Published:Updated:

பர்மா கௌசா - சிறுகதை

பர்மா கௌசா - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
பர்மா கௌசா - சிறுகதை

- புலியூர் முருகேசன்

பர்மா காலனிக்குள் போலீஸ் வர அனுமதியில்லை என ஒரு சட்டதிட்டமே இருந்தது. சந்திரன் ஊர்த்தலைவராக இருந்த மட்டிலும் இது நீடித்தது. நகருக்குள் ஏதாவது அடிதடித் தகராறு நடந்து ரத்தக்காயம் அளவுக்குப் போய்விட்டால் போலீஸ் நேராக பர்மா காலனிக்குள்ளும், சேவப்பநாயக்கன் வாரிக்குள்ளும், தொம்பங்குடிசைக்குள்ளும்தான் நுழையும். வெட்டுக்குத்துக்குக் காரணமானவர்கள் அங்கேதான் ஒளிந்திருப்பார்கள் என போலீஸால் முத்திரை குத்தப்பட்ட பகுதிகள் இவை. சந்திரன்தான் அந்த முத்திரையைத் தகர்த்தவர்.

ஒரு சின்னத் தகராறுக்காக காலனியில் காய்க்கடை வைத்திருக்கும் பாபுவைப் பிடித்துப்போகப் பத்தாம் தெருவுக்குள் வந்த சப்-இன்ஸ்பெக்டர், ஆளைப் பிடித்ததும் சடாரென அடித்துவிட்டார். உடனே, இருபது தெரு ஜனங்களும் அங்கே கூடிவிட்டார்கள். சப்-இன்ஸ்பெக்டரையும் உடன் வந்த போலீஸ் காரர்களையும் நகரவிடவில்லை. சந்திரனுக்குத் தகவல் போனதும் வேகமாக வந்தார். வந்த வேகத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். மற்ற போலீஸ்காரர்கள் திகைத்துப்போய் அமைதியாக நின்றார்கள். ‘எதுக்குயா அவன அடிச்ச? பர்மா காலனிக் காரனுகன்னாலே ஒங்களுக்கு அக்யூஸ்ட்டுதானா! நாங்க அகதிங்கதான். இன்னிக்கு தஞ்சாவூரு இந்த நெலமையில ஜொலிக்குதுன்னா அதுலெ எங்க ஜனங்க உழைப்புதான் அதிகமா இருக்கும். இன்ன வேலையின்னு பாக்காம எங்க ஆளுக டவுனு முழுக்க அலைஞ்சு திரிஞ்சு பாடுபடறவங்க. எதாவது வாய்த்தகராறு, கைத்தகராறுன்னாலும் எங்க ஆளுகதான் தப்பு செஞ்சுருப்பானுவன்னு சொல்றது; புடிச்சி அடிக்கிறது. இன்னமே ஒரு போலீஸ்காரப் பயலாவது எங்க ஆளுக மேல தேவையில்லாம கைய வச்சான்னா அங்கனயே அவன் கைய முறிச்சிவுடுங்க. அப்பத்தான் இவனுக அடங்குவானுங்க’ என்றவர் கூட்டத்தை அமைதிப்படுத்தினார்.

காய்க்கடை பாபுவை அருகே கூப்பிட்டு என்ன நடந்தது என விசாரித்த சந்திரன், சப்-இன்ஸ்பெக்டரிடம் ‘நான் விசாரிச்சுட்டேன். இது ஸ்டேஷன்ல வச்சு விசாரிச்சு எஃப்.ஐ.ஆர் போடற அளவுக்கான கேஸெல்லாம் இல்ல. நாங்க கண்டிச்சுக்குறோம். இனிமே, எங்காளுக யாரையாவது விசாரிக்கணும்னா அந்த மேட்டுச்சுடுகாட்டுப் புளியமரத்தத் தாண்டி வரக்கூடாது. யாராவது ஒரு போலீஸ்காரருகிட்ட சொல்லி அனுப்புங்க. அது சின்னத் தப்பா, பெரிய தப்பான்னு நாங்க விசாரிச்சு, தேவைப்பட்டா உங்ககிட்ட அனுப்பி வைக்கிறோம். சின்னத் தப்புன்னா நாங்களே பாத்துக்கறோம். கெளம்புங்க’ எனச் சொன்னதும் அந்த சப்-இன்ஸ்பெக்டர் தலையைக் குனிந்தபடியே கிளம்பினார்.

