
கவிதா சொர்ணவல்லி, ஓவியங்கள்: மணிவண்ணன்
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
‘லெட்ஸ் மூவ் ஆன்...’
வாட்ஸ்அப்பில் இதை டைப் செய்தபோது எந்தக் கொந்தளிப்பும் இருக்கவில்லை எனக்கு. காபி குடிக்கப்போகலாமா என்று கேட்பதைப் போன்ற மிக சாதாரண மனநிலைதான் இருந்தது.
அனுப்பிய சில நொடிகளிலேயே அவனிடமிருந்து ‘கூல்’ என்று பதில் வந்திருந்தது.
உடனடியான இந்த பதில், உள்ளே ஏதோ ஒன்றை உடைய வைத்தது. இன்னும் சில மணி நேரம் கழித்து அவன் இதை அனுப்பியிருக்கலாம். குறைந்தபட்சம், என்னை விட்டு விலகுவதென்பது அவனால் எதிர்கொள்ள முடியாதவொன்று என்ற சிறு மனநிறைவாவது அவன் எனக்குத் தந்திருக்கலாம்.
தொலைபேசியில் அழைத்து ‘உன்ன மாதிரி ஒரு கேவலமானவள நான் பாத்ததே இல்ல. உனக்கெல்லாம் நல்ல லவ் ஒன்னுகூட அமையாது’ என்று கண்டபடி ஏசி சிறு நாடகத்தை நிகழ்த்தியிருக்கலாம். இந்தப் பிரிவை முன்னகர்த்தியவள் நான்தான். ஆனாலும் எந்த எதிர்ப்பும் இல்லாது வந்த 'சரி' என்ற பதில் ஏமாற்றமாக இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன் அவன் காதல் சொன்ன ஒரு நாளிலும் இதே போலத்தான் அந்தந்த நிமிடத்தில் முடிவெடுத்து, எல்லாவற்றையும் உடைக்கும் மனநிலையோடு இருந்திருக்கிறேன்.
சொந்த ஊரிலிருந்து ஐந்நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்தில் வேலை பார்க்கும் கார்ப்பரேட் பெண் நான். லகர சம்பளத்தின் சொகுசோடும், இயல்பிலேயே வந்துவிட்ட நுண்ணுணர்வுமிக்க உணர்வோடும், அறம் விழுமியம் என்று குழப்பியடிக்கும் மனநிலையோடும் கடக்கும் தனித்த வாழ்வெனக்கு. அந்த வாழ்வின் பல ரணங்களால் என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்ட காலகட்டத்தில்தான் அவனைச் சந்தித்தேன். என் முதுகில் நான் ஏற்றியிருந்த சுமைகளோடு அவன் என்னை அணுகவில்லை என்பதே என் வட்டத்திற்குள் அவனை அனுமதிக்க எளிமையான காரணமாக இருந்தது. ஓரிரு முறை நேரிலும், நாள் முழுக்க வாட்ஸ்அப்பிலுமாக நெருக்கமாகியிருந்தோம்.
ஒரு புதிய வருடத்தின் தொடக்க நொடியில், பழைய வருடத்தின் இறுதி நொடியில் அவனுடைய காதலை வாட்ஸ்அப்பில் தெரிவித்தான்.
‘உன்ன லவ் பண்றேன்’ என்று.
கிண்டலும் மகிழ்வும் கலந்த சிரிப்பொன்று சட்டென வந்தது. வாட்ஸ்அப் அளித்திருக்கும் புன்னகை எமோடிகான்களில் ஒன்றைப் போலவே என்னைக் கற்பனை செய்துகொண்டேன்.
எழுதிவைக்கப்பட்டுள்ள கோடிக் காதல் கதைகளில் சொல்லப்பட்டுள்ள எந்தச் சலனமும் இல்லை அவனிடம். சாட்டில் உள்ள எழுத்துகளைத் தடவிப்பார்த்தால் ஏதாவது ஒரு தயக்கம், சங்கடம் தெரியுமா எனக்கு என்று யோசித்தேன்.
‘குடிச்சிருக்கியா’ என்றேன்.
‘குடிச்சிட்டிருக்கேன்’ என்றான்.
