
30.06.2022 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...
நெரிசலில் சிக்கி பேருந்து சென்ட்டி மீட்டர் சென்டி மீட்டராக ஊர்ந்தது. நேரத்தைத் தவிப்புடன் பார்த்தான். அருகில் பள்ளி மாணவி போனில், `நான் யார்கூடயும் சுத்தலை. டிராபிக் ஜாம். வேணும்னா வீடியோ கால் போடு. காட்றேன்' என்று ரகசியக் குரலில் பேசினாலும் அவனுக்குக் கேட்டது.
அவன் போன் ஒலிக்க, ``போயிட்டே இருக்கேன் சார்.'' கேள்வி வரும் முன்பே பதில் சொன்னான்.
``டைம் ஆச்சுடா ராஸ்கல்! ஏண்டா லேட்டு, தத்தி! நாலு தடவை போன் வந்துடுச்சிடா முண்டம். ! ஆட்டோல போய்த் தொலைடா பரதேசி.’’
வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளிக்கு முன்னதாக ஒரு திட்டல் சேர்க்காமல் முதலாளிக்குப் பேச வராது.
கண்டக்டர் திட்டத்திட்ட இறங்கிவிட்டான். ஆட்டோக்காரன் அவன் கையிலிருந்த இடுப்புயர பேகை சந்தேகமாகப் பார்த்தபடி ஏற்றிக்கொண்டான்.

முதலாளி திட்டியது அவனுக்கு வலிக்கவில்லை. ஐந்து வருட சென்னை வாழ்வில் அறிமுகமானவன், ஆகாதவன் எல்லோரிடமும் திட்டு வாங்கிப் பழகிவிட்டது. அதிலும் அவனிருக்கும் (இருந்த என்றும் சொல்லலாம்) துறையில் இன்னும் அதிகம். திண்டுக்கல்லில் நடத்திவந்த சின்ன பேக்கரியை இழுத்து மூடிவிட்டு அம்மா சொல்லியும் கேட்காமல் அடுத்த நட்சத்திர இயக்குநர் அவன்தான் என்றும் அவன் தேதிகளுக்காக விஜய்யும் அஜித்தும் காத்திருப்பதாகவும் கனவுகள் கண்டு புறப்பட்டு வந்தது தப்போ என்று இப்போது யோசிக்கிறான்.
மணிமேகலை பிரசுரத்தின் பிரபலமானவர்களின் விலாசங்கள் புத்தகத்திலிருந்த ஒரு இயக்குநரையும் விடாமல் அதிகாலை, அதிராத்திரி என்று துரத்தினான். கவுன்சிலரின் கடிதம், உறவினரின் போன் சிபாரிசு இவை ஒரு பாக்கெட் மோர் அல்லது காகிதக்கோப்பையில் காபி மட்டும் பெற்றுத் தந்தன.
கடைசியில் ஒரு உப்புமா கம்பெனியில் தட்டில் வைத்து உப்புமா கொடுக்கும் வேலைதான் கிடைத்தது. கதை விவாதம் நடக்கும்போது கதவை மூடிவிடுவார்கள். போண்டா, பஜ்ஜி கொடுக்கவும், குடித்த கிளாஸ்களை எடுக்கவும் கதவு தட்டாமல் போய் வரும் அனுமதி அவனுக்கு இருந்தது.
ஒரு காட்சிக்கு வசனம் வராமல் கதை விவாதக் குழுவினர் நவகிரகங்கள்போல எல்லாத் திசைகளிலும் பார்த்த சமயம்.
இயக்குநர் உதட்டில் வைத்த சிகரட்டை அவன் பற்றவைக்க, “சும்மா இவனதான் கேப்பமே! டேய்... பத்து வருஷம் பாக்காத ரெண்டு ஃபிரெண்ட்ஸ் பார்த்துக்கறாங்க. என்ன பேசுவானுங்க?” என்றார்.
“இது காமெடி படம்தானே சார்?’’
‘`பிளாக் ஹ்யூமர்.’’
“எப்டி தவிச்சிப்போயிட்டேன் தெரியுமாடா அப்படின்றான் ஒருத்தன். என்மேல உனக்கு அவ்ளோ பாசமாடா அப்படின்றான் இன்னொருத்தன். இவன் ஓசில சரக்கு வாங்கித்தர வேற ஆளே அமையலடா அப்டின்றான்!’’
