சினிமா
தொடர்கள்
Published:Updated:

கண் காது வாய் : சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

`ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் மரணம்’ நாளிதழ் போஸ்டரைப் பார்த்தபடி பெட்டிக்கடையில் ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டேன்.

துபோன்ற செய்திகளில் எனக்கு பெரிதாக ஆர்வமில்லை. இந்த மாநகரத்தில் தினமும்தான் யாரேனும் செத்துக்கொண்டி ருக்கிறார்கள். விபத்து, கொலை, தற்கொலை. நான்கூடத்தான் தினமும் வெயிலில் வெந்து சாகிறேன். அதை யாரேனும் செய்தியாக்கு கிறார்களா? ஆனந்தவிகடன் கண்ணில் பட்டது வாங்கிக்கொண்டேன்.

இருபது வருடமாக இங்கே இதுபோல் விகடன் வாங்குகிறேன். சுள்ளென்று இறங்கிய வெயிலுக்கு விகடனைத் தலைக்குமேல் பிடித்தபடி சாலையைக் கடந்தேன். பழைய குட்டி விகடனாக இருந்தால் இப்படி வெயிலுக்கு தலைக்குப் பிடித்துக்கொள்ள முடியுமா. அப்போது இவ்வளவு வெயிலும் இல்லை. தாம்பரம் மின்சார ரயில்வே ஸ்டேஷன் மதியத்தில் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடந்தது.

இன்றைய கதைத்தலைப்பைப் பார்த்தேன். ‘கண், காது, வாய்’ என்றிருந்தது. படத்தைப் பார்த்தேன். ஒரு இளம் ஜோடி பெஞ்சில் காதலுடன் உட்கார்ந்து கொண்டிருப்பது போன்ற படம்.

வழக்கமாக மதியம் மின்சார ரயில்கள் காற்று வாங்குகிற மாதிரி காலியாகத்தான் போகும். சீட்டில் நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொள்ப வர்களும் உண்டு. பிச்சை யெடுப்பவர்கள், வேர்க்கடலை விற்பவர்கள், கீ செயின் விற்கும் பார்வைத்திறன் இல்லாதவர்கள் என்று வழக்கமாக ரயிலில் பார்க்கும் யாரையும் பெரும்பாலும் பார்க்க முடியாது. ஆனாலும் கடமை தவறாத ஏதாவதொரு ரயில் தாம்பரத்தில் கிளம்பி பீச் ஸ்டேஷனை நோக்கிப் போய்க்கொண்டுதான் இருக்கும். என்னைப்போன்ற கொஞ்சம் பேர் இதை நம்பித்தான் இருக்கிறோம்.

இன்று வழக்கத்தைவிட ஸ்டேஷனில் ஆளரவம் குறைவாக இருந்தது. என்னிடம் சீஸன் பாஸ் இருப்பதால் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை. ரயில் ஒன்று தயாராகவேறு நின்று கொண்டிருந்தது. கொஞ்சம் முன்னோக்கி நடந்து ரயிலின் நடுவில் இருக்கிற ஏதேனுமொரு பெட்டியில் ஏறிக்கொள்வதுதான் எனது வழக்கம். பொதுவாக முன்னும் பின்னும் இருக்கும் பெட்டிகளில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். முந்தைய பேராவில் நான் சொன்னதுபோல சிலசமயம் நானே கால் நீட்டிப் படுத்துக்கொள்ளவும் இந்த நடுப்பெட்டிகள்தான் ஏதுவாக இருக்கும். இன்று கையில் விகடன் இருப்பதால் நான் படுத்துக்கொள்ளப் போவதில்லை. விகடனில்வரும் சிறுகதையை முதலில் படித்து விடுவதுதான் வழக்கம். எனக்கு அரசியல், செய்திகளில் ஆர்வமில்லை. அதிலும் ஹ்யூமன் ஸ்டோரி என்று மனதைத் தொந்தரவு செய்கிற கட்டுரைகளை எல்லாம் நான் படிப்பதை விட்டுப் பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. முதலில் சிறுகதை பிறகு சினிமா செய்திகள், சினிமா பேட்டிகள். அவ்வளவுதான்.

