Published:Updated:

ஜெயக்கொடி - சிறுகதை

ஜெயக்கொடி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயக்கொடி - சிறுகதை

- ஸ்ரீதர் பாரதி; ஓவியங்கள்: ஜீவா

தை பிறந்துவிட்டது.

தை பிறந்தால் வழி பிறக்கிறதோ இல்லையோ கீழக்குடிக்கு வலி பிறந்துவிடும். போன வருசம் ஓஞ்சு கெடுத்த மழை பேஞ்சு கொடுத்துட்டுப் போயிருச்சு இந்த வருசம்.

கம்மா நெறைஞ்சு காடுகரையெல்லாம் பச்சப்பசேல்னு சொலிச்சுக்கெடக்கு. காளி அம்மனுக்குக் காப்புக்கட்டி, சல்லிக்கட்டு நடத்தணும். ஊர்மந்தையில சனம் கூடி நின்னது. காளி ஆத்தா கண்ணத் தொறந்துட்டா. முனியாண்டி மனசுவச்சுட்டான். கெழங்கட்டைக பேசிக்கிடந்ததுக. போனவருசம் காஞ்சி கெடந்ததால சல்லிக்கட்டு நடக்கல.

இந்த வருசம் நடத்திப்புடலாம்னு பார்த்தா கோர்ட்டுல கேஸ் நடக்குது. காளைகள வதை பண்ணுறதா பிராது. தீர்ப்பு வராம சல்லிக்கட்டு நடத்த முடியாது அப்படின்னு புதுப்பிரச்சினை.

இன்னிக்கித்தான் தீர்ப்பு. ஊரே அதுக்குத்தான் சோறு தண்ணியில்லாம மந்தையில சேர்ந்து நிக்குது. முனியாண்டி கோயில் முன்னுக்க திட்டிவாசல் வெறிச்சோடிக் கிடந்தது. எப்படியாப்பட்ட வீரங்களைக் கண்டது இந்தக்களம்?

எப்படியாப்பட்ட காளைகளைக் கண்டது இந்தத் திட்டி வாசல்?

காளியாத்தா கோயில் மந்தைக்கல்லில் ஒருக்களிச்சுப் படுத்திருந்தார் ஜெயக்கொடி பெரியாம்பளை.

அறுபது வயசு கடந்தாலும் உருகாத உடம்பு. கொல்லம் பட்டறையில அடிச்சி எடுத்த அருவா மாதிரி தும்பப்பூவா நரை. ஐயனார்கணக்கா மீசை. சொட்டை விழுகாத சுருட்டை முடி, வெள்ளை வேட்டி, மேலுக்குச் சட்டையில்லை, துண்டு போர்த்துனமானைக்கு ஒரு கைய தலைக்கு வச்சுப் படுத்திருந்தார். வலப்பக்க விலாவில் ஒரு பெரிய தழும்பு. கூடப்பழகுன கூட்டாளியில ஒவ்வொரு ஆளா டிக்கெட் வாங்கிட்டாய்ங்க.

மந்தையே மாட்டுத்தாவணியா இருந்தது. சல்லிக்கட்டு இந்த வருசம் நடக்குமா, நடக்காதா? சலசலத்துக் கிடந்தது ஊர்.

வேப்பமரத்து உச்சிக்கிளையை வெறித்துக் கிடந்த பெரியாம்பளை வலப்பக்கத் தழும்பைத் தடவிப்பார்த்தார். பழைய நெனைப்பெல்லாம் வைகை நதியாய்ப் பெருகி வந்தது.

