மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 26

ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

``பயணிக்கு நிரந்தர கூடாரம் எதுவுமில்லை’’

~ பராரிகள்

தந்தை வழி (1951 - பனிக்காலம்)

கொம்பையா விருதுநகரிலிருந்து கிளம்பி கான்சாபுரம் வழியாக தாணிப்பாறையையும், வருசநாட்டுக் காட்டுப்பாதையையும் கடந்து கம்பம் மெட்டுக்குப் போய்விடலாம் என்று நினைத்தார். இந்தக் கொடுமழைக்காலத்தில் காட்டுப் பாதைக்குக்குள் போய் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று தீர்மானித்து ஒரு சுற்று சுற்றி வைகை ஆற்றுக்கரைப் பாதையில் நடந்து ஆண்டிபட்டிக் கணவாய்க்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் ஆண்டிபட்டிக் கணவாய்க்கு வந்து சேரும்போது, நன்கு இருட்டிவிட்டது. நாலா திசையிலிருந்தும் கணவாய்க் காற்று ஊஸ்ஸு ஊஸ்ஸு என்று கொல்லன் பட்டறைத் துருத்தி ஊதுவதுபோல் ஊதிக்கொண்டிருந்தது. நிறைய ஆட்கள் கணவாய் முகப்பில் நெருப்பு போட்டுக் காய்ந்தபடி காத்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு பெரிய லாயத்தைப்போல் அவ்வளவு மட்டக் குதிரைகளும், கழுதைகளும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மேலிருந்த பொதிகள் அருகிலேயே கீழே இறக்கி வைக்கப்பட்டிருந்தன.

ஏழு கடல்... ஏழு மலை... - 26

கொம்பையா மடியிலிருந்து யாழ்ப்பாணச் சுருட்டொன்றை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு நெருப்புக் குமியிலிருந்து ஒரு சிறு கொள்ளியை எடுத்துப் பற்ற வைத்தார். கரியனும் மலையரசனும் வரும் வழியில் கல் விட்டு அடித்து விரட்டிப் பிடித்த காட்டுக்கோழியை ரத்தம் சொட்டச் சொட்ட கையோடு எடுத்து வந்திருந்தார்கள். கோழி எப்படியும் மூன்று கிலோவிற்குக் குறைவில்லாமல் எடையிருந்தது. கோழிக்குக் காலில் மட்டும் கொஞ்சம் உயிர்த் துடிப்பிருந்தது. கோழி இறந்துபோயிருந்தால் இந்த நேரத்திற்கு குளிர்ந்து அதன் தோல் உரிக்க முடியாமல் விறைத்துப்போயிருக்கும். கரியன் சாம்பல் நிறத்திலிருக்கும் அதன் றெக்கைகளையும் முடிகளையும் இழுத்துப் பிடுங்கத் துவங்கினான். இப்போது கோழியிடம் ஒரு சிலிர்ப்புத் துவங்கி உடலை அசைத்து அவன் கையிலிருந்து வெளியேற முண்டியது. எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஆட்களோடு அந்தக் குழுவில் நெருப்பு காய்ந்துகொண்டிருந்த கொம்பையா கோழியின் கழுத்தை அறுத்துப் போட தன் இடுப்பு இடைவாரில் செருகியிருந்த சிறு கத்தியை எடுத்துக் கரியனிடம் தூக்கிப் போட்டார். கரியன் கோழியை அமுக்கிப் பிடித்தபடி கொஞ்சம் எட்டக்கிடக்கும் கத்தியைக் கைகளால் எடுக்கத் துழாவிக்கொண்டிருந்தான். வெவ்வேறு இடத்தில் அமர்ந்திருந்த மலையரசனும், கொம்பையாவும் எழுந்து கத்தியை எடுத்துக்கொடுக்கலாமென்று நினைக்கையில் ஏதோ ஒரு கரிய கால் அந்தக் கத்தியை கரியனின் அருகே காலால் தள்ளியது. கரியன் கத்தியை எடுத்துக்கொண்டு கோழியின் கழுத்தை அறுக்கத் துவங்கினான். கோழி இப்போது பேயாட்டம் துள்ளியது. வேஷ்டியை முழங்காலுக்கு மேல் மடித்துக் கட்டியிருந்த கரியனின் தொடையில் சிறு கத்தி போலிருக்கும் தன் கால் நகங்களால் பட படவென அடித்தபடி கீறத் துவங்கியது.

