சினிமா
தொடர்கள்
Published:Updated:

கிழவியும் கிழவியாகப் போகிறவர்களும் : சிறுகதை

கிழவியும் கிழவியாகப் போகிறவர்களும் : சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
கிழவியும் கிழவியாகப் போகிறவர்களும் : சிறுகதை

08.08.2019 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...

யசுப் பிள்ளையா தோட்டந்தொரவுக்குப் போயிருப்பாள், பக்கத்துவீட்டுப் பால்க்காரம்மாவோடு சேர்ந்து நடைப்பயிற்சிக்குப் போயிருப்பாள்’ எனச் சொல்ல, நாலு எட்டு சேர்ந்தாப்போல வைக்கவே ‘`யய்யா ஈசுவரா’’ என மூச்சுக்கு முந்நூறுதரம் படச்சவனையும் பார்வதியையும் கூப்பிட்டு மூச்சுவாங்குவாள். எங்கே போய்த் தேட?

பாசம், பக்தி என்பதைக்காட்டிலும் உடன்பிறந்த சகோதரர்களிடம் உள்ள பயம்தான் பாலையாவை பயமுறுத்தியது. ``எங்கடா கிழவிய?’’ என உருட்டுக்கட்டையைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுவான்கள். மாதம் பிறந்ததும் படியளக்கும் காமதேனு - அய்யாவின் பென்சன் பணத்துக்கு முழுவாரிசு.

இத்தனைக்கும் வீட்டுக்கு உள்ளேதான் படுக்கை போட்டு வைக்கிறாள் தேவானை. மூத்தமருமகள் விஜயாவைப்போல வெளித்திண்ணையெல்லாம் ஒதுக்கி, தள்ளி வைப்பதில்லை.

தான் வெளியேறிப் போனதுமில்லாமல் அர்த்த ராத்திரியில் இப்பிடி அசட்டுத்தனமாய் `பா...’வென வீட்டைவேறு திறந்து போட்டு விட்டுப் போயிருக்கிறாளே கிழட்டுச்சிறுக்கி. உச்சிவெயில் உருக்கி எடுத்தாலும் மத்தியானப் பொழுதில்கூட வீட்டுக் கதவைத் திறந்துவைக்கமாட்டாள் தேவானை. வேறொரு சமயமாய் இருந்தால் கிழவியை நார்நாராய்க் கிழித்துப் போட்டிருப்பாள். எவனாச்சும் புகுந்து சட்டிபானையைத் தூக்கிப்போனால் என்ன செய்ய... ரெண்டு துணிமணியைச் சொல்லு?!

இவ்வளவு கொதிப்பையும் புருசனிடம் சொல்ல முடியாது. ஆத்தாளைக் காணோமென, விடிந்ததிலிருந்து வேலைக்குக்கூடப் போகாமல் வீதிவீதியாய் நாயிலுங்கேடாய் அலைந்து தேடிக்கொண்டிருக்கிறான். அக்கம்பக்கம் குடியிருக்கும் பெண்களிடத்திலேதான் சொல்லித் தேத்திக்கொள்ளவேணும். அவளுக்கென வாய்த்தவள் கூடலூரிலிருந்து வாக்கப்பட்டு வந்த மீனாதான் கொஞ்சமும் சுணங்காமல் தேவானையின் வார்த்தைகள் அத்தனையையும் அப்படியே வாங்கிக்கொள்வாள்.

கிழவியும் கிழவியாகப் போகிறவர்களும் : சிறுகதை
கிழவியும் கிழவியாகப் போகிறவர்களும் : சிறுகதை

“வயசாயிருச்சுனா புத்தி பெரண்டு போகுமோ... ஏன்க்கா!” என மீனா கேட்டதும், தேவானையின் கண்ணில் மாலைமாலையாய்க் கண்ணீர் வடிந்தது. “என்னப் பெத்த ஆத்தாளுக்குக்கூட இம்புட்டுச் செஞ்சதில்ல மீனா, புருசனப் பெத்தவள, இன்னொரு தாயாத்தானடி பாத்துக்கிட்டேன். இனிப் பாரு, ஆத்தாளக் காணோம்னு வந்து எனக்கு வாச்ச மகராச என்ன கூப்பாடு போடப் போறானோ. நெனைக்கவே அங்கம் பதறுது மீனா, இந்தக்கெழட்டு முண்டைனால நாலுபேர் பாத்து மூணுபேர் சிரிக்கறாப்பல ஆச்சேடி எம்பொழப்பு” உண்மையிலேயே தேவானை பதறுவது மீனாவுக்குப் பாவமாகத்தான் இருந்தது.

“அண்ணே அப்பிடியெல்லா நடக்க மாட்டார்க்கா. அவருக்கு யாரு என்னான்னு தெரியாதா?” அவளை சமாதானம் செய்யும் நோக்கில் பேச்சைத் தொடுத்தாள் மீனா.

“அந்த மனுச மொகராசி அப்பிடிடி. பாத்தாத் தெரியாது. எல்லாருக்குமே நாந்தான் கோவக்காரியா தெரிவே. ஏன்னா எதையும் மனசில வச்சிக்காம படக்குபடக்குன்னு பேசிடறேன்ல! சின்னவ வகுத்துல இருக்கப்ப இதேமாதிரிதே, இந்தக் கெழடினால வந்த ஒரு வாய்த்தகராறுல அந்த மனுசனுக்குக் கோவம் வந்து குடிக்கிற சருவச்செம்ப எடுத்து சடார்னு எறிஞ்சிட்டார்டி. அது கன்னத்துல பட்டு கடவாப்பல்லு ஒடஞ்சுபோயி இன்னவரைக்கும் வளரவே இல்ல தெரியுமா. அவக ஆளுகள ஒரு வார்த்த கொறச்சுப் பேசிறக்கூடாது. நுனிமூக்குல கோவம் வந்துரும் மனுசனுக்கு.”