கண் காது வாய் : சிறுகதை

`சென்னையில் பிழைக்க ஆயிரம் வழிகள். ஆனால் பிழைக்க முடியுமா தெரியாது’ என்று என் நண்பன் முன்பு ஒரு கவிதை எழுதினான். அதுபோலத்தான் எனது வாழ்க்கையும். வாழ்க்கையில் என்னவெல்லாமோ சாதிக்க வேண்டும் என்று வழக்கம்போல சென்னை வரும்; வந்த பல லட்சம்பேரில் நானும் ஒருவன். வழக்கம்போல ஏதோ ஒரு வேலை, வழக்கம்போல நெரிசல், ஹவுஸ் ஓனர், தண்ணீர்ப் பிரச்னை. இதில் அடுத்தவர் பிரச்னைகளைப் பற்றி எங்கே யோசிக்க நேரமிருக்கிறது.சென்னைக்கு வந்த புதிதில் ஒரு வேகம் இருந்தது. அப்பழுக்கற்ற ஒரு கிராமத்தானின் வேகம். ஒரு தடவை எக்மோர் ரயில்வே ட்ராக்கிற்குச் சற்றுத் தள்ளி அடிபட்டுக் கிடந்த ஒருவரை, தன்னந்தனியாகத் தூக்கிக்கொண்டு வந்து ஓரமாகப் போட்டுவிட்டு சுவரேறிக்குதித்து சி.எம்.டி.ஏ கேன்டீனில் போய் தண்ணீர் வாங்கி வருவதற்குள் ரயில்வே போலீஸார் வந்து, அடிபட்ட ஆளைத் தூக்கிச்சென்று விட்டி ருந்தனர். நண்பர்களிடம் இதைச் சொன்னபோது ‘நீ ஏண்டா ரிஸ்க் எடுத்த. உன்னையும் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டிப் போயிருப்பாங்க’ என்று பயம் காட்டினார்கள். இப்போதென்றால் அடிபட்ட ஆள் பக்கம் நானே போயிருக்க மாட்டேன். எதுக்கு ரிஸ்க்.

பெட்டி வழக்கம் போல காலியாகத்தான் கிடக்கிறது. ஏறி அமர்ந்து எதிர் சீட்டில் காலை நீட்டிக்கொண்டேன். இயந்திரப் பெண்ணின் குரலில் வண்டி கிளம்பப்போவதாக அறிவிப்பு வந்தபோது நான் விகடனைப் புரட்ட ஆரம்பித்தேன். வண்டி மெல்ல கிரீச்சிட்டு நகர ஆரம்பித்தது. நான் விகடனின் சிறுகதைப் பக்கத்தைக் கண்டுபிடித்து வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு படிக்கத் தொடங்கினேன். எழுத்தாளர் பெயரை எல்லாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதில்லை. முதலில் கதையின் தலைப்பு. பின்பு கதைக்கான சித்திரத்தைப் பார்த்துக்கொள்வேன். ஸ்யாம் வரையும் சித்திரங்கள் எனக்குப் பிடிக்கும். அந்தச் சித்திரங்களில் இருக்கும் கதை மாந்தர்களை மனதிற்குள் உருவேற்றிய பிறகுதான் முதல் வரியையே படிக்க ஆரம்பிப்பேன். இன்றைய கதைத்தலைப்பைப் பார்த்தேன். ‘கண், காது, வாய்’ என்றிருந்தது. படத்தைப் பார்த்தேன். ஒரு இளம் ஜோடி பெஞ்சில் காதலுடன் உட்கார்ந்து கொண்டிருப்பது போன்ற படம். ஸ்யாம் இவ்வகையான சித்திரங்களில் கலக்கிவிடுவார். வித்தியாசமான ஆங்கிள். வாளிப்பாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும் பெண்கள். பெரும்பாலும் இறுக்கமான ஒட்டிய உடை. ஸ்யாமின் பெண்களைப்போல ஒருத்தியைச் சந்தித்துவிட வேண்டும் என்பதுகூட ஒரு காலத்தில் லட்சியமாக இருந்தது. இந்தப் படத்திலும் அந்த ஸ்யாம் லட்சணம் குறைவில்லாமல் இருந்தது. சித்திரத்தில் அவர்கள் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் இடம் ஒரு ரயில்வே ஸ்டேஷன் என்பது கொஞ்சம் பிந்தியே எனக்கு உறைத்தது.

கதையைப் படிக்க ஆரம்பித்தேன்.

மொபைல் சிணுங்கி ஹஸ்பண்ட் காலிங் என்று ஸ்கிரீனில் காட்டியது. கவிதா அவசரமாக போனை ஆன் செய்து காதுக்குக் கொண்டு போனாள்.

எதிர்முனையில் சேகரின் குரல் கொஞ்சம் எரிச்சல் காட்டியது.

“இங்கபாரு. உங்க அண்ணன் நான் எங்க போனாலும் கூடவே வந்திட்டிருக்கான். அவனுக்கு சந்தேகம்தான்னு நினைக்கிறேன்.”