கரியன் இரண்டு கால்களையும் சேர்த்துப் பிடித்து தன் இரண்டு கால்களுக்குள் பிடித்து அமுக்கி, துள்ள விடாமல் குன்னிக்கொண்டு அமர்ந்துகொண்டான். இப்போது அதன் கழுத்தை நீட்டிப் பிடித்துக்கொண்டு அறுக்க கத்தியைக் கொண்டு வந்தான். கரிய காலின் உருவம் இப்போது கரியனிடம் கேட்டது. ``கொஞ்சம் இரு நான் ரத்தத்த பிடிச்சிக்குறேன். காட்டுக் கோழி ரத்தம் தலைக்கு நல்லது. சூட்ட எடுத்திடும். வங்கெழடு ஆனாலும் முடியில ஒத்த நர தள்ளாது’’ அந்த உருவத்திற்குக் கனமான வெண்கலக் குரல். குனிந்து கோழியின் கால்களையும் கழுத்தையும் இறுக்கப் பிடித்துக்கொண்டு ‘`ம்... இப்போ அறு’’ என்றது. அருகில் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பு வெளிச்சத்தில் அப்போதுதான் கரியன் அந்த உருவத்தைப் பார்க்கிறான். கருகருவென பளபளப்பான கம்பீரமான முகம். எப்படியும் நாற்பத்தைந்து வயதிருக்கும். தலைமுடியை அள்ளி முடிந்து கொண்டை போட்டிருந்தான். இரண்டு பக்கமும் எலுமிச்சை குத்தி வைக்கலாம் என்பதுபோல கூர்மையான குத்து மீசை. ‘`என்ன பாக்குற, அறு.’’

ஏழு கடல்... ஏழு மலை... - 26

கரியன் கரகரவென அறுத்து, கோழியின் தலையைத் தனியே எடுத்துப் போட்டான். தலையில்லாமல் கோழியின் உடல் பட் பட்டென அடித்தது. கரிய உருவம் கொண்ட மனிதன் அதன் கழுத்தை எடுத்துத் தன் தலைமயிரின் மேல் கவிழ்த்தான். வெதுவெதுப்பான ரத்தம் அவர் தலையில் பட்டு வழியத் துவங்கியது. ஒரு கையால் கோழியைப் பிடித்தபடி மறு கையால் தன் மயிர்க் கொண்டையைப் பிரித்து விட்டார். முடி பிரிந்து தோளுக்கும் கீழே முதுகில் வழிந்து விழுந்தது. இதைப் பார்த்து அருகிலிருந்தவர்களும் வரத்துவங்கினார்கள். ‘`முடிக்கி நல்லதா, இங்க கொஞ்சம் குடும்.’’ கரிய மனிதர் கண்களை மூடியபடி யார் பேச்சையும் சட்டை பண்ணாமல் அவரின் முடிக்கு ரத்தம் விட்டுக்கொண்டிருந்தார். வேறு சிலரும் கேட்டுப் பார்த்தார்கள். யாருக்கும் அவனிடம் பதிலில்லை. கொம்பையா மனதிற்கு அந்த மனிதன் ஏதோ வம்பு செய்ய வந்தவனைப் போலிருக்கிறான் என்று பட்டது.

கரியன் அந்தக் கரிய மனிதனின் செயலைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். சுற்றி நின்றவர்கள் சிறிது நேரம் பார்த்துவிட்டு மீண்டும் நெருப்பின் அருகே போய் அமர்ந்துகொண்டார்கள். கரிய மனிதன் போதுமான அளவு தலைக்கு ரத்தத்தை ஊற்றிவிட்டு கரியனிடம் கோழியை நீட்டினான். கரியன் அவரைப் பார்த்துக்கொண்டே கோழியைப் பிடி தவற விட்டான். தலையில்லாத கோழி தரையில் ரத்தம் வழிய ஓடியது. கரியன் அதை விரட்டிக்கொண்டே ஓடினான். அது எப்படியாவது ஓடி தலையில்லாமலாவது வாழ்ந்துகொள்ளலாம் என்பதுபோல குறுக்கு மறுக்கும் பதற்றமாய் ஓடியது. நிறைய பேர் சிரித்தபடி அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது கரிய மனிதனும் கொம்பையாவும் வெவ்வேறு இடத்திலிருந்து ஓடும் கோழியை நோக்கி பருத்த சீனிக்கல்லால் குறி பார்த்தார்கள். இரண்டு கல்லும் சரியாக ஒரே நேரத்தில் குறி விலகாமல் கோழியை அடித்து அந்த இடத்திலேயே விழ வைத்தது. கரிய மனிதன் கொம்பையாவைப் பார்த்துச் சொன்னான். “எனக்கும் இந்தக் கறியில பங்குண்டு” என்று. கொம்பையா சிரித்தபடியே சொன்னார், ‘`தாராளமா எடுத்துக்கோ.’’

