சினிமா
Published:Updated:

நாடி - சிறுகதை

நாடி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
நாடி - சிறுகதை

- சசி

ஒருவருடைய வாழ்க்கையை நாவலாகச் சொல்லலாம். ஆனால் ஒரு சிறுகதையாகச் சுருக்கி எழுத முடியுமா? சிரமம் என்கிறீர்களா? இரண்டு இன்ச் அகலமுள்ள ஒரு ஓலைச் சுவடியில் அகத்தியர் உங்கள் வாழ்க்கையைப் பன்னிரண்டு காண்டங்களில் எழுதி வைத்துள்ளார் என்று சொல்லி நாற்பது பக்க நோட்டில் ஒரு பாட்டை ஒருவர் எழுதித் தர, பவ்யமாக மூவாயிரம் ரூபாய் வரை தட்சணை தந்தவர் நீங்கள் என்றால், இதையும் நம்பித்தான் ஆக வேண்டும்.

சரி, இப்போது நாம் முதலில் ராம்குமாரின் வாழ்க்கையின் முதல் இருபத்தேழு வருடங்களை கீழே ஒரே பேராவில் சொல்ல முயற்சிசெய்யலாம்.

அப்பா சுகவனம் தொடக்கப்பள்ளி ஆசிரியர். ஐந்து வருடங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்தார். அம்மா புனிதவதி, ஒரே மகன் ராம்குமாருடன் வசிப்பது சென்னை சிந்தாதிரிப்பேட்டையில். ராம்குமார் படித்தது வணிகவியல். வேலையோ வாகன உதிரி பாகங்களைத் தமிழ்நாடு முழுக்க விற்க முற்படும் சென்னை சார்ந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி. மாத சம்பளம் பிடித்தம் போக ரூபாய் முப்பதாயிரம்.

ராம்குமாரின் வாழ்க்கைச் சிறுகதை சுவாரஸ்யமாக ஆரம்பிப்பது இன்றைக்கு சுமார் ஐந்து வருடம் முன்னர் சீர்காழியில் புதிதாக ஆரம்பமான செந்தில்நாதன் ஆட்டோமொபைல்ஸ் வாசலில். “ஓகே சார், அப்ப அடுத்த மாசம் டூர்ல உங்கள மீட் பண்றேன்” என்று விடைபெறுமுன் மணிபர்ஸிலிருந்து தன் விசிட்டிங் கார்டு ஒன்றை எடுத்து, கடை ஓனரிடம் கொடுத்தான். மணி பிற்பகல் மூன்றைக் கடந்திருந்தது. இங்கிருந்து வைத்தீஸ்வரன் கோயில் ஒரு ஏழு அல்லது எட்டுக் கிலோமீட்டர்தான். பஸ்ஸில் போனால் அரை மணி நேரத்தில் போய்ச் சேர்ந்து விடலாம். நாலரைக்குக் கோயில் திறப்பார்கள். இப்போதே கிளம்பினால் முதல் தரிசனம் முடித்து சென்னைக்கு ஆறரை மணி பஸ் பிடித்துவிடலாம்.

நாடி - சிறுகதை

புதன்கிழமை என்பதால் கோயில் வார இறுதி நாள்கள்போல் கூட்டம் அதிகம் இல்லாமலிருந்தது. விரைவில் தரிசனத்தை முடித்துவிட்டுக் கோயிலின் வெளிப்பிராகாரம் வழியே தெருவுக்கு வந்தவுடன், தன்னை நோக்கி ஓட்டமும் நடையுமாக வரும் அந்த நபரை ராம்குமார் கவனித்துவிட்டான். வெள்ளை வேட்டியும் அரைக்கை நீல நிறச் சட்டையும் அணிந்தபடி ஒரு கையில் மஞ்சள் பையுமாக. கண்டிப்பாக இது ஒரு நாடி ஜோதிட ஏஜென்ட் என்பதில் ராம்குமாருக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வைத்தீஸ்வரன் கோயில் சுற்றுப்பகுதிகளில் திரிபவர்கள், ஒன்று கோயிலில் சாமி தரிசனம் வேண்டி வந்தவர்கள் அல்லது தரிசனம் முடிந்து நூற்றுக்கணக்கான நாடி ஜோதிட நிலையங்களில் எங்கு போவது என்று திக்குத் தெரியாமல் அலைபவர்கள். மற்றவர்கள் நாடி ஜோதிட மையங்களின் ஏஜென்டுகள். ராம்குமாரின் நோக்கம் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள தேநீர்க்கடையில் டீ சாப்பிட்டு உடன் பஸ் பிடித்துச் சென்னை திரும்புவது.

