மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 27

ஏழு கடல்... ஏழு மலை.
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை.

விலகும். இல்லாட்டி சாமி குத்தமாகிடும். வந்திட்டு வெறுங்கையோட எப்படிப் போறது

‘`உன் வாழ்வின் சிறந்த நாள்களை நினைவுகூர்வாயானால் நிச்சயம் அது நீ பயணம் செய்த நாள்களாகத்தான் இருக்கும்.’’

~ பராரிகள்

தந்தை வழி (1951 - பனிக்காலம்)

திருடன் மூக்கையனின் ``நானாச்சி உங்க சாமான்களுக்கும் நகைகளுக்கும் பொறுப்பு'' என்ற வார்த்தையைக் கேட்டு யாவாரிகளும், திருமணக் கும்பலும், கால்நடைச் செல்வங்களோடு ஆண்டிபட்டிக் கணவாயைக் கடக்க இறங்கினார்கள். எல்லோருக்கும் மனசுக்குள் சந்தேகம் வராமலில்லை. ``ஆளும் பேருமா இத்தனை பேரு இருக்கும்போது என்னத்துக்கு பயப்படணும்'' என்று ஒவ்வொருத்தரும் தத்தம் மனசுக்கு சமாதானம் சொல்லியபடியே நடந்தார்கள். ஆனாலும் எல்லோருக்குள்ளும் ஒரு சிறு இடர் இருந்தது. கல்யாண வீட்டுப் பெண்கள் கழுத்து காது நகைகளின் மீது கருத்தாயிருந்தார்கள். எல்லா ஆண்களின் பார்வையும் மூக்கையனின் பாவனையைக் கவனித்தபடியே இருந்தது. கொம்பையாவும் கரியனும் மலையரசனும் மொத்தக் கும்பலையும் முன்னால் நடக்க விட்டுவிட்டு கடைசியாக வந்தார்கள். கொம்பையாவின் பார்வை நாலாபக்கமும் சுழன்றபடியிருந்தது. மூக்கையனின் நடையில் ஒரு துள்ளலும் சந்தோஷமுமிருந்தது. நெருப்பிலிடப்பட்ட காட்டுக் கோழியின் ஒரு பக்கக் காலைக் கடித்தபடி அருகிலிருப்பவர்களிடம் பழக்கம் பேசியபடி பெரும் உற்சாகமாயிருந்தான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 27

``ஏன் எல்லாரும் துக்க வீட்டுக்குப் போற மாதிரி அரவமில்லாம வாறீக. நல்லா கலகலப்பா பேசி சிரிச்சிக்கிட்டே போனாத்தான அலுப்பும் களைப்பும் தெரியாம இருக்கும்.''

அப்போதும் எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

கல்யாண கும்பலை நடுநாயகமாக இருந்து வழி நடத்தியவர் மூக்கையனிடம் சும்மா வெறும் பேச்சு பேசினார். ``அப்புறம் கறியெல்லாம் நல்லா வெந்திருக்கா. உப்பு, காரம் கூடி நல்லா சேந்துருக்கா?’’

``ஒரு வாய் கடிக்கீறா?''

``அதெல்லாம் வேண்டாம் காலையிலயிருந்து கல்யாண வீட்டுல கடாக்கறியா சாப்பிட்டு வாயும் பல்லும் வலியெடுத்துப் போச்சி.''

``ஏன், முத்துன கறியாப் போச்சா?''

``அதெல்லாம் இல்லைங்க. சேக்காளி, பங்காளின்னு கல்யாணத்துக்கு வந்தவனெல்லாம் அவனவன் கிடையிலயிருந்து ஆளுக்கொரு இளங்கிடாயா பிடிச்சிட்டு வந்துட்டானுங்க. ஆளாளுக்கு அஞ்சு கிலோ கறிக்கி குறயில்லாம சாப்பிட்டுருப்போம்னா பாருங்க. அதான் எல்லாம் மலைப்பாம்பாட்டமா நெளிக்க மாட்டாம நெளிஞ்சி நடக்க மாட்டாம நடக்குறாளுங்க.''