மலையரசன் கோழியை எடுத்துக்கொண்டு போய் முடியை நெருப்பில் காட்டிப் பொசுக்கினான். கூட்டத்திற்குள் வந்து கத்தினான். “யார்கிட்டயாவது கொஞ்சம் உப்பு மிளகா இருக்கா?”

யாரோ கட்டைப் பிரித்து ஏழெட்டு காந்தாரி மிளகாயையும் கொஞ்சம் உப்பையும் கொடுத்தார்கள். மலையரசன் நெருப்பின் மேல் குறுக்குக் கட்டை கட்டி, கோழியின் மேல் உப்பு காரம் தடவி நெருப்பில் வாட்டினான். கூட்டத்தினரோடு அமர்ந்திருந்த கரிய மனிதன் கேட்டான்.

“ஏன் இத்தன பேரு இருக்கீகல்ல, கணவாய தாண்டிர வேண்டியதுதான...’’

ஏழு கடல்... ஏழு மலை... - 26

“கணவாய்க்குள்ள போயிட்டு யாரு மூக்கையன் ஆளுககிட்ட உடமையையும் உசுரையும் இழக்குறது? இருந்து எல்லாரும் காலையில போகலாம்னுதான் இங்க உக்காந்திருக்கோம்.”

கொம்பையா ஆச்சரியம் பொங்கக் கேட்டார். ``அப்போ யாரும் இங்கயிருந்து கிளம்புற பாடு இல்லயா?’’

``ஏங்க பெரியாம்பள, இந்தப் பக்கத்துக்கு இப்போந்தாம் வருதீரா? மூக்கையனும் அவன் ஆளுங்களும் பெரிய திருட்டுப் பயலுக. பத்துப் பதினைஞ்சி வருசமா இதான்.’’

‘`நீங்க எங்க போகுற ஆளுகையா?’’ என்று இடைமறித்து ஒரு பெரியவர் கேட்டார். ‘`நாங்க கம்பம் மெட்டு பக்கம் கழுத சந்தைக்கி போறோம்.’’ ‘`ஓ... அப்படியா, இந்த இவகளும் அங்க போறவுக தான். மூக்கையனுக்கு பயந்திட்டுதான் இங்க குத்த வெச்சிருக்காக.’’

அப்போது தூரத்தில் இருட்டுக்குள் நாலைந்து சிறிய மஞ்சள் அரிக்கேன் விளக்கின் வெளிச்சம் தெரிந்தது. எல்லோரும் ஒரு நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு வெளிச்சத்தைக் கூர்ந்து பார்த்தபடியிருந்தார்கள். கல்யாணக் கும்பல் ஒன்று ஆணும் பெண்ணுமாய் பத்திருபது பேர் நாலைந்து வண்டி மாடுகளோடு அங்கு வந்து நின்றார்கள். அந்தக் கூட்டத்தில் ஒருவர் கத்திக்கொண்டே இருந்தார்.

“வெரசா கிளம்புங்க கிளம்புங்கன்னா கேக்குறீகளா... இங்கிட்டும் அங்கிட்டுமா பணியாரம் அவிக்கிறோம், பலகாரம் வைக்கிறோம்னு கிளம்பவே அவ்வளவு நேரமாக்கிட்டிகளே. இப்போ இங்க நடுக்காட்டுக்குள்ள வந்து கிடக்கும்படி ஆகிடுச்சில்ல.’’