மீனாவுக்கும் கிழவிமேல் கோபம் வந்தது. என்ன பிரச்னையானாலும் ஒருவார்த்தை சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். வீணாக புருசன் பொண்டாட்டிக்குள் பகையை வளர்க்க வேண்டாமே. தேவானையைப் பார்க்க ரெம்ப ரெம்பப் பாவமாய் இருந்தது. எப்போதும் தெருவுக்குள் கெம்பிரிக்கமாய்த் திரிபவள். யார் முன்னாடியும் முகம் தொங்கவிட்டுப் பார்த்ததில்லை. அப்படியாப்பட்டவள் இன்று அழுமூஞ்சியாய் நிற்பது வேதனையளித்தது.

இனி எம் மொகத்துல நிய்யும் முழிக்காத நானும் முழிக்கமாட்டே, நீ செத்தாலும் மண்ணுத் தள்ளக்கூட வரமாட்டே, யாரும் என்னியக் கூப்புடவும் கூடாது

“எதுஞ் சாப்ட்டியாக்கா?”

அதிகாலையிலிருந்தே கிழவியைத் தேடும்படலம் நடந்துகொண்டிருப்பதால் வீட்டில் எதுவும் ஆக்கிப் பொங்க வாய்ப்பில்லை. தன்வீட்டில் போய் அவளுக்கு ஒருவாய் காப்பித் தண்ணியாவது போட்டுக்கொண்டு வரலாமென நினைத்தாள் மீனா.

``என்னத்தச் சாப்புட, நேத்துராத்திரி கெழவிக்கு வச்ச சப்பாத்தி எனக்கென்னான்னு உருளக்கெழங்குக் குருமாவோட அப்பிடியே கெடக்கு. ஆத்தாளுக்குக் காலம்பற சூடா இட்டிலி செய்யலேன்னா மனுசனுக்கு உச்சிமண்டைல சுர்ருன்னு கோவம் பொத்துட்டு வந்துரும். அதுக்கொசரம் அரப்படி அரிசியப்போட்டு ஆட்டிவச்சு, அந்தமாவுச் சட்டில ஒருபக்கம் புளிச்சுப்போய் எனக்கென்னான்னு கெடக்கு. வீட்ல பாலுக்குக் கொறவா, மோருக்குக் கொறவா. நாந்தே பல்லுல பச்சத் தண்ணி படாமக் கெடக்கேன்.”

தேவானையின் புலம்பலிலிருந்து அவள் காப்பி சாப்பிடவில்லை என்பதை உறுதிசெய்து கொண்ட மீனா, “வெறும் வகுத்தோட இருக்கக்கூடாதுக்கா. அதும் காலம்பற” என்றபடி தன்வீட்டுக்குள் நுழைந்தாள். அந்தச்சமயம் தேவானையின் மகன் +2 வகுப்புக்குப் போவ தற்காக புத்தகப் பையுடன் வெளியில் வந்தான்.

“ஏம்மா, நா என்ன மண்ணவா தின்னுட்டுப் பள்ளி யொடம்போக? கொஞ்ச மாச்சும் புத்தி வேணாமா! கெழவியக் காணோம்னா சோறுதண்ணி ஆக்கக்கூடாதா... வீட்ல கொஞ்சூண்டு புளிச்ச தண்ணியக்கூடக் காணாம்!” என முகம்சுளிக்கப் பேசியவன், “அடுப்படிலேருந்து அம்பது ரூவாய எடுத்துட்டுப் போறேன், காணோம்னு தேடாத.” சட்டமாய்ச் சொல்லிவிட்டு சைக்கிளை உருட்டிக் கொண்டு கிளம்பினான். மகனிடமிருந்த ரூபாயைப் பிடுங்க தேவானை வேகமாய் எழ எத்தனித்தபோது, கையில் காப்பித் தம்ளருடன் வந்தாள் மீனா.

கிழவியும் கிழவியாகப் போகிறவர்களும் : சிறுகதை
கிழவியும் கிழவியாகப் போகிறவர்களும் : சிறுகதை

“குமாரு இப்பதே ஸ்கூலுக்குப் போறானா?” சைக்கிளில் போய்க்கொண்டிருப்பவனைப் பார்த்தபடியே தேவானைக்கு காப்பியைக் கொடுத்தாள். “புள்ளைங்களுக்காச்சும் எதுஞ் செஞ்சுவச்சியா, அதுகளும் பட்டினியாத்தே போகுதுகளா?” பள்ளிசெல்லும் பிள்ளை வயிற்றில் பசியுடன் போக, சகிக்கவில்லை மீனாவுக்கு.

கிழவி பிறந்தது பாளையம் – அம்மாபட்டி என்றாலும், வாக்கப்பட்டது அல்லிநகரம் தெற்குத் தெரு என்பதால் தெக்குத்தெரு கிழவி என்பதே கூப்பிடும் பேராகிப்போனது. கிழவி பெத்தெடுத்தது ஒன்பது பிள்ளைகள். இருப்பு மூன்று மகன்கள், ஒரே ஒரு மகள். கிழவியின் பழைய வீட்டில் மூத்தவர் குடியிருக்க, வடக்குத் தெருவில் தேவானையைக் கைப்பிடித்த நடுவுலவரும், கடைக்குட்டி மேற்குத் தெருவிலும் இருக்கின்றனர், பெண்ணை வீரபாண்டியில்தான் கட்டிக் கொடுத்திருந்தார்கள். `ஒத்தபிள்ள தூரந்தொலவெட்டு வேணாம்’ என அவர்களின் அய்யா முடிவெடுத்தார். அதனால் சொந்தத்திலேயேதான் கொடுத்திருந்தார்கள். கிழவர் கண் உள்ளமட்டும் அடிக்கடி வந்துபோனாள். கிழவி தனியாக இருக்குமட்டும் அவ்வப்போது வந்து பெத்தாளை விசாரித்துப் போவதும் உண்டு.