ஏற்கெனவே ஒரு முறை நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் ராம்குமாருக்கு உண்டு. முதல்முறையாக வைத்தீஸ்வரன் கோயில் வந்தபோது அம்மாவின் வற்புறுத்தலால் நாடி ஜோதிடம் பார்த்தான். அப்போதே அவனுக்கு அந்த சூட்சுமம் புரிந்தது.

ஒரு சுவடிக்கட்டில் உள்ள சுவடிகளை ஒவ்வொன்றாகத் தள்ளியபடி நூற்றுக்கணக்கான கேள்விகளைக் கேட்டு அதற்கு ஆம், இல்லை என்ற பதில் பெற்று நம் பெயர், தந்தை பெயர், தாயார் பெயர் இவற்றின் ஒவ்வொரு எழுத்தாகத் தகவல் திரட்டி கடைசியில் அவர்கள் கண்டுபிடித்த ஒரு குறிப்பிட்ட சுவடியில் இதெல்லாம் உள்ளதாகக் கூறுவார்கள். ராம்குமாரின் நம்பிக்கையின்மைக்கு இந்த ஒரு சுவடி அனுபவமே போதுமானதாக இருந்தது.

தேநீர்க்கடையை ராம்குமார் நெருங்க, திடீரென்று பின்னால் வந்து அந்த நபர் மூச்சு வாங்க, “சார், உங்களைத்தான் கோயில் வாசல்ல இருந்து துரத்திக்கிட்டு வரேன். செத்த நில்லுங்கோ.”

“சார், என்னை ஆளை விடுங்க. எனக்கு நாடி ஜோசியத்தில நம்பிக்கை இல்லை.”

“அட, சார் அதான் எஸ்கேப் ஆகப் பார்த்தேளா. நான் நாடி ஜோசியம் பார்க்கிற ஆள் கிடையாது. பாருங்க, என் பைக்குள்ள சுவடிகள் ஒண்ணும் இல்ல” என்று சிரித்தபடி மஞ்சப்பையைத் திறந்து காட்டினான் அந்த நபர். அப்போதுதான் அவனை ராம்குமார் சரியாக கவனித்தான். சின்ன வயதாக முப்பது முப்பத்தைந்துக்குள்தான் இருந்தான். அடர்த்தியான தலைமுடி. குடுமி இல்லாத என்னவோ ஒரு வித்தியாசமான ஹேர் ஸ்டைல்.

“சாருக்கு நாடி ஜோசியம்னா நம்பிக்கை இல்லைபோல. அப்ப ஏதோ அனுபவம் இருக்கணும்.”

“என்னோட வாழ்க்கை ஒரு சுவடியில் இருக்குன்னு சொல்றதே அபத்தம்.”

“உங்க கோபம் புரியுது. சுவடி ஜோதிஷம் சரியா, தப்பா, அந்த சர்ச்சைக்குள்ள நான் வரலை. சாருக்கு நன்னா தெரிஞ்சிருக்கும். இங்க வரவாள் பாதிப் பேர் ஸ்வாமி தரிசனத்துக்கும் மீதம் சுவடி பாக்கவும்தான். சுவடி பாக்க வரவாளும் ஸ்வாமிய கண்டிப்பா தரிசனம் செய்யறா. அதனால ஈஸ்வரன் அருள், எல்லோருக்கும் கிடைக்குறது இல்லையா?”

ராம்குமாருக்கு அவனது ‘கறை நல்லது’ லாஜிக் பிடிபடவில்லை. ஏதோ நன்றாக மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் புரிந்தது. மணி பார்த்தபடி “நான் ஆறு மணிக்குள்ள சென்னைக்கு பஸ் பிடிக்கணும். உங்களுக்கு என்ன வேணும், சொல்லுங்க?”

