கட்டுரைகள்
Published:Updated:

சிறுகதை: உதிரிப்பூ

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

ஹேமி கிரிஷ்

விடிந்தும் விடியாத காலையில் அந்த வீட்டிற்கு முன் நின்றிருந்தாள் யசோதா. சுருள் சுருளாய் கம்பிபோல் நீட்டிக்கொண்டிருந்தது அவளது முன் கூந்தல்கற்றைகள். புலராத நீலநிற வெளிச்சத்தில் ஒடிசலாய் உயரமாய் லேசாக வளைந்து நின்றுகொண்டிருந்த உருவத்தைப் பார்த்தது முதலில் ராம்தான். நின்றிருந்த வாகைப் பார்த்தே யாரென அவனுக்குப் புரிந்தது. உடனே அம்மாவிடம் ஓடிச் சென்று

``ம்மா... சித்தி!’’ என்று மட்டுமே சொன்னான்.

ராமும் அவனுடைய அம்மா நிர்மலாவும் ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கொண்டார்கள். ராமின் அப்பா சத்யன் உள்ளறையில் தூங்கிக்கொண்டிருந்தார். தங்கை சுமி கூடத்தில் போடப்பட்டிருந்த பாயில் தலைமுழுவதும் போர்த்திப் படுத்திருந்தாள். நிர்மலா கலைந்த படுக்கைகளைத் தாண்டி முன்வாசலுக்கு வேகமாக வந்தாள். ராமும் பின் சென்றான்.

ராமைப் பார்த்ததும் யசோதா ``ஹேய் ராம் குட்டி’’ என ஸ்டைலாகக் கூப்பிட்டாள். அவன் மதிப்பளிக்காமல் அவளைத் துரத்துவதற்கு அம்மா எடுக்கும் வழி என்னவாக இருக்கும் என யூகித்துக்கொண்டிருந்தான்.

நிர்மலாவைப் பார்த்துச் சிரித்தாள் யசோதா. அதுவும் ஸ்டைலாக. அவளுடைய சிரிப்பே அப்படித்தான் இருக்கும். லேசாகக் கண்களைச் சுருக்கியபடி ஒரு சைடாக வாயைக் கோணித்து சிரிப்பாள். வெளிர் சிவப்பு நிறத்திலிருந்தாள். உள்ளடங்கிய சிறிய கண்கள். கத்தியில் கூராகத் தீட்டப்பட்டிருந்தது போலிருந்தது அவளது மூக்கின் நுனி. நீள்முகத்தில் தாடையும் நீட்டமாக இருக்கும். பற்கள் கச்சிதமாய்ப் பொருத்தி வைத்தாற்போல் வரிசையாக இருந்தன. அவளது சிரிப்பும் பற்களும் யாவரையும் கவர்ந்திழுக்கும் அழகு. அதனாலோ என்னவோ அவளிடம் யாருக்கும் கோபிக்கக்கூட மனசு வராது. அதற்காகவோ என்னவோ அவள் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் சிரித்தே மழுப்பி விடுவாள்.

சிறுகதை: உதிரிப்பூ

``அக்கா எப்படி இருக்க?’’

``உன்னை யார் இப்ப வரச் சொன்னா’’ எரிச்சலாய்க் கேட்டாள் நிர்மலா.

அவள் பதில் சொல்லாமல் ராமை சிரித்தபடியே பார்த்து ``ராம் குட்டி’’ எனக் கூப்பிட்டாள்.

``ம்மா, அப்பா எந்திரிக்கறதுக்குள்ள போ சொல்லும்மா’’ எனத் தன் அம்மாவிடம் கிசுகிசுத்தான்.

``சித்தி வேணாமாடா உனக்கு?’’ குழைந்த குரலில் கேட்டாள்.

`` இப்ப எதுக்கு இப்படி வந்து வந்து எங்குடிய கெடுக்கற’’ கோபத்துடன் நிர்மலா கேட்டாள்.

`` அக்கா ஒரு நூறு ரூபா கொடேன் ஆஸ்பத்திரி போகணும் உடம்பு சரியில்ல.’’

``போய் செத்துத் தொலை. என் உசுர வாங்காத... ஒரு பைசா தரமாட்டேன். இனிமே நின்னினா பாரு’’ எனச் சொல்லிவிட்டு உள்ளே வந்துவிட்டாள்.