எந்தப் பெண்ணும் பயந்து வாய் திறக்கவில்லை. செட்டு பாத்திரங்களோடும், சீர்ச் சுமைகளோடும் அங்கே வண்டியை நிறுத்திப் போட்டார்கள். இரண்டு மூன்று சிறு பிள்ளைகள் கழுதைகளும் மட்டக்குதிரைகளும் நிற்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

‘`கணவாய் தாண்டி ரெண்டு மையிலுல ஊரு. இப்போ கல்யாணம் கட்டுன பொண்ணையும் மாப்பிள்ளையையும் இந்தக் காட்டுக்குள்ள இருட்டுக்குள்ள போயி மொத ராத்திரி வெச்சிக்கோங்கன்னா சொல்ல முடியும்?’’ அந்த மனிதனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவர் மனைவியையும் மற்ற பெண்களையும் நோக்கி நறநறவெனப் பற்களைக் கடித்தார்.

‘`அந்த மூக்கையன் ஆளுங்களுக்குக் கழட்டிக் குடுக்கலாம்னே கழுத்திலேயும் காதிலேயும் தொங்க தொங்க அள்ளிப் போட்டுட்டு வந்தீங்களாக்கும், குந்தாணிகளா... உங்கள கொல்லப் போறேன் பாத்துக்கோங்க.’’

கொம்பையா அவரின் அருகில் போனார். ‘`இப்போ என்ன ஆச்சி. இருக்குற இடத்துக்குத் தகுந்த மாதிரி மாறிக்க வேண்டியதுதான். இந்தச் சோளக் காட்டுக்குள்ள போயி மொத ராத்திரி வெச்சிக்கச் சொல்லுங்க. வேற வழியில்ல. பாவம் சின்னஞ்சிறுசுக மொத நாளும் அதுவுமா ஏங்கிப் போயிறப் போதுங்க. அதான் இவ்வளவு ஆளுக இருக்கோம்ல, பாதுகாப்பா இருக்கும். விடிஞ்சதும் ஊருக்குள்ள போங்க. சோளக் காட்டுக்குள்ள நடக்குறதுல்லாம் புதுசா என்ன?’’ கொம்பையா அவரை சமாதானப்படுத்தினார்.

கல்யாண வீட்டு மனிதர் இரண்டு ஆட்களோடு சோளக் காட்டுக்குள் போய்ப் பார்த்துவிட்டு வந்தார். ஆளுயரத்திற்கு மேல் தட்டை வளர்ந்திருந்தது. பச்சைத் தட்டையை உடையாமல் அப்படியே வளைத்துவிட்டு அதன் மேல் சாக்குப் போட்டு மூடினார்கள். நெருப்பைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் அவர் அவரிடமிருக்கும் சாக்குகளையும் துணிகளையும் கொடுத்துவிட்டார்கள். சிறிது நேரத்தில் மெத்தை போல் விரிப்பு விரித்து விட்டார்கள்.

பெண்கள் அரிக்கேன் விளக்கை எடுத்துக்கொண்டு ஒரு பெரிய தாம்பாளத்தில் பணியாரத்தையும் செவ்வாழையையும் வைத்து பெரிய சொம்பில் நீரும் வைத்துவிட்டு வந்தார்கள். மாப்பிள்ளையும் பெண்ணும் சிரித்தபடியும் சிணுங்கியபடியும் சோளக்காட்டுக்குள் ஒரு அரிக்கேன் விளக்கை எடுத்துக்கொண்டு நடந்தார்கள். எல்லோரும் அவர்கள் உள்ளே போவதைப் பார்த்தபடியேயிருந்தார்கள். சோளக் காட்டின் நடுவே மேலே நட்சத்திரங்களைப் பார்த்தபடி அவர்கள் அந்த விரிப்பில் படுத்துக்கொண்டார்கள். விளக்கு இன்னும் எரிந்துகொண்டிருந்தது. மாப்பிள்ளை சொன்னதற்காய் பெண் அரிக்கேன் விளக்கின் நெருப்பை ஒரு சிறு புள்ளி அளவிற்குக் குறைத்தாள். மற்ற பெண்கள் எல்லோரும் குசுகுசுவென சிறிய குரலில் கேலி பேசியபடி சிரித்துக்கொண்டார்கள். கல்யாண வீட்டுக்காரர் மாட்டு வண்டியிலிருக்கும் பணியார பாத்திரத்தை இறக்கி இங்கு இருக்கும் எல்லோருக்கும் ஆளுக்கு இரண்டாய் எடுத்துக்கொடுக்கச் சொன்னார். கரிய மனிதர் நெருப்பில் வெந்துகொண்டிருக்கும் காட்டுக்கோழியின் அருகில் அமர்ந்திருந்தார். கரியனும் மலையரசனும் அவருக்கு எதிர்த்தாற்போல் அமர்ந்திருந்தார்கள். காட்டுக் கோழியின் ரத்தம் கரிய மனிதனின் தலையில் அங்கங்கு வழிந்து உலர்ந்து முடிகள் ஒன்றோடொன்று ஒட்டியிருந்தது. கரிய மனிதன் தான் கோழி சாப்பிட வேண்டுமென்பதால் பணியாரம் வேண்டாமென்று மறுத்துவிட்டான்.

