சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

அப்பலாச்சியன் தடம் - சிறுகதை

அப்பலாச்சியன் தடம்
பிரீமியம் ஸ்டோரி
News
அப்பலாச்சியன் தடம்

- மயிலன் ஜி சின்னப்பன்

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

இத்தனை பேர் நடைபயிலும் பாதையில் கொஞ்சமும் சங்கோஜமில்லாமல் எப்படி வழியை மறித்துக்கொண்டு நிற்கிறார்களெனத் தெரியவில்லை. கேக் வெட்டி, நுரையைப் பீய்ச்சியடித்து, ஜிகினா வெடித்து எக்காளம் வேறு. நடக்கும் அத்தனை தலைகளும் சற்று நிறுத்தி அந்த ஆரவாரத்தை நோட்டமிடுவதையும், அவர்களின் வெவ்வேறுவிதமான முகச்சுளிப்புகளையும் அக்கூட்டத்தினர் பொருட்படுத்துகிறார்களில்லை. பிறந்தநாள் நாயகனுக்கு போதுமான சாபம் கிடைத்திருக்கும். அந்த வார்த்தையைக் கேட்டாலே சிரிப்பார்களாயிருக்கும். சாபமென்பதை வாழ்ந்துபார்க்காமல் எப்படிப் புரியும்... தலையில் வந்து விழுந்த தாள்களைத் தட்டிவிட்டபடி நிறுத்தாமல் நடையை எட்டிப்போட்டேன். மணிக்கட்டுத் திரை ஆயிரத்திநானூற்றுசொச்சம் என்றது. அதற்கே வாயால் மூச்சுவிடவேண்டியிருக்கிறது.

கொழுப்பில் நல்லது, கெட்டது என்றா இருக்கிறது... பேனாவை வைத்து ஆய்வறிக்கையில் வட்டமடித்துக்கொண்டே வந்த நாராயணன் டாக்டர் அப்படித்தான் சொன்னார் - நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் - எனக்கு நல்லது மட்டுப்பட்டு, கெட்டது தலைவிரித்து ஆடுகிறதாம். ‘எண்ணம்போல் கொழுப்பு’போல. இரவுக்கு மட்டும் ஒரு மாத்திரை எடுக்கச் சொல்லி பரிந்துரைத்தார். அந்தப் பொட்டு மாத்திரைக்கும் லேசான உடம்புவலி தவிர்க்க முடியாத பக்கவிளைவாம்.

அப்பலாச்சியன் தடம் - சிறுகதை

``மேலுவலிக்குத்தான சார் டெஸ்ட்டே எடுத்தேன்’’ என்றேன்.

“அந்த வலி போயிரும். இது வேற மாதிரி இருக்கும்.” சொல்லும்போது அவருக்கே சிரிப்பு வந்துவிட்டது. “இல்லேன்னா டெய்லி நடங்க... கையை நல்லா வீசி வீசி... ரெண்டு மாசம்விட்டு டெஸ்ட்டெடுத்து பார்ப்போம்...” - இந்த ஆலோசனை தேவலாம் என்றிருந்தது. ஐயாயிரம் அடிகள் நடக்கச் சொன்னார். குத்துமதிப்பாக இல்லாமல் ஏதோ சூத்திர ரகசியம்போல சொல்லும்போது ஒரு திட்டவட்டம்.

