சினிமா
Published:Updated:

சஞ்சனா காத்திருந்தாள் - சிறுகதை

சஞ்சனா காத்திருந்தாள்  - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சஞ்சனா காத்திருந்தாள் - சிறுகதை

எம்.ஜி.கன்னியப்பன்

`சூரரைப் போற்று’ அபர்ணா பாலமுரளிபோல அழகாய் இருந்த சஞ்சனாவுக்கு 23 வயசு. உதடுகளில் உற்றுப் பார்த்தால் தெரிகிற மெல்லிய பிங்க் நிற சாயம். கண்களில் பத்து சதவிகித மிரட்சி. கூந்தலில் ரயில்வே ‘ட்ராக்’ போல மல்லிகைப் பூச்சரம். 48 மணி நேரத்திற்கு முன் தாலி கட்டிய குணாவுடன் நிகழவிருக்கும் முதலிரவுக்காக, நினைவுச் சேகரிப்பில் டவுன்லோடு செய்து வைத்திருந்த 18+ காட்சிகளை மன மானிட்டரில் நகர்த்தி நகர்த்திப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அறையுடன் ஒட்டியிருந்த பாத்ரூமில் குணா ஷவரில் குளிக்கும் தண்ணீரின் ஸ்...ஸ்... ஓசை எப்போது நிற்குமென்கிற எதிர்பார்ப்போடு… ஏசியின் எலக்ட்ரானிக்ஸ் எண்களைக் குறைத்துக் குளிரைக் கூட்டினாள். அங்கிருந்த ரூம் ‘ஸ்பிரே’ பாட்டிலைக் குலுக்கி, ஏசி நோக்கிப் பீய்ச்சினாள். புலன்கள் சிறகடித்தன.

உள்ளே ஸ்...ஸ்... நின்றது. உடைகள் அனைத்தும் ஒவ்வொன்றாகக் கழற்றி டேபிள் மேல் கசங்காமல் வைத்துவிட்டு... போர்வை பிரித்து முழுக்கப் போர்த்திக்கொண்டாள். போர்வை விலகிக் குளிர்ந்த பகுதிகளில் இழுத்து, தொடை களுக்கிடையே அழுத்திக்கொண்டாள். அந்தக் குளிரையும் தாண்டி உடல் தகித்தது. சோப்பு வாசனையுடன் வந்தணைக்கும் குணாவுக்காக வெட்கத்தோடு சஞ்சனா கட்டிலில் காத்திருந்தாள்.

``என்னங்க, கொஞ்சம் இங்க வாங்க!” மனைவியின் அவசர அழைப்பில் பேடில் பேப்பர்கள் அடுக்கிச் சிறுகதை எழுத ஆரம்பித்த மூன்றாவது பத்தியிலேயே சஞ்சனாவைக் கட்டிலில் காத்திருக்க வைத்துவிட்டு எழுந்த வாசு, ‘வளர்பிறையன்’ எனும் புனைபெயருக்குள் புகுந்துகொண்ட வளர்ந்து வரும் எழுத்தாளன்.

கிச்சனில் ஸ்டவ் லைட்டரை பர்னரில் அடித்து அடித்துப் பார்த்துக்கொண்டிருந்த மனைவி மானஸ்வி கோபமாக இருந்தாள்.

`கேஸ் சிலிண்டர் வரும், வாங்கி வைங்கன்னு சொல்லிட்டுப் போனனே. ஏஜென்சிலேர்ந்து ஆள் வரலையா?” அவள் அலுவலகம் போகும்போது சொல்லிச் சென்றது. நினைவில்லாமல் நேற்று ரிலீஸான க்ரைம் த்ரில்லர் படம் பார்க்க தியேட்டருக்குப் போனதன் தவற்றை உணர்ந்தான். `வீட்டுலதான்மா இருந்தேன், ஆள் யாரும் வரலை.’ பொய் சொல்ல முடியாது, தியேட்டரில் இருந்தபோது நான்கு மிஸ்டுகால் கொடுத்திருக்கிறான். மாட்டிக் கொள்வேன். அமைதியாக நிற்பதைத் தவிர வேறு வழி, வாய்க்கால், ரோடு எதுவுமில்லை.