பின் நெடுநேரம் அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
‘லவ் மேல இருந்த புனிதமெல்லாம் நாவல் சினிமாவோட முடிஞ்சுபோச்சு. இந்த இன்ஸ்டா லைஃப்ல, முன்ன பின்ன தெரியாதவங்ககிட்டகூட லவ் யூ சொல்லுறோம். அதுக்கு ஒரு படி மேல போயி, கொஞ்சம் அறிமுகமாகியிருந்தாலே பளிச்சு பளிச்சுன்னு முத்த ஸ்மைலி போட்டு விடுறோம். பழகுற எல்லாரையும் ஹக் பண்ணிக்கிறோம். லவ்வுக்கு, லவ் பண்றவனுக்குன்னு இங்க என்ன தனித்தன்மை இருக்குதுன்னே எனக்குத் தெரியல? இப்ப நீ சொன்ன ‘லவ் யூ’ கூட என்னிய குழப்பமா ஆக்குது. ஊருக்கு போறவங்கள வழியனுப்புறப்ப சரமாரியா அன்பைப் பொழிவோமே, அப்படியான ஒரு தருணமா இருக்குமோ? பலவீனமான மனநிலைல இருக்கிறப்ப நம்ம கை பிடிச்சுக்கிறவங்ககிட்ட லவ் யூ சொல்லிட்டு மறப்போமே, அது மாதிரியோன்னெல்லாம் யோசிக்க வைக்குது. இத சீரியஸா அக்ஸப்ட் பண்ணி, பொறுப்போட நடந்துக்கணுமா, இல்ல எக்ஸ்டெண்டட் க்ரஷ்னு நெனச்சு அனுபவிக்கணுமான்னும் குழப்பமா இருக்குது’ என்று டைப் அடித்து அவனுக்கு அனுப்பி விட்டுத் தூங்க வந்துவிட்டேன்.
எனக்கும் அவனுக்குமான உலகம் ஏறக்குறைய மூன்று மணி நேர இடைவெளியில் தாமதமாகச் சுற்றிக்கொண்டிருந்தது. என் புதிய வருடத்தில் அவன் கடந்த வருடத்தின் ஆளாகச் சுற்றிக்கொண்டிருந்தான்.
புத்தாண்டின் புதிய நாளில், காதல் பற்றிய என்னுடைய தத்துவப் புலம்பல்களுக்குப் பெரிதாக அலட்டியிருக்கவில்லை அவன்.
‘ நான் எல்லாருக்கும் லவ் யூ சொல்லுறவன் இல்ல. எல்லாருக்கும் முத்த ஸ்மைலி போடறவன் இல்ல. எனக்கு லவ்ன்னா காலகாலமா அரைச்சுட்டு இருக்கிற அந்த கிளிஷே லவ் மட்டும்தான். 14 மணி நேர ஆபீஸ் வொர்க்லேயும், சாப்பிடற தூங்குற வேற வேலை செய்யிற மீதி 10 மணி நேரமும் உன்னையும் நினைக்கிற அதிக எனர்ஜி செலவழிக்கிற சீரியஸ் லவ்தான். ஒருவேளை இன்னும் மூணு மாசத்துல உனக்கு என்னியவோ, எனக்கு உன்னியவோ பிடிக்காமப் போகலாம். அப்றோ என்னாகும்னு பயப்படாத... அப்படி ஆகுறப்ப மூவ் ஆன் ஆகிறலாம்’ என்றிருந்தான்.
எழுதிப்பேசுவது மிக எளிதாக இருக்கிறது. எந்த உணர்வுகளையும் அதன் உண்மைத்தன்மையோடு எதிர்கொள்ள வேண்டியதில்லை. உணர்வுகளற்று அல்லது நமக்கேற்ற உணர்வில் வாசித்துக்கொள்ளலாம். அப்படித்தான் அவனது பதிலை வாசித்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் எழுத்துகளில் எதிராளியின் மகிழ்வை, துயரத்தை உணர்ந்துகொள்ள முயலும் எனக்கு அந்த பதில் சற்றே ஏமாற்றமளித்தது.