ஜெயக்கொடி - சிறுகதை

கீழக்குடி சல்லிக்கட்டுன்னா மதுரை ஜில்லாவுல இருக்குற காளைக்காரங்களுக்கும், மாடுபுடி வீரர்களுக்கும் தனி குஷி. காளியம்மனுக்குக் காப்புக்கட்டித் திருவிழா சாட்டிப்புட்டாலே எல்லாம் எப்ப எப்பன்னு இருப்பாங்க. ஊர்ல பெரியமனுசங்க சேர்ந்து சுத்துப்பட்டுல இருக்குற காளைக்காரங்களுக்கும், மாடுபுடி வீரங்களுக்கும் பாக்குவச்சி அழைப்பாக, கம்மாக்கரை, தென்னந்தோப்பு, வயக்காடு எல்லா இடத்துலயும் காளைக பயிற்சி நடக்கும். காங்கேயம், புலிக்குளம், உம்பளச்சேரி காளைகள புள்ளைக மாதிரி போஷாக்கா வளர்த்து சல்லிக்கட்டே பொழப்பாத் திரிவாக சனங்க. பெரிய மனுசங்களுக்கு காளை வளர்க்குறது இருக்குறதுலேயே பெரிய கௌரவம். சல்லிக்கட்டுக்குள்ள காளையை எறக்குறப்ப கெடைக்குற மருவாதி இருக்கே, அது மாதிரி மருவாதி ஜென்மத்துல எங்கயும் கெடைக்காது. ‘மேற்படியார் காளை வருது’ன்னு திட்டிவாசல்ல சாட்டும்போது காளைக்கார பெரிய மனுசங்களுக்கு கிரீடத்தத் தலையில கவுத்த மாதிரி கின்னுன்னு இருக்கும். ஒரு கெத்து.

அதுலயும் எறக்கும் காளை பிடிபடாம வந்துட்டா அந்த வருசம்பூரா அதைச் சொல்லியே பீத்திக்கிருவாங்க. முனியாண்டி கோயில் முன்னாடிதான் திட்டி வாசல். முனியாண்டி முன்னுக்க சல்லிக்கட்டு நடந்தா கெட்டது நடக்காது அப்படின்னு ஒரு நம்பிக்கை.

கீழக்குடி சல்லிக்கட்டுக்கு சுத்துப்பட்டுல இருக்குற மேலக்குடி, சாக்கிலிபட்டி, கரடிக்கல், தனக்கன்குளம், விளாச்சேரி, ஓணாக்கல், திருப்பரங்குன்றம், தோப்பூர், அவனியாபுரம், செக்கானூரணி, நாகமலை புதுக்கோட்டைனு எல்லா ஊரிலிருந்தும் காளைகளும், பிடிகாரங்களும் வந்து குவிஞ்சுடுவாங்க. அவங்களைவிடவும் சல்லிக்கட்டைப் பார்க்கறதுக்கு விடியமுன்னமே ஆளுக வந்து மொச்சுடும். சாப்பாட்டுக்கடையிலேர்ந்து சாராயக்கடை வரைக்கும் யாவாரம் களைகட்டும். சாராயம்னா சாராயம் தேன்கணக்கா இருக்கும். வாழைப்பழம், பேட்டரியெல்லாம் போட்டு கீழக்குடிக்கு முன்ன இருக்கும் மொட்ட மலையிலேயே அடுப்பு மூட்டிக் காய்ச்சி வடிகட்டி சீசாவுல அடைச்சி சிறப்பா வந்து சேரும் சரக்கு. காய்ச்சுற வேலையும், கிளாசுல ஊத்துற வேலையும்தான் ஆம்பிளைகளுக்கு. காச கணக்குப் பார்த்து வாங்குற வேலை பொம்பளைகளுக்கு. மொச்சப்பயறு, பன்னிக்கறி, கோழிக்கறி, ஊறுகாய், சாராயத்துக்குத் தோதா காரஞ்சாரமா சாக்னாக்கடையும் களைகட்டும். காய்ச்சிரது மொட்டமலையில், விக்கிறது ஆளரவமில்லாத ஒத்தவீட்டுப் பொட்டலுக்குள்ள... ஆளுக அதிகம் வந்து போகாத ஒத்த வீட்டுக்குப் போகிற ஆளைப் பார்த்தாலே கண்டுக்கிறலாம் குடிகார மட்டைன்னு. சாராயத்துல பாதி போதைன்னா, சாக்னாக்கடை பொம்பளைக கண்ணுல மீதி போதை. அதுக்குனே வரும் ஒரு கூட்டம். மாடுபுடிக்கிற ஆளுக மட்டுந்தான் குடிக்கமாட்டாய்ங்க. அதுலயும் ஒண்ணு ரெண்டு குடிக்கிற ஆளு உண்டு. மத்தபடி மாடு கொண்டு வர ஆளுக, கூட வர ஆளுக, வேடிக்கை பார்க்க வர ஆளுக, எல்லாம் நெறை போதைதான்.

