சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

உடனடியாக... - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

- பட்டுக்கோட்டை பிரபாகர்

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

சுள்ளென்று வெயில். ஆனால், ஜில்லென்று காற்று. அதனால் வியர்வை இல்லை. குளிர்க் கண்ணாடி சுகம். மற்றும் சௌகரியமும்கூட, யாரைப் பார்க்கிறோம் என்கிற ரகசியம் காப்பதால். பார்த்தேன்.

நாகரிகமாகச் சொன்னாலும் சைட் அடித்தேன் என்பதே சரி. யாரை? காதில் வயரில்லாத டோப் அணிந்து இசையோ, உரையோ ரசித்தபடி, உதடுகள் மி.மீ பிரியாமல் சூயிங்கம் மென்றபடி வெண்ணெயில் செய்த சிலையாக நின்றாளே, அவளை!

பார்வையாலேயே கிறக்கம் விதைக்கும் அழகு. போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யலாம். அரபு ஷேக் ஓர் எண்ணெய்க் கிணற்றை எழுதித்தருவான். சுவிஸ்ஸில் கணக்குள்ள அதிகாரம் நிறைந்த அரசியல்வாதி என்றால், சட்டமன்ற சீட் உத்தரவாதம். கம்பன் கண்களில் விழுந்திருந்தால் இன்னொரு காவியம் இலக்கியத்துக்கு வரவாகியிருக்கும். போதும். (ரொம்பதான் ஓவராப்போகுது.)

ஆனால் நானோ.... கிரெடிட் கார்டு ஆசாமி. பஸ் பார்ட்டி. மாதக் கடைசியில் சிகரெட்டிலிருந்து பீடிக்கு மாறுபவன். காலி மதுபுட்டிகளில் மிஞ்சிய துளிகளிலிருந்து 10 மில்லி தேற்ற முயல்பவன். ஜீன்ஸ், டி-ஷர்ட் மறைக்கவில்லை என்றால் சாயம்போன ஜட்டியும், பொத்தல் விழுந்த பனியனும் காட்சிப்பொருளாகும்.

அதிகபட்சம் இன்றிரவு எச்சில் தொட்டு என் டைரி புரட்டி, அவளுக்காக ஒரு கவிதை எழுதி, ஹார்ட்டினுக்குள் அம்பு போட்டுவைக்க முடியும்.

இப்போது எவன் கவிதை எழுதுகிறான்... எவன் கவிதை படிக்கிறான்... எல்லாம் எமோட்டிகான்ஸ் தயவில் உணர்வுகளின் பரிமாறல்ஸ்! முதல் கமென்ட்டுக்கே அனுப்புகிற ஒற்றை ஹார்ட்டினை குட்டிகள் போட்டு குபுகுபுவென்று நூறு ஹாட்டின்கள் கொப்புளிக்கவைக்கிறார்கள். (அப்படி ஆண் அனுப்பினால் சபல ஜொள்ளன், பெண் அனுப்பினால் ரசனைக்காரி!)

அந்த மாலுக்கு வெளியில் அவள் யாருக்காகக் காத்திருந்தாளோ தெரியாது. நான் பஸ்ஸுக்குக் காத்திருந்தேன். சோப் விளம்பரம்போல ``மம்மி...'' என்று ஒரு வாண்டு ஓடிவந்து கட்டிக்கொண்டு ஒரு பக்கக் கதையின் கடைசி வரி ட்விஸ்ட்டாகலாம். அல்லது `டுர்ர்ர்’ரென்று சைலன்ஸர் கழற்றிய ராட்சச இரு சக்கரன் வந்து நிற்க... பின்னால் அமர்ந்து சறுக்குமர சீட்டில் வழுக்கி, அவனைக் கட்டிக்கொண்டு, என் காதுகளில் புகைவர காட்சி எல்லை கடந்துபோகலாம்.

எனக்குள் புகுந்துவிட்ட இன்ஸ்டன்ட் காதலை (காமம் 75%) நிரம்பி வழியும் அருகிலிருந்த குப்பைத்தொட்டியில் வீசிவிடலாம் என்று நான் நினைத்தபோது அழகி மாலுக்குள்ளே நடந்தாள். என் பஸ் பூரண கர்ப்பத்துடன் வந்து நின்றது.

என்ன செய்திருக்க வேண்டும்? வழக்கம்போல முதுகுப்பையை இரண்டு தோளிலும் மாட்டி, மல்யுத்தம் நடத்தி, முதலில் ஒற்றைக் காலுக்கு இடம் அமைத்து தொற்றல் பயணம் செய்திருக்க வேண்டும்.

