
ஆடு மாடு நாய் பூனை எல்லாவற்றோடும் இணைந்ததுதான் மனித வாழ்க்கை...
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
நள்ளிரவு அழைப்பு ஒன்றின்போதுதான் க்ளூசின் மொழி தனக்குப் புரிவதைக் குமராசுரன் உணர்ந்தான். அலுவலக அச்சம் மிகுந்திருந்த அன்று சீக்கிரம் உண்டுவிட்டுப் படுக்கையறைக் கதவைத் தாழிட்டுப் படுத்துக்கொண்டான். உறக்கத்திற்கு அடரிருள் அவனுக்கு வேண்டும். வீதி விளக்கு வெளிச்சம் உள்ளே நுழையக்கூடாது என்று சாளரங்களுக்குத் திரையிட்டு வைத்திருந்தான். அதுநாள் வரை இல்லாத அளவு இருள் பயமூட்டியது. இருள் உருவாக்கிய வெவ்வேறு உருவங்கள் அறைக்குள் அலைந்தன. சட்டென எழுந்து விடிவிளக்கைப் போட்டான். வெளிச்சம் போதவில்லை. குழல் விளக்கை எரிய விட்டான். இத்தனை வெளிச்சம் இருந்தால் உறங்கவும் முடியாது, அச்சமும் போகாது. அப்படியே கவிழ்ந்து படுத்திருந்தான். எந்நேரம் தூங்கிப்போனான் என்று தெரியவில்லை.
க்ளூசின் அழைப்பு காதுக்கருகே தெளிவாகக் கேட்டது. வழக்கமான கத்தல் அல்ல. கீச்சுக்குரலில் ‘சோறு... சோறு...’ என்று சொற்கள் தெளிவாக வந்தன. பூனை பேசுகிறதா? கட்டிலில் ஏறி அவனை ஒட்டி நின்றுகொண்டு பேசும் க்ளூசை விழித்துப் பார்த்தான். கண்களைத் திறந்ததும் அதன் குரலில் வலு கூடிற்று. ‘பசிக்குதா?’ என்று கேட்டு உடலைத் தடவினான். ‘ஆமா’ என்ற க்ளூசு அவனை ஒட்டிப் படுத்தது. அவன் கைக்கு வாகாகத் தலையைக் கொடுத்தது. அவன் தாழிடும் முன்னரே அறைக்குள் க்ளூசு இருந்திருக்க வேண்டும்.

இரும்பு பீரோ ஒன்று அறையில் இருந்தது. அதன் மேல் ஏறிப் படுத்துக்கொள்ளும். அங்கிருந்து அட்டாலிக்குத் தாவி அங்கும் தூங்கும். அட்டாலி மூலையில் பழந்தலையணை ஒன்றைப் போட்டுப் படுக்கை உருவாக்கியிருந்தான். அங்கே போய்ப் படுத்துக்கொண்டால் கண்ணுக்குத் தெரியாது. அறையின் எதிர்க்கோடியில் நின்று எட்டிப் பார்த்தால் லேசாகத் தெரியும். க்ளூசைப் பற்றிய கவனம் இன்றிப் படுத்து உறங்கியதை நினைத்து வெட்கப்பட்டான்.
அவன் வருடலில் கண் மூடிச் சுகித்திருந்த க்ளூசு சற்று நேரம் பொறுத்து அவன் முகத்தை நோக்கி அண்ணாந்து மீண்டும் கேட்டது. ‘சோறு?’ அப்போதுதான் சட்டென்று தோன்றியது, க்ளூசு தன் குரலில் மனித மொழி பேசுகிறது; அல்ல, கத்துகிறது. உறுதிப்படுத்திக் கொள்ள ‘க்ளூசுக்கு என்ன வேணுமாம்?’ என்றான். அது மெல்லமாய்ச் ‘சோறு’ என்று கத்தியது. அப்போது அதன் தலை சற்றே நிமிர்ந்து தாழ்ந்தது. அவனும் ‘சோறு’ என்று சொல்லிப் பார்த்தான். இரண்டும் ஒன்றுபோலவே ஒலித்தன.