அவுக அவுக ஊர்லேருந்து காளையோட புறப்படும்போது காளைக்கு மாலை போட்டு சோடிச்சி கொட்டடிச்சி வர்றத பார்க்கவே ரெண்டு கண்ணு போதாது. காளையப் புடிக்கற மனுசங்களுக்குப் பேரு இருக்கிற மாதிரி காளைகளுக்கும் பேருண்டு. காளையப் புடிக்கிறவனுக்குக் கையில தெம்புன்னா, காளைகளுக்குக் கொம்புல தெம்பு. சல்லிக்கட்டுன்னு தேதி முடிவாயிருச்சுன்னா, காளைக்காரங்களும் மாடுபிடிகாரங்களும் சுத்தபத்தமா இருப்பாக. வளக்குற காளையோடு சேர்ந்து, காளை வளர்க்குற குடும்பங்களுக்கு ரெண்டு குலசாமி. குலசாமிக்கு ஒரு குறையும் வரக்கூடாதுன்னு கவனமா இருப்பாக. தூசிபட்டாலும் துடிச்சுப்போவாக. காளைகளை வளர்த்துக் களத்துக்குக் கொண்டு வர்றது பெரிய மனுசங்களுக்கு கவுரதின்னா, களத்துக்கு வர்ற காளைகளை அணைஞ்சு பரிசக் கைப்பத்துறது இளந்தாரிகளுக்கு கவுரதி.

சல்லிக்கட்டு எங்கன நடக்குது, எந்த எந்த ஊருக்காளைக எறங்குது, எறங்குற காளை எப்படியாப்பட்ட காளை, எல்லாம் அத்துப்படியா வச்சிருப்பாய்ங்க எளவட்டப்பயலுக.

சல்லிக்கட்டு அசலூர்ல நடந்தா ஆலாப் பறப்பாய்ங்க. அதுவே உள்ளூர்ல நடந்தா காத்தாப் பறப்பாய்ங்க. காளைகளை அணையுற சாக்குல கன்னிகளையும் மடக்கிப் புடுவாய்ங்க. மாட்டை அணைஞ்சிட்டு வா உன்னைய கட்டிக்கிறேன்னு சொன்ன பொண்ணுகளும் உண்டு. சல்லிக்கட்டுல மாட்டை அணைஞ்சிட்டு வா பொண்ணு தர்றேன்னு சொன்ன ஆம்பளைகளும் உண்டு. சல்லிக்கட்டுங்கிறது வெறும் விளையாட்டு மட்டுமே இல்லை.

அது வீரம், அது வெற்றி, அது மகிழ்ச்சி, அது வைராக்கியம், அது வாழ்க்கை.

ஜெயக்கொடி, பரமன், கோட்டைக்காளை, வயக்காட்டுச் சாமி எல்லாம் ஒரு கூட்டாளிக. சுத்துப்பட்டுல எங்கன சல்லிக்கட்டு நடந்தாலும் மொத ஆளா நிப்பாய்ங்க. போற எடமெல்லாம் காளைகள அணைஞ்சு பரிசுகளையும் தட்டிக்கிட்டு வந்துருவாய்ங்க.