அத்தனை நிகழ்ச்சி நிரலையும் கலைத்துவிட்டு, கால்கள் அவளை தன்னிச்சையாகத் தொடர்ந்ததற்குக் காரணம் விதி என்றும் சொல்லலாம். அல்லது ரத்தத்தில் இருக்கும் டெஸ்டோஸ்டீரான் மற்றும் ஆக்ஸிடோசின் என்றும் சொல்லலாம். (கூகுள் செய்ய வாய்ப்பில்லாதவர்களுக்கு: அவை பாலுணர்வைத் தூண்டும் ஹார்மோன்களின் பெயர்கள்!)

அந்தப் பகலில் உஷ்ணத் தப்பித்தலாக உள்ளே வந்து ஜன்னல் ஷாப்பிங் செய்யும் ஜோடிகளில் பத்து சதவிகிதம் உணவு மன்றத்தில் ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு கடலை, பட்டாணி, பொரி எல்லாம் போட்டுக்கொண்டிருக்க...

அழகி நுழைந்த ஆடைக் கடைக்குள் நானும். ஹேங்கர்களை நகர்த்தி அவள் டாப்ஸ் பார்க்க... நான் ஹேங்கர்களுக்கு நடுவிலிருந்து அவளின் டாப்ஸ் பார்த்தேன். பாட்டில் பூதம் மாதிரி யூனிஃபார்ம் அணிந்த பவுன்சர் வந்து புஜம் பற்றி, 'உங்களைப் பார்த்தா கஸ்டமர் மாதிரி தெரியலை... வெளியில வாங்க' என்று இழுத்துப் போவதில்லை என்பது மால்களில் மகா சௌகரியம்.

அவளை ரகசியமாக க்ளிக் செய்தால், மாத வாடகை அறையின் துருப்பிடித்த இரும்புக்கட்டிலில் படுத்தபடி உறங்கும் முன்பு கொஞ்சம் உறக்கத்தைக் கெடுத்துக்கொள்ள உதவும் என்று நினைத்தேன்.

மொபலை எடுத்து, திரும்பி நின்று செல்ஃபி எடுக்கிற பாவனையில் அவள் டாப்ஸைத் தன்மீது போட்டு கண்ணாடியில் பார்க்க... க்ளிக்! விலை பார்த்து புருவம் உயர்த்த... க்ளிக்! கழுத்து டாலரைச் சரிசெய்ய... க்ளிக்! (ஜூம் செய்து டாலரின் குடியிருப்பைத் தனியாகவும்!)

ஒலித்த போனை கூந்தல் கற்றைக்குள் நுழைத்து வார்த்தைகளுக்கு ஒத்தடம் கொடுத்துப் பேசினாள். சில உடைகளை அள்ளி மார்போடு அணைத்து ஃபிட்டிங் அறைகள் திசையில் போக... நானும் ஒரு டி-சட்டையை எடுத்துக்கொண்டு அவள் நுழையும் அறைக்கு அடுத்த அறை காலியாக இருக்க வேண்டுமென்று சர்வ மத கடவுள்களையும் வேண்டிக்கொண்டு போனேன். இந்த பக்தனை கடவுள்கள் கைவிடவில்லை.

அந்தப் பக்கம் நிகழ்வதைத் திருட்டு மனசு கற்பனை செய்தது. அவளுக்கு போன் வர... வடிகட்டிய குரல் கேட்டது. ''அப்படியா... சீக்கிரம் வந்துடு. நான் வெயிட் பண்றேன்.'' யாரை வரச் சொல்கிறாள்... யாராக இருந்தால் எனக்கென்ன... நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? இந்த நேரத்தில் நான் பில் போடுபவனாக அந்த சூப்பர் மார்க்கெட்டில் இருக்க வேண்டியவன்!

உடனடியாக... - சிறுகதை

என்னதான் என் எதிர்பார்ப்பு... என்னிடம் வந்து, ``ஹேய் ஹேண்ட்சம்... எங்கேயாவது கூட்டிட்டுப்போ டியூட்'' என்று விளம்பரத்தில்போல சொல்வாள் என்றா?

ஒரு நாள் வேலைக்குப் போகவில்லை என்றாலும் சம்பளத்தில் பிடித்தம் உண்டு. மாதாந்திர பட்ஜெட்டில் உதைக்கும்.