“சார், நானும் சந்தியைக்குள்ள ஜோலி முடிச்சிட்டு சீர்காழி போகணும். நான் சுவடி பாக்குற ஜோசியன் கிடையாது. உங்கள நாடி வந்த ஜோசியனாக்கும். நாடின்னா பல அர்த்தங்கள் உண்டு தெரியுமோன்னோ. சப்த நாடி அடங்கிடுச்சுன்னு சொல்றா. அது மூச்சு. ரெட்டைநாடி சரீரம்னு சொன்னா உடம்புன்னு அர்த்தம்.”

“சரி, இதெல்லாம் எதுக்கு...” பேச முற்பட்ட ராம்குமாரை இடைமறித்து மேலும் தொடர்ந்தான்.

“கொஞ்சம் பொறுமையா கேளுங்கோ. நான் ராமபத்ரன்... நீங்க வாகனம் சம்பந்தப்பட்ட வேலையில் இருக்கேள் போல. அதான் பரபரன்னு ஸ்பீடா யோசிக்கிறீர். என்னைப் போல உங்க பேரிலேயும் ராம நாமம் இருக்கு. சரியா?”

இந்தத் திடீர் தாக்குதலில் அதிர்ச்சியானாலும் சுதாரித்த அவனுக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. `சீர்காழியில் செந்தில்நாதன் ஓனரிடம் விசிட்டிங் கார்டு தரும்போது பர்ஸிலிருந்து வேறு ஒரு அட்டையைக் கீழே தவற விட்டு, ஒருவேளை அது இவன் கையில் கிடைத்து’ என்று பேன்ட் பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுத்ததை ராமபத்ரன் கவனித்துவிட்டான்.

பர்ஸுக்குள் கொடுத்த ஒன்று போக மீதம் நாலு விசிட்டிங் கார்டுகள் பத்திரமாக இருந்தன.

“சார், கன்ஃபார்ம் பண்ணிட்டேளா? பிராடு பண்றவன் நோக்கம் பணம் பறிக்கிறதாதானே இருக்கும். இப்பவே சொல்லிடறேன். பணம் எதுவும் எனக்கு வேண்டாம். நீங்க ஒரு ஒத்த ரூபா மட்டும் தட்சணையா தாங்கோ. ஏன்னா தட்சணை தராத பிரசன்னம் பலிக்காது.”

“பிரசன்னமா, எதுக்கு?”

“சொல்றேன், எல்லாம் தெய்வ நிமித்தம்தான். நீங்க நினைக்கிற மாதிரி நான் முழு நேர ஜோதிஷன் கிடையாது. சி.ஏ முடிச்சிட்டு ஒரு தனியார் கம்பெனியில அக்கவுண்டன்டா இருக்கேன். தோப்பனார் முன்னம் இந்தப் பக்கத்துல புரோகிதர். இப்ப ஜீவனோடில்லை. அவர் காலத்துக்கப்புறம் நானும் புரோகிதம் பண்ணணும்னு ஆசைப்பட்டார். எனக்குக் கணக்கு நல்லா வரவே, படிப்புல பிடிப்பு வந்து அவரோட ஆசை நிறைவேறல. அவர் புரோகிதம் தவிர அப்பப்போ தேடி வரவாளுக்கு மட்டும் குறி சொல்றதும் உண்டு. அந்த ஸித்தி எனக்கும் கொஞ்சமா வாச்சிருக்கு. அவரோட விருப்பத்த பூர்த்தி செய்யாமப் போனதுக்கு பிராயச்சித்தமா மாசத்துக்கு ஒரு நாள் இங்க வந்து ஒருத்தருக்கு மட்டும் காசு வாங்காமக் குறி சொல்றது வழக்கம்.”

மூச்சு விடாமல் பேசிய ராமபத்ரனை நம்பலாமா வேண்டாமா என்று தெரியவில்லை. ஆனால ஏதோ ஆர்வம் ராம்குமாரை அடுத்த கட்டத்துக்கு உந்தியது.

“சரி, இதுக்கு நான் எப்படி செலக்ட் ஆனேன்?”

“தரிசனம் முடிஞ்சு கோயில் வெளிவாசல் வழியா வரவாள்ல என் கண்ணுக்குப் படற முதல் நபருக்கு பிரசன்னம் பாக்கணும்ன்றது என்னோட சங்கல்பம். இன்னைக்கு நீங்க என்பது தெய்வ நிமித்தம்.”

