருசமா யாவாரம் பண்ணிக்கிறோம்.''
``ஓ... செரி செரி.''

ரயில் சாத்தூர் வைப்பாற்றின் மேல் இரும்புப் பாலத்தில் போய்க்கொண்டிருந்தது. ஆற்றில் நிறைய தண்ணீர் ஓடுவதால் ரயில் வேகம் குறைந்து நகர்ந்தது. ரயிலில் எல்லோரும் ஒரு நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு ஜன்னலின் வழியாக இரண்டு பக்கமும் ஆற்றை வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டார்கள்.
விருதுநகர் வந்து இறங்கி சம்சாரிகளோடு கொம்பையா பஞ்சுப்பேட்டைக்குள் நடந்தார்.பேட்டையில் எல்லாத்திக்குகளிலும் பருத்தி மூட்டைகளும், இலவம் பஞ்சு மூட்டைகளும் போரா போராவாகக் கட்டிக் கிடந்தன. இலவம் பஞ்சு மூட்டைகள் குட்டிக் குட்டி யானைகளின் அளவிலும், பருத்தி மூட்டைகள் ஓங்கி வளர்ந்த தலைமை யானைகளின் அளவிலும் கட்டிக் கிடந்தன. பேட்டை முழுக்க சம்சாரிகளும், யாவாரிகளும், பஞ்சுத் தரகர்களும் நிரம்பி நின்றார்கள். எங்கு பார்த்தாலும் விலைபேசும் குரல்கள், எடை போட்டுக் குறித்துக்கொள்ளச் சொல்லும் குரல்கள், `அந்தக் கிட்டங்கியில் அடை’, `இந்த நூற்பு மில்லுக்கு இத்தனை போரா’, `கோயம்புத்தூர் மில்லுக்கு இவ்வளவு போரா’, `பாம்பாய்காரங்க மில்லுக்கு இவ்வளவு’ என்பது போன்ற குரல்கள். ஆயிரக்கணக்கில் சம்சாரிகள் தங்கள் நிலங்களிலிருந்து கொண்டு வந்த பருத்திகளை விலைபேசுவதற்காக மாடுகள் பூட்டிய பார வண்டியில் ஏற்றி வைத்திருந்தார்கள். ஒரு பக்கம் யானைகளைத் தராசில் ஏற்றி எடை வைப்பதுபோல் போராக்களை எடை வைத்துக்கொண்டிருந்தார்கள். அந்த இடமே கிட்டத்தட்ட பெரிய போர்க்களம் போலிருந்தது. சம்சாரிகள் பஞ்சுப்பேட்டையில் ஆத்தியப்பனின் பஞ்சுக் கடையை அடையாளம் கட்டினார்கள்.
கடையில் யாரோ அறிமுகமில்லாத நாலைந்து பேர் அமர்ந்திருந்தார்கள். ஆத்தியப்பனுமில்லை, அந்தோனியுமில்லை, மலையரசனு மில்லை. கொம்பையா அங்கிருந்த வர்களிடம் தான் யாரென்ற விஷயத்தைச் சொன்னார். அங்கிருந்தவர்கள் கடையில் வேலை பார்க்கும் ஒருவரை அனுப்பி திடலிலிருக்கும் அந்தோனியையும் மலையரசனையும் வரச்சொன்னார்கள். மலையரசன் தூரத்தில் கொம்பையாவையும் கரியனையும் பார்த்ததும் ஓடி வந்து கட்டி அணைத்து, மரியாதையும் சந்தோஷமுமாய் தன் தகப்பனையும் சகோதரனையும் வரவேற்பதுபோல் வரவேற்றான். நீண்ட நாள்களுக்குப் பின் கொம்பையாவைப் பார்ப்பதால் மலையரசனின் வளர்ப்பு நாய் கொம்பையாவின் மேலும், கரியன் மேலும் தாவித் தாவி ஏறி, சுற்றிச் சுற்றி வந்தது.
ஆத்தியப்பன் சிறிது நேரத்தில் மோட்டார் காரில் வந்து இறங்கினார். அவருக்குப் பேட்டையில் பெருஞ்செல்வாக்கு இருப்பது கண்கூடாகத் தெரிந்தது. எல்லோரும் கரம் குவித்துக் கும்பிட்டார்கள். தூரத்திலிருந்து அந்தோனிதான் பார்த்துச் சொன்னார். ``அய்யா, கொம்பையா வந்துருக்கார் போல.'' ஆத்தியப்பன் அப்போதுதான் கொம்பையாவைக் கவனித்தார். ``வாங்க... வாங்க...’’ கும்பிட்டவாறே வேகமான நடைபோட்டு அவரை நோக்கி வந்தார். ரயிலில் கொம்பையாவைப் பார்த்த வெற்றிலை, பட்டணம் பொடி சம்சாரிகள் இதை ஆச்சரியம் பொங்கப் பார்த்தார்கள்.
