மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 28

ஏழு கடல்... ஏழு மலை...
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை...

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

‘`பயணத்தில் உன்னைச் சந்திப்பதற்காக யாரோ காத்திருக்கிறார்கள்.’’

~ பராரிகள்

தந்தை வழி (1951 - பனிக்காலம்)

கொம்பையா கம்பம் மெட்டுக்கு வந்து சேர்ந்தபோது இரண்டாம் நாள் கழுதைச் சந்தை களைகட்டியிருந்தது. கரியனுக்கு அந்த இடம் அவ்வளவு குளிராக இருந்தது. இரண்டு திசைக்கு சுவர் போல அங்கங்கு பச்சைப் பசேலென்று மலைகள். மலையரசன் ஏற்கெனவே நாலைந்து முறை இங்கு வந்து போயிருப்பதால் புது இடத்தின் தீவிரம் அவனுக்குக் குறைவாயிருந்தது. மலை மேடுகள் முழுக்க ஆங்காங்கு கழுதைகள் கூட்டமாய்க் கட்டிக்கிடந்தன. நிறைய மட்டக்குதிரைகளும் நின்றுகொண்டிருந்தன. எவ்வளவு எடை என்றாலும் காடு மலைப் பாதைகளில் அநாயாசமாக எடுத்துச் செல்ல கழுதைதான் லாயக்கு என்பதால், பெரும்பாலும் இங்குள்ளவர்கள் அதை வாங்கத்தான் மெனக்கெடுவார்கள். மேற்கொண்டு அருகிலிருந்து சவரட்சணை பார்க்க வேண்டிய அவசியமில்லை. கிடைப்பதைத் தின்றுகொண்டு அது பாட்டுக்கு சுமக்கும். இங்கு மாடுகள் வேலைக்கு ஆகாது, மலையேறத் திணறும்.

ஏழு கடல்... ஏழு மலை... - 28

மூக்கையன்தான் கேட்டான் ``கழுத சந்தைக்கு என்ன விஷயமா வந்தீங்க. ஏதும் உருப்படி வாங்கவா? எங்க எஸ்டேட்டுக்கு சாமான் சரக்கு எடுத்திட்டுப் போறதுக்கா? இல்ல, அங்கிட்டு மல ஏறி இறங்கி கேரளா பக்கமிருந்து மொளகு ஏவாரம் ஏதும் பண்ண உத்தேசமா?’’

கொம்பையா ஏதும் அக்கறை காட்டாமல் இருந்தார்.

``ஆள்கள பாத்தா கம்மாகரைக்குப் போயி துணி துவைக்கிற ஆட்கள மாதிரி தெரியல. அதனால வெள்ளாவித் துணி ஏத்திட்டுப் போறதுக்கும் கிடையாது. பின்ன என்ன விஷயமா கழுத?''

``ஏன், சந்தைக்கு வந்தா எதாவது வாங்கிட்டுதான் போகணுமா? நான் ஒரு ஆளப் பாக்கலாம்னு வந்தேன். கோம்பக்காரரு, முருகராசான்னு பேரு. வருசா வருஷம் சந்தைல பாத்துக்குறது. அவ்வளவுதான். அறுபது, எழுபது கழுத வச்சிருக்காரு. போடி மெட்டுல மலைக்கி மேல பொதி எடுத்திட்டுப் போயி அந்தப் பக்கம் குடுத்திட்டு வாரதுதான் வேல. வேலைக்கு ரெண்டு மச்சினன்மார்களையும் பழக்கி விட்ருக்காரு. அவருக்குப் பிள்ளைங்க இல்ல. அதுபோலத்தான் இங்கிட்டு கம்பம் மெட்டுலயும் கழுதைங்க வாங்கிப் போட்டு எஸ்டேட்காரங்களுக்கு சாமான் சட்டு, உப்பு, புளி, மொளகான்னு எடுத்திட்டுப் போறாரு.’’

