
- விஜி முருகநாதன்

பாட்டிக்குப் பசித்தது. பசி என்றால் அகோரப்பசி.
காத்திருந்தார்... கொஞ்ச தூரத்தில் அந்தக் காகமும் காத்திருந்தது.
அவர்கள் பரிமாறிக்கொண்டிருந்தனர். வாசனை மூக்கைத் துளைத்தது.
அவருக்கு தாகம் எடுத்தது. ஆனால், அவரால் நீர் பருக முடியாது. அவர் சூட்சும ரூபத்தில் இருந்தார். அவர் இறந்து பதினாறு நாள்கள் ஆகின்றன.
இதோ ஓடி ஓடி அவருக்குப் பிடித்ததாகப் பரிமாறுகிறாளே... அவள்தான் கடைசி மருமகள்.
பார்த்துப் பார்த்து அவருக்குப் பிடிக்கும் இனிப்பு வகையறாக்களைப் பரிமாறு கிறாளே அவள்தான் மூத்த மருமகள். மூத்த மகனைக் காதலித்து மணந்தவள்.
காய்கறிகளை இலையில் வைத்துக் கொண்டு இருப்பவள்தான் இரண்டாவது மருமகள். ஒன்றுவிட்ட சொந்தம்.
அதோ படைப்பு இலைகளின் முன்னால் நின்றுகொண்டு, ``அதை அப்படி வை... இதை எடுத்து இப்படி வை...” என்று அதட்டிக்கொண்டு இருப்பவள்தான் மூத்த பெண்.
பாட்டிக்கு ஒரு பெண்ணும், மூன்று பையன்களும் பிறந்தனர். அந்த நால்வருக்கும் ஆளுக்கு ஓர் ஆண் ஒரு பெண்ணுமாகப் பிறக்க... பாட்டிக்கு மொத்தம் எட்டு பேரக் குழந்தைகள்.
அவர்களும் தன் பங்குக்கு, `பாட்டிக்கு சாக்லேட் பிடிக்கும். ஐஸ்க்ரீம் பிடிக்கும்’ என்று வைத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் பாட்டியிடம் பிரியமாகத்தான் இருந்தார்கள். பள்ளிக்கூட லீவு விட்ட வுடனேயே அவரிடம் வந்து விடுவார்கள். அவர் செய்து கொடுக்கும் ரவைக் கச்சாயமும், ஒப்பிட்டும் உயிர் அவர்களுக்கு.
இவையெல்லாம் பத்து வருடங்களுக்கு முன்பு. இப்போதெல்லாம் காலையில் வந்தால் சாயந்திரம் கிளம்பிவிடுகிறார்கள். கேட்டால், ‘நெட்டே கிடைக்க மாட்டேங் குது. போரடிக்குது’ என்கிறார்கள்.
பாட்டிக்கு மீண்டும் பசித்தது.
சுற்றிலும் பார்த்தார். காரை பெயர்ந்து கிடந்தது. பெரிய தொட்டிக்கட்டு வீடு. அவருக்குக் கல்யாணமாகி வரும்போது பதினாறு வயது. அவருக்கும் அவர் வீட்டுக் காரருக்கும் பதினைந்து வயது வித்தியாசம். ரொம்ப கண்டிப்பு. வாசலில் செருப்பு சத்தம் கேட்டாலே நடுங்குவார். கணவர் நெசவுத்தறி போட்டிருந்தார். விடியற்காலை எழுந்தால் இருட்டும் வரை வேலை இருக்கும். ஒரு நிமிடம்கூட உட்கார விட மாட்டார் மாமியார்.

பிறந்த வீடு அடுத்த தெருதான். ஆனால், முதல் பிள்ளைப்பேறுக்குக்கூட அனுப்ப வில்லை. `நீ போயிட்டா... இங்க யாரு பாக்கறது?’
