சினிமா
தொடர்கள்
Published:Updated:

காட்டீசுவரி துணை - சிறுகதை

காட்டீசுவரி துணை - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
காட்டீசுவரி துணை - சிறுகதை

கார்த்திக் ஜீவானந்தம்

காதுக்குள் ரீங்காரம் இன்னும் நின்ற பாடில்லை. இன்றைக்குப் போதுமான வரை விடுதியில் இருக்கும் முதலாண்டுப் பிள்ளைகளின் பெற்றோர்களிடம் பேசியாயிற்று.

“நாங்க தெளிவா சொல்லிட்டோம் சார்... முதல் வருஷம் ரொம்ப கண்டிப்பான அணுகுமுறைகள்தான் இருக்கும். இங்க மத்த ஹாஸ்டல் மாதிரி கிடையாது. கண்டிப்பா எந்த வகையான சாதனங்களும் செல்போனும் பயன்படுத்தக்கூடாது. தப்பித்தவறி தெரியாமக் கொடுத்திருந்தாலும் அடுத்த வாரம் வந்து வாங்கிட்டுப் போயிடுங்க. கல்விக் கட்டணத்துலதான் சலுகையே தவிர, எங்க கட்டுப்பாடுகள்ல இல்ல.”

கல்லூரி பற்றிய அதீத ஆர்வத்தில் இங்கு சங்கமிக்கும் முதலாண்டு மாணவிகளுக்கு இந்த நெறிமுறை உண்டு. இன்று பேசிய பேச்சுக்கு அடுத்தவாரம் அலறிக்கொண்டு வரப்போகிறார்கள். இனி அவர்கள் தின்பண்டம் கொடுத்துவிடவும் யோசனை செய்யப்போவதை நினைக்கையில் பானுவுக்கு ஒரு பெருமிதம். தன்னை சொர்க்கத்திற்குச் செல்லவிடாமல் தடுக்கும் இந்தச் சாத்தானின் மூத்த பிள்ளைகளைக் கையாண்டு கடவுள் வைக்கும் பரிசோதனைகளை வெற்றிகரமாய்க் கடக்க தனக்கு இன்னும் சில பயிற்சிகள் வேண்டுமென பானு நினைத்துக் கொள்வதுண்டு. தினம் தினம் எத்தனை வகைகளில் அக்கிரமங்கள், அழிச்சாட்டியங்கள்!

அடுத்த வாரம் சரியாய் மாலை ஆறரை மணி. வழக்கம்போல் ருக்குமணி டீச்சர் விடுதியில் சோதனை முடித்துச் சேகரித்த சகல சாதனங்களையும், தன் மேசையில் அடுக்கிவைத்து ஒவ்வொன்றாக அதன் உரிமையாளரை அழைத்துக் கூறு போட்டுக்கொண்டிருந்தார். அதைப் பார்த்துக்கொண்டே கடந்து சென்றவளின் மனதில், தன் சென்ற வாரப் பெருமிதம் ஒருபக்கம் இருந்தாலும், மறுபுறம், இன்று என்னென்ன சுவாரசியங்கள் நடக்குமோ என்ற எண்ணமும் ஓட, தன் அறை நோக்கி நடந்தாள் பானு. ருக்குமணி டீச்சர் சற்று படைப்பாற்றல் மிக்கவள். அவளுக்கென ஆசிரியைகள் மத்தியில் ரசிகைகளுண்டு. பார்த்த மாத்திரத்திலேயே தலை முதல் கால் வரை அங்கலட்சணங்களில் எது பொருத்தமில்லையெனக் கண்டறிந்து, எவரையும் ஒரு நொடியில் எள்ளி நகையாடிவிடுவாள்.

அவள் கண்களுக்கு பிரத்யேக சக்தியுண்டு என்று ஒரு கட்டத்தில் நினைத்திருந்ததால், அவள் கண்களில் படுவதையே இவள் தவிர்த்துவந்தாள். தனக்கு அவளுடனேயே விடுதிக்காப்பாளராகப் பணியமர்த்தப்படும் விதி வருமென நினைத்திருக்கவில்லை. எனினும் கூடிய மட்டுமே பானுவுக்கும் ருக்குமணியின் நெருக்கத்தில் அவளின் பல கலைகளில் பாதி கைகூடிவந்தன.

ஒருவளின் முகத்தில் திருஷ்டியைக் காணும் கலை அதில் முதன்மை. அவளின் சோதனை முடிவில் நடக்கும் அரங்கேற்றங்களுக்கு அவளுடைய ரசிகமனங்களில் என்றுமே தனியிடம் உண்டு. பானுவும் அறைக்குச் செல்லும் யோசனையைக் கைவிட்டு, இதில் பொழுதைக் கழிக்க மேசையருகில் வந்து நின்றாள்.