அவன் இன்னமும் நெகிழ்வாக, இன்னமும் உருக்கமாக, இன்னமும் கெஞ்சுகிற வகையில் எதாவது எழுதியிருக்கலாம் என்று ஒரு பாதி மனது எதிர்பார்த்திருக்கும் போல. மற்றொரு பாதி அந்த மூவ் ஆனில் ஆசுவாசமாக நிலைதட்டி நின்றது.
ஒத்துவராவிட்டால் கிளம்பலாம் என்பது மூச்சு விட வைத்தது. கமிட்மென்ட் உறுத்தல்கள் இல்லாத உறவென்பது மாயாஜாலம் போலிருந்தது.
டிசம்பர் மாதக் குளிர்நாளில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விரல்களில் பனி உணர்ந்திருந்த அதிகாலை இரண்டு மணிக்கு அவனை நேரில் சந்தித்தேன்.
மழைக்குப் பின் வரும் மென் வெயிலைப் போலிருந்தான். வெளியில் தெரிந்தும் தெரியாத கன்னக்குழியில் அவுன்ஸ் அளவில் புன்னகைத்தபடி அணைத்துக்கொண்டான். குளிருக்கு இதமாயிருந்தான்.
அலுவலகப் பணிகளின் பொருட்டு பத்து நாள்கள் விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்தவன், என்னுடைய வீட்டிலேயே தங்கிக்கொண்டான்.
யாருமில்லாத அறையில் கண்விழித்து, அதே யாருமற்ற வீட்டிற்குள் மாலையில் மறுபடி நுழையும் வாழ்வெனக்கு. தேவைக்கும் அதிகமான தனிமையிருந்த சூழலில் அவன் இருப்பு அதிசயமாய் இருந்தது.
காலிங்பெல் அடித்ததும் கதவு திறக்க யாராவது வருவது வரம். அது எனக்கு அருளப்பட்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். நான் மட்டுமே அமரும் மிக நீண்ட சோபாவில், உடன் ஒருவன் அமர்ந்திருந்தது, அமர்ந்திருக்கிறான் என்ற நினைப்பே ஆதூரமாய் இருந்தது.
சொற்கள் தீர்ந்துவிடும் ஊழி நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதுபோல பேசிப் பேசித் தீர்ந்தது காலம்.
பேச்சைப்போல போதையான வஸ்து எதுவுமில்லை. உணர்வுக் கொந்தளிப்புகள் அடங்கி, கால் தரையில் பட நிதானமாய் நிற்கும் தருணத்திலும் தீராத ஒன்றாய் பேச்சு இருந்தது.

கிளர்ச்சி, ததும்பல், மையல், மோகம் எல்லாம் தாண்டியபின் மீதமிருந்த காதல் என்பது பரஸ்பர சிறுபிள்ளைத்தனம். அப்படித்தான் இருந்தது அவனுடனான நாள்கள்.
பனி கொட்டும் டிசம்பரில் மழை எப்போதும் மென்சூட்டுடன் இருப்பதாக எனக்குத் தோன்றும். நாற்காலியில் உட்கார்ந்து பால்கனி சுவர் விளிம்பில் கால்நீட்டியபடிக்கு நட்சத்திரமற்ற நிலவற்ற கருவானை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தபோது அப்படியொரு மென்சூடு மழை பொழியத்தொடங்கியது. சுவர் விளிம்புக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த இருவரின் பாதங்களிலும் மழை உருண்டு ஓடியது.
‘கல்யாணத்துல எல்லாம் உனக்கு நம்பிக்கை இருக்கா?’ என்றான்.
`இல்ல, தெரில... நம்பிக்கை இருக்கா இல்லையான்னே எனக்குத் தெரில’ என்றேன்.
‘சரி லிவ் இன்ல?’
`இல்ல அதுவும் தெரில. கல்யாணமோ லிவ் இன்னோ... நிரந்தரமா நம்மகூட இருப்பாங்களான்னு தெரியலையே! டிவோர்ஸ் ஆகிரும். இல்ல பிரேக் அப் ஆகிரும். அதனால அப்படியான கமிட்டட் ரிலேஷன்ஷிப்க்குள்ள போகவே பயமாருக்கு’ என்றேன்.
‘இப்ப இருக்கிற இந்த லாங் டிஸ்டன்ஸ் லவ்? இது ஓகே வா உனக்கு?’ என்றான்.