ஆத்தியப்பன் அந்தோனியிடம், விரைந்து போய் அவர்களுக்கு சாப்பிட தம் வீட்டிலிருந்து ஏதாவது எடுத்துவருமாறு சொல்லி அனுப்பினார். வரும் வழியில மலையரசன் கன்னிசேரிப்புதூர் சந்தையில் லட்சணமும் சுழியும் பார்த்து கொஞ்சம் மாடுகள் வாங்கிக் கொடுத்ததைச் சொன்னார். கொம்பையா மலையரசனை ஏறிட்டுப் பார்த்தார். ஆத்தியப்பன் கொம்பையாவை அழைத்துக்கொண்டு போய் மாடுகளைக் காண்பித்தார். கொம்பையா மலையரசனைத் தட்டிக்கொடுத்தார். ``நல்ல மணியான செல்வங்கடா. நான் எப்படி எடுப்பேனோ அப்படி எடுத்திருக்கியே.'' வீட்டிலிருந்து நாலைந்து பித்தளைத் தூக்கில் சாப்பாடு வந்ததும் கொம்பையாவிற்குத் தலைவாழை போட்டு உணவு பரிமாறினார்கள். கொம்பையாவும் மலையரசனும் கரியனும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டு நெடுநாள்கள் ஆகிவிட்டன.
ஆத்தியப்பன் கொம்பையாவையும் கரியனையும் ``கிட்டங்கியில் சிறிது நேரம் ஓய்வு எடுங்கள். மாலை பேசலாம்’’ என்று கிட்டங்கி நோக்கி அனுப்பி வைத்தார். கொம்பையா கிட்டங்கிக்குச் செல்லும் வழியிலேயே நன்கு வளர்ந்த வேம்பு மரத்தினடியில் தன் தோள் துண்டை விரித்துப் படுத்துக்கொண்டார். அந்தோனி ``அய்யா, கிட்டங்கில நல்ல சௌகரியமா இருக்கும். இங்க ஒரே ஜன சத்தமும் இரச்சலும் பஞ்சுத் தூசுமா இருக்கும், வாங்க'' என்று அழைத்துப் பார்த்தார். கொம்பையா ``என்னால கட்டடத்துக்குள்ளலாம் நல்ல படியா தூங்க முடியாது. திறந்தவெளியில படுத்தாத்தான் நல்லா தூக்கம் வரும். சின்ன வயசிலிருந்து சந்த இரைச்சலுக்குள்ள படுத்துத் தூங்கிப் பழக்கம்தான். இதுதான் சௌகரியமாக இருக்கிறது’’ என்று சொல்லி, படுத்துக்கொண்டார். கரியனும் அங்கு அருகில் படுத்துக்கொண்டான். நாய்க்குட்டியும் அருகில் படுத்துக்கொண்டது.நல்ல உறக்கம். மாலை ஐந்து மணியிருக்கும், நாய்க்குட்டி வள் வள்ளென்று குரைக்கத் துவங்கி கொம்பையா முழித்துக்கொண்டார். எல்லாத் திக்கிலும் நாய்களின் குரைப்பொலியாக இருந்தது.
கொம்பையாவும் கரியனும் எழுந்து அமர்ந்தார்கள். மதியம் இருந்த கூட்டம் பெரும்பாலும் வடிந்திருந்தது. அங்கங்கே கொஞ்சம் வண்டிகளும் மனிதர்களும் மட்டும்தான் இருந்தார்கள். நாய் குரைத்த திசை நோக்கிப் பார்த்தார். எதிரில் ஒரு மனிதர் பஞ்சுப் பேட்டைக்குள் நடந்து வந்துகொண்டிருந்தார். அவரைச் சுற்றிலும் பத்து பன்னிரண்டு நாய்கள். அவரைப் பார்த்த மாத்திரத்தில் கொம்பையாவுக்கும் கரியனுக்கும் அடையாளம் தெரிந்தது. காலை கோவில்பட்டி ரயிலடியில் பார்த்த அதே மனிதர். அவர் நாய்களோடு கொம்பையாவைக் கடந்து ஆத்தியப்பனிருக்கும் இடத்திற்குப் போனார். ஆத்தியப்பனுக்கு அவர் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்தான் போல. ஆத்தியப்பன் அவரிடம் முகமலர்ச்சியாய்ப் பேசிக்கொண்டிருந்தார். கரியன் எழுந்து போய் பெரிய பித்தளைச் சொம்பில் நீர் எடுத்து வந்தான். கொம்பையா முகத்தில் நீரை அடித்துக் கழுவிவிட்டு மீதி நீரைத் தன் தொண்டை நனைய விட்டுக்கொண்டார். துண்டால் முகத்தைத் துடைத்தவாறே ஆத்தியப்பனை நோக்கி நடந்தார்.