``வீட்டுல உட்காந்துகிட்டு இந்த ஒரு வேலைகூட உருப்படியா பண்ண முடியாதா..? எழுதறேன் எழுதறேன்னு வெட்டியா நேரம் போக்குறதுதான் மிச்சம். ஒரு ஊறுகாய் பாட்டிலுக்குக்கூட துப்பில்ல.’’ வளர்பிறையனுக்குத் தன்மானம் சாணைக் கல்லில் உரசிய கத்தி போல நெருப்புப் பொறி பறந்தது.

``போங்க. கண்ணு முன்னாடி நிக்காதீங்க. ஹோட்டல்ல வாங்கிட்டு வாங்க” பணமும் மஞ்சள் பையும் கொடுத்தனுப்பினாள். வாங்கிக் கொண்டு பெட்ரூமுக்கு வந்து சட்டை மாட்டிக் கொண்டு பேடிலிருந்த பேப்பரைப் பார்த்தான்.

ஃபேன் காற்றின் படபடப்பில் சஞ்சனா கட்டிலில் காத்திருந்தாள். `பிசாசு எந்த நேரத்தில் கூப்பிட்டிருக்கிறாள். சின்னஞ் சிறுசுகளை முதலிரவில் காத்திருக்க வைப்பது உலகமகா குற்றம். இவர்களின் சாபம் மானஸ்வியைச் சும்மா விடாது.’ புலம்பியபடி கிளம்பினான்.

பரோட்டாக் கடைக் கல்லாவில், அவனுக்கு முன் பார்சலுக்கும், சோம்பு மென்றபடி பில்லுக்கும் பணம் கொடுக்க நின்றார்கள். சஞ்சனா கட்டிலில் காத்திருந்தாள், குணா குளித்து பூத்துவாலை டவலில் தலை துவட்டியபடி கதவு திறக்க...

சஞ்சனா காத்திருந்தாள்  - சிறுகதை

``சார், உங்களுக்கு என்ன வேணும்?” கல்லாக்காரன் உத்தரவுபோல் கேட்டான்.

``ஒரு ஆனியன் ஊத்தப்பம், அஞ்சு பரோட்டா.” கையிலிருந்த ரூபாயை சற்றேறக்குறைய பிடுங்கிக் கல்லாவில் போட்டுக் கொண்டு பில்லிங் மிஷினில் தட்டியபடி, ``பை இருக்கா..?”

``இல்லை...” சஞ்சனாவின் கவலையில் பையை எடுத்துவர மறந்திருந்தான். கர்ச்சீப் போல ஒரு பையை மடித்து பேன்ட் பாக்கெட்டில் நிரந்தரமாய்ப் பத்திரப்படுத்த வேண்டும்.

``பாக்கி 5 ரூபா. பைக்கு சரியாப் போச்சு. வெயிட் பண்ணுங்க.”

காலியாக இருந்த சேரில் அமர்ந்தான். சஞ்சனா கட்டிலில் காத்திருந்தாள். தலை துவட்டியபடி வந்த குணா அவளருகே உட்கார்ந்தான். உட்கார்ந்தான் என்பதில் என்ன இருக்கிறது? இந்த இடத்தில் சின்ன `ட்விஸ்ட்’ இருந்தால் நன்றாக இருக்கும். என்ன பண்ணலாம்? கட்டிலில் காத்திருந்த சஞ்சனா திடீரென அலறினாள்... சரி வருமா? ம்ஹும்... டி.வி மெகா தொடரின் எபிசோடு எண்டு போல இருக்கிறது. அலறினாள் என்றால் `எதனால்’ கேள்வி எழுகிறது. கரப்பான்பூச்சி பறந்து வந்து அவள் கன்னத்தில் விழ, பயந்து அலறினாள்... ம்ஹும், சரியில்லை. `அட...டா’ எனும்படி வியக்க ஏதாவது வேண்டும். குணாவை வாட்டர் ஹீட்டரிலிருந்து மின்சாரம் பாய்ந்து அலறவிட்டுவிடலாம். முதலிரவன்றே விபத்து ஏற்படுத்துவது உறுத்தியது. வேண்டாம். வேறு... வேறு...