கரிய மனிதனின் கண்கள் சோளக்கொல்லையைப் பார்த்தபடியிருந்தன. மலையரசனும் கரியனும் அதை கவனித்தார்கள். ‘இவ்வளவு கேவலமான மனிதனா’ என்று தங்கள் மனதுக்குள் அருவருப்புடன் சொல்லிக்கொண்டார்கள். கரிய மனிதனின் கரங்கள் அருகில் கிடந்த கொம்பையாவின் காவற்கம்பை இப்போது இறுக்கமாய்ப் பற்றியிருந்தது. கரியன் மலையரசனுக்கு அதைத் தன் கண் சைகை மூலம் தெரியப்படுத்தினான். ஏதோ நடக்கப்போகிறது என்பதுபோல் இருவரும் கவனமாயிருந்தார்கள். சோளத்தட்டையின் மையத்தை நாலாபுறமிருந்து ஏதோ அசைந்து அசைந்து வந்து சூழ்வதை கரியன் பார்த்தான். நாலா பக்கமிருந்தும் சிறு சிறு ஒளிரக்கூடிய முட்டைக் கண்கள் அவை. இப்போது கரிய மனிதன் ஓஓஓவ்வென்று பெரிய சப்தத்தோடு சோளத்தட்டைக்குள் ஓடினான். எல்லோரும் அந்தப் பக்கமாய்த் திரும்பி கையில் நெருப்புப் பந்தத்தை எடுத்துக்கொண்டு அவனைத் தொடர்ந்து ஓடினார்கள். அதே நேரம் உள்ளேயிருந்து மணப்பெண் அலறும் சப்தமும் கேட்டது. சோளக் காட்டின் எல்லாப் பக்கத்திலிருந்தும் கூட்டமாய் நரிகள் தெறித்து ஓடின. எப்படியும் முப்பதுக்கு மேலிருக்கும். பெண்வீட்டார் கரிய மனிதனைக் கைக் கூப்பி வணங்கினார்கள். பெண்ணுக்கும், அந்த மாப்பிள்ளைக்கும் இன்னும் உடல் நடுக்கம் நிற்காமலிருந்தது.

கரிய மனிதன் சொன்னான். ``இதுக்கு மேல இங்க இருக்க வேண்டாம். வண்டி கட்டுனா கிளம்பிடலாம்’’ கல்யாண வீட்டுக்காரர் சொன்னார் ``வேணாங்க.எங்க பணம் நகையெல்லாம் மூக்கையன் ஆளுங்ககிட்ட இழக்க முடியாது. இருந்திட்டு காலையில போறோம்.’’ ``நாஞ் சொல்றேன் கிளம்புங்க. எல்லோருமே கிளம்புங்க. உங்களுக்கும் உங்க சாமாங்களுக்கும் ஒண்ணும் பங்கம் வராது. நான் பாத்துக்குறேன்.’’ யாருமே கிளம்பாமல் அமர்ந்திருந்தார்கள். கொம்பையா கரிய மனிதனின் மேல் சிறிய கோபத்தோடு பார்த்தபடியிருந்தார்.

“இருந்திட்டு காலையில போயிக்குறோம்னு சொன்னா விட வேண்டியதுதானே?’’

இப்போது கரிய மனிதன் கத்திக் கட்டளை போல் கோபமாய்ச் சொன்னான். ‘`சொல்றேன்ல, கிளம்புங்க.’’ கொம்பையா அருகிலிருந்த பெரிய கொள்ளிக்கட்டையை எடுத்துக்கொண்டு அவரை நோக்கி ஓடினார். கரிய மனிதனின் அருகில் போய் இறுதி எச்சரிக்கை என்பதுபோல் சொன்னார். ‘`நீயும் நானும் வெறும் பயக. இந்தப் பிள்ளைக நகையும் நட்டுமா இருக்குன்னு சொல்றாங்கல்ல. மொத்தத்தையும் மூக்கையாகிட்ட பறிகொடுக்குறதுக்கா போங்க போங்கன்னு விரட்டுற? இதான் கடைசி, சொல்லிட்டேன். பேசாமப் போயிடு.’’

