சினிமா
Published:Updated:

பூவாத்தாவரங்கள் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

சிறுகதை : பாரதிபாலன்

வெயில்... உக்கிரமான வெயில். சித்திரை மாதத்து உச்சி வெயில் போலத் தகித்தது. ஒரு ஈ காக்காவைக் காணவில்லை. மரங்கள் அசைவின்றி, அப்படியே நின்றிருந்தன. ஒரு கிளை அசையவில்லை. ஒரு இலை அசையவில்லை. மரம், செடிகொடிகள் எல்லாம்கூட அந்த வெக்கையில் அப்படியே வெம்பிப்போய் நின்றன. தெருவில் கால் ஊன்ற முடியவில்லை. சூளையில் கால் வைத்தாற்போல் தகித்தது. குஞ்சம்மாளும், சுப்புத்தாயும் அந்த வெயிலுக்கு பயந்து, ராமையா வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, அந்த வெயிலையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

தெரு நாய் ஒன்று சுப்பையாவின் கட்டை வண்டிக்கு அடியில், முன்னங்காலால் பரபரவென்று ஒரு பள்ளத்தைத் தோண்டி, அதில் படுத்துக்கொண்டது. வண்டிக்கடியில் தேங்கிக் கிடந்தது சிறிது நிழல். அந்த நாய் படுத்துக் கொண்டு நாக்கை நீளமாக வெளியே தள்ளி, வயிறு மேலும் கீழும் ஏறி இறங்க இரைத்துக் கொண்டிருந்தது. தூரத்தில், இந்த வேகாத வெயிலில் யாரோ ஓடி வருவதுபோலத் தெரிந்தது. அந்த உருவம் நெருங்க நெருங்க குஞ்சம்மாளின் தங்கச்சி சுரும்பாயி சாயல் தெரிந்தது. அவள் தானா என்று அடையாளம் காண்பதற்குள், ஓட்டமும் நடையுமாக வந்துவிட்டாள். அவள் உடல் பதறிற்று.

“யக்காவ், நம்ம பெருமாயி புருசனை போட்டு அடிக்குறாவுக. சம்முகம் முக்குகிட்ட, ரோட்டுலெ போட்டு, சன்னப்பய அடியா...”

“எதுக்காம் டீ?”

“நான் என்னான்னு காங்கட்டும்?”

“அது ஏன்னு கேக்க அங்குனக்குள்ள ஒரு நாதியும் இல்லாமலா போச்சு? நீ கிடந்து இப்படி வேகாத வெயில்லெ ஓடியாறவ!”

“ஏழு எட்டு எளந்தாரிப் பயக. சன்னப்பய அடியா...! எனக்கே ஈரக்குலை நடுங்கிப்போச்சு...”

“அங்குன வேற ஆம்பளை ஆளுக இல்லையா? ஒன் வூட்டு ஆம்பிளை?”

பூவாத்தாவரங்கள் - சிறுகதை

“பொச கெட்ட பய எங்கிட்டுப் போனானோ!”

“இப்ப நா என்னாங்கட்டும்?”

“நீ என்ன பண்ணுவ?”

“பாவமா இருக்கு! பெருமாயியும் இல்லை. களைக்குப் போறேனுட்டுப் போனா. பொழுதுக்குத்தான் திரும்புவா.”

“வா, போய்ப் பாத்துப்பிட்டு வர்லாம்.”

“தாட்டியமான ஆம்பளை இருந்தாதான் சரிப்பட்டு வரும்.”

“எங்க வூட்டு ஆம்பளை எங்குன போயி குத்தவெச்சு ஒக்காந்து கெடக்குதோ...”

“போட்டு நொக்குறானுவளே...!”

“வா. என்னாண்டுதேன் போய்க் கேப்போம்.”

விருட்டென்று எழுந்திருக்க முடிந்ததே தவிர, தெருவில் கால் ஊன்ற முடியவில்லை. சுரும்பாயி எப்படித்தான் இத்தனை தூரம் வெறுங்காலோடு ஓடி வந்தாளோ!

சண்முகம் டீக்கடை முக்கில் ஒரு கூட்டம்; நடுவயதுக்காரர்களும் வயசாளிகளும் மட்டும் அரச மர நிழலில் கூடி நின்றிருந்தனர். வேனல் காற்று. குஞ்சம்மாளும் சுப்புத்தாயும், கூடவே சுரும்பாயியும் வந்தனர். அந்த அரச மரத்திற்கு மேற்கே, அந்தச் சுழிவான இடத்தில் வைத்துத்தான் பெருமாயி புருசன் காசியைப் போட்டு அடித்திருக்கிறார்கள். அதற்கான தடமே இல்லாமல் அந்த இடம் இருந்தது.

`‘எங்க காங்கலெ?’’

`‘யார ஆத்தா தேடுறீய?’’

‘`மனுஷன, போட்டு அடிக்குறாவுகன்னு இவ தான் ஓடியாந்தா.’’

