Published:Updated:

மஞ்சள் நிறத்தாள் : சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

சிறப்புத்தமிழ் வகுப்பு முடித்துவிட்டு, கல்லூரி யிலிருந்து அவசர அவசரமாகக் கிளம்பும்போது``உமா மேம், எங்கூட ஆட்டோவுல வரீங்களா’’ன்னு கேட்ட கவிதா மேடத்திடம்,``இல்ல மேம் டிரெயின்ல போறேன்” என்று சொல்லிவிட்டு, இந்த மாநகரத்தின் பேரிரைச்சலைக் கடந்து எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தேன்.

மாலை ஆறு மணியிலிருந்து இரவு பத்து மணிவரை உழைத்துக் களைத்துப்போன அந்த எளிய மக்களை வாரியணைத்து வரும் ரயில்களைக் கண்டாலே ஒருவிதப் பேரின்பம் பற்றிக்கொள்கிறது. இருக்காதா பின்ன? சிறுவயதில் எங்கள் கிராமத்தில் ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு ரயில்போல் வளைந்து வளைந்து ஓடும்போது, அதைப்பார்த்த குமார் மாமா “ஹோய் நம்மூரு ரயிலுகிட்ட போனீங்கன்னு வச்சிக்கோ...உங்களை எல்லாம் இழுத்து அது உள்ள போட்டுக்கும்டி” என்று சொன்னவுடன் நாங்கள் பயத்துடன் எங்கள் ரயில் பெட்டிகளைக் கலைத்துக்கொண்டு நாலாபக்கமும் சிதறி ஓடுவது வாடிக்கையாகவே இருந்தது. அதை இப்போது நினைத்தாலும் இந்த ரயில் சத்தத்தைப்போல் கலகலவெனச் சிரிப்புதான் வருகிறது.

பிளாட்பாரத்தில் ஒழுங்கற்ற ஆடையும் செம்பட்டைத் தலையுமான ஒருத்தி தன் கையிலிருக்கும் பிஸ்கட்டை எதிரிலுள்ள நாய்க்கு ஒரு வாயும் தனக்கு ஒரு வாயும் ஊட்டிக்கொள்கிறாள். ``இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை” என்று பாடிச்செல்பவனின் இடது தோள்பட்டை மேல் தன் இடக்கையை நீட்டி வைத்துக்கொண்டு, வலக்கையை ஏந்திச்செல்கிறாள் கண் தெரியாத ஒரு பாமரத்தி. “அம்மாவுக்குக் குடு ராசாத்தி” தன் பிள்ளையிடம் இறைஞ்சுவதுபோல் கைதட்டிக் கேட்டுவிட்டுச் செல்கிறாள் திருநங்கை அக்கா. கூடுகளைச் சுமந்துசெல்லும் நத்தைகளைப்போல் இந்த ரயில் இப்படி வளைந்து நெளிந்து போவதே ஒரு ரம்மியம்தான்.

மஞ்சள் நிறத்தாள் : சிறுகதை

ஒருவழியாக, தலை எது, வால் எது என்று தெரியாத இந்தப் பெருநகரத்தில் முண்டியடித்து ரயிலேறி, ஆட்டோ ஏறி, அப்பாடா என்று மனதை லேசாக்கும் நம் ஏரியாவிற்குள் வந்துவிட்டால் பரம நிம்மதிதான். ஆனால் அந்த நிம்மதியும் சற்று நேரத்தில் சரேலெனப் பறந்துவிடும். கரன்ட் இல்லாமல் ஏரியா முழுதும் ஒரே இருட்டாக இருந்தது. “நாங்கள் வந்தால் கரன்ட் பிரச்னையைத் தீர்த்துவிடுவோம்... நாங்கள் வந்தால் கரன்ட் பிரச்னையைத் தீர்த்து விடுவோம்...” என்று மாறிமாறி எவ்வளவு பெரிய பொய்யைச் சொல்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள். அந்த நிமிடம், ஓட்டு போட்ட விரலை வெட்டி இந்த இருட்டில் எங்கேயாவது வீசிவிட வேண்டும் போலிருந்தது. ஆனால் பாருங்கள், அவ்வளவு கும்மிருட்டிலும் எங்கள் கவுன்சிலர் வீட்டுச் சுவரில் ஒட்டியிருந்த போஸ்டரில் அவர் கும்பிட்டுக்கொண்டு சிரிப்பது மட்டும் பிரகாசமாகத் தெரிகிறது.

