
01.07.2021 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...
வானம் பொய்த்தால் எல்லாமே பொய்க்குமோ? ஆறுகள் பொய்த்தன. மண் பொய்த்தது. மனிதர்கள் பொய்த்தனர். மானுடம் பொய்த்தது. ஏரியும் குளமுமாகப் பரந்து கிடந்திருந்த நீர், பாட்டில்களில் சுருங்கிவிட்டது. நீர் சுருங்கியதும் மனங்களும் சுருங்கின. தனக்கு வழங்கப்பட்டிருந்த அன்றைய ஒதுக்கீடான நீரைக் கையில் எடுத்துப் பார்த்தார் சுந்தரம். எண்ணி நிரப்பப்பட்ட மில்லி லிட்டர்கள்.
அவருடைய தேவையும் அவருக்கான ஒதுக்கீடும் பொருந்தவேயில்லை. மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். மடுவா? என்ன வேதனை… அப்படியொன்று இப்போது இல்லையே? மடுவை வைத்து வித்தியாசத்தை அளப்பது பல்லாயிரம் ஆண்டு சிந்தனையின் விளைவு. இப்போது பேச்சு மொழியில் இல்லையெனினும் சிந்தனை அளவில் இருந்தது. கடலளவு செல்வம், தண்ணீராய்ச் செலவு செய்வது என்பன போன்ற நீரைக் குறைத்து மதிப்பிட்ட உதாரணங்கள் இப்போது வழக்கத்தில் இல்லை. சுந்தரம் இன்றும் பழைய வாக்கியங்களை நினைவில் வைத்திருப்பதால் ஏற்பட்ட பழக்கதோஷத்தில் இப்படி பல நேரங்களில் சிரமப்பட்டார்.

அதிபர் இட்ட கட்டளை அவரைத் துரிதப்படுத்தியது. நேரமில்லை. ஆறாவது மாடிக்கு உடனே சென்றாக வேண்டும். அங்கேதான் நகரத்துக்கான விவசாயம் நடக்கிறது. நகர மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு சுந்தரம் தலைமையில்தான் நடைபெற்றது. அவர்தான் வயல் பிரிவின் தலைவர். மந்தமான சூரியனின் தயவில் குறைந்த நீரில் விளையும் தாவரங்களை உருவாக்குவதும் பிறகு அவற்றை உற்பத்தி செய்வதும் அங்கே தனித் தனிப் பிரிவுகளாகச் செயல்பட்டன. இரண்டு பிரிவுகளாக இருந்தாலும் இரண்டுக்கும் அவர்தான் தலைவர்.
உருவாக்கும் பிரிவில் நாற்பது பேரும், உற்பத்திப் பிரிவில் 160 பேரும் இருந்தனர். உருவாக்கும் பிரிவில் நெல் ரகமொன்றைப் புதிதாக உருவாக்கியிருந்தனர். அதிபர் அதை இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்திருந்தார். அதற்கான விழாவும் இன்றுதான். விழா என்றால் பெருங்கூட்ட மெல்லாம் இருக்காது. அங்கே சுந்தரம் மட்டுமே இருப்பார். ஒலிகாண் முறையில் அதிபர் தலைமையிடத்திலிருந்து கொடியசைத்துத் தொடங்கிவைப்பார். சுந்தரம் ஒலிகாண் முறையில் அந்த விதைகளை ஹைபர்நேட் செய்ய வேண்டும். அவ்வளவுதான். விழா நிறைவு பெற்றுவிடும். என்றாலும் அதை நாட்டு மக்கள் அனைவருக்கும் திரையிடுவார்கள். மக்கள் அவரவர்க்கு விதிக்கப்பட்ட நேரத்தில் நிகழ்வைப் பார்த்துவிட வேண்டும். பார்க்காமல் விடுவது தண்டனைக்குரிய குற்றம். பார்ப்பதற்கு வேறு என்ன இருக்கிறது அதைத்தவிர? அனைவருமே பார்த்துவிடுவார்கள்.
அதிபர் ஒலிகாண் மூலம் கொடியசைத்தார். சுந்தரத்தைப் பார்த்துப் புன்னகைத்தார். நாட்டு மக்களுக்குப் புதிய நெல்லை அர்ப்பணிப்பதாகச் சொன்னார். அவ்வளவுதான், நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது.