பணம் தரும் வரை அங்கேயேதான் நின்று கொண்டிருப்பாள். சத்யன் எழுந்தால் பிரச்னைதான். அதற்குள் அவளைத் தாட்டிவிட வேண்டும். ``திருந்தாத ஜென்மம் ச்சே’’ என நிர்மலா மனதில் நினைத்து வாயில் சொல்லிவிட்டாள். நூறு ரூபாய் ராமிடம் கொடுத்து போய்க் கொடுத்து அனுப்பும்படி சொன்னாள்.

மாட்டேனென்று சொன்னால் அவள் மீதிருக்கும் கோபத்தைத் தன்னிடம் காண்பிப்பாள் என அவன் பேசாமல் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு, அவள் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஓடி வீட்டிற்குள் வந்து கதவைப் பட்டென வேகமாய்த் தாழிட்டான்.

முன்புபோலில்லை... யசோதாவைக் கண்டாலே வீட்டினுள் எல்லாருக்கும் வெறுப்பு கூடியிருந்தது. முன்பெல்லாம் அந்த வீட்டிற்கு அவ்வப்போது வந்து போய்க் கொண்டுதானிருந்தாள். நேராக வீட்டினுள் வந்து வீட்டைப் பெருக்கி, அடுக்களையை சுத்தம் செய்து கொல்லையில் போட்டிருக்கும் பாத்திரங்களை விலக்குவாள். ஓயாமல் பேசிக் கொண்டேயிருப்பாள்.

``அக்கா எனக்கு ஒரு வளையல் வாங்கிக் கொடேன். இது கறுத்துப்போயிடுச்சு.’’ ``அக்கா கேளடி கண்மணி படம் பாத்தியா, எவ்ளோ நல்லாருக்கு தெரியுமா? அதுல ராதிகா கட்டிட்டு வர்ற சேலைலாம் அவ்ளோ நல்லாருக்கு. அந்த மாதிரி ஒண்ணு வாங்கிக் கொடேன் தீபாவளிக்கு.’’

சிறுகதை: உதிரிப்பூ

``அன்னைக்கு நான் ரேஷன் கடைல நிக்கிறப்போ நீ மஜித் வீதி பக்கம் போயிட்டு இருந்தியே, என்னைப் பாத்தும் பாக்காத மாதிரி போயிட்ட. ஏக்கா?’’ என அவளுக்கு மட்டும் பேசுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தன.

அவள் வீட்டை விட்டுக் கிளம்பிய பிறகு ஒரு நிசப்தம் நிலவுவதை அடிக்கடி ராம் உணர்ந்திருக்கிறான்.

``ப்பா. ஏதோ ஓடிட்டுருந்த மிஷின் நின்ன மாதிரி இருக்கு’’ என நிர்மலா கூறுவாள். இத்தனைக்கும் யசோதாவிற்கு சன்னமான குரல்தான். சத்தமாகப் பேசினால் கீச்சுவது போலிருக்கும். பெரும்பாலும் பணம், பழைய சேலை பெறுவதற்கு வருவாள். வீட்டு வேலை முடித்துக் கொடுத்து, நிர்மலா தரும் உணவு எதையாவது சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிடுவாள். இன்ன நாள் இன்ன நேரமென்றில்லை, எப்போது அவள் கையில் காசில்லையோ அந்தச் சமயத்தில் வருவாள் .

வீட்டு வேலைகளை சிரத்தையாகச் செய்து தருவாள். அவளுக்கு ராமின் மீது மிகப் பிரியம். அவன் திட்டினாலும் சிரித்தபடி அவனை வம்பிழுப்பது அவள் வாடிக்கை. அவனை அழகா என்று சில சமயம் கூப்பிடுவாள். எட்டாவது படிக்கும் ராமை குழந்தைபோல் பாவித்து அவள் சொன்னாலும் அவனால் வேற்று மனுஷியாகத்தான் அவளை நினைக்க முடிந்திருந்தது.

நிர்மலா அவளைக் கரித்துக்கொட்டிக் கொண்டே இருப்பாள்.

``இன்னொருவாட்டி இப்படி அக்கம் பக்கம் போய் பணம் கேட்ட, இப்பவாவது வீட்டுக்குள்ள விடறேன். அப்றம் தங்கச்சிங்கற உறவே வேணாம்னு துரத்திவிடுவேன்’’ என்பாள்.