திடீரென்று நிதர்சனம் உறைக்க... அடுத்த பஸ் பிடித்து கடைக்குப் போய்விடுகிற உத்தேசத்தில் நான் குட்டி அறையிலிருந்து வெளிப்பட்டு நடக்க...

``எக்ஸ்க்யூஸ்மி'' என் முதுகில் அவள் குரல். யாரையோ என்றுதான் முதலில் நினைத்தேன். அனிச்சையாகத் திரும்ப... என்னைத்தான்! அருகில் மிதந்து வந்தாள். ''ஒரு நிமிஷம்! இதெல்லாம் மாட்டிட்டு வந்துடறேன்.'' மாட்டிவிட்டு வந்து வண்டி வண்டியாகத் திட்டப்போகிறாள் என்றுதான் நினைத்தேன். நானும் மாட்டிவிட்டு பின் பாக்கெட் குட்டி சீப்பெடுத்து அவசர வாறல் முடித்து, உதடுகளை ஈரம் செய்துகொண்டேன். அருகில் கமகமத்தாள்.

``ஒரு ஹெல்ப். நிச்சயம் செய்வீங்க. பஸ் ஸ்டாப்ல நின்னவர் என்னை ஃபாலோ பண்ணித்தான் வந்தீங்கன்னு தெரியும்.''

``இல்லை... நான் வந்து... சட்டை வாங்கத்தான்...'' தவணை முறையில் பொய் முயன்றேன். நாக்கு வழுக்கியது. ''நீங்க நானா இருந்து, நான் நீங்களா இருந்தாலும் இதேதான் செஞ்சிருப்பேன். அசிங்கமா ஜாடை செய்யலை. கிட்ட வந்து வழியலை. ரசிச்சீங்க. என்ன தப்பு... இது என் அழகுக்கான அங்கீகாரம். ஜஸ்ட் எ டீசன்ட் ஸ்டாக்கிங்! எனக்கு எந்தக் கோபமும் இல்லை.’’

இப்படியெல்லாம் எவளாவது பேசுவாளா... சினிமா வசனம்போலப் பேசியபோது, `அவள் அப்படித்தான்’ பிரியா நினவில் வந்து போனார்.

``திட்டப்போறீங்கன்னுதான் நினைச்சேன். இப்படிப் பேசுவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை. ஏதோ உதவின்னீங்களே...''

``அப்படி உட்கார்ந்து பேசுவமா?'' காத்திருப்போர் அமரும் வசதியான சோபாவில் ஆனா, ஆவன்னா மாதிரி அருகருகில் அமர்ந்தோம்.

``கொஞ்ச நேரத்துல விக்கி வருவான். நேத்து வரைக்கும் என் லவ்வர். இப்ப எக்ஸ் ஆகிட்டான். பிரேக்அப்னு முடிவு.''

எவனோ விக்கி மீது பொறாமை, கோபம், மகிழ்ச்சி எல்லாம் ஸ்லைடு ஷோ மாதிரி வார்த்தைக்கு வார்த்தை மாறியடித்தது.

``இப்ப வருவான். அவன் எனக்கு அனுப்பிச்ச கிரீட்டிங்ஸ், கிஃப்ட்ஸ் எடுத்துட்டு வந்திருக்கேன்.'' கேரி பேக்குக்குள் இருந்த காகித பார்சலைக் காட்டினாள்.

ஒரு காதல் உடைகிறதே என்கிற வருத்தம் எனக்கு இல்லை. இவள் மீண்டும் சிங்கிள் ஆகிறாள் என்பதே தித்திப்பாய் இருந்தது. ``இதுல நான் என்ன?''

``ஒரு சாட்சியா இருங்க. எனக்கு சப்போர்ட்டா இருங்க. அவன் கொஞ்சம் கோபக்காரன். திடீர்னு கைநீட்டலாம். கொஞ்சூண்டு பயமா இருக்கு. அதான்....''

``பிடிச்சிருக்குன்னு சொல்ல இருக்குற உரிமை பிடிக்கலைன்னு சொல்லவும் இருக்குங்க. நான் கிராமத்துலேர்ந்து வந்தவன். சிலம்பம்லாம் சுத்துவேன். வரட்டும். பார்த்துக்கலாம்.''

``தேங்க்ஸ்'' என்று புன்னகைத்தாள். அத்தனை க்ளோஸ்அப்பில் அந்தப் புன்னகை என்னைப் படுத்தியது. ``என்னை யாருன்னு அறிமுகப்படுத்துவீங்க?''

``ஃபிரெண்டுன்னு சொல்வேன்.''