ஏழு கடல்... ஏழு மலை... - 27

பெண்கள் பிஞ்சுகாத்துபோல சப்தமில்லாமல் பேசிக்கொண்டார்கள். ``அப்படியே கறியா போட்டுத் தள்ளிட்டாராம்ல. மொத்தக் கல்யாணத்துக்கும் வீட்ல நின்ன நாலு சேவலத்தான் கொழம்பா வெச்சிப் போட்டாரு. தொப்பம்பட்டி கம்மா தண்ணி முழுக்க இலையிலதான் ஓடுச்சினுன்னு எல்லா ஆட்களும் கிண்டல் வேற. கஞ்சப் பெய. அந்தப் பல்லுல கறி வாடையாவது வருமா. அரக் கிலோக் கறி பல்லு சந்துக்குள்ள மாட்டிக்கிட்ட மாதிரி குச்சிய வெச்சி பல்ல நோண்டிகிட்டே வாரதப் பாரு'' பெண்கள் கமுக்கமாகச் சிரித்துக்கொண்டார்கள். ‘`அரக் காசுக்கு குதிர வாங்கணுமாம். ஆனா அது ஆத்தத் தாண்டிப் பாயவும் செய்யணுமாம் பேச்சப் பாரு.’’ கும்பலிலிருந்து ஒரு வயதான பெண்குரல் அவனை எடக்கு பேசியது.

‘`அரக் காச ஆயிரம் பொன் ஆக்குகிறவளும் பொம்பளதான்; ஆயிரம் பொன்ன அரக் காசு ஆக்குகிறவளும் பொம்பளதான்... நீ என்னத்த சேத்து வெச்சி குடுத்துட்டன்னு இப்போ பேசுற’’ அவன் எதிர் மடக்கு போட்டான்.

``அரப்படி அரிசியில அன்னதானம். விடியும் மட்டும் மேளதாளம்னு ஒரு கல்யாணம். இதுல வாய் முழுக்க வக்கண பேசுறான் பேச்சு.’’ கிழவி மீண்டும் எடக்கு பேசினாள். எல்லோரும் சப்தமிட்டுச் சிரித்தார்கள். மூக்கையனுக்கு சிரித்து மாளவில்லை. பேச்சினூடே அப்போதுதான் கவனித்தான். அதையே கொம்பையாவும் பின்னாலிருந்து கவனித்தபடி வந்தார். பேச்சு கொடுத்தபடியே பெண்கள் ஒவ்வொருவரும் ரகசியமாகத் தத்தம் காதிலும் கழுத்திலும் கிடக்கும் ரெட்டவடம், காசுமாலை, தோடு, கொப்பு, பாம்படம், கை காப்பு எல்லாவற்றையும் கழற்றி வரிசையாக ஆள் மாற்றி ஆள்மாற்றி வண்டியில் அமர்ந்திருக்கும் கல்யாணப் பெண்ணிடம் கொடுத்து அரிசி நிறைந்த சீர் ஓலைப் பெட்டிக்குள் திணித்தபடி வந்திருக்கிறார்கள். கிளம்பும்போது லெட்சுமி கடாட்சமாயிருந்த எல்லாப் பெண்களும் இப்போது மூளிக் கோலத்தில் வந்து கொண்டி ருந்தார்கள். மூக்கையனுக்கு சங்கடமாகிவிட்டது. தன்னை யாரும் நம்பவில்லை என்பதில் அவன் முகமே வாடிவிட்டது. கொஞ்ச நேரத்திற்குப் பேச்சில்லாமல் வந்தான். கல்யாண வீட்டு ஆள் மீண்டும் பேச வாயெடுத்தான். மூக்கையன் சுள்ளென்று பேசிவிட்டான். ``நா வேணா அந்தப் பக்கமா திரும்பிக்கிட்டு நடக்கவா. இன்னும் குழந்தைக குண்டிக்கொடியும், அரசிலையும்தான் இருக்கு. அதையும் கழட்டி ஒளிச்சி வெச்சிக்கோங்க. புலி மெலிஞ்சா எலி கிட்ட வந்து எட்டுக் குட்டிக்கரணம் போட்டுக் காட்டுமாம். எல்லாம் என் நேரம்.’’ பெருமூச்சு விட்டபடி இறுக்கமும் மௌனமுமாய் நடந்தான்.