இரவுக் குழப்பத்தில் அதைக் கவனிக்கவில்லை. அதற்கு உணவு வைக்கவில்லை. தண்ணீர் இருக்கிறதா என்றும் பார்க்கவில்லை. வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்து ஏதேதோ செய்துகொண்டிருந்தபோதும் அதன் சத்தமே கேட்கவில்லை. அவன் உடல் அச்சத்தில் நடுங்கிக்கொண்டிருந்ததை அது எப்படியோ உணர்ந்திருந்தது. அச்சம் வடிவமைத்த மிருகம் பூனை. அதன் காதுக்குப் பழகாத சிறுசத்தம் வித்தியாசமாகக் கேட்டாலும் ஓடி ஒளிந்துகொள்ளும். வீட்டுக்குள் புதிதாக யாரேனும் நுழைந்தால் முகம் காட்டாது. எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே சிரமம்.
அவன் உடலில் மகிழ்ச்சி பரவியிருக்கிறதா, சோர்வு படிந்திருக்கிறதா, வருத்தம் நிறைந்திருக்கிறதா, கோபம் சேர்ந்திருக்கிறதா, அச்சம் ஏறியிருக்கிறதா என்பதை க்ளூசு எப்படியோ கண்டுகொள்ளும். அதற்கேற்றபடி அதன் நடத்தை இருக்கும். மகிழ்ச்சியைக் கொண்டுவரும் நாளில் ஓடோடி வந்து மடியை விரிக்கச் சொல்லிப் படுத்துக் கொள்ளும். சோர்விருக்கும் நாளில் ஓரமாய்ப் படுத்தபடி அவனைப் பார்த்துக் கத்தும். வருத்தம் என்றால் மூலையில் சுருண்டுகொள்ளும். கோப நாளில் அட்டாலிக்குள் பதுங்கும். அச்சமான நாளில் ஒளிதல்.
க்ளூசின் குரலில் ஒலிக்கும் உணர்வை அவனால் படிக்க முடியும். இப்போது அதன் கத்தலில் உணர்வை மட்டுமல்ல, சொற்களையும் அறிய முடிகிறது. உறங்கியதாலும், க்ளூசின் சொல் தெளிவாலும் உற்சாகம் பெற்று எழுந்தான். ‘க்ளூசுக் கண்ணா, என்னடா வேணும்?’ என்று கேட்டுக்கொண்டே கதவைத் திறந்து வெளியே போனான். அது ‘சோறு வேணும், சோறு வேணும்’ என்று பதில் தந்தவாறு பின்னாலேயே ஓடியது. அதற்கான உணவைத் தயார் செய்யச் சமையலறைக்குள் போனான்.
குளிர்பதனப் பெட்டியில் இருந்த தயிர் ரொம்பவும் சில்லிட்டிருந்தது. இப்படி இருந்தால் க்ளூசு வாயே வைக்காது. வெந்நீர் வைத்து அதற்குள் தயிர்க் குண்டானை நிறுத்தினான். வட்டலில் சோற்றைப் போட்டு லேசாகத் தண்ணீர் விட்டுப் பிசைந்தான். அதில் அயிரைக் கருவாட்டைக் கொஞ்சம் தூவினால் போதும். க்ளூசு ஆவலாகச் சாப்பிட்டுக்கொள்ளும். தயிர்ச்சோற்றில் கருவாடு கலந்து உண்ணும் பிராணி இது ஒன்றுதான். சோற்று வாசனை பிடித்த க்ளூசு அதற்கு வயிற்றைத் தயார் செய்யத் தொடங்கியிருந்தது. ஆய் போகும் போது அதனிடம் பேசக் கூடாது. சத்தம் வந்தால் சரியாகப் போகாது.
க்ளூசு ஆய் போவதற்காகக் காரைச்சட்டி ஒன்றில் மண்ணைக் குவித்து வைத்திருந்தான். அதைப் பறித்து உட்கார்ந்து போகும். பிறகு மண்ணைக் கால்களால் தள்ளி ஆய்க்குவியலை மூடிவிடும். துளியும் வெளியே தெரியாதபடி மறைக்கும் அதன் செயலை ரசித்துப் பார்ப்பது அவன் வழக்கம். ஒருமுறைக்கு எவ்வளவு போகும் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப மண்ணில் குழி தோண்டும். போய்விட்டுத்தான் சோறுண்ண வேண்டும் என்பதையெல்லாம் எங்கிருந்து கற்றுக்கொண்டது? பிறப்பிலேயே கிடைத்த வரம். கால்மிதியில் தேய்த்துத் தேய்த்துச் சுத்தமாக்கிக்கொள்ளும். ‘பூனைக்கு முன்னால் நாம் படு அசுத்தவான்கள்’ என்று நண்பர்களிடம் அடிக்கடி அவன் சொல்வான்.