குண்டும்குழியுமாக இருக்கும் எங்கள் பிரதான சாலையில் நடந்துசென்று தெரு திரும்புகிறேன். என் பின்னாலிருந்து பகீரென்று அலற வைக்கும் ஆம்புலன்ஸ் சத்தத்தைப்போல் ஒரு பைக்கின் பெரிய ஹாரன் சத்தம் அதிவேகமாக வந்து என் உடலைக் கிழித்துக்கொண்டு கடந்து சென்றது. விதவிதமான ஹாரன் சத்தங்களோடு வண்டிகளை ஓட்டும் இந்த மனிதர்கள் எவ்வளவு வேடிக்கையானவர்கள். என் தெருவின் முக்கூட்டில் வந்தவுடன் பளிச்சென்று தெருவிளக்கின் வெளிச்சம் வந்தது. தெருவில் சில லைட்டுகள் மினுக்கு மினுக்கென்று வருவோர் போவோரைப் பார்த்துக் கண்ணடித்துக்கொண்டிருந்தன.

நத்தை ஓடொன்று உடைந்து என் காலில் இரத்தம் கொட்டுவதைப் பார்த்ததும் மின்னலு என்னைச் சுற்றி சுற்றி ஓடிவந்து கத்த ஆரம்பித்து விட்டாள். காலில் மண் அள்ளிப்போட்டும் இரத்தம் நிற்கவில்லை.

ஆம், அந்த வெளிச்சத்தில்தான் மஞ்சள் நிறத்தாளைப் பார்த்தேன். குறுக்குத்தெருவின் முதலில் இருப்பது என் வீடுதான். எப்போதும் இல்லாமல் என் வீட்டின் சுவரை அணைத்தபடி மஞ்சள் எனப்படும் ஒருவித செவுள் நிறத்தில் முப்பத்தைந்து நாற்பது வயதுள்ள பெண்ணைப்போல் நாய் ஒன்று படுத்திருந்தது. அது அவ்வளவு அழகாக இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு எங்கள் மின்னலின் ஞாபகம் வந்தது.

கண்ணையா நாயுடு வீட்டுக் கழனியில் நடவு நட்டு விட்டு வரும்போது சிறு மழைத்தூறலில் அங்கிருந்த முள்ளுத் தோப்பிலிருந்து அம்மா கூடவே வந்துவிட்டாள் மின்னலு. எங்க அம்மா அவளுக்கு வைத்த பெயர் மிகப்பொருத்தமாக இருந்தது. எங்கள் வீட்டிலிருந்து ``மின்னலு’’ என்று அழைத்தால் எங்கிருந்தாலும் மின்னல்போல் வாலாட்டிக்கொண்டு வந்துவிடுவாள் காலருகில். வீட்டுப் பக்கம் யார் வந்தாலும் குரைக்க ஆரம்பித்துவிடுவாள். “மின்னலு... ஏண்டி கத்தற? அது நம்ம பங்காளி சின்ன தாத்தா. கத்தாத” என்று எங்களுக்கு ஆகும் உறவுமுறையைச் சொல்லியே அவளை சமாதானம் செய்வார் அம்மா.

எங்களைப் போலவே மின்னலுக்கும் பெரிய அண்ணன் என்றால் பயம். அண்ணனுடைய நண்பரின் இரண்டு வயதுக் குழந்தை, மின்னலின் வாலைப் பிடித்து இழுத்து விளையாடும்போது அவள் வலி தாங்கமுடியாமல் ‘வள்’ளென்று குரைத்து, கடிக்க வருவதுபோல் பாவனை செய்து குழந்தையை பயமுறுத்திவிட்டாள். உடனே அண்ணன் அவள் தாடையைப் பிடித்துக்கொண்டு “அறிவில்ல உனுக்கு? கொழந்தகிட்ட இப்பிடிதான் கொலைப்பியா நாய்மாரி?” என்று கேட்டுக்கொண்டே குச்சியால் சுளீரென்று அடித்து விட்டார் என்றாலும், நல்ல மழைநாளில் ஏரி, குளம், குட்டைகளில் கிடைக்கும் நத்தையை அவித்து நாங்கள் சாப்பிடும்போது தன் பங்கில் மின்னலுக்கு முதலில் கொடுப்பதும் அண்ணன்தான். அவள் அதை, சப்புக்கொட்டிக்கொண்டே சாப்பிடுவாள்.