பீமாநகர் பாலத்திலிருந்து பாரதிதாசன் பாலத்து ரவுண்டானா வரை - உத்தேசமாக எண்ணூறு அடிகள். இதே நடைபாதையையொட்டி குறுக்கும் நெடுக்கும் பதினைந்து இருபது வருடங்களாக சைக்கிளும் ஸ்கூட்டரும் இறுக்கிப் பிடித்து வாங்கிய ஈஎம்ஐ காரும் ஓட்டியாகிவிட்டது. எல்லாம் இப்படியான நடையில் ஆரம்பித்ததுதான். அந்த நடையும் இந்த நடையும் ஒன்றா என்ன... பாதையோ புல்லிலிருந்து செம்மண் தடமாகவும், சிமென்ட் கட்டாந்தரையாகவும் முன்னேறி, இப்போது அச்சுக்கல் பதிக்கப்பட்டு ஆடம்பரத்துக்குச் சில செடிகளும் நடப்பட்டு எப்படியெப்படியோ பண்பட்டுவிட்டது. பாதையையொட்டிய உய்யகொண்டானோ ஆகாயத்தாமரை மண்டி சாக்கடையாகிவிட்டது. அந்த நடை, இந்த நடை ஆவதற்கு மத்தியில்தான் அத்தனையும் சத்தமில்லாமல் நடந்தேறியிருக்கின்றன.

மறுசுற்று வருவதற்குள் கும்பல் கலைந்துவிட்டது. அவ்வளவுதான். சிரித்து, கூச்சலிட்டு, சில நிமிடங்களில் அவ்விடத்தை அசுத்தப்படுத்திவிட்டு காணாமல்போய்விட்டார்கள்; கூத்தாடிகள். அந்த வயதையொத்தே இங்கு எத்தனை பேர் திரிகிறார்கள்... கரும்புச்சாறு குடிப்பவர்கள்... கோல்கப்பா விழுங்குபவர்கள்... செல்ஃபி எடுக்க வந்தவர்கள்... கைகோத்து இடத்தை அடைத்துக்கொண்டு உலா செல்பவர்கள்... கெட்ட கொழுப்பெல்லாம் நாற்பது வயதுக்குத்தான் வந்துசேரும்போல. கண்ணுக்கெட்டியவரை, நரைமண்டைகள்தான் முசுமுசுவென மூச்செடுத்துக்கொண்டும், வியர்வையை வழித்துக்கொண்டும். அந்தத் தொப்பைகளைப் பார்த்தால் அவநம்பிக்கைதான் பெருக்கெடுக்கிறது.

அப்பலாச்சியன் தடம் - சிறுகதை

கட்டைச்சுவரில் உட்கார்ந்து சில ஜோடிகள் காதல் செய்கின்றன. அவர்களும் எங்கேதான் போவார்கள் பாவம். செலவழிக்காமல் காதல் செய்ய இந்த ஊரில் கடற்கரையும் பூங்காவுமா திறந்துகிடக்கின்றன? உட்கார்ந்து பேச ஓரிடத்துக்கு யோக்கியதை உண்டா... பத்து ரூபாய் பெறாத காபி கெட்ட கேட்டுக்கு, மேசை போட்டால் முப்பது ரூபாய். இரண்டு வில்லை ஐஸ் கட்டி போட்டால் எண்பது ரூபாய். இங்கு வந்து கேக் வெட்டி கெக்களித்ததை நான்கு சுவருக்குள் செய்ய மூவாயிரமாச்சும் வாடகை அழ வேண்டும். அதற்காகவேணும் இப்படித்தான் செய்யவேண்டியிருக்கிறது. பாதை அசுத்தப்பட்டால் என்ன கெட்டுவிடப்போகிறது. நாய் நக்கிவிட்டுப் போகட்டும். அராஜகங்கள் எல்லாமே எவைக்கோவான எதிர்வினைகள்தான்.

எதையுமே ஒழுங்குபட செய்ய மாட்டேன் என என்னைப் பற்றி எப்போதுமே ஒரு கருத்து உண்டு. என்னையுமே அது அப்படித்தான் என நம்பவைத்திருக்கிறார்கள். சொல்லிச் சொல்லி நம்பவைப்பதைத்தானே சுமக்கவேண்டியிருக்கிறது. இதையாவது முழுமையாகச் செய்ய வேண்டுமென உத்தேசித்ததில், ஒரு ஜோடி வெள்ளை ஷூ, இந்த மணிக்கட்டு சமாசாரம் என ஐயாயிரம் முதலீட்டை விழுங்கியாயிற்று. அதற்காகவேணும் செய்துவிடலாமென்றால், மூன்றாம் நாளுக்கே நாக்கு தள்ளுகிறது. விடுவதாயில்லை. வானம் இருட்டினால் என்ன கெட்டுவிடப்போகிறது. நேரமாக ஆக கட்டைச்சுவர் தலைகள் அதிகமாகத்தான் செய்கின்றன. மாங்கு மாங்கென நடக்கும் தலைமுறையை தங்களின் எதிர்காலப் பிரதிகளென நினைக்கக்கூட விரும்பாத தலைகள். இருட்டுக்குள் அவை ஒட்டி ஒட்டி சில்ஹவுட்டாகத் தெரிகின்றன. முத்தம் கொடுத்துக்கொள்வார்களாக இருக்கும். உற்றுப்பார்க்கவா முடியும்?

