
சு.வேணுகோபால் - ஓவியங்கள்: நன்மாறன்
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
சொல்லிக்கொண்டு கிளம்ப எழுந்தபோது, ‘‘இரு’’ என்று எழுந்தாள் செல்வராணி. ஜன்னல் ஓரம் சுருட்டிவைத்திருந்த `சென்னை சில்க்ஸ்’ கட்டைப்பையை எடுத்து உதறி விரித்துப் பார்த்தாள். அச்சு பெயின்ட் பிசிறு பிசிறாக எழுத்து மங்கியிருந்தாலும் ஓட்டை இல்லை. வராண்டாவின் கிழக்குப் பக்கம் ஆறப்போட்டிருந்த வெங்காயத்தின் பரசலையொட்டி பையின் வாயைத் திறந்து தள்ளித் தள்ளி ஏற்றினாள்.
“ராணி அக்கா, போதும். இதை நான் எவ்வளவு தூரம் சுமக்கிறது?” என்றாள் வசந்தா.
“ஒண்ணும் இல்லை. பட்டறையிலிருந்து எடுத்த காய்தான். கனக்காது. ஈரம் சுண்டி கலகலன்னு ஆகிப்போச்சு.''
“சரி, அதுக்கு இவ்வளவா?”
“நல்ல பருவட்டான காய்க, எங்க கிடைக்கும். பல்லு பிசிறு பிசுறா உதுருனதை 35 ரூபாய் சொல்றான். கொண்டு போ.” வெங்காய மணம் கமகமவென மூக்கில் தட்டியது.
உருட்டிப்பையில் தள்ளும்போதே வெங்காயச் சருகுகள் சுழன்று உருண்டு பறந்து நகர்ந்தன. தூர்ப் பகுதியில் ஒட்டியிருந்த மண் உதிர்ந்து சிமென்ட் தரையில் செம்மண் நிறத்தில் படிந்தது. செல்வராணி பையில் பாதியை நிரப்பி வாசல் முன் வைத்தாள்.
“அம்மா இங்கே பாரும்மா” என்றாள் மகள் திவ்யா.

செல்வராணியின் மகள் சரண்யா, சுக்குட்டி கீரையை ஒடித்து பச்சை ஈரப்பசை இறங்க இறங்க இரண்டு கைப்பிடி கொண்டு வந்தாள். அரளிப்பூ நிறத்தில் போட்டிருந்த தொளதொள நைட்டியில் பிள்ளைத்தாச்சி மார்பகங்கள் கனத்து ஆடின. கீரை வாங்கும்போது பால் வாசம் வந்தது. பீட்ரூட் நட்ட காட்டில் ஆங்காங்கே தண்டங்கீரையும், சுக்குட்டி கீரையும் முழங்கால் உயரத்துக்கு மேல் வளர்ந்து நிற்கின்றன.
தொட்டிலை விலக்கி ஒருக்களித்துத் தூங்கும் குழந்தையின் கன்னத்தை மெல்லக் கிள்ளி முத்தமிட்டாள் வசந்தா. கால் காப்பு உருட்டாக இருந்தது. கங்கணத்தின் மஞ்சள் மங்கிவிட்டது. கன்னத்திலும் நெற்றியிலும் திருஷ்டிப் பொட்டு. வயிற்றைத் தடவிவிட்டு நிமிர்ந்தாள். “என்ன அமரிக்கையா கையை அணைகொடுத்துத் தூங்குது பாரு.”
“அவங்க தாத்தா மாதிரி அக்ஷயா நல்ல நிறம்மா” என்றாள் திவ்யா. வந்ததும், கைப்பிள்ளையைத் தூக்கிக்கொண்டு தாயும் மகளும் 500, 500 வைத்தார்கள். ஐந்து வருடங்கள் கருக்கள் இளங்கருவிலே தங்காமல் கலைந்து கலைந்து சரண்யாவை நொந்துபோகவைத்தன.
“மாப்பிள்ளை வந்தாரா?” என்றாள் வசந்தா. “முந்தாநாள்தான் வந்துட்டு போனாரு” என்றாள் செல்வராணி.
