
- எஸ்.வி.வேணுகோபாலன்
செவந்தியம்மன் கோயில் வாசலில் ஒரு ஜோடி செருப்புகள். அதிகாலையில் வழக்கம் போல் கோயிலைக் கூட்டிப் பெருக்கிக் கழுவிவிட வந்த மீனாவுக்கு இது புதிதாக இருந்தது. கோயில் கதவு இரவில் பூட்டிக் கிடக்கும். அழகு தாத்தாவிடம் போய் சாவிகள் வாங்கி வந்து திறந்து பெருக்கித் தூய்மைப்படுத்தி அடுத்தடுத்த வேலைகளைக் கோயிலில் நகர்த்தும் முதல் பணியாள் அவள்.
முதல் நாள் இரவு வந்து வழிபட்டுப் போனவர்கள் மறந்து போயிருக்கலாம். யார் மறந்துபோய்விட்ட செருப்புகள்? மீண்டும் உற்றுப் பார்த்தாள். ஆண்கள் அணியும் காலணி. கறுப்பு வாரில் பின்னல் போட்ட நவீன வகைப்பட்ட செருப்பு, அத்தனை புதிதில்லை, ஆறேழு மாதங்களாவது உழைத்திருந்த சுவடு தெரிந்தது. இந்தச் சிற்றூரில் செருப்பை மறந்து போகுமளவு யார் இருப்பார்?
கட்டைத் துடைப்பத்தால் கோயில் வெளிப் பிராகாரம் எல்லாம் தீரப் பெருக்கினாள் மீனா. அவளுடைய அம்மாவும் பாட்டியும் பெருக்கிய அதே கோயில். அதே செவந்தியம்மா.
யாருடைய செருப்பாக இருக்கும்... எப்படியும் விட்டுவிட்டுப் போனவர்களுக்கு நினைப்பு வந்தால் ஓடோடி வந்து எடுத்துக்கொண்டு போவார்கள். இதற்கு என்ன இத்தனை யோசனை என்று நினைத்தபடியே கோயில் உள் பிராகாரம் முழுக்கத் தூய்மை செய்துகொண்டே வந்தவள் நவகிரக சன்னதி அருகே கம்பி கிராதிகளுக்கு வெளியே பார்க்கையில் அதிர்ந்துபோய், ‘ஐயோ’ என்று அலறினாள். கையிலிருந்த துடைப்பம், தண்ணீர் வாளி, கோலப்பொடி எல்லாம் உதறிப் போட்டுவிட்டு வெளியே வந்தவள். வீட்டைப் பார்க்க ஓடினாள்.

கோயில் வாசலில் அந்தக் கறுப்புச் செருப்புகள் அப்படியே இருக்க, அவற்றை உதறிப் போட்டுவிட்டுப் போன கால்களைத்தான் மீனா பார்த்து அலறியது. அந்தச் செருப்புகளுக்கு உரிய மனிதரின் உடல், கோயில் சுவருக்கு எதிர்ப்புறத்தில் இன்னும் மேல் பூச்சு பூசாத, வேலைகள் முடியாத புதிய கட்டடத்தின் சாரங்களில்தான் தொங்கிக்கொண்டிருந்தது. லோகநாதன் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டுவிட்டான்.
பெற்றோருக்கு ஒற்றைக் குழந்தை லோகநாதன். டிப்ளோமா படிப்பு வரை படிக்க வைத்தார் தந்தை. சொந்த வீடு, கொஞ்சம் நிலபுலம், பத்திருபது பவுன் நகை என்று வசதிக்குக் குறைவு இல்லை. அத்தை மகளே மனைவியாக வாய்த்தாள். அப்பா வழியிலேயே லோகநாதனும் வட்டிக்கு விட்டுப் பிழைப்பைத் தேற்றிக் கொள்வதில் ருசி கண்டதால் வேலைக்குப் போக வேண்டும் என்ற உந்துதல் ஒருபோதும் இருந்ததில்லை.
பக்கத்து டவுனுக்குப் பெண்டாட்டியோடு சந்தோஷமாக சினிமா போய்விட்டு வருவான். கோயில்களுக்குப் போவது அவனுக்குச் சிறு வயதிலிருந்தே மிகவும் பிடித்தமான விஷயம். ஆண்டுக்கு இரண்டு தடவை திருப்பதி போய்விட்டு வந்துவிட வேண்டும்.