ப்படிப் பதற்ற முத்தம் கொடுத்துக்கொள்பவர்களைப் பார்த்தால் அமுதாவின் நினைப்பு முட்டிவிடுகிறது. சுற்றியிருப்பவர்களென்ன... பாதி நேரம் எனக்கே அவள் முத்தியது தெரியாது. காதில், உள்ளங்கையில், தோள்பட்டையில்... மெரினா அளிக்கும் சலுகைக்கு ஏற்றபடி அவ்வப்போது உதட்டில்... ஒன்றரை வருடத்தில் அப்படி பத்துப் பன்னிரண்டு சாத்தியப்பட்டிருக்கும். அதிலும் ஒன்றை, மேன்ஷனில் உடனிருந்த பாஸ்கரன் எப்போதோ பார்த்திருக்கிறான். ‘இரண்டாவது முறையும் கோட்டைவிட்டதுக்கு ஏதோ பொண்ணு சகவாசம்தான் காரணம்னு ஜோசியக்காரர் சொல்கிறார். அம்மாவும் நானும் நேற்றுதான் வைத்தீஸ்வரன் கோயிலில் ஏடு எடுத்துப் பார்த்தோம்’ என அப்பா எழுதிய அஞ்சலட்டையும் அவன் கையில்தான் கிடைத்தது. குறைந்தபட்சம் இதுபோன்ற சேதியை மட்டுமாவது கவர் லெட்டரில் எழுத வேண்டும் என்ற இங்கிதம்கூட இல்லாத மனுஷன்.

அப்பலாச்சியன் தடம் - சிறுகதை

அமுதாதான் காரணமென்று பழிபோட்டுத் தப்பிக்க முடியாது. கையாலாகாத்தனத்தை நாற்பத்தியாறிலும் ஒப்புக்கொள்ள வில்லையென்றால் எப்படி... மூன்று முறை எழுதியெழுதிப் பார்த்து வெறுங்கை வியர்வைதான் மிச்சம். முன்னாள் ஐ.ஏ.எஸ் ஆஸ்பிரன்ட் என ஜம்பம் வேண்டுமானால் பண்ணலாம். வெட்கமேயில்லாமல், உதயச்சந்திரனெல்லாம் என்னுடைய பேட்ச்தான் என்று சிலரிடம் சொல்லியிருக்கிறேன். அமுதாவும் கலெக்டர் பொண்டாட்டி என்றெல்லாம் கனவு கண்டிருப்பாள். கன்னிமாரா சினேகத்திலிருந்து நீண்ட சொப்பனம் அது. எனக்கும் சேர்த்து டிபன் பாக்ஸை நிரப்பிக்கொண்டு வருவாள். எலுமிச்சை சாதமோ, புளியோதரையோ... புல்தரையோ, பீச் மணலோ... பசியா தெரிந்தது? ‘மொட்டக் கழுத்தா இருக்காத. இதைப் போட்டுக்கோ’ - மெலிசான சங்கிலியைப் போட்டுவிட்டாள். ‘வீட்ல கேட்டா என்ன சொல்லுவ?’ என்றால் பதிலிருக்காது. என்னை எப்படியோவைத்துப் பார்க்கத்தான் அவள் ஆசைப்பட்டிருக்கிறாள். அதிகாரியாக... இல்லை ராஜாவாக... ஆசை இருந்து என்ன... தரித்திரியம் அனுமதிப்பதுதானே மிஞ்சும். அவளுக்கு அது புரியத்தான் காலம் எடுத்தது.