முதல் போனுக்குச் சொந்தக்காரி அழைக்கப்பட்டாள். அரங்கேற்றம் ஆரம்பமானது.

“டீச்சர், இங்க ஒண்ணு நட்டுவாக்காலி மாதிரி வருது பாருங்க.”

கண்களெல்லாம் உள்வாங்கிக் கிடந்தவள், நடுங்கியபடி தயங்கித்தயங்கி மேசையை நெருங்கினாள்.

“ரொம்ப நடிக்காத, பாஸ்வேர்டைப் போடு”

கிடைக்கும் சாதனங்களில் ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்த்து, ஒரு குறுஞ்செய்தியையும் விடாமல் படித்து, வயதிற்கு மீறியது ஏதும் தென்பட்டால், நிர்வாகத்திடம் சொல்லிச் சீர்படுத்துவதும் அவளின் கடமைகளில் ஒன்று.

“ஏய் சொல்லு, எனக்கு நேரமில்ல. எத்தனை இருக்கு பாரு, எல்லாத்தையும் பாக்கவேணாமா?’’

பானுவும் சேர்ந்துகொண்டாள், “டீச்சர் கேக்கறாங்கல்ல... கொடு. இதெல்லாம் உள்ள கொண்டு வரதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்.”

அவள் ஏதோ சொல்ல வாயெடுத்து, பின் வெறுமனே நிற்பதைப் பார்த்துச் சோர்வடைந்து, அறைக்குப் போகலாமென முடிவெடுத்து பானு அங்கிருந்து நகர்ந்தாள். ருக்குமணியின் ஏவல் தொடர்ந்தது.

பானு பூட்டைத் திறக்கையில், அவள் கால்களைச் சரேலென்று ஏதோ உரசிக்கொண்டு போக, அது அந்தப் புத்தம்புதிய செல்போன் என கவனித்தபின் அரண்டுபோய் ருக்குமணியைத் திரும்பிப் பார்த்தாள்.

“என்ன டீச்சர் இப்படிப் பண்ணிட்டிங்க...” அவள் பதிலேதும் பேசவில்லை.

எதிர் நின்ற மாணவி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டு உடல் இறுகி, கண்களை இறுக்க மூடி நின்றிருந்தாள். ‘பாவம், பயந்துவிட்டாளே’ என நினைத்து பானுவும் பதற்றமடைந்தாள்.

“ஐயோ டீச்சர், நா எறியல... இந்தப் பிடாரிதான் எறிஞ்சா. அறுகம்புல் மாதிரி இருந்துட்டு என்னடி உனக்கு அவ்வளவு கோவம், இது மொதல்ல உன்னோடதா இல்ல வேறோருத்தியோடதா? பாஸ்வேர்டு சொல்ல பயந்துகிட்டு இப்படிப் பண்ணிருக்கா டீச்சர். சொல்லுடி வாயத் தொறந்து.”

கைகளால் தன் காதுகளைப் பொத்திக்கொண்டு விடுதியெங்கும் கேட்கக் கீச்சிட்டாள் அந்தப் பெண்.

“பேசாதீங்க டீச்சர்... எதுவுமே பேசாதீங்க டீச்சர்... அதுல என்ன இருந்தாலும் நீங்க பாக்கக்கூடாது டீச்சர்.”

அடுத்த நாளே அவள் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டாள்.

மறுநாள் காலை மாடியில் துவைத்த துணிகளைக் காயவைத்துக்கொண்டிருந்த பானுவிடம் கீழ்த்தளத்திலிருந்து ருக்குமணி அழைத்து, வானொலிச் செய்திக்கு உணர்வுகூட்டியதுபோல் சொன்னாள், “டீச்சர்… அந்த ஒல்லிப்பிச்சானுக்கு செல்போனை அவங்க அப்பன் வாங்கித் தரலையாம். ஏதோ ஒரு பயல்கிட்ட இருந்து வாங்கியிருக்காளாம். அதான் பெரிய இவளாட்டம் எறிஞ்சிருக்கா’’ என்று சொல்லிவிட்டு, களுக்கென்று சிரித்தவளிடம் பானுவும் மேலிருந்து தலையாட்டி வைத்தாள்.

நாள்களின் குளியலில் சோப்புகள் கரைந்தன. கார்காலம் தொடங்கியபின் முதல் பருவத்தேர்வுகள் முடிவை எட்டியது.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்காக, கல்லூரியில் அனைவருக்கும் பத்திரிகைகளை வைத்து விட்டு ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருந்த பானுவை, விடுதியின் வாசலில் வைத்து நெற்றியில் முத்தமிட்டு வழியனுப்பினாள் ருக்குமணி.