``சார் இந்தாங்க. ஆனியன் ஊத்தப்பம், புரோட்டா.’’ கடை ஊழியன் பார்சல் பையை நீட்டினான். வாங்கிப் பிரித்தவன் ``சாம்பார் போதுமா..?”

``ஒரு பாக்கெட் எக்ஸ்ட்ராவா போட்டிருக்கேன்.” திருப்தியுடன் வெளியே வந்தபோது சஞ்சனா கட்டிலில் காத்திருந்தாள். அடுத்த நகர்வின்றி கதை கட்டிலிலேயே செவ்வகம் அடித்துக் கொண்டிருந்தது.

டி.வி-யில் கார்ட்டூன் சேனல் பார்த்துக்கொண்டிருந்த மூத்தவன் பரிதி, சின்னவன் பிரதீப் இருவரையும் அதட்டி உட்கார வைத்து ஆளுக்கொரு பரோட்டா, மானஸ்விக்கு ஆனியன் ஊத்தாப்பம். அவனும் தட்டில் பரோட்டா பிய்த்துப் போட்டு சாப்பிடத் தொடங்க... சஞ்சனா கட்டிலில் காத்திருந்தாள். குணா, சஞ்சனா இருவரில் ஒருவருக்கு பாட்டி கவலைக்கிடம், ஊரிலிருந்து போன் வருகிறது. என்னவாகும்..? முதலிரவு மனநிலை வடியும். தாம்பத்ய அறை கண்ணீர் அறையாக மாறும். படிப்பவர்களிடம் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். திருப்பம் ஓகே. ஆனால்…

``ஏங்க சாப்பிடடுறதை விட்டுட்டு பீரோவையே ரொம்ப நேரம் வெறிச்சுப் பார்த்துட்டு இருங்கீங்க. சாப்டுங்க. தூங்க வேணாமா..?” என்றபோதுதான் மூவரும் சாப்பிட்டுக் கைகழுவச் சென்றது தெரிந்தது. அவசரமாகச் சாப்பிட்டு முடித்தான்.

அறைக்கு வந்து விளக்கைப் போட்டான். ``லைட்டைப் போடாதீங்க. வெளிச்சம் இருந்தா தூக்கம் வராதுன்னு தெரியாதா..? ஆஃப் பண்ணுங்க.” பண்ணினான். சஞ்சனா கட்டிலில் காத்திருந்தாள். காத்திருக்கட்டும், மார்னிங் பார்க்கலாம். பேடை எடுத்து டேபிளில் வைத்துவிட்டு மெத்தையில் மானஸ்விக்கு தாராளமாய் இடம் ஒதுக்கி ஓரமாகப் படுத்தான்.

காலை மானஸ்வி காபி போட்டுக் கொண்டிருக்க, குழந்தைகள் டெடிபியர் தலை வைத்த டூத் பிரஷ்ஷில் பல் தேய்த்தார்கள். 7.45-க்கு குழந்தைகளைத் தயார் படுத்தி ஆட்டோவில் ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, 8.15-க்கு மானஸ்வி ஸ்கூட்டியில் அலுவலகம் சென்றுவிடுவாள். அதன்பின் மாலை 4 மணிக்கு ஸ்கூல் சென்று மகன்களைக் கூட்டி வரும் வரை தனிமைதான். கட்டிலில் காத்திருந்த சஞ்சனா ஒரு முடிவுக்கு வந்துவிடுவாள். என்றாலும், அதிகாலை மூளை அழுக்கு துடைத்த கண்ணாடிபோல பளபளக்கும். கற்பனையும் கன்னாபின்னாவென்று கழுதைக் காதுபோல நிமிர்த்திக்கொண்டு நிற்கும்.