``பேர்கூட தெரியாத ஃபிரெண்டு!''

``ஆமால்ல! சொல்லுங்க.’’

``ஜெகதீசன். `ஜெகா... ஜெகா’ன்னு கூப்பிடுவாங்க.''

``ஸ்வாதி. ஸ்வாதின்னுதான் கூப்புடுவாங்க.''

``எப்படிக் காதல் வந்துச்சுன்னு கேக்கலை. ஆயிரம் சொல்ல முடியும். ஏன் பிரேக்அப்... கேள்வி குடையுது. அதான்...'' அவளின் தயக்க மௌனம் சரியாகப்பட்டது.

``மூணாவது மனுஷன்கிட்ட இதெல்லாம் சொல்ல முடியாதுதான். ஆனா நிஜமான காதல் எதையும் மன்னிக்கும். உங்களால அவரை மன்னிக்க முடியலையா?''

``துரோகத்தை எப்படிங்க மன்னிக்க முடியும்... லாவாண்யாட்டயும் ஐ லவ் யூ சொல்லியிருக்கான் ராஸ்கல்.''

``கதைச்சுருக்கத்துலயே முழுசா புரிஞ்சிடுச்சு.''

``அது பழைய காதலா இருந்தா நேச்சுரல்னு விட்ருப்பேன் ஜெகா! இன்னும் டச்சுல இருக்கான் ஸ்கவுண்ட்ரல்!''

``அது தப்புங்க. ஒரு நேரத்துல ஒரு காதல்தான் நியாயம்.''

``வெறும் பேச்சுவார்த்தை இல்லை... நான் சொன்ன டச்சு வேற!''

``சுத்த அயோக்கியத்தனங்க!''

``என்ன தைரியம் இருந்தா டபுள் கேம் ஆடுவான் ஜெகா?'' இங்கும் டச்சில் இருந்திருக்கிறான் என்கிற செய்தியில் எழுந்த ஆத்திரத்தில் ஓடிப்போய் ஆசிட் வாங்கி வந்து வருகிற விக்கியின் முகத்தில் வீசும் எண்ணத்தையும் மீறி, அவள் `ஜெகா, ஜெகா’ என்றது கடையின் குளிருடன் மேலும் குளிர் சேர்த்தது.

``தவிர ஏகப்பட்ட பொய்கள்! `சிகரெட் மட்டும்தான்’னு சொன்னான். டிரக்ஸ் அடிக்கிறான்ப்பா. `சோஷியல் டிரிங்க்கிங் ஒன்லி இன் பார்ட்டீஸ்’னான். தினமும் பார்ட்டி நடக்குது.''

``இதெல்லாம் தெரிஞ்சுக்காம எப்படிங்க ஸ்வாதி லவ் சொன்னீங்க?’’

``அவன்தான் சொன்னான். நான் ஏத்துக்கிட்டேன். சொன்ன இடம் ஜிம். வேர்வை வழிய ஷார்ட்ஸ், கை இல்லாத டி-ஷர்ட்டோட நின்னு சொன்னான். ஜாதகப் பொருத்தம் பார்த்துட்டா லவ் பண்ண முடியும்?''

``வாஸ்தவம்தான். இப்ப என்னையே எடுத்துக்கங்க. வேலைக்குப் போக வேண்டியவன் அறிமுகமே இல்லாத உங்க பின்னாடி வந்து... இப்படி பேசிக்கிட்டிருக்கேனே... இதெல்லாம் திட்டமிட்டதா?''

``இன்னொண்ணும் சொல்லணும் விக்கி பத்தி...’’

உடனடியாக... - சிறுகதை

``சொல்லுங்க.’’

``ஒரு லேப்டாப் பேக்குக்குள்ள என்ன இருக்கும்?''

``லேப்டாப்தான் இருக்கும்.''

``ஸ்க்ரூடிரைவர், கத்தி, கயிறு, இதோட குட்டியா ஒரு ஹேண்ட் கன்னும் வெச்சுருக்கான். ஷாக்காகிக் கேட்டா. `ஆபீஸ் டிராமாவுக்காக வாடகைக்கு எடுத்தேன்’னு சொல்றான். எதுவும் நம்புற மாதிரி இல்லை.''

``ஒண்ணு மாடர்ன் திருடன். இல்லை கூலிப்படை கேங்ஸ்டர். அன்னிக்கே கத்தரிச்சிருக்கணுங்க ஸ்வாதி.''