மஞ்சள் நிறத்தாள் : சிறுகதை

ஒருமுறை நாங்கள் சாப்பிட்ட நத்தை ஓடுகளில் துளையிட்டுத் துணிக்கயிற்றில் ஒவ்வொன்றாகக் கோத்து, கொலுசுபோல் காலில் கட்டிக்கொண்டு, நான், சாந்தி, சசிகலா, அம்மு, இளங்கியம்மா எல்லோருமே ஆடிக் கொண்டி ருந்தோம். நாங்கள் ஆடுவதை, தலை சாய்த்து சாய்த்து, கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் மின்னலு. அப்போது நத்தை ஓடொன்று உடைந்து என் காலில் ரத்தம் கொட்டுவதைப் பார்த்ததும் மின்னலு என்னைச் சுற்றிச் சுற்றி ஓடிவந்து கத்த ஆரம்பித்துவிட்டாள். காலில் மண் அள்ளிப்போட்டும் ரத்தம் நிற்கவில்லை. வீட்டுக்குப் போனதும் அதைப் பார்த்த பெரிய அண்ணன் பூவரசம் சுரும்பு ஒன்றை எடுத்து “கால்ல நத்த ஓடு கட்டுவியா இனிமே? சொல்லு... கட்டுவியா? நெறைய வாட்டி சொல்டேன், கால்ல நத்த ஓடு கட்டாதே... கால்ல நத்த ஓடு கட்டாதேன்னு. கட்டுவியா இனிமே?” ``கட்டமாட்டேன்” என்று நான் சொல்லும் வரை அடித்தார். அதைப் பார்த்த மின்னலுக்கு, பெரிய அண்ணனின் மீது பயம் இன்னும் அதிகமானது.

ஒரு தீபாவளி நாளில் காலையிலிருந்து மின்னலு ஆளையே காணவில்லை. எப்போதும் காலையில் எழுந்து அப்பாவுடன் டீக்கடைக்குப் போய்விட்டு, கழனிக்கும் போவாள். அன்று டீக்கடைக்கு உடன் வந்தவள் கழனிக்கு வரவில்லையாம். அம்மா, மின்னல் எப்போதும் போய்வரும் வீடுகளில் விசாரித்துவிட்டு... “சரி எங்கனா சுத்தியிருந்துட்டு வந்துடும்” என்று சொல்லி முடிப்பதற்குள் மவ இரண்டு மூன்று கிலோ உள்ள மாட்டுத் தொடைக்கறியை எங்கிருந்தோ லவுட்டிக்கொண்டு வந்து பெரிய அண்ணனின் முன்னால் வைத்துவிட்டு, ஏதோ ஒரு சாகசக்காரியைப் போல் அண்ணன் முன்னால் நீட்டிப் படுத்துக்கொண்டு கறியையும் அண்ணனையும் மாறிமாறி பார்த்துக் கொண்டிருந்தாள். மின்னலு இப்படிச் செய்தது இதுதான் முதல்முறை. அண்ணனுக்கு ஒரே சிரிப்பும் ஆச்சர்யமும் “டியேய்... எங்கடி போன.... இது இன்னா வேல? ம்ம்... இது இன்னா வேல? எங்க இருந்து எட்தாந்த இத...?” என்று தன் தாடிமீசையை ஷேவ் செய்வதை நிறுத்திவிட்டு, எங்களைக் கண்டிப்பதுபோலவே மின்னலை விசாரிக்க ஆரம்பித்தார். அண்ணன் கேட்கக் கேட்க, குழந்தை ஒன்று குழைவதைப்போல மெல்லிய குரலில் வீலுவீலு என்று எதையோ சொல்லிக்கொண்டிருந்தாள். பிறகு அண்ணனே அதைச் சிறுசிறு துண்டுகளாக்கி வேகவைத்து அவளுக்குக் கொடுத்தார்.