பேடை எடுத்து மடியில் வைத்தபோது, சஞ்சனா கட்டிலில் காத்திருந்தாள். பேனா எடுத்து எழுதத் தொடங்கும் முன், வார்த்தைகளை வடிவமைத்தான். வாசனையுடன் வந்த குணா அவள் கன்னம் தொட்டு தன் பக்கம் திருப்ப… சஞ்சனா கண் கலங்கியிருந்தாள். ஏன் அழணும்? ஆனந்தக் கண்ணீர் என்றிடலாமா..? அது தாலி கட்டும்போது வந்திருக்க வேண்டும். இரண்டு நாள் கழித்து அதுவும் சந்தோஷமான முதலிரவில் ஏன் அழவேண்டும்... லாஜிக் இல்லை. வேறு எப்படித் தொடர்வது?

எழுந்தான். ஜன்னலுக்கு வந்து தெருவை வேடிக்கை பார்த்தான். எதிரே மீன் விற்கும் முதியவள். அலுமினியக்கூடை வைத்துக் கொண்டு கட்டையில் ஈ மொய்க்க மீன் வெட்டிக்கொண்டிருந்தாள். பூனை ஒன்று வாலை கால்களுக்கிடையே சுருட்டிக் கொண்டு மிச்சம் மீதிக்காகக் காத்திருந்தது. சஞ்சனா கட்டிலில் காத்திருந்தாள். சரி… அடுத்து…

மானஸ்வி அறைக்குள் காபி கொண்டு வந்தாள். வாங்கினான். பெட்டில் அமர்ந்து முதல் சிப்பை விட்டுவிட்டு இரண்டாவது சிப்பில், ``இன்னைக்கு நீங்கதான் குழந்தைகளை ஸ்கூல்ல விடணும்.”

``ஏன்… நீதான கொண்டு விடுவ?”

``ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங்காம். யாராச்சும் ஒருத்தர் போயாகணும். எனக்கு ஆபீஸ்ல நிறைய ஒர்க் இருக்கு. லீவ் போட முடியாது. நீங்க அட்டெண்ட் பண்ணுங்க. புதுசா என்னென்ன ரூல்ஸ் போட்டிருக்காங்கன்னு நோட்ஸ் எடுத்துட்டு வந்து ஈவ்னிங் சொல்லுங்க.” ரிக்வஸ்ட் மாதிரியில்லை. ஆணை.

பிள்ளைகள் ஸ்கூல் பேகையும் லஞ்ச் பேகையும் வாங்கிக்கொண்டு, இருவரும் சீட்டில் அமர்ந்ததும் அவர்கள் கையில் கொடுத்துவிட்டு, ஏறி அமர்ந்து பைக் ஸ்டார்ட் பண்ணி நகர்த்த... சஞ்சனா கட்டிலில் காத்திருந்தாள். கதை முதலிரவில் தொடங்கியதால் முட்டிக்கொண்டு நிற்கிறதோ. சஞ்சனா முதல் பிரசவத்திற்கு மருத்துவமனையில் இருக்கிறாள் என்று ஆரம்பித்தால்..? வேண்டாம், முதலிரவின் சுவாரஸ்யம் பிரசவத்தில் இல்லை.

சாலையின் திருப்பத்தில் எதிரே வந்தவன் ``யோவ், ரெட் சிக்னல் விழுந்திருக்கே. கண்ணு தெரியலை..?” என்றபோதுதான் சிக்னலில் நிற்காமல் தாண்டி வந்தது தெரிந்தது.

``டாடி, அந்த ஐஸ்கிரீம் பார்லர்ல நிறுத்தி ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுங்க.” இரண்டு பிள்ளைகளும் கோரஸாகக் கேட்டனர்.

``ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டிருந்தா ஸ்கூலுக்கு லேட்டாகாதா…?”

``போகப்போக சாப்பிட்ருவோம். வாங்கிக் கொடுங்க.”

ஐஸ்கிரீம் பார்லர் வாசலில் நிறுத்திவிட்டு, பிள்ளைகள் கேட்ட பிளேவர்களில் ஆளுக்கொன்று வாங்கிக் கொடுத்துவிட்டு ``ஸ்கூல் போறதுக்குள்ள யூனிபார்ம்ல பட்டுக்காம சாப்பிடணும்.” தலையாட்டினார்கள்.

ஸ்கூல் மீட்டிங்கில் ஆளாளுக்கு ஆங்கிலத்தில் பேசினார்கள். இளம்பிறையனுக்கு சில புரிந்தும் புரியாமல் இருந்தது. 4வது முறையாக விட்ட கொட்டாவிக்கு பக்கத்தில் இருந்த ஒருவர் முறைத்துப் பார்த்துவிட்டு மேடைப் பேச்சுக்குத் திரும்பினார். சஞ்சனா கட்டிலில் காத்திருப்பது பற்றிய கவலை இங்கு யாருக்கும் இருக்கப்போவதில்லை. அவன் கதை நாயகி காத்திருப்பதில் இவர்களுக்கு என்ன வந்தது.

மீட்டிங் நடந்துகொண்டிருக்க… சஞ்சனா கட்டிலில் காத்திருந்தாள். `ஷவர்’ நின்று வெகு நேரமாகியும் குணா இன்னும் வெளியே வரவில்லை. ஆஹா சூப்பர். நூல் பிடித்ததுபோல் அடுத்தடுத்த வரிகள் மனதில் நீண்டன... பயந்துபோன சஞ்சனா பாத்ரூம் கதவைத் தட்டுவதற்கு போர்வை விலகிவிடாமல் எச்சரிக்கையுடன் எழ முயன்றபோது அவளின் மொபைல் `தலை கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்’ ஒலித்த மொபைலில் புது எண்ணாக இருந்தது. வேண்டுமென்றே தோழிகளில் எவளோதான் புது நம்பரில் கலாய்க்கிறாள் ``ஹலோ.”

``ஹாய் சஞ்சனா” பழக்கப்பட்ட ஆண் குரல் போல் இருந்தது.

``யாரு?”

``ஃபஸ்ட் நைட் கொண்டாடத் தயாரா இருக்க போல... ஹஸ்பண்ட் இல்லாம எப்டி நடக்கும்?”

``டேய், யார் நீ...”

``உன் பழைய லவ்வர்னு வெச்சுக்கயேன். உன் குணாவை குளிக்கறப்போ சோப்பு நுரையோட கடத்தி...”

``டாட். உங்களதான் ஸ்டேஜ்ல கூப்புடுறாங்க...” மூத்த மகன் கையில் சீண்டியபோதுதான் தெரிந்தது.

``எப்போ..?”

``மூணு தடவை கூப்பிட்டுட்டு வேற பேரன்ட்டை ஸ்டேஜ்ல ஏத்திட்டாங்க.”

சஞ்சனா காத்திருந்தாள்  - சிறுகதை

ஒரு வழியாக மீட்டிங் முடிய, வாரிசுகளை வகுப்பறைகளுக்குப் போகச் சொல்லிவிட்டு வந்தான்.

வரும் வழியில் போட்டுக் கொண்டிருந்த சூடான மெதுவடைக்கு பைக்கை நிறுத்திவிட்டு இரண்டு வடை சாப்பிட்டு, காபியும் குடித்தபோது, கடத்தியதாக வந்த போன்காலுக்கு சஞ்சனா உட்சபட்ச அதிர்ச்சி அடைகிறாள் சரி… அடுத்து... கடத்திய எக்ஸ் காதலன் ஆசைக்கு இணங்கவா, பணம் கேட்டா… அவன் டிமாண்டு என்ன..? இந்த இரண்டும் பழசு. வேறு வித்தியாசமாக என்ன கேட்க முடியும்..? நெற்றியைத் தேய்த்தான்… தேய்த்தான்... தேய்த்தான்... ம்ஹும்… மறுபடியும் சஞ்சனா கட்டிலில் காத்திருந்தாளில் வந்து நின்றது.