அது எளிமையான நகரம். சில வரிகளில் புரிந்துகொள்ளலாம். பகல் நேரம் முழுவதும் பணி செய்ய வேண்டும். பின்பு குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்றுவிட வேண்டும். குடியிருப்புப் பகுதி எட்டாவது மாடியில் இருந்தது. அதுதான் கடைசி மாடியும்கூட. கீழே உள்ள ஏழு மாடியில் பணியாற்றுகிறவர்களும் இரவு எட்டாம் மாடிக்கு வந்துவிடுவார்கள். மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிக்கொள்வதே அங்குதான் நடக்கும். நீராவி, உணவு, உடை, மருந்து, கல்வி, தொழில்நுட்பம், ஆட்சி என ஏழு பிரிவுகளுக்கு ஏழு மாடிகள். ஒரு பிரிவில் வேலை செய்கிறவர் இன்னொரு மாடிக்குச் செல்ல இயலாது. செல்ல விரும்புதல் கூடாது. அதனால் எல்லோருக்கும் பொதுப் புகலிடமாகவும் எட்டாம் மாடி அமைந்திருந்தது.
அந்தக் கட்டடம்தான் நகரம். இதுபோல் பல நகரங்கள் நாட்டில் இருப்பதாகப் பேசிக் கொள்வார்கள். யாரும் நேரில் பார்த்ததில்லை. சில ஒலிகாண் நிகழ்ச்சிகளில் பார்த்ததோடு சரி. ஏழு மாடிகளில் மாடிக்கு இருநூறு பேரென ஆயிரத்து நானூறு பேர் இருந்தனர். அனைவருமே ஒவ்வொரு பிரிவில் விற்பன்னர்கள். அதில் பெண்கள் எண்ணிக்கை குறைவு. இன்பம் துய்க்கக் கட்டுப்பாடுகளும் ரேஷன் முறையும் இருந்தது. இனப்பெருக்கம் செய்ய இயலாது. சொல்லப்போனால் அதில் வேட்கையும் ஈடுபாடும் கொண்டவர்கள் குறைவாகவே இருந்தனர். பொதுவாக மழை பெய்வதில்லை. அதாவது மழை பெய்வதற்கு முன்பே பெய்யும் சூழலைக் கண்டறிந்து காற்றிலிருந்து நீரைப் பிரித்துவிடுவார்கள். நீர் வீணாகக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. நீராவிப் பிரிவில் இருப்பவர்களின் வேலையே அதுதான்.‘`உணவும் நீரும் இத்தனை சீக்கிரம் தட்டுப்பாடாகிவிடும் என்று நினைக்கவில்லை.’’ பொது உணவு அரங்கத்தில் மரபு மாற்றம் செய்யப்பட்ட ஹைபர்நேட் காய்கறிகளைச் சுவைத்தபோது சுந்தரம் இப்படி முனகினார்.‘`வயல் பிரிவுத் தலைவரே இப்படிச் சொன்னால் நாங்கள் என்ன செய்வது?’’ என்றார் கேத்தரின். மருத்துவப் பிரிவில் வேலை செய்பவர். அன்பான பெண்மணி.
அதன் பிறகு அவர்களுக்குப் பேசிக்கொள்வதற்கு எதுவுமில்லை போல இருந்தது. அமைதியாகச் சாப்பிட்டார்கள். சிலவற்றைக் கடித்தும் சிலவற்றைக் குடித்தும் விழுங்க வேண்டியிருந்தது. ஏழு மாடியில் பணியிலிருப்பவருக்கும் ஒரே இடத்தில்தான் சமையல். யாரும் தனியே சமைப்பதற்குத் தடையிருந்தது. பொது உணவுதான். எல்லோருக்கும் ஒரே உணவு. ஒரே அளவு. நேனோ நுட்பத்தில் நோய்கள் பலவற்றை அகற்றியபோதே சுவை உணர்வையும் அகற்றிவிட்டதால் வாகனத்துக்கான எரிபொருள் போல உணவு வயிற்றுக்கு அனுப்பப்பட்டது. இதில் வேறு என்ன பேச இயலும்?