“ஏய்... நிறுத்து, நிறுத்து, பானு”

காட்டீசுவரி துணை - சிறுகதை

சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டரை நிறுத்தச் சொன்னாள் அம்மா.

நிறுத்திய மாத்திரத்தில் வேகமாய் இறங்கியவள் எதிர்த்தாற்போல் இருந்த குறுக்குத்தெருவில் நுழைந்து எந்த வீட்டையோ தேடினாள். வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்பிய பானுவும் அம்மாவின் பின்னாடியே ஓடினாள். இங்கு நிச்சயம் யாரும் சொந்தமில்லை. ஆனால் இங்கு யாரைத் தேடுகிறாள் அம்மா என்று யோசித்துமுடிக்கும் முன்னரே வீதியே திரும்புமாறு, “காட்டீசு… காட்டீசு” என்று ஒரு வீட்டின் முன்னால் நின்று அம்மா அழைக்க, எந்த பதிலும் உள்ளிருந்து இல்லை.

“அம்மா, இங்க யாரு இருக்கா... வீடு தெரிஞ்சுதான் கத்தறியா நீ?”

‘‘பேசாம இரேன்டி. வீடு இதான். ஏங்கூட படிச்சவ. அவளுக்கும் பத்திரிகை வெச்சுட்டுப் போலாம்.”

“வெக்கலாம். ஆனா அவங்க இருக்கணுமே. அதுவும் இந்த வீட்டுக்குள்ள.”

முதலில் ஜன்னல் திறந்தது. பின் படாரெனக் கதவுகளும். ஆறடி உயரத்தில் ஒரு அம்மா அந்தக் கதவுகளிலிருந்து தோன்றினாள்.

“செல்வி… வா... வா... இதாரு உம் பொண்ணா? வாங்க மொதல்ல உள்ள.”

அம்மாவும், அவள் தோழியும் மணிக்கணக்கில் பேசினார்கள். அம்மா எவ்வளவு பெரிதாய் சிரிக்கிறாள் என பானு பார்த்துக்கொண்டாள். வண்டியிலேறி அமர்ந்தும் தொடர்ந்த உரையாடல் பானுவையும் சிறிது அசைத்தது.

“காட்டீசு... என்ன பட்டப்பெயரா?”

“காட்டீசுவரி. ஆனா அவ பேரு கனிகா.”

இருவரையும் தாங்கி ஸ்கூட்டர் சென்று கொண்டிருந்தது. ஆனால் அம்மா தனியாகப் பயணப்படலானாள்.

ஊர் தேவாலயத்தின் மணியோசை, நெய்க்காரபட்டி சூலக்காட்டின் மத்தியிலிருந்த இடத்தில் எழுபதாண்டுக் கட்டடமாக நின்றிருந்த மகளிர் கல்லூரிக்குச் சொந்தமான விடுதிக்குள்ளும் கேட்கும். கல்லூரிக்கும் விடுதிக்குமிடையில் ஒரு மைல் தூரம். தினமும் விடுதியிலிருக்கும் மாணவிகள் நேரத்திற்குள் கல்லூரியை அடையவேண்டும். இல்லாவிட்டால் பெரிய சிஸ்டரின் கோபக்கனலில் சாம்பலாகக்கூட மிஞ்ச முடியாது.

சென்ற வருடம் வரை விடுதியிலிருந்து கல்லூரியை முதல் ஆளாய் அடைவது பெரிய சிஸ்டர் எனினும், இவ்வருடத்திலிருந்து எண்ணிக்கை இருவரானது. அதிகாலையின் முதல் வெளிச்சத்திற்குப் போட்டியாய் சிஸ்டரின் பேட்டரி லைட் ஒளிவீச, பத்தடி தூரத்தில் முதலாண்டுக் கனிகாவும் நடந்துவர, இருவரும் அடுத்தடுத்து நுழைந்து, மைதானத்துக்குக் கனிகாவும், அலுவலகத்துக்கு சிஸ்டரும் பிரிந்தே வந்திருந்தாலும் மற்றொருமுறை பிரிந்து போவார்கள். ஊதுவத்திகள் ஏற்றப்பட்டு முதல் ஜெபவேளை முடிய, கனிகா தன் ஓட்டப்பயிற்சியை முடித்திருப்பாள். தேவாலய மணியோசை. பின்னர் உணவுக்கூடம், செயின்ட் பால் அரங்கு, பின்வாசல் எல்லாம் சுத்தமாக இருக்கிறதா எனப் பார்வையிடும்போது, கனிகாவின் குண்டு எறிதல் பயிற்சி முடிய சரியாயிருக்கும். மைதானத்திற்கு வந்து சிஸ்டர் மேற்பார்வையை முடிக்கும் நேரம் கனிகா சீருடை மாற்றிக்கொண்டிருப்பாள். தேவாலய மணியோசை. மீண்டும் இருவரும் மைதானத்திலிருந்து சேர்ந்தே பிரிந்து கூட்டுப்பிரார்த்தனையை அடைவார்கள். கூட்டுப்பிரார்த்தனை முடிந்தபின் வகுப்புகள். பெரிய சிஸ்டர் ஆங்கிலம் எடுப்பதால் பெரும்பாலும் அனைத்துப் பிரிவுகளுக்கும் சிஸ்டரின் வகுப்பு ஒன்றாவது இருக்கும். சிஸ்டருக்குத் தன்வாழ்நாளில் விடுமுறை என்பதே அனுபவமில்லை.