வீட்டுக்குப் போகப் பிடிக்காமல் முழு நேர அனுமதி பூங்காவைத் தேடிச் சென்று அமர்ந்தான். ஆங்காங்கே ஆளுயரச் செடிகளில் பொய், நிஜக் காதலர்கள் மறைந்திருந்தார்கள். “சூடான வறுகடலை சார்” சிறுவனிடம் ஒரு பொட்டலம் வாங்கிப் பிரித்தான். சஞ்சனா கட்டிலில் காத்திருந்தாள்.

அதிலிருந்த கடலையைக் கொறித்துவிட்டு, துண்டுப் பேப்பரில் ஏதேனும் சிறு செய்தியும் தூண்டலாம், நன்றாகப் பிரித்துப் பார்க்க… கன்னித்தீவு கதை. நான்கு கட்டங்களில் பூதம், இளவரசி படங்கள். நான்கு பட பலூன்களிலும் `வா…’ `விழுங்கிடுவேன்.’ `முடியாது.’ `பார்க்கலாம்.’ ‘சி. 22097 தொடரும்’ என்றிருந்தது.

வீட்டுத் தரையில் கால் பரப்பிக்கொண்டு படுத்தான். எந்த நேரம் சிந்தனை உதித்தாலும் எழுதத் தயாராக ரைட்டிங் பேடை தலைக்கருகே வைத்திருந்தான். பேடை எடுத்து இறுதி வரிகளைப் படித்தான், சஞ்சனா கட்டிலில் காத்திருந்தாள். அடுத்து...

தெருவை அடைத்து கொரோனாவுக்குத் தகரம் அடித்ததுபோல கற்பனை அடைத்துவிட்டதா என்ன? பவுலில் காராசேவ் கொண்டு வந்து படுத்தபடி ஒவ்வொன்றாகக் கொறித்தான். மொபைல் பார்த்தான். கொஞ்ச நேரம் டி.வி பார்த்தான். சிறுகதைப் புத்தகம் ஒன்றைப் புரட்டினான். முழுதாக ஒரு சிறுகதை முடிக்கும் முன் கண்கள் சொக்கிற்று.

நீண்ட நேரம் காலிங் பெல் கதற, பதறி எழுந்தவன். மொபைலில் மணி பார்த்தான். 4.45. ஸ்கூலில் இருந்தும், மானஸ்வியிடமிருந்தும் 18 மிஸ்டுகால்கள். வேகமாக எழுந்து சென்று கதவு திறந்தான். மானஸ்வி குழந்தைகளுடன் ஆளுயர தீப்பந்தமாய் முறைத்தபடி வெடுக்கென்று கடந்து அறைக்குள் சென்றாள்.

குழந்தைகள் அவர் களாகவே ஷூ கழற்றிக் கொண்டிருந்தார்கள்.

``ஸாரி மானஸ்வி. மொபைல்ல அலாரம் செட் பண்ணிட்டுத்தான் படுத்தேன். இவ்ளோ நேரம் எப்டி அசந்து தூங்கினேன்னு தெரியலை.”

``பகல்ல அசந்து தூங்கிற அளவுக்கு அப்டி என்னத்த வெட்டி முறிச்சீங்க..?”

``வேலை இல்லைங்கிறதைக் கேவலப்படுத்துறியா..?”

``ஆமா... அதான உண்மை?”

``இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டுதான இருக்கேன்.”

``ஜாப் வேணும்கிறதுக்குப் போற மாதிரி தெரியலை. நான் எதாச்சும் சொல்லிடுவேன்னு ஃபைலைத் தூக்கிட்டு இன்டர்வியூ போற மாதிரி டிராமா பண்றீங்க.”