போனவருசம் ஒரு சின்ன மனத்தாங்கலில் இருந்து, மகள் அவ்வளவாக இந்தப்பக்கம் வருவதில்லை.

``ஒருவேளை மகளைப் பார்க்கப் போயிருக்குமோ?’’ திடீர் சந்தேகம் வந்தவளாய்க் கேட்டாள் மீனா. “நீ சொன்னமாதிரி அங்கமட்டும் போயிருந்தான்னு வையி, அப்புடியே புடுச்சு வீரவாண்டி ஆத்துல தள்ளிவிட்டு மூணா நா காரியத்தையும் மொத்தமா முடிச்சிட்டு வந்திரவேண்டியதேன்” என அங்கம் அதிர பதில் சொன்ன தேவானைக்கு, அப்படியும் இருக்குமோ என்ற ஒரு கேள்வியும் எழுந்தது.

“மாசம் என்னைக்கிப் பொறக்குதுடி? இங்கிலீசு மாசம்... இன்னிக்கா, நாளைக்கா?”

“இன்னிக்கிதே.”

மீனாவின் வாயிலிருந்து பதில் வந்த விநாடியில் படீரென எழுந்தாள் தேவானை. “ஓவ் வாய்க்கி சக்கரையத்தாண்டி போடணும். நெனைச்சேன். ஆனாலும் போனவர்சம் இதே பொரட்டாசி மாசந்தே அந்த வீரவாண்டிக்காரி புருசனோட வந்து ‘இனி எம் மொகத்துல நிய்யும் முழிக்காத நானும் முழிக்கமாட்டே, நீ செத்தாலும் மண்ணுத் தள்ளக்கூட வரமாட்டே, யாரும் என்னியக் கூப்புடவும் கூடாதுன்னுட்டுப் போனா. கெழவிக்கு பெத்தபாசம் துடிச்சிருச்சு போல” உடனே புருசனைக் கண்டு வீரபாண்டி போய் கிழவியின் தலைமயிரைப் பிடித்து இழுத்துவரச் சொல்ல வேண்டுமெனத் துடித்தாள்.

கிழவனார் கூட்டுறவு வங்கியில் வாட்ச்மேனாக வேலைபார்த்து மண்டையைப் போட்டவர். அவர் உயிரோடு இருக்கும் மட்டும் அத்தனை பிள்ளைகளையும் கரைசேர்த்துவிட்டுத்தான் போய்ச்சேர்ந்தார். அவர் இருக்கிறவரை பொம்பளப் பிள்ளைக்கு நல்லசெல்வாக்கும் போக்குவரத்தும் இருந்தது. ஆடி, தீவாளி என்றில்லை, நெனைச்சாப்போதும், “விக்கல் எடுத்துச்சு, அய்யா நெனைக்கிதுன்னு ஓடி வந்திட்டேன்..! கெனாவுல அய்யா வந்து வாசப்படில நிண்டு பச்சத்தண்ணி குடு ஆத்தான்னு கேக்கறாப்பல இருந்திச்சு... பேர, தாத்தாகிட்ட போகணும்னு காலைலேருந்து அடம்பிடிச்சு அழுதான்... ” என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, பிள்ளையை இடுப்பில் இடுக்கியபடி வாசலில் வந்து நிற்பாள்.

அன்றுமுழுக்க கிழவனும் கிழவியும் வாயெல்லாம் பல்லாகத் திரிவார்கள். தெரிஞ்சு அய்யாவும், தெரியாமல் ஆத்தாளும் பை நிரப்பி அனுப்புவார்கள். அதற்குமேல், மருமகன் வந்துவிட்டால் கறியென்ன புளியென்ன, மாமனும் மருமகனும் ஒருத்தருக்குத் தெரியாமல் ஒருத்தர் குவாட்டர் பாட்டிலை வாங்கிக்கொண்டு வந்து பரிமாறிக்கொள்வார்கள்.

தனது ஊரில் கிழக்குத்தெருவில் `கட்டக்கால்’ அடிப்பதைக் கண்டுவிட்டால் வீரபாண்டிக்காரிக்கு அய்யா ஞாபகம் வந்துவிடும். அவளுக்கு அதை வல்லிசாய் செய்யவும் தெரியாது. அந்தத் தெருவிலிருந்து காமாட்சியைக் கூட்டிவந்து வறுவல் போட்டு வைப்பாள். அதை எடுத்துக்கொண்டு மாமனும் மருமகனும் ஊருக்குத் தெற்கிலிருக்கும் தேரிமந்தைக்குள் போய்விடுவார்கள்.

ரிட்டையர் ஆகிவந்த பணத்தை ஆண்மக்களுக்குச் சமமாகப் பெண்ணுக்கும் பிரித்துக் கொடுத்தபோதுதான் வீட்டுக்குள் முதல் விரிசல் விழுந்தது. “இதென்னா ஊர்ல இல்லாத புது வழக்கமா இருக்கு?” என முதல் எதிர்ப்பை மூன்றாவதாய் வந்த மார்க்கயன்கோட்டைக்காரி எழுப்பினாள்.

“என்னத்த புது வழக்கத்தக் கண்டுபிடிச்சிட்டீகப்பா!” கேட்ட மருமகளைப் பார்த்துப் பேசாமல், அவள் புருசன் கடைக்குட்டியைப் பார்த்தபடி கேட்டார் கிழவனார்.