வாசலைத் தாண்டியதும் “என்ன ஏதாவது சுமுகத்துக்கு வராங்களா” என்று பொதுப்
படையாக கேட்டாள் செல்வராணி. “என்னக்கா சுமுகம், மணி மாதிரி பிள்ளையைப் பெத்தா. கைப்பிள்ளையை விட்டுட்டுப் போனவன் எட்டிப் பார்க்கலை. நாலு வயசு இப்போ. அப்பன் முகம் எப்படி இருக்கும்னுகூட தெரியாது, குடியின்னா அளவத்த குடிக்கா. வாங்குற சம்பளத்துக்கு மேல குடிக்கிறான். `அது செய்யலை, இது செய்யலை’ன்னு அடிச்சா எத்தனை நாளைக்கு இவ தாங்குவா. பூ எடுக்கிற பருத்தி மாதிரி சிங்காரிச்சி சிங்காரிச்சு வளர்த்தோம். அழிஞ்ச பருத்திமாறா ஆக்கிட்டான். போயிருச்சு நாலு வருஷம். திவ்யா அப்பா, `நீ வாங்குற சம்பளத்தை பேங்க்ல போட்டு வை. அதைத் தொட வேண்டாம். நாங்க பிள்ளைகளை வளர்க்கிறோம். நீ பாட்டுக்கு நிம்மதியா நம்ம வீட்ல இருந்து போ’ன்னு சொல்லிட்டாருக்கா. அப்படித்தான் வண்டி ஓடுது. அவகிட்ட இருந்த கலகலப்பே அத்துப்போச்சு.” அம்மா சொல்லச் சொல்ல, திவ்யா விலகிப்போய் தென்னங்கன்று மட்டையை வலது கையால் பிடித்து இந்தப் பக்கம், அந்தப் பக்கம் அசைத்தாள். ‘எல்லாரும் சேர்ந்துதானே செஞ்சீங்க, இப்ப மட்டும் எங்கிருந்து வாய் வருது’ என்று முகத்தைத் திருப்பி எரிச்சல்பட தனக்குள் சொல்கிறாள்.
“பையனைத் தூக்கிக்கிட்டு வந்திருக்கலாம்ல?”
“என் தம்பி பையன் பிரதீப் வேடிக்கை காட்டுறேன்னு தூக்கிட்டுப் போயிட்டான், நாங்களும் சட்டுனு உன்னைய, சரண்யாவ, பிள்ளைய, மாமாவ எல்லாரையும் ஒரு எட்டு பார்த்துட்டு போயிடலாம்னுதான் வந்தோம். இந்தா இப்பிடி பொங்கலு, கிங்கலுனு வந்தாத்தானே நமக்கு முடியுது, சரி வர்றோம்.”
கையைக் காட்டிவிட்டு கட்டைப்பையைப் பிடித்துக்கொண்டு வரப்பில் நடந்தாள். பின்னால் திவ்யா எதுவும் பேசாமல் நடந்தாள். கட்டைப்பையைப் பிடித்திருக்கும் அம்மாவின் இடது கை விரைப்பாக இருந்தது. அம்மாமீது வாஞ்சனைமிக்கவள் செல்வராணி. அம்மாவுடன் ஒன்பதாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்தவள். கம்மாய்த்தோப்பு, மேட்டாங்காடு என்று சின்ன வயதில் சுற்றி அடித்ததைச் சொல்வாள். செல்வராணி பெரியம்மா அன்று சொன்னதை அம்மாவும் கேட்கவில்லை, அப்பாவும் கேட்கவில்லையே!
அம்மாவின் அரக்கு நிற கட்டைக்குள் பாடியின் பட்டை நாடா வெயிலுக்கு நன்றாகத் தெரிந்தது. மாராப்பைத் தொடுத்து அடுக்கி கொசுவி மறைத்தாலும் நன்றாக தூக்கலாகவே தெரியும். இந்த விஷயத்தில் அம்மாவைப் பார்க்கும்போது பொறாமையாக இருக்கும். குட்டைக் கைவைத்த சட்டைக்கு, மேல் கை நீண்டு புஷ்டியாகத் தெரிகிறது. செப்பை எலும்பே தெரியாத வண்ணம் சதைப்பற்றோடு முதுகு படர்ந்து மினுமினுவென்று இருக்கிறது. 45 வயது போலவே இல்லை. சாம்பல்போல கறுப்பு நிறம் மங்கிய கூந்தலைப் பார்ப்பதுகூட அபூர்வம்தான். டை அடித்து கறுப்பாகவே வைத்துக்கொள்கிறது. பின் இடுப்பின் ஒற்றை மடிப்பு சேலைக்குள் புதைகிறது. பின்னழகில் வளர்ப்பும் ஏறி இறங்குகிறது. தன் புறத்தை தடவிக்கொண்டாள். முன்னே தளுக்கிக் கூத்தாடும் குடத்தை ஓங்கி குத்துவிடத்
தோன்றியது. கைச்சுமை உடம்பை இறுக்கி அசைப்பதில் இளமை வந்துவிடுகிறது. நேற்று வந்ததும் சாந்தாமணி அத்தை சொன்னாள்... “அம்மாவும் மகளுமாவா இருக்கீங்க... அக்கா, தங்கை மாதிரியில்ல இன்னும் இருக்கீங்க.” அப்பாகூட பல் தெரியாவண்ணம் பெருமிதமாகச் சிரித்தார், அம்மாவைவிட ஒரு இன்ச் உயரம். இந்தக் காலத்தில் பிள்ளைகள் அம்மா, அப்பாவைவிட கொஞ்சம் தூக்கலாகவே வளர்ந்து விடுகிறார்கள். ஆற்றுத் தண்ணீர் வரவினாலோ, பசியாற உண்ண வாய்த்ததினாலோ என்னவோ ஒன்று.