சிறிது தூரம் போயிருப்பார்கள். கிழவிதான் ஆரம்பித்தாள். ``புலி வயித்துல பொறந்துட்டு நகம் இல்லன்னா நம்புவாங்களா சாமி? எதோ அறியாப் புள்ளைக புரியாம தப்பா நினைச்சி எல்லாத்தையும் கழத்தி பத்திரம் பண்ணிடுச்சிங்க. பாவம், அந்தப் புள்ளைகளும் காட்டுலயும் மேட்டுலயும் கஷ்டப்பட்டு சிறுவாட்டுல சேத்ததுதான். நீ முன்னப்போல நல்லா கலகலப்பா பேசிக்கிட்டு வாயேன். என்னவோபோல இருக்கு.’’

மூக்கையன் இப்போதும் அமைதியாக இருந்தான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 27

கிழவி மறுபேச்சுக்கு வாயெடுக்கையில், `ஸ்ஸ்...’ என இரண்டு கைகளையும் விரித்து எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினான். எல்லோரும் அமைதியானார்கள். கொம்பையா எல்லாத் திக்குகளிலும் தன் பார்வையை ஓட்டிவிட்டார். தன் காவற்கம்பை இறுகப் பிடித்துக்கொண்டு இடப்புறமிருக்கும் செடிக்குள் ஓங்கி ஓங்கி அடித்தார். காட்டு நெல்லிச் செடியின் இளங்கிளைகள் ஒடிந்து புளிப்பு வாசனை வந்தது. அவருக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. கம்பில் சொத் சொத்தென்று மனித சதையில் அடிபடுவதுபோல சப்தம். கொம்பையா கொஞ்சமாய்ப் பின்வாங்கி கனத்த குரலில் ஓங்கிக் கத்தினார், ``வெளிய வாங்கடா.’’ கரியனும், மலையரசனும் தயாராயிருந்தார்கள். கூட்டம் முழுக்க முகத்தில் பீதியோடு நின்றுகொண்டிருந்தது.

கொம்பையா மீண்டும் கோபமாய்க் கத்தினார். ``சொல்றேன்ல, வெளிய வாங்கடா.''

மூக்கையன் நிதானித்து அழைத்தான் ``யே...இருளப்பா...’’

அப்போதும் சலனமில்லாமலிருந்தது. ``டேய்ய்ய்’’ காடதிரக் கத்தினான். ``வெளிய வான்னு சொல்றேன்ல. வாடா...’’

இப்போது மூன்று திசைகளிலிருந்தும் செடி செத்தைகளுக்குள் சிறு சிறு சலனம் தெரிந்தது. ஒவ்வொருவராக வெளி வரத் துவங்கி இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அவர்களைச் சுற்றுப் போட்டார்கள். முகத்தைத் துணிகொண்டு மூடியிருந்தார்கள்.

மூக்கையன் “இருளப்பா” என்று அழைத்தான். அவர்களில் ஒருவன் பேசத் துவங்கினான். ``இந்தாரு மாமா. நீரு செத்த விலகிக்கோரும், நாங்க சுருக்கா முடிச்சிட்டுக் கிளம்பணும். கூட்டம் நல்லா கல்யாணக் கூட்டம் மாதிரி தெரியுது. நகையெல்லாம் கழத்துற வரைக்கும் சும்மா மிரட்டிக்கிட்டு நிக்கணும்னுகூட அவசியமில்ல. ஏத்தா அந்த அரிசிப் பொட்டிய மட்டும் எடுத்துக் குடுத்திட்டுக் கிளம்புங்க.’’ எல்லோரும் அதிர்ந்துபோனார்கள்.