கவிதாவுக்கு நரம்புகளில் அச்சம் ஒரு நொடி பாய்ந்து மறைந்தது.

“என்னடா சொல்லுற” என்றாள்.

“ஆமா. நாம கல்யாணம் பண்ணினது உங்க வீட்ல தெரிஞ்சு போச்சோன்னு எனக்கு பயமா இருக்கு. பின்ன எதுக்கு, தேடி வந்து என் மேன்ஷன்ல, அதுவும் என் பக்கத்து அறையிலேயே உங்க அண்ணன் ரூம் போடணும்” என்றான் சேகர்.

“கல்யாணம் ஆச்சுன்னு தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டாங்க. இது வெறும் சந்தேகம்தான். ஆனாலும் எனக்கு பயமா இருக்குடா” என்றாள் கவிதா.

“ஹாஸ்டலுக்கு உன்னப் பார்க்க வந்தானா?”

“இல்ல, ஆனா போன் பண்ணினான். திருவல்லிக்கேணில ஒரு மேன்ஷன்ல இருக்கான்னு அவன் முந்தா நேத்து சொன்னப்பவே எனக்கு கதி கலங்கிருச்சு. அப்புறம் உன் மேன்ஷன்லதான் இருக்கான்னு நீ சொன்னப்ப ஆரம்பிச்ச நடுக்கம் இன்னும் குறையல” என்றாள் கவிதா.

“கவலைப்படாத. எர்ணாகுளத்துல ஒரு வேலைக்கு ஃபிரெண்டு ஏற்பாடு பண்றன்னான். கிடைச்சா பறந்துடலாம்.”

“சரி இன்னைக்கு சாயங்காலமும் என்னப் பார்க்க வரமுடியாதா?”

“நேத்து என் ஃபாக்டரிய விட்டு வெளிய வந்தா உங்க அண்ணன் நிக்கிறான். என்ன ஃபாலோ பண்ணிட்டே வந்தான். காலையில டீக்கடையில இருந்து நைட் ஆந்திராமெஸ் வரைக்கும் என் முதுகுக்குப் பின்னாடியே இருக்காண்டி.”

‘தாம்பரம் சானடோரியம்’ என்றது எலெக்ட்ரானிக் குரல். பத்திரிகையிலிருந்து தலையைத் திருப்பி ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். வெளியே ஏதோ ஒருதுணிக்கடை விளம்பரப்பலகையில் ஒரு குடும்பம் சதவிகிதத் தள்ளுபடியில் பிளாஸ்டிக் புன்னகை சிந்தியபடி இருந்தது. ‘பரம்பரை பரம்பரையாகத் தொடரும்…’ நான் வாக்கியத்தை முடிப்பதற்குள் வண்டி கிளம்பியது. யாரும் பெட்டியில் ஏறவில்லை. நான் மீண்டும் கதையைப் படிக்க ஆரம்பித்தேன்.

கண் காது வாய் : சிறுகதை

“ஒரு வாரத்துல எர்ணாகுளம் போய் வேலைல ஜாயின் பண்ணச் சொல்றாங்க” என்று சேகர் போனில் சொன்னதும் கவிதாவுக்கு ஆசுவாசமாக இருந்தது.

“என்ன பண்ணலாம் இப்போ” என்றாள்.

“ஹாஸ்டல்ல ஊருக்குப் போறேன்னு சொல்லிட்டு, நாளைக்கு மதியம் எக்மோர் கிளம்பி வா. தாம்பரத்துல என் ஃபிரெண்டு வீட்ல தங்கிக்கலாம். ரெண்டு நாள்ல எர்ணாகுளம் கிளம்பிடலாம்” என்றான்.

“எங்க அண்ணன்?”

“அவன் கண்ல படாம எப்டியாவது எக்மோர் வந்து சேர்ந்துடுறேன்” என்றான் சேகர்.

எப்படியும் வீட்டில் தெரிந்துவிடத்தான் போகிறது. அதற்குப்பிறகு என்ன ஆகும். நினைக்கும்போதே தலையைச் சுற்றுவதுபோல இருந்தது கவிதாவுக்கு. ஆனால், எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்று ஒரு வைராக்கியம் பிறப்பதையும் உணர்ந்தாள்.

ரயில் பிரேக் கிரீச்சிடும் சத்தம் கேட்டது. குரோம்பேட்டை ஸ்டேஷனில் பார்வையற்றவர் ஒருவர் பெட்டியில் ஏறிக்கொண்டபோது நான் கதையிலிருந்து கண்ணை நிமிர்த்தி அவரைப் பார்த்தேன். அவர் அமைதியாக மூலையில் ஒரு சீட்டில் உட்கார்ந்து மொபைலை ஆன் பண்ணி காதில் இயர் போனைச் செருகினார். வேறு யாரும் ஏறவில்லை. நான் ஒரு சுற்று ஜன்னலுக்கு வெளியே பார்வையைப் படரவிட்டுக்கொண்டு மீண்டும் கதைக்குள் ஆழ்ந்தேன்.