``ஓ...''

மலையரசன் அதற்குள் சந்தைக்குள் போய் முருகராசாவை விசாரித்துவிட்டு வந்தான். அவனைப் பின்தொடர்ந்து முருகராசாவின் இளைய மச்சினன் வந்தான். ``வாங்க... வாங்க... எப்படி இருக்கீங்க? அவரு மேல மலைக்கி ஏறியிருக்காரு. நேத்துக் காலைல போனவரு. இறங்குற நேரம்தான். காட்டுக்குள்ள சர்க்கார் ஆபீசுக்கு தபால் காயிதம் எடுத்திட்டுப் போயிருக்காரு. அங்க ஏதாவது எழுதி ஒட்டிக் குடுத்தாங்கனா வாங்கிட்டு வந்து இங்க போஸ்ட் ஆபீசுல குடுக்கணும். அப்படியே அவங்களுக்குக் கொஞ்சம் சாமான்களும் எடுத்திட்டுப் போக வேண்டியிருந்துச்சி. சர்க்கார் ஆளுங்க வேலைல, தட்ட முடியாது. நாளபின்ன அவங்க உதவி நமக்கு வேணுமில்லயா.''

``ம். சரி நீ போ. வேலையக் கவனி. நான் கொஞ்சம் அந்தக் கல்திட்டைல உடம்ப சாய்க்குறேன். ஆளு வந்தா சொல்லு.’’

``ஆகட்டுங்க. சாப்பிட எதாவது கொண்டு வரட்டா?''

``அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். சும்மா இங்க இருக்குறேன். இவங்களுக்கு மட்டும் ஏதாவது பசி ஆத்தி விடு.’’

கரியனும் மலையரசனும் முருகராசாவின் மச்சினனைப் பின் தொடர்ந்தார்கள்.

``நீங்களும் போயி பசி ஆறிட்டு வாங்க.''

``பசிக்கலங்க. இருக்கட்டும்.'' மூக்கையாவும் அவரின் அருகில் கல்திட்டையில் தன் உடம்பைக் கிடத்தினான். படுத்த மாத்திரத்துக்கு சட்டென எழுந்தான். “ஏங்க கல்லு என்னமா குளுந்து கெடக்கு. எப்படி முதுகுக்கு ஏதும் வைக்காம படுக்குறீங்க?” தன் உருமால் துண்டை உருவி முதுகுக்கு விரித்தான்.

``ஏங்க, இவங்க ரெண்டு பேரும் உங்க பிள்ளைகளா?''

``இல்லைங்க. என் பிள்ளைங்க மாதிரி.''

``நல்ல பயலுக. எதுலயும் உங்க பேச்சுக்கு மறு பேச்சு இல்லாம இருக்காங்க.''

மூக்கையாவிடமிருந்து அடுத்த வார்த்தை வருவதற்குள் கொம்பையாவிடமிருந்து சத்தமேயில்லை. மூக்கையா எழுந்து பார்த்தான். கண்களை மூடி உறங்கிக்கொண்டிருந்தார்.மூக்கையாவிற்கு உறக்கம் வரவில்லை. மரத்தை வெறும் பார்வை பார்த்துக்கொண்டு படுத்திருந்தான். என்ன நினைத்தானோ, எழுந்து துண்டை உதறி உருமால் கட்டிக்கொண்டு கொம்பையாவைத் தனியே விட்டுவிட்டு மீண்டும் சந்தைப் பாதைக்கு நடந்து சென்றான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 28

யாரோ நடந்து வரும் காலடி சப்தம் அவரின் அருகில் வந்து நின்றது. கொம்பையா கண்களைத் திறக்காமலேயே கேட்டார். ``என்னா முருகராசா, எப்படி இருக்கீரு?''

``நல்லா இருக்கேன். கண்ணத் திறக்காமலேயே எப்படி வாரது நாந்தேன்னு தெரிஞ்சது?''