ஊரில் பெரிய நட்பு வட்டமில்லை. சைக்கிள் கடை மணிதான் ஓரளவு நெருக்க நண்பன். அவனும் இவனை அநியாயத்திற்குக் கிண்டல் செய்துகொண்டிருப்பான். அவன் கடையிலிருந்துதான் லோகநாதன் சைக்கிள் எடுத்துக்கொண்டு வட்டி வசூல் செய்யப் போய் வருவான்.
``இருக்கற காசுக்கு கருமாந்தரம் பிடிச்சவன் ஒரு வண்டி வாங்கி ஓட்டக் கூடாதா... ஏண்டா என் மானத்தையும் சேத்து வாங்கற?’’ என்று மணி கேட்கும்போது உதடுகள் பிரியாது ஒரு வசீகரப் புன்னகையைப் பரிசாக்குவான் லோகநாதன். அவன் மூத்த மகன் அதுபோலவே சிரிப்பான். அவனுக்கு நான்கரை வயது இருக்கக் கூடும். அடுத்தது பெண் குழந்தை, அவளுக்கு இரண்டு வயது. பேரன் பேத்தி பார்த்த பூரிப்பிலேயே போய்ச் சேர்ந்தனர் வீட்டுப் பெரியவர்கள். லோகநாதன் இப்படி இளவயதில் தன்னை அழித்துக்கொண்ட கொடுமை பார்க்குமுன் பயணப்பட்டுவிட்ட பாக்கியசாலிகள்.
மீனா ஒரு பக்கம் நிலைகொள்ளாமல் தனது அம்மாவிடம் சேதியைச் சொல்ல ஓடும்போதே, கூட்டுறவுப் பால் சொசைட்டி அருள் குமார் கோயில் பக்கம் வந்தவர் பார்த்துப் பதறிவிட்டார். அவர் எடுத்த பெருங்குரலில், அக்கம்பக்கத்து ஆட்கள் வீடுகளில் இருந்து வாரிச்சுருட்டிக் கொண்டு வந்தவர்கள் அதிர்ந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

``பாத்துக்கினே நின்னா என்னாது இது... மொதல்ல அவன் வூட்ல தகவல் கொடுங்கடா. இவன் எப்போ எயுந்து வந்தானோ... இந்த வூட்ல எதுக்கு வந்து தொங்கினானோ. என்னா கேடுகாலம்... நாசமாப் போறவன், இப்படியா அவள நிர்கதியா உட்டுட்டுப் போவான்?’’ என்றார் அருள் குமார்.
அந்தப் புதிய கட்டடத்திற்குப் பக்கத்திலேயே சின்ன சந்து ஒன்று குறுக்கே இணையாக வரும் தெருக்களை அறுத்துக்கொண்டு போகும். வாலிபன் தாமோதரன் அந்தச் சந்து வழியே ஓடோடிப் போய், லோகநாதன் வீட்டை அடைந்து கொடுங்கரமாகக் கொண்டு கதவை ஓங்கித் தட்டியபடி, `கமலாக்கா... கதவைத் தொற... கமலாக்கா...’ என்று கத்திக்கொண்டே இருந்தான்.
நடுவீட்டில் குழந்தைகளோடு படுத்திருந்தவள் என்னவோ ஏதோ என்று எழுந்து வந்து கதவை உள்பக்கத்தில் இருந்து திறக்கையில்தான் கதவு தாள் போடப்படாமலிருந்தது தெரிந்தது. `அதானே... லோகநாதன் சும்மா இழுத்துச் சாத்திட்டு வெளியே வந்திருக்கணும்... ஐயோ, இவ கிட்ட எப்படி விசயத்தச் சொல்ல!' என்று திணறியபடி நின்றான்.
``கமலாக்கா, மாமா நம்மள ஏமாத்திட்டுப் போயிட்டாருக்கா...’’ என்று பெருங்குரலெடுத்துக் கதறி அழவும், ``இன்னாடா சொல்ற தாமு...எங்கடா மாமா?’’ என்று புரிந்தும் புரியாமலும் அவனைப் பிடித்து உலுக்கிக் கேட்கும்போதே அவளுக்கும் அழுகை பெருக்கெடுத்தது. சத்தத்தைக் கேட்டு உள்ளிருந்து வந்த குழந்தைகள் இரண்டும் அவள் கால்களைக் கட்டிக்கொண்டு என்னவோ ஏதோ என்று விசும்பத் தொடங்கின.