கரிய மனிதன் சொன்னான். ‘`சாமி சாமான்களையும் பொம்பள ஆட்க கிட்டயும் மூக்கையா திருட மாட்டான். நீங்க பாட்டுக்குக் கிளம்பலாம்.’’

கொம்பையாவிற்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது. ``நீ பாத்தியோ.’’

‘`ஆமா நான் பாத்தேன்’’ எல்லோரும் அவனை வியப்பாய்ப் பார்த்தார்கள்.

‘`நாஞ் சொல்றேன்ல, யாருக்கும் ஒண்ணும் ஆகாது. என்னத் தாண்டி எவனும் உங்க சாமான் சட்ட பிடுங்க மாட்டான். ஏன்னா நான்தான் மூக்கையா.’’

எல்லோரும் வாயடைத்துப் போனார்கள்.

“சந்தேகமிருந்தா அந்தா கூட்டத்துல கழுதைக்குப் பக்கத்துல ஒரு யேவாரி நிக்காரே அவர்கிட்ட கேளுங்க.’’

அவர் ‘`ஆமாம்’’ என்பதுபோல் தலையாட்டினார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 26

மகன் வழி (1978 -வேனல் காலம் )

‘`பயணிக்காதவனுக்குக் கால்கள் எதற்கு?’’

~ பராரிகள்


கொத்தார் ஒருவனை மரத்தின் மேலேறிப் பார்க்கச் சொன்னான். சொன்னவுடனே விறு விறுவென மரத்தின் உச்சியிலேறிப் பார்த்தான். கண் கூசியது. தன் இரண்டு கைகளையும் நெற்றிக்கு மேல் நிழல் படும்படி வைத்துக்கொண்டு தீவிரமாய்ப் பார்த்தான். அவனுக்கு எதுவும் தெரியவில்லை. கீழேயிருந்து கொத்தார் கேட்டுக்கொண்டேயிருந்தான். ‘`தெரியுறானா?’’ மரத்திலேறியவன், ‘`இல்லண்ணே’’ என்று சொல்லியபடி தூரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். இப்போது கொத்தார் மர உச்சிக்கு ஏறினான். பாதி மரம் ஏறிக்கொண்டிருக்கும்போதே கொத்தாருக்கு விஷயம் புரிந்துவிட்டது. ஏற்கெனவே மரத்தில் நிற்பவனைக் கீழே இறங்கச் சொன்னான். அவன் பயந்தபடி இயங்கிக்கொண்டிருக்கும்போது மேலிருந்து கீழே தள்ளி விட்டான். ‘`ஏன்டா இதக்கூட பாக்காம... சாவுடா.’’ கீழே விழுந்தவனின் கால் உடைந்திருக்க வேண்டும். கத்திக் கதறினான். ``ஏ... வாய மூடுறா... இல்லனா பாத்துக்கோ.’’ ஒரு சிறு கிளையைக் காலால் மிதித்து அவன் படுத்திருக்கும் இடத்தின் அருகில் விழும்படி செய்தான். அவன் அழுகையை அடக்கிக்கொண்டு அமர்ந்தபடி கால்களை இழுத்துக் கொண்டு போய் ஓரமாய் அமர்ந்தான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 26

கொத்தாருக்கு சூரன் எப்படி இலந்தைக் காட்டுக்குள் போய்ப் பதுங்கினான் என்பது புரிந்துவிட்டது. மரத்தை விட்டு இறங்கி கொட்டகை இருக்கும் இடத்திற்கு வந்தான். கொட்டகை வேயப் பயன்படுத்தப்பட்டு பிய்ந்து போன பழைய தகர ஷீட்டுகளை ஒரு மூலையில் போட்டிருந்தார்கள். சூரன் அதில் இரண்டை எடுத்துக்கொண்டுப் போய் ஒன்று மாற்றி ஒன்று போட்டுப் போட்டு அப்படியே அதன்மேல் நடந்து தப்பியிருக்கிறான். கொத்தாருக்கு ஆத்திரமாக வந்தது.