தயிரை ஊற்றிப் பிசைந்து அதன் பாத்திரத்தில் போட்டுக் கருவாட்டைக் கலந்து கிளறித் தண்ணீர் வைத்து முடித்தபோது ‘சோறு’ என்று கத்திக்கொண்டே ஓடி வந்தது. ‘இருக்குது இருக்குது. மெதுவாத் தின்னு’ என்றான். ‘ரொம்ப நன்றி’ தெரிவித்துக்கொண்டே க்ளூசு சோற்றில் வாய் வைத்தது. ஆய் போன மண் பகுதி உருண்டையாய்த் திரண்டிருந்தது. அதைச் சிறுமுறத்தால் சேர்த்தள்ளிக் கழிப்பறை வாங்கியில் கொட்டித் தண்ணீர் ஊற்றினான். அள்ளிப் போடுவது எளிது. அதற்கு மண் கொண்டு வந்து சேர்ப்பதுதான் கடினம்.
வார விடுமுறை நாளில் ஒரு நேரத்தை மண் கொண்டு வருவதற்கென ஒதுக்கிவிடுவான். மிதிவண்டியில் நகரத்தின் வெளிப்பகுதிக்கு ரொம்ப தூரம் போவான். அவனுக்குப் பிடித்தமான பயணம். கூட்டமும் பரபரப்பும் கடந்து வாகனச் சத்தம் மட்டும் கேட்கும் புறவழிச் சாலையின் இருபுறமும் விரிந்து செல்லும் வேளாண் நிலங்களைப் பார்த்துக்கொண்டே செல்வான். ஆடு மாடுகள் மேயும். அங்கங்கே மனிதத் தலைகளும் தெரியும். நாய்கள் ஓடி விளையாடிக்கொண்டிருக்கும். ஆடு மாடு நாய் பூனை எல்லாவற்றோடும் இணைந்ததுதான் மனித வாழ்க்கை என்று சொல்லிக்கொள்வான்.
செம்மண் நிலமாயிருக்கும் சாலையோரப் பகுதியைத் தேர்ந்து மண் வெட்டி அள்ளுவான். சிமிட்டிச் சாக்கில் பாதி நிறைந்தால் போதும். அது இரண்டு வாரத்திற்கு வரும். எப்போதும் இரண்டு சாக்கு மண் இருப்பில் இருக்கும்படி பார்த்துக்கொள்வான். திடுமென மழை வந்துவிட்டால் பெருங்கஷ்டம். ஈரமண்ணில் க்ளூசு போகாது. அது வந்த புதிதில் தெரியாமல் ஈரமண்ணை அள்ளி வந்து போட்டான். காரைச்சட்டியைச் சுற்றிச்சுற்றி வந்து கத்தியதே தவிர மண்ணைப் பறிக்கவில்லை. ‘ஈரமண்ணுல எப்படிடா போறது மடையா’ என்று அப்போது சொல்லியிருக்கும் என்று இப்போது தோன்றியது. அதன் கத்தலுக்கு அர்த்தம் தெரியவில்லை. இத்தனை நாளில் அதுவே வார்த்தைகளைக் கற்றுக்கொண்டது. இல்லை, அதன் மொழி புரிய ஆரம்பித்துவிட்டதோ?

க்ளூசை அவன் கண்டெடுத்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அந்த நாளையே அதன் பிறந்த நாளாகக் கொண்டு கொண்டாடியும் ஆயிற்று. வீட்டிலிருந்து சிறிது தூரம் நடந்து சென்று நிறுத்தத்தில் நின்று பேருந்தேறி அலுவலகம் செல்வான். ஐந்தாவது நிறுத்தத்தில் அலுவலகம். அதே போல் திரும்பல். அலுவலகத்திலிருந்து திரும்பி நடந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த மாலை நேரத்தில் தெருமுனையில் இருந்த சாலையோரப் புதரில் பூனைக்குட்டியின் கத்தல் கேட்டது.