ஆனால், முந்திரிக்காட்டுக்குள் மருதகோடி சாராயம் காய்ச்சத் தொடங்கியபின் போலீஸ் மெல்ல உள்ளே நுழைந்தது. பர்மா காலனியை விட்டு நீண்ட தூரம் தள்ளித்தான் முந்திரிக்காடு இருந்தது. இருந்தாலும் பர்மா காலனிக்குள் நுழைய, மருதகோடி சாராயம் காய்ச்சுவதை போலீஸ் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. சந்திரனுக்கு அடுத்து ஊர்த் தலைவராக வந்தவர்களால் மருதகோடியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சந்திரன் காலத்தில் பர்மா காலனி முழுக்க யாருக்கும் எந்தக் கெட்ட பழக்கமும் இருந்ததில்லை. நகரத்தினுள் கட்டட வேலைக்குச் சென்று திரும்புவர்கள்கூட சாராயம் குடிக்க மாட்டார்கள். ‘இப்பிடியெல்லாம் கட்டுப்பாட்டோட இருந்தாத்தான் டவுனுக்குள்ள நாலு பய நம்மளைய மதிப்பான். போலீஸ்காரனுவளும் மேல கைய வைக்க மாட்டானுவ’ என்பார் சந்திரன்.

முந்திரிக்காடு முழுக்க மருதகோடியின் ஊறல்கள் கிளை பரப்பின. மருதகோடியின் சரக்கிற்கு மவுசு கூடிக்கொண்டே போனது. போலீஸுக்கும் மாமூல் அதிகமானது. கணேசன் மருதகோடியிடம் சாராயம் காய்ச்சும் வேலைக்குச் சேர்ந்ததே தனிக்கதை.

முருகசாமியும் மணிகண்டனும் கணேசனுக்கு அண்ணன்கள். அவர்கள் இருவருக்கும் குடிப்பழக்கம் எப்போதும் இருந்ததில்லை. கணேசன் சேர்க்கை சரியில்லாததால் ஒன்றிரண்டு முறை முந்திரிக்காட்டுப் பக்கம் பார்த்ததாக முருகசாமிக்குத் தகவல் வந்தது. ‘‘கணேசா! அந்தக் கெரகம் நமக்கு ஆகாதுப்பா. ஒடம்பு கெட்டுப் போறது மட்டுமல்லாம, பேரும் ரிப்பேராயிரும்’’ என மேலோட்டமாகத்தான் கண்டிக்க முடிந்தது. கணேசனுக்கும் கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது. ஆனால், ஒருமுறை சாராயம் குடித்துக்கொண்டிருக்கும்போது மாணிக்கத்திடம் வாய்ச்சண்டையானதுதான் மருதகோடியிடம் கணேசனை இணைக்க வைத்தது.

மருதகோடியிடம் சாராயத்தைப் பதம் பார்ப்பதும், கணக்கு வழக்குகளைச் சரியாக ஒப்படைப்பதும் மாணிக்கம்தான். ‘‘என்னடா மாணிக்கம்! சரக்கு வர வர சப்புன்னு இருக்குது. ஒருத்தனும் கம்ப்ளையிண்டு பண்ணலியா?’’ எனக் கணேசன் கேட்டபோது மருதகோடி அங்கிருந்தான். மாணிக்கத்திற்குச் சுள்ளெனக் கோபம் வந்துவிட்டது. முதலாளி பக்கத்தில் இருக்கும்போதே இப்படிச் சொல்கிறானே என்கிற ஆத்திரத்தில் அவனை அடிக்க எழுந்தவன், மருதகோடியின் உத்தரவுக்காக முகத்தைப் பார்த்தான். மருதகோடியை கணேசனுக்குத் தெரியாது. ‘‘அங்க என்னடா வேடிக்க பார்க்கிற! நா கேட்டதுக்குப் பதிலச் சொல்லுடா!’’ என்ற கணேசன் மருதகோடியின் பக்கம் திரும்பி ‘‘அண்ணே! நீயே சொல்லு. இந்த மாணிக்கம் பய காச்சற சரக்கு சப்புன்னு இருக்குதா? வெடுக்குன்னு இருக்குதா?’’ எனக் கேட்டான். மருதகோடி அப்போதும் எதுவும் பேசவில்லை. ‘‘இங்க ஒரு பயலுக்கும் சாராயங் காச்சத் தெரீல. இதுல உள்ளூர்க்காரனுவன்னு பெரும வேற’’ கணேசன் குரல் உயர்த்தித் திட்டத் தொடங்கியதும் மருதகோடியின் முகம் இறுக்கமானது. கண்களில் வெப்பம் கூடுவது தெரிந்தது. வேட்டி இடுப்பினுள் கையை விட்டுக் கத்தியை உருவ எத்தனித்தான். ‘இன்னைக்கி கணேசன் பய காலி’ என நினைத்ததும் மாணிக்கத்திற்கு பயம் வந்தது.