போனவட்டம் அப்படித்தான் மேலக்குடி சல்லிக்கட்டுல பிரசிடண்டு காளைய அணைஞ்சு மரியாதைய வாங்கிட்டு வெளியேறி வர்றப்ப ஊர்க்காரங்களோட பஞ்சாயத்து ஆயிப்போச்சு. நாலுபேரும் சேர்ந்து பிரசிடண்டு ஆளுகளோடு மல்லுக்கட்டிட்டு ஓடியாந்துட்டாய்ங்க. அவிங்க அரை போதையில் இருந்ததால உட்டுட்டாய்ங்க, இல்லைன்னா ஏழ்ரைதான். மேலக்குடி பிரசிடண்டு ஒரு மாதிரியான ஆளு, எம்.ஜி.ஆர் படத்துல வர்ற நம்பியார்கணக்கா. காளை லேசுல பிடிபடாது. அப்படிப் பிடிபட்டுப் போனா ஒண்ணு, காளைய காலி பண்ணிருவாரு; இல்லை, காளைய அணைஞ்வசன காலி பண்ணிருவாரு.

பரம்பரை பரம்பரையா நல்ல செல்வாக்கு. பங்களா மாதிரி வீடு. உள்ளூர்ல மட்டுமில்லாம உசிலம்பட்டி, சோழவந்தான்னு எல்லா ஊர்லயும் தோப்பு, துரவு. சல்லிக்கட்டுக் காளை வளர்க்குறது, குதிரை வளர்க்குறது, சீட்டாடறது, கட்டப்பஞ்சாயத்து பண்ணுறது, இதுதான் அன்றாடப் பொழப்பு. கூடவே பத்து அடியாளுக எந்நேரமும் இருப்பாய்ங்க, தனத்துக்கோ தாட்டியத்துக்கோ பஞ்சமில்லை. போனவட்டம் மேலக்குடி ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட களங்கத்தை இந்த வட்டம் கீழக்குடி ஜல்லிக்கட்டில் துடைக்க நினைத்தார் மேலக்குடி பிரசிடண்டு. அதுக்கான வேலைகள் ஜரூரா நடந்தது. கீழக்குடி ஜல்லிக்கட்டில் களமிறங்கப்போகும் தனது புதிய காளை காங்கேயம் கருப்பனை அணைகிற வீரனுக்குத் தங்கக்காசு, பட்டு வேட்டி சட்டை, ரூவா ரெண்டாயிரம் பரிசுன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டுனாங்க. `உயிருக்கு பயந்தவர்கள் ஓடிப்போங்க, காளையைத் தொடத் துணிந்தவர்கள் வீட்டில் சொல்லிட்டு வாங்க’ என்று விளம்பரம் வேறு.

வாடிப்பட்டிக் கொட்டுச்சத்தத்தோடு வந்து இறங்கியது காங்கேயம் கருப்பன். முனியாண்டிக்கு தீபாராதனை காட்டி காளையோடு வந்தவுகளுக்கு மரியாதை பண்ணி வேட்டி துண்டு போர்த்தி, காளை அணையிற வீரங்களுக்கு மரியாதை செஞ்சு சல்லிக்கட்டு ஆரம்பிச்சிருச்சு, திருமங்கலம் மொக்கமாயன்தான் மைக்செட். நேத்து சாயங்காலத்திலேர்ந்து ஒரே பாட்டா இருந்துச்சு.

‘அண்ணாச்சி, வேட்டி கட்டும் ஆம்பளையா நீங்க?’, ‘யாராச்சும் ரோசமிருந்தா மாட்டுப்பக்கம் போங்க...’ சுத்துப்பட்டுல எங்க ஜல்லிக்கட்டு நடந்தாலும் தும்மக்குண்டு துரைச்சாமிதான் வர்ணனை. ஏத்த எறக்கமா நகைச்சுவையா வீராவேசமா கலந்துகட்டிப் பேசுறதுல மன்னன்.