ரண்டு முறை முனைக்கு முனை நடந்து களைப்புதட்டிப் பார்த்தால் காலடிகள் மூவாயிரத்துக்கும் குறைவாகத்தான் காட்டுகின்றன. சைனாக்காரன் இன்னும் எப்படியெல்லாம் ஏமாற்றப்போகிறானெனத் தெரியவில்லை. பாலத்தையொட்டி அகல விரியும் பாதையில் சிமென்ட் இருக்கைகள் கண்ணில்பட்டன. கொஞ்சம் ஆசுவாசம். ஐந்து நிமிடம் உட்கார்ந்துவிட்டு நடந்தால் கொழுப்பு என்ன கோபித்துக்கொள்ளவா போகிறது... பல பிருஷ்டங்களால் தேய்க்கப்பட்ட பளபளக்கும் இருக்கை - வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் வந்த முதியவரொருவர் அதையும் கைக்குட்டையால் சுத்தப்படுத்திவிட்டுத்தான் உட்கார்ந்தார். இதெல்லாம் வியாதியென்று அப்பாவை, அம்மா திட்டுவதுண்டு. கழுவியிருக்கும் தட்டை ஒரு லோட்டா தண்ணீரூற்றி அலம்புவார்; பல் தேய்க்க ஒரு குடம் ஆகும். ‘சுத்தம் சுத்தமுன்னு களுவிக் களுவி, காசு கரைச்சுக்கிட்டு நிக்காமப் போனதுதான் மிச்சம்’ - அம்மா சொல்லிக்காட்டுவதே ஒருவிதத்தில் பாசாங்குதான். அவர் அப்படி என்ன சம்பாதித்தார், தங்காமல் போவதற்கு.

உமாராணிக்கும் அதே வியாதிதான். கழுவியதைக் கழுவுவாள், பூட்டியதை பத்துமுறை சரிபார்ப்பாள், மாதத்துக்கு ஒரு துடைப்பம் ஆகுமளவுக்கு அந்தப் பாழாய்ப்போன மொஸைக்கைக் கூட்டி அள்ளுவாள். ‘தொடச்சு தொடச்சுதான் வயித்துல எதுவும் நிக்காம தொடச்சுக்கிட்டு போவுது’ - அம்மாவின் வசனத்துக்கு வேலை இருந்துகொண்டுதான் இருந்தது. வசனம் பேச ஆயுசுதான் கொள்ளவில்லை. அப்பாவுக்கும் எட்டு மாசம்தான் அப்போது மிச்சமிருந்திருக்கிறது. ஐ.ஏ.எஸ்-ஸாகப் பார்க்க ஆசைப்பட்டவருக்கு எல்.ஐ.சி பாலிசி பிடிப்பவனாகப் பார்த்து கண்ணை மூடத்தான் கொடுப்பினை. அதுவுமே உமாராணியின் அண்ணன்காரன் அமைத்துக்கொடுத்த வேலைதான் - மாப்பிள்ளை சீர்.

மாராணிக்கு ஒரு வரப்பிரசாதம் உண்டு. எதுவொன்றையும் அவளால் சிரித்துக் கடக்க முடியும். கவலையாக சோபையாக இல்லை. ‘அட பரவால்லை, போவட்டும்’ என்பதான சிரிப்பு. ‘நல்ல சேதி இருக்கா?’ என்பார்கள், ‘எப்ப குளிச்ச?’ என்பார்கள், ‘டெஸ்ட் எடுத்துக்கலையா?’ என்பார்கள். அத்தனைக்கும், ‘இனிமேதான்...’ என்றொரு சிரிப்பு சிரிப்பாள். தனிமையில் அழுவாளாயிருக்கும் என்றுதான் நினைத்தேன். அப்படியும் இல்லை. ‘ஒனக்கு கொழந்தயெல்லாம் புடிக்காதா?’ ஒரு நள்ளிரவுச் சோர்வில் கேட்டபோது, ‘அப்படில்லாம் இல்லியே... புடிக்கும்தான்’ என்று மாரில் முகத்தைப் புதைத்துக்கொண்டு சிரித்தாள். குளித்துக் குளித்து, அதற்கான வயதில் அதுவே ஓய்ந்தும்விட்டது. சிரிப்பை மட்டும் இப்போதும் அப்படியே புடம்போட்டு வைத்திருக்கிறாள்.