“போயாச்சு...”

“போயாச்சுனா?”

‘‘அடிச்சுத் தூக்கிட்டுப் போயிட்டானுவ ஆத்தா.’’

‘‘என்னடா அசால்டா பேசுறவன். சும்மாவா வுட்டீக?’’

‘‘என்ன செய்வியாம்?”

‘‘ஏன்னு கேக்க ஒரு நாதியுமா இல்லாமப்போச்சு. யாருடா அவீங்க?’’

பூவாத்தாவரங்கள் - சிறுகதை

‘‘ஏழு எட்டு பயக வந்தானுவ. காசிப்பயகிட்ட என்னவோ ஒரு வடியாப் பேசினாங்க. இவனும் ஏதோ ஓங்கிப் பேசினான். அப்புறம் அவிங்க கைய நீட்டிட்டானுவ. அந்த நேரம் பாத்து, இங்குனக்குள்ள நம்ம பயக ஒருத்தனும் தட்டுப்படலெ. ரெண்டு மூணு வயசாளிகதான். சரி என்னான்னு கேப்போம்ங்குற துக்குள்ள, ஒரே வாக்குலெ அடிச்சுத் தூக்கிட்டுப் போயிட்டானுக.”

‘‘நீங்க புளியங்கா புடுங்கிகிட்டு இருந்தீங்களாக்கும்!’’

‘‘சுதாரிக்கிறதுக்குள்ள மோட்டார் சைக்கிள்லெ வெச்சு கொண்டு போயிட்டானுவ.’’

“யாராம் அவீங்க..?”

‘‘ஓங்குதாங்கான பயலுக’’ என்று வடக்குத் திசையை நோக்கிக் கை நீட்டினார். சுரும்பாயி நெஞ்சில் அடித்துக்கொண்டே ‘நான் என்னாங்கட்டும்’ என்று அலறினாள். அவள் உடல் நடுங்கிற்று.

பெருமாயி இரவெல்லாம் தூங்கவில்லை. தெருத்தெருவாய் அலைந்தாள்.

பெருமாயி புருசன் காசிக்கு ரெத்தினசாமி தோட்டத்தில் வேலை. வேலை என்றால் களையெடுப்பு, மருந்தடிப்பு, தண்ணீர் கட்டுவது, பம்பு செட் பழுதுபார்ப்பது என்று பல வேலைகள். இன்னதுதான் என்று சொல்ல முடியாது. சில சமயம் எலெக்ட்ரிக்கல் வேலையைக்கூட இழுத்துப்போட்டுச் செய்வான். இதெல்லாம் அன்றாடம் வயிற்றுப் பிழைப்பிற்குச் செய்கின்ற வேலை. அவன் மனதிற்காகச் செய்கிற வேலை என்று ஒன்று உண்டு. அது அவனை நிறைக்கிற வேலை! அது பொழுது இறங்கியதும் ஓம் முருகா டூரிங் கொட்டாயில் சினிமா டிக்கெட் கிழிப்பது. வாடிவாசல் மாதிரியான மிகக் குறுகலாக சவுக்குக் கம்பால் கட்டப்பட்ட பாதை. அந்தப் பாதைக்குள் இருந்து ஒரு கூட்டம் பொங்கி வரும்! திமுதிமுவென்று ஒன்றை ஒன்று உரசிக் கொண்டும், தள்ளிக்கொண்டும் புது வெள்ளம் போலப் பொங்கும். ஜனக்கூட்டத்தின் முதுகைத் தள்ளிவிட்டுக்கொண்டே, சினிமா டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்து உள்ளே அனுப்ப வேண்டும்.

இதற்கு அவனுக்குச் சம்பளம் கிடைக்காது; ஆனால் மிகப்பெரிய கௌரவம்; பார்க்கின்ற எல்லோரும் மரியாதை காட்டுவார்கள்; உள்ளூரில் அதற்கென்று ஒரு புகழ். பெண்கள் கூட நின்று பேசுவார்கள். ‘அடுத்த படம் என்னாது?’ என்று ஆவல் காட்டுவார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும்? கொட்டாயில் ஓசியில் சோடா குடிக்கலாம். முறுக்கு, கடலை திங்கலாம்! எப்பவாவது புரோட்டாவும் சால்னாவும் கிடைக்கும்; தீபாவளி, பொங்கல், ஆடி என்று கூட்டம் மொய்க்கும்போது மட்டும் காசு கிடைக்கும்; ஆனாலும் அவன் கிளர்ச்சியோடும் மன மலர்ச்சியோடும் செய்கின்ற வேலை இது.

ந்தக் காசிப் பயலுக்கு சின்ன வயசிலே சினிமா என்றால் உசிரு. ஒரு லயிப்பு! கஞ்சி தண்ணிகூடத் தேவையில்லை. அப்படியே உயிரை விட்டுவிடுவான். எட்டு, ஒன்பது மைல் தூரம் நடந்து மேலப்பாளையம் போய்த்தான் படம் பார்க்க முடியும்! அதுவும் தீபாவளி, பொங்கல், ஆடி போன்ற விசேஷ நாள்களில் தான் கூட்டாளிகள் சேர்வார்கள். தன்னந் தனியாகக்கூட நடந்து போயிருக்கிறான்.