`அஞ்சு நாடும் பதினெட்டுப்பட்டியும் மெச்சுகிற கீழக்குடி சல்லிக்கட்டுக்கு வருகை தந்துள்ள பெரியவர்களே, நாட்டாண்மைக் காரர்களே, காளையோடு வந்திருக்கிற மிராசுகளே, காளைகளை அணையக் காத்திருக்கும் சிங்கங்களே, உங்கள் அனைவரையும் கீழக்குடி சல்லிக்கட்டு விழாக்கமிட்டி சார்பாக வருக வருகவென வரவேற்கிறோம்.

மொத மாடு முனியாண்டி கோயில்காளை வருது... அடுத்து ஊர்ப் பெரிய தலைக்கட்டு அம்பலக்காரர் காளை, அடுத்து மணியக்காரர் ராமசாமி நாயக்கர் காளை, அடுத்தாப்ல மணிக்கோனார் காளை. நாலு காளைகளும் சாமி மாடு... தொட்டுக் கும்புட்டு விட்ரணும்... யாரும் புடிக்கக் கூடாது!’

சாமி மாடுகள் வந்த வேகத்தில் ஓடின. ‘அடுத்து களமிறங்குற மாடு தனக்கன்குளம் விருமாண்டித் தேவர் மாடு... புடிக்கிற ஆளுக்கு சைக்கிளு... புடிக்கிற ஆளு புடிச்சிக்கோ.’

கோட்டைக்காளையும் வயக்காட்டுச் சாமியும் நெறை போதை. களத்துல எறங்கல. ஓரமா நின்னுகிட்டாய்ங்க. ஜெயக்கொடியும் பரமனும் களத்துக்குள்ள வேட்டிய வரிஞ்சுகட்டி மேலுக்கு முண்டா பனியனோடு மாடணையத் தோதா நின்னாங்க. ஜெயக்கொடி கண்ணெல்லாம் மேலக்குடி பிரசிடண்டு காளைய நோக்கியே இருந்தது. தனக்கன்குளம் விருமாண்டித் தேவர் காளை போக்குக்காட்டிட்டு ஓடிப்போச்சு.

ஜெயக்கொடி - சிறுகதை

`அடுத்த காளை... விளாச்சேரி வேல்சாமி சேர்வை வளர்க்குற வெள்ளைக்காளை. புடிச்சா ஐந்நூறு ரூவா, வெள்ளி விளக்கு... போனவாட்டி சாக்கிலிபட்டி சல்லிக்கட்டுல ஒரு ஆள் கொடல உருவி மாலைபோட்ட காளை... பார்த்து சூதானமாப் புடிங்கப்பா.’

பரமன், காளையின் போக்கிலேயே போய் கொம்புல ஒரு கை... திமிலுல ஒரு கை... தரதரன்னு இழுத்துக்கிட்டுப் போயி ஒரு எக்கு எக்கித் தூக்கி எறிஞ்சது. ஓடுற மாதிரி ஓடி திருப்பிக்கிட்டு வந்து முட்டுது... பரமன் அப்டியே படுத்துக்கிட்டான். காளை நின்னு விளையாடுற காளை. போயிப் போயி சுத்தி வருது. `புடிடா... தொட்டுப் பார்றா என்னை...’ மனுசன் மாதிரியே மல்லுக்கு நிக்குது. மறுபடியும் திமிலுல ஒரு கை... கொம்புல ஒரு கை... இந்த முறையும் ஒரு எக்கு. இந்த வட்டம் புடி நழுவிப்போச்சு. குத்துன்னா குத்து கொடலு தெறிச்சிப்போற மாதிரி ஒரு குத்து. சுருண்டுட்டான் பரமன்.

நாலு ஆளுக உள்ள வந்து அப்டியே தூக்கிக்கிட்டு வெளிய போனாங்க.