கவிதா லக்கேஜுடன் எக்மோரில் காத்துக்கொண்டு நின்றாள். அண்ணனுக்குத் தெரியாமல் சேகர் எப்படி வந்து சேரப்போகிறான் என்பதை நினைத்தால் படபடப்பாக இருந்தது.

பிளாட்பாரத்தில் சேகர் அவசரமாக வருவதைக் கண்டபோது நிம்மதி தோன்றியது.

பீச் ஸ்டேஷனிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில் ஒன்று சரியாக வந்து சேரவும் சேகரும் கவிதாவும் கொஞ்சம் முன்னால் நடந்து நட்டநடுப் பெட்டியில் ஏறிக்கொண்டனர்.

உள்ளே ஒரு மூலையில் பார்வைச்சவால் கொண்ட கீ செயின் விற்கும் நபர் மட்டும் உட்கார்ந்திருந்தார். அதற்கு நேர் எதிர் மூலைக்குச் சென்று கவிதாவும் சேகரும் உட்கார்ந்துகொண்டனர். வண்டி தாம்பரத்தை நோக்கிக் கிளம்பியது.

நான் இப்போது நிமிர்ந்து என் எதிரில் இருக்கும் பார்வையற்றவரைப் பார்த்தேன். ஆஹா என்ன ஒற்றுமை என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால், கதைக்கு ஸ்யாம் வரைந்திருந்த பார்வையற்றவரின் உருவம் என் முகச்சாயலில் அல்லவா இருக்கிறது. கதையில் வண்டி எக்மோரிலிருந்து தாம்பரத்துக்குப்போகிறது. நான் தாம்பரத்திலிருந்து எக்மோருக்கு. வண்டி பல்லாவரத்தில் நின்றபோது அவசர அவசரமாக ஒரு யுவனும் யுவதியும் எனது பெட்டியில் ஏறினார்கள். கையில் சில லக்கேஜுகள். அட இந்தக் கதைக்குள் வருகிற மாதிரியே இருக்கே என்று நினைத்துக்கொண்டு ஸ்யாம் வரைந்த சித்திரத்தை மறுபடியும் பார்த்தேன். ஆனால் சித்திரத்தில் இருப்பதுபோல இந்தப் பெண் வாளிப்பாகவும் அழகாகவும் இல்லை. சாதாரணமாகத்தான் இருந்தாள். எனக்கு ஒரு வித உற்சாகம் தோன்றவே மீண்டும் கதையைப் படிக்க ஆரம்பித்தேன்.

கவிதாவும் சேகரும் லக்கேஜுகளைக் காலுக்குக் கீழே வைத்துக்கொண்டு எதிர் எதிரே உட்கார்ந்திருந்தனர். பதற்றம் தணிந்து இலகுவாகத் தெரிந்தனர்.

“என்ன கவிதா பயப்படுறியா. எர்ணாகுளம் போனா கொஞ்ச நாளைக்கு உங்க வீட்டுக்காரங்களால கண்டுபிடிக்க முடியாது. ஆனா அதுக்குள்ள ஒரு மாற்றம் வராமலாபோயிடும்” என்றான் சேகர்.

“என்ன மாற்றம்” என்றாள்.

“நம்மள புரிஞ்சிக்கிறமாதிரி ஒரு மாற்றம்.”

“எனக்கு நம்பிக்கை இல்லை. எங்க அண்ணன் ஒத்துக்கவே மாட்டான்.”

“அவனும் புரிஞ்சுக்குவான் பாரேன்” என்றான் சேகர்.

வண்டி சேத்துப்பட்டு ஸ்டேஷனில் நின்று கிளம்பியபோது ஓடிவந்து பெட்டியில் ஏறினான் கவிதாவின் அண்ணன்.