“பொம்பளப் பிள்ளைக்கித்தே வழமையா செய்யவேண்டிய நாலொரு செய்மொறையும் செஞ்சாச்சி. வந்து போனா, தெரிஞ்சு பாதி தெரியாம மீதின்னு தெனத்துக்கு ஒண்ணு செஞ்சமானைக்கித்தான இருக்கம். இதுல பிஞ்சன் காசையும் பிரிச்சிக் குடுத்துட்டா... மத்தவங்களுக்கும் வாயி வகுறு இருக்குல்ல?” மூத்தமருமகள் விஜயாவும் அதனை வழிமொழிவதுபோலப் பேசினாள்.

“எல்லாருக்கும்தான தாராரு விசயா” கிழவி செருமுவதுபோல, பதறாமல் வார்த்தைகளை எடுத்துவைத்தாள்.

“ஒங்களுக்கெல்லா ஒங்க அய்யாவீட்ல, இப்பிடித்தே கலியாண சீரு செஞ்சு, அதுக்கு மேக்கொண்டு சவரட்டண செஞ்சு அனுப்பிச்சாகளா?” தேவானை தனக்கான வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தினாள்.

மகன்கள் தங்களது குரலாய் மனைவிமார்களைப் பேசவிட்டதில் கிழவனாருக்கு மனங்கொள்ளாத கோவம் “ஆமாப்பா, நா அப்பிடித்தே செய்றேன். இது என் சொந்தச் சம்பாத்தியம். இத யாருக்குக் குடுக்கணுங்கற சொதந்தரம் எனக்குத்தே இருக்கு” என்றவர், “கூடப் பொறந்தது ஒரு பிள்ளதானடா ? அந்தப்பிள்ளைக்கி மூணுபேரும் இன்னிக்கி வரைக்கிம் ஒரு முக்காத்துட்டு இந்தான்னு ஈந்திருப்பீகளா. அப்பிடித் தந்திருந்தா நம்ம கண்ணுக்குப் பின்னால பெத்தமக்க, கூடப்பொறந்தத தங்கமா பாக்காட்டியும் பித்தளையா வாச்சும் வச்சுக்குவாங்கென்னு நெனைக்கலாம். எங்கண்ணு முன்னாடியே கண்டுக்க மாட்டீங்கறீக. நானும் செய்யலேனா ஆரு செய்வா. அதேன் சமமா தரேன். இதுமட்டுமில்ல, நாளைக்கி எனக்குவார பென்சன்லயும் ஒருபங்கு அந்தப் பிள்ளைக்கித் தரணும்னு எழுதி வெக்கப் போறேன்” என நெஞ்சைப் பிடித்துக்கொண்டு பேசினார்.

வீரவாண்டிக்காரி அப்பனுக்குப் பன்னிக்கறிய ஆக்கிப் போட்டு சரிக்குச் சரியா பங்கப்பிரிச்சு வாங்கிக்கிட்டா என மருமக்கமார்கள் தூற்றலாயினர்.

“என்ன தேவான, கெழவி எங்குட்டுப் போனா?” மூத்தாள் விஜயா தன் இளைய மகனைக் கைப்பிடியாய் இழுத்துக்கொண்டு வந்து நின்றாள். அவனது கையில் புத்தகப்பை தொங்கியது. பிள்ளையைப் பள்ளிக்கனுப்பும் வழியில் விசாரிக்க வந்திருக்கிறாள்.

“எங்க போகப்போறா பாவம்! ஒண்ணாந்தேதி இல்லியா, பணம் வந்துருக்கான்னு தவால்க்கார வீட்டுக்கு விசாரிக்கப் போயிருக்கும்! வேற ஆத்தா குச்சு, அப்பங்குச்சா இருக்கு தங்கியிருந்து வர.”

எந்தப் பதற்றமுமில்லாதவள் மாதிரி தன்னைக் காண்பித்துக்கொண்டது மீனாவுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. இத்தனை நேரமும் சடங்கான பிள்ளையைத் தொலைத்து விட்டதுபோல கண்ணீருங் கம்பலையுமாயிருந்த தேவானையின் இந்தத் திடீர் மாற்றம் விளங்கவில்லை. ஆனால் விஜயா, இது பசப்பு எனக் கண்டுகொண்டாள்.

கிழவனாரின் மறைவுக்குப் பின்னால் கிழவி, தனியாகத்தான் இருந்தாள். பென்சன் அவள் பெயருக்கு மாறியதும் தனித்த வீடு பிள்ளைகளின் வரவால் மீண்டும் கலகவாசல் ஆனது. ஆளாளுக்கு தினமொரு கோரிக்கை வைத்துக் கிழவியிடம் காசு பிடுங்கலாயினர். இதில் வீரபாண்டிக்காரியும் அடங்கி னாள். ஊரிலிருந்து ஆத்தாளைப் பார்க்க எப்பவும் வெறுங்கையுடன் வரமாட்டாள். என்னத்தியாச்சும் மொச்சக்காய்க் குழம்போ குச்சிக்கருவாடோ ஏதோ ஒன்றை ஆக்கிக்கொண்டு வாளியில் எடுத்து வந்தால், பிள்ளை குட்டிகளோடு அமர்ந்து பிக்னிக் வந்ததுபோல ஆத்தாளோடு சேர்ந்து சாப்பிட்டு விட்டு காலிப்பாத்திரத்தை எடுத்துச் செல்வாள். ஆனால் பிறந்த வீட்டிலிருந்து வெறும்வாளி போக பெத்தமனசு ஏற்குமா? ஏதாவது அரிசிபருப்பு, ரெண்டு பலகாரம் பட்சணம் ஒண்ணு மில்லாவிட்டால் நூறு இருநூறு பணமாவது போட்டுத்தான் அனுப்பி வைப்பாள்.