‘`அட, பரவால்லையே... டிரெண்டிங்ல இருக்கியே!’’ மற்றவர்கள் காதுகளிலிருந்து குபுகுபுவென்று புகை. அந்த மொக்கை வசனம் மறுநாளிலிருந்து விவாதத்தில் அமர நாற்காலி பெற்றுத்தந்தது.
பிறகு கிளாப் போர்டு கைக்கு வந்தது. தொப்பியும், கழுத்தில் விசிலும் வந்தன. ஆனால் பாதித்தொழில் கற்பதற்குள் தயாரிப்பாளர் பைனான்ஸ் மோசடியில் கைதாகி ஜெயிலுக்குப் போய்விட்டதால், டைரக்டர் டீமையும் போலீஸ் தேடுவதாகச் சொன்னதால் திசைக்கொருவராகச் சிதறினார்கள்.
அந்த அரைகுறை அனுபவத்தை வைத்து அடுத்தடுத்த இயக்குநர்களிடம் அவனால் சேர முடிந்தது. இதுவரை அவன் வேலை பார்த்தது ஆறு இயக்குநர்களின் படங்களில். அதில் வெள்ளித்திரையைக் கண்டது ஒன்று மட்டுமே. அதையும் வெற்றிநடை போடும் இரண்டாவது நாள் என்று விளம்பரம் செய்ய வாய்ப்பில்லாதபடி ஒரே நாளில் தூக்கிவிட்டார்கள். ஆனாலும் அதில் உதவி இயக்குநர்கள் கார்டில் எட்டாவது பெயராக அவன் பெயர் இருக்கும்.
கிடைக்கிற கேப்களில் எல்லாம் (சரியாகச் சொன்னால் கேப்களில்தான் வேலையே!) பால் பாயின்ட் பேனாவைக் கடித்துத் துப்பி நாலு கதைகள் எழுதி வைத்திருக்கிறான்.
‘`ஓப்பன் பண்ணுனா...’’ என்று தொடங்கி பத்து வருடம் கழித்து முன் வரிசைக்கு ஒரு வேளை வருவதற்கு வாய்ப்பிருக்கும் இப்போதைய குட்டி நடிகர்களிடமும், பைனான்ஸ் கிடைத்தால் மட்டும் படம் பண்ணத் தயாராய் சாமி படங்களுக்குச் சூடம் காட்ட மட்டுமே ஆபீஸ் வரும் தயாரிப்பாளர்களிடமும் கதை சொல்லி அவனுக்கு அலுத்துப்போய்விட்டது!
நம்பிக்கையின் ஒளி கொஞ்சம் கொஞ்சமாகக் களை இழந்த சமயம் பார்த்தா காதல் வரவேண்டும்?
வந்துதொலைந்தது. ஷூட்டிங்கிற்கு வீடு பார்க்கப் போனபோது ஒரு வீட்டில் அவள் துடுக்காகப் பேச, அவன் மிடுக்காகப் பேச... ஒரு பொறி விழுந்தது இருவருக்குள்ளும்.
மாடிப்போர்ஷனில் அஞ்சலியின் குடும்பம். கீழ்ப்போர்ஷனில் பத்து நாள்கள் ஷூட்டிங். முதலில் போன் நம்பர் பரிமாறல் நிகழ்ந்தது. குட் மார்னிங், குட் ஆஃப்டர்நூன், குட் ஈவினிங், குட் நைட், குட் மிட்நைட் என்று மட்டும் செய்திகள் அனுப்பிக்கொண்டார்கள்.
டி.பி படம் சூப்பர் அஞ்சலி என்றனுப்பி அதற்கு நன்றியுடன் ஆட்டீன் பெற்றதில் அவனுக்கு தைரியம் வந்தது. ‘நான் உன்னை லவ் பண்ணுவேன்னு நினைக்கல... ஆனா அப்படி ஏதாச்சும் நடந்துடுமோன்னு பயமா இருக்கு’’ என்கிற மாதவன் சீன் வீடியோ பிட்டை அனுப்பிவைத்தபோது குபுகுபுவென்று ஆட்டீன்கள் பொங்கின. ரொம்ப சீக்கிரமே செம்மொழிப் பூங்காவில் காதல் வளர்த்து, சினிமா தியேட்டரில் காமம் வளர்த்தார்கள்.