``ஏலேய் எனக்குத் தெரியும்டா, உன் ஆளுகெல்லாம் அந்த ஓடைய தாண்டுனதுலயிருந்து தொடர்ந்து வாறீகன்னு... மனுச வாசம் எனக்குத் தெரியாதா? எந்தப் பயன்னு மட்டுப்படாமத்தான் செத்த நேரம் பேச்சி கொடுத்துக்கிட்டு வந்தேன்’’ மூக்கையன் பேசப் பேசக் கூட்டம் முழுக்க முகத்தில் பெரும்பீதியைக் காட்டியபடி நின்றது.

``செரி விடு மாமா. கல்யாண வீட்டு ஆட்கள விட்றலாம். இந்த யாவரிகள பாத்துக்குறேன்.''

``இந்தா பாரு மருமவனே... சொன்னா கேக்க மாட்டியா? உன் ஆட்கள கூட்டிட்டுக் கிளம்பு.யே இந்தா ஓடப்பட்டிக்காரர் மகனே, கிளம்புங்கய்யா...'' வேறொருவனைப் பார்த்து அதட்டினார். யாரும் நகர்வதாயில்லை.

``இந்தாரு மாமா. வெலகிக்கோரும். கருப்பருக்குப் பூச காட்டிட்டு, சகுனம் பாத்திட்டு தான் வந்தோம். கருப்பன் புண்ணியத்துல எல்லாம் சரியாத்தான் இருக்கு.''

``அதுக்கு?''

``விலகும். இல்லாட்டி சாமி குத்தமாகிடும். வந்திட்டு வெறுங்கையோட எப்படிப் போறது?''

``அப்படினா, அந்தா பேராவூரணிக்காரன் தோப்புல இறங்கிப் போயி ஒரு மூட்ட மாங்காய பறிச்சிட்டுப் போங்கடா. தோட்டக்காரன் உங்களைப் பாத்ததுமே மூத்திரம் போயிருவான். அவனே மூட்ட கட்டி வீட்ல இறக்கி வெச்சிட்டுப் போயிருவான்.''

``வெளையாடாதீரும். நீரும் திருடன்தான. இன்னிக்கி மட்டும் ஏதோ யோக்கியன் மாதிரி பேசுறீரு?''

``இன்னிக்கி நான் காவக்காரன்டா... கணவா முடியிருவரைக்கும் நான் துணையா இருப்பேன்னு வாக்கு குடுத்துருக்கேன். போ... கிளம்பு...சொல்றேன்ல, போங்கடா...''

எல்லோரும் முனகியபடியே செடிகளுக்குள் கிளம்பினார்கள். இறுதியாக வந்தவன் சொன்னான். ``யேன் பெரியாம்பள, இந்தக் கம்பால என்னா அடி அடிச்சிட்டீரு. வலி உயிர் போகுது.''

எல்லோரும் மூக்கையனைப் பார்த்துக் கை தொழுதார்கள். மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அரிசிப் பெட்டிக்குள்ளிருந்து மீண்டும் பொன்னகைகள் ஒவ்வொன்றாய்க் கைமாறி கைமாறி எல்லாப் பெண்களின் கழுத்துக்கும் காதுக்கும் கைக்குமாய் அணிந்துகொண்டது.

``நாலு மாசம் முன்னாடி வரைக்கும் இங்க நான்தான் பெரிய திருடன். கொஞ்ச நாளைக்கி முன்னாடி மக செத்துப்போய்ட்டா. அவ மாமியார் வீடு கண்டமனூர் பக்கம். நல்ல தைரியமான பொண்ணு. ரெம்ப நாளைக்கப்புறம் வயித்துல கரு தங்குச்சின்னு ஓடக் கருப்பனுக்கு தனியாவே போயி பொங்க வெச்சிட்டுத் திரும்புறப்போ எதோ களவாணிப்பய மறிச்சிருக்கான். அவ முரண்டு பிடிக்கப் போயி, அவளக் கொன்னுட்டு நகையெல்லாம் களவெடுத்துட்டுப் போயிட்டான்.''

