சினிமா
Published:Updated:

புஷ்பராணியின் பூனைகள் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

- ஜெகநாத் நடராஜன்

வித விதமான குட்டிப்பூனைகளின் புகைப் படங்கள் புஷ்பராணியின் மொபைல் போனில் இருக்கின்றன... அவள் மடியில் கிடப்பவை, தோளில் தூங்குபவை, அவள் காலைச் சுற்றுபவை என்று எல்லாமே அவள் ரசித்து எடுத்தவை. அவை பிறாண்டிய காயங்களை எப்போதாவது பார்ப்பாள். அவள் முகத்தில் ஒரு கணம் புன்னகை மலரும், பின் மலர்ந்த முகம் கறுக்கும். ``நன்றிகெட்ட ஜென்மங்க’’ என்று சொல்லிக்கொள்வாள். வைரக்கண்ணு அமைதியாக மனைவியைப் பார்த்துக்கொண்டிருப்பார்.

ஆள் நடமாட்டம் அதிகமில்லாத முட்டுத் தெருவில் அவர்கள் வீடு. நள்ளிரவில் அவ்வப்போது பூனைச் சத்தம் கேட்கும். அவள்தான் முதலில் கண் விழிப்பாள். மெல்ல கதவைத் திறந்து பார்ப்பார்கள். பூனைகள் ஒன்றோடொன்று சண்டை போட்டுக் குதிக்கும், திடீரெனச் சீறும். இன்னொரு நாள் பச்சைக் குழந்தை அழுகை போலக் கேட்கும். வந்தால் பதறியடித்து ஓடும்.ஜன்னல்களை மறதியாய்த் திறந்து வைத்து விட்டால் தாவிக் குதித்து வீட்டுக்குள் வந்து விடும். காலை விழித்து எழும்போது அங்கும் இங்கும் தடுமாறிக் கலவரப்படுத்திக்கொண்டு வெளியே ஓடும்.

ஆரம்பத்தில் பூனைகளுக்கு பயந்து அலறிய புஷ்பராணி, நாளடைவில் பூனைகளைப் பற்றி நிறைய தகவல்களைச் சொல்லத் தொடங்கினாள். பூனைகள் சுத்தமானவை. ஆபத்தை முன்பே உணர்பவை. நிறைய நேரம் தூங்குபவை.

``வத்தலக்குண்டுல ஒரு நா நல்ல மழையப்போ ஒரு வீட்ல வளத்த பூன வாசல்ல நின்னு குய்யோ முறையோன்னு கத்திக்கிட்டிருந்துச்சாம், எல்லாரும் பதறிப்போயி வெளில வந்து பாக்கறாங்களாம். ஒண்ணுமே புரியலயாம். அடுத்த அஞ்சாவது நிமிஷம் வீட்டோட சுவரு இடிஞ்சு விழுந்துடுச்சாம்.’’

``அட பாவமே.’’

``என்ன பாவங்கிறீங்க, அந்தப் பூனை சாமி மாதிரி அவங்கள காப்பாத்தியிருக்கு.’’

``அப்படியா?’’ என்று கேட்டுக்கொண்டார்.

``ஏங்க… ஏங்க...’’

என்று அவள் அவசரமாகக் கூப்பிட்ட ஒரு நாளில், கீழே மீன்காரன் பலகை போட்டு மீனை வெட்டிக்கொண்டிருந்தான். அவன் சைக்கிள் பக்கத்தில் நின்றிருந்தது. தொழிலுக்கு வாகாக வீட்டு முன்னால் நின்றிருந்த வேப்ப மரம் நிழலைச் சாய்த்திருந்தது. காக்கைகள் பக்கத்து மரத்தில் குழுமி சக காக்கைகளை அழைத்துக் கொண்டிருந்தன.

``எப்படி நம்ம வீட்டு வாசலுக்கு வந்தான்?’’

புஷ்பராணியின் பூனைகள் - சிறுகதை

``கீழ் வீட்டுக்குப் புதுசா வந்திருக்கறவங்க மீன் வாங்கறாங்க போலருக்கு. அதுக்கா நா கூப்பிட்டது, பக்கத்ல பாருங்க.’’

அவர் எட்டிப் பார்த்தபோது வரிசையாகப் பூனைகள் மீன்காரன் வெட்டிப் போடப் போகும் மீன் குடல்களுக்காகக் காத்திருந்தன. அவசரம் என்பதுபோல அழைப்பு வேறு.