‘`இயற்கையோடு போரிடுவது எளிதல்ல. தாவரங்களைப் போலவே வேறு உயிரினங்களையும் இனம் பெருக்கப் போகிறார்களாம். தேனீ அழிந்தாலே மனித இனம் அழிந்துவிடும் என்றார்கள். புல் பூண்டு முதற்கொண்டு கொசு வரை எல்லாமே அழிந்துவிட்டன என்கிறார்கள். இயற்கையின் கண்ணிகள் கழன்றுவிட்டன. ஒருவேளை நம்மோடு மனித இனம் அழிந்துவிடும் என்றே நினைக்கிறேன்.’’ சுந்தரம் நம்பிக்கை இழந்துவிட்டார். ஐம்பது வயதுதான் ஆயுள் என நிர்ணயித்திருந்தார்கள். புதிய மனிதர்களை உருவாக்குவதிலும் சில நேரங்களில் பிழைகள் ஏற்பட்டன. மூன்று கண்கள், இரண்டு வாய் உள்ள குழந்தைகள் பிறந்தபோது சுந்தரம் மிகவும் கவலைப்பட்டார்.
பெற்றோர் சகவாசமே இல்லாமல் வளர்த்தெடுக்கப்படும் புதிய தலைமுறை எப்படியிருக்கும் என்பது விபரீதமாகத்தான் இருந்தது. ஆரோக்கியமான இளைஞர்களைக் கொண்டு புதிய தலைமுறை உருவாக்கப்படுகிறது. அவர்கள் வேறு ஒரு நகரத்தில் வளர்க்கப் படுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் உணவும் பராமரிப்பும் கல்வியும் நகரத்தைப் பராமரிக்கிற தகுதியை மட்டும் வளர்க்கும். முட்டையிலிருந்து பொரிந்து நடக்கத் தொடங்கிய எறும்பு உணவை நோக்கிப் படையெடுப்பது போல… பறக்கத் தொடங்கிய தேனீ மலரைக் கண்டடைவதுபோல... புதிய தலைமுறைக்கு ஒரு நோக்கம்தான். அவரவர் வேலையை நிறைவேற்றி மடிய வேண்டும். உறவுகள், நட்புகள் எதுவும் இருக்கப் போவதில்லை.
‘`மனித இனம் என்பது புழு பூச்சியின் தொடர்ச்சி... பரிணாமத்தின் முதிர்ச்சி. ஒன்று இல்லாமல் இன்னொன்று இல்லை. யானைகள் அழிந்ததால் எத்தனையோ தாவரங்கள் அழிந்துபோனதை ஒப்புக்கொண்டவர்கள், இல்லாமல்போன ஏதோ ஓர் உயிரினத்தால் நாளை மனிதனும் இல்லாமல் போவான் என்பதை மறந்துவிட்டார்கள்’’ என்றார் சுந்தரம்.
‘`இழந்த கண்ணிகளை மீண்டும் உருவாக்கும் முயற்சிகள் பலனளிக்காதா?’’ வலப்பக்கக் கேசத்தை இடப்பக்கமாக நீவி விட்டபடி கேட்டார் கேத்தரின்.
‘`அளிக்கலாம். ஆனால் மனிதர்களின் அவசரம் அந்த முயற்சியை முறியடித்துவிடும்.’’
கேத்தரின் யோசனையில் ஆழ்ந்தார். ‘`சில நூறு ஆண்டுகளாவது தேவைப்படும்தான்’’ எனச் சொல்லிக்கொண்டார். யாரோ அவருடைய ஆலோசனையைக் கேட்டதுபோல தலையை அசைத்து ஆமோதித்தார். சுந்தரத்தைவிட கேத்தரினுக்குப் பத்து வயது அதிகம். ஆகவே, ஆயுள் எல்லையை எட்டியிருந்தார்.
‘`நாம் பார்க்கப் போவதில்லை… பார்த்துதான் என்ன செய்யப்போகிறோம்? பொது உடை, பொது உணவு, பொது மொழி, பொது இன்பம்… இதிலே வாழ்வதற்கு என்ன இருக்கிறது?’’ கேத்தரினுக்கு ஆறுதல் சொன்னார் சுந்தரம். இன்னும் சில நாளில் கேத்தரினுக்குப் பயனற்றவர் சான்றிதழ் வழங்கப்பட்டுவிடும். வாழ்வே பயனற்ற வாழ்வுதான் என்று சொல்வது அவருக்கு ஆறுதலாக இருக்குமென நினைத்தார் சுந்தரம். கேத்தரின் ஆறுதலடையவில்லை. அவர் கண்கள் கலங்கியிருந்தன.