`ஏப்பா... மாடு அணையற எளந்தாரிக சூதானமா இருங்க. பின்னாடி குத்திப்புட்டா பரவால்ல... முன்னாடி பட்டாக்கா அப்புறம் சாமியாரா போகவேண்டியதுதான்.’

`அடுத்து எறங்கப் போற காளை... மேலக்குடி பிரசிடண்டு வளக்குற காங்கேயம் கருப்பன்... புடிக்கிற ஆளுக்கு தங்கக்காசு, பட்டுவேட்டி சட்டை, ரூவா ரெண்டாயிரம்.’ மேலக்குடி பிரசிடண்டு பெரியமனுசங்களோடு நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தார்.

வேடிக்கை பார்க்குற கூட்டம் ஜேஜேன்னு நிக்குது. ஒரு கெழங்கட்டைகூட இல்ல. எல்லாம் எளந்தாரிப் பயலுக.

சீட்டிச்சத்தம்.

`விடாத புடி... விடாத புடி...’

`அப்படித்தான்... அப்படித்தான்...’

`இழுத்துப் புடி... விட்றாத...’ ஒரே கூப்பாடு.

திட்டிவாசல்லேர்ந்து துள்ளிக்கிட்டு வருது கருப்பன். கொம்புல பூவச் சுத்திக்கிட்டு நெத்தியில தங்கக்காசோட, புது மாப்பிளை கணக்கா லட்சணம். இந்தச் சல்லிக்கட்டுக்குன்னே தயார் பண்ணுன காளை.

போன வட்டம் மேலக்குடி சல்லிக்கட்டுல புடிபட்ட மயிலைய மறுநாளே சோலிய முடிச்சுப்புட்டாரு பிரசிடண்டு. மீனுக்குக் காத்திருந்த கொக்குகணக்கா பிரசிடண்டு காளைக்காகவே காத்திருந்த ஜெயக்கொடி கையில மண்ணள்ளித் தேய்ச்சிக்கிட்டு நிக்கிறான். மேலக்குடி பிரசிடண்டு பார்வை கருப்பன் மேலயே இருந்தது. திட்டிவாசல் பனந்துண்டத்துக்கு மேலயே எவ்வி வருது கருப்பன். கொம்புல கிடந்த ரோசாப் பூவெல்லாம் காத்துல செதறுது.

`வாலக்கொண்டு அடிச்சாலே வலி தாளமுடியாது. திமிலு சும்மா மகுடம் மாதிரி. கொம்பு ரெண்டும் குத்திக் கிழிக்கவே தயாரிச்ச ஆயுதம். எவன்டா வர்றது... வாங்கடா... ஒத்தைக்கு ஒத்தை பார்ப்பமா?’ வாயில்லா சீவன் பேசாமப் பேசுது. கூட்டம் உற்சாகமா சீட்டியடிக்குது. கோட்டைக்காளைக்கும், வயக்காட்டுச்சாமிக்கும் என்ன நடக்குது, ஏது நடக்குதுன்னு ஒண்ணும் புரியல. மனசு பூரா சந்தோசம். கால் தரையில பாவல: மிதக்குறாய்ங்க. கோட்டைக்காளை சிரிச்சுக்கிட்டே இருக்கான். வயக்காட்டுச்சாமி வேட்டிய அவுத்துத் தலையில உருமா கட்டிக்கிட்டு சீட்டியடிச்சுக்கிட்டு நிக்கிறான்.

பரமன் வாங்குன குத்துல இன்னும் சூதானமாயிட்டான் ஜெயக்கொடி. வாசல்ல மறிச்ச ஒருத்தன வீசிட்டு, களத்துல ஒரு சுத்து சுத்தி வந்தது கருப்பன்.

`ஏப்பா, பாக்கத்தான் பம்மிநிக்குது. சுத்தியடிச்சா சூறாவளி... அந்தத் தங்கக்காசும், பட்டுவேட்டியும் ரூவா ரெண்டாயிரமும் யாருக்குக் கொடுத்து வச்சிருக்கோ?’

