சினிமா
தொடர்கள்
Published:Updated:

வாலாட்டும் நிழல் - சிறுகதை

வாலாட்டும் நிழல் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
வாலாட்டும் நிழல் - சிறுகதை

வாட்ச்சைப் பார்த்தேன். வந்து நீண்ட நேரம் ஆகியிருந்தது. எழுந்துகொண்டேன். செருப்பைக் கழற்றிவிட்டு கடலில் போய் நின்றேன்.

அன்றைக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது. படுக்கையிலிருந்து எழுந்துகொள்ளப் பிடிக்காமல் செல்போனில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா ரீல்ஸ்... இப்படி எது எதற்குள்ளோ நுழைந்தும் மனசுக்குப் பிடிக்கவில்லை. முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்து, பைக்கைக் கிளப்பினேன். பைக் தானாக, ஏதோ போகிற பாதையை அறிந்ததுபோல திருவான்மியூர் கடற்கரையில் போய் நின்றது. மகிழ்ச்சியோ, சோர்வோ, சோகமோ... எனக்கு ஆறுதல் அந்தக் கடலும் கடற்கரையும்தான். ஆளரவம் அதிகமில்லாத ஓரிடத்தில் அமர்ந்தேன். ஒன்றன் மேல் ஒன்றாக அலைகள் எழும்பி எழும்பி வரும் கடலை அப்படியே கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்போல் தோன்றியது. காலை நேரத்துச் சூரிய உதயம் பார்ப்பது வரம். அன்றைக்கு எனக்கென்னவோ சூரியன் கடலைப் பிளந்துகொண்டு வருவதுபோலிருந்தது. சூரிய ஒளி... கடலில் பட்டுத் தெறித்து, கடற்பரப்பை வைரக்கற்களாக அடித்திருந்தது.

எத்தனை நூற்றாண்டுகளைப் பார்த்திருக்கும் இந்தக் கடலும் அலைகளும்... ஆனாலும் அவற்றுக்குக் கொஞ்சம்கூட போரடிக்கவில்லை; இப்போதும் சிறு தொய்வுகூட இல்லாமல் அதே ஆர்ப்பரிப்பு; கரையில் வந்து மணலை வருடிச் செல்லும் நெளிவோடுகூடிய லாகவம். ஓர் அலை கரையைத் தொட்டதும் இறந்துவிடுகிறதா... அதன் ஆயுட்காலம் சில விநாடிகள்தானா... அப்படியல்ல. என்னைப் பொறுத்தவரை அது உயிர்த்தெழுதல். மறுபிறப்பு. மறுபடியும் கடலுக்குள் புகுந்து, புது வடிவோடு கரையை மோத உத்வேகத்துடன் எழுந்துகொள்ளும் மற்றோர் அவதாரம். கிட்டத்தட்ட மனித வாழ்வைப்போலத்தான். இவ்வுலகில் எத்தனையோ கோடிப் பேர்... ஒவ்வொருவருக்கும் ஒரு முகம்... தனித்தன்மையோடுகூடிய முகம். அலைகளும் அப்படித்தான். ஓர் அலையைப்போல மற்றொன்று இருப்பதில்லை. ஓரடி உயரத்துக்கு ஒன்று, இரண்டடி உயரத்துக்கு ஒன்று, கொந்தளிப்பான காலங்களில் பல அடி உயரத்துக்கு எழும் அலைகள். சில நேரங்களில் உயரமே தெரியாமல் கடகடவெனப் பாய்ந்து வந்து மோதும் சிற்றலைகள்... வடிவத்திலும் வித்தியாசம்... அலைகளுக்கும் பல முகங்கள்... `இன்றைக்கு எனக்குக் கிறுக்குப் பிடித்துவிட்டதா... ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன்?’ யோசனைகள் உள்ளுக்குள் ஓடினாலும் பார்க்கப் பார்க்க என்றைக்கும்போல அன்றைக்கும் கடல் எனக்கு சலிக்கவே இல்லை.