``ஐயய்யோ, மோசம் போயிட்டேனே...என்னாச்சு அவருக்கு... எங்கே... என் மாமன் எங்கே... மாமா...’’ என்று கமலா உடைந்து கதற ஆரம்பித்தாள். வாசல் நிலைப்படியில் அப்படியே அமர்ந்து பிள்ளைகளைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தவள், திடீர் என்று எழுந்து தலையை இழுத்து முடிந்துகொண்டு, வீதிக்கு வந்து இடப்புறம் வலப்புறம் பார்த்து, ``எங்கே... எம் மாமன் எங்கே?’’ என்று ஓட ஆரம்பிக்க, அதற்குள் அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள் சூழ்ந்துகொண்டு அவளைப் படாத பாடுபட்டு இழுத்துப் பிடித்து அழைத்து வந்து அவள் வீட்டுத் திண்ணை மேல் உட்கார வைத்தனர்.
அருகே வந்து நின்ற ஆண்களில் ஒருவர், ``தே... எதுக்கு அவளாண்ட மல்லுக் கொடுத்துக்கின்னு... கோயிலாண்ட கூட்டிக்கினு போய்க் காட்டிடுங்க, அவன் பண்ணுன காரியத்த'’ என்றார்.
``ச்சே... ச்சே... இன்னா பேச்சு இது... காலத்துக்கும் கண் முன்னால வந்து நிக்காதா, தாங்குவாளா பொம்பிள...’’ என்று வாயடைத்தார் மற்றொருவர்.
கமலாவுக்கு ஒரு கிரகமும் புரியாமலே அழுது அரற்றிக்கொண்டிருந்தாள். ``ஐயோ... யாரும் என்ன ஏதுன்னு சொல்ல மாட்டீங்களா, டேய் கண்ணுங்களா... உங்க அப்பன பத்தித்தாண்டா பேசிக்கிறாங்க... ஐயோ என் கடவுளே, அவருக்கு என்ன ஆச்சுன்னு சொல்லலியே...’’ என்று மீண்டும் அரற்ற ஆரம்பித்தாள்.
`அந்தக் கோராமைய எப்படி இவகிட்ட சொல்ல' என்று அங்கலாய்த்தபடி அவளருகே அமர்ந்து ஆறுதல்படுத்த ஆரம்பித்தனர் பெண்கள். கமலாவுக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்து மயக்கம் போட்டு விழப் போக, யாரோ கன்னத்தில் தட்டி, ‘`கண்ணைத் திற... ஏ கமலா... இந்தா, கண்ணைத் திற... இந்தா, தண்ணிய குடி’' என்று வற்புறுத்தித் தண்ணீர் குடிக்க வைத்தார்கள். இப்போது அவள் மீண்டும் பிள்ளைகளைக் கட்டிக்கொண்டு அழலானாள்.

அங்கே செவந்தியம்மன் கோயில் கதவை இழுத்துப் பூட்டிவிட்டனர். பிணத்தை எடுக்கிற வரை கோயில் திறப்பு கிடையாது. மீனா மீண்டும் அந்தப் பக்கம் வரவே இல்லை. அவளுடைய அம்மாதான் ஓடி வந்தவள், தலையில் அடித்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தாள்.
``ஏண்டி செவந்தியம்மா... உன் கோயில் வாசல்ல செருப்பு கழட்டிப்போட்டுட்டு உன்னைக் கும்பிட்டுத்தானே இந்தக் கடங்காரன் அந்த வேலையச் செஞ்சுக்கினான்... தடுத்து நிறுத்தியிருக்க வாணாம்? இன்னா அம்மன் நீ...ஒரு தாயா இருக்கறவ செய்யற வேலயா இது...எதுக்கு உனுக்கு ஒரு கோயிலு..?’’