நான் நிமிர்ந்து எனக்கு முன்னால் சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்த ஜோடிகளைப் பார்த்தேன். அவர்கள் முகம் எனக்குத் தெரியாவிட்டாலும் இருவரும் கதையில் வருவதைப்போல பதற்றமாக இருப்பதாக உடல்மொழி சொல்லியது. ‘சேச்சே’ எனக்கு அப்படித் தோன்றுகிறது. அவர்கள் சிரித்துப் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்.என்ன பேசுகிறார்கள் என்று இரைச்சலில் காதில் விழவில்லை. அந்தப் பார்வையற்றவரையும் பார்த்தேன். அவர் ஆடாமல் அசையாமல் இயர் போனில் லயித்திருந்தார். வண்டி திரிசூலம் ஸ்டேஷனில் நின்று கிளம்பும்போதுதான் கவனித்தேன். ஒரு ஆள் ஓடி வந்து எங்கள் பெட்டியில் ஏறினார். பார்க்கக் கொஞ்சம் முரடனாகத் தெரிந்தார்.

எனக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது. கதையைப் படிக்காமல் அப்படியே விட்டுவிடலாமா என்று தோன்றியது. அப்படி விடவும் முடியவில்லை. நான் தன்னிச்சையாகக் கதையைத் தொடர்ந்தேன்.

ஏறிய அந்த ஆள் அந்த ஜோடிக்குப் பின்னாலிருந்த சீட்டில் உட்கார்ந்து என்னைப் பார்த்தான். நான் அவசரமாகக் குனிந்து கதையில் மூன்றாம் பக்கத்தில் ஸ்யாம் வரைந்திருக்கும் அண்ணனின் சித்திரத்தைப் பார்த்தேன். அதற்கும் இந்த ஆளுக்கும் சம்பந்தம் இல்லை. எனக்குக் கொஞ்சம் விசித்திரமாகவும் லேசாக பீதியாகவும் இருந்தது. நான் கதையை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.

பெட்டியில் ஏறிய கவிதாவின் அண்ணன் நேராக வந்து அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்தான். இருவருக்கும் பதற்றம் உடம்பில் நடுக்கமாகப் பரவியது. கவிதா ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.

“எதுவும் பேசாத” என்றான் அண்ணன்.

சேகருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அமைதியாக கவிதாவின் கண்களைப் பார்த்தான். பிறகு அந்தப் பார்வையற்ற கீசெயின் விற்கும் நபரைப் பார்த்தான். அவர் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.

கவிதாவின் அண்ணன் கண்களைக் கீழே தாழ்த்திக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் மூச்சு சீராக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது.

சேத்துப்பட்டு ஸ்டேஷன் வந்தபோது “கவிதா இறங்கு... ஊருக்குப் போகணும். அம்மாவுக்கு உடம்புக்கு முடியல” என்று முகத்தைப் பார்க்காமல் சொன்னான்.

சேகர் `வேண்டாம்’ என்பதுபோல கவிதாவைப் பார்த்தான். கவிதாவுக்கு செய்வதறியாது அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“எழும்பு... இறங்கலாம்” என்றான் அண்ணன்.

“ம்ஹூம்...” என்று சேகரின் கைகளைப் பற்றினாள் கவிதா.

வண்டி அதற்குள் கிளம்பி ஊர்ந்து வேகமெடுக்கத் தொடங்கியது.

அண்ணன் இப்போது நிமிர்ந்து இருவரையும் பார்த்து முறைத்தான். முகம் இறுக்கமாக இருந்தது.

நான் கதையிலிருந்து கண்களைத் தூக்கி எனக்கு எதிரில் இருந்த அந்த ஆளைப் பார்த்தேன். அந்த ஆள் குனிந்தபடி உட்கார்ந்திருந்தான். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த அந்த ஜோடிகளையும் பார்த்தேன். அவர்கள் இப்போது நிச்சயம் பதற்றமாக இருக்கிறார்கள் என்பது புரிந்தது. பார்வையற்றவர் அதே அமைதியுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். இப்போது எனக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது. கதையைப் படிக்காமல் அப்படியே விட்டுவிடலாமா என்று தோன்றியது. அப்படி விடவும் முடியவில்லை. நான் தன்னிச்சையாகக் கதையைத் தொடர்ந்தேன்.

கண் காது வாய் : சிறுகதை

“கவிதா. அடுத்த ஸ்டாப்ல இறங்கு... தேவையில்லாத பிரச்னை வேண்டாம். வீட்டுக்குப் போய் எல்லாத்தையும் பேசிக்கலாம்” என்றான் அண்ணன்.

கவிதா இன்னும் இறுக்கமாக சேகரின் கையைப் பிடித்துக்கொண்டாள். சேகருக்குக் கோபம் சுள்ளென்று தலைக்கு ஏறியது.

“இங்க பாருங்க. நாங்க ஓடிப்போய் எல்லாம் கல்யாணம் பண்ணிக்க விரும்பல. அதான் ரெண்டு மாசம் முன்னாடியே உங்க வீட்ல எங்க சீனியரை வெச்சுப் பேசினேன். உங்க வீட்ல அதுக்கு மரியாதையான பதில்கூடச் சொல்லல. நாங்க வேற வழியில்லாமதான் இந்த முடிவை எடுத்தோம்” என்றான் சேகர்.