‘‘நல்ல நாட்டுச்சாராயம்னா எப்பிடி இருக்கணும்? எப்பிடிக் காச்சணும்னு நா சொல்றேன். கேட்டுக்கடா மாணிக்கம். அண்ணே! நீயும் கேளு’’ என கணேசன் தொடங்கவும், மருதகோடி கத்தியிலிருந்து கையை வெளியே எடுத்து அவன் பேச்சுக்குக் காது கொடுத்தான்.

‘‘ஒரு லிட்டர் சாராயத்துக்கு என்னென்ன தேவைன்னு சொல்றேன். மனசுக்குள்ள குறிச்சுக்கடா. ரெண்டு கிலோ மண்ட வெல்லம், பெரிய சொம்புல பத்துச் சொம்பு தண்ணி, நல்லா கனிஞ்ச வாழப்பழம் பத்து, கறுப்புத் தெராச்ச ஒரு கிலோ, பேரீச்சம் பழம் ஒரு காக்கிலோ, வாசத்துக்கு கொஞ்சூண்டு ஏலக்காய், கருவேல மரத்துப்பட்டை ஒரு கைப்புடி அளவு, சும்மா வாயில வச்சா மண்டைக்குள்ள புளிக்கிற மாதிரியான இட்லி மாவு ரெண்டு கரண்டி அல்லாத்தையும் எடுத்துக்கிட்டியா! இரு வர்றேன்’’ என நிறுத்திய கணேசன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்து அதிலிருந்து ஒன்றை உருவிப் பற்ற வைத்தான். பின் மருதகோடியிடம் பாக்கெட்டை நீட்ட, மருதகோடி வேண்டாமெனச் சைகை செய்தான்.

‘‘மாணிக்கம், இது என்னா சிகரெட்டுன்னு தெரியுமா? இதான் பாசிங்சோ! லண்டன்ல தயாரிச்சு இங்க வருது! ஒரு பாக்கெட்டு மூணு ரூவா’’ என சிகரெட் பாக்கெட்டை மாணிக்கத்தின் முன் காட்டினான். யானைத்தந்தக் கலரில் இருந்த அட்டையின் நடுவே மெரூன் கலர் வட்டத்துக்குள் ஒரு வெள்ளைக்காரன் உயரமான தொப்பியுடன், வாயில் சிகரெட்டை ஸ்டைலாகக் கவ்வியபடி சிரித்துக்கொண்டிருந்தான். அதிலிருந்து புகை வளைந்து மேலே போவதுபோல வளைவுக்கோடு ஒன்று வரையப்பட்டிருந்தது. மாணிக்கம் மிகவும் ஆச்சரியப்பட்டான். அவனுக்கு 501 கணேஷ் பீடியைத் தவிர வேறொன்றும் தெரியாது. அதிலும் டூப்ளிகேட் வந்துவிட்டதில்தான் அவனுக்கு விசனம்.

‘‘சரிப்பா! மேக்கொண்டு சாராயங்காச்சற பக்குவத்தச் சொல்லு, கேப்பம்.’’ இவ்வளவு நேரம் பேசாமல் இருந்த மருதகோடி வாயைத் திறந்ததும் ஆச்சரியத்துடன் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு நீளமாகச் சொல்லி முடித்தான். பேசியதிலேயே கணேசனுக்கு போதை இறங்கிவிட்டது. மாணிக்கம் இன்னொரு டம்ளரும் ஊற்றிக் கொடுத்தான். அப்போதே கணேசனை வேலைக்குச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று மருதகோடியின் மனதுக்குள் முடிவானது.