அதற்குள் யாரோ அவளைத் தடுத்து நிறுத்தி, ``போ அப்பால... அவன் பண்ணுன முட்டாத்தனத்துக்கு ஆத்தாவ கொற சொல்லிக்கினு. வம்பு இழுத்து வுட்டுட்டான்... போலீஸ் வரப்போவதோ, அதிகாரிங்க வரப்போறாங்களோன்னு ஊரே கதிகலங்கி நிக்கிது... போ அப்பால’’ என்று விரட்டி விட்டார்.
ஊர்ப் பெரியவரை யாரோ அழைத்து வந்தார்கள். முன்னாள் தலைவர் அவர். எழுபத்தைந்து போல இருக்கும் வயது. யாரோ அவர் காதில் என்னவோ சொன்னார்கள்.
``ஏம்பா முனுசாமி, பொஞ்சாதிகாரிகிட்ட தாக்கல் கொடுத்தாச்சா, அவ வார்த்த கேக்காம எப்படி... நாளைக்கு ஒரு பேச்சு வந்துடக் கூடாது’’ என்றார் அவர்.
``அப்ப என்ன, நேரத்த வளத்துக்கினு போய் போலீஸ்காரன் வந்து கேஸ் எயுதினு போறதுக்கா...கீயாண்ட தெரு கந்தசாமி பொராட்டாசி சனிக்கியமையா பாத்து உத்தரத்துல மாட்டிக்கினான்... பாத்துக்கினு நின்னமா... கயட்டி எறக்கி அடுத்த வேல பாக்கிலியா...அதுங்கூட நெனப்புல இல்லியா’’ என்று பதில் வந்தது.
பெரியவருக்கு அதெல்லாம் நினைவில் நிற்காமல் இல்லை. லோகநாதன் அவருக்கும் நெருங்கிய உறவுக்காரன். அவன் ஏன் செத்தான், அதுவும் சண்முகத்தோட புதிய வீட்டில் வந்து ஏன் தொங்கினான் என்பதெல்லாம் அவருக்கும் புரிபடவில்லை. லோகநாதனின் அப்பா அவருக்குப் பெரியப்பா மகன். சம வயதுக்காரர்கள். இணை பிரியாத நண்பர்களாக வாழ்ந்த காலமெல்லாம் கண்ணுக்குள் வந்து போனது. `எதுக்குமே வெளங்காம போய்ச் சேந்தானே பாவி...’ என்றபடி மேல் துண்டை எடுத்து வாயைப் பொத்திக்கொண்டு அழுதார்.
சைக்கிள் கடை மணி அங்கே வந்து பார்த்து வாயிலும் வயிற்றிலும் ஐயோ ஐயோ என்று அடித்துக்கொண்டு மண்ணில் விழுந்து புரண்டு அழ ஆரம்பிக்கவும், அருகிலிருந்தோர் அவனை எழுப்பி சமாதானப்படுத்தி செவந்தியம்மன் கோயில் வாசலில் உட்கார வைத்தனர். அந்தக் கறுப்புச் செருப்புகள் அவன் கண்ணிலும் பட்டுவிட, அவற்றை எடுத்து வைத்துக்கொண்டு பித்துப்பிடித்தவன் போல் செருப்புகளுக்கு முத்தமாரி பொழிந்து மேலும் கதறத் தொடங்கினான்.
அதற்குள் ஐந்தாறு பேர் வேகமாக இயங்கிப் பிணத்தை எச்சரிக்கையாக விடுவித்துக் கீழே கொண்டு வந்து அப்படியே தோள்களில் போட்டபடி வேகநடை போட்டுக் குறுக்குச் சந்து வழியே லோகநாதன் வீட்டு வாசலுக்குப் போய் நிற்கவும், யாரோ ஓடோடி வந்து பழைய வேட்டித் துணி ஒன்றைக் கொண்டு வந்து கீழே விரிக்க, `பாத்துப்பா... பாத்து. மெல்ல... மெல்ல' என்ற குரல்களுக்கு இடையே லோகநாதன் உடலை அவன் வீட்டு வாசலில் இறக்கி வைத்தார்கள்.
மூலையில் சோர்ந்து அரை மயக்க கதியில் இருந்த கமலா, இந்தப் பேருண்மையை நேர் கொண்டு எதிர்கொள்ள முடியாமல் ஹோவென்று அலறி எழுந்து வந்து அவன்மீது விழுந்து புரண்டு அரற்றி அழவும், பிள்ளைகள் இரண்டும் ‘யப்பா...யப்பா...' என்று திக்குமுக்காடிப் புரிந்தும் புரியாததுமாகக் கதறி நிற்க, அந்தச் சூழல் படு கோரமாக உருவெடுத்து நின்றது.