பிள்ளை வெளியில் வந்து விழும் வரை வேலை செய்தாள். அப்புறம் ஒருநாள்தான். மூன்றாம் நாளே மறுபடியும் வேலை பார்க்க வேண்டும்.
பாட்டிக்குப் பசித்தது...
அவர்கள் பரிமாறி முடித்து இருந்தார்கள். ஒவ்வொரு மருமகளும் பரிமாறி முடித்து விட்டு ‘ஸ்... ஸ்...’ என்று இடுப்பை பிடித்துக் கொண்டார்கள்.
அவருக்கு சிரிப்பு வந்தது. இதுக்கே இப்படி என்றால்... அவள் காலம் போல் ஒரு மைல் நடந்து போய் பொதுக் கிணற்றில் கயிறு கட்டி இழுத்துத் தண்ணீர் கொண்டு வருவது என்றால் என்ன செய்வார்கள்..?
அதென்னவோ கல்யாணம் செய்து கொண்டு வந்ததிலிருந்து சாப்பாட்டுக்கோ, துணிமணிக்கோ ஒரு குறையும் இல்லை. ஆனால், பயந்து பயந்துதான் வாழ்க்கை.
மாமியார் இருந்தவரை மாமியாரிடம் பயம். புருஷன் இருக்கும் வரை புருஷனிடம் பயம். பின்னர்... பெற்ற பிள்ளைகளிடம்.
புருஷன் இருக்கும் வரை ஒன்றும் தோன்ற வில்லை. அவருக்கு நோய் என்று எதுவும் இல்லை. ஆனாலும், ஒரு நிமிடம் எங்கேயும் போக முடியாது. சலிக்காமல் பார்த்துக் கொண்டார். அமைதியாக இயற்கை எய்தினார் அவர்.
``அங்காளி பங்காளி எல்லாம் வாங்க... ஆத்தாளுக்கு சாமி கும்பிடப் போறோம்” என்று சத்தம் போட்டார்கள்.
தள்ளி நின்றுகொண்டிருந்தவர்கள் எல்லாம் ஒன்றுசேர ஆரம்பித்தார்கள்.
“ம்... ஆத்தா இருந்தவரைக்கும் ஒரு குறையும் இல்லை. நல்ல சாவு...” பங்காளி வீட்டுப் பெண் பேசிக்கொண்டு இருந்தாள்.
“எங்க ஒரு காக்காயைக்கூடக் காணோம்.”
தலைக்குத் தலைப் பேசிக்கொண்டு இருந் தார்கள்.
“எல்லோரும் அமைதியா இருங்கப்பா... சாமி கும்பிடப்போறாங்க...”
பாட்டிக்குப் பசித்தது...
புருஷன் போன பிறகு, ‘ஏதாவது ஒரு பையனுடன் இருந்துக்கலாம்’ என்று போனார். தொட்ட தொண்ணூறுக்கும் சண்டை. வேலைக்குப் போகிற மருமகளிடம் அவர் சம்பளம் இல்லாத வேலைக்காரி.
அடுத்தவன்... காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டவன். சரிபட்டு வரவில்லை. ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்குப் போட்டான்.
மூன்றாவது மகன் வீட்டுக்குப் போனால் அங்கே பையனுக்கும் இவருக்குமே சரிபட்டு வரவில்லை. காசு... காசு... என்று பிடுங்கி எடுத்தான்.
புளித்துப்போய் மகள் வீட்டுக்குப் போகாமலேயே அவரே கால் படி போட்டு பொங்கி, சாப்பிட ஆரம்பித்தார்.
புருஷன் பாட்டியின் பெயரில் வங்கியில் பணம் போட்டு வைத்திருந்தார். அந்தப் பணமே அவர் இறுதிச் செலவு வரை இருந்தது.
அவங்கள் சாமி கும்பிட ஆரம்பித்தார்கள். நீர் விளாவத் தொடங்கினார்கள். இன்னும் கொஞ்ச நேரம்தான் அத்தனை பேரையும் பார்க்க முடியும்.