எல்லாப் பெண்களும் மூக்கையனைப் பார்த்துப் பாவமாய் உச்சுக்கொட்டினார்கள்.

“ஒத்தப் புள்ள இப்படிப் போகும்னு ஆரு கண்டா?” மூக்கையன் அழத் துவங்கினான்.

மூத்த கிழவி வந்து அவனைக் கட்டி அணைத்துக்கொண்டாள். ``எப்பே... நாங்க இருக்கோம்பே.''

கூட்டத்திலிருந்து ஒரு பெண் வந்து சொன்னாள்.

“இந்தாண்ணே, இது என் புள்ள, உன்ன புள்ளையா வளத்துக்கோ. கூட்டிட்டுப் போ. தோன்றப்போ வந்து பாத்துக்குறோம்” ஒரு ஆறு வயதுப் பெண் பிள்ளையை அவன் கையில் பிடித்துக் கொடுத்தாள்.

``வேணாம்தா... சொன்னதே போதும்.’’ கொம்பையா மூக்கையனின் முதுகை வாஞ்சையாய் சகோதரனைப் போல் தட்டிக் கொடுத்தார்.

கணவாய் தாண்டி கல்யாணக் கும்பலை ஊரில் சேர்த்துவிட்டு மூக்கையன் யாவாரிகளோடும் கொம்பையாவோடும் கிளம்பினான்.

கொம்பையா தன் சுருட்டில் ஒன்றை எடுத்து அவனுக்குக் கொடுத்தார். இருவரும் புகைத்தபடியே கிளம்பினார்கள். அல்லி நகரம் வந்தபோது ஆறு கழுதைகளில் சாமான்கள் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு யாவாரி விடைபெற்றுக்கொண்டார். அவர் மூக்கையனை அழைத்துப் பதிமூணு காசு பணம் கொடுத்தார்.

``இத காவக்கூலியா வெச்சுக்கோங்க. வாரத்துக்கு ரெண்டு நட உசிலம்பட்டிலயிருந்து ஆண்டிபட்டிக் கணவா தாண்டுவேன். கூடமாட வந்தாக்க ஒவ்வொரு தடவையும் பதிமூணு காசு காவக்கூலி தாரேன்.’’

``அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீங்களே வச்சிக்கோங்க. பல வருசமா ஒரு ராத்திரியும் தூங்காம காட்டுக்குள்ள சுத்துனது. என்ன பண்ணுனாலும் தூக்கம் வர மாட்டேங்குது. பொண்டாட்டியும் ‘இந்தத் திருட்டுத் தொழில விட்டுத் தொல, இல்லனா வாழ வரமாட்டேன்’னு சொல்லிட்டு அவக அண்ணன் வீட்டுக்குப் போயிட்டா. வீட்ல பெரிய கிழவி என் அம்ம மட்டும் இருக்கா. இவ்வளவு வயசுலயும் எனக்கு கஞ்சிக்கு வழி பண்ணிகிட்டு அவ கிடக்கா.’’

அந்த யாவாரி காவக்கூலியை மூக்கையன் கையில் திணித்தார்.

''சொல்றேன்ல வேணாம்னு'' மறுதலித்தான்.

``மேல இன்னும் கொஞ்சம் பணம் போட்டு இருபது காசா தாரேன். இந்தாங்க.''

``அய்யோ அதெல்லாம் ஒண்ணும் வேணாம். இந்த திசைக்கு வரப்போ முன்கூட்டி தாக்கல் சொல்லுங்க, சும்மாவே காவலுக்கு வாறேன். காசெல்லாம் வேண்டாம்.’’

கொம்பையா முன்வந்தார். ``ஒரு யோசன சொன்னா கேட்டுப்பீங்களா?’’