வாலாட்டும் நிழல் - சிறுகதை

வாட்ச்சைப் பார்த்தேன். வந்து நீண்ட நேரம் ஆகியிருந்தது. எழுந்துகொண்டேன். செருப்பைக் கழற்றிவிட்டு கடலில் போய் நின்றேன். அலைபட்டு, விலகிச் செல்கையில் உள்ளங்காலில் ஏற்பட்ட குறுகுறுப்பு சுகமாக இருந்தது. அப்படியே நின்றுகொண்டிருக்க வேண்டும்போல் ஒரு வேட்கை. அலுவலகம் என்கிற அரக்கன், `நேரமாகுது... நேரமாகுது...’ என்று உள்ளுக்குள் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தான். பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

அடையாறு தாண்டியதும், காந்திமண்டபத்துக்கு முன்பாக இருந்த ஒரு கடைக்கருகே வண்டியை நிறுத்தினேன். வெயிலுக்கு இதமாக இரண்டு இளநீர்களைக் குடித்தேன். டானிக் ஏறியது மாதிரி இருந்தது. சென்னைவாசிகள் எட்டு மணிக்கே அத்தனை சுறுசுறுப்பாக இருந்தார்கள். கடந்து சென்ற ஒரு பேருந்தில் தெரிந்த பள்ளிக் குழந்தைகளின் முகங்கள் பளிச்சென்று இருந்தன. அந்தக் காலை நேரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் அறிவிப்பை ஒலிபெருக்கியில் அறிவித்தபடி ஆட்டோ ஒன்று சென்றது. ஆளுநர் மாளிகையைத் தாண்டியதும் சாலையில் வாகன நெரிசல் கொஞ்சம் அதிகமாகியிருந்தது. பேருந்துகள், கார்கள், சிறு கனரக வாகனங்களுக்கு இடையே வளைந்து நெளிந்து போக ஆரம்பித்தேன்.

செயின்ட் தாமஸ் மவுன்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் வரும்போதுதான் அந்தக் குட்டி நாயைப் பார்த்தேன். வண்டியை நிறுத்தினேன். பிறந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களிருக்கும். குழந்தைமை மாறாத பால் முகம். வெள்ளை நிறம். பார்த்ததும் வெள்ளை நிறம் என்று சொல்லிவிட முடியாது. அதன் உடல் முழுவதும் சேறு பூசியிருந்தது. உற்றுக் கவனித்தபோதுதான் அது தெரிந்தது. அந்தச் சின்னஞ்சிறு குட்டி, பின் பாதி உடம்பைத் தரையில் தேய்த்துக்கொண்டு இரண்டு முன்னங்கால்களையும் தரையில் ஊன்றி வைத்துக்கொண்டு, தரையைத் தேய்த்துத் தேய்த்து, திணறியபடி நடந்தது.

அதன் பின்னங்கால்கள் இரண்டும் நசுங்கிப்போய் செயலிழந்திருந்தன. எனக்கெதிரே அந்தக் குட்டி நாய். நான் பைக்கை மெதுவாகக் கிளப்பினேன். அதைத் தாண்டிப் போனபோது அது என்னையே கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது. அதை நான் கடந்து சென்றபோது தலையைத் திருப்பி என்னையே பார்த்தது. அந்தப் பார்வை என்னை ஏதோ செய்தது. அந்தக் குட்டியைத் தாண்டி இருபதடி தூரம் சென்றிருப்பேன். வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தேன். அது இப்போதும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது.

வாலாட்டும் நிழல் - சிறுகதை

பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு... அதன் அருகில் சென்றேன். அது என்னை நோக்கிப் பின்னங்கால்கள் இரண்டையும் தரையோடு தேய்த்தபடி வேகமாக வந்தது. நான் அருகில் போனதும் என் கால் விரல்களைப் பாசத்தோடு நக்க ஆரம்பித்தது. ஏதோ நீண்ட நாள் இருவருக்குள்ளும் பழக்கம் இருப்பதுபோல என்னிடம் அப்படி ஓர் ஒட்டுதல். தனது குட்டியூண்டு வாலை வேக வேகமாக ஆட்டித் தன் பாசத்தைக் காட்டியது.

அங்கிருந்த ஆட்டோவில் அமர்ந்திருந்த ஆட்டோக்காரர், ``பார்த்தாலே பாவமா இருக்குல்ல... அது மேல ஏதோ ஒரு வண்டி ஏறி இறங்கியிருக்கும் தம்பி... இனிமே பிழைக்கறது கஷ்டம். இன்னும் ஒரு வாரம் இந்தக் காலவெச்சுக்கிட்டு இது உசுரோட இருக்குறதே பெரிசு’’ என்று சொல்லி, தலையை அசைத்துக்கொண்டார்.