‘இது ரொம்ப நல்லாருக்கு. எப்பவும் பிசிக்கலா கூட இருக்க மாட்டதான். ஆனாலும் வெர்ச்சுவலா எப்பவும் கூட இருக்கிறதான. அது லவ்வுக்கு லவ்வும் ஆச்சு... ஸ்பேஸுக்கு ஸ்பேஸும் ஆச்சு... ரொம்ப நாள் கழிச்சு நீ வர்றப்ப அதுவரைக்கும் சேர்த்து வச்சிருந்த லவ் எல்லாம் கொட்டி... வெறுப்பே வராதில்ல நமக்குள்ள... பிரியவே வேண்டாம் இல்லையா’ என்றேன்.
‘உனக்கு மட்டும்தான் கனவையும் தாண்டி ஒரு உலகம் இருக்கு. அந்த உலகத்துக்குள்ள இப்படியெல்லாம் யோசிச்சுட்டு நீ உலாத்திட்டு இருப்ப’ என்றபடியே சிரித்துக் கடந்துவிட்டான்.
பொறுப்புகளுக்குள் நுழைவதென்பது பிரிவுகளுக்கும் தயாராவது என்கிற என்னுடைய பீதியை அவன் உணர்ந்திருக்கக்
கூடும். அதனால்தான் அவன் மேற்கொண்டு அதைப் பற்றிய பேச்சையே எடுக்கவில்லை.
பனியும் மழையும் பூக்களும் மிதந்துகொண்டிருந்த சென்னையில், எங்களுக்கான சாகச வீதிகளை உருவாக்கியிருந்தோம்.
விடுமுறை முடிந்து அவன் பணிக்குத் திரும்பினான்.
வழியனுப்புதல் என்பது தனித்துவமான நுட்பம். சிறு கண்ணிமைத்தலில் கொட்ட இருக்கும் கண்ணீரை லாகவமாக அடக்கத் தெரியவேண்டும். ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்தை ஏற்றி முகத்தில் ஒளிகூட்ட வேண்டும். விலக்கமுடியாத அணைப்பின் கைகளை நாசூக்காக விடுவிக்க வேண்டும். கழுத்து வரை நிறைந்திருக்கும் 'போகாத, இங்கயே இரு' என்கிற சொற்களை நன்கு அழுத்தி விழுங்கவேண்டும். கோத்திருக்கும் விரல்களை மெதுவாகப் பிரிக்க வேண்டும். பாதுகாப்புப் பரிசோதனைக்கு ஓடுகையில் அவசரஅவசரமாகத் தரப்படும் முத்தத்தின் ஈரத்தை அடுத்த பயணம் வரை பாதுகாக்க வேண்டும்.
இந்தக்கலையில் அரசி என்பதை அவன் கிளம்பிய அன்று, விமானநிலையத்தில் வைத்துத் தெரிந்துகொண்டேன்.
மறுபடியும், கதவு திறக்க ஆளில்லாத அதே வீட்டிற்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்பது அயர்ச்சியாக இருந்தாலும், அவ்வீட்டில் தீபமொன்றை அவன் ஏற்றியிருந்தான் என்பது மகிழ்வாகவே இருந்தது.
வீட்டிற்கு மட்டுமல்ல, பழைய வாழ்வின் ரணங்கள் காரணமாக முடங்கியிருந்த என்னுடைய ஆக்சிடோஸின்களின் திரிகளையும் தூண்டிவிட்டிருந்தான்.
‘நடமாடும் திரிபோல் வெளிச்சமாக இருக்கிறாய்’ என்று கவிதை எழுதிக்கொடுத்தான் அலுவலகத் தோழன்.
‘முகத்துல என்னவொரு தேஜா’ என்று கிண்டலடித்தாள் சக அதிகாரி ஒருத்தி.
‘இது என்னோட ஆளு’ என்று உரிமை கொண்டாடினான் கிரஷ் ஒருவன்.