கொத்தார் மீண்டும் மரத்திலேறிப் பார்த்தான். சூரன் வேக வேகமாக இலந்தை முட்கள் முடியும் இடத்தை நோக்கிப் போவது தெரிந்தது. ஆட்களை விரட்டினான். ‘`எல்லா திசைக்கும் நாயோடு போய் சுத்தி வளையுங்க. அவன் வெளிய வரவே கூடாது.’’

எல்லோரும் நாய்களை விரட்டிக்கொண்டு பின்பக்கமாய்ப் போய் நின்றார்கள். சூரனுக்கு மேலும் மேலும் தாகம் அதிகமாயிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் நீரில்லாமல் இறந்து விடுவோமோ என்பது போலிருந்தது. சுற்றிலும் தேடினான். உண்ணவும் அருந்தவும் எதுவுமில்லை. அங்கங்கு பெரிய பெரிய எலி பொந்துகளிருந்தன.அதே நேரம் வானத்தில் பெரிய கழுகொன்று இ ரை தேடி வட்டமடித்துக்கொண்டேயிருந்தது.அப்போது உச்சியிலிருந்து கீழே விழுவதுபோல் சரசரவென அவன் தலைக்கு நேராய் இறங்கி அவன் கை தொடும் தூரத்தில் ஏதோ இரையைக் கவ்விக்கொண்டு மீண்டும் மேலே பறந்தது.சூரனுக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்றுவிட்டது. அவ்வளவு நீளமான பாம்பைக் கவ்விக்கொண்டு கழுகு வானத்தை நோக்கி மீண்டும் பறந்துகொண்டிருந்தது. கழுகின் காலடியில் பாம்பு தன் உயிரைக் காக்க நெளிந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட இப்போது தன் நிலையும் அதுதான் என்பதாக உணர்ந்தான். அவனுக்குத் தாங்க முடியாமல் தாகமெடுத்தது. அருகில் பொந்திலிருந்து ஒரு எலி வெளியே வந்து வேறு ஏதோ திசையில் அதன் இரைக்காய் நின்றுகொண்டிருந்தது. நன்கு பருத்த எலி. ஒரு கிலோவிற்கும் மேல் எடையிருக்கும்.

சப்தம் காட்டாமல் மெல்ல பின்பக்கமாய்ப் போய் எலியின் அருகில் கையைக் கொண்டு போனான். எலியை அமுக்கிப் பிடித்து கையில் உயர்த்தினான். அதே நேரம் வேறொரு பாம்பும் அதே எலியை குறி வைத்திருக்கும் போல. அரை நொடி இடைவெளிதான், இவன் கையை எடுத்த கணமே அது சீறிக்கொண்டு எலியைக் கடிக்க வெளியே வந்தது. சூரன் வெலவெலத்துப் போய்விட்டான். இந்த இலந்தங்காடு முழுக்க இப்படித்தான் இருக்கிறது. இதன் உள்ளே இருந்தால் ஒரு நாளுக்குக்கூட உயிரோடு வாழ முடியாது. இதை விட்டு வெளியேறி அவர்கள் கையால் செத்துவிட்டாலும் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டான். அவர்கள் கையில் சிக்கிக்கொண்டால் நிச்சயம் இறந்து விடுவோம். இங்கு உள்ளேயே இருந்தாலும் நிச்சயம் தாகமெடுத்தே நாளை காலைக்குள் இறந்துவிடுவோம். என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கினான். பேசாமல் வாயை மூடிக்கொண்டு வேலையைப் பார்த்து வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றியது. கையிலிருந்த எலியை என்ன செய்வதெனத் தெரியாமல் நின்றான். உயிர்போகும் தாகம். கண்களை மூடிக்கொண்டு எலியைக் கடித்து ரத்தத்தைக் குடிக்கத் துவங்கினான். சிறிது நேரத்தில் தாகம் மட்டுப்பட்டது.

இருளத் துவங்கியது. அங்கிருக்கும் எல்லாப் பொந்துகளிலிருந்தும் பாம்புகள் வெளியேறி அலைவதுபோல் அவனுக்கு பயம் தொற்றிக்கொண்டது.

வெளியே கொத்தார் இந்த இரவுக்குள் அவன் வெளியே வரவில்லையென்றால் நாலா பக்கமும் தீ மூட்டி இந்த மொத்தக் காட்டையும் எரித்துவிடச் சொன்னான். ``அவன் உள்ளேயே கிடந்து சாகட்டும்.’’

- ஓடும்