புதிய கல்வியாண்டின் முதல் பருவம் தொடங்கியது.

“கனிகா, நீ என்ன படிக்கற... பெரிய ஆம்பள போல வளந்திருக்க, இன்னும் சின்னப்பிள்ளை மாதிரி பேப்பர்ல காட்டீசுவரி துணைன்னு எழுதிட்டு இருக்க?”

“டீச்சர், அது எங்க அப்பாவோட இஷ்டதெய்வம் டீச்சர். அதனாலதான் எங்க குடும்பமே இருக்குதுன்னு அப்பாரு சொல்லுவாரு. என்னைக்கும் அத மறக்காம இருக்க நாங்க எல்லாத்துலயும் சாமி பேரைப் பொறிப்போம் டீச்சர். எல்லாப் பரீட்சையில இல்லாட்டியும் ஏதாவது ஒண்ணுலயாவது போட்டுக்கறது சம்பந்தமா பெரிய சிஸ்டரை வந்து பாக்கறேன்னு எங்கப்பா சொல்லியிருக்காரு.”

அடுத்த வேளையே பெரிய சிஸ்டரின் வகுப்பு. நுழைந்ததும் சிஸ்டர் மேடைமேல் இருக்கும் நாற்காலியை மேசையிலிருந்து பிரித்துப்போட்டு அமர்ந்து சிறிது நேரம் ஒவ்வொருவரின் முகத்தையும் நோட்டமிட்டார். இப்படி உட்காரும்போது சிஸ்டரின் முகத்தை நேராய்ச் சந்திக்கும் முனைப்பு யாருக்கும் வந்ததில்லை. தொண்டையைச் செருமிவிட்டு, வளாகத்தின் கக்கடைசித் தண்ணீர்க்குழாயிலும் எதிரொலிக்கும் தன் குரலில் பேசத் தொடங்கினார். “யாருக்கோ இங்க அவங்க சாமி பேரை, பரீட்சை பேப்பர்ல போடணுமாமே? இது காலேஜ். நீங்க எழுதற விஷயத்துக்குத்தான் மார்க். எந்திரி பாப்போம், அந்த மொகறைய..?’’

கனிகா முதல்நாள் வகுப்பறையில் நுழைந்தபோது எல்லாரும் அண்ணாந்துதான் பார்த்தார்கள். கனிகா எழுந்து நின்றபோது அந்த ஆச்சர்யம் சிஸ்டரின் கண்களில் தெரிந்தாலும் முகத்தில் சலனமில்லை. பாடத்தை நடத்தத் தொடங்கினார். ஒருமணிநேரம் வகுப்பை நடத்தி முடித்துவிட்டு வெளியேறினார். நடுநாயகமாய் அரசமரம் போல் நின்றிருந்த கனிகா, இலைகள் உதிர்வதுபோல் வியர்வை துளிர்த்துத் தரையில் விழ நின்றுகொண்டிருந்தாள்.

கல்லூரி முடிந்து கனிகா மைதானத்துக்கும், சிஸ்டர் மாலை ஜெபத்துக்கும் போக, சாயந்திரம் விடுதியை அடைவதில் முந்திக்கொள்வது சிஸ்டர்தான். மூன்று ஓட்டங்களைக் கடந்து கனிகா இரைக்கும் மூச்சுக்காற்றில் விடுதிவாயில் திறக்க, சிஸ்டர் உள்நுழைவார்.