‘`வாழவே வழியில்லையென்றாலும் வாழப் பிடிப்பதுதான் எளிதில் மாற்ற முடியாத மனிதப் பிடிவாதமாக இருக்கிறது. இந்தக் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்’’ அதிபர் வேண்டுகோள் வைத்தார். ஒரு கட்டடம்தான் நகரம் என்பதை ஏற்கப் பழகிவிட்டபின்னும் வாழப் பிடிப்பது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. வாழும் ஆசையின் கடைசித் துளி உள்ளவரை மனிதம் காக்கப்படும் என நினைத்தார் கேத்தரின். இன்று ஆயுள் சான்றிதழ் கைக்குக் கிடைத்துவிடும் என்று சொல்லியிருந்தார்கள். சாகடிப்பதற்குச் சான்றிதழ்… அதில் ஒன்றும் குறைச்சலில்லை. கதிர்வீச்சைத் தடுக்கும் கண்ணாடிகளுக்கு வெளியே சூரியன் புள்ளிபோலத் தெரிந்தது. உச்சிவெயில் வேளையே மாலை நேரம்போலத்தான் இருந்தது.
வயல் உற்பத்திப் பிரிவில் நல்ல விளைச்சல் என்றுதான் சொல்ல வேண்டும்... சுவரெங்கும் பச்சைப் பசேல் எனப் பயிர். ஒவ்வொரு செடிக்கும் தினமும் ஐந்து சொட்டு நீர் இறைக்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்துக்கொண்டிருந்தார் சுந்தரம். கதிர்வீச்சு விளைவுகளால் மரபுப் பிறழ்வு ஏற்பட்டுச் சில காய்கறிகள் வினோதமான வடிவங்களில் விளைந்தன. மரபு நீக்கம் செய்யப்பட்டதால் விபரீத சுவையுடன் அவை இருந்தன. சுந்தரத்துக்கு ஆச்சர்யமாக இருந்தது. மக்கள் அந்தச் சுவைக்குப் பழகிவிட்டனரா… சுவை நீக்கம் செய்யப்பட்டதால் ஏற்றுக்கொண்டனரா என யோசித்தார்.நெற்பயிர் பிரிவுக்குச் சென்றார். விதையிலிருந்து தழைகள் தோன்றுவதற்கு முன்பே கதிர்கள் தோன்றும் விதமாக அவை உருவாக்கப் பட்டிருந்தன. ‘`இதுவும் சரிதான். மாடுகள் இல்லாதபோது வைக்கோல் மட்டும் எதற்கு?’’ சுந்தரத்தின் உதடுகள் மனதைத் தாண்டி இயங்கின.

கதிர்கள் ஏன் இப்படியிருக்கின்றன என நெருங்கிச் சென்று பார்த்தார். நெல் மணிகள் போல இல்லாமல் பச்சைப் பட்டாணிபோல இருந்தன. பச்சையாக உருண்டையாக இருந்தது ஒவ்வொரு நெல்லும். என்னதான் சுவை தெரியாமல் போனாலும் பார்வைக்காகவாவது அரிசியை நினைவுபடுத்திக்கொண்டிருந்தனர். இப்போது அதற்கும் முடிவு வந்துவிட்டது. நேனோ மரபு மாற்றத்தால் இப்படிச் செய்யப்பட்டி ருக்கலாம் என முதலில் நினைத்தார். பிறகு கதிர்வீச்சு மரபுப் பிறழ்வாக இருக்குமோ என அச்சப்பட்டார். மாதிரிக்காக சில நெல் மணிகளை எடுத்துத் தொழில்நுட்பப் பிரிவுக்கு அனுப்பினார். ‘`எதிர்பாராமல் நிகழ்ந்ததா?’’ எனக் கேட்டார். தொ.நு. பிரிவு அதிகாரியிடமிருந்து ‘`எதிர்பார்த்துதான்’’ என பதில் வந்தது.‘`அரிசியைப் பட்டாணி போல் செய்வதால் என்ன பலன்…?’’ ஏன் இப்படிச் செய்கிறார்கள் என அவருக்குக் கோபம் வந்தது.‘`ஒரு பட்டாணி பத்து நெல்லுக்குச் சமம்’’ என விளக்கமளித்தார் அந்த அதிகாரி. சுந்தரம் மிகவும் நொந்துபோனார். இனி அரிசி என்ற உணவுக்கு முழுக்குப் போடப்படும் என்பதை உணர்ந்தார்.இரவு கேத்தரினிடம் பேசியபோது தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார் சுந்தரம். கேத்தரின் வழக்கமாக வருத்தமாகவே இருப்பவர் எனினும் இன்று வழக்கத்துக்கு மாறான வருத்தத்தில் இருந்தார். சுந்தரம் சொன்னதைக் காதில் ஏற்றுக்கொண்டாரா என்பதும் தெரியவில்லை.