தயக்கத்தோடு புதருக்குள் எட்டிப் பார்த்தான். கண் விழிக்காத பூங்குட்டி இடைவிடாமல் கத்தியது. கை நீட்டித் தூக்கினான். கொடுக்குமுள் நகங்களால் பற்றிக்கொண்டு கைச்சூட்டைத் தன் தாய்மடி எனக் கருதி ஊட்டத் தொடங்கியது. விரல்கள் கூசின. கன்னித்தாய்க்கும் இப்படித்தான் கூசக்கூடும். அப்போது வாஞ்சையைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. வீட்டுக்கு எடுத்து வந்தான். உடல்நிலை சரியில்லாதபோது வாங்கியிருந்த ஊசியும் மருந்து உறிஞ்சுகுழலும் பிரிபடாமல் இருந்தன. குழலில் பாலை உறிஞ்சித் துளித்துளியாய்ப் பூனைக்குப் புகட்டினான். சொப்புவாயில் அது பாலைச் சப்பிக் குடிக்கும் வேகம் கண்டு சிரித்தான்.
ஒற்றைப் படுக்கையறை, சிறு வரவேற்பறை, சமையலறை கொண்ட தனி வீட்டில் அவன் மட்டுமே குடியிருந்தான். வீட்டுச் சொந்தக்காரர் எங்கோ இருந்தாலும் பூனை வளர்ப்பை அவர் ஒத்துக்கொள்வாரா என்று பயப்பட்டான். எப்போதாவது அவர் வரும்போது சொல்லிவிடலாம் அல்லது ஏதாவது செய்து சமாளித்துக்கொள்ளலாம் என்று சமாதானம் கொண்டான். பூனை வளர்ப்பு குறித்து இணையத்தில் தேடிச் சில விஷயத்தைத் தெரிந்துகொண்டான். குட்டி கண் திறந்து முதலில் பார்த்த உருவம் அவனுடையதுதான். அவனைத் தன் தாயாக உணர்ந்த குட்டி அப்படியே நம்பவும் தொடங்கிவிட்டது.
க்ளூசை அவன் வெளியிலேயே விடவில்லை. குட்டியாக இருந்தபோது கூண்டு வாங்கி அடைத்தான். உள்ளேயே பால், தண்ணீர் வைத்துவிட்டுப் போவான். மாலையில் வந்து பார்த்தால் பாலில் பாதி குடித்தும் தள்ளிக் கவிழ்த்தும் வைத்திருக்கும். உள்ளேயே சிறுநீர் கழித்திருக்கும்; ஆய் போயிருக்கும். அவற்றையெல்லாம் சுத்தம் செய்வது பெரிய வேலை. அது வளர வளர இப்படியே வைத்திருக்க முடியாது. ஜன்னல்களுக்குக் கொசுவலை அடித்துத் திரை போட்டான். சுதந்திரமாக நடமாட விட்டான். காரைச்சட்டியில் மண் அள்ளி வந்து வைத்தான். சகல வசதிகளையும் செய்து கொடுத்த திருப்தி. சுவர்களில் திரியும் பல்லிகள், பாச்சை, கரப்பான் என்று எதையும் விடாமல் வேட்டையாடித் தின்றுவிடும். வீட்டுக்குள் சிறுபூச்சிகூட நுழைய முடியாது.
க்ளூசும் அவனைப் புரிந்துகொண்டது. அவன் அலுவலகத்திற்குக் கிளம்பும் வரையில் காலைச் சுற்றிக்கொண்டிருக்கும். வழியனுப்பியதும் படுக்கைக்குப் போய்விடும். இடையில் எழுந்து வந்து சிறுநீர் கழிக்கும்; உணவு உண்ணும். மீண்டும் படுக்கை. அவன் வரும் வரைக்கும் தூக்கம்தான். வெளியே வண்டிகளின் சத்தம், நாய்களின் குரைப்பொலி, மனிதர்களின் சத்தமான பேச்சு என்றெல்லாம் வரும்போது அவற்றின் அதிர்வுக்கேற்ப தம் படுக்கை இடத்தை மாற்றிக்கொள்ளும். மாலையில் அவன் வந்து கதவு திறக்கும் ஒலி கேட்டதும் இறங்கிக் கத்திக்கொண்டே ஓடி வரும். எடுத்தணைத்துத் ‘தனியா உட்டுட்டுப் போயிட்டனா க்ளூசு, பயந்துட்டியா?’ என்று தினமும் கேட்பான். அவன் முகத்தோடு முகமுரசி அதுவும் பதில் சொல்லும்.