``இல்லை. பிராமிஸா...”

``ம்... போதும். முதல்ல பேடும், பேனாவுமா உட்காந்து பேந்த பேந்த முழிக்கிறதை விட்டுட்டு, இன்டர்வியூக்காக பிரிப்பேர் பண்றதுக்கு டைம ஸ்பென்ட் பண்ணுங்க.”

``வேலைக்குப் போனாலும் எழுதிட்டுதான் இருப்பேன். எழுதறது என்னோட ஆம்பிஷன்.”

``உங்க ஆம்பிஷனால பசங்களுக்கு ஸ்கூஸ் பீஸ் கட்ட முடியுமா..? நான் ஒருத்தியா எவ்ளோ கஷ்டப்படுறேன்!”

``இப்போ என்னை என்ன செய்யச் சொல்றே?”

``எழுதறதை விடணும்.”

``முடியாது.”

``அப்படின்னா நானும் வேலைய விட்டுர்றேன். நீயே எல்லாத்தையும் பார்த்துக்க.” அடுத்தடுத்த மானஸ்வியின் வார்த்தைகள் தடித்திருந்தன. வளர்பிறையன் தன்மானம் தீயிலிட்ட பிளாஸ்டிக் காகிதம் போல் கருகியது. அவனின் ஒரு வார்த்தைக்கு ஏழு எதிர் வார்த்தைகள் பேசினாள். இருவரின் வார்த்தை ஏவுகணைகளுக்கு அதிர்ந்துபோய் நின்றார்கள் பிள்ளைகள்.

``இனிமே எங்கிட்டயோ, பிள்ளைங்ககிட்டயோ பேசாதீங்க. டைவர்ஸ் வேணும்னாலும் சரி. சைன் பண்ணித் தர்றேன்.” குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு அறைக் கதவைக் காலால் உதைத்துச் சாத்திவிட்டுச் சென்றாள்.

இளம்பிறையனுக்கு டன் டன்னாய் ஆத்திரம். கடுங்கோபம் தலை உச்சிக்கு ஏறி நின்றது. டேபிளில் இருந்த பேடில் சஞ்சனா கட்டிலில் காத்திருந்தாள். வெடுக்கென்று அந்தப் பேப்பரை இழுத்தான். குணா குளிப்பது பற்றியோ, சஞ்சனா காத்திருப்பது பற்றியோ கவலைப்படாமல் கட்டிலோடு சேர்த்து சஞ்சனாவையும் கசக்கிக் குப்பைக்கூடையில் போட்டான்.

கோபத்தில் மூளை பரபரத்தது. எழுத உட்கார்ந்தான்.

அந்த அலுவலகம் நுழைவதற்கு முன் தாடையிலிருந்த மாஸ்க்கை மேலே ஏற்றிவிட்ட இளைஞன், யாரும் எதிர்பாராத நேரம் அந்த கேபினுக்குள் நுழைந்தான், சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டான். பேன்ட் பெல்ட்டில் சிக்க வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்தான். எல்.இ.டி மானிட்டர் பார்த்து கீபோர்டைத் தட்டிக் கொண்டிருந்த தன் மனைவியின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து டிரிக்கரை அழுத்தினான். `ட்டுப்.’

அதெப்படி பட்டப் பகலில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்துக்கொண்டிருக்க, இண்டு இடுக்கு விடாமல் கேமரா பொருத்தப்பட்டிருக்கும் அலுவலகத்தில் மனைவியைச் சுட்டுவிட்டு எஸ்கேப் ஆகமுடியும்… தடயம் இல்லாமல் எப்படித் தப்பிப்பது?

துப்பாக்கி வைத்து ட்ரிக்கரை அழுத்தினான். `ட்டுப்...’ சரி அடுத்து..? நெற்றியைத் தேய்க்க ஆரம்பித்தான்.