‘`ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கேத்தரின்?’’
‘`எனக்கு ஆயுள் சான்றிதழ் கொடுத்து விட்டார்கள்’’ என்றார் இறுக்கமான முகத்துடன்.
‘`அதற்காக வருந்த வேண்டியதில்லை. நிம்மதி என உணருங்கள். சொல்லப்போனால் எனக்கும் சான்றிதழ் கொடுத்தால் நானும் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவேன்.’’
‘`சான்றிதழுக்காக வருந்தவில்லை. எனக்கு ஓர் ஆசையுண்டு. அதை நிறைவேற்றிட அவகாசம் தேவைப்படுகிறது.’’
சுந்தரத்துக்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘`என்னது ஆசையா? எத்தனை ஆண்டுக்காலம் ஆகிவிட்டது இந்த வார்த்தையைக் கேட்டு. அப்படி என்ன ஆசை? அதை நிச்சயம் நிறைவேற்றி வைக்கிறேன்.’’கேத்தரின் யோசித்தார். தயக்கமாக இருந்திருக்க வேண்டும். நிதானமாகப் பேசினார். ‘`என் நினைவுகளில் தோய்ந்த ஓர் உருவத்தை வரைய ஆரம்பித்திருக்கிறேன். அதை முடிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கிறது.’’‘`ஓவியமா?’’ சுந்தரம் வியப்பில் ஆழ்ந்தார். கல்விப் பிரிவில் ஓவியம் என்பது ஒழிக்கப்பட்டுவிட்டது. சொல்லப்போனால் பொதுமொழியில் அப்படியொரு வார்த்தை இருப்பதே இப்போது கேத்தரின் பேசுவதிலிருந்துதான் தெரிந்தது. வரைவதற்கான எந்த உபகரணமும் இப்போது இல்லவே இல்லை. காகிதம், தூரிகை, வண்ணங்கள் எதுவுமே இல்லை. கேத்தரினின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்கான ஒரு பாதையும் கண் முன் இல்லை.
‘`ஆமாம் ஓவியம்தான். நீங்கள் நினைப்பது போல இதற்கு ஓவிய சாதனங்கள் எதுவும் தேவையில்லை. எனக்குத் தேவை மேலும் இரண்டு நாள்கள் மட்டுமே.’’
ஓவியம் வரைவதற்கான சாத்தியங்கள் எதுவுமில்லாமல் ஓவியமா? எப்படி வரைவார்… எதில் வரைவார்… ஏன் வரைகிறார்? முதல் கேள்வியாக ‘`அப்படியென்ன வரையப் போகிறீர்கள்?’’ என்று மட்டும் கேட்டார்.
‘`என் இறுதி ஆசை. எப்படியும் தெரியத்தான் போகிறது. வரைந்து முடிந்தபின்பே தெரியட்டுமே.’’ கேத்தரினின் குரலில் ஜீவன் வற்றியிருந்தது.
குடும்பமாக வாழ்வதற்கு வழி செய்தால் வாழும் விருப்பம் அதிகரித்துவிடும் என்பதால் அரசு அதை ஏற்க மறுத்திருந்தது. தனித்தனி சமையல் வேண்டாம் என்பதுபோல தனித்தனி இனப்பெருக்கமும் தேவையில்லை என்பதே அரசின் முடிவு. வாழும் விருப்பம் குறைய வேண்டும். ஆனால் உற்பத்தி பெருக வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு. இப்படி இயந்திரத்தன்மையை மனிதத்தன்மைக்குப் பொருத்துவது பெரும்பாலும் ஒத்துவரவில்லை. பலர் அரசின் போக்கை மீறுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். சில தருணங்களில் அது வெளிப்பட்டு, அடக்கப்பட்டது நினைவிருந்தது. பழைய வாழ்விடத்துக்குத் திரும்பிவிட வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தார்கள். ‘`பழைய வாழ்விடம் வாழ உகந்ததாக இல்லை. உகந்ததாக மாற்றும் பணி நடைபெறுகிறது’’ என மறுத்து விட்டது அரசு. மொழிகளை அழித்துப் பொதுமொழி உருவாக்கியபோதே பாதி உயிர் போய்விட்டது. மீண்டும் பழைய நிலைமை என்றேனும் ஏற்படும் என்ற நப்பாசைதான் மீதி உயிரை இறுக்கிப் பிடித்து வைத்திருந்தது. இதில் இரண்டு நாள்கள் வாழ்வதற்கு அவகாசம் கேட்கும் கேத்தரினின் மீது பரிதாபமாகத்தான் இருந்தது. சுந்தரம் கேத்தரினின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டார். அவர் கைகள் வியர்த்திருந்தன. அவர் முகத்தைப் பார்த்தார். கண்களில் திரண்டிருந்த நீர் மின்னியது. சுந்தரத்தின் உதடுகள் நம்பிக்கையுடன் முனகின. ‘`நான் எப்படியாகினும் இரண்டு நாள்கள் பெற்றுத் தருகிறேன்.’’