இடுகாட்டிற்குத் தாக்கல் கொடுத்துப் புதைக்க ஏற்பாடுகள் செய்ய ஐந்தாறு இளவட்டங்கள் சைக்கிள் எடுக்க, பிரச்சினையில்லாமல் வேலையைத் தோது செய்துகொடுக்க ஏற்ற பெரிய தலைகள் ஒன்றிரண்டை கேரியரில் ஏற்றிக்கொண்டு விரைந்தனர்.
மளமளவென்று வேலைகள் போய்க்கொண்டிருக்க, வெளியூர் போயிருந்த வேலப்பன் அந்த நேரம் பார்த்து வந்து சேர்ந்தவன் வழியிலேயே விஷயமெல்லாம் கேட்டறிந்து, ``டேய்... என் சகலையைக் கொன்னுட்டீங்களாடா... வுட மாட்டன்டா... கட்டுக் கட்டா பணத்த வாங்கி முழுங்கிப்புட்டு கைய விரிச்சானுங்களே பாவிங்க. வுட மாட்டன்டா... அவன் கண்ணெதிரே அவன் காச வச்சே புது வூடு கட்டினீங்களே, அடுக்குமாடா... வெளங்குவீங்களா... உங்க கையில கட்ட மொளைக்க... ஒங்க புது வூடு மண்ணோடு மண்ணாப் போக...’’ என்று அடக்க மாட்டாத ஆவேசத்தோடு குதிக்க ஆரம்பித்தான்.
கீழே கிடந்த லோகநாதன் உடலை ஒற்றை ஆளாகத் தூக்கித் தனது தோளில் போட்டுக் கொண்டவன், ``எவன கேட்டுறா அவனுங்க வூட்ல தொங்கினவன கீழ எறக்குனீங்க...அங்கேயே கொண்டு போட்றன் பாரு...’’ என்று கொதிப்போடு புறப்படவும், சுற்றிலும் இருந்தவர்கள் அவனை மிகுந்த பாடெடுத்துத் தடுத்து, பக்குவமாக உடலை மீட்டுக் கீழே பழையபடி விரித்திருந்த துணிமேல் கிடத்தினர்.
``ஏண்டா கோளாறா செஞ்சினுக்கீற... புத்தி கித்தி மாறாட்டமா?’’ என்று அவனைப் பிடித்து உலுக்கினார் ஊர்ப் பெரியவர். வேலப்பன் அரசுப்பணியில் இருப்பவன். கமலாவின் தங்கையைக் கல்யாணம் செய்திருப்பவன்.
இது எதுவும் பொருட்படுத்திக்கொள்ளாமல் அவரவர் இழுப்புக்கு இடம் கொடுத்துக் கீழே கிடந்தான் லோகநாதன்.
அது லோகநாதனின் இயல்பு. எடுப்பார் கைப்பிள்ளைதான் அவன். உள்ளூரில் கிளை நூலகம் போய் உட்காருவான். அடுத்த மண்டகப்படி, அஞ்சல் அலுவலகம். அப்புறம் ஊருக்குள் புதிதாகத் திறக்கப்பட்டிருந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளைக்குள் நுழைவான். கணிசமாக வைப்புத் தொகை வைத்திருந்தான். மேலாளரோடு பேசிக் கொண்டிருப்பான். அன்பான அந்த மனிதரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.
``உங்களை நம்பிக் கடன் தருகிறோம், இந்த ஊர்ல பேக்கரி ஆரம்பிச்சு நடத்துங்க. சுற்றிலும் கிராமங்கள் நெறய இருக்கு... சொந்தக்காரப் பசங்க ரெண்டு பேர வேலைக்கு வச்சுக்குங்க. நல்ல சேல்ஸ் நடக்கும். கொஞ்சம் கஷ்டப்பட்டா போதும், ஜோரா நடத்தலாம். பன்னும் ரொட்டியும் தேவைப்படாத நாள் கிடையாது. தேவைப்படாத ஆள் இருக்காது.’’
அதற்கும் அதே வசீகரச் சிரிப்புதான் பதில். லோகநாதன் வட்டியின் மீதுதான் அளப்பரிய நம்பிக்கை வைத்திருந்தான்.