அண்ணன், சேகரைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் கவிதாவைப் பார்த்து மீண்டும் சொன்னான் “கவி... நான் உன்கிட்டதான் பேசிட்டிருக்கேன். அடுத்த ஸ்டாப்ல இறங்கு.”

“என்ன சார், நான்தான் சொல்லிட்டிருக்கேன்ல. நாங்க கல்யாணம் பண்ணியாச்ச்சு. கவிதா இப்போ என் மனைவி. நீங்க கூப்பிட்ட உடனேயெல்லாம் வரமுடியாது” சேகர் கோபமாகச் சொன்னான்.

அண்ணன் சட்டென்று எழுந்து சேகரின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்தான். வாயில் சராமாரியாக கெட்டவார்த்தைகள் தெறித்து வந்தது. கவிதா கத்திக்கொண்டு சேகரைப் பிடித்தாள். அண்ணன் கவிதாவைப்பிடித்து விலக்கித்தள்ளி எட்டி வயிற்றில் உதைத்தான். அவள் அப்படியே சுருண்டு கொண்டு ஜன்னலோரமாக மூர்ச்சையானாள். சேகர் அவன் பிடியிலிருந்து தப்பிக்கத் திமிறினான். ஒரு கையால் வாயைப் பொத்தியப்படி இன்னொரு கையால் அவன் கழுத்தை அழுத்தியபடி தரதரவென்று வாசலுக்கு சேகரை நகர்த்திக்கொண்டு போனான் அண்ணன். ரயில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. சேகர் தன் கால்களை ஊன்றி அவனையும் சேர்த்துப் பின்னுக்குத் தள்ள முயன்றான். பார்வையற்றவர் முகத்தில் எந்தச் சலனமும் தெரியவில்லை.

நான் மெல்ல கதையிலிருந்து கண்ணை நகர்த்தி முதலில் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். பிறகு கண்களை அப்படியே ஓட்டிக்கொண்டு வந்து அந்த ஜோடிகளைப் பார்த்தேன். ஒரு கணம் திடுக்கிட்டேன். இப்போது அந்த ஆள் எழுந்து ஜோடிகளுக்கு முன்னால் இருந்த சீட்டில் போய் உட்கார்ந்திருந்தான். அந்தப் பையனும் பொண்ணும் ஒருவருக்கொருவர் மேலும் நெருக்கமாகி உட்கார்வதைப் பார்க்க முடிந்தது. ரயில் பழவந்தாங்கலில் நின்றது. ஏதோ விபரீதமாகப்போகிறது. நான் மெல்ல இங்கே இறங்கி அடுத்த பெட்டியில் ஏறிக்கொள்ளலாமா என்று யோசித்தபடி அந்தப் பார்வை யற்றவரைப் பார்த்தேன். அவர் இயர்போனில் அமைதியாக ஆழ்ந்திருந்தார். ‘சே... தேவையில்லாமல் யோசிக்கிறேன் லூசு மாதிரி.’ குனிந்து விகடனைப் பார்த்தேன். ‘இது கதை... கதையாக மட்டுமே பார்ப்போம்’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு மீண்டும் கதையின் வரிகளில் மேய ஆரம்பித்தேன்.

சேகர் முடிந்த வரை குதிகாலை அழுத்தமாக ஊன்றி, கவிதா அண்ணனின் பிடியைப் பின்னோக்கித் தள்ள முயன்றான். ஆனால் அவனுடைய முரட்டுக் கரங்கள் மேலும் அழுத்தமாக சேகரை வாசலை நோக்கித் தள்ளியது. சேகர் வாசலுக்கு நடுவில் இருந்த கம்பியைப் பற்றிக்கொள்ள முயன்றான். சேகரால் ஓரளவுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்தப் பார்வையற்றவரைப் பார்த்துக்கொண்டே கத்த எத்தனித்தான். அவர் அமைதியாக உட்கார்ந்திருந்தார். சேகர் தன் பிடி தளர்வதை உணர்ந்தான். கவிதா ஜன்னலோரமாக மயங்கியபடி சாய்ந்து இருப்பதை ஒரு கணம் பார்த்தான். அடுத்த நொடி வாசலைத்தாண்டி சேகர் இடறி விழுந்து மறைந்தான். ரயில் வேகமாக சைதாப்பேட்டையைக் கடந்து கொண்டிருந்தது.