அவர் இந்த உலகுக்கு விட்டுப் போகும் நினைவுச் சின்னம் என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் சுந்தரத்துக்கு ஏற்பட்டது. நினைவில் இருக்கும் யாரையோ உருவமாக்க விரும்புகிறார். ஆனால், அதை எப்படிச் செய்வார் என்பது அதைவிட மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.அரசுப் பிரிவில் விசாரித்துப் பார்த்தார் சுந்தரம். பொதுவாக ஆயுள் நீட்டிப்புக்கு நிபந்தனைகள், வாய்ப்புகள் உள்ளனவா என சட்டரீதியான வாய்ப்புகளைத் தேடினார். ஒருவருக்கு வழங்கப்பட்ட பணித் திட்டத்தை முடிக்க வேண்டிய அவகாசம் தேவைப்பட்டால் அதுவரை ஒத்திப் போடலாம் என்பது மட்டுமே சட்டத்தில் இருந்தது. ஐம்பது வயதை நெருங்குகிறவர்களுக்கு அப்படி எந்த புராஜெக்டையும் அரசு வழங்குவதில்லை. நாற்பத்தொன்பதாவது வயதிலிருந்தே வெகுமதி போன்ற வாழ்க்கைதான். அவர்களிடமிருந்த பெரும்பான்மையான பணிகள் தவிர்க்கப்பட்டுவிடும். கேத்தரின் சில மாதமாகவே பணியற்றவளாகவே இருந்தார். அதனால் சட்டரீதியான வாய்ப்பு இல்லை.சட்டத்துக்குப் புறம்பான வழிகளை யோசிக்க வேண்டியிருந்தது. பிறந்த தேதியைத் திருத்துவது. அதாவது, இரண்டு நாள்களுக்கு அடுத்த தேதியை கேத்தரினின் பிறந்த நாளாக மாற்றி எழுதுவது. அரசுப் பிரிவினர் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். ஆயினும் அது அத்தனை சுலபமானதாக இல்லை. அப்படியிருந்தால் அரசுப் பிரிவில் பணியாற்றுகிறவர்கள் எல்லோரும் அவர்களின் வாழ்நாளை நீட்டித்துக்கொள்ள இயலுமே? அதற்குச் சில விதிமுறைகள் இருந்தன. அதில் இரண்டு ஆபத்துகளைக் கடக்க வேண்டியிருந்தது. முதல் ஆபத்து… அரசப் பிரிவின் தலைவர் மட்டுமே பிறந்த நாள்களைப் பார்வையிட முடியும். அவரைச் சம்மதிக்க வைக்க வேண்டும். அவரோ கெடுபிடியும் அச்சமும் அதிகம் கொண்டவர். ரஷ்ய தேசத்தவர். அலெக்சேய் ரஸ்னிகோவ் அவர் பெயர். அவர் மூலமாக ஏதாவது தில்லுமுல்லு செய்ய நினைத்தால், அவரே முதல் ஆளாக நின்று பிடித்துக் கொடுத்துவிடுவார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அப்படியே அது நடந்துவிட்டாலும் இரண்டாவது கண்டம் ஒன்று இருந்தது. ஆயுள் சான்றிதழை மாற்றித் தருவது. அதிபரின் நேரடி உதவியாளர் மட்டுமே ஆயுள் சான்றிதழை மாற்றித் தர முடியும். ஆக இரண்டு நெருப்பாற்றைக் கடந்துதான் கேத்தரினின் வாழ்க்கையை இரண்டு நாள்கள் அதிகரிக்க இயலும்.