எல்லோரும் அவர் என்ன சொல்லப்போகிறார் எனக் கேட்பதில் ஆர்வமாக இருந்தார்கள்.

``மூக்கையனே கழுதைகளையும் மட்டக்குதிரையையும் பத்திக்கிட்டு எல்லாத்துக்குமா வாரத்துக்கு ரெண்டு நட சாமான் எடுத்துக்கிட்டுப் போயி தேனிக்கும், சின்னமனூருக்கும் போடட்டும். நீங்க வரணும்னு கூட அவசியம் இல்லல. இந்தப் பக்கம் மூக்கையன மிஞ்சுன வீரன் கிடையாது. அவனுக்குத் தெரியாத களவாணிப் பயல்களும் கிடையாது. அதனால எந்த பங்கமும் இல்லாம பொருள் பத்திரமா வீட்டுக்கும், யாவாரத்துக்கும் போயிடும். என்ன சொல்றீங்க... கழுத பத்தவும், சாமான் சட்டு இறக்கி ஏத்தவும் மட்டும் ஒரு கூலி ஆள் குடுங்க, போதும். ஒரு நடைக்கி இவ்வளவுன்னு ஒரு நல்ல கூலியாப் போட்டுக் குடுங்க. உங்களுக்கும் அலைச்சல் மிச்சம்.’’

எல்லோருக்கும் அது நல்ல யோசனையாகப்பட்டது.

மூக்கையனுக்கு தன்னை ஒரு ஆளாக்கி விட்டதாய் கொம்பையாவின் மேல் ஒரு பிரியம் மேலிட்டது.

சின்னமனூர் வந்தபோது எஸ்டேட்காரர்கள் மட்டக்குதிரையைப் பத்திக்கொண்டு கிளம்பினார்கள். போவதற்கு முன் மூக்கையனை மலைக்கு மேல் எஸ்டேட் வேலைக்கு வர்றீரா எனக் கேட்டார்கள்.

``ஓயாமல் அலைந்து திரிந்த கால். ஒரு இடத்துல நின்னு என்னால வேல பாக்க தோதுப்படாது. என் காலுக்கு தினம் தினம் புதுசா வேற வேற மண்ண, செடிய மிதிக்கணும். அதுக்கு இப்படியே நாலு பேருக்கு காவக்காரனா வேல பாக்குறதுதான் சரி.’’

அவர்கள் தம் பங்குக்கு காவற்காசும் புதிதாய் ஒரு ஜக்கம்பட்டி வேட்டியும் கொடுத்தார்கள். வணங்கி வாங்கிக்கொண்டான்.

கொம்பையா மூக்கையனையும் உடனழைத்துக்கொண்டு கம்பம் மெட்டு கழுதைச் சந்தைக்கு வந்து சேர்ந்தார்.

மகன் வழி (1978 -வேனல் காலம் )

‘`பயணத்தை உணர மட்டுமே முடியும். அதை வார்த்தைகளால் சரியாக விவரித்துவிடமுடியாது.’’

~ பராரிகள்

ஏழு கடல்... ஏழு மலை... - 27

ல்லோரும் அந்த இரவுக்காகக் காத்திருந்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில் சூரன் இலந்தைக் காட்டிலிருந்து வெளியே வரவில்லையென்றால் கொத்தார் மொத்தக் காட்டையும் நெருப்பு வைத்து எரியூட்டும்படி உத்தரவிட்டான். நாலாபக்கமும் எல்லோரும் தயாராக இருந்தார்கள். எல்லாச் சூளைகளிலுமிருந்தும் ஆட்கள் கூட்டமாய்க் கூடியிருந்தார்கள். நேரம் ஆக ஆக எல்லோருக்குள்ளும் பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இறுதியாக மாடசாமிதான் ‘ஒருமுறை வேண்டுமானால் பேசிப் பார்க்கவா?’ என்று கேட்டான். கொத்தார் மறுத்துவிட்டான். ``அவன் நிச்சயம் இன்னிக்கி சாகத்தான் போறான். எப்படி சாகப்போறான்னுதான் முடிவெடுக்கணும்.’’