என் கூடவே வளர்ந்து வந்தாள் மின்னலும். இப்போது நான் ஆறாம் வகுப்பு. மின்னலுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வயிறு பெரிதாக ஆரம்பித்தது. “ஏம்மா மின்னலுக்கு வயிறு பெருசா இருக்குது?” “உனுக்கொண்ணும் தெரியாது கம்முனு இரு” என்று சொல்லிவிட்டு மின்னலுக்கு வழக்கமாகக் கொடுப்பதைவிட இரண்டு டம்ளர் பால் அதிகம் கொடுத்தார் அம்மா. அன்று பள்ளிக்கூடம் முடித்துவிட்டு வரும்போது எங்கள் வாசலில் தரையோடு புதைத்து வைத்திருந்த உரலில் கேழ்வரகைக் கொட்டி உலக்கையைக் கை மாற்றி மாற்றி நின்று குத்திக்கொண்டிருந்த அம்மா என்னைப் பார்த்ததும், “நம்மூட்ட தம்பிப்பாப்பா பொறந்திருக்குது. பின்னால போயி பாரு’’ நான் வீட்டுக்குப் பின்னால் ஓடினேன். ஆம் மின்னல் தான். பனங்கொட்டைகளைக் கொட்டி வைத்ததுபோல் ஐந்து குட்டிகள் போட்டிருந்தாள். கண் திறக்காத அந்தப் பிஞ்சுகள் ஒருவர்மீது ஒருவர் படுத்து நெண்டிக் கொண்டிருந்தனர். கன்னங்கறேல் என்றிருந்த குட்டிமேல் என் கைபட்டதும் “கிர்’’ரென்றாள் மின்னல்.

மஞ்சள் நிறத்தாள் : சிறுகதை

சாயம் வெளுத்த லுங்கியோடு சைக்கிளில் வந்து எங்கள் வீட்டின் முன் நின்று. “இந்திராணி...இந்திராணி...” என்று அம்மாவைக் கூப்பிட்டார் சண்முகம் நாய்க்கர். அடுப்பிலிருந்த விறகைத் தள்ளி விட்டுவிட்டு “வாங்க நாய்க்கரே, என்ன விஷயம்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார் அம்மா. நான் என் பள்ளி பேக்கை மாட்டிக்கொண்டு பள்ளிக்கூடம் போக வெளியே வந்தேன். நாய்க்கர் அம்மாவிடம் “வளச்சலு ஃபுல்லா கள வுழுந்துடுச்சி. கால்னி ஃபுல்லா ஆள் கூப்டு பாத்துட்டேன். ஒருத்தரும் வரல. அதான் உன்ன நம்பி வந்தேன் இந்திராணி.” அதற்கு அம்மா “ஒரு காணி இருக்குமா… எத்தினி ஆளு பறிப்பாங்க நாய்க்கரே?” என்றார். “நாப்பது ஆளு பறிக்கிற கழனி” என்றார் சண்முகம் நாய்க்கர்.

அப்போது சுவரின் ஓரம் மின்னல் தன் குட்டிகளுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அம்மா “சரி நாய்க்கரே, இருவது ஆளு கூப்டாந்து கள பறிச்சிட்றேன்…நாப்பது ஆளு கூலி குடுத்துடுங்க” என்றார். சற்று யோசித்துவிட்டு “சரி குடுத்துட்றேன்” என்று சொல்லிக்கொண்டே நாய்க்கரின் பார்வை மின்னல் பக்கம் போனது. “இந்திராணி உங்க நாயா?” “ஆமாம் நாய்க்கரே” “ரொம்ப நாளா கொல்லையில கட்டிப்போடறதுக்கு ஒரு நாய்க்குட்டி தேடிக்கினு இருந்தேன். ஆம்பள நாய்க்குட்டி இருந்தா ஒண்ணு குடு இந்திராணி. அதான் நல்லா கொலைக்கும்” என்று கேட்ட நாய்க்கருக்கு அம்மா “சரி” என்று சொல்லிக்கொண்டே, கறுப்பனைத் தூக்கினார். அப்போது மின்னல் “கிர்… கிர்...” என்று கத்தியது. நான் அம்மாவிடம் “எமா வேணாம்மா. குடுக்காதம்மா. கறுப்பன அவுருகிட்ட குடுக்காதம்மா... நம்மூட்டையே இருக்கட்டும்” என்று கெஞ்சினேன். அம்மா நான் சொல்வது எதையும் காதில் வாங்காமல் கறுப்பனை நாய்க்கரிடம் தூக்கிக் கொடுத்தார். நாய்க்கர் கறுப்பனை சைக்கிளில் தூக்கிக்கொண்டு போகும்போது கறுப்பன் `கிர்… கிர்...’ என்று கத்திக்கொண்டே போனான். அவன் சத்தத்தைக் கேட்கக் கேட்க மின்னலும் `கிர்… கிர்...’ என்று கத்தினாள்.