ஆகா, அலர்ட்டா இர்ரா ஆறுமுகம்னு, அண்ணந்தம்பி மூணுபேரும் சட்டுனு முடிவு பண்ணி, `அம்மாவ தனியா விடக் கூடாது. ஆளுக்கொருமாசம் வீட்டுக்குக் கூட்டிப்போயி வீட்ல ஒக்காத்திவச்சு கஞ்சி ஊத்தணும்னு’ பேசினபோது, அய்யாவோட ஆசப்படி மகளுக்கும் அந்தக் கொடுப்பினை தந்தாகணும் என்று வீரவாண்டியிலேருந்து தாக்கீது வந்தது. அரமனசோட ஒத்துக்கிட்டாங்க.

ஆத்தா யார் வீட்ல இருக்கோ அவுக அந்தமாசத்துப் பென்சன வாங்கி அனுபவிச்சுக்க வேண்டியது! மாசம் பொறந்ததும் அடுத்த வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டுடணும். யாரும் கொண்டுவந்து விடுற வரைக்கும் பொறுமை யாயிருக்கறதில்ல. பொழுது கூவுன நிமிசத்திலேயே ஆத்தாவ அழச்சிட்டுப்போக ஆள் வந்திடும், இல்ல, ஆட்டோ வந்திடும்.

இதுக்கு முன்னேயும் ஆட்டோ வரும். கிழவி வீட்டில் இருக்கறப்ப ஒண்ணாம்தேதி பொறந்திருச்சுன்னா பேங்குக்குப் போக மூணுபேரும் ஆளுக்கொரு வண்டியோடும் வந்ததுண்டு. முன்னாடி வாரவன் சட்டுன்னு குப்பைக்கூடைய அள்ளிப் போட்டுட்டுப் போறாப்ல, கிழவி, முகம் கழுவியும் கழுவாம, சேலகட்டியும் கட்டாம கூட்டிட்டுப் போயிருவாங்க! கையெழுத்து போட்டு பணத்தவாங்குனதும் அங்கனயே விட்டுட்டு வந்த கூத்தெல்லாம் நடந்ததுண்டு.

கூத்தில் பெருங்கூத்து, வீரபாண்டிக்குக் கிழவி போனபோது நடந்ததுதான். பென்சன் பணத்தோடு பத்தாயிரம் ரூபாய் கடனுக்கும் சேர்த்து கிழவி கையெழுத்து போட்டுவிட்டாள். அதற்கடுத்தமாதம் கடனுக்கான முதல்தவணை பிடித்தம் செய்தபோதுதான் மகன்கள் மூவரும் கைகோத்தனர். மருமக்கமார் கிழவியைத் தூக்கிக்கொண்டு வீரபாண்டியில்போய்க் கலகம் செய்தனர். மகன்களுக்காகக் கிழவியும் “இப்பிடியொரு காரியத்தச் செய்யலாமாங்யா” என முதன்முதலாக மருமகனிடம் கேள்விகேட்டதை மகளால் பொறுத்துக்கொள்ள முடியாமல் “காரேறிவந்து இப்பிடி ஊருக்குள்ள எங்கள அசிங்கப்படுத்திட்டீல்ல, நீ எனக்கு ஆத்தாளுமில்ல, நா மகளுமில்ல. செத்தாக்கூட எனக்கு யாரும் ஆளனுப்பிச்சு விடக் கூடாது” எனத் தானாய் ஒதுங்கிக்கொண்டாள்.

கிழவியும் கிழவியாகப் போகிறவர்களும் : சிறுகதை
கிழவியும் கிழவியாகப் போகிறவர்களும் : சிறுகதை

“தவால்கார வீட்டுக்கு எதுக்கு கெழவி போகுது? எதும் லவ் லெட்டரு வந்திருக்கான்னு கேக்கவா? தேவான பேசுனாத்தே தமாசா இருக்கும்!” மீனாவை இழுத்து வைத்துத் தனது பேச்சை ஒப்பித்தாள், மூத்தாள் விஜயா.

தேவானைக்கும் அது சுருக்கெனத் தைத்தது. பேங்கில் பணம் வாங்குவதற்கும் தபால்காரருக்கும் என்ன சம்பந்தம்? முதியோர் பென்சனுக்குத்தான் தபால்காரர் பொறுப்பு. இப்போது அதுவும்கூட ஸ்டேட் பாங்குக்கு மாறிவிட்டது. ஆனாலும் முன்வைத்த காலைப் பின்வாங்கக் கூடாதே!

“அதில்ல விசயாக்கா. நாலஞ்சு மாசமா பணம் வாரதில்லைல. அது சம்பந்தமா எதும் தபால் வரும்னு சொன்னாக, அதக் கேட்டு வாங்கப் போயிருப்பா!” சொல்லித் தப்பிப்பதற்குள் வேர்த்துப்போனது தேவானைக்கு.

“அதென்னமோ தேவான, ஒம்பாடு ஒம்மாமியா பாடு...” என்ற விஜயா, “போடா... சித்தி வீட்டுக்குள்ள போயி எண்ணெயத் தேச்சிட்டு வா. இவன ஏச்சு பள்ளியொடம் அனுப்பங்குள்ள நமக்கு தண்ணிதவுச்சு தாவு தீந்துபோகுது” மகனிடமிருந்து புத்தகப் பையைப் பிடுங்கிக்கொண்டு வீட்டுக்குள் விரட்டிவிட்டாள். அவன், “நா எண்ணெயல்லா தேக்க மாட்டேன்” என அம்மாவின் சேலையைப் பிடித்துக்கொண்டே நின்றான்.