கொத்தார் சைகை காட்டியதும் இலந்தைக் காட்டின் ஒரு மூலையிலிருந்து நெருப்பு வைத்தார்கள். வேனல் காலமென்பதால் இலந்தை முட்கள் காய்ந்து சடசடவென எரிந்தன. கொத்தார் இப்போது முன் திசையை மட்டும் விட்டுவிட்டு மற்ற இரண்டு திசைக்கும் நெருப்பு வைக்கச் சொன்னான். நெருப்பு வேகவேகமாகப் பிடித்து எரிந்தபடி நகர்ந்தது. சூரன் தன் இடுப்பு வேட்டியைக் கழற்றிக் கைகளில் சுற்றிக்கொண்டு தன்னைச் சுற்றியிருக்கும் இலந்தை முட்களைப் பிடுங்கிப் போட்டான். தரையில் பலமாக ஊன்றிக்கொண்டு இலந்தை வேர்கள் பிடுங்க முடியாமலிருந்து. வேகம் கொண்டு இழுத்ததில் அவன் உடம்பு, முகமெல்லாம் முட்கள் குத்தின.

ஏழு கடல்... ஏழு மலை... - 27

கொஞ்ச தூரத்தில்தான் எரிந்துகொண்டிருந் தாலும் புகையும் வெக்கையும் மண்டிக்கொண்டு வந்தது. பலம் கொண்டு மூச்சை அழுத்தி இழுத்துப் பார்த்தான். பூமியிலிருந்து அதன் வேர்கள் உருவிக்கொண்டு மேலே வந்தன. தன்னைச் சுற்றிலும் அடுத்த பத்தடி தூரத்திற்கு எல்லாச் செடிகளையும் உருவி தூரமாய்ப் போட்டான். நெருப்பு பிடிக்காமலிருக்க எல்லாச் செடி செத்தைகளையும் முழுவதுமாக அகற்றினான். நெருப்பு அவனை நெருங்கி வந்து கொண்டிருந்து.

வெளியே நெருப்பின் சூடு தாங்காமல் நூற்றுக்கணக்கில் எலிகளும் பாம்புகளும் அரணைகளும் புதர் முயல்களும் ஒற்றை வழியில் முன்னோக்கி ஓடின. சுற்றிலும் நின்றவர்கள் ஓரிரு பாம்புகள் வரும்பொழுது தடியால் அடிக்கத் துவங்கினார்கள். வளைவு வளைவு கோடுகளாக பெரிய புற்றைக் களைத்துப் போட்டதுபோல மொத்த மொத்தமாய் வந்தபோது உயிர் பயத்தில் தெறித்து ஓடினார்கள். மூன்று, நான்கு பேரை பாம்புகள் கடித்தது. கறுத்த புகை மண்டி எங்கிருந்து பார்த்தாலும் தெரிந்தது. அந்த இடமே கலவரச் சூழலாய் மாறிபோனது.