கூட்டுமாட்டு வண்டியில் இரண்டு பக்கங்களிலும் பெரிய ஓலைத் தட்டி கட்டி, அதில் சினிமா போஸ்டர் ஓட்டி, தெருத் தெருவாய் நோட்டீஸ் கொடுத்துக்கொண்டு வருவார்கள். கூம்பு வடிவிலான குழாய் ரேடியோ கூப்பாடு போட்டு ஊரையே குதூகலமாக்கி விடும். சுளீரென்று வெந்நீரை ஊற்றிவிட்டாற் போல் ஊரே வெடுக்கென்று விழித்து எழுந்து கொள்ளும். வாண்டுகளும் குஞ்சுகளும் குளுவான்களும்தான் என்றில்லை. இளந்தாரிகளுக்கும் குமரிகளுக்கும்கூட ரத்த ஓட்டம் கூடிவிடும். அருள் வந்தாற்போல் ஓட்டமும் நடையுமாக அந்த வண்டிக்குப் பின்னாடியே ஓடும். அவன் தருகிற அந்த நோட்டீஸை வாங்கப் படுகின்ற பாடு இருக்கிறதே... ஏதோ கோயில் பிரசாதத்தை இரு கைகளாலும் ஏந்திக்கொள்கிறாற்போல்தான் அதை ஏந்திக்கொண்டு அலையும். அதை அபகரிக்க ஒரு கூட்டம்.

வண்டி வடக்குத் தெரு, மேலத் தெரு, ஓடைத் தெரு காலனி என்று ஒரு ரவுண்டு அடித்துவிட்டு அடுத்த ஊருக்குக் கிளம்பிவிடும். அதுவரையிலும் காசி அது பின்னாடியேதான் நகர்ந்து செல்வான். கிழக்கு ஓடைப் பள்ளத்தில் வண்டி மறையவும்தான் திரும்புவான்.

வண்டி வடக்குத் தெருவிற்கு வரும்போது மட்டும் காசிக்கு மனசு படபடவென்று உதறல் எடுக்கும். ஒருவிதமான உள்நடுக்கம்! பாட்டுச் சத்தம் கேட்டதும் பூவரசி வாசலுக்கு ஓடிவந்து விடுவாள். வெக்கத்தில் தாவணி நுனியையோ, பாவாடை நாடாவையோ எடுத்துப் பல்லில் வைத்துக் கடித்துக்கொண்டிருப்பாள்.

சற்று விலகி, ஒதுங்கி நின்றுகொள்வாள். வண்டி நகர்ந்ததும் குதித்துக் குதித்துப் பின்னாலேயே ஓடி வருவாள். அவளுக்கு எப்படியாவது கையில் ஒரு நோட்டீஸைப் பிடித்துவிட வேண்டும்; வண்ணத்துப்பூச்சியைப் பிடிக்கிற மாதிரி காற்றில் அவள் கைகள் அலையும். அதுவும் ஊதாக்கலர். சண்முகம் டீக்கடை முக்கு அருகில் வந்ததும், வண்டிக்காரன் வண்டியை நிறுத்திவிடுவான். பாடல் ஒலி உக்கிரம் கொள்ளும். ஒரு கொத்து நோட்டீஸை அப்படியே அள்ளி, வானம் நோக்கி விசிறி எறிந்துவிடுவான். ஊதா, பச்சை, மஞ்சள், ரோஸ் என்று பல வண்ணங்களில் அது காற்றில் அசைந்து, நெளிந்து, வளைந்து மெல்ல சிதறித் தரையிறங்கும். மொத்தக் கூட்டமும் அதை அள்ள அந்தப் புழுதி மண்ணில் விழுந்து புரளும்.

பூவரசி அப்போதும் ஒதுங்கித்தான் இருப்பாள். சாக்கடைப் பாலத்துப் பலகையை ஒட்டினாற்போல் உள்ள பூவரச மர நிழலில் நின்றுவிடுவாள். அவள் கண்கள் ஈரம் மிதந்து பளபளவென்று பளிங்கு போலப் பிரகாசம் கொள்ளும். மனம் பரபரவென்று இருக்கும். ஒரு நோட்டீஸாவது தன்னை நோக்கிக் காற்றில் நகர்ந்து வராதா? என்று கண்கள் சுழல, கைகள் பரபரக்க நின்றிருப்பாள். ‘லபக்’ கென்று தாவி கவ்விப் பிடித்து, அவள் கைகளில் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும் என்று வெறியாகிவிடும். அவளும் அவனிடம் இருந்து அதை ஆவல் பொங்க வாங்கித் தன் தாவணிக்குள் புதைத்துக்கொள்ள வேண்டும் என்று ஏக்கமாகத்தான் இருப்பாள். இருள் நேரம் என்றால் கூடப் பரவாயில்லை; அதுவும் இந்த வெளிச்சத்தில்!