க்ளூசுக்காகவே அவன் பல விஷயங்களைத் தவிர்த்தான். நண்பர்களோடு விருந்துக்குச் செல்வதில்லை. ஊருக்குப் போவதில்லை. போனாலும் அலுவலகத்திற்குப் போவது போலக் காலையில் கிளம்பிப் போய் மாலையில் திரும்பி வந்துவிடுவான். அவன் இயக்கம் முழுவதும் க்ளூசை மனதில் வைத்தே அமைந்தது. அலுவலக நண்பர்களிடம் க்ளூசைப் பற்றியும் அதை வளர்ப்பது பற்றியுமே பேசினான். சிரித்தபடி அவர்கள் நகர்ந்து போனார்கள். விடுமுறை நாள்களில் வீட்டுக்குள்ளேயே இருந்தான். அதைப் பாதுகாப்பாக உணர்ந்தான். ‘நீயும் பூனையா மாறிட்டடா’ என்று நண்பர்கள் சொன்னார்கள். ‘மாறிட்டா நல்லாத்தான் இருக்கும்’ என்றான்.
அலுவலகத்திற்குப் புதிய மேலதிகாரி வந்தார். இரண்டு வருஷங்களுக்கு முன் அரசாங்கத் தேர்வெழுதி இந்த அலுவலகத்தின் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்திருந்தான் அவன். கோப்புகளைத் தயார் செய்து அவனுக்கு மேலிருந்த மூன்று நான்கு அலுவலர்களின் பார்வைக்கு அனுப்பி அதன்பிறகு அதிகாரியிடம் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு முன்னிருந்த அதிகாரிகள் அவ்வளவு பிரச்சினையில்லை. லேசாகக் கடிப்பார்கள். ஓரிரு சுடுசொற்கள் விழும். அவை பழகிவிட்டன. புதிய அதிகாரி வேறுமாதிரி இருந்தார். எப்போதும் காரமுகம்; வெஞ்சொற்கள். முகத்தை நோக்கி எதையும் தூக்கி எறிவார். அலுவலக இருக்கை சிதை போலாயிற்று.
தினமும் துயர் சுமந்து வந்து குறுக்கி முடக்கிக்கொள்ளும் அவன் போக்கைக் கண்டுதான் க்ளூசு பேசத் தொடங்கியிருக்கும் போல. சோறு கேட்டுப் பேசிய அன்றைய இரவுக்குப் பிறகு தினமும் பேச்சுதான். மாலையில் அவன் வீட்டுக்குள் நுழையும்போதே ‘இன்னக்கி என்ன பிரச்சின?’ என்று கேட்டது. ‘போ. உங்கிட்ட சொல்லி என்னாவப்போவுது’ என்று ஒதுக்கிச் சென்றான். க்ளூசு விடவில்லை. அவன் படுக்கையின் கால்மாட்டில் உட்கார்ந்துகொண்டு ‘என்ன பிரச்சின?’ என்றது. வயிற்றில் ஏறிப் படுத்துக் கொண்டு ‘என்ன பிரச்சின?’ என்றது. சமையலறை மேடையில் ஏறி நின்றுகொண்டு ‘என்ன பிரச்சின?’ என்றது. அதே கேள்வியை விடாமல் கேட்டபடியிருந்தது.
ஒரு மாலையில் தன் அழுத்தம் தாங்காமல் க்ளூசிடம் ‘அந்த நாய் இருக்கறானே’ என்று சொல்லத் தொடங்கினான். பூனைக்கு நாயைப் பிடிக்காது. ‘எப்பவும் வள்ளு வள்ளுன்னு கொரச்சிக்கிட்டே இருக்கறான். இன்னக்கி என்ன செஞ்சான் தெரீமா? ஒரு பைல்ல கையெழுத்து வாங்கக் கொண்டுக்கிட்டுப் போயி நிக்கறன் நிக்கறன், நின்னுக்கிட்டே இருக்கறன். கண்ணத் திருப்பவே இல்ல. யார்கிட்டயோ பேசறான், பாத்ரூம் போறான், தண்ணி குடிக்கறான், காப்பி குடிக்கறான். நான் நின்னுக்கிட்டே இருக்கறன். ஒரு நிமிசம் ரெண்டு நிமிசம் இல்ல, ரெண்டு மணி நேரம். காலு கல்லாப் போயிருச்சு. அப்பறந்தான் ‘பதரே என்ன வேணும் உனக்கு’ அப்படீன்னு கேக்கறான். எம்மூஞ்சி புடிக்கலயா? எம் பேச்சுப் புடிக்கலயா? என் நெறம் புடிக்கலயா? எது அவனுக்குப் புடிக்கலன்னு தெரீல. பைலத் தூக்கி எறியறான். ரூம் முழுக்கப் பேப்பராப் பறக்குது. எதாச்சும் ஒரு பேப்பரு இல்லீன்னாலும் நாந்தான பதில் சொல்லணும். ஓடி ஓடிப் பொறுக்கறன். சீட்டுல உக்காந்துக்கிட்டு என்னயவே பாத்துக்கிட்டு இருக்கறான் நாயி...’