ருகிலிருந்த பெரியவர் திரும்பி நேருக்கு நேராக என்னை ஏறிட்டார். முன் நெற்றி வழுக்கையாகி, கண்ணாடியணிந்த வயதான முகங்களெல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதாலோ என்னவோ... பரிச்சயத்தைக் காட்டிக்கொள்ளுமளவுக்கு சந்தேகமாக முறுவினேன். முகத்தை நிதானமாக வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டார். யாரோதான்போல. நான் எழுவதற்காகவே காத்திருந்தவராக அந்த இருக்கையில் சாய்ந்து படுத்துக்கொண்டார். ஏகநேரத்தில் பொறாமையாகவும் பரிதாபமாகவும் இருந்தது. ஒருகணம் அவரைப் பார்த்தபடி நின்றேன். கண்களைத் திறந்துவைத்தபடி படுத்திருந்தார்.

ஏதுமில்லாதவரா... ஏதும் என்பதைவிட யாருமில்லாதவரா... யாருமில்லாமல் போவதில், நிஜமாகவே இல்லாமல்போவது / இருந்தும் இல்லாமலிருப்பது என இரண்டு வகை உண்டுதானே. அன்றாடத்தின் ஒவ்வொரு தருணத்தையுமே வலிந்து கடக்கச் சிரமப்படும் வாழ்க்கையில் உழல்பவராக இருக்கலாம்; இல்லை அப்படியெல்லாம் எதுவுமேயில்லாமல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு சாயந்தரமானால் இப்படி வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு உலா வருபவராக இருக்க வேண்டும். இரண்டுக்குமே அம்சமாகப் பொருந்தும் முகமெனினும், முதலாவதையே எளிதில் ஏற்றுக்கொள்ள முடிந்தது. சினேகபாவமுள்ள முகங்கள் குறித்த கற்பனைகளில் என்னுடைய சாயல்கொண்ட பாத்திரத்தைத்தான் என்னால் எளிதில் வரைய முடிகிறது.

இப்படி தொந்திக்குப் பொருந்தாத டி ஷர்ட்டை மாட்டிக்கொண்டு கொழுப்பைக் கரைக்க நடப்பதெல்லாம் பின்னொரு காலத்தில் கைத்தடியுடன் வந்து கட்டாந்தரையில் இப்படி சாய்ந்துகொள்ளத்தானா என நினைத்தபோது மனவேகம் தொங்கிப்போனது. திரும்பி அம்மனிதரைப் பார்த்தேன். கண்களை மூடியிருந்தார். இப்படியொரு மாலையில் இப்படியோர் இடத்தில்தான், அவ்வயதில் எனக்கு உயிர் பிரிய வேண்டும் என்று தோன்றியது - அசட்டுச் சிந்தனைதான் - சுற்றி எல்லோரும் நடப்பார்கள்; நடந்துகொண்டேயிருப்பார்கள்; சிலர் நான் எழுந்துகொண்டால் சற்று அமரலாம் என யோசிப்பார்கள்; இருள் தட்டிவிடும்; கடைசியில் எவனோ ஒருவன் வந்து மூச்சு இருக்காவெனப் பார்ப்பான்; கூட்டம் கூடும்; போலீஸுக்குச் சொல்லுவார்கள்; உமாராணிக்குச் சொல்லியனுப்புவார்கள். அவள் அதுவரையெல்லாம் இருக்க வேண்டுமா? அப்பாவி அவள் - கொஞ்சம் முன்னரே புறப்படட்டும்.