``நடக்குற சத்தத்த வெச்சு யாருன்னு தெரியாதா?'' கண்களைத் திறந்து பார்த்து, குறுஞ்சிரிப்போடு சொன்னார். மலையரசனும் கரியனும் அவர் தலைமாட்டில் அமர்ந்திருந்தார்கள்.

``உம்ம நட சப்தமே இல்லாத நட. மான நெருங்கிப் போயி அடிக்குற புலி மாதிரி. காட்டுக்குள்ளயும், மலமேலயும் கழுதையோட போறப்போ காட்டு விலங்கு அடிச்சிருமோன்னு சத்தமே வராம நடந்து நடந்து உம்ம காலுல குரல் இல்லாம ஊமையாட்டம் ஆகிடுச்சு போல.''

``அது நெசந்தான்.’’ முருகராசா தொடர்ந்தார். ``நேத்தே எதிர்பாத்தேன். எப்பவும் மொத நா காலையிலயே வார மனுஷன்... ஆளக் காணுமேன்னு! சின்னவன்கிட்ட சொல்லிட்டுப் போனேன், வந்தா இருக்கச் சொல்லுன்னு.''

``மலையரசன் விருதுநகர் பஞ்சுப்பேட்டைக்கு மாடு கொண்டாந்து விட வந்துட்டான். அவனைக் கூட்டிக்கிட்டுக் கிளம்ப தாமதமாகிடுச்சி.''

``செரி.''

மலையரசனிடம் கண்ணைக் காட்டினார். மலையரசன் கரியனைத் தனியே அழைத்துக்கொண்டு போனான். இருவர் மட்டும் பாறைத்திட்டில் அமர்ந்திருந்தார்கள்.

ஏழு கடல்... ஏழு மலை... - 28

``இன்னும் நாலஞ்சி நாளைக்கி இங்குன இருப்பீகளா?''

``இல்ல. ஓங்கோல் போறேன். அக்கய்யா வீட்டுக்கு.''

முருகராசா சிறிய கலக்கத்துடன் அவரைப் பார்த்தார். ``அப்போ எல்லாப் பணமும் உடனே வேணுமா?''

``ஆமா முருகு. இருக்குல்ல? நஞ்சம்மாக்கு ஏற்கெனவே குடுத்த வாக்கு... பணம் இருக்குல்ல?''

``இருக்கு. ஒரு பிரச்னையும் இல்ல.''

``ம்… வீட்ல எல்லாரும் எப்படியிருக்காங்க?''

``இருக்காக. பெரிய கிழவி மட்டும் அப்பப்போ விழுந்து படுத்துக்குவா. பத்தியம், வைத்தியம்னு ஏதும் பாத்துக்க மாட்டா. வீரபாண்டி கோயிலு தின்னூறுதான். நெத்தில சாத்திக்கிட்டு வாயில கொஞ்சம் அள்ளிப் போட்டுக்கிட்டுப் படுத்துக்குவா. சம்சாரம் எவ்வளவு சாப்பிட்டாலும் அதே மாதிரி ஈர்க்குச்சி மாதிரி இருக்கா. திசைக்கு எழுபது கழுதைன்னு ரெண்டு திசைக்கும் தினம் மல ஏறுது. காசு பணத்துக்கு ஒரு குறைச்சலுமில்ல. இடம் ஒண்ணு கிரையம் பண்ணி தொழுவம் கட்டிக்கிட்டு இருக்கேன். கீத்து வேஞ்சிவிட்டா மழ வெயிலுக்கு பாவம் இந்தக் கழுதைங்க நின்னுக்குமேன்னு மொத மொத நீங்க குடுத்த பணத்துல ஆரம்பிச்சது. ரெண்டு வீடு கட்டிட்டேன். பிள்ள இல்லாக் குறைக்கி மச்சினன்மாரு ரெண்டு பேரும் அப்படி பாத்துக்கிறாய்ங்க. இந்த வருஷம் சின்னவனுக்குக் கல்யாணம் செய்யணும். அவ்வளவுதான். அன்னைக்கி மட்டும் நீங்க அந்தப் பணம் கொடுக்கலன்னா இன்னிக்கி நான்லாம் ஆளே இல்ல.’’