கணேசன் மருதகோடியிடம் வேலைக்குச் சேர்ந்த பின்தான் சாராயம் அதிக ஓட்டம் ஓடத் தொடங்கியது. ‘‘கணேசம்பய கையில என்னமோ வசியமிருக்குது. இல்லையின்னா நாங்கலக்கற அதே ஊறல அந்தப்பய கலக்கி எரிச்சா மட்டும் நாக்கு சும்மா அப்பிடி சொடக்குப் போடுதே!’’ என மருதகோடியே தன் சிஷ்யனின் அருமைபெருமைகளைப் பேசிப் பேசி கணேசனை வேறுமாதிரி நினைக்கக் காரணமாய் இருந்துவிட்டான். அது, நேற்றுவரை மருதகோடியின் வலதுகையாய் இருந்து இன்று கட்சி மாறி கணேசன் பக்கம் வந்துவிட்ட மாணிக்கத்தின் கழுத்தை மருதகோடியே அறுத்துத் தள்ளியதில் போய் முடிந்தது.

பர்மா கௌசா - சிறுகதை

‘‘கணேசண்ணே! ஒங்கிட்டயிருக்கிற தெறம அந்தாளுகிட்ட இல்லண்ணே. ஒன்னு தெரியுமா! நீ எப்ப இந்தாளுகிட்ட வந்து சேந்து தொழிலப் பாக்க ஆரம்பிச்சியோ அப்பயிருந்து இந்தாளுக்குப் பணம் வந்து கொட்டிக்கிட்டேயிருக்குது. எல்லாம் ஒங்கை ராசிண்ணே! நீ மட்டும் தனியா அடுப்பு போட்டன்னு வெச்சுக்க, இந்தாள மிஞ்சி எங்கியோ போயிருவ. ஒன் நெழல்லயே நானும் ஒரு ஓரமா ஒதுங்கிக் கெடப்பேன்’’ என மாணிக்கம் உசுப்பேற்றியதும்தான் ‘நாமளும் ஏன் தனியா அடுப்புப் போடக்கூடாது’ என்கிற எண்ணமே கணேசனுக்கு வந்தது. அந்த எண்ணத்திற்கு முதல் பலி மாணிக்கம்.

முந்திரிக்காட்டின் தெற்கு மூலையை மருதகோடி ஆக்கிரமித்து வைத்திருந்தான் என்பதால் வடக்குப் பகுதிக்கு நகர்ந்து அடுப்பைப் போடத் தொடங்கினான் கணேசன். மருதகோடி கோஷ்டியில் கணேசன் சேர்ந்து சாராயம் காய்ச்சும் தகவல் அரசல்புரசலாகத் தெரிந்ததுமே அண்ணன் முருகசாமி கண்டித்தார். ‘‘வேணாம்ப்பா! பர்மாவுல நாம பொழைச்ச பொழைப்பையும் நமக்கு இருந்த மரியாதையையும் நெனச்சுப்பாரு. இது ஈனப் பொழப்பில்லையா! இந்த வெசம் என்னிக்காயிருந்தாலும் ஒன்னையும் தீண்டி ஆளக் காலி பண்ணாம விடாது'’ என்ற அண்ணனின் பேச்சை அலட்சியப்படுத்தி விட்டான் கணேசன்.

‘`கணேசஞ் சரக்கு ருசிக்கு கவுர்மெண்டையே எழுதிக் குடுக்கலாம்’' என்பார் ஒரு போலீஸ் அதிகாரி. அந்த அளவுக்குக் காவல் துறையையே வசப்படுத்தி வைக்கத் தெரிந்தவனால் தன் கையாளைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.

அன்றைக்கும் மாணிக்கம் வழக்கம்போல முருகசாமி கௌசா கடைக்கு வந்திருந்தான். இருட்டுக் கட்டியதும் சரக்கு டியூப்களையும், கேன்களையும் வெளியூர் ஆட்களுக்குக் கொடுத்தனுப்பி வரவுசெலவுக் கணக்குகளைப் பார்த்து, வசூலான பணத்தை ஜவ்வுத்தாள் பையில் சுருட்டி இடுப்பில் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு கிளம்பினான். கணேசன் கௌசா கடைக்கு வந்து பணத்தை வாங்கிக்கொள்வான். கணேசன் வரத் தாமதமான ஒருநாள் முருகசாமியிடம் கொடுத்தான். ‘`அடுத்தவம் கொடல வேகவச்ச காசு பாவப்பட்டதுடா மாணிக்கம். அதை ஒம் மொதலாளி கிட்டயே குடுத்துரு. எங்கையால அதத் தொடமாட்டன்’' எனச் சொல்லவும், மறுபடி அதை மடியில் கட்டிக்கொண்டு கௌசா போடச் சொன்னான்.