அதிகபட்சம் பத்து டியூப் லைட்டுகள் மொத்த விடுதிக்கும் இருந்தன. தனியாய் ஆசீர்வதிக்கும் இயேசு, குழந்தையேசுவைக் கையில் வைத்திருந்து இரட்சிக்கும் மரியாள், கிறித்து பிறப்பைச் சூழ்ந்த இடையர்கள், இறுதியாக சிலுவையில் அறையப்பட்ட மேய்ப்பன் ஆகியோருக்கு நான்கு லைட்டுகள் போக மீதி ஆறும் விடுதிக்கு. பெரும்பாலும் இருட்டு.

இரவு தூங்கப்போகும் மாணவிகளின் தலையாய கடமை, அறையின் தண்ணீர்ப்பானை நிரம்பியிருக்கிறதா என்று சரிபார்ப்பது. நள்ளிரவில் தண்ணீரில்லாமல் யாருக்கும் தாகமெடுத்துவிட்டால் விளையாட்டு ஆரம்பமாகும். இதுதான் என்றில்லை, எந்தச் சவாலாக இருந்தாலும் விடுதியின் மாணவிகளுக்குப் பந்தயமென்பது தண்ணீர்ப் பானையை மையமாகக் கொண்டதுதான். எப்பேர்ப்பட்டவளாக இருந்தாலும் எந்த நேரமாக இருந்தாலும் சவாலில் தோற்றவள்தான் தண்ணீர் பிடித்துவர வேண்டும். கீழ்த்தளத்தின் கடைசித் தூணின் பின்புறம் வாட்ச்மேன் தாத்தா தண்ணீர் பிடித்து நிரப்பிவைத்திருக்கும் பானையைத் தூக்கிக் கவிழ்த்துத் தண்ணீரை எடுத்துக்கொண்டு அறைக்குத் திரும்புவதென்பது சொல்லவொண்ணாத் துயரச்சவால். விடுதியைச் சுற்றியுள்ள ஆளரவமற்ற நான்கு ஏக்கர் முட்காட்டின் சத்தங்கள் அந்தச் சவாலுக்குச் சற்று மெருகூட்டும். நரிகளின் ஊளை, ஆந்தையின் அலறல் எல்லாம் தன்னியல்பாக அனைவரின் செவிப்பறைகளிலும் எப்போதும் குடிகொண்டிருக்கும். அழும் இளங்குமரியின் விசும்பல் கேட்டதாகக்கூடச் சொல்வதுண்டு. கனிகாவின் சவால் தோல்விகள் மற்றவர்களுக்கு விருப்பமானவை. அரைக்குடமாக இருந்தாலும் மற்றவர்களைப் போல் இடுப்பில் சுமக்காமல் தோளில் சுமந்தபடி கனிகா முதல் தூணிலிருந்து கடைசித் தூண் வரை “காட்டீசுவரியம்மா” என்று கத்திக்கொண்டே ஓடிக் கடப்பாள்.

கல்லூரியின் தலைமை, விடுதியின் ஒற்றைச் செயலர் எனப் பெரும் பொறுப்புகள் கொண்ட பெரிய சிஸ்டர் வாரமிருமுறை ஒவ்வொரு அறைக்குள்ளும் நுழைந்து ஆழ்ந்த சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த நாள் எந்நாளாகவும் இருக்கலாம், அந்நேரம் எதுவாகவும் இருக்கலாம். எந்த அறைக்கும் பூட்டு கிடையாது. பூட்டிப் பாதுகாக்கும் எந்த உடமையும் அங்கில்லை. பகலென்றால் சிஸ்டரே யாருக்கும் சிரமம் கொடுக்காமல் தானே திறந்து சோதனையில் ஈடுபடலாம். இரவென்றால் கதவுகள் தட்டப்படும். தாழ்ப்பாளைத் திறந்து சோதனை முடியும்வரை நின்றுகொண்டிருந்தால் போதும். வரைந்த தாள்கள், கவிதைகள் என படிப்பைச் சாராத ஏதேனும் அகப்பட்டால் அவை நான்கு துண்டாகும்; பிரம்பு இரண்டு துண்டாகும்.

அன்றைக்கு மதியமே தொடங்கப்பட்ட சோதனையில் அகப்பட்டது கவிதையோ, தொலைபேசி எண்ணோ, ஓவியமோ அல்ல; காதல் கடிதம். காகிதங்கள் ஊறிப்போகுமளவு காதல் பொங்கி வழியும், கொஞ்சமும் கருணையற்ற அப்பட்டமான அதிகாரபூர்வக் காதல் கடிதம்.