`வங்கி மட்டும்தான் வாக்குறுதி பொய்க்காது, கடன் வாங்கியவர்கள் இழுத்தடிப்பார்கள்' என்று வங்கி மேலாளர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.
அவன் ஒன்றும் பெரிய லேவா தேவிக்காரன் அல்ல. அதிகபட்சம் பத்தாயிரம்தான். நெசவாளர்கள் தங்கள் தொழிலுக்குக் காய்ச்சும் பசைக்கே பசை இல்லாத சிற்றூரில் எங்கே கடன் கொடுத்து எங்கே கடைத்தேற..?
அப்படியே நேர்க்கோட்டில் போய்க்கொண்டிருக்குமா வாழ்க்கை? லாட்டரி டிக்கெட் வாங்கக்கூட ஆசைப்படாத லோகநாதன், ஐந்து லட்சத்தை எடுத்துக் கொடுத்துவிட்டான்! வாங்கியவர்கள் அசலூர்க்காரர்கள். ஆனால், இவனிடம் வந்து அறிமுகப்படுத்தி வைத்தவர் உள்ளூர்ப் புள்ளி சண்முகம்தான். அவரும் சேர்ந்துள்ள இந்த சேமிப்புத் திட்டத்தில் உள்ளூரில் வேறு யாரையும் சேர்க்கவில்லை என்று காந்த முள்ளைச் சரியான திசையில் பொருத்தினார்கள்.
ஒற்றைக் காகிதம், ரசீது, புரோநோட்டு ஒரு கருமத்தையும் இவன் எழுதி வாங்கிக் கொள்ளவில்லை. அதை அவர்கள் கடனாகவே பாவிக்கவில்லை. இது புதுமாதிரி சேமிப்புத் திட்டம், ஆயிரத்திற்கு ஐந்நூறு வட்டி, இதை எழுதிக்கொடுப்பதும் தவறு, வாங்கி வைப்பதும் தவறு. நம்பிக்கைதான் ஆதாரம், விசுவாசம்தான் மூலதனம் என்று பேசினார்கள். வட்டிதான் வந்து கொட்டுகிறதே என்று விட்டுவிட்டான்.
முதல் மூன்று மாதங்கள் வந்து சேர்ந்த வட்டி மொத்தமாக நின்றுபோய் ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. அந்த ஆட்கள் எந்த ஊர், எந்த திசை என்றுகூடத் தெரியாது. காதும் காதும் வைத்தது மாதிரி பணம் கைமாறியிருந்தது. திருடனுக்குத் தேள் கொட்டியது மாதிரி நெருப்பில் விழுந்தும் கதறாமல் உள்ளூர அழுதுகொண்டிருந்தான் லோகநாதன்!
உள்ளூர்ப் புள்ளி சண்முகம் செவந்தியம்மன் கோயில் எதிரே இருந்த தங்களது ஓட்டு வீட்டை இடித்து அரையும் குறையுமாகக் கட்டிப் பாதியில் கைவிட்டிருந்த கட்டுமானத்தை இதே நேரத்தில் கிடுகிடு என்று வளர்த்துக் கொண்டு வந்தான். `யாரூட்டு துட்டு' என்று கேள்வி எழுந்தது லோகநாதனுக்கு.
மென்மையான சுபாவி, வெகுளித்தனமாக ஒரு நாள் போய் நின்றான் அந்த வீட்டு முன்.
கட்டுமான வேலைகள் ஜரூராக நடந்துகொண்டிருக்க, இவன் மெல்ல மெல்லத் துணிவு வரவழைத்துக் கொண்டு கேட்டான், ``ஏம்பா சண்முகம்... மாசம் ஆறாச்சு, தம்படி காசு வல்ல, ஆளுங்களும் வரத்து நின்னு போச்சு, ஒரு தாக்கல் இல்ல... நானும் ஒன்னாண்ட வந்து சொல்லிச் சொல்லி ஓஞ்சுட்டன்.’’