ஊர் நிலைமை சீராக இல்லை. சீக்குப் பிடித்த மனம். காசி இந்தத் தெருவிற்குள், இத்தனை ஸ்வாதினமாக வந்ததே பெரிசு. ஏதாவது ஒரு விஷக் கண்ணில் பட்டிருந்தால்..? இந்தக் கூச்சல் குதூகலத்தில், இந்தப் புழுதிப் புகையில் எதுவும் பழுதாகத் தெரிந்துவிடவில்லை. காசி ஏழாம் வகுப்பு வரை, பூவரசியோடுதான் படித்தான். படித்தான் என்றால் வகுப்பில் உட்கார்ந்திருந்தான். ஓடைப் பள்ளிக் கூடம். ஏழாம் வகுப்புப் பரீட்சை நடந்து கொண்டிருக்கும்போதே பூவரசி குத்தவைத்து விட்டாள். அதற்குப் பிற்பாடு அவளைக் காண முடியவில்லை.

அதோடு அவ்வளவு தான். அதற்குப் பிற்பாடு அவள் தட்டுப்படவே இல்லை. காசியும் உள் காய்ச்சலாகவேதான் கிடந்தான். அவள் உருவமும் நினைப்பும் உள்ளே விழுந்து ஊறிக்கொண்டே கிடந்தது.

அப்புறம் எப்பவோ ஒரு நாள் காசி அவளைப் பார்த்தான். சித்திரை மாதம்தான் அது. காசி மாரியாத்தாவுக்குத் தீச்சட்டி எடுத்தான். ஈரம் நிறைந்து சொட்டும் மஞ்சள் நிற வேஷ்டி. இரண்டு தோள்களிலும் பூமாலை. குறுக்கும் நெடுக்குமான செவ்வந்தி மாலை. அம்மன் முகமும் மாக்கோலமும் கொண்ட மண் சட்டியில், நெருப்பு கனிந்து கனிந்து புகை எழுப்பியது. திடீர் திடீரென்று விழித்து எழும்பி நிற்கும் தீயின் ஜ்வாலைகள். அது முகத்தில் மோதிவிடாமல் இருக்க, தலையை இப்பாலும் அப்பாலும் திருப்பிக்கொண்டு இருந்தபோதுதான் அந்த ஜோதி - பூவரசி!

பூவாத்தாவரங்கள் - சிறுகதை

கனிந்து திரண்ட நெருப்புச்சுடர் மாதிரிதான் இருந்தாள். அந்தப் பால் முகத்தில் வேறு ஏதோ ஒன்று வந்து படர்ந்து விட்டாற்போல் இருந்தது. பெரிய மனுஷி சாயல். பால் பிடித்த பயிர்போல் நல்ல வனப்பு. அவளும் அவனைப் பார்த்தாள். ஒரு கணம் தயங்கி, சுதாரித்துக்கொண்டு, அப்புறம் பாதுகாப்பான ஓர் இடத்தில் ஒதுங்கி நின்றுகொண்டு சற்று விவரமாகப் பார்த்தாள். அவனிடம் போய் வணங்கி நின்று விபூதி வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை. அது முடிகிற காரியமா? அவன் இந்தப் பக்கத்து ஆள் என்றால்கூடப் பரவாயில்லை. அவன் வேறு: எப்படி முடியும்! அந்த எல்லைக் கோட்டைத் தொட்டால் தொல்லை. அந்தக் கோலத்தில் அவனும் அவளைப் பார்த்தான். விவரமாகப் பார்க்கத் தோது இல்லாவிட்டாலும், முச்சந்தியிலே நின்ற வாக்கில் கண்டது போதும். கண் நிறைந்துவிட்டது. மனம் பொங்கிவிட்டது. கையில் நெருப்பைத் தாங்கிக்கொண்டே அந்த நெருப்பைப் பருகினான்.

அவனைச் சுற்றிலும் யார் யாரோ வந்து நின்றார்கள். கோடித் துணி போட்டார்கள். பூமாலை சூட்டினார்கள். விழுந்து எழுந்தார்கள். பானகம் குடிக்கச் செம்பை நீட்டினார்கள். நெருங்கியும் விலகியும் ஒரு கூட்டம். அவன் அவளைத் தேடினான். தூரத்தில் நின்றிருந்தவள் கண்ணில் தட்டுப்படவில்லை. எங்கோ நகர்ந்துவிட்டாள். நெஞ்சில் அந்த முகம் - சுடர் பிரகாசமாகி விட்டது. ‘எப்படா இந்த நெருப்பை இறக்கி வைக்கப் போகிறோம்’ என்று உள்ளே சூடாகவே இருந்தது. காலம்தான் நகர்ந்தது. துணிவு காணாத மனம் துவண்டது. காலப் பழுவில் விழுந்து நசுங்கிவிட்டது.