மஞ்சள் நிறத்தாளின் நெற்றியில் பொட்டும் கழுத்தில் காய்ந்துபோன பூமாலையும் இருந்தது ஆச்சர்யம்தான். இந்த மஞ்சள் நிறத்தாளின் `கிர்… கிர்...’ என்ற சத்தத்தைக் கேட்கும்போது என் மின்னலின் ஞாபகமும் கறுப்பனின் ஞாபகமும்தான் வந்தது. நான் என் மின்னலை அலங்கரித்ததுபோல, `ஒருவேளை இந்த மஞ்சள் நிறத்தாளின் வீட்டில் யாரேனும் அவளை அலங்கரித்திருப்பார்களா? அல்லது, காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இவளுக்குக் கல்யாணம் பண்ணியிருப்பார்களா?’ என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அவள் எங்கள் சுவரை ஒட்டிய தரையை எல்லாம் ஆங்காங்கே பிறாண்டிப் பிறாண்டிக் குழிபறித்து வைத்திருந்தாள். குலைநடுங்க வைக்கும் இந்தத் தெருவில் வரும் பைக்கின் சத்தத்திற்கோ கண்களைப் பிடுங்கிப்போடும் அதன் வெளிச்சத்திற்கோ, பயந்தோ பதறி யடித்துக்கொண்டோ அவள் எங்கும் ஓடவில்லை.

நான் என் மின்னலை அலங்கரித்ததுபோல, `ஒருவேளை இந்த மஞ்சள் நிறத்தாளின் வீட்டில் யாரேனும் அவளை அலங்கரித்திருப்பார்களா?

மெதுவாக வீட்டு முன்வாசலைத் திறந்து மின்விளக்குப் பொத்தான்களை அழுத்தியதும் வீடெல்லாம் வெளிச்சமானது. என் வீட்டின் சுவரையொட்டி அந்த மஞ்சள் நிறத்தாள் படுத்திருந்ததே எனக்கு ஆச்சர்யமாகவும் புதிதாகவும்தான் இருந்தது.

வெளியில் `கிர்... கிர்…’ என்று மஞ்சள் நிறத்தாளின் முனகல் சத்தம் கேட்டது. என் விளக்கு வெளிச்சத்தின் கருணைக்காக அவள் காத்திருந்தாள். அப்பொழுது நேரம் இரவு பத்தைக் கடந்திருக்கும். கழுத்தை நன்றாக மேலே உயர்த்தி விளக்குப் போட்ட கையோடு வெளியில் வரும் என்னையே பார்த்துக்கொண்டு கிர்... கிர்... சத்தத்தை மேலும் உயர்த்தினாள். முன்வாசற் படியில் நின்றுகொண்டே, “புதுசா இங்க வந்து எதுக்கு இப்படிக் கத்திக்கிட்டு இருக்க? சாப்டியா நீ?” என்ற என் வார்த்தைகளை அவளுக்கானதாக உணர்ந்த அடுத்த நொடியில் வீறிட்டுத் தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டாள். “ஏன் அழற? என்னாச்சி? உன்னை யாராச்சும் அடிச்சாங்களா?” என்று நான் கேட்டுக்கொண்டிருக்கும்போதே தெருவின் அந்தமுனையில், கணவனை இழந்த மனைவியைப்போல் சில நாய்கள் ஓலமிட்டுக்கொண்டிருந்தன. மஞ்சள் நிறத்தாளும் பேய் பிடித்துக்கொண்டவர்களை ஆவேசமாகத் துரத்திக்கொண்டு ஓடுவதுபோல் இந்தத் தெருவுக்குள் வந்த ஓரிரு நாய்களை, படு வேகமாக ஓடித் துரத்திவிட்டு வந்து, மறுபடியும் சுவரை அணைத்துக்கொண்டே அழ ஆரம்பித்து விட்டாள்.