மெல்லிய சிரிப்புடன் அதைக் காதில் வாங்காமல் பாத்திரங்கள் துலக்கிக் கொண்டிருக்கும் யசோதா, அப்போதே பள்ளியிலிருந்து வந்திருந்த ராமைப் பார்த்துச் சிரித்தபடி ``ராம் குட்டி’’ என்பாள். அவன் கண்டு கொள்ளாமல் கைகால் கழுவிக்கொண்டிருப்பான்.

அவள் ``பாருடா உங்கம்மாவ... சித்தியை எப்படித் திட்றான்னு’’ எனப் புகாராய்க் கெஞ்சி முறையிடுவாள்.

நிர்மலா இன்னும் கோபம்கொண்டு அதிகம் திட்ட ஆரம்பிப்பாள்.

``அக்கா, ரஜினியோட தளபதி படம் வந்திருக்கு. வாயேன் ஒருதடவையாது சேர்ந்து பாக்கப் போலாம்.’’

``ஆமா எப்பவும் சினிமா, கூத்துன்னே நீ சீரழியறது பத்தாதா... குடும்பமா சீரழியனுமா?’’

யசோதா, நிர்மலா திட்டுவதை ரசித்துக் கொண்டே ராமைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரிப்பாள்.

இப்படி இருந்தபோதுதான் ராம் ஒரு விஷயத்தைக் கவனித்தான். அவனுடைய யசோதா சித்தி வீட்டுக்கு வரும்போது, எப்போதெல்லாம் அவனுடைய அம்மா அவளைத் திட்டுகிறாளோ அப்போதெல்லாம் அக்கம் பக்கம் யார் வீட்டிலாவது அவனுடைய அம்மா பெயரைச் சொல்லிப் பணம் வாங்குகிறாள்.

அப்படித்தான் அன்றொரு நாள் சத்யன் வாயெடுத்தே சொல்லிவிட்டார்,

``இதென்ன சத்திரமா சாவடியா, உன் இஷடத்துக்கு வர்ற போற... இனிமே இங்கல்லாம் வராத. உன் பொழப்ப நீ பாத்துக்க, எங்க பொழப்ப நாங்க பாத்துக்கறோம். இன்னும் எவ்ளோ காலம் உங்கக்கான்னு சொல்லிட்டு இங்க வருவ? இனிமே வந்தாக்கா, உங்கக்காவையும் சேர்த்து அனுப்பிடுவேன்’’ எனத் திட்டினார்.

அப்போதுகூட அதைப் பெரிதுபடுத்தாமல், சத்யனின் காதில் படாதவாறு, ராமிடம் ``டேய், அடுத்த டைம் வர்றப்போ உங்கம்மாவை எங்கூட அனுப்பறாராம். நீயும் கூட வந்துடு... உன்ன டெய்லி சினிமாக்குக் கூட்டிட்டுப் போறேன்’’ எனக் கிசுகிசுத்தாள். இவன் ஒரே ஓட்டமாக உள்ளே ஓடி வந்துவிட்டான்.

அவள் சொன்னாளே தவிர பிறகு வரவேயில்லை அடுத்த சில நாள்களில் அவள் சத்யனின் அலுவலகத்திற்குச் சென்று சத்யன் இல்லாதபோது, உறவுமுறையைச் சொல்லி, அங்கிருப்பவர்களிடம் பணம் வாங்கியிருந்தாள். அந்த வாரமுழுக்க முகத்தில் கடுகு வெடிக்காத குறையாய் கோபத்தால் சூடேறியிருந்தது சத்யனின் முகம். அதன்பின் அவள் வரவு இல்லாமலிருந்தது எல்லாருக்கும் சற்று நிம்மதி என நினைக்கையில் இப்போது அதிகாலையிலேயே வந்து நிற்கிறாள்.

சிறுகதை: உதிரிப்பூ

முன்புபோல் வீட்டிற்கு வராதுபோனாலும், அவளை அடிக்கடி வெளியில் ராம் பார்த்தான். அவள் வீடு மஜித் வீதி தாண்டி உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் இருந்தது.