“இன்னும் ஒரு மாசத்துல டைரக்ஷன் சான்ஸ் வந்துடும். ஒரே படம்! பிளாக் பஸ்டர்! அப்பறம் நெல்சன், லோகேஷ் மாதிரி நாலாவது படமே ரஜினி, கமல்னு போயிடுவேன் டார்ல்ஸ்” என்று அவன் பேசுவதை விழிமலரக் கேட்பாள் அஞ்சலி.
‘`கல்யாணத்துக்கு அப்பறம் எதாச்சும் ஹீரோயினை செட் பண்ணிட்டு என்னைக் கழட்டிவிட்ருவியா?’’ என்றபோது, “லூசு! உன்னையே ஹீரோயினாக்கறேன் பாரு” என்றதை அஞ்சலி நம்பின நாளில் தியேட்டரில் அவன் கைக்குக் கூடுதல் அனுமதி கிடைத்தது. இயக்க வாய்ப்பு ஆட்டம் காட்டினாலும் ஏதாவது ஒரு வேலை இருந்தது. படம் இல்லாத நேரத்தில் கதை விவாதத்திற்குப் போவான்.
ரூம் வாடகை , மெஸ் டோக்கன், போன் டாப் அப் என்று சமாளித்துக்கொண்டு நடுநடுவில் காதலித்துக்கொண்டிருந்தபோதுதான் நுழைந்தான் பெருந்தொற்று வில்லன்.
பரிபூரண லாக்டௌனில் மக்கள் விளக்கேற்றி, கைதட்டி முன்களப் பணியாளர்களை உற்சாகப்படுத்தினார்களே ஒழிய, சினிமா கும்பலை அரசும் கண்டுகொள்ளவில்லை. சங்கங்கள் மட்டும் அவ்வப்போது அரிசி, பருப்பு தர... இன்னும் கார்டு எடுக்காததால் அவனுக்கு அதுவும் இல்லை.
கார்டு எடுத்திருந்த அறை நண்பன் தனக்கு வந்ததைப் பகிர்ந்துகொள்ள, பசி மட்டும் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடிந்ததே ஒழிய, போன், பஸ், சிகரெட் செலவுகளுக்குத் திணறி பலர் வீட்டுக்கும் போய் கிட்டத்தட்ட கௌரவப் பிச்சை எடுக்கும் நிலை!
ஊரிலிருந்து அம்மா மனசு கேட்காமல் நூறும் இருநூறும் கணக்கில் போடுவாள். ``ஊருக்கு வந்துடேன்ப்பா’’ என்பாள் கவலையுடன். ‘`கொஞ்ச நாள்ல நிலைமை சரியாகிடும்மா.’’ கொஞ்ச நாளில் சரியானது நிஜம். யாருக்கு? பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு மட்டும். ஐம்பது லட்சம், எழுபது லட்சம் பட்ஜெட்டில் படம் எடுக்கும் குரூப்பில்தான் அவனுடைய செயல்பாடுகள். அந்தப் படங்களின் பெயர்களை பெரிய டைரக்டர்களிடம் சொன்னால் கர்ச்சீப்பால் மூக்கை மூடும் வஸ்துவைப் பார்ப்பதுபோலப் பார்ப்பார்கள்.
முக்கி முக்கி யோசித்தும் வருமானத்திற்கு வழி எதுவும் தெரியாத சூழ்நிலைத் தொடர். ஒரு சுய இரக்க இரவில் ஏற்பட்ட ஞானத்தில் மறுநாள் அவளைச் சந்தித்தான்.
“எனக்கு நம்பிக்கை போயிடுச்சி. சூழ்நிலை சரியானாலும் எனக்கு வாய்ப்பு கிடைக்காதுன்னுதான் தோணுது. என்னையே ஏமாத்திக்கிட்டு உன்னையும் ஏமாத்திட்டிருக்கேன்’’ என்றான் அவன்.
“டேய் லூசு, பசியையும் பங்கு போட்டுக்குவோம்டா! சரின்னு சொல்லு. நாளைக்கே வந்துடறேன். கோயில்ல வெச்சி தாலி கட்டு. இல்ல... அதுகூட வேணாம். சேர்ந்து வாழலாம்’’ என்றாள் அஞ்சலி.