``அப்படிலாம் சொல்லக் கூடாது. பணம் இருந்தவங்கல்லாம் முன்னேறிட்டாங்களா? நீரு நல்லா கருத்தா உழச்சி ஒன்ன நாலாக்கிருக்கீரு. திரும்பக் கேக்குறேன்னு தப்பா எடுக்காதீரும். மொத்தப் பணத்தையும் இன்னிக்கி குடுத்திர முடியுமா?’’

``தாராளமா.’’

``ம்... நான் ஒரு நாடோடிப் பய. எனக்குக் காசு, பணம் தேவையில்ல. ரெண்டு வாயி சோத்துக்கு எங்குனயாச்சும் வழி கிடச்சிரும். ஆனா ஒரு வாக்கு குடுத்துட்டேன்ல. அதான் அந்த வாக்க சொன்னபடி காப்பாத்திடணும்னு சேருற பணத்தெல்லாம் உம்மகிட்ட குடுத்து வெச்சேன். இந்த உலகத்துல உம்மப்போல நம்பிக்கையான மனுசங்க ரெம்ப குறைவு.''

``ம்.''

``இந்தப் பயலுக ரெண்டு பேருக்கும் சேத்து எதாவது வழி பண்ணணும். என்கூடவே திரியுறாய்ங்க.''

``ம்.''

``நான் இன்னிக்கே இங்க இருந்து கிளம்பலாம்னு இருக்கேன். நான் மட்டும்தான். பயலுக நாலஞ்சி நாளைக்கி உங்க வீட்ல கஞ்சி குடிக்கட்டும். வார புதன்ல அந்தியூர்ச் சந்தைக்குக் கிளம்பிடுவானுக.''

``கேக்குறேன்னு தப்பா எடுத்துக்கக் கூடாது. இன்னும் பழைய பிரச்சன அப்படியேதான் இருக்கா?''

``தெரியல. போயி பாத்தாத்தான் தெரியும். நெருப்பு முழுக்க அணஞ்சிடுச்சா... இன்னும் புகஞ்சிக்கிட்டு இருக்கான்னு.''

``எனக்கென்னமோ பயல்கள கூட்டிட்டுப் போனா சரியா இருக்கும்னு தோணுது.''

``இல்ல, வேண்டாம். என்னோட பிரச்னைய நான்தான் போயி சரி செய்யணும். தேவையில்லாம அந்தப் பசங்கள மாட்டிவிட வேண்டாம்னு நினைக்கிறேன்.’’

``பணம் கோம்பைல வீட்ல போயிதான் எடுக்கணும்.''

``சரி, போகலாம். பசங்கள அங்க வீட்ல விட்டுட்டு நான் அப்படியே ஓங்கோல் கிளம்பிடுறேன்.''

``பசங்க இங்க இருக்கட்டும். பொழுதடைய மச்சினனுங்க கூட்டிகிட்டு வந்திடுவாங்க.''

எதோ யோசனையாய் நின்றார். ``செரி. நாம போகலாம்.''

அவர்கள் கிளம்ப உத்தேசித்து நாலெட்டு வைப்பதற்குள் எங்கிருந்தோ குளித்துவிட்டு மூக்கையன் எதிரில் வந்தான். மூக்கையனைப் பார்த்த நொடிக்கு முருகராசா அதிர்ந்து போனார். உதடு விரியாமல் சிறிய குரலில் பேசினார். ``இவன் பெரிய களவாணிப்பய. பயங்கரமான ஆளு. பணமோ நகையோ குடுக்கலன்னா கொன்னுடுவான். இவன் என்னாத்துக்கு இங்க வாரான்னு தெரியல.''