“பள்ளியொடம் போறபுள்ள தலயில எண்ணெ வெக்காமயா போவாக. போ, போய்த் தேச்சிட்டு வா” மீனாவும் சொன்னாள்.

வீட்டுக்குள் கிழவி இருக்கிறாளா இல்லையா என வேவு பார்க்கத்தான் பிள்ளையை அனுப்புகிறாள் மூத்தாள் என்ற சந்தேகம் தேவானைக்கு. தானும்கூடப் போய்ப் பார்க்கட்டுமே. என்கிற கடுப்பில் அமைதியாய் இருந்தாள். எண்ணியது போலவே மகனுடன் மல்லுக்கட்டியவாறே தானும் வீட்டினுள் நுழைந்து எண்ணெய் தேய்த்துத் தலைசீவி, முகத்துக்குப் பவுடரும் பூசிக்கொண்டு வந்தாள். “இவன பள்ளியொடத்துல விட்டுட்டு வாறேன்” தேவானைக்குச் சொல்வதுபோல அருகில் நின்ற மீனாவைப் பார்த்துச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

“காரேறிவந்து இப்பிடி ஊருக்குள்ள எங்கள அசிங்கப்படுத்திட்டீல்ல, நீ எனக்கு ஆத்தாளுமில்ல, நா மகளுமில்ல. செத்தாக்கூட எனக்கு யாரும் ஆளனுப்பிச்சு விடக் கூடாது”

இவளாவது இந்த அளவோடு போனாள். இனி, மார்க்கயங்கோட்டைக்காரி வந்தால் வீட்டைப் புரட்டிவிடுவாள். இன்றைக்கு கிழவி அவள் வீட்டுக்குச் செல்லும் முறை. எப்பவும் இன்னேரமெல்லாம் வீட்டுவாசலில் அவள் புருசன் ஸ்கூட்டரைக் கொண்டுவந்து நிறுத்தியிருப்பான். ஏழுதடவை பூல்பூலென ஆரனை அழுத்தியிருப்பான். இல்லாவிட்டால் மார்க்கயன்கோட்டைக்காரியே ஆட்டோபிடிச்சு வந்திருப்பாள். வீட்டில் மாமியாருக்கு வெந்நி வெளாவி, ஆடும் கோழியும் அடுப்புல வெந்துக்கிட்டிருக்க மாதிரி அவசரப்படுத்துவாள்.

கிழவி காணாமல்போன சேதி அங்கேயும் எட்டியிருக்குமோ!

இன்னைக்கி பேங்குக்குக் கூட்டிப்போய் தனக்கு வரவேண்டிய போனமாதப் பணத்தை வசூலித்துக்கொண்டு அனுப்பலாம் என தேவானை நினைத்திருந்தாள். இனி சின்னவள் கூட்டிப்போனால் மொத்தமாக அவளே வசூலித்து வைத்துக்கொண்டால்? மூத்தவளுக்கும் போன தவணைப் பணம் வரவில்லை. இன்று அவளும் உறங்க மாட்டாள். பிள்ளையைப் பள்ளியொடத்தில் விட்டுவிட்டு வந்து நிற்கப்போகிறாள். எப்படிச் சரிக்கட்ட எனக் கணக்குப்போட்டு நிற்கும் சமயம், யாருமே எதிர்பாராதவிதமாய் வீரபாண்டிக்காரி வந்து இறங்கினாள்.

அப்போதுதான் பாலையாவும் ஊரெல்லாம் கிழவியைத் தேடி அலைந்துவிட்டு, களைத்துப்போய் வீடுவந்து உட்கார்ந்தான். தேவானையும் மீனா கொடுத்த காப்பிக்கு அடுத்து ஏதும் சாப்பிடாததால் படபடவென ஒருவடியாய் நெஞ்சு துடித்துக் கிறக்கமாக வருவதாக உணர்ந்தாள். இட்லியோ தோசையோ, கஞ்சியோ சோறோ..! நேரத்துக்கு ஒரு கொய்யாப் பழத்தையாச்சும் வாங்கி வயித்துக்குள் தள்ளிக்கொண்டே இருப்பாள். இன்னைக்கி காலையிலிருந்து ஆள்மாத்தி ஆள்வந்துபோனதில் உக்கார்ந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை.

வருகிறவர்களெல்லாம் ஆளுக்கொரு குண்டைத் தூக்கிப்போடுகிறார்கள். அதனாலோ என்னவோ வயிறு கலங்கி அடிக்கடி பாத்ரூம் போனாள். அப்படிக் கொல்லைக்குப் போகும் சாக்கில் அடுப்படிபோய் செம்புசெம்பாய் தண்ணி குடித்தாலும் பசியடங்க மறுத்தது. அடுப்புள்ளிட்ட விறகாய் குபுகுபுவென எரியத்தான் செய்தது.

இனிமேலும் தாங்காது என்ற நிலையில் மதியம் ஒருமணிக்குப் பள்ளிவாசலில் பாங்கு சொன்ன நேரம் அடுப்பைப் பற்றவைத்தாள். வந்தவர்களிடம் பேசிக்கொண்டே வெறும் கஞ்சி போட்டு இறக்கி வைக்க, மீனா தன்வீட்டிலிருந்து முருங்கைக்கீரை வெஞ்சனம் கொண்டுவந்து வைத்தாள். வட்டில்நிறையப் போட்டு வயித்தை ரொப்பிய பிறகே, உசிர் கூட்டுக்குள் வந்து சேர்ந்தது. அதன்பிறகே பாலையா வீட்டுக்குள் நுழைந்தான். கூடவே பட்டாளம்போல நாலைந்துபேர் வந்தார்கள்.