‘`கிறுக்காடி உனக்கு? பிராக்டிகலா யோசி. காலிப் பாத்திரத்தை வெச்சிக்கிட்டு என்னடி சமைப்பே? தாளம் தான் போடலாம். காசு இல்லாத காதல் நிக்காது. பத்தே நாள்ல சண்டை வந்து பிச்சிக்குவோம். பேசாம பிரிஞ்சிரலாம். ஆனா உன் கல்யாணத்துக்கு வருவேன். கண்டிப்பா வாழ்த்து சொல்வேன்.’’
“போடா, கூப்ட்டாதானே வருவே. என் மூஞ்சிலயே முழிக்காதே போய்டு. காண்டாயிடுவேன், போய்டு!’’
திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டான். அதன்பிறகு ஒரு நண்பன் சொல்லி விட்டதுதான் இந்தப் புது வேலை. இந்த வேலை கொஞ்சம் அவன் லெவலுக்கு ஏற்றதில்லைதான். ஆனால் அவன் கௌரவத்தைக் காப்பாற்றும் ஒரு சௌகரியம் இருந்ததால் ஒப்புக்கொண்டான்.
இந்த வேலையில் அவன் தலைகீழாக நின்றாலும் சந்திக்கவே முடியாத நபர்களுடன் புன்னகையுடன் கை குலுக்கி செல்ஃபி எடுத்திருக்கிறான்.
ஒரு சமூக நலனுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்த அரங்கத்திற்கு வந்தபோது ஏ.ஆர்.ரஹ்மானுடன். சென்னையில் நடந்த பிரமாண்டமான ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க வந்தபோது ஐஸ்வர்யா ராயுடன். உலகம் முழுதும் வியாபித்த ஒரு தங்க சாம்ராஜ்யத்தின் கிளைக்கு ரிப்பன் வெட்ட வந்தபோது விராட் கோலியுடன். பிரபல தொழிலதிபரின் மகள் திருமண விழாவுக்கு வந்தபோது ராகுல் காந்தியுடன்.
இத்தனை நிகழ்ச்சிகளுக்கும் செல்ல அவனுக்கு எப்படி அனுமதி கிடைக்கிறது? விழாக்களில் விருந்தினர்களை வரவேற்கவும் உற்சாகப்படுத்தவும் முதலாளியின் நிறுவனத்திலிருந்து போகும் பலரில் அவனும் ஒருவன்.
என்ன பெரிய நிறுவனம்! மிக்கி மவுஸ், டொனால்டு டக், ஸ்பைடர் மேன், பேட் மேன், கேப்டன் ஆஃப் அமெரிக்கா, ஹல்க், பார்பி என்று சர்வதேசப் புகழ்மிக்க பாத்திரங்களின் உடைகள் தைத்து, மாஸ்க்குகள் தயாரித்து வைத்துக்கொண்டு நிகழ்ச்சிகளுக்கு அனுப்பும் ரிட்டயர்டு காஸ்ட்யூமர்தான், கெட்ட வார்த்தைகளுக்கு நடுவில் கொஞ்சூண்டு நல்ல வார்த்தைகள் பேசும் அவன் முதலாளி.
இந்த வேலையில் ஒரே சௌகரியம்... அந்த முகமூடிதான். அவனுக்கு அறிமுகம் உள்ள சில நண்பர்களிடமும், உறவினர்களிடமும் சிக்காமல் அவர்களிடமே சேட்டை செய்து கைகுலுக்கும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்?
அவர்கள் குழுவில் பார்பிக்கு, மிக்கி மவுஸான அவன்மீது ஒரு கண். அதுபோக அவளுக்கு மீதம் அரைக் கண்தான். ஒல்லியாக இருக்க வேண்டிய பார்பி கொஞ்சம் குண்டு பார்பியாக இருப்பாள். இருபதடி தள்ளி நின்று பார்த்தால் எவரும் சைட் அடிக்கும் ஃபிகர்தான் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு கல்யாண வரவேற்பில் மிக்கி மவுஸான அவனும், பார்பியான அவளும் மட்டும் கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சி முடிந்து சொந்த உடைகள் மாற்றி கடைசிப் பந்தியில் வாட்ச்மேன்களுடன் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டபோது கடைசி பஸ் போய்விட்டது.