ஜனசந்தடிமிக்க அந்த இரு தெருக்களைத் தாண்டிதான் அவன் கணித டியூஷனுக்குச் செல்ல வேண்டியதிருக்கும். மாலையில் வீதியிலிருக்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காகக் குடத்துடன் இருப்பாள். இவனைப் பார்த்துவிட்டால் அவ்வளவுதான்.வம்பிழுக்காமல் இருக்க மாட்டாள்.

``ராம்குட்டி, உனக்கு ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா?’’ சிரித்தபடி இடுப்பில் ஸ்டைலாக காலிக் குடத்தை வைத்துக்கொண்டு கேட்பாள்.

``டேய் ராம்குட்டி, உங்க சித்தி கேக்கறாங்கல்ல, சொல்லுடா’’ என அவன் நண்பர்கள் அவனைப் பிடித்துக்கொண்டு கிண்டல் செய்வார்கள்.

``ஏய் என் எதுக்கவே அவனைக் கிண்டல் செய்வீங்களா? ராம்குட்டி இவங்க எதாவது உன்னைச் சொன்னா எங்கிட்ட சொல்லு. வவ்வால அவங்க கழுத்துல கட்டிவிட்டுடறேன்’’ எனப் பற்கள் தெரியச் சிரித்தபடியே சொல்வாள். அவன் நண்பர்களுக்கு இவன் சித்தி இடம் வந்தால் ஏக குஷி. ஏதாவது வம்பிழுத்தபடி செல்லலாம்.. இவன் தன் நண்பர்களை இழுத்துக் கொண்டு அவளைக் கடந்துசெல்ல படாதபாடு படுவான்.

இவனுக்கு அவளைப் பகைத்துக்கொள்ள பயம். எங்கு தன் நண்பர்கள் வீட்டிலும் சென்று பணம் வாங்கிடுவாளோ என அவளைத் திட்டிவிடாமல் கண்டுகொள்ளாமல் செல்வான்.

அவளின் வீட்டிற்கு முன்பு எப்போதோ ஒருமுறை அம்மாவுடன் சென்றிருக்கிறான். அந்த வீடு ஒரு புகைப்படம்போல் அவன் மனதில் ஒட்டிக் கொண்டது.

தீபாவளிக்கு முந்தைய நாள்களில் வீட்டு வேலைகளிலும், பலகாரங்கள் செய்ய உபகாரம் செய்யவும் யசோதாவை வீட்டிற்கு வரச் சொல்லலாமென அவளிடம் சொல்லிவிட்டு வருவதற்காக நிர்மலா அவனையும் கூட்டிக் கொண்டு சென்றாள்.

ஒண்டுக்குடித்தனங்கள் நிறைந்த அந்தப் பகுதியில் ஒரு குட்டி சந்தினருகே இருந்த ஒற்றையறையில் வசித்திருந்தாள். வீட்டின் கதவு திறந்திருந்தது. ஜன்னலையொட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய கறுப்பு ரேடியோவில் ``என் கண்மணி... என் காதலன்’’ சிவகுமாரின் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

யசோதாவிற்கு சிவகுமார் மிகப்பிடிக்குமென நிர்மலா ஒருமுறை சொன்னது ராமின் நினைவில் வந்து போனது.

வீட்டுச் சுவர் முழுக்க சிவகுமாரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே ரஜினியும் கமலும் நிறைத்திருந்தார்கள். அதிசயமாய் ஸ்ரீதேவியின் அழகுப் புகைப்படமும், நதியாவின் புகைப்படமும் இருந்தன. அறையில் ஒரு பம்ப் ஸ்டவ்வும், சொற்ப பாத்திரங்களும், துணிகள் வைக்க ஒரு இரும்புப்பெட்டியும், ஓரத்தில் படுப்பதற்குப் பாயும் வைக்கப்பட்டிருந்தன. அதைத் தாண்டி வேறெதுவுமில்லை. ஓரிரு நிமிடங்கள் காத்திருந்து அவள் வந்தவுடன் பேசிவிட்டுத் திரும்பினார்கள்.

இந்த இடைஞ்சலான இடத்தில் இருந்து கொண்டு எப்படி எப்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என அவன் நிர்மலாவிடம் திரும்பி வரும்போது கேட்டுக்கொண்டே வந்தான்.