மாலை நடக்கவிருக்கும் கபடிப் போட்டி பற்றி இப்போதும் ஒரு சிறுவன் வர்ணித்து சொன்னான். குரலிலே 14, 15 வயது கலந்து காற்றில் வந்தது. நொச்சி ஓடைக்குள் இறங்கும் முன்பு வசந்தா பையை வலக்கைக்கு மாற்றிக்கொண்டாள். ஓடைக்குள் இறங்காமல் கிழக்குத் திரும்பும் வரப்பு வழி போனால் வண்டித்தடம் வரும். கமலா ஜின்னிங் ஃபேக்டரி பின்சுவர்ப் பக்கமாக வண்டித்தடம் போய் பெரிய ஊர்ச்சாலையில் சேரும். 20 வருடங்களுக்கு முன்பே மில், ஓட்டத்தை நிறுத்திக்கொண்டது, வண்டித்தடத்தில் ஏறலாம்தான்... தண்ணி அடிக்க வருபவர்கள், மில் சுவருக்கு இந்தப் பக்கம்தான் வருகிறார்கள். குடித்துவிட்டு பாட்டிலை உடைத்துச் சிதைக்கிறார்கள். அசிங்கமும் பண்ணிவைக்கிறார்கள்.
ஓடையின் இடது பக்கம் வாழைத்தோட்டம், வலது பக்கம் மஞ்சள்காடு. வாழைத் தோட்டத்தில் தார் வெட்டி வெட்டி பாதி அழிந்த நிலையில் நிற்கிறது. கன்றுகள் ஏராளமாக போத்தடித்து வெளிர் பச்சையில் நிற்கின்றன. சாய்ந்து தார் தொங்கும் மரங்களின் இலைகள் கிழிந்து கிழிந்து ஓரம் கறுப்படித்திருக்கிறது. கரையின் இருபுறமும் நொச்சி மரங்கள் பந்தல் போட்டதுபோல நிற்கின்றன. ஆளரவம் கேட்ட செம்பூத்து கிளைகளிலிருந்து இறங்கி, இரண்டடிப்பில் இறக்கையை விரித்து, பலந்தடி குகைக்குள்ளே நீண்டு போய் இடது பக்க மரவரிசையில் புகுந்து மறைந்தது. `கூ... கூ...’ என்று கத்தியது. பதில் குரல் வாழைத் தோட்டத்திலிருந்து வந்தது. ஜில்லென தண்ணீர் ஏறித் ததும்பிப்போவதாக ஒரு கணம் தோன்றியது. மழைக்காலங்களில் முழங்கால் அளவு வெள்ளம் குதித்து தவழ்ந்து வரும்போது சாரைப்பாம்பு போவதுபோல இருக்கும். நீர் வற்றி தெளிந்து ஓடும்போது, பெண்கள் துணிகளைக் கொண்டுவந்து துவைப்பார்கள். குழந்தைகள் நீரில் புரண்டு நீர் தெளித்து ஆடுவார்கள், ஆடுவார்கள் அப்படி ஆடுவார்கள். தன்னோடு வந்து எத்தனையோ நாள் ஆடியிருக்கிறாள்.
தோட்டத்துச் சாலைக்குச் செல்பவர்கள் இந்த ஓடையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு செல்கிறார்கள். 30, 40 வருடங்களுக்கு முன்பு இருந்த மணல் இல்லை. எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். ஆடிக்காற்று ஜன்னலோரத்தில் உதிர்த்து ஏற்றிவிட்டுப்போன மணல்போலத்தான் காலடியில் கிடக்கிறது. ஓடைக்கு வலப்பக்கம் திரும்ப நடந்தால் கருப்பராயன் கோயில். அதனைத் தாண்டி கொஞ்சம் நடந்தால் குறுக்கே ஊர்ச் சாலையில் முட்டி, பாலத்தின் அடியில் புகுந்து, மறுபடி வடக்காக ஓடை ஓடி கண்மாய்க்குள் போகிறது.