மூக்கையன் கொம்பையாவிடம், ``கசகசன்னு இருந்துச்சி, அதான் ஆத்துல ரெண்டு முங்கு போட்டுட்டு வரலாம்னு போன்னேன் '' என்றான்.

``செரி செரி. நான் இவரோட கோம்ப வரைக்கும் போயிட்டு வந்திடுறேன். இவர் வீடு வரைக்கும் ஒரு சோலி இருக்கு.''

``ஆகட்டும். நான் வேணும்னா கூட வரட்டுமா? நான் கட்டுனவ அங்கதான் இருக்கா. நீங்க ஒரு வார்த்தை பேசி விட்டீங்கன்னா, குடும்பம் நடத்த கூட வந்துருவா. தனியா வாழ எப்படியோ இருக்கு.''

``நான் போயிட்டு வந்திட்டு, என்னன்னு பேசி விடுறேன்.''

``ஆகட்டுங்க.''

முருகராசா பேயறைந்ததுபோல் இருந்தார்.

மூக்கையன் கொம்பையாவைத் தனியே அழைத்தான். ``நான் எவ்வளவு பெரிய திருட்டுப் பய. என்ன விட பெரிய திருட்டுப் பயலுக ரெண்டு பேரு இங்க சந்தைக்குள்ள திரியுறாய்ங்க. இப்பத்தான் பாத்திட்டு வாரேன்.''

``நமக்கெதுக்கு அதெல்லாம்...''

``என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. அந்தத் திருட்டுப் பயலுககூடத்தான் உம்ம மகேய்ங்க நின்னு பேசிக்கிட்டு இருந்தாய்ங்க. அதான் கண்டிச்சி வெய்ங்கன்னு கூப்பிட்டேன்.''

கொம்பையா குழப்பமடைந்தார். ``நீ யாரச் சொல்ற?'' இருவரும் பேசியபடியே சிறிது தூரம் நடந்தார்கள்.

``முகரைய கிழக்கால வெச்சிக்கிட்டு இடது கண்ண மட்டும் மேற்க வச்சி பாரும். தலையில சிவப்பு உருமா கட்டிட்டு ரெண்டு பேரு திரியுறாங்க பாருங்க.''

``உண்மையாவா... இந்தப் பயலுகளா?''

``ஆமா. செத்துப்போன என் மக மேல சத்தியமா... மலைமேல கழுதைல போற பொதிகள கொள்ளையடிக்கிறவய்ங்க.''

கொம்பையாவிற்குக் குழப்பமாயிருந்தது. முருகராசாவின் மச்சினன்கள் செய்வது முருகராசாவிற்குத் தெரியாமல் இருக்குமா?

``ம். செரி நீ இங்க இரு. நான் போயிட்டு வந்துடுறேன்.’’

``செரிங்க.''

முருகராசா தன் மூத்த மச்சினனை அழைத்து வண்டி கட்டுமாறு சொன்னார். அடுத்த நொடியே இரண்டு ரேக்ளா வண்டிகள் தயாராய் வந்து நின்றன.

கொம்பையா பெருமூச்சிட்டவாறு ஒரு வண்டியில் ஏறிக்கொண்டார். வண்டி கிளம்பியது.கிளம்பும்போது கரியனையும் மலையரசனையும் பார்த்துக்கொண்டே போனார். கரியன் நாய்க்கு சோறு போட்டுக்கொண்டிருந்தான். அவர் கை தன் இடுப்பில் கட்டியிருக்கும் இடைவாரில் சூரிக் கத்தியைத் தொட்டு சரிபார்த்துக்கொண்டது. கொம்பையா அமர்ந்திருக்கும் ரேக்ளா வண்டியை முருகராசா ஓட்ட, நல்ல பந்தய மாடுகள் ஓட்டமாய் இழுத்துக்கொண்டு ஓடின. அவர்களின் பின்னால் அவரின் மூத்த மச்சினன் பாதுகாப்புக்கு வருவதுபோல் தொடர்ந்து வந்தான்.