நான் அந்தக் குட்டியை மெதுவாகத் தூக்கினேன். மருளும் கண்களால் என்னைப் பார்த்தது. அதன்மேல் ஏதோ ஒரு துர்நாற்றம் அடித்தது. நசுங்கிய பின்னங்கால்கள் உடலோடு ஒட்டிக்கொண்டிருந்தன. இப்படியே இதை விட்டுவிட்டால், ஆட்டோக்கார அண்ணன் சொன்னதுபோல் ஓரிரு நாளில் அது இறந்துவிடும் எனத் தோன்றியது. என்ன செய்யலாம்... கிளம்பிவிடலாமா... கண்ணுக்கு முன்பு நடப்பதைப் பார்த்து ஓடி ஓடி உதவி செய்யும் இயல்புடையவன் அல்ல நான். ஆனாலும், அந்தக் குட்டி நாக்கைத் தொங்கவிட்டபடி, மூச்சு இரைக்க இரைக்க என்னைப் பார்த்த பார்வை என்னை என்னவோ செய்தது. எனக்கு திடீரென `புளூ கிராஸ்' டான் வில்லியம்ஸ் சார் நினைவுக்கு வந்தார்.

2015-ம் ஆண்டு சென்னைப் பெருவெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யப் பலர் தங்கள் கரங்களை நீட்டியபோது... வாயில்லா ஜீவன்களுக்கு உதவி செய்யக் களத்தில் இறங்கியவர் டான் வில்லியம்ஸ். வெள்ளத்தில் சிக்கித்தவித்த நாய்கள், மாடுகள், ஆடுகள்... ஏன், பாம்புகளைக்கூடக் காப்பாற்றிய உன்னத மனிதர். அப்போது நானிருந்த கோடம்பாக்கம் ஏரியாவுக்கு அந்த நேரத்தில் அவர் வந்திருந்தார். அவருடன் சேர்ந்து நானும் நண்பர்களும் சில விலங்குகளை மீட்டதும் ஞாபகத்துக்கு வந்தது. அவரை செல்போனில் அழைத்தேன்.

``யெஸ்... ஹூ இஸ் திஸ்?’’

``சார்... நான்தான் ராஜா... 2015-ல வெள்ளத்தப்போ உங்களோட கோடம்பாக்கம் ஏரியாவுல...’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டவர்... ``என்ன வேணும், சொல்லுங்க’’ என்றார்.

``சார்... இங்கே ஒரு குட்டி நாய்க்குப் பின்னங்கால் ரெண்டுலயும் நல்லா அடிபட்டிருக்கு. அதால நடக்கக்கூட முடியலை. புளூ கிராஸ்ல கொண்டுவந்து விடலாமா?’’

``சரி... கொண்டு வாங்க. எத்தனை வயசு... அடிபட்டு எத்தனை நாளிருக்கும்?’’ என்பதை மட்டும் கேட்டுக்கொண்டார்.

நாயை பல்சர் டேங்க்கின் மேல் வைத்தேன். பின்னங்கால்கள் செயலிழந்துவிட்டதால், குட்டியால் சரியாக உட்கார முடியவில்லை. அதைச் சாய்த்து அமரவைத்து என் இரு கால்களாலும் அணைத்ததுபோல லேசாக இறுக்கிக்கொண்டேன். வேளச்சேரி - சைதாப்பேட்டை சாலையில் இருக்கும் புளூ கிராஸை நோக்கி பைக்கைச் செலுத்தினேன்.

பைக்கில் அமர்ந்தபோது மிரண்ட நிலையில் இருந்த குட்டி, இப்போது கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்திருந்தது. கொஞ்ச தூரம் சென்றதும் என்மீது உரிமையோடு சாய்ந்துகொண்டது. அவ்வப்போது அங்குமிங்கும் மிரட்சியுடன் பார்க்கும். பிறகு என் கண்ணைப் பார்க்கும். அது என்னைப் பார்க்கப் பார்க்க நெஞ்சு படபடத்தது. லேசாக உடல் நடுங்குவதுபோல உணர்ந்தேன். அதற்குக் காரணம் என் ராமு.