பர்மா கௌசா - சிறுகதை

கோயில் வாசலில் மரத்தின் பின்புறம் மருதகோடி ஒளிந்து நின்றபடி மாணிக்கத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது யாருக்கும் தெரியாது. மாணிக்கத்தைப் போடுவதற்காக மருதகோடி தேர்வு செய்திருந்த மொண்ணைக்காளி அடிவயிற்றில் பிச்சுவாக்கத்தியை மறைத்துப் பிடித்தபடி கௌசாக் கடை முன்பு காத்திருந்தான். ‘`பாவம்டா மாணிக்கம்பய! ஒருகாலத்து எங்கூட இருந்தவனா வேற போயிட்டானா! அவுனுக்குப் புடிச்ச கௌசாவக் கடைசியாத் தின்னுக்கட்டும். அப்பறமா கத்திய எறக்கு’' என மருதகோடி சொல்லியிருந்ததால், அதன்படியே காத்திருந்தான். மாணிக்கம் கடைசி வாய்க் கௌசாவைத் தின்றுமுடித்ததும், சூப்பைத் தட்டிலேயே வாங்கி உறிஞ்சிக் கடித்த கடைசி நொடியில் பின்னாலிருந்து கழுத்தின் சாய்மானத்தில் கத்தியைச் செருகி பலமாக அறுத்துவிட்டான் மொண்ணைக்காளி. உள்ளே இறங்கிக் கொண்டிருந்த சூப் கொப்பளித்த ரத்தத்துடன் கலந்து வெளியே வந்ததும். தொங்கிய கழுத்தைப் பிடித்தபடி மாணிக்கம் கீழே விழுந்தான்.

அடுத்த சில நாள்களில் மருதகோடியும், மொண்ணைக்காளியும் கணேசனுக்கு பயந்து தலைமறைவாகிவிட்டனர். ‘`என்னிக்கா இருந்தாலும் அவனுக கொரவளைய அறுக்காம வுட மாட்டேன்’' எனச் சபதம் செய்தான் கணேசன்.

ஒரு வாரத்தில் மொண்ணைக்காளியை கணேசன் போட்டுத் தள்ளிய சம்பவம்தான் தஞ்சாவூர் முழுக்க கணேசனைப் பேச்சுப் பொருளாக்கியது. வல்லத்தில் ஒளிந்து கொண்டிருந்த மொண்ணைக்காளி, மெடிக்கல் காலேஜ் சாலை வழியாக அடிக்கடி வந்து ராஜப்பா நகரின் எதிர்ப்புறம் உள்ள வீதிவழியே போய் ரயில்வே பாலத்தின் கீழ் புகுந்து சேவப்ப நாயக்கன்வாரிக்குள் போவதைத் தெரிந்து கொண்டான் கணேசன். கருவை மண்டிக்கிடக்கும் பாலக்கட்டை அது. இருட்டத் தொடங்கியதும் அந்தப் பக்கம் யாரும் போக மாட்டார்கள். மீறிச் செல்பவர்கள் இருப்பதைப் பறிகொடுத்துவிட்டு வருவது மட்டுமல்லாமல் ரத்தக்காயங்களையும் ஏற்க நேரிடும். மொண்ணைக்காளிக்கு அதுபற்றிய பயம் இல்லை. அவனை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் தீண்ட பயப்படுவார்கள்.

வீதியின் மேட்டுப் பகுதியில் கண்பார்வைக்குத் தெரியாத இடத்தில் கணேசன் காத்திருந்தான். சைக்கிளில் வேகமாக வந்த மொண்ணைக்காளி, மெயின் ரோட்டில் இருந்த கௌசா கடையில் அவசரமாகப் பார்சலை வாங்கினான். அதே வேகத்தில் சைக்கிளைக் கிளப்புவதைப் பார்த்ததும் கணேசன் சடாரென ஓட்டமாய் இருளுக்குள் ஓடி பாலக்கட்டையின் பக்கவாட்டில் ஒளிந்து நின்றான். கெட்ட வீச்சம் சாராய வாடையைவிட மோசமாக இருந்தது கணேசனை முகஞ்சுளிக்க வைத்தது. பாலக்கட்டையின் கீழ்ப்பாதை மேடும் பள்ளமுமாக இருப்பதால் சைக்கிளை ஓட்டிக் கொண்டு போக முடியாது என்பது முன்னமே தெரியும் கணேசனுக்கு. சைக்கிளில் இருந்து இறங்கிய மொண்ணைக் காளியின் முகம் பயத்தில் வெளிறிக் கிடப்பதை அந்த இருட்டிலும் கவனித்தான் கணேசன்.