தூரத்தில் வருவது தெரிந்த முகம்போலத் தென்பட்டது. சோப்பு டப்பாவைத் துண்டுக்குள் சுற்றிவைத்து இடக் கையில் பிடித்துக்கொண்டு ஜோதி கிருஷ்ணன் வருவதைக் கண்டதும் வசந்தாவுக்குத் துணுக்குற்றது. தனியார் வங்கியில் வேலை பார்க்கிறான். அவனுக்கும் இரண்டு பிள்ளைகள் ஆகிவிட்டன. நெருங்கவும் மெல்லச் சிரித்து ‘வாங்கத்தை’ என்றான் ஜோதி. `வர்றோம்ப்பா...’ என்றதில், குறுகுறுப்போடு மேலுதட்டில் சங்கடமான வெட்கம் இழைந்தது. லேசாகத் திரும்பினாள். திவ்யா தயங்கி நிற்பது தெரிந்தது. வசந்தா கண்டுக்காதது போல ஒரே போக்காக நடந்தாள். எவ்வளவு வேகமாக ஓடை முக்கைத் திரும்பி மறைய முடியுமோ அந்த வேகத்தில் நடந்தாள். பின்னாலே `வா’வென்றழைக்கவும் இல்லை, திரும்பவும் இல்லை.
விரும்புகிறார்கள் என்பது தெரியவந்தபோது, அது அப்படி அப்படியே தன்பாட்டுக்கு விலகிவிடும் என்றுதான் நினைத்தாள். ஐந்தாம் வகுப்பு படிக்கிற காலத்திலிருந்தே `அத்தை... அத்தை’ என்று வீட்டுக்கு விளையாட வந்துவிடுவான். திவ்யாவும், ராஜவேல் அண்ணா வீட்டுக்குப் போவாள். விகற்பமில்லாமல் வளர்கிறார்கள் என்றுதான் நினைத்தார்கள். `அத்தை, மாமா’ என்று முறைவைத்து அழைப்பது எத்தனையோ காலமாக இருந்துவரும் ஒன்றுதானே. அந்தக் குடிகாரன் பெண் கேட்டு வரும்போதுதான் திவ்யா அவனை வேண்டாம் என்றாள். நல்ல வேலையில் இருப்பதையே எல்லோருக்கும் சொன்னார்கள். ஆளும் நன்றாக இருக்கிறான். குடி கூத்து இல்லை என்பதுபோலத்தான் நறுவிசாக அப்போது தென்பட்டான். எந்தப் புற்றில் என்ன பாம்பு இருக்கிறது என்று யாருக்குத் தெரியும். திவ்யா, டீச்சர் ட்ரெயினிங் முடித்து மாரியம்மன் மெட்ரிகுலேஷனுக்கு போய்க்கொண்டிருந்தாள். ஜாதகப் பொருத்தம் பார்க்க நன்றாகத்தான் இருந்தது. அப்போதுதான் மெல்ல ``ஜோதி கிருஷ்ணனைக் கட்டிக்கொள்கிறேன்’’ என்றாள்.
“வெள்ளாளக் கவுண்டர் வீட்டுப் பையனேடி, நம்ம சாதிசனம் இல்லை. உனக்குப் பின்னால ரெண்டு இருக்கு. சொந்தக்காரங்க முன்னால தலை குனிஞ்சு நிக்கவெக்கலாமுன்னு நினைக்கிறியா, காலம் பூராவும் அவச்சொல் கேட்டுட்டு நிம்மதி இல்லாம ஆக்கணும்னு திட்டம் கட்டிட்டியா... ஒரு பல்லு இருக்காது. அப்படியே வெச்சு கட்டையில ஒரே போடா போட்டு உதுத்துருவேன். என் வேகாலத்தைக் கூட்டாத.”
“அம்மா நான்தானே வாழப்போறேன், அவன்கிட்ட என்ன குறை?”
“நல்ல பையன்தான், யாரு இல்லைன்னா... ஒங்கப்பா, மாமா, சித்தப்பா ஒத்துக்குவாங்களா? அந்த எண்ணத்தை முதல்ல குப்பையில போடு. என் மண்டையை உருட்டாத, சொல்லிட்டேன்.’’