ராமு... என் செல்லம். என் பட்டு. என் உயிர்... இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அப்போது நாங்கள் கரூரிலுள்ள சிலோன் குவார்ட்டர்ஸில் குடியிருந்தோம். ஒருநாள் எங்கே உணவு கிடைக்கும் எனத் தேடிக்கொண்டே எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு தெரு நாய்தான் ராமு. அப்போது எனக்கு எட்டு வயது. பார்த்ததுமே எனக்கு அந்த நாயைப் பிடித்துப்போய்விட்டது. அதன் கண்களில் பசி தெரிந்ததை உணர்ந்தேன். ஆயாவிடம் கேட்டு, வீட்டிலிருந்த தயிர்ச்சோற்றை ஒரு தட்டில் வைத்து அதன் முன்பு நகர்த்தினேன். வேக வேகமாக சோற்றைத் தின்று தீர்த்தது. நன்றி சொல்வதுபோல் தன் வாலை ஆட்டியது. ஹேண்ட் ஷேக் செய்ய என் கையை நீட்டினேன். அதுவும் பதிலுக்குத் தன் காலை நீட்டியது...

``ஐ... ஆயா... இங்க பாரேன்... எனக்கு ஹேண்ட் ஷேக் செய்யுது. இதை நம்மகூடவே வெச்சுக்கலாம் ஆயா...’’

``வெச்சுக்கோ கண்ணு... ஆனா வீட்டுக்குள்ள எடுத்துட்டு வந்துடாதே... அம்மா திட்டுவா!’’ என்றார் ஆயா. ஒரு பெட் ரூம், ஹால்கொண்ட சின்ன வீடு. அப்பா, அம்மா, ஆயா, நான் என நான்கு பேருக்கே அந்த வீடு சரியாக இருந்தது. இதில் தெரு நாய்க்கெல்லாம் வீட்டில் இடம் கொடுப்பார்களா என்ன?

``ஆயா... இந்த நாய்க்கு ராமுன்னு பேரு வெக்கப்போறேன்!’’

``நல்லாருக்கு கண்ணு!’’ ஆயா எப்போதும் அப்படித்தான். நான் எது செய்தாலும் உடனே பாராட்டிவிடுவார். என்னை அதட்டியதோ, திட்டியதோ கிடையாது. என் மனம் நோகக் கூடாது என்பதில் கருத்தாக இருப்பார்.

அப்பா வாங்கி வரும் பிஸ்கட்டை ராமுவுக்குப் போடுவேன். ஆயா எனக்குச் சோறு ஊட்டினால், ராமுவுக்கும் போடச் சொல்வேன். நானும் ராமுவும் சில நாள்களிலேயே நண்பர்களாகிப்போனோம். என் வீட்டுக்கருகிலிருந்த விக்னேஷோடு தெருவில் விளையாடுவேன். இப்போது ராமுவும் எங்களுடன் விளையாட ஆரம்பித்திருந்தான்.

முன்பெல்லாம் நான் ஸ்கூல்விட்டு வரும் நேரத்தில் ஆயா எனக்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருப்பார். இப்போது ஆயாவுடன் ராமுவும் காத்திருக்க ஆரம்பித்திருந்தான். பஸ்ஸிலிருந்து நான் இறங்குவதைப் பார்த்ததுமே உற்சாகமாக வாலை ஆட்டியபடி ஓடி வருவான். பாசத்தைக் காட்ட மேலே பாய்வான். சுற்றிச் சுற்றி வருவான். ஆயா என் ஸ்கூல் பேக்கை எடுத்துக்கொள்வார். நான் ராமுவுடன் விளையாடிக்கொண்டே வீட்டுக்கு வருவேன். அவன் குஷியான மனநிலையில் இருக்கும் நேரங்களில் என் முகத்தை வாஞ்சையோடு நக்குவான். ஆயாவுக்கு மட்டும்தான் என் மேல் அதீதப் பாசம் என அதுவரை நான் நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்கு ஈடாக இருந்தது ராமுவின் அன்பு.