அங்கேயே நிறுத்திவிட்டேன். இதற்கு மேல் இந்தக் கதையைப் படிப்பதாக இல்லை. எனக்கு உள்ளுக்குள் சட்டென்று பயம் திரள்வதைப்போல இருந்தது. நான் இருந்த ரயில் கிண்டி ஸ்டேஷனில் நின்றது. வலது பக்கம் தண்டவாளத்தில் தாம்பரம் செல்லும் ரயில் மெல்ல நகர்ந்து செல்வதைப் பார்த்தேன். அதன் நடுப்பெட்டி என் பார்வையைக் கடந்து செல்லும்போதுதான் கவனித்தேன். அதில் ஜன்னலோரமாக மயங்கிய நிலையில் கவிதாவும், வாசல் கம்பியைப் பிடித்த படி அவள் அண்ணனும், கடைசி சீட்டில் கண்பார்வையற்றவரும். அவருக்கு அப்படியே என் முகச்சாயல்.

எனக்கு மனம் நடுங்க ஆரம்பித்தது. கையிலிருந்த விகடனைக் கீழே வைத்தேன். நானிருந்த ரயில் இரைச்சலுடன் கிளம்பியது. எனக்கு உடம்பெல்லாம் காய்ச்சல் ஏறுவது போலத் தோன்றியது.

என் பெட்டியில் இருந்த அந்த ஜோடியைப் பார்த்து அந்த முரட்டு ஆள் ஏதோ பேச ஆரம்பித்திருந்தான். சரியாகக் காதில் விழவில்லை. இது என்ன, சில ஆங்கிலப்படங்களில் பார்த்த தேஜாவூ என்பார்களே அதுபோலவா. தேஜாவூ என்றால் நமக்கு ஏற்கெனவே நடந்தது போலத் தோன்றுவது அல்லவா. ஆனால் இதுஅப்படி அல்ல. இந்தக் கதையை அப்படியே இப்போதுதானே படித்தேன்... அல்லது இது போல தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறதா. எனக்கு விசித்திரமாகவும் பயமாகவும் இருந்தது. இன்று காலையில் பார்த்த நாளிதழ் செய்தி ஞாபகம் வந்தது `ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் மரணம்.’ இது எப்போது நடந்தது. மிகவும் குழம்பிப்போனேன்.

மெல்ல எழுந்து அடுத்த ஸ்டேஷனான சைதாப்பேட்டையில் இறங்கிவிடலாமா என்று யோசித்தேன்.

கண் காது வாய் : சிறுகதை

இப்போது அந்த முரட்டு ஆள் அந்தப் பையனை சட்டைக் காலரைப் பிடித்து இழுப்பதைப் பார்த்தேன், அந்தப் பையனும் அந்த ஆளைத் திருப்பி அடிக்கக் கை ஓங்குவதையும். அந்தப் பெண் கதறியபடி இருவரையும் பிடித்து விலக்க எத்தனித்தாள். நான் செய்வதறியாது ஒரு கணம் திகைத்தேன். ரயில் பாய்ந்து சென்றுகொண்டிருந்தது. அந்தக் கண்பார்வையற்றவர் சலனமின்றித் தன் இயர்போனில் ஆழ்ந்திருந்தார். அதற்குள் அந்த ஆள் அந்தப் பையனைக் கொத்தாகக் காலரையும் சட்டையையும் சேர்த்துப் பிடித்துத் தூக்கி வாசலை நோக்கி இழுத்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண் அவன் காலைப் பிடித்துக் கதறியபடி தரையில் இழையத் தொடங்கினாள். அவன் அவள் தலைமீது எட்டி உதைக்கவும் அவள் அப்படியே சுருண்டு பின்னுக்குப்போய் விழுந்தாள். இந்த இழுபறியில் அந்தப் பார்வையற்றவரின் இயர்போன் ஒயர் சிக்கிக்கொண்டு காதிலிருந்து கழன்றது. நான் அதற்குள் பாய்ந்து அவர்களைத் தடுக்கலாம் என்று நினைத்தேன். உடம்பில் தயக்கமும் பயமும் என்னை இழுத்து நிறுத்தியது. அப்படியே சிலையாக நின்றேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அந்தப் பார்வையற்றவர் எழுந்து தன் ஊன்றுகோலால் காற்றில் துழாவினார். அந்த ஊன்றுகோல் வழக்கமானதாக அல்லாமல் வயதானவர்கள் வைத்துக்கொள்வதுபோல் கைப்பிடி வளைந்து இருந்தது. அதன் வளைவு அந்த முரட்டு ஆளின் காலில் சிக்கிக்கொண்டது. அவன் உதற முயன்றான். இப்போது மூவருமாக வாசலைநோக்கி அங்குமிங்கும் தள்ளாடியபடி இழுத்துக்கொண்டு சென்றார்கள். எனக்கு உடலில் உஷ்ணம் பரவியது.