கொம்பையா அருகில் வந்ததும் நாய்களோடு வந்த அந்த மனிதர் கொம்பையாவைப் பார்த்துக் கும்பிட்டார். கொம்பையாவும் பதிலுக்குக் கும்பிடு வைத்துவிட்டு ``காலையில உங்கள கோவில்பட்டி ரயிலடில பாத்தேன். ரயில்ல நாய்கள ஏத்திக்க மாட்டோம்னு சொல்லி எதோ பிரச்சனையா இருந்தது.''
``ஓ... நீங்க அங்கதான் இருந்தீங்களா. அது எப்பவும் இருக்குறதுதான். சில நேரம் காசு வாங்கிட்டு அனுமதிப்பாங்க. சில நேரம் மறுத்திடுவாங்க. நான் கல்யாணம் செய்துக்கல. இதுகதான் எனக்குப் பிள்ளமாதிரி. எங்க போனாலும் என்கூடதான் வருவாங்க. என்னால இதுங்க இல்லாம ஒரு நிமிஷம்கூட வாழ முடியாது.''
``ஓ...’’
ஆத்தியப்பன் இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திவைத்தார். ``அவரும் உங்களப் போலத்தான். மாடுகதான் அவர் உலகம். என் யாவாரத்துக்கு இப்போ வாங்குன மாடுக எல்லாம் அவர் வாங்கிக் குடுத்ததுதான்...''
இருவரும் சிநேகமாய்ப் பார்த்துக்கொண்டார்கள்.
``இவர். கொண்டைய ராஜு. படம் எழுதுறவரு. ரெம்ப பிரபலம். சங்கரதாஸ் சுவாமிகள் நாடக கம்பெனில திரைச்சீலைக, அதுல வாற சாமி உருவங்க எல்லாம் இவர் வரைஞ்சதுதான். இப்போ இங்க அம்பாள் காப்பிக்காரங்க வீட்ல எதோ வரையணும்னு சொல்லி வரச் சொல்லியிருக்காங்க, அதான்.''
அந்தோனி கொண்டையராஜுக்காக நல்ல வில் வண்டி கொண்டு வந்திருந்தார். கொண்டையராஜுவும், அவரோடு வந்த இருவரும் அந்த வண்டியில் ஏறிக்கொண்டார்கள். வண்டி கிளம்பத் துவங்கியது. கொண்டையராஜு விடைபெற்றுக் கிளம்பினார். நாய்கள் அவரின் பின்னால் வண்டியைத் தொடர்ந்து ஓடின.
மகன் வழி ( 1978 வேனல் காலம் )
‘`உண்மையில் நீ பயணித்த நாள்கள்தான் இந்த பூமியில் நீ வாழ்ந்த நாள்கள்’’
~ பராரிகள்
சூரனுக்கு முதல்நாள் மண்குழைக்கும் வேலை இருட்டும் வரை நெடுநேரத்திற்குப் போய்க்கொண்டிருந்தது. வேனல் காலமென்பதால் குளுமையான ஈர மண்ணுக்குள் நின்று மண்ணை மிதித்துக்கொண்டிருப்பது அவனுக்கு ஓரளவு பிடித்திருந்தது. வேலை முடிந்ததும் எல்லோரும் நீர்த் தொட்டிக்குக் குளிக்கக் கிளம்பினார்கள். ஒவ்வொரு ஆளும் சிறிய வாளியில் கொஞ்சமாய் நீர்மொண்டு கழுவி முடித்தார்கள். அந்த நீர்கொண்டு அவர்கள் உடலின் எந்த பாகத்தையும் சரிவரக் கழுவிக்கொள்ள முடியவில்லை. நிச்சயம் காலில் ஓட்டியிருக்கும் சகதியைக் கழுவக்கூட இந்த நீர் போதுமான தாயிருக்காது. மாடசாமி கொஞ்சமாய் நீர் எடுத்து எப்படி உடலெல்லாம் கழுவிக்கொள்ளலாமென்று சூரனுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார்.