விக்னேஷுக்கும் ராமுவுடன் விளையாட வேண்டும் என்று ஆசை. அவனும் சோறு வைத்துப் பார்த்தான். பிஸ்கெட் கொடுத்துப் பார்த்தான். செல்லமாக அழைத்துப் பார்த்தான். அது என்னவோ... அவனுடன் ராமு ஒட்டவேயில்லை. ஆனாலும் மூவரும் சேர்ந்து விளையாடுவது தொடர்ந்தது.

``இந்தத் தெரு நாயைப் பாரேன், பசங்ககூட எப்படி விளையாடுதுன்னு...’’ என்று யாராவது சொன்னால் எனக்குக் கோபம் வந்துவிடும். ``அது தெரு நாய் இல்லை... ராமு’’ என்று கண்டிப்பான குரலில் சொல்வேன்.

ராமு வந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. கொஞ்சம் வளர்ந்திருந்தான். நான் படிக்காமல் எப்போதும் ராமுவுடன் விளையாடிக்கொண்டிருப்பது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. என்னைத் திட்டுவார். என் முகம் மாறினால் போதும்... ராமு அம்மாவைப் பார்த்துக் குரைக்க ஆரம்பித்துவிடுவான். அம்மா மட்டுமல்ல, யார் என்னைத் திட்டினாலும் அவர்கள் மேல் பாய்வதுபோலக் குரைப்பான்.

அன்று ஞாயிறு என்பதால் மெதுவாக எழுந்தேன். கண்களைக் கசக்கிக்கொண்டே வெளியே வந்தேன். ``கண்ணு... பல்லு வெளக்கி, சாப்பிட்டுட்டு வெளியே போ’’ என்றார் ஆயா.

``ராமுவைப் பார்த்துட்டு வர்றேன் ஆயா.’’

``அப்புறம் போலாம்னு சொல்றேன்ல...’’ ஆயா ஒருநாளும் இப்படி என்னிடம் பேசியதில்லை. என் விருப்பத்துக்கு மாறாக ஒரு சொல் சொன்னதில்லை.

என்னையே பார்த்துக்கொண்டிருந்த அப்பா சொன்னார்... ``விடும்மா... அவன் போய் ராமுவைப் பார்க்கட்டும்!’’ நான் வேகமாக வெளியே வந்தேன். வீட்டுக்கு நேர் எதிரில் படுத்திருந்தது ராமு. நான் ராமுவை நோக்கிப் போவதைத் தெருவே பார்த்துக்கொண்டிருந்தது. அன்றைக்கு என்னவோ உறுத்தியது. ராமு அசையாமல் படுத்திருந்தான். அருகில் போனதும்தான் ராமுவின் வாயில் ரத்தம் கசிந்திருந்ததைப் பார்த்தேன்.

பின்னாலிருந்து, ``உன் ராமு செத்துப் போயிடுச்சுப்பா’’ என்ற அப்பாவின் குரல் கேட்டது. அருகில் நின்றிருந்த எதிர்வீட்டு அண்ணன், ``யாரோ ராமுவுக்கு விஷம்வெச்சுக் கொன்னுட்டாங்க தம்பி’’ என்றார்.

ராமு இறந்துவிட்டானா... என்னை விட்டுப் போய்விட்டானா... என்னால் நம்பவே முடியவில்லை. இவர்கள் பொய் சொல்கிறார்கள். என்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள். நான் ராமுவைத் தொட்டு உலுக்கினேன். அவன் அசையவேயில்லை. ராமு இறந்துவிட்டான் என்ற உண்மை உறைக்க ஆரம்பித்த கணத்தில் கதற ஆரம்பித்தேன். அவனை மடியில் போட்டுக்கொண்டு அழுதேன். அங்கு வந்த விக்னேஷும் அழுதான். தெரு ஜனமே நாங்கள் அழுவதைப் பார்த்துக்கொண்டிருந்தது.

அப்பா, ராமுவின் இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்தார். ஒரு மாலையை வாங்கி வந்து அதன்மேல் போட்டார். வெட்டியானை வரவழைத்து `நாயைப் புதைக்க வேண்டும்’ என்று சொல்லிப் பணம் கொடுத்தார்.