நம்பிக்கையான சிலரிடம் கேத்தரினுக்கு இரண்டு நாள்கள் அவகாசம் தேவைப்படுவதைச் சொல்லிப் பார்த்தார். அதை மனதில் போட்டுக்கொள்ளவோ, ஏன் காதில் போட்டுக்கொள்ளவோ யாருக்கும் ஈடுபாடு இல்லை. ஒரே ஒரு மார்க்கமிருந்தது. கணிவாசலின் கடவு எண்ணைக் கண்டுபிடிப்பது. அது இருந்தால் இந்த இரண்டு கண்டங்களையும் தாண்டிவிட முடியும். அது அசாத்தியமானது என்றாலும் அது ஒன்றுதான் கடைசி வழி. சுந்தரம் உண்மையில் துவண்டுபோனார். கணிவாசல் கடவு எண் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நகரத்தின் ஒட்டுமொத்தக் கணி கேந்திரத்தை நிர்மாணிக்கும் அதிகாரம் படைத்தவர் இந்த எட்டாவது மாடியில் பொது வசிப்பிடத்தில் இருக்க வாய்ப்பே இல்லை.அன்று இரவு எல்லோரும் பொது உணவு உண்ணும்போது கேத்தரினுக்கு அது கடைசி விருந்து என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. அவருக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைத்து வெட்கினார். வருந்தினார். கேத்தரின் முகம் ஆழ்ந்த விரக்தியில் இருந்தது. அருகில் இருந்தவர்களுக்கு கேத்தரினுக்கு இது இறுதி நாள் என்பது தெரிந்திருந்தும் வருத்தமோ, பரபரப்போ இல்லாமல் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அனைவருக்கும் அது பழகியிருந்தது. உறக்கத்துக்குச் செல்லும் முன் இறுதி நாள் கொண்டாடப்படும். ஓய்வு பெறுகிறவர் முன் நின்று எல்லோரும் உதடுகளில் விரல்களைத் தொட்டு முத்தங்களைப் பறக்க விடுவார்கள். ஆயுள் சான்றிதழ் பெற்ற அந்த ஓய்வு பெறுநர் அவற்றைக் கைகூப்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் நடைமுறை.உணவு உண்டுகொண்டிருந்த நேரத்தில் சுந்தரம் சற்றே பரபரப்படைந்தார். அவர் பெரும்பாடுபட்டு வேகமாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டார். கண்களில் செவ்வரி ஓடி அடங்கியது. அவர் முக தசைகள் இறுக்கமடைவதை யாரும் கவனிக்கவில்லை. தன் நோக்கின்றி கேத்தரினைப் பார்த்தார்.
வழக்கமான முறைப்படி எல்லோரும் முத்தம் பறக்கவிட்டனர். கேத்தரின் இறுதியாக ஒரு முறை சுந்தரத்தைப் பார்த்தார்.
மறுநாள் காலை எல்லோரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்தது. காலை உணவுக்கு கேத்தரினும் வந்தார். எல்லோருக்கும் ஆச்சர்யம். சுந்தரத்தைப் பார்த்துப் பெரு மகிழ்ச்சியுடன் தனக்கு ஆயுள் சான்றிதழ் இரண்டு நாள்கள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். அனைவரும் கேத்தரினுக்கு வாழ்த்துகள் சொன்னார்கள்.
‘`மகிழ்ச்சி’’ என்றார் சுந்தரம்.கூடுதலாக இரண்டு நாள்கள் என்பது மலைப்பாக இருந்தது. நிறைய நேரமிருப்பதாக மகிழ்ந்தார் கேத்தரின். `’எப்படி இந்தச் சலுகை கிடைத்தது எனத் தெரியவில்லை. யாரோ உதவி செய்திருக்கிறார்கள். சுந்தரம்… அது நீங்களாகவும் இருக்கலாம். உங்களைப் போல சிலரிடம்தான் நான் என் விருப்பத்தைச் சொன்னேன். அது இறைவனின் காதுகளை எட்டிவிட்டது. இறைவன்… ஆ... எத்தனை பழைய வார்த்தை. வழக்கொழிந்துபோய்விட்டாலும் இப்போது சொல்வதற்கு உவப்பாக இருக்கிறது. இறைவன் சித்தம்.’’ கேத்தரின் சந்தோஷத்தில் திளைத்தார். உணவு முடிந்து பலரும் பணிக்குச் சென்றுவிட்டனர். வெறிச்சோடியிருந்தது பொது உணவகம்.