சண்முகம், சிமென்ட் கலவைக்குச் செலுத்திய கவனத்தை லோகநாதன் பேச்சுக்குக் கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் திடீர் என்று திரும்பி, ``லோகநாதா, இதான் மரியாத ஒனக்கு... பணம் அவனாண்டதான கொடுத்த, என்கிட்டவா கொடுத்த? இப்ப என்னாண்ட வந்து நின்னா என்ன அர்த்தம்? நானே வெறுப்புல இருக்கேன், என்னைக் கிளறாத’’ என்றவன், வேலையாட்கள் பக்கம் திரும்பி, ``டேய் ஒங்க வேலைய பாருங்கடா... இங்க என்ன பார்வை?’’ என்று எரிந்து விழுந்தான்.
``டேய் சண்முகம்... நெஞ்சில கைய வச்சு சொல்றா...அஞ்சு லச்சம் காசுறா... ஒனக்கு ஒண்ணுமே தெரியாதுன்றயா?!’’
சண்முகம் சட்டென்று தோள் மேல் போட்டிருந்த துண்டைக் கீழே விரித்துப் போட்டுக் குறுக்கே தாண்டிப் போய் நின்றான். ``இன்னும் சத்தியம் வேணுமாடா ஒனக்கு... போடா இங்கேர்ந்து’’ என்று அதட்டினான்.

அன்றே வீடு திரும்பிக் காய்ச்சலில் விழுந்தவன்தான். ஒரு வாரம் எழுந்திருக்கவில்லை. அப்புறம் வெளியே அதிகம் தென்படாமல் இருந்தான். மீண்டும் ஒரு நாள் சண்முகத்தைத் தேடி அதே கட்டுமான இடத்தில் போய் நின்றான். ஆட்கள் யாருமில்லை. வேலைகள் தொடர்வதாகத் தெரியவில்லை. கட்டிய சாரம் அப்படியே இருந்த இடத்தில் இருந்தது. திரும்பி வந்துவிட்டான்.
எண்ணிப் பத்தாவது நாள் புதிய கட்டட வாசலில் போய் அந்தப் பேய் இரவில் நின்று குரல் கொடுத்தான். உள்ளே யாருமில்லை. அதே வேகத்தில் செவந்தியம்மன் முன்னால் வந்து நின்றவன் செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டுக் கோயிலை மூன்று முறை வலம் வந்தான். சண்முகம் ஜென்மத்திற்கும் வீட்டை நெருங்கும்போது, வாசலில் தான் தொங்கிக் கிடந்த நெனப்போடதான் உள்ளே நுழைய வேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டான். அந்த நேரம் அவனது ஆசைப் பெஞ்சாதியோ, ‘யப்பா... யப்பா...’ என்று கால்களைக் கட்டிக்கொண்டு கொஞ்சும் பிள்ளைகளோ யாரும் அவன் நினைவுக்கு வரவில்லை. வந்த வேலையை நினைத்த வண்ணமே செய்து முடித்தான்.
லோகநாதனின் நெற்றியில் திருநீறு குழைத்துப் பூசி, வேட்டியை மாற்றி அவனது இறுதி யாத்திரைக்கு எல்லாம் தயாராகிக்கொண்டிருந்தது. வேலப்பனைச் சரிக்கட்டித் தனியே அழைத்துப் போனவர்கள் கொஞ்சம் சரக்கு ஊற்றினர், அவனோ ``ஏற்கெனவே போட்டுக்கினுதாண்டா நாயம் கேக்க வந்தேன்...’’ என்று குழறியபடி மேலும் போதையேற்றியபடி பிதற்றிக்கொண்டிருந்தான்.
ஊர் மொத்தமும் திரண்டு போவது போல் இருந்தது சாவு ஊர்வலம். இடுகாட்டில் நுழைகிறபோதுதான் தெரிந்தது, வேறு ஒரு சாரார் கும்பலாக இருப்பது. அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் வெறிகொண்டு அடிக்கப் போனான் வேலப்பன். ஆனால், அருகே போனதும்தான் புலப்பட்டது. இரண்டு குழிகள் தோண்டப்பட்டு இருந்தன. எல்லோருக்கும் விஷயம் பிடிபடவே சற்று நேரமெடுத்தது.
எல்லா சாங்கியங்களும் கடைப்பிடித்து முதல் குழியில் இறக்கப்பட்டது லோகநாதன் உடல்.
பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வந்து சேர்ந்தது மாரடைப்பில் மரித்துப்போன சண்முகத்தின் சடலம்.