அன்றைக்கு முதன்முறையாகச் சுடுகாட்டுக்குச் சென்றேன். விக்னேஷும் எங்களுடன் வந்திருந்தான். வெட்டப்பட்டிருந்த ஒரு குழியில் ராமுவைத் தூக்கிவைத்தார்கள். அப்பா, என் கைகளில் மண்ணை அள்ளிக் கொடுத்து, போடச் சொன்னார். அழுதுகொண்டே ராமுவின் முகத்தில் படாமல் போட்டேன். அடுத்த கணமே மண்வெட்டியில் மண்ணை வாரி எடுத்து எடுத்து ராமுவின் மேல் போடத் தொடங்கினார் வெட்டியான். ராமு மேல் மண் விழ விழ என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வாழ்வில் நான் எதிர்கொண்ட முதல் இழப்பு. பெரிய இழப்பு. ராமு பரிசுத்தமான ஆன்மா. எதையும் எதிர்பாராமல் அன்பை மட்டுமே தரும் ஜீவன்.

ஒரு மாதம் கழிந்திருக்கும். ஒருநாள் எதிர்வீட்டு அண்ணன் என்னை அழைத்தார். ``ராமுவுக்கு விஷம் வெச்சுக் கொன்னது வேற யாருமில்லை. உன் ஃப்ரெண்ட் விக்னேஷ்தான்’’ என்றார். அதை என்னால் நம்பவே முடியவில்லை. ``அவனும் அன்னிக்கி அழுதானே... அவன் ஏன் ராமுவைக் கொல்லணும்?'' ஏகப்பட்ட கேள்விகளை அடுக்கினேன்.

``தம்பி... நீ நம்புனா நம்பு. அதுதான் உண்மை.’’

ஆயாவிடம் ஓடி வந்தேன். ``ராமுவைக் கொன்னது விக்னேஷா?'' என்று கேட்டேன்.

ஆயா நேரடியாக கேள்விக்கு பதில் சொல்வில்லை. ``நாம அடுத்த வாரம் இந்த வீட்டைக் காலி செஞ்சுட்டு வேற வீட்டுக்குப் போகப்போறோம். அங்க போய் வேற ராமுவை வாங்கிக்கலாம்’’ என்று சமாதானம் சொன்னார்.

அம்மாதான் உண்மையை உடைத்தார். ``ராஜா, அந்த ராமு உன் மேல மட்டும் உயிரா இருந்துச்சுல்ல... அது அவனுக்குப் பிடிக்கலைபோல… ஊர்லேருந்து வந்திருந்த அவனோட சொந்தக்காரப் பையன்கிட்ட இதைச் சொல்லியிருக்கான். `உன்மேல பாசம்வெக்காத நாய் எதுக்கு உயிரோட இருக்கணும்?’னு சொல்லி ராமுவுக்கு விஷம்வெச்சுக் கொன்னுட்டாங்க.’’

வாழ்வில் நான் எதிர்கொண்ட முதல் துரோகம். துணையாக இருந்த நண்பனே இப்படிச் செய்வானா... ஓர் உயிரைக் கொல்லும் அளவுக்கு பாசம் வன்மமாக மாறுமா? எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கூடவே கோபமும் எழுந்தது. அதற்குப் பிறகு விக்னேஷைச் சந்திப்பதையும் பேசுவதையும் தவிர்த்தேன்.

பிறகு வேறு வீட்டுக்கு மாறினோம். ராமுவின் நினைவுகள் மட்டும் நீங்காமல் உள்ளுக்குள் ஒரு தழும்பாகத் தடம் பதித்திருந்தது. ஒருநாள் அப்பா அழைத்தார். ``புதுசா ஒரு நாய்க்குட்டி வாங்கிட்டு வரலாம். வா...'' என்று கூப்பிட்டார்.

``இல்லப்பா... இனிமே நான் எதையும் வளர்க்கறதா இல்லை’’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டேன்.

பத்து வயதில் நடந்த அந்தச் சம்பவம்… வாழ்நாள் முழுக்க என்னைத் துரத்திக்கொண்டேயிருந்தது. ராமுவின் இழப்பும், விக்னேஷின் துரோகமும் எனக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டன. ஏதோ ஒரு நாய் என் அருகில் வந்தால்கூட உடனே விலகிப் போய்விடுவேன். எங்கே இரவில் ராமுவின் ஞாபகம் வந்து உறக்கமில்லாமல் அடித்துவிடுமோ என்கிற பயம்தான் காரணம். என் நண்பர்கள், எனக்கு நாய் என்றால் பயம்... அதனால்தான் விலகிப்போகிறேன் என்று நினைப்பார்கள். அதை மாற்றுவதற்கு எப்போதும் நான் முயன்றதில்லை. அடிபட்டு என் பைக்கின் டேங்க் மேல் அமர்ந்திருந்த அந்தக் குட்டி நாய், ராமு குறித்த பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டது.