``ஒரு க்ரஷ்! ஒரு தவிப்பு! மோகம் எல்லாத்தையும் நம்பவெச்சுடுச்சு.''

``பாவம்... அலைபாயுற வயசு. நீங்கதான் என்ன பண்ணுவீங்க... ஆனா நம்பிக்கை துரோகம் உச்சம்!''

``அதனாலதான் பிரேக்அப்னு முடிவெடுத்தேன்.''

``ஒத்துக்கிட்டானா?''

``மொதல்ல கத்துனான். திட்டுனான். ஆதாரங்களோட கார்னர் செஞ்சதும் அடங்கிட்டான். பிரிஞ்சுடலாம்னு சொல்லிட்டான்.''

``நல்லவேளை ஒத்துக்கிட்டான்.''

``ஆனாலும் காதலிச்ச தடயங்கள் அவன்கிட்ட இருக்கறது சேஃப்டி இல்லை ஜெகா. எனக்குக் கல்யாணம் நடக்கறப்ப டி.வி சீரியல் வில்லனா மாறி அந்த மாப்பிள்ளைக்கு அனுப்பிவெச்சா என்னாகறது?''

``கரெக்ட்டுதான். எப்ப கல்யாணம்?''

``யோக்கியமான லவ்வர் கிடைச்சதும்!''

நான் அலுவலகத்திலிருந்து ஒரு குண்டூசி, ரப்பர் பாண்ட்கூட எடுத்து வராத, பஸ்ஸில் டிக்கெட் வாங்கிப் பயணம் செய்கிற, காசுகொடுத்து பொதுக் கழிப்பறை பயன்படுத்துகிற, நண்பனிடம் வாங்கும் சிகரெட் கடனையும் திருப்பித் தருகிற யோக்கியன் என்று சொல்லத் துடித்தேன்.

ச்சே, இதுவா சந்தர்ப்பம்... பிரேக்அப் வைபவம் முடியட்டும். அந்தக் காயம் கொஞ்சம் ஆறட்டும். அதன் பிறகு கை இல்லாத டி-ஷர்ட் வாங்கி, ஜிம்முக்கு வரச்சொல்லி காதலைச் சொல்ல வேண்டும்.

``நான் ஒரு பியூட்டி பார்லர்ல வேலை செய்யறேன். நீங்க?''

``பொருத்தமான வேலைதான். நான் சூப்பர் மார்க்கெட்.'

``எனக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வெச்சுருக்கறவன் வேணாம். ரோட்டோர கடைக்காரன்கூட போதும். ஆனா நேர்மை வேணும். என்னை மட்டும் லவ் செய்யணும்.''

``எனக்குக் குட்டியா தைரியம் வருது. தயக்கமும் கூடவே வருது.''

``நீங்க நேர்மையானவர்னு சொல்லப்போறீங்க. அதானே?''

``மனசை ஸ்கேன் பண்றீங்க ஸ்வாதி.''

``உங்களுக்கு என் அழகு மட்டும்தான் தெரியும். இது ஒரு இன்ஸ்டன்ட் க்ரஷ்! பயலாஜிக்கல் ரியாக்‌ஷன். லவ்வெல்லாம் கிடையாது. அதுக்குப் பழகணும். புரிஞ்சுக்கணும். திடீர்னு ஒரு நாள், ஒரு செகண்ட்ல புரொப்போஸ் பண்ணலாம்னு தோணணும்.’’

``பிராக்டிக்கலா பேசுறீங்க. அப்படின்னா லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு ஒண்ணு கிடையாதா... இதுல நான் எல்.கே.ஜிங்க. சினிமா, புக்ஸ் பார்த்துத் தெரிஞ்சதுதான். ப்ராமிஸா அனுபவம் இல்லை.''

``முகத்துலயே தெரியுது. தைரியமா நம்பர் கேக்கற காலத்துல, `இதயம்’ முரளி மாதிரி பின்னாடியே வந்தீங்களே!''

எனக்கு வெட்கமாக இருந்தது.

``நெத்தியில விபூதில்லாம் வெச்சிருக்கீங்க. நல்ல பையன்கிறதுக்கு இது ஒரு அடையாளம்...’’

``நிஜம் சொல்றேன். இது விபூதி இல்லைங்க ஸ்வாதி. என் அம்மாவோட அஸ்தி. கரைக்க மனசில்லை. தினம் வெச்சுக்குவேன்.'' சட்டென்று என் கையைப் பிடித்துவிட்டாள்.