மடியிலிருந்து அவன் முகத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த க்ளுசின் மேல் கண்ணீர்ச் சொட்டுகள் விழுந்தன. சிலிர்த்தபடி அவன் நெஞ்சின் மேல் ஏறி நின்று ‘அழாத’ என்ற தன் முன்னங்காலை நீட்டி அவன் கன்னத்தைத் துடைத்தது. அவனுக்கோ அழுகை பெருகி வந்தது. க்ளூசை இறுக்கி அணைத்து அழுகையைக் கூட்டியவன் மெல்லத் தேறி மேலும் சொல்லலானான்.
‘எல்லாத்தையும் பொறுக்கி எடுத்துக்கிட்டு வந்து உக்கார்ரன். எம் பக்கத்து சீட்டுல இருக்கற பொம்பளகிட்ட அதே பைல எடுத்துக்கிட்டு வரச் சொல்லிக் கையெழுத்துப் போட்டு அனுப்பறான். அந்தப் பதரு இன்னமே இங்க வரக் கூடாதுன்னு சொல்லி உடறான். நான் என்ன செஞ்சன்னே எனக்குத் தெரீல.’
க்ளூசிடம் சொல்லி முடித்ததும் மனச்சுமை இறங்கிவிட்ட மாதிரி இருந்தது. அவன் கால்களைத் தன் நகங்களால் மெல்லக் கீறியது க்ளூசு. மரத்திருந்த கால்கள் உயிர்த்தன. ‘உடு, அதயே நெனச்சுக்கிட்டு இருக்காத’ என்று சொற்களாலும் அவனுக்கு ஆறுதல் சொல்லிற்று. க்ளூசுக்கு இத்தனை வார்த்தைகள் எப்படித் தெரிந்தன என்று அவனுக்கு ஆச்சரியம். அள்ளியெடுத்துக் கொஞ்சினான். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கோழிக்கறி வாங்கி வந்து அதற்குப் போட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
அன்றாடம் வீட்டுக்குள் நுழைந்ததும் அவன் பேசத் தொடங்கிவிடுவான். சில நிமிடம் அழுது ஓய்வான். க்ளூசு சிலசமயம் ஆறுதல் சொல்லும். சிலசமயம் கேலி செய்யும். எப்படியானாலும் எல்லாவற்றையும் க்ளூசிடம் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டான். ஒருநாள் இப்படிச் சொன்னான்.

‘பிளாஸ்கிலேருந்து காப்பி ஊத்திக் குடுக்கச் சொன்னான் இன்னைக்கு. அது என் வேல இல்ல. உதவியாளர எங்கயோ அனுப்பிட்டான். வேணும்னே செஞ்சிருப்பான். அவனுக்கு எப்படி ஊத்தணும், எவ்வளவு சக்கர போடணும், சூடு, அளவு எதும் எனக்குத் தெரியாது. அவனும் சொல்லல. எனக்கும் கேக்க பயம். கைவேற நடுங்குது. எப்படியோ சமாளிச்சு ஊத்திக்கிட்டுப் போயி வெச்சன். அவனுக்கு வெக்கறபோது சின்னத் தட்டத்த வெச்சு மூடணும் போல. அது எனக்குத் தெரீல. பதரே பதரே… மூடி வெக்கத் தெரியாது? பல்லிப் புழுக்க உழுவட்டும், அதக் குடிச்சுச் செத்துப் போகட்டும்னு செய்யறயான்னு கத்தறான்.’
க்ளூசுக்குக் கதை கேட்கும் சுவாரஸ்யம். ‘அப்பறம் என்னவாச்சு?’ என்றது. அதன் ஆர்வத்தைக் கவனிக்காமல் மேலே கூறலானான்.