புளூ கிராஸுக்கு வந்து சேர்ந்தேன். செக்யூரிட்டி, என்னவென்று விசாரித்துவிட்டு கேட்டைத் திறந்துவிட்டார். அந்தக் கட்டடமே மிருகங்களின் வாசனையால் நிரம்பியிருந்தது. வாசனை என்றா சொன்னேன்... அல்ல... ஒரு வகையான நாற்றம். பார்த்ததுமே பரிதாபத்தை வரவழைக்கச் செய்யும் ஜீவன்கள்... பாதி முகத்துடன் திரிந்த நாய், இரண்டு முன்னங்கால்களில் ஒன்றை இழந்த நாய், கண்களில் ஒன்றை இழந்திருந்த பூனை... வாலில் அடிபட்டிருந்த அணில், இன்னும் விதவிதமான பாதிப்புகளுடன் பல நாய்கள் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தன.

அங்கிருந்த வேலையாளிடம் குட்டி நாய்க்கு அடிபட்டிருப்பதாகச் சொன்னேன். ``அங்கே போய் அட்மிஷன் போடுங்க’’ என்று ஒரு கவுன்ட்டரைக் காட்டினார். `நாய்க்குட்டிக்கு அட்மிஷனா...’ ஆச்சர்யத்தோடு அங்கே சென்றேன். உள்ளே ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அமர்ந்திருந்தார்.

வாலாட்டும் நிழல் - சிறுகதை

``இந்த நாய்க்குட்டிக்கு பின்னங்கால்ல அடிபட்டிருக்கு... டான் வில்லியம்ஸ் சார்கிட்ட சொல்லியிருந்தேன்’’ என்றதும், ஒரு வெப் சைட் அட்ரஸ் கொடுத்து அதிலுள்ள ஃபார்மை டவுன்லோடு செய்து நிரப்பச் சொன்னார். அவர் சொன்னபடி செய்தேன். என் மொபைலுக்கு வந்த ஓ.டி.பி எண்ணைக் கொடுத்தேன். அட்மிஷன் போட்டுவிட்டதாகச் சொல்லி ஓர் இடத்தைக் காட்டி உட்காரச் சொன்னார்.

சில நிமிடங்களில் வெட்னரி டாக்டர் வந்தார். ``வீட்டுக்கு வர்ற வழியில பார்த்தேன். அடிபட்டுக் கிடந்துச்சு. அதுதான் எடுத்துட்டு வந்தேன்.'' அவர் கேட்காமலேயே ஒப்பிக்க ஆரம்பித்தேன். அந்த டாக்டர் குட்டியின் பின்னங்கால் இரண்டையும் தன் பலம்கொண்ட மட்டும் நன்றாகப் பிடித்துக் கிள்ளிப் பார்த்தார். அழுத்தமாகப் பிடித்து நசுக்கினார். முதுகில் ஓங்கி அடித்தார். பார்க்கவே `திடுக்’கென்று இருந்தது. அதற்கு வலிக்குமே என்று தோன்றியது. ஆனால், குட்டியின் முகத்தில் இதற்கெல்லாம் எந்தச் சலனமுமில்லை.

``இதுக்கு அடிபட்டு மூணு நாளைக்கு மேல ஆகியிருக்கலாம். கார் இல்லைன்னா ஆட்டோ முதுகுல ஏறினதால பின்னாடி இருக்குற எலும்புகள் உடைஞ்சு நொறுங்கிடுச்சு. அந்த இடமே அதுக்கு மரத்துப்போயிடுச்சு. பிறந்து மூணு மாசம்தான் இருக்கும். அதனால ஆபரேஷன் பண்ணினாலும் பிழைக்காது. விட்டுட்டுப் போங்க. இருக்கற வரைக்கும் இருக்கட்டும்” என்று நாயின் முடிவை உணர்ச்சியில்லாத குரலில் சொல்லிவிட்டு, என் பதிலுக்காகக் காத்திருக்காமல் போய்விட்டார்.