மாமரத்தின் காய்கள்கூட பழுத்து ஒருகணம் சிஸ்டரின் கண்ணசைவின் அனுமதியில்தான் விழுகின்றன. ஆசிரியர்களிடம் புழங்கும் சொற்களும்கூட சிஸ்டரின் அங்கீகாரத்தில்தான் பரிமாறப்படுகின்றன. அப்படியிருக்க, இந்த வேலையைத் துணிகரமாய்ச் செய்ய யாருக்கு உறுதி வந்தது. கடிதம் கண்டுபிடிக்கப்பட்ட அறையின் பங்குதாரர்கள் இன்னும் வந்து சேரவில்லை. ஒவ்வொருவராய் வந்து வாசலிலேயே நின்றுகொண்டிருந்தனர். ஐவரில் நால்வர் வந்தாயிற்று. நால்வரும் அதை எழுதவில்லை.

கத்திக் கூப்பாடு போட்டுக்கொண்டிருந்த பறவைகளின் சத்தம் கடிதத்தை மீண்டும் மீண்டும் தீவிரமாய் வாசித்துக்கொண்டிருந்த சிஸ்டரைத் தவிர யாருக்கும் கேட்கவில்லை. ரயிலோடும் தண்டவாளம்போல் மற்றவர்களின் கைகால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன.

மைதானத்திலிருந்து கடைசியாய் வந்தாள் கடிதத்தை எழுதிய கனிகா. சிஸ்டரின் கையிலிருந்த தாளின் முனைகளில் அழகுக்காக ஸ்கெட்சில் வரைந்திருந்த பார்டர் அவளுக்கு நிலைமையைத் தெளிவாக விளக்கியது.

“காட்டீசுவரிதானே நீ?”

“கனிகா சிஸ்டர்.”

“ரொம்ப நல்லது!”

சிஸ்டர் மற்றொரு வார்த்தை பேசவில்லை. கடிதத்துடன் தன்னறைக்குச் சென்றுவிட்டார்.

அடுத்தநாள் அதிகாலை சிஸ்டர் உண்மையிலுமே தனியாய் நடந்து வந்தார். ஜெபத்தை முடித்து, எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு, கூட்டுப்பிரார்த்தனையில் ஐக்கியமானார். வகுப்பிலும் பாடத்தைத் தவிர்த்த எதையும் சிஸ்டர் பேசவில்லை. கனிகாவைக் கண்டுகொண்டதாகக்கூடத் தெரியவில்லை.

மறுநாள் கனிகா விடியும் முன்பே பயிற்சியைத் தொடங்கினாள். சிஸ்டர் மேற்பார்வை முடித்து மைதானத்தை அடைய, அவள் சீருடை மாற்றிக் கிளம்பினாள். தேவாலய மணி, கூட்டுப் பிரார்த்தனை, முதல் பாடவேளை, சிஸ்டர் பாடவேளை, இடைவேளை.

இடைவேளையில் இரண்டாம் பருவத் தேர்வுகள் பற்றி மாணவிகளுக்குள் சலசலப்பு. தகவல் பலகையில் அறிவிப்பும் ஒட்டிவிட்டதாகப் பேசிக்கொண்டிருந்தனர். வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் தேர்வு நாள்களோடு ஒத்துப்போகிறதா என்று பார்க்கக் கனிகாவும் போனாள்.

காட்டீசுவரி துணை - சிறுகதை

தகவல் பலகையை நெருங்கிய கூட்டம் கலைந்துகொண்டிருந்தது. “சரியா பிரின்ட் ஆகல போல, நாளைக்கு சரிபண்ணிருவாங்கன்னு சொல்றாங்க.”

தெரிகிறவரை பார்ப்போம் என்றாலும் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. கனிகாவும் முயற்சியிலிறங்கி உற்றுநோக்கினாள். ஒட்டப்பட்டிருந்த காகித விளிம்புகள் காற்றில் சற்றே வெளியே தெரிய, அவள் கைகளால் போடப்பட்ட அதே பார்டர்தான், இம்முறை அவளின் காதல்கடிதம் தகவல் பலகையில் பின்னால் திருப்பி ஒட்டப்பட்டிருப்பதாக அவளுக்குச் சொன்னது.

தன்னைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் தூக்கி எறிவதைப்போல் விலக்கித்தள்ளிவிட்டு கனிகா விடுதி இருக்கும் திசைநோக்கி ஓடிக்கொண்டிருப்பதை, அவள் தோழி செல்வி வகுப்பறை ஜன்னல்வழி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்றே உடற்கல்வி ஆசிரியர் மதிய உணவு இடைவேளையில் கல்லூரி அணியில் விளையாடும் மாணவிகளுக்குப் புதிய நடைமுறையை அறிவுறுத்தினார். “இனி மாணவிகள் கல்லூரிச் சீருடையில்தான் மைதானத்தில் பயிற்சி எடுக்க வேண்டும்.”