உச்சி வெயிலுக்கு இரண்டு வண்டிகளும் கோம்பைக்கு முன்னால் ஒரு மண் சாலையில் இறங்கி ஓடியது. பெரும்பாலும் பாதையை மரங்கள் மூடியிருந்தன. கொம்பையா எல்லாப் பக்கமும் பார்வையை ஓட்டியபடி அமைதியாக அமர்ந்திருந்தார். மண் சாலை முடியுமிடத்தில் ஒற்றைத்தட்டு நாட்டு ஓடு வேயப்பட்ட பெரிய மண் வீடிருந்தது. அதன்மேல் செம்மண் பூச்சு. பூச்சு உலர்ந்து பாளம் பாளமாய் கீறல் கோடுகள் தெரிந்தன. தரையெல்லாம் செம்மண் புழுதியாயிருந்தது. சுற்றிலும் பனைமட்டைகளை வெட்டி வேலிப்படல் அடைத்திருந்தார்கள்.

வேலிப்படலை யாரோ திறந்து விட, வண்டி உள்ளே வந்தது. கழுதைக் கொட்டடியாக இருக்க வாய்ப்புண்டு. கொம்பையா நாலாதிக்கிலும் மிகுந்த கவனமாகப் பார்த்தபடி வண்டியை விட்டு இறங்க ஆயத்தமானார். வண்டி நின்றது. இரண்டாம் வண்டி உள்ளே வந்ததும் வேலிப் படலை அடைத்தார்கள். முருகராசாவைப் பார்த்ததும் மணல் நிற நாயொன்று வாலாட்டிக்கொண்டு குரைத்தது. அது குரைக்கவும் அங்கிருந்த மற்ற எல்லா நாய்களும் ஒன்று சேர்ந்து குரைக்கத் துவங்கின. முருகராசாவின் மச்சினன் எல்லா நாய்களையும் கட்டை அவிழ்த்து விடச் சொன்னான். எல்லா நாய்களும் நாக்கைத் தொங்க விட்டபடியே புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஓடி வந்தன. கொம்பையா வண்டியிலிருந்து கீழே இறங்கினார். தூரத்தில் நாய்கள் ஓடி வருவது தெரியாமல் மறைந்து போகும் அளவிற்குப் புழுதி மூடி மறைந்திருந்தது. சட்டென எல்லா நாய்களும் புழுதியிலிருந்து விலகி மிக அருகில் வந்துகொண்டிருந்தன. கொம்பையா ஒரு பெருமூச்சு விட்டபடியே எதையும் எதிர்கொள்ளத் தயாராயிருந்தார்.‘`பயணத்தில் உன்னைச் சந்திப்பதற்காக யாரோ காத்திருக்கிறார்கள்.’’

மகன் வழி (1978 - வேனல் காலம் )

‘`நம்மை பயணம் வழிநடத்தும்.’’