அதன்பிறகுதான் செல்வராணியை திவ்யா அழைத்து வந்தாள். அவள் சொன்னால் கேட்பேன் என்று நினைத்திருக்கிறாள். “நீ கட்டிவெக்கலைன்னா அவனைக் கூட்டிட்டு ஓடிடுவேன்.”
“நீ ஓடு... ஒன் காலை ஒன் அப்பனும், அண்ணன் தம்பியும் வெட்டுவான்.”
செல்வராணி, திவ்யா அப்பாவிடம் சொன்னபோது, “என்னப்பா நீ பேசுற... எங்க சாதிக்காரன் என்னை மதிப்பானா? காரித் துப்பிட மாட்டான்... ஒன் பிள்ளையை வேத்தாளுக்கு குடுப்பியாப்பா?” ஒரேமுட்டாக மறுத்துவிட்டார்.
நிச்சயதார்த்தம் முடிந்து இரவெல்லாம் அழுதாள். செல்வராணி பெரியம்மா, “சரி உனக்கு தைரியம் இருந்தா அவனைக் கூட்டிட்டுப் போய் பொழச்சிக்கோ, நான் எப்படியோ பின்னால சம்மதிக்கவெக்கிறேன்” என்றாள். “கேட்டுட்டேன் பெரியம்மா. அவன், `அத்தை மாமா’ன்னு சின்னக் குழந்தையிலருந்து பழகிட்டு இப்போ ஒன்னைக் கூட்டிட்டுப் போனா, என்னை உங்க அப்பா அம்மா என்னன்னு நினைக்க மாட்டாங்க... நான் அவங்களை ஏமாத்துனதுபோல ஆயிடும். உங்க அம்மா, அப்பா சம்மதிச்சா கட்டிக்கிறேங்கிறான்” என்றாள்.
கடைசிவரை திவ்யா அப்பா மசியவேயில்லை. தானாவது ‘சரி’ என்று சொல்லியிருந்தால் திவ்யா துணிந்திருப்பாள். என் மண்டையை உருட்டியே வாழ்நாளெல்லாம் அப்பன்காரன் சாகடிப்பான் என்று தோன்றியதால் பிடியே கொடுக்க
வில்லை. இது என்ன வாழ்க்கை, இந்த வயதில் திவ்யா என்ன சுகத்தைக் கண்டாள். இந்த நான்காண்டுகள் பள்ளிக்கும் வீட்டுக்கும் ஓடுகிறாள். குழந்தையைப் பார்க்கிறாள். இந்த வயதில், தான் அடைவதைக்கூட இல்லாமல் ஜடமாக்கி வைத்துவிட்டானே இந்தக் கடவுள். `தலையில் பூ வைத்துக்கொண்டு போ’ என்றால் `இப்ப அது ஒண்ணுதான் குறை’ என்று எகிறுகிறாள். படர்ந்து மூடிய விரக்தி இறங்கிச் செல்ல வழியில்லை. தூக்கமின்மையால் இப்போது அடிக்கடி கிறுகிறுப்பு வேறு பிள்ளைக்கு வருகிறது.
ஓடைத்திருப்பம் வரவும் திரும்பிப் பார்க்கலாமா என்று தோன்றியது. என்னமோ பேசிக்கொள்ளட்டும் என்று தோன்றியது. திரும்பிப் பார்க்கவில்லை. அடுத்த எட்டு வைத்தபோது கழுத்தை முழுக்கத் திருப்பிப் பாராமல் ஓரக்கண்ணால் பார்த்தாள். எதிரெதிராக நிற்பது மட்டும் தெரிந்தது. நடையின் வேகத்தைக் குறைத்தாள். மெல்ல நடந்தாள். அதைவிட மிக மெல்ல நடக்கத் தொடங்கிவிட்டாள். இந்தப் பக்கம் வாழைத்தோட்டம், அந்தப் பக்கம் மஞ்சள் காடு.
மூன்று மணிக்கு எழுந்து, குளித்து, கோயில் மண்டபத்துக்குப்போக அம்மா ஒவ்வொருவராக எழுப்பியபோதுதான் அக்கா ஆசாரி வீட்டுப் பையனுடன் ஓடிப் போய்விட்டது மெல்லத் தெரிந்தது. வீடே கிடுகிடுத்து அலைமோதியது. அம்மா நெஞ்சில் இரு கைகளால் அறைந்து அறைந்து கதறினாள். கல்யாண நாளாக விடிய இருந்ததில் இடி விழுந்துவிட்டது. கொட்டடி விட்டத்தில் கயிறுபோட்ட அப்பாவின் காலை தம்பியும் தங்கையும் இறுக்கிப் பிடித்து கெஞ்சிய குரலைக் கேட்டு இளையபெருமாள் மாமா ஓடிவந்து தடுத்து இழுத்துக்கொண்டு வந்தார். அப்பா கொட்டடி கல்தூணைப் பிடித்து கலங்கி நின்றபோது தாங்க முடியாத துக்கம் பொங்கிப் பொங்கி வந்தது. அவர் குலுங்கி அழுததைப் பார்த்ததே இல்லை.