‘செரின்னு தட்டத்தத் தேடி எடுத்துக்கிட்டு ஓடியாறன். அதுக்குள்ள எடுத்துக் குடிக்க ஆரம்பிச்சுட்டான். ஒருவாய் வெச்சு மாடாட்டம் உருப்புன்னு உறிஞ்சினான். ஒடனே ச்சீன்னு அப்படியே துப்புனாம் பாரு, அவன் மேஜ மேல தெறிச்சு என் மேலயும் பட்டுச்சு. நல்லவேள மூஞ்சியில படல. அடே பதரே, இதென்ன காப்பியா கழிநீரான்னு கத்தறான். காப்பியப் போட்டவன் கடக்காரன். வாங்கியாந்து வெச்சவன் ஒருத்தன். சும்மா ஊத்திக் குடுத்தவனப் புடிச்சிக்கிட்டுப் பதரே பதரேன்னு கத்துனா, நான் என்ன செய்வன், சொல்லு நீ...’
க்ளூசுக்கு இந்தச் சம்பவம் சுவாரசியமாக இருந்திருக்கும் போல. அவன் மடியிலிருந்து தோள் மேலேறிக் குதித்தது. தரையில் உடலைத் தேய்த்துப் புரண்டது. ஜன்னலில் தாவியேறிக் கொசுவலையைப் பிய்த்தெறிந்தது. அதன் கும்மாளத்தைத் தாங்க முடியாமல் அறைக்குள் போய்த் தாழிட்டுக் கொண்டான். கதவைப் பிறாண்டிப் பிறாண்டித் தட்டியது க்ளூசு. ‘இன்னக்கிக் கத நல்லாருந்துது. அதான் கொஞ்சம் குஷியாயிட்டேன். கோவிச்சுக்காத, தெற’ என்று கெஞ்சியது. வெகுநேரம் கழித்தே அவன் திறந்தான். அதற்குப் பசிக்குமே, பாவம் என்று தோன்றியது. அதுவும் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு அவன் கால்களில் உரசி மன்னிக்கச் சொல்லிக் கேட்டது.
ஒவ்வொரு நாளும் அவன் வருகையை எதிர்பார்த்துக்கொண்டு கதவருகிலேயே க்ளூசு காத்திருந்தது. வெளியில் இரும்புக் கதவை அவன் திறக்கும் சத்தம் கேட்டதும் ‘வா வா’ என்று கத்தி வரவேற்றது. உடனே அவன் அன்றைய கதையை ஆரம்பிக்க வேண்டியிருந்தது. கதையைக் கேட்டதும் துள்ளி எழுந்து முன்னங்கால்களை மேலே தூக்கிக்கொண்டு பின்னங்கால்களால் நடந்து வீடு முழுக்கவும் வலம் வந்தது க்ளூசு. அது ஒரு நடனம் போலத் தோன்றியதால் அவன் ரசித்துப் பார்த்தான். க்ளூசின் உற்சாகம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம். அதன் உடல் நீண்டு வந்தது. பின்னங்கால்களால் நிற்கும்போது அவன் இடுப்புயரத்திற்கு மேல் தெரிந்தது.
அன்றைக்கு மேலதிகாரி விடுப்பில் இருந்தார். அலுவலகமே களை கட்டியிருந்தது. ஆனால் ‘களையே இல்ல’ என்று பேசிக்கொண்டார்கள். எல்லோரும் சிரித்துக்கொண்டு உலவினார்கள். கூட்டமாகச் சேர்ந்து தேநீர் குடிக்கப் போனார்கள். மாலையில் அவன் திரும்பும்போது எதுவுமே நடக்காதது போலிருந்தது. இரும்புக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும் க்ளூசின் பிறாண்டலும் சத்தமும் மிகுந்திருந்தன. வேகமாகத் திறந்து ‘வா வா’ என்று அழைத்து அரவணைக்க முயன்றான். ‘சொல்லு’ என்றது க்ளூசு. ‘என்ன சொல்ல? இன்னைக்கி ஒன்னுமே இல்ல’ என்றான். அவன் முகம் ஒளி விரவி மலர்ந்திருந்தது.
அவனை உற்றுப் பார்த்த க்ளூசு ‘பதரே பதரே, கத சொல்லுடா’ என்று ஆவேசமாகக் கத்தியது.
- பெருமாள் முருகன்
(04.10.2022 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)