நெருப்பு அருகில் வந்தபோது அவனால் வெக்கை தாள முடியவில்லை. தகரக் கூரையை இரண்டு பக்கமும் பிடித்துக்கொண்டான். மொதுமொதுவென வெக்கை அவன் எதிர்பார்த்ததைவிட அதிகமாக, வெந்து விடுவோமோ என்பதுபோல இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் நெருப்பு நகர்ந்து போய் அந்த இடம் கரிய வெட்ட வெளியாய்த் தெரியத் துவங்கியது. கொத்தாரின் ஆட்கள் மூன்று பக்கமும் சுற்றுப்போட்டார்கள். தூரத்தில் எரியும் நெருப்பின் மஞ்சள் வெளிச்சத்தில் சூரனின் முகம் தெரியத் தொடங்கியது. கொத்தாரின் ஆட்கள் காலில் டயர் செருப்புகளை அணிந்து கொண்டு உள்ளே இறங்கினார்கள். சூரன் தன் உடல் முழுக்க வேட்டியால் சுற்றிக்கொண்டு உருவி வைத்த இலந்தைச் செடிகளைப் பந்துபோல தன்மேல் கட்டிக்கொண்டு நின்றான். உள்ளே நுழைந்த கொத்தாரின் ஆட்களால் சூரனை நெருங்க முடியவில்லை. கட்டையால் அடிக்க வந்தார்கள். அப்படி வந்தவர்களை நோக்கி சூரன் கட்டி அணைப்பது போல் ஓடினான். கையிலிருந்த பெரிய இலந்தைப் புதரைக் கொண்டு எல்லோரையும் விரட்டி விரட்டி அடித்தான். நாலைந்து பேர் முட்களால் குத்துப்பட்டு, கத்தி அலறி, தெறிக்க ஓடினார்கள்.

கொத்தார் அங்கிருப்பவர்களிடம் அவன் மேலிருக்கும் இலந்தை முட்கள் மேல் நெருப்பைப் பற்ற வைத்துப் போடச் சொல்லிக் கத்தினான். நெருப்பை எடுத்து வந்தவர்களை சூரன் துரத்திக்கொண்டு ஓடினான். கொத்தார் ஒரு பாட்டிலில் மண்ணெண்ணெயை நிரப்பி, ஒரு துணியால் திரி வைத்து அதன் முனையை எண்ணெயில் தேய்த்து உள்ளே இறங்கினான்.

அதே நேரத்தில் கொஞ்சம் தள்ளி, பதினோராம் சூளையில் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்ததாய்ச் சொல்லி எல்லோரும் அங்கு ஓடினார்கள். கொத்தாரும் அவன் ஆட்களும், வேலை ஆட்கள் சூளையை விட்டு வெளியேறி ஓடிவிடாதபடி தடுக்க அங்கு ஓடினார்கள். ஏசண்டு தனது சூளை ஆட்கள் வெளியேறிவிடாதபடி எல்லாப் பக்கமும் மிரட்டியபடி தடுத்துக்கொண்டிருந்தான். சூரன் இதுதான் சமயமென்று இலந்தை முட்களை எடுத்துப் போட்டுவிட்டுக் காட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தான். இருட்டுக்குள் யார் எங்கேயிருக்கிறார்களெனத் தெரியவில்லை.

பதினோராம் சூளையிலிருந்து கொஞ்சம் தள்ளி வேறொரு இடத்திலும் ஆட்கள் சேர்ந்து சுவரை இடித்துத் தள்ளினார்கள். காயாம்பூவும் பரமசுந்தரியும் மாடசாமியும் தப்பிக்க, உடைந்த சுவர் இருக்கும் இடத்திற்குக் கிளம்பினார்கள். பரமசுந்தரி ‘தன் மகன் இங்கேதான் இருக்கிறான். அவனை விட்டுவிட்டுத் தன்னால் வரமுடியாது’ என்று சொல்லிவிட்டு அங்கேயே நின்றாள். அப்போது ஒரு கரம் அவளைத் தரதரவென இழுத்துக்கொண்டு உடைந்த சுவர் நோக்கிப் போனது. இவர்கள் அங்கு சேரும் முன் கொத்தாரின் ஆட்கள் வழிமறித்து நின்றுவிட்டனர். அருகில் நெருங்கும் எல்லோரையும் சரமாரியாக ஆயுதங்களால் உயிர்போகும் அளவிற்குத் தாக்கினார்கள். உள்ளேயிருக்கும் எல்லோரும் மொத்தமாய்க் கூச்சலிடத் துவங்கினார்கள்.

வேறொரு புறம் சூளைக் கூலிகள் அவர்கள் தங்கியிருந்த வீடுகளுக்கு அவர்களே தீ வைத்துக்கொண்டிருந்தார்கள்.

~ ஓடும்