அதற்குப் பிற்பாடு அவன் கண்ட காட்சியும் கொண்ட கோலமும் வேறு. பூவரசி புதுப்பட்டிக்கு வாக்கப்பட்டுப் போய்விட்டாள். அவள் வெகு தூரம் போய்விட்டாள். ஆனாலும் புதுப்பட்டி நடை தூரம்தான். மனதிற்கு இது சின்னப் பிடிமானம். கைவீசி நடந்தால் முக்கால் மணி. சைக்கிள் மிதித்தால் அரை மணி நேரம்தான். ஆனால் மனம்? அது வெகு தூரம் போய்விட்டது! போய்விட்டது என்றால் என்ன? அது செத்துப் போய்விட்டது. அப்படித்தான் சொல்ல வேண்டும். அதைக்கூடச் சொல்ல வாய் ஏது? உள்ளே கூட்டிக் கூட்டி ஒரு உருவத்தை உண்டு பண்ணி, பின்பு அதைத்தானே கொன்று போட வேண்டியதுதான்.

புதுப்பட்டி ஆட்டுத் தரகன் ஆறுமுகத்திற்குத்தான் வாக்கப்பட்டுப் போயிருக்கிறாள் பூவரசி. அவனுக்கு ஒரு கால் சுகமில்லை. ஒரு மாதிரி இழுத்து இழுத்துத்தான் நடப்பான். இடது கால் சூம்பிப்போய் வத்திக்குச்சி மாதிரி இருக்கும். பளபளவென்ற பாலியஸ்டர் வேஷ்டிக் கட்டில், அது கண்ணில் தெரியாது! இப்படிக் காசுக்கு ஆசைப்பட்டு அவளைப் பலி கொடுத்துவிட்டார்களே என்று ஊரில் பேச்சு இருந்தது. இவனும் புழுங்கினான். வேறு என்ன செய்ய முடியும்?

அவ்வப்போது அவனுக்கு விழிப்புக் கொடுத்துவிடும். வேகாத வெயில் என்றுகூடப் பார்க்காமல் புதுப்பட்டிக்கு நடந்தே போவான். அதுவும் காலில் செருப்புகூடப் போடாமல். பூவரசி வாக்கப்பட்டுப் போன வீட்டிற்குப் பக்கம் ஒரு கறிக்கடை உண்டு; அங்கு போய் மறைந்து கொண்டு நிற்பான். ஊரடிக் கிணற்றுப் பக்கம் மிகப்பெரிய அரச மரம்; அங்கு போய் சிறிது நேரம் நிற்பான். மனம் அவளைத் தேடும். பார்வை அலையும். ஏதோ திருட்டுக்கு வந்தவன் போல உள்நடுக்கமாகவே சுற்றித்திரிவான். பொழுது இறங்கவும் சீக்குப் பிடித்தவன்போல நடந்து திரும்ப ஊருக்கு வந்துவிடுவான். யாராவது பார்த்து ‘என்னடா காசி ஒரு வடியா இருக்க?’ என்று கேட்டால் ‘முகச்சவரம் பண்ணலெ அதான்’ என்பான். இல்லாவிட்டால் ‘வவுத்துக்குச் சேரலை’ என்று மழுப்புவான்.

சற்றும் எதிர்பாராமல்தான் அது நடந்தது. அதிசயம்! அப்படித்தான் அதைச் சொல்ல வேண்டும். வேறு எப்படிச் சொல்ல? ஓம் முருகா சினிமா கொட்டாய் திறந்து இரண்டாவது படம் ‘ஆட்டுக்கார அலமேலு.’ அந்தப் படம் ரிலீஸ் ஆகி நான்கு, ஐந்து வருடங்கள் இருக்கும். அதற்குப் பிற்பாடுதான் இந்த ஊருக்கு வருகிறது. நல்ல கூட்டம். புதுப்பட ரிலீஸ் மாதிரி கூட்டம் முண்டியடிக்கிறது. அதுவும் பொம்பளை ஆளுங்களுக்குச் சொல்லணுமே? இதெல்லாம் நம்ம பக்கத்துப் பொம்பளைங்க தானா? நம்பும்படியாகவே இல்லை. சலவைக்குப் போட்டு வந்த சேலையும், எண்ணெய் வைத்த தலையும், பவுடர் பூசி, கனகாம்பரமோ மல்லியோ, கதம்பமோ... இப்படி ஒன்றுமில்லாவிட்டாலும் ஒரு மரிக்கொழுந்தையாவது தலையில் செருகிக்கொண்டு, ஓட்டமும் நடையுமாக தங்கு தங்குவென்று அவர்கள் வரும் காட்சி... ஒவ்வொரு நாளும் இதே நினைப்பாகவே கிடந்து, இந்தா அந்தா என்று ‘இப்படம் இன்றே கடைசி’ என்று கையளவு துண்டுச் சீட்டை தெருச் சுவரெல்லாம் ஒட்டிவிட்டுப் போன பிற்பாடுதான் திகையும். அடுக்குப் பானைக்குள்ளோ, அஞ்சரப் பெட்டிக்குள்ளோ புதைத்து வைத்திருந்த சில்லறைகளைத் திரட்டிச் சேர்த்துக் கொண்டோ, இல்லை ஆணியில் தொங்கும் வீட்டு ஆம்பளை சட்டைப் பைக்குள் கைவிட்டோ தயார்படுத்திக்கொண்டு, பொங்கி வைத்துக்கொண்டு கிளம்பும்.