உள்ளங்கை பற்றிய நண்பனொருவன் ‘எல்லாப் பொண்ணுங்களுக்கும் இவ்ளோ மிருதுவா உள்ளங்கை இருக்கிறது இல்லையே’ என்றான். நேரடி பாஸ் ஒருவன் ‘லவ் யூ’ என்றதற்கு, கண்கள் விரியச் சிரித்து தேங்க்ஸ் என்றேன்... வழக்கமில்லாத ஒன்றாக இருந்தாலும், அத்தனை பேரும் கொண்டாடுவது தனித்த களிப்பைத் தந்தது.
பாராட்டுகளை தினந்தோறும் அவனுக்கு அப்டேட் செய்துகொண்டிருந்தேன். கைகளைப் பற்றிய நண்பனைக் குறித்துச் சொல்லியபோது சற்றே முகம்சுளித்தவன், 'லவ் யூ' ப்ரோபோசலைக் கூறியபோது சட்டென்று எரிச்சலானது தெரிந்தது.
`நீ என்ன சொன்ன அதுக்கு?’ என்றான்.
`தேங்க்ஸ் சொன்னேன். நல்லாருக்கில்ல... யாராவது நமக்கு லவ் யூ சொல்லுறப்ப!’ என்றேன்.
வீடியோ காலில் சில நொடிகள் முகம் பார்த்துக்கொண்டிருந்தான்.
`லவ் யூ சொல்லுறதெல்லாம் தப்பில்ல. அதுக்கு ரியாக்ட் ஆகுறதும் பிரச்சினை இல்ல. ஆனா அதுக்கு நீ இவ்ளோ அதிகமா ரியாக்ட் ஆகுறது ஆச்சர்யமா இருக்குது’ என்றான்.
சட்டென எனக்கு எரிச்சல் வந்தது, நான் மகிழ்வாக இருக்கிறேன். மற்றவர்களுக்கு மகிழ்வைப் பரப்புகிறேன். அவர்கள் என்னை நேசிக்கிறார்கள். அதுவும் எனக்குப் பிடிக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று.
காதலில் தீவிரமாகும் அனைவருக்கும் வரும் பார்டர்லைன் பெர்சானாலிட்டி டிஸ் ஆர்டர் இவனுக்கும் வந்திருக்கிறது போல. அதனால்தான் இப்படிக் கடுப்பாகிறான் என்று அவனைக் குற்றவாளியாக்கினேன். நமக்கான அடுத்தவர்களின் கருத்துகளைப் பரிசீலிக்காமல், தலைக்குள் ஏற்றாமல் புறக்கணிப்பதுதான் எத்தனை சுலபமாக நிம்மதியாக இருக்கிறது என்று உணர்ந்தேன்.
இரண்டு வருடங்களில் எனக்கும் அவனுக்கும் இப்படியான முரண்பாடுகள் ஏராளம் வரத் தொடங்கின. ஒருவரை ஒருவர் சகித்துக்கொண்டோமா, அல்லது அவன் என்னை சகித்துக்கொண்டானா என்பது விளங்கவில்லை.
அப்பார்ட்மென்ட் பார்க்கிங் பகுதிகளை வேப்பம்பூக்களும் மாம்பூக்களும் எலுமிச்சைப் பூக்களும் நிறைத்துக்கொண்டிருந்த ஏப்ரல் விடுமுறையில் வீட்டிற்கு வந்தபோது கேட்டான், ‘உன்ன நான் நல்லா கவனிச்சுக்கிறேனா? என்னால முடிஞ்ச அளவுக்கு எல்லா லவ்வையும் கொடுக்கிறேன்தான?’ என்று.
‘ரொம்ப நல்லா பாத்துக்கிற. இவ்ளோ லவ் நான் வேற எங்கயுமே பீல் பண்ணினது இல்ல’ என்றேன்.
‘அப்றோ ஏன் இவ்ளோ எக்ஸ்ட்ரா லவ், க்ரஷ், இன்பேக்சுவேஷன்னு எல்லாக் கண்றாவியும்? ஆமா உன்னால எப்படி இவ்ளோவையும் கையாள முடியுது? அவ்ளோ எனர்ஜி வெச்சிருக்கியா? மூச்சுமுட்டலையா? உன்மேல பொசெசிவ்னஸ் கண்றாவி எல்லாம் வரக்கூடாதுன்னு நானும் ரொம்பவே மெச்சூர்டா நடக்க முயற்சி பண்றேன். ஆனாலும் ஒரு உறவுக்குன்னு சில அடிப்படைப் பொறுப்பு இருக்குது. தகுதி இருக்குது. அது எதுக்குமே லாயக்கில்லாத மாதிரி நம்ம லவ் ஆகிட்டு இருக்குது’ என்றான்.