பளபளவென விடிந்தபோது ஊரே கூடிவிட்டது. பயமும் நடுக்கமும் முழுதாகக் கவ்வின. ஊரே மூக்குறிவதுபோல இருந்தது. யாரையும் முகம்கொண்டு பார்க்க முடியவில்லை. அவமானம் கூரிய வாளைப்போல வந்து குடைந்தது. இருட்டு சுருட்டி வைத்துக்கொண்டதுபோல ஆனது. வெளியூர்களிலும், சொந்த பந்தங்களுக்கும் வைத்ததுபோக மிச்சம் மீதி இருந்த 15, 16 திருமணப் பத்திரிகைகளைத் தூக்கிவந்து நெருப்பிலிட்டார். வைத்த பத்திரிகைகளுக்கு நெருப்பிட முடியவில்லை. சந்தோஷமாக வந்தவர்கள், வருத்தத்தோடும் ஏளனத்தோடும் நின்றார்கள். திரும்பவும் அப்பா எல்லோரையும் சாவதற்கு இழுத்தார். கனகராஜ் மாமா அப்பாவை ஆறுதல்படுத்திக்கொண்டிருந்தார்.
அந்த வருஷம்தான் பி.யூ.சி-யை முடித்துவிட்டு ப்ளஸ் டூ கொண்டு வந்திருந்தார்கள். ப்ளஸ் டூ முடித்து கல்லூரி போக வேண்டும் என்றபோது அப்பா, `உன்னை மதுரை லேடி டோக்கில் சேர்த்து படிக்கவெக்கிறேன்’ என்று பூரித்துச் சொன்னார். படித்து, நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்ற ஆசை மட்டும்தான் இருந்தது.
ஒரு மணி நேரத்தில் மணமகளாக நிறுத்த முடிவானபோது தம்பி சுரேந்திரன் கட்டிப்பிடித்து அழுதான். “வசந்தா அக்கா, அவனைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கலைக்கா. நீ படிக்க ஆசைப்பட்டே. சின்ன வயசுலயே சாதிக்க நெனச்சே. எல்லாரும் சேர்ந்து ஒன்னை சீரழிக்கிறாங்களே. நீ சம்மதிக்காதே, நீ படி, அவ ஓடுனா நீ ஏன் கழுத்தை நீட்டுறே. அவனை அடிச்சுத் தொரத்தணும் போல இருக்குக்கா…” என்றபோது முதுகில் அப்பா ஓங்கி அடித்தார். எழுந்தபோது கன்னத்தில் பலமாக அறை விழுந்தது. பெருமாள் மாமா தடுத்து இழுத்துக்கொண்டு போனார். தம்பி ரொம்பப் பிரியமாக இருந்தவன். ஊரிலேயே முதன்முதலாக `சைக்கிள் ஓட்டு’ என்று கற்றுக் கொடுத்தவன் அவன். மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கும் கூட்டிச் சென்றவன் தம்பிதான்.

“வசந்தா குட்டி, நீதான் குடும்ப மானத்தைக் காப்பாத்தணும். நீதான் அப்பா, அம்மாவை தலை குனியவிடாம நிமிரவெக்கணும். நீ தங்கம்டி... உனக்கு எல்லாம் நல்லதாத்தான் அமையும். நான் இருக்கேன், நான் இருக்கேன்...’’ சின்ன பாட்டி, பெரிய பாட்டி, அம்மா, மாமா, அப்பா, அத்தை, பெரியப்பா எத்தனை எத்தனை பேரோ வந்து தைரியப்படுத்தினார்கள். தாங்கினார்கள். ``நல்லது’’ என்றார்கள். ``நம் குலத்துக்கு நீ குலதெய்வமடி’’ என்றார்கள், தம்பியைத் தவிர.