~ பராரிகள்

ஏழு கடல்... ஏழு மலை... - 28

சூளைக் கூலிகள் எல்லோரும் ஒருசேரக் கூச்சலிட்டபடியே தங்கள் வீடுகளுக்குத் தாங்களே நெருப்பிடத் துவங்கியதும் கொத்தாரின் ஆட்கள் மிரண்டுபோனார்கள். மற்ற சூளைக் கூலிகளும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தப்பித்துப் போய்விட எண்ணி எல்லோரும் அந்தச் சிறு உடைப்பின் அருகில் ஓடி வந்தார்கள். இவ்வளவு வருடத்தின் துயரிலிருந்து எப்படியாவது தப்பி ஓடிவிட வேண்டுமென்ற ஆர்வம் எல்லோர் முகத்திலும் தெரிந்தது. கொத்தாரின் ஆட்கள் சிலர் வேட்டைத் துப்பாக்கிகள் இருக்கும் இடத்திற்கு ஓடிப் போனார்கள். சூளைக் கூலிகள் வெளியேறி விட்டால் முதலாளிமார்கள் அவர்களைக் கொன்று புதைத்துவிடுவார்கள். துப்பாக்கிகளிருக்கும் அறை பூட்டியிருந்தது. கொத்தாரின் ஆட்கள் வெளியேறுபவர்களைப் பெரிய இரும்பு ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் இந்த உடலில் உயிர்மட்டும் இருந்தால் போதுமென்று அந்த இடத்தை விட்டு வெளியேற வாய்ப்பில்லாமல் விலகி நின்றுகொண்டார்கள். நிறைய பேர் தன் உயிர் போனாலும் பரவாயில்லை, தன் குடும்பத்தில் யாராவது ஒருவர் பிழைத்திருந்தால் போதுமென்று சொல்லி கோட்டைச் சுவர் நோக்கி முந்திக்கொண்டு நின்றார்கள். ஏற்கெனவே அறுபது எழுபது பேர் வெளியேறிப் போயிருந்தார்கள்.

கொத்தாரின் ஆட்கள் சூரனை வெறிகொண்டு தேடினார்கள். அவனால்தான் எல்லாம் நடந்தன. சூரன் கோட்டைச் சுவர் ஓரமாக பரமசுந்தரியைக் கையில் பிடித்துக்கொண்டு கூட்டத்திற்குள் நின்றுகொண்டிருந்தான். வேட்டைத் துப்பாக்கிகள் இருக்கும் அறையை உடைத்துக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் பதினொன்றாம் சூளையின் பக்கமிருந்து வேட்டைத் துப்பாக்கியால் வரிசையாய் சுடும் சப்தம் கேட்டது. சூரன் கூட்டத்திற்குள்ளிருந்து கத்தினான்.

‘‘எல்லாரும் இங்கயே கிடந்து சாகப் போறீங்களா, இல்ல, வெளிய போயி வாழப் போறீங்களா? தள்ளிட்டு ஓடுங்க.’’

ஏழு கடல்... ஏழு மலை... - 28

எல்லோரும் வாசலில் நிற்கும் கொத்தாரின் ஆட்களை பலம் கொண்ட மட்டும் தள்ளினார்கள். கொத்தாரின் ஆட்கள் நாற்பது ஐம்பது பேர் இருந்தார்கள். துப்பாக்கி சத்தம் அருகில் கேட்கத் தொடங்கியது. இருட்டுக்குள் ஆங்காங்கே துப்பாக்கி சுடும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டேயிருந்தது.

அவர்கள் அருகில் நெருங்க நெருங்க எல்லோருக்குள்ளும் பயம் பிடித்துக்கொண்டது. இப்போது பலம்கொண்டு நெருக்கித் தள்ளினார்கள். கொத்தாரின் ஆட்கள் துப்பாக்கி வைத்திருப்பவர்களை இங்கே அழைத்தார்கள். அதற்குள் ஆட்கள் சுவரைத் தாண்டி கொத்தாக முந்நூறு பேருக்கும் மேலாக வெளியே மொது மொதுவெனச் சரிந்து விழுந்தார்கள். எழுந்து தப்பித்தால் போதுமென்று கண்மண் தெரியாமல் எல்லாத் திசைக்கும் சிதறி ஓடினார்கள். இருட்டுக்குள் எல்லாத் திசையிலும் கருவேலமும், இலந்தை முட்களும் வளர்ந்து கிடந்தன. மூன்று கிலோமீட்டர் வரைக்கும் எந்தக் குடியிருப்புகளுமில்லை. சுற்றிலும் இதைப்போல முள்மரங்கள்தான்.