கணிக்கத் தவறியதில் கால் தவறி சரசரவென்று சறுக்கி விழுந்து கொண்டிருந்தேன். அடிபட்ட வேகத்தில் எழும் சுய ஆத்திரத்தை அவன்மீது வீசி எறிந்தேன்.
‘நீ நல்லா வெச்சிருந்தா மட்டுமே அது எனக்குப் போதும்னு உனக்கு யார் சொன்னது. எனக்கு நிறைய அட்டென்ஷன் கிடைக்குது. அதை நான் அனுபவிக்கிறேன். இவ்ளோ கவனம் கிடைக்கிற யாராவது அதை வேண்டாம்னு சொல்லுவாங்களா? அது நல்லாருக்கில்ல... நான் ரொம்ப ஸ்பெஷலான பொண்ணுன்னு என்னை உணர வைக்குதில்ல... நான் அழகாருக்கேன்னு கான்பிடன்ஸ் கொடுக்குதில்ல... நான் புத்திசாலியா இருக்கேன்னு எனக்கே சொல்லிக் கொடுக்குதில்ல..! அந்த உணர்வை தனிப்பட்ட ஒரு பையனால, காதலால எனக்குக் கொடுக்க முடியாது. என்னக்கொண்டாடுற நிறைய பேர் எனக்குத் தேவைதான்.’ என்று மூச்சு விடாமல் கொட்டி முடித்தேன்.
விடுமுறையை கேன்சல் செய்து பணிக்குத் திரும்பிவிட்டான். வழியனுப்ப நான் விமான நிலையத்திற்குச் செல்லவில்லை.
பின் இரண்டு நாள்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அதன்பின்தான் ‘லெட்ஸ் மூவ் ஆன்’ மெசேஜ் அனுப்பினேன்.
நானும் அவனும் பேசாமலாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. பிரேக் அப் என்று சொல்வதா? சற்றே நீண்ட பிரிவு என்று சொல்வதா? எப்படி அதை வரையறுப்பது என்ற தெளிவே இல்லை என்னிடம்.
இரண்டு வருடங்களாக எப்போதும் உடனிருந்த மனமொன்று, குரலொன்று இல்லையென்பது துயரென்றாலும், வேறேதோ ஒன்றும் என்னிடமிருந்து பறித்துக் கொள்ளப்பட்டது போலிருந்தது.
உள்ளெரிந்த சுடரின் பிரகாசம் காணாமல் போயிருந்தது. யாரிடமும் பகிர்வதற்கு என்னிடமே துளி மகிழ்வு மிஞ்சியிருக்கவில்லை. என்னுடைய இயல்பென்பது எதுவாகினும் அதைத் தூண்டிவிடும் வினையூக்கியாகக் காதல் இருந்திருக்கிறது. அந்தக் காதலை எனக்களித்த ரசவாதியாக அவன் இருந்திருக்கிறான் என்பதை இந்த ஒரு வருடத்தில் மெது மெதுவாக உணரத் தொடங்கியிருந்தேன்.
எங்களது இறுதிச் சண்டையின்போது அவன் அதிர்ச்சியும் அயர்ச்சியுமாய்க் கேட்ட ‘இவ்ளோவையும் எப்படி மேனேஜ் பண்ணுற... எங்கிருந்து வருது அவ்ளோ எனர்ஜி?!’ என்ற கேள்விக்கு இப்போது எனக்கு பதில் கிடைத்திருந்தது.
வாய் திறந்தாலே புகை வரும் ஜனவரி மாதப் பனி குறைந்து, பழுத்துக்கொண்டிருக்கிற எலுமிச்சையின் சிறுமஞ்சளில் குளிர்ச்சியான சூரியவொளியோடு பிப்ரவரி தொடங்கியிருந்தது. காதலர் தினக்கொண்டாட்டம் அலுவலகத்தின் பிரமாண்ட கான்பரன்ஸ் ஹாலில்.