அதற்குள் இருவரும் தேநீர்க்கடையை நெருங்கி விட்டார்கள். ராம்குமாருக்கு எப்படியும் பணம் போகாது என்கிற நம்பிக்கை வர, பயம் தெளிந்தது. ஆனால், இந்தப் பிரசன்னம், குறி இதில் ஒன்றும் பெரிய ஆர்வம் வரவில்லை. ஆனால், எப்படி நம் பெயர், வேலை விவர தகவல் அவரிடம் தோராயமாகச் சென்று அடைந்தது என்ற ஆச்சரியம் மட்டும் இன்னும் விலகவில்லை.

“சரி, இப்ப நான் என்ன செய்யணும்,”

“ஒரு பத்து நிமிஷம்தான்” டீக்கடை பெஞ்சை காட்டி, “செத்த இங்கே அமைதியா உக்காருங்கோ. சார் பேரென்ன, சொல்லலையே!”

“நீங்கதான் பாதி கண்டு புடிச்சிடீங்களே. ராம நாமம் பாதி, ராம்குமார்.”

ராமபத்ரன் ‘ஹ ஹா’ என்று வெள்ளந்தியாகச் சிரித்தபடி ராம்குமாரின் வலது கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கண்களை மூடி தியானம் செய்வதுபோல் அமர்ந்துகொண்டான். ராம்குமாருக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. சுற்றும் முற்றும் யாரும் பெரிதாக இவர்களை சட்டை செய்யவில்லை.

கண்களைத் திறக்காமல் ராமபத்ரன் உதடுகள் துடிக்கப் பேசினான். “உங்க பழைய விஷயங்கள் எதுவும் நான் சொல்லப்போறதில்லை. உங்க எதிர்காலத்தை மாற்றும் முக்கியமான மூணு விஷயங்களை மட்டும் சொல்றேன், கேளுங்கோ. உங்களுக்கு மூணாவதா பாக்குற பொண்ணுதான் வரனா அமையும். பொண்ணோட பூர்வீகம் கும்பகோணம். பேரு ஒரு விருட்சம்.”

விருட்சமா, மரம்? ராம்குமாருக்கு பகீரென்றது... மா, பலா, வாழை, அரசு, ஆலமரம், உணர்ச்சி வசப்பட்டுக் கொஞ்சம் சத்தமாகவே சொன்னான். “ஆங்... வேலமரம்... வேலம்மா, இல்லைன்னா வேம்பு...”

ராமபத்ரன் கண் திறந்து லேசாகச் சிரித்தான்.

“அப்புறம் உங்களுக்கு சூட்டிகையா ஒரே ஒரு பொண் குழந்தை, பேர்ல ஒரு மதுரமான வஸ்து...”

ராம்குமாருக்கு இந்த விளையாட்டு இப்போது ஜாலியாக இருந்தது. “மதுரமான வஸ்துவா! தித்திப்பான பொருள்... சான்ஸே இல்லை. என் பொண்ணுக்கு நான் கண்டிப்பா பூந்தி, ஜாங்கிரி, ஜிலேபின்னு பேரு வைக்க மாட்டேன்” என்று சந்தானம் வாய்ஸில் சொல்ல, ராமபத்ரன் கொஞ்சம் பலமாகவே சிரித்தான். “சார், நல்ல ஜோக்கான ஆசாமிதான்போல.”

“அப்புறம் சார், உங்க குழந்தை பேர்ல தொழில் தொடங்குவேள், அதுல கொழுத்த பணம் பார்ப்பீர்.”

இப்போது சிரித்தது ராம்குமார். “மத்ததெல்லாம் கூட சாதாரணமான தமாஷ்னு எடுத்துக்கலாம். இது ஹைட் ஆப் தி ஜோக். என்ன தொழில், அதையும் சொல்லிடுங்க...” என்றான் கிண்டலாக.

நாடி - சிறுகதை

ராமபத்ரனின் முகம் இப்போது கொஞ்சம் இறுக்கமாகவும் கைகள் சூடாகவும் இருந்தன. சடாரென்று கைகளை விடுவித்து “நாடி பார்க்கிற பிசினஸ்” என்றான்.