சூரன் எரிச்சல்பட்டான். உடம்பு கழுவத் தண்ணிகூடவா தரமாட்டானுங்க. விடு எப்போவாச்சும் மழ வர்றப்போ நல்லா குளிச்சிக்கலாம். அவனுக்கு இன்னும் முழங்கால் வரை அங்கங்கு சகதி ஒட்டிக்கொண்டிருந்தது. “இப்படியிருந்தா என்னால சரியா தூங்கக்கூட முடியாது. யார் அவனுங்க'' பற்களை நற நறவெனக் கடித்தான். மாடசாமி சூரனை மெதுவாக அங்கிருந்து நகர்த்த முயன்றுகொண்டிருந்தார். ``எதாவது வம்பு கிம்பு வந்திடப் போகுது கிளம்பு.''
மாடசாமியிடம் வந்து பரமசுந்தரி ``நான் கல்லுதான் அடுக்குனேன். கொஞ்ச தண்ணில கை மட்டும் கழுவிக் கிட்டேன். போதும். அவங்கள இந்தத் தண்ணிய எடுத்துக் கழுவிக்கச் சொல்லுங்க.'' சூரன் மறுத்துவிட்டான். ``தண்ணிலாம் வேண்டாம். அந்தப் பிள்ளைய முகம், கைகாலெல்லாம் கழுவிக்கச் சொல்லுங்க. வேனல் காலத்துல செங்கத்தூசி அரிப்பெடுக்கும்.'' பரமசுந்தரி மீண்டும் மறுத்து நீர் வாளியை அங்கேயே விட்டுவிட்டுக் கிளம்பினாள். சூரன் ``வேணாம். எதுக்கு இந்தத் தேவையில்லாத வேல. அவங்க பிள்ளைய இன்னும் நான்தான் எங்கயோ வெச்சிருக்கேன்னு நினைக்கிறாங்க. ஏன், நான்தான் அவங்க வயித்துக்கு அந்தப் பிள்ளைய குடுத்தேன்னும் நினைக்கலாம்.’’

மாடசாமி ``அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டா. அப்படியே நினைச்சிக்கிட்டாலும் ஒண்ணுமில்ல. இருக்குறது சிறச்சாலைக்குள்ள.சொல்லணும்னா அதவிடக் கொடுமைக்குள்ள. இதுல ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்துழச்சி வாழ்ந்திட்டுப் போங்க'' என்று சொல்லிவிட்டு மாடசாமி வீடு நோக்கி நகர்ந்தார். சூரன் பரமசுந்தரி வைத்திருந்த நீரில் கொஞ்ச கொஞ்சமாய் மொண்டு நிதானமாய்த் தன் காலையும் உடலையும் கழுவிவிட்டு நடந்து வந்தான். தூரத்தில் எங்கிருந்தோ ஒரு மயில் ஓயாங்... ஓயாங்... ஓயாங்கென்று அகவியது. திடீரென அவனுக்கு வேம்புவின் ஞாபகம் உடலெல்லாம் பிடித்துப் பற்றி எரிந்தது. பழைய சூளையின் தோற்றம், மயிலாத்தா கோயில், மாந்தோப்பென்று சட்டு சட்டென்று கண் முன் தோன்றித் தோன்றி மறைந்தது. ஓ...வென்று கத்தத் துவங்கி அப்படியே மேற்கொண்டு நகர முடியாமல் அப்படியே அங்கேயே அமர்ந்துவிட்டான். கண்ணீர் பெருக்கெடுத்து நில்லாமல் வந்துகொண்டேயிருந்தது.
எதார்த்தமாய் அந்தப் பக்கமாய் வந்த காயாம்பூதான் பார்த்துவிட்டுப் போய் மாடசாமியிடம் சொன்னாள். மாடசாமி ஓடி வந்தார். ``செரி, அழாத. வீட்டு ஞாபகம் வந்திருச்சா. வேற வழியில்ல. இங்கயிருந்து யாரும் தப்பிச்சிப் போக முடியாது. என்ன பண்ண முடியும். வா. அங்குன என் கொட்டகைக்கு வா. சாப்பிடு'' மீண்டும் ஒருமுறை தூரத்திலிருந்து மயில் ஓயாங் ஓயாங்கென்று அகவியது. அப்படியே அங்கேயே குன்னிக்கொண்டு அமர்ந்தபடி தன் இரண்டு கைகளாலும் தன் இரண்டு காதுகளையும் மூடிக்கொண்டான். வேம்பு என்று அழுத்தமும் சப்தமுமாய்க் கத்தினான். அந்த சப்தம் நெடுந்தூரத்திற்குக் கேட்டது. பரமசுந்தரிக்கும் காயாம்பூவிற்கும்கூடக் கேட்டது.
~ ஓடும்