வார்டு பாய் குட்டியை எடுத்துக்கொண்டு போய் அங்கிருந்த கூண்டொன்றில் அடைத்தார். கூண்டில் அடைத்த பிறகுதான் குட்டி, கதறிக் குலைக்க ஆரம்பித்தது. தேம்பி அழுவதுபோலவே இருந்தது அதன் குரைப்புச் சத்தம். பின்னங்காலைத் தேய்த்து தேய்த்து என் முகத்தையே பார்த்தது.

மீண்டும் டாக்டரிடம் போய் `வேற ஏதாவது வழி இருக்கா... செலவு செஞ்சா காப்பாத்திர முடியுமா... வேற ஹாஸ்பிட்டல் எதுக்காவது எடுத்துட்டுப்போனா பிழைக்கவெக்க முடியுமா...’ என்றெல்லாம் கேட்கத் தோன்றியது. சொல்லொணா ஒரு வெறுமை மனதை நிரப்பியிருந்தது. ஆனால் யதார்த்தம் உறைக்க, கூண்டிலிருந்த குட்டியை ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன். அது குரைக்கும் சத்தம் பின்னால் கேட்டுக்கொண்டேயிருந்தது. அந்தச் சத்தம் என்னை நிலைகுலையவைத்தது. அப்போதுதான் அதைப் பார்த்தேன். மிருகங்களை எரியூட்ட ஒரு மயானம் அங்கே இருந்தது.

அந்த வார்டு பாய் என் அருகில் வந்தார். ``என்ன தம்பி அப்பிடி மலைச்சுப்போய்ப் பாக்குறீங்க... மனுஷங்க இறந்ததும் எரிச்சு எப்படி ஒரு டப்பாவுலயோ, குட்டி மண் பானையிலயோ சாம்பலைத் தருவாங்களோ... அப்பிடி வளர்த்த நாய்கள் இறந்துபோயிட்டாலும் இங்கே அதுங்களை எரிச்ச சாம்பலைத் தருவாங்க. இந்த உலகத்துல எல்லா உயிரும் ஒண்ணுதானே தம்பி... நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். எல்லாமே இயற்கையோட படைப்புங்கறதுல எனக்கு அளவு கடந்த நம்பிக்கை. எறும்பிலிருந்து மனுசன் வரைக்கும் இயற்கையோட படைப்புதானே தம்பி... அதுங்களுக்கும் மரியாதை குடுத்துத்தானே ஆகணும்... நீங்க சேர்த்துவிட்ட குட்டிநாய் செத்துப்போயிருச்சுன்னா உங்களுக்கு போன்ல தகவல் சொல்லுவாங்க. வந்து சாம்பலை வாங்கிட்டுப் போய் உரிய மரியாதை செஞ்சுருங்க’’ என்றார்.

நான் அவரிடமிருந்து விலகி நடந்தேன். ஒரு நடுவயதுப் பெண், ஒரு நடுவயது ஆண், எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் மூவரும் ஒரு நாயை எரியூட்டக் கொண்டுவந்திருந்தார்கள். நாயின் முகத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து அந்தச் சிறுவன் அழுதுகொண்டிருந்தான். அப்பா, அம்மாவின் சமாதானம் அவனிடம் எடுபடவில்லை. அவனிடமிருந்து அழுகை பீறிட்டுக்கொண்டிருந்தது. அவனைப் பார்க்க பார்க்க எனக்கும் அழுகை வரும்போல் தோன்றியது. ஓடிப்போய் அவனை இறுக அணைத்துக்கொண்டு அழ வேண்டும் என்றுகூடத் தோன்றியது. ஒரு கணம் பார்த்தபோது, அவர்கள் கொண்டு வந்திருந்த நாயின் முகம் ராமுவின் முகம்போலவே இருப்பதாகப்பட்டது. மனதை திடப்படுத்திக்கொண்டு விலகி நடந்தேன்.

குட்டியை புளூ கிராஸில் சேர்த்து இன்றோடு ஒரு வாரமாகிறது. செல்போனில் அழைப்பு வரும்போதெல்லாம் பதறிப்போய்த்தான் எடுக்கிறேன். இன்னமும் புளூ கிராஸிலிருந்து `அந்த’ அழைப்பு வரவில்லை.