ல்லவள் என்பதாலோ, அப்பாவி என்பதாலோ விவரமில்லாதவள் என்ற பொருளில்லை. ஒரு பார்வை போதும்; ஒரு சின்ன கண்சிமிட்டல் போதும்... ஒரு பக்க அளவுக்கு பொருளெடுத்துக்கொள்ள முடியும் அவளுக்கு. சரியான, தெளிவான பொருளைத் தாண்டி எதுவுமிருக்காது. பாலிசிக்காரனாக இருந்து, எல்.ஐ.சி மேம்பாட்டு அதிகாரியாக பதவி உயர்வு வருவதாக இருந்த நேரம் - கெட்டிக்காரத்தனமான பாலிசிக்காரர்களுக்கு தேர்வில் கூடுதல் ஐந்து மார்க் கொடுப்பது நடப்பிலிருந்த காலகட்டம் - மெட்ராஸுக்கு உமாராணியுடனும் மச்சான்காரனுடனும் போயிருந்த நாள். அது சாதாரண நாளாக இருக்கப்போவதில்லை எனவோர் அசரீரி. டிரிப்லிகேன் மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ஒரு சிறிய சந்தில் ஸ்டாம்ப் சைஸ் போட்டோ எடுக்கும் ஸ்டூடியோ வேலையை முடித்துக்கொண்டு, கையிலிருந்த படிவங்களுடன் எதிரிலிருந்த ஜெராக்ஸ் கடை மேசையில் போய் நின்றோம். சுதாரித்து கிரகிக்க இரண்டு சொடுக்குகள் ஆகியிருக்கும். எதிரில் நின்ற முகம் அமுதாவேதான். விநாடிகள் கொஞ்சம் உறைந்து தெளிந்தனவேயொழிய, இருவருமே வெளிப்படையாக எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

நகல் எந்திரத்துக்கு எதிர்முனையில் துண்டு விரிக்கப்பட்டு அதிலொரு பிஞ்சுக் குழந்தை தூங்கவைக்கப்பட்டிருந்தது. அமுதா அவதி அவதியாக நகலெடுத்துக் கொடுத்துவிட்டு, கல்லாவிலிருந்தவனை பதின்மூன்று ரூபாய் வாங்கிக்கொள்ளச் சொன்னாள். பிரதிகளைப் பெற்றுக்கொள்ள ஒரு விநாடிதான் தாமதித்திருப்பேன் அதிகபட்சம். அமுதாவும் அடுத்த ஆளிடம் ‘எத்தனை காப்பி’ என நகர்ந்துவிட்டாள். இவ்வளவு போதுமாக இருந்தது உமாராணிக்கு. லாட்ஜுக்குத் திரும்பி பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். மச்சான்காரன் பாத்ரூமுக்குள் நுழைந்ததும், மெல்ல என்னிடம் வந்து முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லாமல் ‘ஒங்களுக்கு செத்த வெளில போனுன்னா போயிட்டு வாங்க’ என்றாள். சொல்லிவிட்டு தனக்கேயான பிரத்யேக இன்முகத்துடன் பையில் துணிகளை மடித்துவைக்க ஆரம்பித்திருந்தாள். அவ்வளவுதான். அவளுக்கெல்லாம் இன்னும் நல்ல வாழ்க்கை அமைந்திருக்க வேண்டும்.