ஏதோ தேர் பார்க்கப் போகிறாற் போலத்தான்... அப்படி ஒரு குதூகலம். அப்படித்தான் அன்று கொட்டாயில் `முருகா நீ வரவேண்டும்’ என்று பாடல் ஒலிக்கவும் அவள், பூவரசி உள்ளே வரவும் சரியாக இருந்தது. காசி அன்னைக்கு அதிர்ஷ்டவசமாக பெண்கள் பக்கமாகத்தான் டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்தான். பூவரசியுடன் நான்கைந்து பெண்கள். எல்லாம் புதுப்பட்டிக்காரிகள். காசியைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்து சற்றுத் தயங்கி நின்றாள்.

“காசீ...?”

“ம்”

‘`பார்த்து எம்புட்டு வருசம்? ஆளே அடையாளம் காங்கமுடியலெ!”

சோகையாகச் சிரித்தான்.

“மூச்சாச்சா?’

`‘ம்’’

‘`எந்தூர்லெ?’’

‘`வடக்க, கோம்பை.”

அவ்வளவுதான். எந்தக் கண்களிலாவது விழுந்துவிடப் போகிறோம் என்று பதுங்கிக் கொண்டாள். காசிக்கு நம்பவே முடியவில்லை. நடந்து நிஜம்தானா? எத்தனை நாள்? நாள் கணக்கா அது? வருசக் கணக்கா? தெருநாய் போல அலைந்து திரிந்திருக்கிறான். முடியவில்லை. அவன் கனவிலும் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. எல்லாம் இந்த ‘ஓம் முருகா’ செயல் என்று நம்பத்தான் வேண்டியிருக்கிறது. அடுத்து மூன்று, நான்கு படங்கள் ஓடின. அவளைக் காணவில்லை. தலை ஆடிக்கு ‘பத்ரகாளி’ படத்தைக் கொண்டு வந்து இறக்கி, அது ஒரு மாதம் பிய்த்துக் கொண்டுபோனது; குட்டிச் சாக்கில்தான் காசைக் கட்டி எடுத்துக்கொண்டு போனான் முதலாளி. கடைசி நாள் வந்தாள்; இந்த வாட்டி ஒரு கிழவியும் இரண்டு மூன்று வாண்டுகளும், அந்த வரிசையில் பூவரசி கடைசியாகத் தான் வந்தாள். எல்லோரும் மிகுந்த பரபரப்புடன் தான் இருந்தனர். நியூஸில் ‘உப்பு எடுக்க காந்தி வேகமாக விரைந்து கொண்டிருந்தார்.’ அவர் குனிந்து உப்பில் கை வைக்கவும் ‘எழுத்து போட்டிருவான்’ எனக் கூட்டம் விழுந்தடித்துக் கொண்டு கொட்டாய்க்குள் ஓடியது. பூவரசி மட்டும் இவன் அருகில் வந்தாள். குண்டு பல்பு வெளிச்சம்.

முகத்தைக் கோணலாகக் காட்டி, ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டுப் போனாள். சரசரவென்று போனவள் சற்றுதூரம் போனபின்பு திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, சாக்கு படுதாவைத் திறந்து கொட்டாய் இருளுக்குள் நுழைந்துவிட்டாள். இது நடந்து ஒரு வாரம் இருக்கும். பிற்பாடு ஒருநாள் அவள் புருசன் ஆறுமுகம் வந்தான். கொட்டாய் ஓனரிடம் வந்து பேசினான். அவன் வீடு புதுப்பட்டியில் முச்சந்தியில் தான் இருக்கிறது. எடுப்பான பெரிய வீடு. வீட்டின் இடதுகோடியில் சினிமா போஸ்டர் தட்டி வைத்துக்கொள்ளச் சொன்னான். ‘‘செஞ்சுட்டாப் போச்சு’’ என்றார் முதலாளி. அப்போதே காசியைப் பார்த்துக் குரல் கொடுத்தார். “போஸ்டர் ஒட்டுற மணிட்ட சொல்லிடுறா” என்றார். அப்படியே ஆறுமுகம் பக்கம் திரும்பி ‘‘அப்புறமா ஓசி பாஸ் தந்து விடுறேன்’’ என்றார். ‘‘நமக்கு இருக்குற ஜோலி தொந்தரவுலெ, நமக்கு எங்க தோதுபடப்போவுது. நம்ம வூட்டுப் பொம்பளைதான் இதுலெ விருப்பமா இருக்கா’’ என்றான். முதலாளி காசியைப் பார்த்து ‘‘ஒனக்கு இவரு வீடு தெரியுமாடா? புதுப்பட்டி...” என்றார். காசி வேகமாகத் தலையாட்டினான்.