``நல்ல பசில இருக்கும் போலருக்கு’’ என்றாள் பரிதாபமாக.

சில வாரங்களில் மீன்காரன் அவளுக்குப் பேச்சுத்துணையாகிவிட்டான்.

``மீன்காரன் வீட்லயும் பூனைங்க கிடந்துச்சாம். வீட்ட மாத்தும்போது பூனைகளையும் எடுத்துட்டுப் போனானாம். ரெண்டு நாளைல பூனைங்க காணாமப்போச்சாம். பூனைங்க புது இடத்துக்கு ஒத்துப்போகாதாம். பாவம், அதுங்க பழைய இடத்தத் தேடி அலைஞ்சு நாய் கிட்ட கடி வாங்கிச் செத்திருக்கும்னு சொல்லுதான். கண்ணோரத்ல கண்ணீரு திரண்டு வந்துருச்சு.’’

அவன் அழுதானா என்று தெரியவில்லை. அவளுக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது.

``ஏங்க…’’ என்று இன்னொரு நாள் அவள் அவரைக் குலுக்கி உலுப்பினாள். அவள் முகம் பதைபதைப்பாக இருந்தது. ``வாங்களேன் கொஞ்சம்’’ என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள்.

இரண்டாவது படுக்கை அறை வாசலில் நின்று, ``பாருங்க’’ என்றாள். உள்ளே ஒரு வெண்ணிறப் பூனை மிரள மிரளப் பார்த்துக் கொண்டிருந்தது.

வாலில் மட்டும் சற்றுக் கறுப்பு இருந்த பூனைக்கு அருகே நெருங்கினார்கள். பூனை கண்களை உயர்த்திப் பார்த்தது. ``மியாவ்’’ என்ற சத்தம் வந்தது. ``சூ... சூ’’ என்று அவர் விரட்ட முயன்றார். பூனை அப்படியே அங்கேயே அடம் பிடித்து உட்கார்ந்துகொண்டு நாக்கை நீட்டியது. சோம்பல் முறித்தது. காலை நீட்டிப் படுத்துக் கொண்டது.

``என்னங்க பண்ணலாம்?’’

``என்ன பண்றது, உன் வேலைகளப் பாரு. அது பாட்டுக்கு வந்த மாதிரி போகும்…’’

``பாக்க பாவமா இருக்குங்க. பால் வேணா கொடுத்துப் பாக்கட்டுமா?’’

அவர் அவளைப் பார்த்தார். அவரின் சம்மதம் கேட்காமலேயே போய் ஒரு தட்டில் பூனை குடிக்க ஏதுவாக பாலை ஊற்றிக் கொண்டு வந்து வைத்தாள். பூனை அவர்களையும் பாலையும் மீண்டும் மீண்டும் பார்த்தது.

``சரி, நாம நின்னு பாத்துக்கிட்டிருந்தா அதுக்கு ஒரு மாதிரியா இருக்கும். வாங்க’’ என்று அவள் அவரை அழைத்துக் கிளம்ப, பூனை பாலைக் குடித்துக்கொண்டிருந்தது. அவள் சந்தோஷத்துடன் சிரித்தாள். ஒரு குழந்தைக் குதூகலம் அவள் முகத்தில் மின்னியது. அப்படி அவளைப் பார்க்க அவருக்குப் பிடித்திருந்தது. எத்தனையோ வருடங்களாயிற்று அவளை அப்படிப் பார்த்து.

புஷ்பராணியின் பூனைகள் - சிறுகதை

அவர் அலுவலகம் சென்று திரும்பும்போது அவருக்குச் சொல்ல அவளிடம் நிறைய விஷயங்களிருந்தன... பூனை கர்ப்பமாக இருக்கிறது. அவள் அருகே சென்று உட்கார்ந்தால் தாவி அவள் மடியில் ஏறி அமர்ந்த சற்று நேரத்தில் படுத்து உறங்கியும் போய்விடுகிறது. இரண்டாவது படுக்கை அறையின் ஈசான்ய மூலையில் படுக்கை பூனைக்குத் தயாராகியிருந்தது. இரண்டு தெரு தள்ளியிருந்த விலங்கு மருத்துவம் படிக்கும் மாணவியைப் பற்றி வேலைக்காரி மூலம் கேள்விப்பட்டு அவளிடமும் பேசியிருந்தாள். ‘பூனை பிரசவிக்கும்போது பயப்பட வேண்டாம். அது நீங்கள் அருகிலிருந்தாலும் ஒன்றும் செய்யாது. உங்களை நம்பிக்கையாகவும், பாதுகாப்பாகவும் அது கருதுகிறது. அதனால்தான் தன் குட்டிகளுக்காக உங்கள் வீட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.’