அந்த வயதில், இழந்த அவமானங்களைத் துடைத்து எறியும் வல்லமை தன்னிடம் இருப்பதாக திடீரெனத் தோன்றியது. அனைவரின் கண்ணீரையும் தன்னால் துடைக்க முடியும் என்று தோன்றியது. அல்லல்பட்டு நிற்கும் அனைவருக்கும் நிம்மதிப் பெருமூச்சைத் தர முடியும் என்று தோன்றியது. சொந்த பந்தங்கள் எல்லாம் சிபாரிசு, ஆதரவு. காட்டுவெள்ளம் பெருகி கரை உடைந்து, அடித்துக்கொண்டு போகும் நொடியில் அப்படியே ததும்பி வழிந்து தம்பட்டு நின்றதுபோல ஆகிப்போனது.
திரும்பிப் பார்த்தாள். ஓடை நேரே சென்று முட்டித் திரும்பும் இடம் தெரியாமல் இருந்தது. திவ்யா வரவில்லை. அந்தப் பக்கம் வாழைத்தோட்டம், இந்தப் பக்கம் மஞ்சள் காடு. இருகரை அடர்ந்த நொச்சி மரங்கள். காலடியில் மெல்ல மெத்தை போன்ற மணல். வந்த வழியில் யாரேனும் வருவார்களோ என்று சங்கடம் உண்டானது.
இடதுபுறமிருக்கும் கருப்பராயன் கோயிலை நோக்கி நடந்தாள். கட்டைப்பையை திண்டுக் கல்லில் வைத்துவிட்டு மேடைமீது வெட்டரிவாளை ஓங்கி நிற்கும் கருப்பராயனைப் பார்த்து கண்மூடி வணங்கினாள். கன்னத்தில் யாரோ முத்தமிடுவதுபோலத் தோன்ற திடுக்கென கண்விழித்தாள். ச்சே, என்னமோ ஓர் எண்ணம்.
இருபுறமும் கருவேல மரங்கள் பெரிய குடைகள்போல நிற்கின்றன. வெண்ணிறத்தில் குண்டு குண்டாக பூக்கள் பூத்திருக்கின்றன. உதிர்ந்த பூவை எடுத்து அணில் வால் துடிக்கக் கத்தி, இரு கைகளால் பற்களில் வைத்துக் கொறிக்கிறது. பின்னங்காலில் மடக்கி அமர்ந்து எழுந்து நிற்கும் அணில் தன்னைப் பார்த்து வணங்குவதுபோல இருந்தது. குதித்து நாகக்கல்லில் தாவி நின்றது. அதிலிருந்து கருப்பராயன் இடுப்புக்குப் பாய்ந்து பற்றி, கிஜிகிஜிவென வெட்டரிவாளின் நுனியில் ஏறி நின்று பார்த்தது. அங்கிருந்து மரக்கிளைக்குத் தாவி ஓடியது. பூத்து நிற்கும் மரங்களைப் பார்த்து கண்மூடி வணங்கினாள். தாலி கட்டும்போது ‘என் அக்கா எனக்கில்லை. பிரித்துக்கொண்டு போய்விடுவார்கள்.’ ஒரு நொடியில் இல்லாமலாகிவிட்டாள். உடம்பு திடுக்கென சிலிர்த்தது. ஓடி ஆடிக்கொண்டிருந்தவளின் மேல் தீர்க்க முடியாத சுமையைக் கழுத்தில் ஏற்றிவிட்டார்களே என்பதைக் கண்டதும் ஏதும் செய்ய முடியாத கவலை தம்பியைப் பற்றியது. `அவனை அடித்துத் துரத்த வேண்டும்’ என்று வெறுப்பு பொங்க தம்பி திருமணமான புதிதில் சொன்னான். `அப்படியெல்லாம் பேசாதே’ என்று ஆறுதல்படுத்தினாள்.
கிழக்கிலிருந்து யாரும் ஓடைக்குள் நுழைந்து வரவில்லை. அத்தை பையன் கார்த்திகேயனைத் திருமணம் செய்ய மனதளவில் விரும்பியிருந்தாள். கதை கந்தலாகிப்போய்விட்டது.
வாரிமேடு முழுக்க அருகம்புல் கருகருவென பசுமையோடு செழித்திருக்கிறது. அதில் கால்நீட்டி அமர்ந்திருக்கிறாள். நான்குபுறமும் கடலைக்காடு. செடிக்கு இருபது முப்பது பூக்கள் மஞ்சளாக பூத்திருக்கின்றன. ஈசான மூலையில் கறுத்துத் திரண்டு மலை விழ மேகம் அப்படியே சரிகிறது. மடியில் கார்த்திகேயன் மல்லாந்து படுத்தவாக்கில் சிரிக்கிறான். குனிந்து அவனது முகத்தை அள்ளி அணைக்கிறாள். அவன் மூக்கும் உதடுகளும் மார்பில் பட சிலிர்க்கிறது. பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அப்படியே இறுக்கிப் புதைத்தபோது வெறுங்கையைத்தான் இறுக்க முடிந்தது. கற்பனை செய்துகொண்ட இந்தக் காட்சி விதவிதமாக வரும். ஏமாற்றும். திருமணத்துக்குப் பின் எப்படியோ மங்கி, மறைந்தே போய்விட்டது.