யசோதாவிற்கு எல்லாரிடமும் சகஜமாய்ப் பேசிக்கொண்டிருக்கும் குணம். ஆண் பெண் பேதமில்லை. அவள் வீதியில் ஆண்களுடன் சிரித்துப் பேசுவதை அங்கிருப்பவர்கள் ஒரு மாதிரி பார்க்கத் தொடங்கினார்கள். அந்த ஒரு மாதிரி என்பதுதான் அவனுக்கு என்ன மாதிரி எனப் புரிந்துகொள்வதில் தயக்கமிருந்தது. பெண்ணுடன் பேசுவதுபோலவே ஆணுடன் பேசுவது எப்படி ஒருமாதிரியாகிறது என்ற குழப்பம் அந்த ரெண்டுங்கெட்டான் வயதில் அவனுக்கு நீடித்திருந்தது. இருப்பினும் அவனுக்கு அவன் சித்தியைப் பொதுவாகவே பிடிக்காமல் போனதால் அவள் செய்வது எல்லாமே தப்புதான் என்ற ரீதியில் தீர்மானித்தான்.

யசோதா கண்ணாடிபோன்ற சிபான், ஜார்ஜெட் சேலையை அணிவதையே விருப்பமாகக் கொண்டிருந்தாள். கனமான சேலைகளின் பக்கம்கூடப் போகமாட்டாள். சினிமாக்களில் வரும் நடிகைகளின் சேலைகளை உற்றுப்பார்த்து அதைப்போல் வாங்க மெனெக்கெடுவாள். இதற்காகவே நல்ல வசதியான வீடுகளில் வீட்டு வேலை பார்த்தாள். அவர்களிடமிருந்து சேலைகளைப் பெற்று அவற்றைக் கட்டிக்கொள்வாள்.

வீட்டு வேலைகளையும் அவள் நிரந்தரமாகச் செய்யவில்லை. பிறகு ஒரு மருத்துவரிடம் டோக்கன் கொடுத்து நோயாளியை உள்ளே அனுப்பும் வேலை பார்த்தாள். ஆஸ்பத்திரியின் போர்ட்டிகோவில் போட்டிருக்கும் இரும்பு நாற்காலியில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு, வரும் நோயாளிகளிடம் கதை பேசியபடியே இருப்பாள். அவளுக்கு நன்றாகத் தெரிந்தவர்களுக்குச் சில சலுகைகள் கொடுத்து முன்னே அனுப்புவதையும் செய்தாள். இது தெரிந்த அந்த மருத்துவர் அவளை வேலையிலிருந்து நிறுத்திவிட்டார். வயது முப்பதாகியிருந்தது. இன்னும் மணமாகவில்லை. அவளுக்கு மணம் செய்து தர அவளுடைய அம்மா அப்பா இல்லை, சொல்லிக் கொள்ளும்படியாக அவளுடைய அக்கா நிர்மலாவுடனும் உறவில்லாததால் தான்தோன்றித்தனமாகத் திரிந்தாள்.

சிறுகதை: உதிரிப்பூ

யசோதா புகைபிடிப்பாள். பலமுறை அவன் நண்பர்கள் பார்த்துச் சொன்னபோதும் அவர்கள் கிண்டலாய்ச் சொல்வதாக நினைத்தான். அவனே ஒருமுறை பார்த்துவிட்டான். தேவி பாரடைஸ் தியேட்டருக்கு முன்னிருந்த பெட்டிக்கடையில் வாங்கிய சிகரெட்டைப் புகைத்து, புகையை மந்தகாசமாய் மேலே பார்த்து விட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு அருகிலிருந்த சில இளவட்டங்கள் அவளை ஏதோ சொல்லிக் கிண்டலடிக்க, அவள் கோணித்த சிரிப்புடன் அவர்களை அடிப்பதுபோல் கையோங்கிவிட்டு மீதி சிகரட்டை அருகிலிருந்த சாக்கடையில் வீசிவிட்டு நடந்தாள். லேசான வளைந்த முதுகுடன், கையை வீசியபடி, எவரையும் உதாசீனப்படுத்தும் பார்வையில் காற்றில் கூந்தல் கலைய, சேலையில் தலைப்பு காற்றில் பறக்க நடந்துகொண்டிருந்தாள்.

``உன் சித்தி என்னடா சிலுக்கு மாதிரி இருக்கு’’ என அவன் தோழர்கள் சொன்னபோது அவனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இவள் எப்போது செத்துப்போவாள் என அந்தத் தருணத்தில் நினைத்தான்.