அந்தப் பார்வையற்றவர் இப்போது அந்தப் பையனை முரடனின் பிடியிலிருந்து விடுவித்தார். முரடன் அந்தப் பார்வையற்றவரை அடிக்கக் கை ஓங்கினான். அதற்குள் அவர் தன் ஊன்றுகோலை அவன் கால்களுக்கிடை யிலாக வளைத்து ஒரு இழுப்பு இழுத்தார். அந்த ஆள் அப்படியே மல்லாந்து வாசலிலிருந்து வெளியேறி ஓடும் ரயிலிலிருந்து விழுவதைப் பார்த்துத் திகைத்தேன்.

அவர் மெல்ல தன் தடியை ஊன்றிக்கொண்டு அந்தப் பையனை, காற்றில் துழாவி முகத்தைத் தடவிப்பார்த்தபடி “நீயும் அந்தப் பொண்ணும் அடுத்த ஸ்டேஷன்ல இறங்கிப் போயிடுங்கப்பா” என்றார்.

ரயில் பழவந்தாங்கலில் நின்றது. ஏதோ விபரீதமாகப்போகிறது. நான் மெல்ல இங்கே இறங்கி அடுத்த பெட்டியில் ஏறிக்கொள்ளலாமா என்று யோசித்தபடி அந்தப் பார்வை யற்றவரைப் பார்த்தேன்.

அவன் என்னையும் அவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு அந்தப் பெண்ணைக் கைத்தாங்கலாகத் தூக்கினான். அவள் அழுதுகொண்டே எழுந்து நின்றாள். அவன் லக்கேஜுகளைத் தூக்கிக்கொண்டான். அதற்குள் சைதாப்பேட்டை ஸ்டேஷன் வந்தது. அந்த ஜோடி மெல்ல இறங்கி எங்களை ஒரு தடவை பார்த்துவிட்டு பிளாட்பாரத்தில் நடக்கத்தொடங்கினார்கள். ரயில் நகர ஆரம்பித்தது.

நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு கல்லாக நின்றேன்.

அந்தப் பார்வையற்றவர் இப்போது என்னை நோக்கித் திரும்பினார். மெல்ல நடந்து வந்து என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்தார்.

“உட்காருங்க சார்” என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் ஒருத்தன் அங்கே இருப்பதை அவர் அறிந்திருந்தாரா?

நான் மெல்ல உட்கார்ந்தேன்.

“நான் மாம்பலத்துல இறங்கி போலீஸ்கிட்ட சொல்லப்போறேன். வாசல் பக்கத்துல நின்னுட்டு இருக்கும்போது தவறுதலா என்னோட ஊன்றுகோல் கால்ல இழுத்து அந்தாள் விழுந்துட்டார்னு. நீங்க சாட்சி சொல்லுவீங்களா. அந்தப் பொண்ணையும் பையனையும் பத்தி எதுவும் சொல்லிடாதீங்க சார். வாழ வேண்டியவங்க” என்றபடி புன்னகைத்துக்கொண்டே மீண்டும் தன் இயர் போனைக் காதுக்குள் செருகிக்கொண்டார்.

“சாட்சி சொல்லுவீங்களா சார்” என்றார் மறுபடியும்.

எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. உள்ளுக்குள் உருண்ட பயம் மறைந்து, என் கையாலாகாத்தனத்தை எண்ணி வெட்கமும் கோபமும் திரண்டது.

கண் காது வாய் : சிறுகதை

“செல்லுவேன் சார்” என்று சட்டென்று கூறிவிட்டேன்.

அவர் மொபைலைத் தடவி ஆன் செய்தார். “சார், நீங்க விகடன் கதைகள் படிப்பீங்களா” என்றார். சர்வசாதாரணமாக, பதற்றம் இல்லாமல் இவரால் எப்படி இருக்க முடிகிறது என்று யோசித்தேன்.

“என் ஃபிரெண்ட்ஸ் விகடன்ல வர கதைகளைப் படிச்சு ரெக்கார்டு பண்ணி எனக்கு ஆடியோவா வாட்ஸ் அப்புல அனுப்பிருவாங்க. இன்னைக்கு ஒரு கதையை இயர்போன்ல கேட்டுட்டிருக்கும்போதுதான் இப்படி ஒரு பிரச்னை” என்றார்.

“என்ன கதை” என்றேன்.

“கண், காது, வாய்” என்று புன்னகைத்தார்.