அவன் உள்ளம் பொங்கிற்று.

காசி இரண்டு சினிமா பாஸ் அட்டைகளை எடுத்துக்கொண்டு புதுப்பட்டிக்குப் போனான். சாமிக்கு நேர்த்திக் கடனைத் தீர்க்கப்போகிற மனநிலை. ரொம்ப நாள் கழித்து வெளுப்பை உடுத்திக்கொண்டான். மனம் வேறு ஒரு நிலைக்குத் தாவியிருந்தது. கையிலிருந்து கவனக்குறைவால் நழுவிக் கீழே விழப்போனதை சடக்கென்று ஒன்றுசேர்த்து இறுக்கிப் பிடித்துவிடும்போது ஏற்படும் சிலிர்ப்பு, ஆசுவாசம். இதை எப்படிச் சொல்வது? இதுகூடச் சிறிது நேரம்தான். புதுப்பட்டியை நெருங்க நெருங்க நெஞ்சில் அச்சம்! பூவரசியின் வீடு அவனுக்குத் தெரியும். மனப்பதிவாகவே அது கிடக்கிறது. எப்படிப் போய், எங்கு நுழைந்து, எப்படி ஆரம்பிப்பது? ஒருவேளை அந்த ஆறுமுகம் வாசலிலே இருந்தால்? இல்லை தெருமுனையிலே எதிர்ப்பட்டால்? ‘எல்லாம் வெளியிலே போயிருக்காங்க’ன்னு எவனாவது ஒருவன் வந்து நின்றால்? மனம் அடங்கவில்லை. கையில் இருந்த ‘பாஸை’ அடிக்கடி பார்த்துக் கொண்டான். ஏதோ ஒரு பெரிய கௌரவத்தைக் கையில் பிடித்திருப்பது போல ஒரு நிறைவு.

பூவாத்தாவரங்கள் - சிறுகதை

பூவரசி வீட்டு வாசல் முழுவதுவும் சாணி தெளித்து மொழுகியிருந்தது. அகலமான இரட்டை மரக்கதவு. நீண்ட நடை வாசல். இடது பக்கம் இடுப்பளவு ஆட்டு உரல் மண்ணில் புதைந்து கிடந்தது. அதற்குப் பக்கத்தில் உள் திண்ணை. ஓட்டுக் கூரை. கூரையில் இருந்து ஒரு கயிறு கட்டி, அதில் ஒரு குலை அகத்திக் கீரை. அதை இரண்டு மூன்று ஆடுகள் கடித்துக் கொண்டிருந்தன. சற்று தள்ளினால் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் ‘பெரிய மாட்டுக் காடி’ அரை டிரவுசர் போட்ட ஒரு வேலைக்காரன் மாட்டுக்குத் தீவணம் வைத்துக் கொண்டிருந்தான். காசி இரண்டு மூன்று தடவை குரல் கொடுத்தான். அவன் குரலில் நடுக்கம் தெரிந்தது. உடலும் ஆட்டம் கொடுத்தது. சற்று காலை இழுத்து ஓசை காட்டிக்கொண்டே உள்ளே சென்றான். ஆள் அரவம் கேட்டு பூவரசியே வெளியே வந்தாள்.

அவனைக் கண்டதும் ஒரு கணம் திகைத்து, லேசாகச் சிரித்தாள். ஒரு பார்வை. விழுங்கும் பார்வை. வாய் வார்த்தை இல்லாமல் பேசும் பார்வை. ‘நீயும் நானும் ஒரே பள்ளி; அருகருகே இருந்தோம்; எதையோ தொலைத்துக்கொண்டும் எதையோ தேடிக்கொண்டும்; அப்போது மனம் பதற்றம் கொள்ளவில்லை; கொள்ளிக் கண்கள் பட்டுவிடுமோ என்று ஒதுங்கவில்லை.’