பாட்டிக்குப் பசித்தது...
அவரும் அவர் கணவர் போன மாதிரி போயிருந்தால் எவ்வளவோ நன்றாக இருந் திருக்கும்.
இரண்டு மாதங்களுக்குமுன் தலைசுற்றிக் கீழே விழுந்து விட்டார். இடுப்பு முறிந்து விட்டது.
மருத்துவமனையில் சேர்த்து ஆபரேஷனும் பண்ணி விட்டார்கள். ஆனால், டாக்டர்கள் `மெதுவாத்தான் நடப்பார்கள்...’ என்றார்கள்.
அன்றிலிருந்து தொடங் கியது போராட்டம்.
`நான் இவங்களைப் பார்ப்பேனா... வேலைக்குப் போவனா?' மூத்த மருமகள்
`நாங்க மட்டும் எப்படி செலவு பண்ண முடியும்...’னு இழுத்தாள் சின்ன மருமகள்.
`என்கிட்டயெல்லாம் அவ்வளவு வசதி இல்லை’ - இரண்டாவது மகன்.
`மூணு பசங்க இருக்கறப்ப நான் கொண்டு போய் வச்சுப் பார்த்தா சாதி சனம் என்ன சொல்லும்னா’ - மகள்.
கடைசியாக அவர் வீட்டி லேயே ஆள் வைத்து பார்த்துக்கொள்ளாலாம் என்று முடிவு செய்தார்கள்.
வாரம் ஒரு தடவை ஒவ்வொருத்தராக மாறி மாறி வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி அதன்படியே செய்தார்கள்.
இரண்டு மாதமும் நரக வேதனைதான்.
ஆள்காரிங்க கண்காணிப்பு இருந்தாலே ஒழுங்கா பார்க்க மாட்டார்கள். யாரும் இல்லையென்றால்...
ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போறதுக்கு பஞ்சு வாங்கிக் கொடுத்து இருந்தார்கள். அதைக்கூட ஒழுங்கா மாற்ற மாட்டார்கள். படுத்துக் கொண்டே இருந்ததால் கொஞ்ச நாள்களிலேயே பேச்சுக் குழற ஆரம்பித்தது. படுக்கைப் புண் வந்தது.
மற்ற எல்லாத்தையும்விட பேசுவதற்குத்தான் மனம் ஏங்கியது.
ஆரம்பத்தில் பேசுவதற்கு வந்துகொண்டு இருந்த அக்கம்பக்கத்து சனங்கள் அவரிடமிருந்து வந்த வாடை யாலும், பேச்சு புரியாத
தாலும் கொஞ்சம் கொஞ்சமாக வருவதையே நிறுத்திக் கொண் டார்கள்.
வாரத்துக்கு கடமைக்கு ஒரு தடவை வந்து போனார்கள் அவருடைய வாரிசுகளும்.
தனியாகப் பேச ஆரம் பித்தார்.
இதெல்லாம் ஒரு மாசம்தான் அப்புறம் நினைவு தப்ப ஆரம் பித்தது.
மாமியாரும் புருஷனும் வந்து கூப்பிட ஆரம்பித்தார்கள்.
அவருக்குப் போகவே பிடிக்க வில்லை. பதினாறு நாள் முன்னாடிதான் வேறு யாரோ வந்து `எல்லாம் முடிஞ்சது. போலாம் வா’ன்னு அழைத்துப் போனார்கள்.
அவரோட உடலை அவரே வெளியே நின்று பார்த்தாள். ஒவ்வொரு மருமகளும் அடித்துக்கொண்டு அழுவதைப் பார்த்து அவரால் நம்பவே முடியலை.
அவருக்குப் பசித்தது...
அவர்கள் சாமி கும்பிட்டு முடித்து இருந் தார்கள்... முதல் பையன்தான் சடங்கெல்லாம் செய்தான். எல்லாப் படைப்பில் இருந்தும் ஒரு கை சாப்பாடும், இனிப்புகளையும் எடுத்து அவருக்காக ஓர் இலையில் வைத்து தீபா ராதனை காண்பித்தார்கள்.