“என்னது, உளறாதீங்க... நான் நாடி ஜோசியம் பார்க்கிற பிசினஸ் பண்ணுவேனா, அதுக்கு...” கோபத்தில் ராம்குமாருக்கு உடம்பு அதிர்ந்தது.

“மன்னிக்கணும், பிரசன்னத்த சொல்றது மட்டுமே என்னோட ஜோலி, அதுக்கு மேலே விஸ்தரிக்க முடியாது. ஒத்த ரூபாய் தட்சணை குடுத்தா சட்டுனு கிளம்பிடுவேன்.”

ராம்குமாருக்கு தான் அதிகமாக ரியாக்ட் செய்துவிட்டோம் என்பது புரிந்து அமைதியானான். நாம் நம்பாத விஷயங்களுக்கு ஏன் அனாவசியமாக உணர்ச்சி வசப்பட வேண்டும். நிலைமையைச் சரி செய்ய வேண்டி, “ராமபத்ரன், உங்களுக்கு லேசா ஜுரம் இருக்கு போல, கையெல்லாம் சூடா இருக்கு.”

“அதொண்ணும் பிரச்னை இல்ல. என் தோப்பனார் குறி சொல்லி முடிச்சப்புறம் ஒரு வாளி ஜலம் தலையில் விடுவார். கீழ விழற ஜலம் கொதிக்கும்னா பாருங்கோ.”

“உங்களுக்கு டீ, காபி ஏதாவது...” எனக் கேட்டதற்கு, “ஆத்துக்குப் போய் ஸ்நானம் பண்ணின பிறகு தான் ஜலம் தொண்டையில இறங்கும். அப்ப தட்சிணை...” என்று இழுத்தான் ராமபத்ரன்.

பர்ஸிலிருந்து ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்துத் தர, இரு கைகளையும் விரித்துத் தலை குனிந்து பவ்யமாக வாங்கிய ராமபத்ரன் “பிரசன்னம் பலிக்கும்போதெல்லாம் இந்த க்ஷணத்தை நினைச்சுக்கோங்க. நான் உத்தரவு வாங்கிக்கிறேன்.”

“சார், உங்களுக்கு டீயா, காபியா?” கடைப்பையன் கேட்ட ஒரு நிமிடம் திரும்பிப் பார்ப்பதற்குள் ராமபத்ரன் எதிரில் இருந்த ஒரு தெருவில் வேகமாக நுழைந்து மறைந்தான்.

ராம்குமாருக்குப் பார்த்த முதல் பெண் அவனுக்குப் பிடித்திருந்தது. அவன் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. ‘அந்தப் பொண்ணு காபி டம்ளரை டொக்குன்னு வெச்சிட்டுப் போறது ஏதோ நமக்குச் சொல்ற மாதிரி இருந்தது’ என்று காரணம் சொன்னாள். இரண்டு மாதங்கள் கழித்து ஒரு பெண் பார்க்க வளசரவாக்கம் போனார்கள். சின்னக் குடும்பம். பெண்ணுக்கு ஏ.ஜி.எஸ் ஆபீஸில் வேலை. அழகாகவும் இருந்தாள். எல்லோருக்கும் பிடித்து, ‘உடனே வர்ற ஒரு நல்ல முகூர்த்த தேதி பார்த்துச் சொல்லுங்க’ என்று கூறிக் கிளம்பினார்கள். பிறகு பதில் ஏதும் இல்லை. புரோக்கர் தங்கதுரைதான் சொன்னார். அவர்கள் பெண் பார்த்த அன்று இரவு பொண்ணோட சித்தப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனாராம். பிழைத்துவிட்டார் என்றாலும் அபசகுனம் என்று பெண் வீட்டில் நினைத்ததால் வரன் முடங்கியது.

ஜி.பி ரோட்டில் உள்ள ஒரு கடை ஓனர் வீட்டுக்கு பேமென்ட் விஷயமாக ராம்குமார் அடிக்கடி சென்று வருவான். திருவல்லிக்கேணி பெரிய தெருவில் ஒரு பழைய வீடு. நல்ல மனிதர். எப்போது சென்றாலும் தன் மகளிடம் காபி கொண்டு வரச் சொல்வார்.