வயிற்றின் கீழ்ப்புறம் கைலிக்குள் வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து அதிலிருந்த பெட்ரோலைத் தன் வாயில் கவிழ்த்து, சடாரென மொண்ணைக்காளியின் முகத்தில் புளிச்செனத் துப்பினான். மொண்ணைக்காளிக்கு நடப்பது என்ன என்பது தெரிவதற்குள் கணேசன் பற்ற வைத்த தீக்குச்சி அவன் முகத்தில் தீயாப் பரவிவிட்டது. அவன் சத்தம் போட்டுக் கத்துவதற்குள் பாட்டிலில் மீதியிருந்த முக்கால் அளவு பெட்ரோலையும் மொண்ணைக்காளியின் உடலின் மீது ஊற்றினான் கணேசன். அந்தப் பாலத்தின் கீழே கத்தியபடியே முழுவதுமாக எரிந்து கரியானான் மொண்ணைக்காளி.

பொழுது விடிந்ததும் நகரம் பரபரப்பானது. கணேசனின் சாகசம் திகிலாகப் பேசப்பட்டது. புதிதாக வந்திருந்த இன்ஸ்பெக்டர் சிவன் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடியவர் என்பதை பர்மா காலனிவாசிகள் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.

கொஞ்ச நேரத்திற்குள் இன்ஸ்பெக்டர் சிவன் தன் படைபரிவாரங்களுடன் பர்மா காலனிக்குள் நுழைந்துவிட்டார். சாராயம் காய்ச்சத் தொடங்கியபின் காலனிக்குள் அதிக நேரம் இருப்பதில்லை கணேசன். வசூல் காசை வாங்க சாயங்காலம் வருவதோடு சரி; மற்ற நேரமெல்லாம் பூக்கொல்லை, முந்திரிக்காடு என எங்காவது ஒளிந்துதான் இருப்பான். இன்ஸ்பெக்டர் சிவன் வந்த நேரம் காலனியின் சந்திலிருந்து அப்போதுதான் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தான் கணேசன். இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் லேசாகக் கருக்கென்றிருந்தது அவனுக்கு. இருந்தாலும், தைரியமாக இன்ஸ்பெக்டர் சிவன் முன் வந்து நின்றான். ‘`இவன் கையப் பின்னாடி வச்சி வெலங்கு மாட்டி ஒண்ணாந்தெரு வரைக்கும் இழுத்துட்டு வந்து வண்டியில ஏத்துங்க ஏட்டையா! அப்பத்தான் மத்தவனுகளுக்கும் போலீஸ்னா பயம் இருக்கும். பர்மா காலனிக்குள்ள போலீஸ் வரக்கூடாதுன்னு சட்டம் போட்டானுகளாமில்ல. இப்ப என்ன பண்ணுவானுகன்னு பார்க்கறேன்!'’ என சத்தம் போட்டுச் சொன்னார் இன்ஸ்பெக்டர் சிவன்.

பர்மா கௌசா - சிறுகதை

கணேசன் சிரித்துக்கொண்டே “சார், நீங்க அஞ்சாறு பேரு, நான் ஒத்த! முடிஞ்சா நீங்க எங்கூட ஒத்தைக்கு ஒத்தி மோதி ஜெயிச்சுட்டீங்கன்னா நானே வந்து ஜீப்புல ஏறிக்குவேன். நீங்க தோத்துட்டீங்கன்னா இனிமே ஒங்க ஆளுக எங்க ஏரியாவுக்குள்ளயே வரக்கூடாது. என்ன சார்! ஒத்துக்கிறீங்களா?’' எனக் கேட்டதும் இன்ஸ்பெக்டர் சிவன் திகைத்தார். `இவன சாதாரண அக்யூஸ்ட்டா நெனச்சுட்டோம். கொஞ்சம் டேஞ்சரான ஆளுதான் போல இருக்கு' என நினைத்தவர் அவனை விடச் சொல்லிவிட்டு வண்டியில் ஏறினார். எல்லா போலீஸ்காரர்களும் ஏறியதும் வண்டி ஸ்டேஷனுக்குச் சென்றது.