“அம்மாபிள்ள! நீ, சாப்ட்டியாம்மா. ஒண்ணும் சங்கடப்படவேணாம். இன்னி பொழுது அடங்கங்குள்ள ஆத்தா வந்து சேந்துரும். பெரிய மனுசியில்லியா, எங்கியாவது கேதம் பாக்க, யாரையாச்சும் விசாரிக்கப் போயிருக்கும். அம்ம பக்கத்துல எதும் கேதம் விழுந்திருக்கா, விசாரிச்சுப்பாரு” விருமாண்டியண்ணன் சளசளவெனப் பேசியபடி சேரை எடுத்துப்போட்டு உட்கார்ந்துகொண்டார். அத்தனை பேர் வாயிலிருந்தும் சாராயநெடி அடித்தது. காலையிலிருந்து சுற்றியிருப்பார்கள் போலிருக்கிறது. “அஞ்சாறு ஆட்டோவ அனுப்பிச்சிருக்கம் தாயி! கெழவி எங்கன இருந்தாலும் புடிச்சு - தூக்கீட்டு வந்துருவாங்க.’

எல்லோரையும் பார்க்க வைத்துக்கொண்டே கஞ்சியை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தான் பாலையா. நல்லவேளை கஞ்சிகாச்சியது.

அந்த நேரம்தான் வீரபாண்டிக்காரி வந்தாள்; வந்தவள் அண்ணன் கஞ்சிகுடிக்கும் அழகைப் பார்த்ததும் ஆவேசம் வந்தவளாய் அவனது நெஞ்சுச் சட்டையைப் பிடித்தாள். “எங்க ஆத்தாள எங்கடா கொண்டுட்டுப் போய்ப் பொதச்சீங்க” என்று ஒருபெரிய குண்டைத் தூக்கிப் போட்டாள்.

நாலைந்து மாசமாய் பென்சன் பணம் போடாததால் மருமக்கமார்கள் ஆத்தாளுக்கு சரிவர கஞ்சி ஊத்தாமல் அரப்பட்டினி கொறப்பட்டினியாய்ப் போட்டு கொன்று விட்டார்கள் என அண்ணன் தம்பி அத்தனை பேரையும் ஒட்டுமொத்தமாய்ப் பிடித்துப் பேசினாள். தேவானைக்கு ஆதரவாய் நின்ற மீனாகூட, வீரபாண்டிக்காரியின் பேச்சின் வெம்மையில் பின்னுக்கு நழுவினாள்.

``நா வாங்குன கடன் நாலுமாசத்தில் தீர்ந்துடும். நீங்க, மொத்தத்துக்கு ஆளவே தீத்துட்டீங்களேடா பாவியளா!” என ஒப்பாரி வைக்காத குறையாய் உலுப்பி எடுத்தாள். யாராலும் எதிர்ப்பேச்சு பேசமுடியவில்லை. கூடிநின்றவர்கள் “அண்ணந்தம்பிக மேல இப்பிடி அபாண்டமா பழியப் போடாதம்மா. ராத்திரியெல்லா இருந்திருக்கில்ல” சமாதானம் சொன்னார்கள்.

“அதத்தான கேக்கறேன். ராத்திரி இருந்த கெழவி காலைல எப்பிடி பறந்து போய்ட்டா. றெக்க மொளச்சிடுச்சா ? காசுவரல காசுவரலன்னு நொச்சுக்கொட்டி கஞ்சியூத்தாம தண்ணி ஊத்தாம அவள இப்ப காணாப்பொணமா ஆக்கிட்டாங்கய்யா” என்று பிலாக்கணம் வைக்க, யாரும் பதில் பேச முடியவில்லை. பாலையாவும் விருமாண்டியும் காலையில் இருந்து ஆத்தாளைத் தேடிய கதையினைச் சொன்னார்கள். “தேடாத எடம் ஊருக்குள்ள ஒரு எடமில்ல. கடேசியா கெணறு, கம்மாவுலகூடப் போய்ப் பாத்துட்டு வந்திட்டோம். இதுக்குமேல ஆட்டோவ வேற அனுப்பிச்சிருக்கு. இனி என்ன செய்ய?”

“கேட்டீகளா கேட்டீகளா, கெணறு கம்மாவெல்லாம் எதுக்குய்யா போய்ப் பாக்கணும்? என்னம்மோ செஞ்சுட்டாய்ங்க. இப்பவே நா டேசனுக்குப் போகப்போறேன்.”

விசும்பி நின்ற வீரபாண்டிக்காரியை, மார்க்கயன்கோட்டைக்காரி எதிர்கொண்டாள், “தாராளமா போ, பின்னாடியே நாங்க வாறோம். பென்சன் பணத்தில பங்குதராத கோவத்துல, கெழவி இருந்தாத்தான பணம் வருதுன்னு அவள நீயும் ஒம்புருசனும் சேந்துதே எதோ செஞ்சிட்டீக. ஏன்னா நேத்துவரைக்கும் இங்க இருந்த கெழவி, இன்னைக்கி எப்பிடி மாயமானா, அவ காணாமப்போன நிமிசத்தில உனக்கு எப்பிடி தாக்கல் வந்திச்சு?”

பிரச்னை பெரிதாகும்போலத் தெரிய, “ஏ பாலையா, நல்லாவா இருக்கு. பல்லக்குத்தி மோந்து பாக்காதீகப்பா. ஆகற சோலியப் பாருங்க. வயசான சீவாத்தி எங்க போகப்போகுது. எதாச்சும் சடவுல கொஞ்சம் மனசு சங்கடப்பட்டு எங்குனயாச்சும் ஒக்காந்திருப்பா. அதுங்குள்ள நீங்களா ஏதேதோ பேசி, கருமாதிவரைக்கும் போய்ருவீக போல” என அய்யச்சாமி பெரியய்யா சமாதானம் சொன்னார்.