ஆட்டோவுக்கு இரண்டு பேரிடமும் காசில்லை என்பதால் ஏழு கிலோ மீட்டர் தூரம் பேசியபடியே நடந்தார்கள், நடந்தபடியே பேசினார்கள்.
அப்போதுதான் பார்பி தன் வரலாறு சொன்னாள். கோவை பக்கத்தில் பொள்ளாச்சி அருகில் வால்பாறைக்கு சமீபத்தில் வாயில் நுழையாத ஒரு கிராமத்தில் அவதரித்த பார்பிக்கு குட்டி வயதிலேயே ஐடெக்ஸ் கண் மை, டால்கம் பவுடர், மரிக்கொழுந்து சென்ட் என்று அலங்காரப் பிரியம்.
வளர்ந்த பிறகு வீட்டில் அடம் பிடித்து வாலி படத்தில் ஜோதிகா போட்டது போல ஸ்கர்ட் தைத்துப் போட்டு அலமு ஸ்டூடியோஸ் போய் ஏழு விதமாக போஸ் கொடுத்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டாள்.
வால்பாறையில் மலையாளத் திரைப்படப் படப்பிடிப்பில் மோகன் லால், டூயட் பாடியதை அந்த ஜோதிகா ஸ்கர்ட் போட்டுக்கொண்டு இவள் வேடிக்கை பார்த்ததை வேடிக்கை பார்த்தான் தயாரிப்பு உதவி நஞ்சுண்டன்.
`எந்தா மோளே’ என்று தொடங்கி இவள் அழகை இவளுக்குப் புரியாமல் மலையாளத்தில் புகழ்ந்து, என்னுடன் வந்தால் அடுத்த மல்லுவுட் ராணியாக்குகிறேன் என்றதில் கிறங்கி, வீட்டில் லெட்டர்கூட எழுதி வைக்காமல், போட்டிருந்த ஜோதிகா ஸ்கர்ட்டுடனேயே போய்விட்டாள். நஞ்சுண்டன் முதலில் அவளை உண்டான். கரு கலைக்க வைத்தான். பிறகு பலருக்கும் பரிமாற நினைத்து வற்புறுத்தினான். மறுத்து அழுதாள். டாக்டரிடம்கூடக் காட்ட முடியாத இடங்களில் சூடு வைத்தான். வலி தாங்காமல், கெஞ்சிக் கூத்தாடிப் பழ லாரியில் ஏறிச் சென்னை வந்துவிட்டாள்.
அந்த ஏழு போட்டோக்களை வைத்துக்கொண்டு எழுபது கம்பெனிகளில் ஏறி இறங்கி எதுவும் நடக்காமல், ஊருக்கும் திரும்ப முடியாமல் முதலாளியிடம் வந்து பார்பியாகி விட்டாள்.
ஏழு கிலோமீட்டர் நடைப்பயணத்தில் இரண்டரைக் கிலோமீட்டரில் பார்பியின் கதை க்ளைமாக்ஸ் தொட்டுவிட்டதால், மிச்ச தூரத்திற்கு மிக்கி மவுஸ் கதையை அவன் சொன்னான்.
கேட்டு முடித்ததும் கேட்டாள், “ரெண்டு பேருமே தோத்தவங்க. நிறைய வலி பார்த்துட்டோம். இனிமே புதுசா ஒரு கொடுமையைப் பாக்கப்போறதில்ல... வர்ற காசுல வாழ்ந்துக்குவோம். ஒண்ணா வாழ்வமா? என்ன சொல்றே?’’
``ஏய்... ஒரு பக்கம் சான்சுக்கு ட்ரை பண்ணிட்டுதான் இருக்கேன். எப்ப வேணாலும் கிளிக் ஆகலாம். நீ உன் லெவலுக்கு யோசிம்மா” பார்பியின் ஆசையை அவன் அந்த நிமிடமே கத்தரித்தான்.
ஆட்டோ கல்யாண மண்டபத்தின் வாசலில் வந்து நிற்க... அவசரமாக இறங்கி ஓடினான். ஏற்கெனவே டொனால்டு டக்கும், பார்பியும் வாசலில் நின்று வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார்கள்.
பார்பி வேறு பக்கம் திரும்பிக்கொள்ள, டொனால்டு டக் அவனுக்குக் கைகொடுத்தான்.