அதற்குப் பின் புஷ்பராணியின் பிரியம் இன்னும் அதிகமாகிவிட்டது. பூனைக்குப் பிடித்ததாகச் சமைத்தாள். அதிகமாக பால் வாங்கினாள். பூனைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றாள். உடனடியாக எந்தப் பேரும் அவருக்குத் தோன்றவில்லை. ஒரு நாள் அவளை எதற்கோ ``புஷ்பா’’ என்று அவர் அழைத்தபோது, ‘மியாவ்’ என்று பூனை குரல் கொடுத்துத் திரும்பிப் பார்த்தது. புஷ்பராணியும் திரும்பிப் பார்த்தாள்.

``ஏங்க இன்னொரு தடவ கூப்பிடுங்க’’

``புஷ்பா’’

``மியாவ்’’

``புஷ்பா’’

``மியாவ்’’

``உன் பேரும் புஷ்பாவாடீ’’ என்றபடி பூனையை எடுத்து மடியில் வைத்துக் கொஞ்சினாள்.

இரவு சில நேரங்களில் அவளைக் காணாது எழுந்து வந்தால், பூனை என்ன செய்கிறது என்று பார்த்துக்கொண்டிருப்பாள். ஒரு நாள் ஏதோ சத்தம் கேட்டு அவர் எழ முயன்றபோது, ``புஷ்பாவத் தேடிக்கிட்டு புருஷன் பூனை வந்திருக்கு. நல்ல கட்டுமஸ்தா இருக்கு’’ என்றாள். இன்னொரு நாள் பூனை வீறிட்டு அலறும் சத்தம். போய்ப் பார்த்துக் கத்தினாள்.அவர் ஓடியபோது ``கள்ளப் பூன வந்திருக்கு. இனிமே கதவெல்லாம் பூட்டி வச்சிருவோம். நீ பாட்டுக்கு படுத்துக்கணும் என்னா’’ பூனையிடம் பேசிக் கொண்டிருந்தாள். அது அவளையே அமைதியாகப் பார்த்தது. ``சம்மதம் சொல்லுது பாருங்க’’ என்றாள். அவரும் ‘ஆமாம்’ என்று தலையசைத்து வைத்தார்.

ஒரு வாரத்தில், வெளிர் பழுப்பும் வெள்ளையுமாக நான்கு குட்டிகளைப் பிரசவித்தது. தாய்ப்பூனையின் கதகதப்பில் அவை கண் திறக்காமல் கிடந்தன. புஷ்பராணிதான் குட்டிபோட்ட பூனை போல அங்கும் இங்கும் சுற்றி வந்தாள். போன் செய்து தோழிகளுக்கும், வெளிநாட்டிலிருக்கும் மகளுக்கும் சொன்னாள். தாய்ப்பால் அதிகம் சுரக்க மருந்துகளையும், பூனைக்கான உணவையும் மெடிக்கல் ஸ்டோருக்கு ஆர்டர் செய்து கொண்டு வரச் சொன்னாள். குட்டிப் பூனைகள் கண் திறந்தன. வளர்ந்தன. ரோமங்கள் முளைத்தன. சத்தங்கள் வலுவாயின. நகங்கள் கூர்மையாயிற்று. ஒரே மாதிரியிருந்த குட்டிகளுக்குப் பெயர் வைத்தாள். ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட அடையாளங்கள் அவள் கண்ணுக்கு மட்டும் தெரிந்தன. ஒவ்வொரு குட்டியையும் ஒவ்வொரு நேரம் வைத்துக் கொஞ்சினாள். போனில் போட்டோ எடுத்து தோழிகளுக்கெல்லாம் அனுப்பினாள். நான்கில் ‘முகில்’ என்று பெயர் வைத்த ஒன்று அவள் செல்லமாய் இருந்தது. அவள் நடக்கும் போதெல்லாம் பின்னாலேயே ஓடியது. அவளை நடக்க விடாமல் காலைச் சுற்றிச் சுற்றி வந்தது.