ஒவ்வொருவரும் அவர்களின் காதல் பற்றி, பொதுவான காதல் பற்றி, நெற்றியெல்லாம் பூக்கள் பூக்கிற தேவதையைப் போல பகிர்ந்துகொண்டிருந்தார்கள்.
‘நீ வா ’ என்றான் சிவா என்னைப் பார்த்து.

கூச்சமாகவும் சந்தோஷமாகவும் குதூகலமாகவும் எல்லாமாகவும் நடந்து ஹால் நடுவில் சென்றேன்.
‘பட்டர்ஃப்ளை ஓ பட்டர்ஃப்ளை...’ என்று யேசுதாஸ் குரலோனான கிரஷ் பாட, எல்லாரும் சிரித்தார்கள்.
வாக்குமூலம் கொடுக்கப்போவதுபோல படபடப்பாக இருந்தது. எழுந்து நாற்காலி பின் நின்றுகொண்டேன். அதன் மேல் விளிம்பைப் பற்றிக்கொண்டே பேசத் தொடங்கினேன்.
‘எனக்கு இந்த ஒன்னெஸ்ல எல்லாம் நம்பிக்கை இருந்தது இல்ல எப்பவும். இவ்ளோ நீண்ட வாழ்க்கைல எத்தனை நூறு பேரைச் சந்திப்போம், அதுல எத்தனை பத்துப் பேர் மேல மையல்ல விழுவோம் அப்படிங்கிறது எல்லாம் எதிர்பாராதது. வாழ்வு முழுவதும் ஒரே ஒருவன் அப்படிங்கிற கான்சப்டிலும் எனக்கு நம்பிக்கை இருந்ததில்ல. துயரம் நிரம்பிய இந்த வாழ்வு நகர்றதுக்குத் தேவையான முடிவிலா உற்சாகத்தைக் காதல் தர முடியுமான்னு தெரியல. ஆனாக்கூட எல்லா உற்சாகமும், எல்லா ஆரவாரமும் முடியுற ஒரு நாளோட இறுதியில அயர்ச்சியா படுக்கைல விழறப்ப ஒரு பாதுகாப்பான அணைப்பைக் காதல்தான் தரமுடியும். அதை ஒரே ஒருத்தர்கிட்டதான் உணரமுடியும். வாழ்க்கைங்கிற கடல்ல ஆழம் அளவு தெரியாம கால நேரம் தெரியாம எதோ ஒரு திசைல தடுமாறித் தத்தளிச்சுக் கொந்தளிச்சுப் போயிட்டிருக்கிற நம்மள பாதுகாப்பா இழுத்துக் கரைக்குக் கொண்டு வந்து நிதானப்படுத்துற நங்கூரம் அவங்கதான். அந்த உயிர்தான் நமக்குள்ள எரியாமக் கிடக்கிற காதலை எரிய வைக்கிறவங்க. அந்த ஒளியில நிறைய பேரை நம்மளால ஆதூரமா உணர வைக்க முடியும். அவங்களும் நம்மள வகைதொகையில்லாமக் கொண்டாடுவாங்கதான். ஆனா எண்ட் ஆப் தி டே... நம்ம லைப்போட ரசவாதி ஒரே ஒருத்தர்தான்.’
`பையன் பாவ்லோ கொய்லோ ஃப்ளேவர்ல இருப்பான் போல’ என்றாள் ஒருத்தி.
`இல்ல... கடவுளோட ஃப்ளேவர்ல ஒருத்தன்’ என்று சிரித்தபடியே இருக்கைக்கு வந்தேன்.
இரவு உறங்கச் செல்வதற்கு முன், நான் பேசிய வீடியோவுடன் ‘லவ் யூ’ என்று மெசேஜ் வந்திருந்தது அவனிடமிருந்து. மறுகேள்வி இல்லாமல் 'லவ் யூ டூ' என்று அனுப்பினேன்.
'வீடியோ அனுப்பின உன் கிரஷ்ஷுக்கு தேங்க்ஸ்' என்ற அவனது பதிலில் தொடங்கியது மற்றுமொரு யுகம்...