அதன்பின் வந்த எல்லா விடியலிலும் முதல் ஒளியில் சிஸ்டர் மட்டும் விடுதியிலிருந்து வெளியேறி, கல்லூரிக்குச் சென்று ஜெபத்தைத் தொடர, தேவாலய மணியோசையில் மைதானம் வெறித்திருந்தது. கல்வியாண்டு இறுதியை நெருங்கிக்கொண்டிருக்க, கடைசி அரையாண்டின் எல்லா அதிகாலைகளிலும் மைதானத்துக்கும், சிஸ்டருக்கும் பேட்டரி லைட்டை அன்றி வேறு துணையில்லை. சிஸ்டரின் அன்றாடங்கள் எப்போதும்போல் இருந்தன. ஜெபம், மேற்பார்வை, கூட்டுப்பிரார்த்தனை, வகுப்பு, விடுதி அலுவல்கள், சோதனைகள், கண்டுபிடிப்புகள், தண்டனைகள்.

அன்றும் விடுதி இருட்டில் வெளிச்சம் கூடியிருக்கவில்லை. மின்னலொளியின் முன்னிலையில் காற்று முட்காட்டின் எல்லா மரங்களையும் அறுத்து எறிந்திருந்தது. விடாமல் கேட்கும் இரவின் ஜீவன்களெழுப்பும் ஓலங்கள் விடுதி முழுக்க எதிரொலித்தன. அறைகளெல்லாம் தண்ணீர்ப்பானைகள் நிரப்பப்பட்டு, கதவுகள் இறுக்கமாய் மூடப்பட்டிருக்க, ஒருவருக்கொருவர் பக்கத்திலேயே படுக்கை விரித்துப் பாதுகாப்பு கூட்டியிருந்தனர். அநேகமாய் பெருஞ்சத்தம்கொண்ட அவ்விரவை அறைக்குள் தனியாய் எதிர்கொள்வது பெரிய சிஸ்டராகத்தான் இருக்கும்.

சத்தங்களனைத்தும் ஒடுங்கியிருந்த நேரம், எல்லாருக்கும் கேட்குமாறு சன்னமாய் நீண்டது அனத்தல் ஒன்று. அது ஒருகணம் அத்தனை பாதுகாப்புகளையும் மீறி எல்லோரது மனங்களிலும் ஊடுருவியது. இது பிரமையில்லை என உணர்ந்தவேளை அனைவரும் உறைந்திருந்தனர். நேரம் ஆக ஆக சத்தம் வலுப்பெற்று, பரிச்சயமான அழுகுரலாக மாறியது. ஏதோ அறிந்ததாய் மாணவிகளின் அனைத்து அறைக் கதவுகளும் ஒருசேரத் திறக்கப்பட்டு எல்லாரும் கலவரமாய் சிஸ்டரின் அறை நோக்கி ஓடினர்.

சிஸ்டரின் சர்வ வல்லமை பொருந்திய குரலுக்குப் பொருந்தாத அழுகை. மாணவிகளால் சிஸ்டரின் அறைக்கதவு தட்டப்படுவது முதல்முறை எனினும் பலமாக அதிர அதிர அச்செய்கை தொடர்ந்தது. “சிஸ்டர்... என்னாச்சு சிஸ்டர்... கதவைத் திறங்க...”

தட்டுத்தடுமாறி எழுந்துவந்து தாழ்ப்பாளை நீக்கி, பாதி திறக்கையிலேயே மாணவிகளின் கால்களுக்கு மத்தியில் விழுந்த சிஸ்டரைப் பார்த்ததும் அனைவரும் அலறத்தொடங்கினர்.

இல்லாத வாட்ச்மேன் தாத்தாவை ஓடிச் சென்று ஒருத்தி அழைக்கப் போனாள். இதுவரை யாரும் பயன்படுத்தியிராத, வரவேற்பறையின் இடது மூலையிலிருக்கும் டெலிபோனை தெரிந்தும் தெரியாதவளுமாக ஒருத்தி காதில் வைத்து சகட்டுமேனிக்குச் சுழற்றினாள். அருகில் எங்கும் மருத்துவமனை இல்லை. இரண்டு மைல் கடந்து ஒரு சுகாதார மையம் இருப்பதாகத் தன் அப்பா கூறியதை இன்னொருத்தி நினைவுகூர்ந்தாள். சுற்றுவட்டாரத்தில் அவர்களுக்குத் தெரிந்த வாகனம் உண்டெனில் அது வாட்ச்மேன் தாத்தாவின் சைக்கிள்தான்.