‘`சரி… இப்போதாவது சொல்லுங்கள்… என்ன வரைகிறீர்கள்?’’ சுந்தரம் கேட்டார்.
‘`உண்மையில் அது அவ்வளவு பெரிய சாதனையாக இருக்காது. அதை ஓவியம் என்பது பெரிய வார்த்தை. வரைவது என் மனத் திருப்திக்காகத்தான். அதனால் அது ரகசியமாகவே இருக்கட்டும். நான் நீக்கப்பட்ட பிறகு நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் அது தெரிந்துபோகும். அந்த ஓவியம் அப்போது தெரிவதுதான் நல்லது.’’
அன்று இரவும் அடுத்த நாள் இரவும் கேத்தரின் திருப்தியாக இருந்தார். கேத்தரினின் கண்களில் நிறைவு தெரிந்தது. இறுதிவிடைக்கு முன், ‘`நீங்கள்தான் எனக்கு உதவினீர்கள் என்று என் உள் மனது சொல்கிறது’’ என்றார் கேத்தரின்.

சுந்தரம் தலையசைத்து மறுத்தார். ‘`உங்களுக்கு உதவி செய்தது யாரென்று உண்மையிலேயே தெரியவில்லை. நேற்றைய முன்தினம் சாப்பிட்டுக்கொண்டிருந்தோமே அப்போதுதான் கணிவாசல் கடவு எண் எனக்குக் கிடைத்தது. நான் சாப்பிட்ட தட்டிலே அந்தப் பன்னிரண்டு இலக்க எண் எழுதப்பட்டிருந்தது. சாப்பிட்டு முடிக்கும் தறுவாயில் தட்டிலே அந்த எண்கள் தெரிய ஆரம்பித்தன. ஆரம்பத்தில் அதை ஏதோ கிறுக்கல் என இருந்தேன். பிறகுதான் அதைக் கடவு எண் என யூகிக்க முடிந்தது. என் தட்டிலே அதை யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் அந்தக் கடவு எண் மாறிவிடும். அன்று ஒருநாள்தான் அந்த எண்ணுக்கு மரியாதை. அதை யாரோ எனக்குச் சரியான நேரத்தில் தெரிவித்தார்கள். அதன் மூலம்தான் உங்கள் பிறந்த தேதியை மாற்றினேன்.’’
‘`நீங்கள் முயற்சி எடுக்காவிட்டால் நடந்திருக்குமா?’’ எனக் கேட்டாள்.
‘`என் முயற்சியை யாரோ மதித்திருக்கிறார்கள். அதுதான் பெரிய விஷயம். சட்ட திட்டங்களை மீறுவதற்கு யாரோ சிலர் தயாராகிவிட்டார்கள் என்பதன் அறிகுறி அது.’’
‘`நல்லது நடக்கட்டும்’’ என்றார் கேத்தரின்.மறுநாள் அவர் இருக்கப்போவதில்லை. ஆனால் அவர் வரைந்த ஓவியம் இருக்கும்.காலையில் கேத்தரின் படுக்கையில் இல்லை. அவர் இருந்த படுக்கையைச் சுற்றி சிலர் அமைதியாக நின்றிருந்தனர். சுந்தரம் அவர்களில் ஒருவராகப் போய் நின்றார். படுக்கைப் போர்வையில் வட்டமாக நீல நிறத் துணியொன்று தைக்கப்பட்டிருந்தது. ஓவியமென அவர் சொன்னது இதைத்தான். அவருடைய சட்டை நூலையே பிரித்தெடுத்து அந்த வெள்ளைப் போர்வையில் நீலத் துணியைத் தைத்திருந்தார். நீலநிற வட்டத்தில் சோற்றுப் பருக்கைகளைத் திட்டுத்திட்டாக ஐந்து இடங்களில் ஒட்டியிருந்தாள்.
ஆ… சோற்றுப் பருக்கைகள் நிலங்களைக் குறிப்பன. நீலம்… கடல். அது… அது... முன்பு எப்போதோ மானிடர் வாழ்ந்த நீலப் புவிக்கோளம். வெகுநாள்களாகப் பார்க்க மறந்துவிட்ட அந்தக் கோளத்தை விண்வெளியில் தேடினார். அது ஒரு நீலக் கோலிக்குண்டென கதிர்த் தடுப்புக் கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தெரிந்தது.
- தமிழ்மகன்
(01.07.2021 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)