மீண்டும் அவ்விடத்தைக் கடக்கும்போது முதியவர் உறங்கியிருந்தார். நியான் விளக்கு வெளிச்சத்தில் இமைகள் முழுமையாக மூடியிருக்கவில்லை என்பது தெரிந்தது. தாண்டி கொஞ்சம் தூரம் நடந்த பிறகு துணுக்குற்று திரும்பி வந்து பார்த்தேன். மாரும் வயிறும் ஏறியிறங்கிக்கொண்டிருந்தன. கண்டுபிடித்துச் சொல்லும் அந்தக் கடைசி ஆள் நான் இல்லைபோலும். மணிக்கட்டில் ஆறாயிரத்தைக் கடந்திருந்தேன். இன்னும் ஒரு சுற்று நடக்கலாம் என்றிருந்தது. தொடக்கத்திலிருந்த சோர்வு இப்போது இல்லை. நினைவுதான் மருந்து, ஊக்கம், நிவாரணம் எல்லாமும். நிகழ்காலத்தை எத்தனை தக்கையாக உணரச்செய்ய முடிகிறது அதனால்.

ஏழு மணியைத் தாண்டினால் போதும், வௌவாலைப்போல எங்கிருந்துதான் இப்படிக் கூட்டமாக வந்து மண்டுவார்களோ தெரியவில்லை. புல்லட்டுகளும் ஸ்கூட்டிகளும் சாரி சாரியாக வந்துவிட்டன. இனி நடக்க இடமிருக்காது. பெரியவரையும் கத்திக் கிளப்பிவிடுவார்கள். முன்னெப்போதோ கூனி மறைந்து, விலகி ஓடி காதலித்தவர்கள், இவர்கள் காதல் செய்யுமிடத்திலிருந்தும் விலகித்தான் போகவேண்டியிருக்கிறது. இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஒளிய அவசியமில்லையென்ற தெளிவு இருக்கிறது.

முதாவுக்கும் அப்போதே அந்தத் துணிச்சல் உண்டுதான். ஒருவிதத்தில் அவளுக்கு என்னுடைய காதலியாகக் காட்டிக்கொள்வதில் கொஞ்சம் பெருமையே இருந்ததென்றுதான் நினைக்கிறேன். கையைக் கோக்காமல் நடக்கவே மாட்டாள். அதிகாரியாகப் போகிறவனின் காதலி. நடையிலேயே ஒரு தோரணை; தம்பட்டம். லட்சண அளவீட்டிலும் அவளுக்கு அப்படியோர் எண்ணம் இருந்திருக்க வேண்டும். அவள் என்னைப் பார்ப்பதற்கு நிறையவே குறுகிச் சிறுத்து மறைந்து வந்தது, லாட்ஜிலிருந்து மீண்டும் ஜெராக்ஸ் கடைக்கு நான் போயிருந்த அந்தத் தருணத்தில்தான்.

அனுமதி கேட்கவோ, குழந்தையைக் கொஞ்சம் பார்த்துக்கொள்ள சொல்லவோ... கல்லாவில் உட்கார்ந்திருந்தவனிடம் தயங்கித் தயங்கி ஏதோ பேசியவள், இடுப்பில் செருகியிருந்த முந்தியைத் தளர்த்திவிட்டுக்கொண்டு தெருமுக்குக்கு வந்தாள். சுற்றியிலும் இரைச்சல் - உலக ஓட்டத்துக்கு நாங்களோ, எங்களுக் கிடையிலான அதிர்வுகளோ அத்தனை முக்கியமல்ல என்பதைப்போல வாகனங்கள் சீறிக்கொண்டிருந்தன. இருவருக்குமே எதிலிருந்து விசாரிக்க ஆரம்பிப்பதென்ற துலக்கமில்லை. அங்கு தரையில் கிடந்த குழந்தை அவளுடையதாவெனக் கேட்க வாயெடுத்து, அந்தக் கடை அவளுடைய சொந்தக் கடையா என்று கேட்டேன். தினக்கூலி வேலைக்கு இருப்பதாகச் சொன்னாள். முன்கதை, பின்கதை எதுவுமேயில்லாமல் தன்னுடைய சரிவைச் சொல்ல அவளுக்கு அந்த ஒரு வாக்கியமே போதுமானதாக இருந்தது.