காபி கொண்டு வந்து தரும்போதெல்லாம் மிகவும் அடக்கமாக புடவைத் தலைப்பில் தம்ளரைப் பிடித்தபடி கொஞ்சமும் அதிராமல் டேபிளில் வைத்துவிட்டு லேசான புன்முறுவல் உதிர்த்துச் செல்வாள். அழகான, அமைதியான பெண் என்பதற்கு மேல் சரியாக ஒரு முறைகூட ராம்குமார் அவளைப் பார்த்தது கிடையாது. முதலில் பார்த்த பெண் காபி வைத்துவிட்டுச் செல்லும் காட்சி குறித்து அம்மா சொன்னது இப்போது புரிந்தது. இன்று ராம்குமார் ஒரு தீர்மானம் செய்தான்.

பெரியவர் சில கணங்கள் அமைதியாக இருந்தார். பிறகு “தம்பி... காதல், அது இதுன்னு இறங்காமல் நேரடியாக என்னிடம் கேட்டதற்கு சந்தோஷம். ஆனா அதற்கு முன்னாடி சில விஷயங்கள் சொல்லணும்” என்றார். வெறும் “உம்” கொட்டினான் ராம்குமார்.

“இவ உண்மையில என்னோட வளர்ப்பு மகள். இவளோட அப்பா என்னோட பால்ய சிநேகிதன். இவளோட சின்ன வயசிலேயே அப்பா, அம்மா ரெண்டு பேரும் ஒரு விபத்தில இறந்துட்டாங்க. அன்னயிலிருந்து எங்க பொண்ணாவே இருக்கா. அவளோட மாமா பெங்களூர்ல இருக்கிறார். எங்களோட சம்மதம் கிடச்ச பிறகு அவருக்கு ஆட்சேபனை ஏதும் இருக்காது. இப்ப சொல்லுங்க தம்பி.’’

“ஐயா, உங்க பொண்ணு பேரு…”

“அட பொண்ணு பேருகூடத் தெரியாமலேயே சம்பந்தம் பேச வந்துட்டீங்களே...” கடகடவென்று சிரித்தபடி “கற்பகம்” என்றார்.

“கற்பகமா... விருட்சம்...”

“தம்பி என்ன சொன்னீங்க?”

“ஒண்ணும் இல்ல... கற்பகத்தோட அப்பாவுக்குப் பூர்வீகம் எந்த ஊர்?’’

“கும்பகோணம் பக்கத்துல இஞ்சிக்கொல்லைன்னு ஒரு கிராமம்.”

ராமபத்ரன் ‘சார்...’ என்று நக்கலாகச் சிரிப்பது போல் இருந்தது. பரவாயில்லை. ‘ராமபத்ரன் சொன்னது பலிக்கக் கூடாது’ என்ற வீம்புக்காகக் கற்பகத்தை இழக்க ராம்குமார் தயாராக இல்லை. இதெல்லாம் ஒரு தற்செயலான நிகழ்வுகளே என்று மனதைத் தேற்றிக்கொண்டான்.

அடுத்த முகூர்த்தத்தில் ராம்குமார் - கற்பகம் திருமணம் வடபழனி கோயிலில் எளிமையாக நடைபெற்றது. மதிய சாப்பாட்டுக்கு சரவணபவன் ஹோட்டலில் டோக்கன் கொடுத்தார்கள்.

கற்பகத்துக்கு வளைகாப்பு முடிந்த பிறகு ஒரு நாள் பிறக்கப் போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ராம்குமார் கேட்டபோது அது உங்கள் இஷ்டம் என்றாள்.

“அப்போ பையனா இருந்தா நிகில்... பொண்ணுன்னா நிவேதா... ஓகேவா?” என்றான். கற்பகம் வெறுமனே மையமாகச் சிரித்தாள். நிவேதா என்ற பெயரில் ஏதாவது இனிப்பு இருக்கிறதா என்று கூகுளில் தேடினான். நல்ல வேளை, ஒன்றுமில்லை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் கற்பகத்துக்கு வலி ஏற்பட்டது. உடனே ஒரு உபர் பிடித்து கற்பகத்துடன் மருத்துவமனைக்குக் கிளம்பினான். டாக்ஸியில் ராம்குமார் கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கற்பகம் சொன்னாள். “ஏங்க, நீங்க எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணுங்க.”