``அன்பிலீவபிள்! எனக்கு அம்மாவை நேசிக்கிறவங்களை ரொம்பப் பிடிக்கும். விக்கி ராஸ்கல் போன்ல அம்மாவை, `போடி பிட்ச்’னு திட்டுவான்.''

``ஸ்வாதி... என் சூப்பர் மார்கெட்ல ட்ராலி தள்ளி சாமான் வாங்க தினம் எத்தனையோ பொண்ணுங்க வருவாங்க. ரகசியமா பார்க்கறதோட சரி. எதுக்கு உங்க பின்னாடி வந்தேன்... நீங்க எதுக்கு என்கிட்ட இவ்வளவு பர்சனல் மேட்டர்ஸ் சொல்லணும்... சரியா இன்னிக்குத்தான் உங்களுக்கு பிரேக்அப்! சரியா இன்னிக்குத்தான் எனக்குக் காதல் மாதிரி ஒரு ஃபீலிங்ஸ் வருது! இதெல்லாம் ஒரு கோர்வையா ஏன் நிகழணும்... காதல், புரொப்போசல் இதெல்லாம் கடந்துடலாம். இப்ப சொல்லுங்க. கல்யாணம் பண்ணிக்கலாம்.''

``ஐயோ... என்ன இது ஜெகா...''

``பைத்தியக்காரத்தனம்தான். ஆனா இது நிஜமான ஃபீலிங்ஸ்.’’

``கூல்... கூல்! ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட். முதல் இன்னிங்ஸ்ல நான் தப்பு செஞ்சுட்டேன். மறுபடி தப்பாயிடக் கூடாது. லெட்ஸ் பீ ஃபிரெண்ட்ஸ். எனக்குள்ளயும் அதே ஃபிலிங்ஸ் வர வேணாமா ஜெகா?''

``அநியாயத்துக்கு நியாயங்க. ஓ.கே. இப்ப ஃபிரெண்ட்ஸ்.'' அவள் கையைப் பற்றி குலுக்கியபோது, கடைக்குள் நுழைந்தவன் வெயில் காலத்தில் முரட்டு ஜெர்கின் அணிந்திருந்தான். ஸ்வாதியைப் பார்த்துவிட்டு, கூலரைக் கழற்றி சுழற்றியபடியே வேகமாக வந்தவன்தான் விக்கியாக இருக்க வேண்டும்.

``ஸ்வாதி உன்கிட்ட கொஞ்சம் பேசணும். யார் இது?''

``ஃபிரெண்டு. பேசறதுக்கு எதுவும் இல்லை. இந்த பேக்ல எல்லாம் இருக்கு. நீ கொண்டாந்தியா?''

``அஞ்சு நிமிஷம் பேசணும்னு சொல்றேன்ல?''

``பேசு.''

``தனியாப் பேசணும்.''

``பேசுங்க. நான் அங்கே இருக்கேன்.'' விலகிச் சென்றேன். ஆனால் கவனிக்கும் தூரத்தில் நின்றேன். அவன்தான் பேசிக்கொண்டேயிருந்தான். பேசியது கேட்கவில்லை. உடல்மொழியில் கெஞ்சுவது தெரிந்தது.

இருபது நிமிடங்கள் நான் சும்மா சட்டை, பேன்ட்டுகளைப் பார்த்துக்கொண்டிருக்க... அவள் சைகையில் என்னை அழைத்தாள். அருகில் போக, ``நான் கார்ல வெயிட் பண்றேன்'' என்று அவன் விலகிச் சென்றான்.

``ஜெகா... கெஞ்சுறான். `இனிமே நடக்காது’ன்றான். சத்தியம் செய்யறான். நீங்க வேற `நிஜமான காதல் எதையும் மன்னிக்கும்’னு சொன்னீங்களா... `சரிடா’ன்னு சொல்லிட்டேன். நம்பிக்கைதானே வாழ்க்கை... வர்றேன் ஜெகா. ரொம்ப தேங்க்ஸ்'' என்று புன்னகைத்து விலகினாள். உடனடி காதல், உடனடி கோபம், உடனடி மன்னிப்பு! எல்லாம் உடனடியா... என்ன லாஜிக் இது?

நடந்ததையெல்லாம் என் அறை நண்பனிடம் சொன்னபோது அவன் சிரித்து, ``ஏண்டா... உன் நம்பராவது கொடுத்திருக்கலாம். மறுபடி பிரேக்அப் ஆனா கூப்புடுவால்ல?'' என்றபோது உடனடிக் காதலை, உடனடியாகக் கருக்கலைப்பு செய்தேன்.