வயது பருவத்தைத் தொட்டதும் இந்தப் பதற்றமும் பரபரப்பும் எதற்கு... தித்திப்பையும் திகைப்பையும் காணத் துடிப்பதனாலா? அவள், அவளை அறியாமல் ஆனந்தத்தில் “காசீ!” என்று குரலைப் பொங்க விட்டுவிட்டாள். அவனும் அந்தக் குரலில் குலைந்துதான் விட்டான். ஒருவர் முகத்தில் ஒருவர் பார்வையைப் பாய்ச்சிக்கொண்டு, அந்த வெளிச்சத்தில் கூசிக் கொண்டோ, கூடிக்கொண்டோ திரிய வேண்டியது தான். உள்ளே பொங்கும் இந்த வெளிச்சம் வீதியில் விழுந்தால்? அவன் மனம் சற்று பீதி கொண்டது. அவள் தான் ஓரடி முன்னே வந்து ‘‘அவர் ஏதோ ஜோலியாக வெளியே போயிருக்கார்’’ என்று அவன் பதற்றத்தைத் தணிக்க முற்பட்டாள். அதற்கு அப்புறமும் அவன் பதற்றம் தணிந்தபாடில்லை. அவள் ஏதேதோ பேசினாள். இவனும் ஏதோ பேசினான். அவன் மெய்மறந்து, அவளைக் கண்டு, இப்படி அருகருகே நின்று பேசும்போது, எல்லாம் மறந்துவிடுகிறது. என்ன பேசினோம், என்ன உளறினோம் என்றுகூடத் தெரியவில்லை. இந்த சினிமா பாஸை வாங்க வேண்டும் என்று பூவரசிதான், தன் வீட்டுக்காரனிடம் சொல்லியிருக்கிறாள். அது ஒரு சாக்கு. இதற்கு மேல் எப்படிச் சொல்வது? அவளுக்கு அடிக்கடி அந்தக் கொட்டாய்க்கு வர வேண்டும். எப்படியும் ஒரு மணி நேரம் கழிந்திருக்கும்.

என்ன பேசினோம் என்றே தெரியவில்லை. ஆனால் ஒருவர் உள்ளத்தை ஒருவர் திறந்து பார்த்துவிட்டோம் என்ற திருப்தியும் நிம்மதியும் வெகு நேரத்திற்குப் பின்பு விழித்துக்கொண்டு, வீட்டிற்குள் போய் ஒரு செம்பு மோர் கொண்டு வந்தாள். ‘வேண்டாம் வேண்டாம்’ என்று மறுக்க மல்லுக்கட்டி அரைத் தாறு பழுத்த வாழையைத் தூக்கிக் கொடுத்து விட்டாள். அத்தனை சந்தோஷமும் வீட்டு வாசல் படியை விட்டு இறங்கும் வரையில்தான். இறங்கி பத்து எட்டுகூட வைக்கவில்லை. அந்த வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்து ஒருவன் ஓடிவந்தான். மாட்டுக்காடியில் இருந்த அந்த அரை டிரவுசர் போட்டவன்தான். வந்தவன் காசியை மேலும் கீழும், ஒரு மாதிரியாகப் பார்த்தான். ‘எந்தூருடா?’ என்று மட்டும் கேட்டான். மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று அவன் மனம் கலக்கமுற்றது!

பூவாத்தாவரங்கள் - சிறுகதை

ந்திக் கருக்கலில்தான் என்னிடமிருந்த இளமுத்தத்தைக் களவாடினாய்

அந்திச் சிவப்பில்தான்என்னிடமிருந்த என்னையெடுத்து நீயானாய்

அந்திச் சாம்பலில்தான்உன் பேரன்பின் பெருங்கடலைஒரு மிடற்றில் பருகும் வித்தை சொல்லித்தந்தாய்

இவ்வாழ்வின்இப்பிறவியின்சில ஆயிரம் அந்திகள்இவ்வளவு மாயம் செய்கையில்

பெரு வாழ்வின்பெரும்பொழுதின்கோடானுகோடி அந்தி பார்க்க

கற்சிலையாகச் சமைந்துபோவோமா?

பூவாத்தாவரங்கள் - சிறுகதை

கல் அந்தியில் முடியஇரவு தொடங்குகிறது

அந்தியின் எந்த நொடியில்இரவு தொடங்குகிறது?

பகலும் இரவும் முடிவும் தொடக்கமும்இரண்டறக் கலந்து நிற்கும்அபூர்வ நேரத்திற்கு

என்ன பெயர் சூட்டலாம் கண்ணே?

என் சுவாசமும்உன் சுவாசமும்இடம்பெயரும் நேரத்தின் சாயலையொத்தஅப்பொழுதுக்கு

முத்தப் பொழுதுஎன்ற பெயர்தானே பொருந்துகிறது?

பூவாத்தாவரங்கள் - சிறுகதை

ந்தனம் அரைக்கும் கல்லின்மேல் அமர்ந்திருக்கிறோம்கோபுரத்தின்மேல் கவிழ்கிறது அந்திஎத்தனை கோடி அந்திகள் நிழலெனக் கடந்திருக்கும் கோபுரத்தை?

எத்தனை மரங்களின் சந்தனம் குழைந்து மணந்திருக்கும்நீண்ட இந்தக் கருங்கல்லில்?

இந்தப் பொழுதுக்குஇந்த அந்திக்குஇந்தச் சந்தனத்திற்கு நம் முத்தத்தின் வாசம்.இந்த இதழில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள காதல் கவிதைகள் எழுதியவர்: அ.வெண்ணிலா

ஓவியங்கள்: ஸ்யாம்