“உம்... சொல்லு”

“நமக்குப் பெண் குழந்தை பிறந்தா எங்க பாட்டி பேரதான் வைக்கணும், பையன் பிறந்தா, நீங்க சொன்னீங்களே, நிகிலோ முகிலோ வெச்சுக்கலாம்.”

மனதுக்குள் கற்பகத்தின் பாட்டி பெயர் என்னவாக இருக்கும்? மீனாட்சி, சீதாலட்சுமி என்றெல்லாம் கற்பனை ஓடியது. “சரி, பாட்டி பேர் என்ன?”

“தேன்குழலிங்க.”

“என்னது இது? ஏதோ லாலா கடையில வாங்குற காராசேவ் போல இருக்கே.”

“தேன்குழல் இல்லைங்க. தேன்குழலி, வண்டார்குழலிபோல. நாம தேன்னு கூப்பிடலாம், ஷார்ட்டா... ஸ்வீட்டா...”

“மதுரமான வஸ்து...”

“என்னங்க உளறுறீங்க...”

“ஒண்ணும் இல்ல. அது என்னோட பிரச்னை.” ராமபத்ரன் வெள்ளந்தியாகச் சிரித்தபோது தெரிந்த காவிக் கறை ஏறிய பற்கள் ராம்குமாருக்கு நினைவுக்கு வந்தது.

மறுநாள் விடியலுக்கு முன்பாகவே தேன்குழலி பிறந்தாள். “அவிட்ட நட்சத்திரம்டா. தவிட்டுப் பானையில தங்கம்” என்று சந்தோஷமானாள் ராம்குமாரின் அம்மா. அவன் மனசு மட்டும் படபட என்றது. அடேய்! ராமபத்ரா, எங்க இருக்க நீ?

அதற்குப் பிறகு ஓரிரண்டு முறை சீர்காழி சென்ற ராம்குமார், வைத்தீஸ்வரன் கோயில் பக்கம் விசிட் செய்தான். அங்கு எங்காவது ராமபத்ரன் தென்படுகிறானா என்று கண்கள் அலைபாய்ந்தன. அங்குள்ள நாடி ஜோதிட நிலையங்களின் பெயர்ப் பலகைகளைப் பார்க்கும் போதெல்லாம் ராம்குமாருக்கு ‘தேன்குழலி நாடி ஜோதிட நிலையம்’ என்ற கற்பனை வேறு வந்து பயமுறுத்தியது. ஆனால் எது எப்படியானாலும் ராம்குமாரின் பௌதீக மனசு ‘நடந்தவை எல்லாம் அதிசய நிகழ்வுகள்’ என்று நம்ப மறுத்தது. கோஇன்ஸிடன்ஸ் தியரி, புரொபபிலிட்டி தியரி மற்றும் ஃபிளிப் காய்ன் தியரி என்றெல்லாம் உருட்டிப் புரட்டியது.

நாள்கள் வேகமாக நகர்ந்தன. ராம்குமார் வேலை செய்த கம்பெனி விற்பனை வெகுவாக பாதிப்படைந்து அவனுக்கு அடுத்த புரமோஷன் கிடைக்காமல்போனது.

இந்நிலையில் ஒருநாள் கற்பகத்தின் மாமா அவனை செல்போனில் அழைத்தார். “மாப்பிள்ளை, ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” “சொல்லுங்க மாமா” என்றான்.

“கற்பகம் பேர்ல ஊரில எட்டு ஏக்கர் நஞ்சை நிலம் லீஸ்ல இருக்கு. பெருசா ஒண்ணும் வருமானமில்லை. பார்த்துக்கவும் ஆள் இல்ல. அதனால அதை வித்துட்டு வேற ஏதாவது...”

“மாமா, நீங்களும் கற்பகமும் முடிவெடுக்கலாம்... நான் இதுல...”

“பெங்களூரில் ரெண்டு ஜெர்மன் மெஷினரிஸோட ஒரு மெடிக்கல் எக்யுப்மென்ட் யூனிட் விலைக்கு வந்திருக்கு... அதை வாங்கலாமான்னு கற்பகத்த கேட்டேன்.”