“அதான, எந்த வீட்லதே எல்லாஞ் சரியா நடக்குது. எனக்குங்கூடத்தே முதியோர் பென்சன் ஒரு வர்சமா வரல. மருமக கரிச்சுக் கொட்டுறா. என்ன செய்ய அவ நெலம அப்பிடி! இந்தக்காசு வந்தா ஏதோ ஒருசெலவ சரிக்கட்டலாமேன்னு கணக்குப் போட்டுருப்பா...” மாரியம்மா கிழவி அறுந்துபோன காதுகள் நடுங்கப் பேசினார்.

``முதியோர் பென்சன் ஊர்ல பாதிப்பேருக்குமேல வரல. அத விடுங்க. எங்கய்யா பேங்கு வேலக்கார்ரு பேங்குல காசில்லாமப் போகுமா?”

``அதான, பேங்குல வேல செஞ்ச காசயுமா அப்பிடிச் செய்வாய்ங்க. மேனேசரப் பாத்துக் கேட்டுவரலாம்ல.” போஸ்ட்மாஸ்டர் சின்னயன் யோசனை சொன்னார்.

“இன்னவரைக்கும் அங்கதா - மேனேசர் வீட்லதா மாமா ஒக்காந்துட்டு வாரே. கெழவி அங்கதா போயிருக்கணும்னு சந்தேகம். மேனேசரு பாவம், கூட்டுறவு பேங்கே வேஸ்ட்டுன்னு பேசறார். ஒண்ணுமே வசூலாக மாட்டேங்கிதாம். அப்பப்ப வார பணத்த அங்க வேல செய்றவங்க எடுத்துக்கறாங்கபோல, அவருக்கே ரெண்டு மூணு மாசம் சம்பளம் எடுக்க முடியலியாம்.” பாலையா தாங்க முடியாத எரிச்சலுடன் பேசினான். பேங்க் மேனேஜரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. “லோனக் குடுன்னு மேல சொல்லீர்றாங்க. சொன்ன நிமிசத்துல பெரிய பெரிய ஆளுக வந்து வாங்கீட்டுப் போயிறாக. வசூலிக்கப் போனா எகத்தாளம் பேசுறாங்க. எதோ சின்னச் சின்ன சம்சாரிக கட்டுற காசிலதான் வண்டி ஓடுது. அவகளும் அடுத்த லோன குறிவச்சுத்தே கட்டுறாக. அது பரவால்ல” என்றவர், “சீக்கிரமா அய்யாவோட நிலுவையத் தந்திர்ரே” எனக் கைகூப்பி அனுப்பி வைத்தார்.

பாலையாவின் வீட்டில் சாயங்காலம் வரை பிரச்னை நீடித்தது. இடையில் யார் யாரோ வந்து சமாதானம் சொன்னார்கள். வீரவாண்டிக்காரி ஒரே காலில் நின்றாள். “ஆத்தாள கண்ணுல பாக்காம சமாதானம் ஆகமாட்டேன்” இடையில் வந்த காப்பி பலகாரத்தைக்கூடத் தொட மறுத்தாள். மீனா நைசாகப் பேசி, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்தாள். பாதிச்சாப்பாட்டில் கண்ணீரால் கைகழுவி எழுந்தாள். “எங்க ஆயாவ சந்தோசமா வச்சுக்கிட்டாகளா?” என மீனாவிடம் கேட்டுக்கொண்டாள்.

ஒருவாறாக, அனைவரும் ஒத்தமுடிவுக்கு வந்து, கருப்பணசாமி கோயில் பூசாரியை வரவழைத்து மைபோட்டுப் பார்ப்பது எனும்போது, நாலரை மணிக்கான பாங்கொலி பள்ளிவாசலிலிருந்து ஒலித்தது.

நாலைந்து மாசமாய் பென்சன் பணம் போடாததால் மருமக்கமார்கள் ஆத்தாளுக்கு சரிவர கஞ்சி ஊத்தாமல் அரப்பட்டினி கொறப்பட்டினியாய்ப் போட்டு கொன்று விட்டார்கள்!

பாலையாவின் வீட்டில் நடுக்கூடத்தில் உட்கார்ந்து வெற்றிலையில் மைதடவி மையோட்டம் பார்த்த பூசாரி, கிழவி கிழக்குப்பக்கம் பதுங்கி இருப்பதாக அருள்வாக்குச் சொன்ன நேரம்... ரேசன் அரிசியைப் புடைத்து நாவியெடுத்துக் குருணை பிரித்துக் கொடுக்கும் வேலையை முடித்துவிட்டு சம்பளமாய்க் கொடுத்த பணத்தை இடுங்கிய கண்களால் எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தாள் கிழவி.

“ஒரு ரெண்டுநாள் கழிச்சு வா, பெரியாத்தா! ரேசன்ல அரிசி வரவும் கூப்புடுறேன்” என அரிசி ஏவாரம் பார்க்கும் மலைக்காரம்மாள் சத்தமாகச் சொன்னாள்.

``வேற சோளம், கேப்பை எது இருந்தாலும் சொல்லு சரசு, வந்து மடக்குச் சொளகு போட்டு பொடச்சு சுத்தஞ் செஞ்சுதாரேன். வீட்ல சும்மாவேதான இருக்கேன்.”

பிளாஸ்டிக் குடத்திலிருந்த நீரை மொண்டு முகத்தில் தெளித்துக்கொண்டு, அப்படியே வாயில் விட்டு, கடவாய் வழியே ஒழுக ஒழுகக் குடித்துவிட்டு, அரிசி குடோனிலிருந்து வெளியே வந்தாள் கிழவி.

- ம.காமுத்துரை

(08.08.2019 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)