சூரன் பரமசுந்தரியைத் தரதரவென இழுத்துக்கொண்டு மண்பாதையின் மீது ஓடிக்கொண்டிருந்தான். தூரத்தில் துப்பாக்கிக்காரர்கள் அங்கங்கு சில ஆட்களை மடக்கி சுட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த இடமே சுடுகாடு போலாகிவிட்டது. இறந்தவர்களை உடனுக்குடனே உள்ளே இழுத்துப் போனார்கள். இந்த இரவு சிலருக்கு மோசமாகவும், தப்பித்தவர்களுக்குப் பதற்றமாகவும் அமைந்துவிட்டது. தப்பித்துச் செல்பவர்கள் தங்கள் உறவுகளின் பெயர்களைச் சொல்லி அழைத்தபடி போனார்கள். சிலருக்கு எதிர்க்குரல் வந்தது. எந்த எதிர்க்குரலும் வராத ஒரு சிலர் செத்தாலும் தம் உறவுகளோடு சாக வேண்டுமென்றெண்ணி மீண்டும் சூளை நோக்கித் திரும்பிப் போனார்கள்.

பரமசுந்தரி காயாம்பூ பெயர் சொல்லியும், தன் அப்பாவின் பெயர் சொல்லியும் கத்தி அழைத்தபடியே ஓடினாள். சிறிது தூரத்தில் காயாம்பூவின் எதிர்க்குரல் கேட்டது.

பரமசுந்தரி, ``காயாம்பூ நீ ஓடிக்கிட்டே இரு. நிக்காத.’’ இருவரும் தூரதூரமாய்க் கத்தியபடியே ஓடினார்கள்.

``அக்கா, அப்பா உன்கூடவா இருக்குது?'' பரமசுந்தரி ஒரு நிமிடம் நின்றுவிட்டாள். ``உன்கூட இல்லயா?'' காயாம்பூவும் நின்று விட்டாள். ``ஐயோ அப்பா’’ பரமசுந்தரி சூரனின் கையை உதறிவிட்டு மீண்டும் சூலை இருக்கும் திசைக்கு ஓடினாள். சூரன் இரண்டு எட்டுப் பாய்ச்சலில் அவளைப் பிடித்து இழுத்து வந்தான். ‘‘மொதல்ல இங்க இருந்து போவோம். நாளைக்கி நிச்சயம் கண்டுபிடிச்சிரலாம்.’’

வேறு வழியில்லாமல் பரமசுந்தரியும் காயாம்பூவும் முன்னோக்கி ஓடினார்கள். சூரன்தான் கவனித்தான், மாடசாமி எதிர் திசையில் தன் மனைவி பெயரை உரக்கக் கத்தியபடி முட்டும் அழுகையுடன் வந்து கொண்டிருந்தார்.

``அவங்கள நாளைக்கி தேடிக்கலாம். மொத நீங்க இங்க இருந்து தப்பிக்கணும்.’’

``அதெல்லாம் இல்ல, நான் போகணும்.’’ மாடசாமி சூளை நோக்கித் தன் மனைவியின் பெயரைச் சொல்லிக் கத்தியபடியே ஓடினார். முப்பது நாற்பது அடிதான் ஓடியிருப்பார். எதிர் திசையில் மாடசாமியின் மனைவி கத்தியபடியே ஓடிவந்தார். சூரன் மாடசாமியைக் கத்தி அழைத்தான். ``மாடசாமி அண்ணன் உங்க மனைவி இங்கதான் இருக்காங்க. அங்க போகாதீங்க. வாங்க.''

மாடசாமி எதிர்க்குரல் கொடுத்தார். ``தம்பி வேகமா தப்பிச்சி ஓடிடுங்க. பக்கத்துல வந்துட்டானுங்க’’ அந்தக் குரல் பலகீனமாயிருந்தது. மிக அருகில் வரிசையாய் துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டது. அதன் பின் மாடசாமியின் குரல் கேட்கவில்லை.

~ ஓடும்