காலனிக்குள் எல்லோரும் கணேசனின் தோரணையை வியந்து பேசியபடியே கலைந்தனர். ஆனால், கணேசனுக்கு மட்டும் இன்ஸ்பெக்டர் சிவன் திரும்ப வருவார் என்பது தெரியும். அதேபோல, போன இன்ஸ்பெக்டர் சிவன் தான் மட்டும் தனியாக புல்லட்டில் வந்தார். தூரத்திலேயே அவரைப் பார்த்துவிட்ட கணேசன், புல்லட் அருகில் நெருங்கியதும் இடுப்பிலிருந்து அரிவாளை எடுத்து ஓங்கி வண்டியின் முன்பக்க டயரை வெட்டினான். தடுமாறிய இன்ஸ்பெக்டர் சிவன் வண்டியைச் சட்டென பிரேக் போட்டு நிறுத்தினார். முன்பக்க சக்கரம் அப்படியே தரையில் அமிழ்ந்தது.

`வாங்க சார்! அந்தத் திடலுப் பக்கம் போயிரலாம். நடுரோட்டுல அடிச்சுக்கிட்டா மத்தவங்களுக்கு நம்மளால சிரமந்தான!' எனச் சொல்லிவிட்டு முன்னால் நடந்தான். எரிச்சலுடன் வண்டியைத் தள்ளிக்கொண்டே அவனைப் பின்தொடர்ந்தார் இன்ஸ்பெக்டர் சிவன். காலனி முழுக்க சண்டை நடக்கப்போகும் தகவல் தெரிந்ததும் ஜனங்கள் திடலின் முன்புறம் கூட்டமாகக் குவிந்துவிட்டனர்.

திடலை அடைந்ததும் இன்ஸ்பெக்டர் சிவன் சட்டையைக் கழற்றி புல்லட்டின் மேல் போட்டுவிட்டு திடலின் நடுவே வந்து நின்றார். கணேசனும் சட்டையைக் கழற்றிவிட்டு வெறும் உடம்போடு அவரின் எதிரே வந்தான். இன்ஸ்பெக்டர் சிவன் எதிர்பார்க்காத நொடியில் கணேசன் பாய்ந்து அவரை அடித்த வேகத்தில் அவர் நிலைதடுமாறிக் கீழே சாய்ந்தார். சுதாரித்து எழுந்தவர் கணேசனைத் திருப்பி அடிக்க முயன்றார். ஆனால், கணேசன் அவரிடமிருந்து லாகவமாக விலகி மீண்டும் கடுமையாக அடிக்கத் தொடங்கினான். கணேசனின் கைகள் பர்மாத் தேக்குபோல வலுவானவை. இன்ஸ்பெக்டர் சிவனால் அவற்றை எதிர்கொள்ள முடியவில்லை. துளி இடைவெளியின்றித் தொடர்ச்சியான தாக்குதலால் தளர்ந்துபோய்த் தரையில் சரிந்தார் இன்ஸ்பெக்டர் சிவன்.

இன்ஸ்பெக்டர் சிவனும் கணேசனும் தன்னந்தனியாக சண்டை போட்டுக் கொண்டிருப்பது தெரிந்து ஸ்டேஷனிலிருந்து ஒரு வேன் நிறைய பெரும்படையாக போலீஸ்காரர்கள் வந்துவிட்டார்கள். தங்களுடைய அதிகாரி தரையில் சரிந்து கிடப்பதைப் பார்த்ததும் பாய்ந்து கணேசனை அடித்துத் துவைத்தனர். அதற்குள் இன்ஸ்பெக்டர் சிவனுக்கு யாரோ தண்ணீர் கொடுத்து எழுப்பி உட்கார வைத்தனர். ரத்தச் சகதியான கணேசன் வேனுக்குள் தூக்கி வீசப்பட்டான். வண்டி கிளம்புவதற்கு முன் இன்ஸ்பெக்டர் சிவனைப் பார்த்து லேசாகச் சிரித்தான் கணேசன். அவர் தலையைக் குனிந்தபடியே இருந்தார்.