பம்மி நின்ன கருப்பனோட திமில பாய்ஞ்சு புடிச்சான் ஜெயக்கொடி. அம்புட்டுதான், அருள் வந்த ஆள் மாதிரி தன்னால ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதிக்குது கருப்பன். விட்டம்னாப் போச்சுன்னு வலுக்கொண்ட மட்டும் ரெண்டு கையையும் திமிலுல குடுத்து உடும்பாட்டம் புடிச்சி அணைஞ்சுகிட்டான் ஜெயக்கொடி. கூட்டத்துல விசில் பறக்குது. கருப்பனா, ஜெயக்கொடியா? திமிலப் புடிச்சவனைத் தூக்கிக்கிட்டுத் துள்ளுது, உதறுது, ஓடுது கருப்பன். பிடிய விடல ஜெயக்கொடி. காளைக்குக் கொம்புல தெம்பு; காளைய அணையறவனுக்குக் கையில தெம்பு.

`ஆகா... ஆகா... அருமையா...

அருமையா ஆட்டம் போடுற காளையும் வீரம்...

அணையுற காளையும் வீரம்...

யாருய்யா அந்தப் பய...’

`கீழக்குடி... செயக்கொடி...’ கூட்டத்திலேர்ந்து பதில் வருது.

பிரசிடண்டு மூஞ்சியெல்லாம் கரிபூசுனாப்புல ஆயிப்போச்சு.

`செயக்கொடி... செயக்கொடி...’

அந்தப் பேரு மட்டும் காதுக்குள்ள குர்ருன்னு கேட்டுட்டே இருக்கு. சித்த நேரந்தான்... கருப்பன் ஜெயக்கொடி கைக்குள்ள அடங்கிருச்சு.

அஞ்சாறு பேரு ஜெயக்கொடிய தோள்மேல தூக்கி வச்சுக்கிட்டு குதிக்கிறாய்ங்க. அந்தத் தங்கக் காசும், ரூவா ரெண்டாயிரமும், பட்டுவேட்டி சட்டையும் கீழக்குடிக்காரனுக்குத்தான்யா... எளவட்டமெல்லாம் தன்னால பம்பரமா குதியாளம் போடுறாய்ங்க...

பிரசிடண்டு ஆளுக ரெண்டு பேரு கருப்பனுக்குக் கயிறுபோட்டுப் பிடிச்சிக்கிட்டுப் போறாய்ங்க. தங்கக் காசு, ரெண்டாயிரம் ரூவாப்பணம், பட்டு வேட்டி சட்டையோட துள்ளிக்கிட்டு வெளியேறினான் ஜெயக்கொடி.

`அடுத்து... நம்ம சேடபட்டி சிங்கக்குட்டி எஸ்.எஸ்.ஆர் காளை முத்தழகு வருதப்பா...’ தும்மக்குண்டு துரைச்சாமி வர்ணிக்கும்போதே உள்ளே விசில் பறக்குது. வெளியே அலறல் கேக்குது. ஜெயக்கொடி வலப்பக்க விலாவுல செருகிநிக்குது சூரிக்கத்தி. யப்பே யாத்தேன்னு ஆளுக தூக்கிட்டு ஓடுறாக.

பள்ளிக்கூடம் விடுற நேரமிருக்கும், பைய எந்திரிச்சு உட்கார்ந்தார் ஜெயக்கொடி பெரியாம்பளை. பக்கத்துல ஒரு குரல், ``ஜல்லிக்கட்டு நடத்தலாம்னு தீர்ப்பாயிப் போச்சப்பா.”

கீழக்குடி விலக்கில் பட்டாசு வெடிக்குற சத்தம் பலமாய்க் கேட்டது. பெரியாம்பளை முகத்தில் மாமாங்கத்திற்குப் பிறகு அப்படியொரு மலர்ச்சி..!