கூட்டம் இன்னும் பதற்றமானது. சூழ்ந்திருந்தவர்களை விலக்கி சிஸ்டரை நெருங்கினாள் கனிகா. கால்களுக்கு மத்தியில் குப்புறக் கிடந்த சிஸ்டரைத் திருப்பி, தன் மடியில் போட்டாள். சுற்றி எங்கும் குரல்கள், குழப்பங்கள்.

காட்டீசுவரி துணை - சிறுகதை

கண்களை மூடி சற்றே மூச்சிழுத்தவள், ஒருசாய்த்து சிஸ்டரை எழுந்து நிற்கவைத்தாள். சிஸ்டரின் படுக்கையில் கிடந்த சிறிய தலையணையை எடுத்துத் தன் தோள்பட்டையில் குத்திட்டு நிற்கும் எலும்பை மூடி, அப்படியே தூக்கி சிஸ்டரைத் தன் தோளில் போட்டுக்கொண்டு நடக்கத் தொடங்கினாள். கூட்டம் விலகி இடம்கொடுக்க, மாணவிகள் கைத்தாங்கலாய் உதவ, அனைவரும் வாசலை அடைந்தனர். காற்றின் வேகம் குறையாமலிருந்தது. எதிரில் விரிந்த பாதையின் கும்மிருட்டு கண்களைக் கொலையாய்க் கொன்றது. வாயிலைக் கடந்த கனிகா, இருட்டைக் கண்கொட்டாமல் பார்த்தாள். மற்றொரு முறை சிஸ்டரைத் தோள் மேல் உந்தி, நடக்கத் தொடங்கியவள் இருட்டில் சென்று மறைந்தாள். ஓடத்தொடங்கிய அவள் பாதங்கள் தரையைத் தொடும் சத்தம் வாசலின் வெளிச்சத்தில் வந்து சிதறியது.

காட்டீசுவரி துணை - சிறுகதை

சிறிது நேரத்தில் சிஸ்டரின் பேட்டரி லைட்டைக் கண்டறிந்த மாணவிகளில் மூவர் பாதையைத் தொடர்ந்தனர். ஊரின் சுகாதார மையத்தை அடைய அவர்களுக்கு முக்கால்மணி நேரம் ஆனது. அங்கு முப்பத்தைந்து நிமிடங்களுக்கு முன்பிருந்து சிஸ்டரின் நெஞ்சுவலிக்கு முதலுதவிகள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன.

விடியத் தொடங்கியதும் வெளியில் காத்திருந்த நால்வரையும் நோக்கி வந்த செவிலி, சிஸ்டர் நலமாய் இருப்பதாகவும், ‘காட்டீசுவரி’ என்பவளை அழைத்ததாகவும் சொல்லிவிட்டு நகர, காட்டீசுவரி எழுந்து போனாள்.

எழுந்து படுக்கையில் அமர்ந்திருந்த சிஸ்டர் வாசலிருக்கும் திசை நோக்கியிருந்தாலும் நிமிர்ந்து பார்க்கவில்லை. தன்னருகே வந்து நின்றிருந்த காட்டீசுவரியை அணைத்துக்கொண்டு அழுகையில் காட்டீசுவரியின் இடுப்பைச் சுற்றிய சிஸ்டரின் கைகள் சேராமல் இருந்ததை மூவரில் ஒருத்தியான செல்வியும் பார்த்தாள்.

சிஸ்டர் நிதானிக்க நேரமானது. மென்மையாய் சிரிக்கும் முயற்சியிலிருந்த உதடுகள் சிரிப்பதற்கு முன்பே பேசியது, “உனக்கு என்ன வேணுமோ சொல்லு காட்டீசுவரி... சிஸ்டர் தரேன்.”

இம்முறை தன் பெயர் கனிகா என்பதை அவள் நினைவுறுத்தவில்லை.

சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டரை அப்படியே நிறுத்தி, காலை ஊன்றிய பானு, பின்னால் உட்காந்திருந்த செல்வியைத் திரும்பிப்பார்த்துக் கேட்டாள், “கனிகா எதுவும் கேக்கலையா... அந்த லெட்டரைக் கேட்டாங்களா, ஸ்போர்ட்ஸ் ஜெர்சி கேட்டாங்களா, இல்ல பேட்டரி லைட்..?”

செல்வி சில கணங்கள் கழித்து சொன்னாள்...

“உங்க பெயர் போடாத எந்தக் கடிதத்தையும் இனி படிக்க மாட்டேன்னு சொல்லுங்க சிஸ்டர்.”