கிழக்குப் பக்கமிருந்து கைக்குழந்தையைத் தோளில் சாய்த்துக்கொண்டு ஒரு பெண் வருவது தெரிந்ததும் `திவ்யா’ என்று குரல் கொடுத்து அழைக்கலாமா என்று தோன்றியது. என்னத்தைப் பேசுவாள்... வாழ்ந்த வாழ்க்கையைச் சொல்வாளோ... வாழப்போவதைச் சொல்வாளோ... பெற்ற மகனைப் பற்றிச் சொல்வாளோ... தான் விரும்பிய காலங்களைச் சொல்வாளோ... அவன் கைவிட்டதை சொல்வாளோ... மகிழ்ச்சி வற்றி, வறண்டு காய்ந்து போனதைச் சொல்வாளோ... தன்னை இந்தச் சீரழிவில் தள்ளியவர்களைச் சொல்வாளோ, சொல்லாத ஒன்றையும் சொல்வாளோ.
வருவது சுமதி. தன் மகனைவிட ஒரு வயது இளையவள். சிரித்துக்கொண்டே வந்தாள். ‘`அத்தை’’ என்றாள். ‘`இந்தா திவ்யா ஒண்ணுக்கு ஒதுங்குனா’’ என்று சொன்னபடி குழந்தையை வாங்கி கோயில் பக்கம் கொண்டுவந்து நிறுத்தினாள். குழந்தையின் நெற்றியிலும் சுமதியின் நெற்றியிலும் திருநீறு துலக்கமாகத் தெரிந்தது. மாரியம்மன் கோயிலுக்குப் போய்விட்டு வருகிறாள். குடும்பத்தை விசாரிப்பதுபோல பேச்சுக் கொடுத்தாள். தோட்டச்சாலைக்கு வந்ததைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.
திவ்யா ஓடை முக்கில் திரும்பி வருவதைக் கண்டதும் ஆசுவாசம் தோன்றியது. தன் தோளிலிருந்த குழந்தையை சுமதியிடம் கொடுத்தாள். அவள் வீட்டுக்கு அழைத்தாள். நாளை ஊரில் இருந்தால் வருவதாகச் சொன்னாள்.
முகமெல்லாம் பூத்துக்குலுங்கும் சிரிப்புடன் வந்தாள் திவ்யா. இந்தச் சிரிப்பு, இந்தக் குதூகலம், துள்ளலைப் பார்க்க திடுக்கென குமருபோல ஆகிவிட்டதாகத் தோன்றியது. அதில் சின்ன நாணம் மட்டும் லேசாக மூக்கில் சுழித்தது. மற்றபடி அவள் பள்ளியிலிருந்து முதல் மதிப்பெண் வாங்கி வந்த குழந்தை போல ஆனாள். இந்த ஜொலிப்பு ஒரு நாள் தங்குமா? ஒரு நாளோ, ஒரு மணி நேரமோ இந்த மகிழ்ச்சி எவ்வளவு நம்பிக்கையைக் கொண்டுவருகிறது. மரக்கிளையிலிருந்து சருக்கென விழுவதைப்போல நூல்பசையால் வந்து, அந்தரத்தில் தொங்கி, மறுகணம் மேலேறும் எட்டுக்கால் பூச்சியைப்போல ஒரு நம்பிக்கை.
சுமதியை மேற்கால் அனுப்பிவிட்டு, கிழக்கால் ஓடையில் நடந்தனர். அம்மாவிடமிருந்து கட்டைப்பையை மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு நடந்தாள். “அம்மா, பூக்காரன் வந்தா நாலுமொழம் பூ வாங்கும்மா” என்றாள். மகளின் உடலில் ஏதேனும் புதிய அடையாளங்கள் தெரிகின்றனவா என்று கண்களை ஓடவிட்டாள். அப்படியொன்றும் தென்படவில்லை. ஒளிவீசும் இந்த முகம், இப்படியே இருக்கக் கூடாதா என்று தோன்றியது.