இரண்டாவது மகன்தான் கூரை மேலேறி காகத்துக்கு வைத்தான்.
அவர்கள் காகத்தின் வருகைக்காகக் காத்திருந்தார்கள்.
அவர் பசியுடன் தூரத்தில் உட்கார்ந்து இருந்த காகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார்.
அப்போதுதான்... மூத்த மருமகள் தன் பக்கத்தில் இருந்த பங்காளி வீட்டுப் பெண்ணி டம் சொன்னாள், “இப்ப வந்துட்டாங்க. இருக்கறப்ப ஒரு பைசா செலவு செய்யல... இப்ப மட்டும் பாசத்த பொழியுறாங்க...”

அவள் என்னமோ தாழ்ந்த குரலில்தான் சொன்னாள். ஆனால், சின்னவனுக்குப் பாம்பு காது.
“அப்ப... நீங்கதான் செய்தீங்க... பார்த்தீங்க... நாங்கெல்லாம் எதுவும் பண்ணலையான்னு...” குரல் உசத்தினான்.
“நல்லா கேளுங்க... என்னமோ இவங்கதான் தலையில தூக்கி வச்சுகிட்டு போன மாதிரிங் கறா...” - மூத்த மருமகள்.
“ஆமாடா... நீதானே கிழிச்சே” - பெரியவன்.
“இல்ல... நீதான் கிழிச்சே” - சின்னவன்.
“ஏண்டா அப்போ... அம்மா நகையை யாரும் கேக்க மாட்டீங்களா’’ - சத்தம் போட் டான் பெரியவன்.
``நாங்க ஏண்டா கேட்காம இருக்கறோம்... உன்னைய மட்டும்தான் அம்மா பெத்துச்சா...எங்கம்மாவுக்கும் ஒரு பங்கு வேணும்’’ என்றாள் பேத்தி.
கூடி இருந்த கூட்டத்துக்கு இப்போது அவரோட நகை பேசுபொருளானது.
இத்தனைக்கும் நகை என்று பெரிதாக எதுவுமில்லை அவரிடம். மூணுவடச் சங்கிலி ஒன்றும் கைக்கு இரு வளையல்களும்தான். அதுவும் அவரோட புருஷன் செய்து போட்டது.
ஒவ்வொருத்தனும் கத்தி கத்தி தன் தரப்பு நியாயத்தைச் சொல்கிறார்கள்.
கூடியிருந்த கூட்டம்... “நிறுத்துங்கப்பா... இந்த ஒரு காரியத்தையும் ஒழுங்கா செஞ்சு ஆத்தாள நல்லபடியா அனுப்பிச்சு வைங்கப்பா.”
பாட்டிக்குப் பசித்தது...
அவருக்காக வைத்த படைப்பு இலை சாப்பாடு காய ஆரம்பித்தது.
அவர் பார்த்துக்கொண்டே இருந்தார். வயிற்றின் பசி குறையவில்லை.
அவருடைய மூணுவடச் சங்கிலியின் ஒவ்வொரு வடமும் ஒவ்வொரு மருமகளுக்கும், வளையல்கள் மகளுக்கும் என்று பிரித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
பக்கத்தில் சலனம் கண்டு பார்த்தார். அவரை மேலே அழைத்துச் செல்ல அவர்கள் வந்திருந்தார்கள்.
`பசியாறியாயிற்றா..?! போகலாமா..?!’ அவர் அவர்களுடன் நடக்கத் தொடங்கினார். கொஞ்ச தூரம் கழித்து திரும்பிப் பார்த்தாள்.
அவர்கள் யாரையும் காணவில்லை..
காகம் உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த் தாள். அது வெறிச்சென்றிருந்தது.
யாரோ சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.
“ஏனோ, காக்கா வரவே இல்லையே...”