எனக்கு ஒன்றும் புரியாமல் “ஏன் இப்பிடி அழற? உனக்கு என்ன வேணும்? இங்க வா... இங்க வாடி” என்று நான் உரிமையோடு பேசப்பேச அவள் தன் மகளிடம் முறையிடுவதைப் போல் கண்ணீரும் கம்பலையுமாய், நீர்வற்றிய குரலோடு என்னருகில் வந்தாள். குனிந்து என் கைகளை அவளிடம் நீட்ட முயற்சி செய்கிறேன். உடனே அவள் என்னிலிருந்து மூன்றடி தூரம் ஓடி இரண்டொரு நிமிடம் அங்கு நின்றுவிட்டு மீண்டும் என்னிடம் ஓடிவந்தாள். மீண்டும் மீண்டும் ஓடி, மீண்டும் மீண்டும் அவள் என்னிடமே வந்துநின்றாள்.

மஞ்சள் நிறத்தாள் : சிறுகதை

அப்போது எங்கேயோ இருந்து “யார் வீட்ல எழவு வுழறதுக்கு இந்த நாய்ங்க இப்படி அழுதுங்க? அடிச்சி சாவடிக்கணும் இதுங்கள” என்று ஒரு கிழவனின் மூர்க்கமான குரல் கேட்டது. வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு ஓங்கி அழும் மஞ்சள் நிறத்தாள் ஓலத்தை இன்னும் இன்னும் அதிகரித்தாள். வானத்தின் தேய்பிறையிலிருந்த அந்த நிலவுக்கோ விண்மீன்களுக்கோகூட ஒன்றும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. அவையும் கூட இந்த மஞ்சள் நிறத்தாளையே கண்கொட்டாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

இங்கும் அங்குமென ஓடிக்கொண்டிருந்தவள் திடீரென வேகமாக ஓடிவந்து தன் முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி சுவரின்மீது வைத்துக்கொண்டு நின்றாள். அந்த வெள்ளை படிந்த சுவரில் அவளது மார்பின் காம்புகள் வெடித்துத் தாய்ப்பாலைப் பீரிட்டு அடித்தன. பொன்னி அக்காவின் எட்டு மாதக் குழந்தை அன்னக்கூடைத் தண்ணீரில் மூழ்கிச் செத்துப்போனபோது, அவளுக்குக் கட்டியிருந்த தாய்ப்பாலை, பெருத்த வலியோடும் சொல்லொணாத் துயரத்தோடும் அவள் சுவரில் பீய்ச்சி அடித்தது எனக்குள் மீளா வேதனையை மீண்டும் கிளப்பியது. சத்தம் போடும் இப்பெருநகர வெளிச்சத்தின் பைக்குகளோ கார்களோ இந்த மஞ்சள் நிறத்தாளின் குட்டிகளைக் கொன்றிருப்பார்கள்.

எனக்குக் கைகால் ஓடவில்லை. மனம் கனமாகி உடல்பலவீனமானது. கண்கள் வழியே வெளியேறாத கண்ணீர் தொண்டையில் தேங்கி நிற்கும்போது வலிக்குமே, அப்படியொரு வலியை உணர்ந்துகொண்டிருந்தேன். அவளைப் பார்க்கப் பார்க்க அழவேண்டும்போல் இருந்தது. பெருமூச்சு விட்டுக்கொண்டே என் நிறைமாத வயிற்றோடு படிக்கட்டில் கையூன்றி அமர்ந்து, இருகைகளையும் அவள் முன் நீட்டி “இங்க வாம்மா... இங்க வா...இங்க வா...” என்று அழைத்தேன். வாலைக் குழைத்துக்கொண்டு என்னருகில் வந்து, இரு கைகளையும் முத்தமிட்டு நக்கத் தொடங்கி விட்டாள் அந்த மஞ்சள் நிறத்தாள்.