“என்னடா இவ்வளவு லேட்டு? மூணு பொம்மைக்கு அட்வான்ஸ் கொடுத்தேன்னு கத்திட்டுப் போறாரு.’’
ஒதுக்குப்புறமாகப் போய் மிக்கி மவுஸாக மாறி ஓட்டமாக வந்து, வந்த வேகத்தில் ஒரு குழந்தையைத் தூக்கிச் சுற்றினான்.
ஒரே மாதிரி உடுத்தி அடர்த்தியாக லிப்ஸ்டிக் போட்ட வெல்கம் கேர்ள்ஸிடமிருந்து ஜூஸ் ட்ரே வாங்கி வரிசை வரிசையாக விநியோகித்தான். பாப்கார்ன் ஸ்டாலில் நின்று குழந்தைகளுக்கு விநியோகித்தான். மணமக்களுக்குக் கைகொடுத்து இருவர் மீதும் ரோஜா இதழ்களைத் தூவினான். மெல்லிசைக் குழுவின் மேடையிலேறி மிமிக்ரி செய்து சிரிக்க வைத்தான். தாமதமாக வந்ததை நிரப்ப கூடுதலாகவே சுழன்றான்.

வரவேற்பு முடிந்து சமையல்கட்டில் மளிகைச் சாமான்கள் இருந்த அறைக்கு அவன் உடை மாற்ற வந்தபோது பார்பி உடை மாற்றாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள், முகமூடியும் கழற்றாமல். “என்னாச்சு பார்பி?’’ என்றான். ‘’உங்கிட்ட கேட்ட மாதிரி பாண்டியனைக் கேட்டேன்’’ (டொனால்டு டக்கின் பெயர் பாண்டியன்) ‘`என்ன சொன்னான்?’’ “நீ சொன்னதையேதான் சொன்னான்.’’ அவன் அமைதியாக இருந்தான். ‘`நான்லாம் கல்யாண வாழ்க்கைக்கு ஆசைப்படவே கூடாதா? உடம்பை விக்கிறதுன்னா இப்பகூட அமோகமா தொழில் செய்யலாம். மலேஷியாவுக்கு ப்ளைட்ல போய் சர்வீஸ் பண்ணிட்டு வரலாம்னு ஆசை காட்றானுங்க புரோக்கருங்க. இந்தக் கருமாந்திரமெல்லாம் வேணாம்னுதானே உழைச்சிப் பொழைக்கறேன்...’’
அழுத பார்பியின் கண்ணீரைத் தன் முகமூடியைக் கழற்றிவிட்டுத் துடைத்த அவன் கண்களில் கண்ணீரைப் பார்த்து நொடித்துக்கொண்டாள்.
‘`நீ எதுக்கு ஃபீலிங் விடறே? ஒண்ணும் ஆக்டிங் குடுக்க வேணாம். உனக்குத்தான் என்னைப் பிடிக்காதே!’’
அவன் பதில் எதுவும் சொல்லாமல் கையிலிருந்த சாக்லேட் பின் செய்த வாழ்த்து அட்டையைப் பார்த்தான். ‘மணமக்கள்: ரஞ்சன் - அஞ்சலி’ என்றிருந்தது.
“பேசாம பிரிஞ்சிரலாம். ஆனா உன் கல்யாணத்துக்கு வருவேன். வாழ்த்து சொல்வேன்’’ என்று அவன் சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது. சொன்னது நிறைவேறியது அஞ்சலிக்குத்தான் தெரியாது.
பார்பியின் விழிகளில் வழிந்த கண்ணீரை மீண்டும் அழுத்தமாகத் துடைத்து, அவள் கன்னங்களை ஏந்தி, “பார்பி, நாம கல்யாணம் பண்ணிக்கலாம்’’ என்றான். பார்பி நம்பமுடியாமல் பார்த்தாள். ‘`பார்பி பார்பின்னே கூப்புட்டுப் பழகிடுச்சி. ஆமாம், உன் பேர் என்ன பார்பி?’’ என்றான். ‘`மொதல்ல உன் பேரென்னன்னு சொல்லு மிக்கி?’’ என்றாள்.
- பட்டுக்கோட்டை பிரபாகர்,
ஓவியங்கள்: எஸ்.தயாநிதி
(30.06.2022 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)