மேற்கொண்டு எனக்கு நடக்கத் தோன்றவில்லை. ரொம்பவே இருட்டிவிட்டதைப்போலிருந்தது. அங்கிருக்கும் இளஞ்ஜோடிகளுக்கான வெளியில் அநாவசியப் பொதியாக அடைத்துக்கொண்டு நிற்பதாக உணர்ந்தேன். கால்கள் இடறின. நினைவுதான் விஷமும்.

பாதியில் நடையை நிறுத்தி, திரும்ப ஆரம்பித்தேன். கடிகாரத்திரை அணைந்திருந்தது. ஒரு நொடியில் அதுவரையிலான அத்தனை காலடிகளும் இல்லாமலாகிவிட்டன. அதே கையிலிருந்த மோதிரங்களைப் பார்த்தேன். நான்காவது விரலில் இரண்டு பவுன், ஐந்தாவதில் ஒரு பவுன்.

வளுக்கு எதுவும் பொருளுதவி செய்யக்கூடிய நிலையிலும் நான் அன்று இருக்கவில்லை. அவளுமே அதை ஏற்க மாட்டாள்தான். இருந்தும் எப்படி அதைச் செய்யத் துணிந்தேனெனத் தெரியவில்லை. பேன்ட் பாக்கெட்டில் கையைவிட்டு ஐம்பதும் இருபதும் பத்துமாக மடித்து மடித்து இருந்த தாள்களை மொத்தமாக எடுத்து அவளிடம் நீட்டினேன். அதிகபட்சம் முந்நூறு ரூபாய் இருக்கலாம். கை அவளை நோக்கிப் போன கணமே நான் செய்வதன் அபத்தம் குழப்பியது. புடவைத் தலைப்பையெடுத்து விரலில் சுருட்டி அழுகையை அடக்க கீழுதட்டைக் கடித்துக்கொண்டு, அந்தப் பணத்தை அவள் வாங்கிக்கொண்ட காட்சியைவிட அவலமான ஒன்றை பின்னர் எப்போதும் நான் பார்க்கவில்லை.

சிமென்ட் இருக்கைவரை வந்திருந்தேன். பெரியவரை எழுப்பிவிடலாமா... அவரிடமே சலனம் தெரிந்தது. அருகிலொருவன் வந்து நிற்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும்.

முதாவிடமிருந்து விடைபெற்றுக் கொள்வதைப்போல நான் தலையசைத்து பின்னகர்ந்தபோது அவள் எதையோ கேட்க வருவதைப்போலத் தெரிந்தாள். பொங்கியிருந்த அழுகையை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தாள். உமாராணியைப் பற்றியோ, பணி விவரத்தையோ, குழந்தையுண்டா என்றோ... எதைக் கேட்டாலும் வெவ்வேறு காரணங்களுக்காக என்னால் முழுமையாக பதில் சொல்லியிருக்க முடியாது. அவள் யாதொரு முகக்குறிக்கும் இடமில்லாமல், `முன்னாடி கொடுத்த செயினை வெச்சிருக்கியா?’ என்றாள். நான் வெறுமையாக அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவளிடம் தயக்கமோ தடுமாற்றமோ இருந்ததாகத் தெரியவில்லை. கண்கள் மட்டும் பெருகியிருந்தன. எப்படி வார்த்தைகளைத் திரட்டினேனெனத் தெரியவில்லை - `நாளைக்கு கொண்டாந்து தர்றேன்.’ சரியென்றாள்.

பெரியவர் எழுந்து உட்கார்ந்தார். கிளம்பலாமா என்பதைப்போலத் தலையசைத்தார்.

அன்றிரவு பத்து மணி பஸ்ஸில் இருக்கைகளுக்கு நடுவேயான பாதையில் தினத்தந்தியை விரித்துப்போட்டு படுத்தபடி திருச்சிக்கு வந்துகொண்டிருந்தேன்.

கெட்ட கொழுப்பு இடது சுண்டுவிரலிலிருந்து தோளுக்கு ஏறுவதைப்போலிருந்தது. அவர் என் பதிலுக்காகக் காத்திருப்பவராகத் தெரிந்தார். நானும் `போலாம்’ என்றேன்.