``பால் கேக்குதா?’’

``இல்ல, தூக்கிக் கொஞ்சச் சொல்லுது’’ என்று தூக்கிக்கொள்வாள். பூனை தோளில் படுத்திருக்க, அவள் சமையல் வேலைகள் நடக்கும். ஒரு சில வாரத்தில் பூனைக்குட்டிகள் அவள் பேச்சை மீறின. ஓரிடத்தில் நில்லாமல் ஓடவும், மேஜைக்கும் ஜன்னலுக்கும் தாவவும் ஆரம்பித்து திரைச்சீலைக் கம்புகள் வரைக்கும் போய்விட்டன. இறங்க வைக்க முயலும்போது சீறின. முறைத்துப் பார்த்ததும் அவள் முகம் வாடிப்போவதை அவர் கவனித்தார்.

சில நாளில் தாய்ப்பூனை காணாமல்போய்விட, குட்டிப்பூனைகள் ஒன்றோடொன்று சண்டையிட ஆரம்பித்தன. அவள் கொஞ்ச நினைக்கும்போது மறுப்புக் காட்டிச் சீறின. தலையணைகளைப் பிறாண்டின. ஒருநாள், வெளியே போன தாய்ப்பூனை திரும்பி வரவேயில்லை. வேலைக்காரியை அழைத்துக்கொண்டு பக்கத்து வீடுகள், முட் செடிகள் மண்டியிருந்த புதர்களிலெல்லாம் போய்த் தேடிப் பார்த்தாள். ‘புஷ்பா... புஷ்பா...’ என்று வாய் வலிக்கும் வரைக்கும் கத்திவிட்டு வீடு வந்து அமைதியாக இருந்தாள். ஒருநாள், கியாஸ் சிலிண்டர்காரன் கதவைத் திறந்தபோது ஒரு பூனைக்குட்டி பாய்ந்து ஓடி விட்டது. அவள் துரத்திக்கொண்டே ஓடினாள்.அவளால் ஓட முடியவில்லை. அவளுக்கு மூச்சிரைத்தபோது சாலை ஓரமாகக் கொட்டியிருந்த குப்பையை பூனைக்குட்டி கிளறிக்கொண்டிருந்ததைக் கண்டாள். கூப்பிட்டாள். கண்டுபிடிக்கவும் முடியவில்லை. வெளியே போன மாதிரியே திரும்பி வந்துவிடும் என்று நினைத்தாள். ஆனால் வரவில்லை. அது அவள் காலைச் சுற்றி வந்துகொண்டிருந்த முகில் என்பது அவளுக்கு இன்னும் வருத்தமாக இருந்தது.

பூனைக்குட்டிகள் அடிக்கடி ஏன் சிலிர்க்கின்றன என்று கல்லூரிப் பெண்ணிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்... அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை. சில நாளில் பூனைக் குட்டிகளை வீட்டுக்குள் அடைத்து வளர்க்க முடியாது என்பது தெரிந்து போயிற்று. பூனைகளின் சீற்றமும் கோபமும் சிலிர்ப்பும் பாய்ச்சலும் அதிகமாயிற்று. அவள் அவற்றைக் கட்டுப்படுத்த அன்பாய் என்னென்னவோ செய்து தோற்றாள்.

புஷ்பராணியின் பூனைகள் - சிறுகதை

சில நாளில் எப்போது என்று தெரியாமல் ஒவ்வொன்றாய்க் காணாமல் போய்விட்டன. சாலையில் அவரோடு போகும் போது, ``ஏங்க, வண்டிய கொஞ்சம் நிறுத்துங்க’’ என்பாள். நின்று தூரத்துச் சுவரில் இருக்கும் பூனையைப் பார்ப்பாள். ``முகில்தான அது’’ என்பாள். ``முகில்’’ என்று அழைப்பாள். அது அவளைக் கண்டுகொள்ளாமல் எங்கோ தாவி ஓடும். அவள் வருத்தமாகப் பார்ப்பாள். ``சரி விடு’’ என்று சமாதானப்படுத்துவார். ``மனசு கேக்கலையே’’ என்று ஓரிரு நாள்கள் அதையே நினைத்துக் கொண்டிருப்பாள்.