நாடி - சிறுகதை

“சரி...”

“அவ எதை வாங்கினாலும் உங்க பேர்ல ரிஜிஸ்டர் பண்ணணும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா. இந்த வாரம் டாக்குமெண்ட்ஸ் அனுப்பி வைக்கிறேன். சைன் பண்ணி அனுப்புங்க. அப்புறம் கற்பகம் கம்பெனி பெயரை மட்டும் பொண்ணு பேர்ல வைக்கச் சொல்லுறா.”

“மாமா, தேன்குழலின்னா...”

“கொஞ்சம் இங்கிலீஷ்ல யோசியுங்களேன்.”

“ராம்குமாருக்கு சட்டென்று அன்று குழப்பிய ராமபத்ரன் தலைமுடி ஸ்டைல் இப்போது ஞாபகத்துக்கு வந்து “தேன்கூடு தலை...” என்று முணுமுணுத்தான்.

“சரியான பேர், ஹனிகோம்ப் மெடிக்கல் எக்யுப்மென்ட்ஸ், சூப்பர்...” என்றார் மாமா.

தேன்குழலிக்கு ஒன்றரை வயது ஆகும்போது கொரோனா முதல் அலை ஆரம்பம். ராம்குமாரின் கம்பெனி நலிந்து அவன் சம்பளம் பாதியானது. தேன்குழலி ரொம்ப சூட்டிகையாகத்தான் இருந்தாள். ‘தேன்... தேன்...’ என்று எல்லோரும் கொஞ்சினார்கள். ஆனால் ராம்குமாரோ அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான்.

திடீரென்று ஒரு நாள் மாமா பெங்களூரில் இருந்து வீடியோ காலில் பேசினார்.

“மாப்பிள்ளை... நாம வாங்கின பெங்களூர் யூனிட்டில் இருக்கிற ரெண்டு ஜெர்மன் மிஷின்ஸ் ஒரு மெடிக்கல் எக்யுப்மென்ட் பண்ற லைசன்சோட இருந்தது, இல்லையா? அதுக்கு இப்போ வேலை வந்துடுச்சு. கொரோனா அடுத்த அலை வரும்போது உபயோகப்படும் உபகரணம் தான் இந்த கம்பெனில நாம செய்யப் போறோம். ஒரு நாலு மாசத்துக்கு டிமாண்ட் இருக்கும்னு சொல்றாங்க. முப்பதாயிரம் யூனிட்டுக்கான ஆர்டர் கைவசம் இருக்கு. ஒரு யூனிட்டுக்கு லாபம் நானூறு ரூபாய் நிக்கும்.’’

எல்லோரும் வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“நாம அங்க என்ன செய்யப்போறோம்” ராம்குமார் கேட்டான்.

“நுரையீரலுக்கு ரத்தம் எடுத்துச்செல்லும் ஆக்சிஜன் லெவலைக் காட்டுற ஃபிங்கர்டிப்ஸ் பல்ஸ் ஆக்சிமீட்டர்.”

“என்னது மாமா அது... ரொம்பப் பெருசா இருக்குமா?” என்று கற்பகம் கேட்டாள்.

“இல்லம்மா, துணி காயப் போடுற கிளிப்பு போல கொஞ்சம் பெருசா இருக்கும்.”

“அது எதுக்கு மாமா?’’

“பொதுவா அத பல்ஸ் பார்க்கிற மெஷின்னு சொல்லுவாங்க” என்று சொல்லி கொஞ்சம் கழித்து “நாடி பார்க்கிறது” என்றார் மாமா.

அதிர்ச்சியில் உறைந்த ராம்குமாருக்கு ‘பிரசன்னம் பலிக்கும்போது இந்த க்ஷணத்தை நினைச்சுக்கோங்க’ எனறு சொன்ன ராமபத்ரனின் வார்த்தைகள் காதில் ஒலித்தன. இப்போது நினைவில் வந்தது பவ்யமாகத் தலைகுனிந்து தட்சிணை வாங்கிய ராமபத்திரனின் குவிந்த வலது உள்ளங்கை முடிவில் தொடங்கி முழங்கையில் புடைத்து ஓடிய பச்சை நரம்பு நாடி.