ஒருநாள் மீன்காரன் மீன் வெட்டியபோது அவள் வளர்த்த பூனைகள் ஒன்றாய்க் கூடிவிட்டன. இன்னும் வளர்ந்து முரட்டுத் தனங்களுடன் இருந்தன. ‘மியாவ்’ என்று யாசகம் கேட்கும் விதமாகக் கத்திக்கொண்டு மீன்காரனைச் சுற்றி வந்தன. அவன் வெட்டிப் போட்ட மீன் செதிலுக்கும் வாலுக்கும் சண்டையிட்டன. அவள் அருகில் சென்றாள். அன்பொழுக உற்றுப் பார்த்தாள். ``முகில், எழில், மயில், லினோ’’ என்று கூப்பிட்டுப் பார்த்தாள். எதுவும் அவளைக் கண்டுகொள்ளவில்லை.

``எல்லாம் நா வளர்த்ததுங்க.”

மீன்காரனிடம் கொஞ்சம் வருத்தமாகச் சொன்னாள். அவன் மீனை வெட்டுவதிலேயே குறியாக இருந்தான். ஒரு பூனை ஓரமாய்க் கூடிக் கரைந்த காக்கையில் ஒன்றைப் பிடிக்கப் பாய்ந்து காக்கை பறந்துவிட, சாலையில் சென்ற மோட்டார் சைக்கிளில் சிக்கி அலறி உயிர் தப்பி ஓடியபோது அவளுக்கு நடுக்கம் வந்துவிட்டது.

பூனைகளுக்கும் அவளுக்கும் எந்த உறவும் இல்லை என்றாகிவிட்டது. அவளைப் பூனைகள் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ‘அவை நன்றி கெட்டவை. வாழ்வில் நாம் சந்திக்கும் சில அல்ப மனிதர்கள் போலானவை’ என்று உறுதியான முடிவுக்கு அவள் வந்திருந்தாள். இப்போது அவள் கவலைப்படுவதில்லை. மீன்காரனை வீட்டு முன்னால் மீன் வெட்டக்கூடாது என்று சொல்லிவிட்டாள். ஸ்நேகிதிகள் பூனை பற்றிப் பேசினால், ``விடு அத’’ என்று பேச்சை திசை திருப்ப ஆரம்பித்திருந்தாள்.

ஒரு பவர்கட்டான இரவில் பால்கனியில் அவரும் அவளும் நின்றிருந்தபோது ‘மியாவ்’ என்ற சத்தம் கேட்டது. அவள் மொபைல் போன் டார்ச்சை அடித்தபோது கண்கள் மின்னின. பிள்ளைகளை விட்டுவிட்டுப் போன தாய்ப் பூனை. வாலில் இருந்த கொஞ்சக் கறுப்பை வைத்து அடையாளம் கண்டுகொண்டாள். அது தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தது.

``என்ன?’’

``மியாவ்.’’

முதன்முதலில் வீட்டுக்கு வந்ததுபோலவே பார்வை. அமைதி, வால் அசைப்பு, தெரிந்தவர் கூப்பிடுவதுபோன்ற குரலில் ``மியாவ்’’ என்றது.

``என்ன மியாவ், வயித்த தள்ளிட்டு மறுபடியும் வந்துட்டியா... போக வேற இடம் இல்லையா? இந்தப் புஷ்பராணிதான் உன்னப் பாத்துக்குவான்னு தோணுச்சா?’’ அவளுக்குக் கோபமும் வருத்தமும் ஒருசேர வந்து குரல் கரகரத்தது.

``மியாவ்’’ அதன் குரலிலும் வருத்தமிருந்ததுபோலத் தோன்றியது.

தடைப்பட்டிருந்த மின்சாரம் வர, அவரையும் அவளையும் பார்த்த பூனை, உரிமையோடு அவர்களைக் கடந்து ஹாலில் நடந்து, படுக்கை அறை நோக்கிப் போயிற்று. கதவு பூட்டியிருந்தது. வாசலிலேயே படுத்துவிட்டது. வெளி விளக்குகளை அணைத்துவிட்டு, கிரில் கதவைப் பூட்டிவிட்டு வந்தவர்,

``என்னாச்சு புஷ்பா’’ என்றார். பூனை ``மியாவ்’’ என்றது.

புஷ்பராணி சிரித்தாள்.

`எத்தனை நாளாயிற்று இந்தச் சிரிப்பைப் பார்த்து’ என்று நினைத்துக்கொண்டார்.