ராம் நிர்மலாவிடம் அவன் பார்த்ததை விவரித்தான்.

`` ஏம்மா இந்த சித்தி மட்டும் இப்படி இருக்கு...நம்ம குடும்பத்துல யாருமே இப்படி இல்லையே?’’

``நல்லாத்தான் இருந்தா... வேலைக்காக எங்கம்மா பதிமூணு வயசுல டெல்லி அனுப்பினதுதான். ரெண்டு மூணு வருஷம் அங்கேயே இருந்தா. உங்க பாட்டி செத்தப்போதான் வந்தா. வர்றப்பவே அவளோட நடை உடை எல்லாம் மாறிடுச்சு. அப்ப இருந்தே இப்படி இருக்கா. திருந்தறபாடுமில்ல. தெனத்திக்கி சினிமா, ஊர் சுத்தறது, கண்ட நாயம் பேசறது, நினைச்சா வேலைக்குப் போறதுன்னு பொறுப்பே இல்லாம இப்படியெல்லாம் இருந்தா யார்தான் சேத்துக்குவா? கல்யாணம் பண்ணிக்குவா? உங்கப்பா திட்டாம என்ன செய்வாரு?’’ என ஆதங்கப்பட்டாள்.

விடுமுறை தினங்களில் அவன் நண்பன் ஆனந்த் வீட்டிற்குச் செல்வதுண்டு. அங்கிருந்து அவர்கள் இருவரும் இன்ன பிற தோழர்களோடு சேர்ந்து பொது மைதானத்திற்கு விளையாடச் செல்வார்கள்.

அப்படித்தான் அன்று அவன் நண்பன் ஆனந்த் வீட்டிற்குச் சென்றபோது, கொல்லையில் துணியைத் துவைத்துக்கொண்டிருந்த அவனின் அம்மா, சித்தியைப் பற்றி விசாரித்தார். ஆனந்தின் அம்மாவும் யசோதாவும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என முன்னமே அறிந்திருந்தான்.

``உன் சித்தி எப்படி இருக்கா ராமு?’’ மூச்சு இரைக்கக் கேட்டார்

``அதுக்கென்ன கேடு அத்தை. இப்பதான் வீட்டுக்கு வர்றதில்ல. நிம்மதியா இருக்கு. ஆனா டியூஷன் போறப்போ தினமும் அதோட வீதி வழிலதான் போறேனா... அப்போ அதுகிட்ட மாட்டிக்குவேன்’’ எனக் குழந்தைத்தனமாய்ச் சொன்னான்.

அவர் சிரித்தார் ``உங்க சித்தி ரொம்ப நல்லா படிப்பாடா... அவதான் ஸ்கூலேயே முதல் மூணு ரேங்க்ல வருவா... கணக்குல நூத்துக்கு நூறுதான்...’’ மூச்சு இரைக்க இரைக்க துணியை நீரில் அலசியவாறு சொன்னார்.

``நிஜமாவா, அதுவா?’’

``ஆமா... கிளாஸ்ல எப்பவும் வாயாடிதான். ஆனா எப்படியோ படிச்சு பர்ஸ்ட் மார்க் எடுத்துடுவா. ஏழாவது வரைக்கும் ஒண்ணாதான் படிச்சோம். உங்கம்மாக்குக் கல்யாணம் பண்ணி வச்சதுல உங்க பாட்டிக்கு ஊர்ல ஏகப்பட்ட கடனாயிடுச்சு... அதனால யசோதாவ படிப்ப நிறுத்தி, மில்லுக்கு அனுப்புனாங்க. நாங்க ஸ்கூலுக்கு செட்டா போறப்போ, அவ மில்லுக்கு டிபன் பாக்ஸ தூக்கிட்டு எதுத்தாப்புல வருவா. அப்பவும் சிரிச்சுட்டே அதே வாயடிச்சிட்டுப் போவா. எங்களுக்கெல்லாமே கஷ்டமா இருக்கும். ஹெட்மாஸ்டர், டீச்சர்லாம் தினமும் உங்க பாட்டி வீட்டுக்கு வந்து யசோதாவை ஸ்கூலுக்கு அனுப்பச் சொல்லித் தொல்லை பண்றாங்கன்னு காண்ட்ராக்ட்ல டெல்லிக்கு அனுப்பிட்டாங்க... அப்றம் உங்க பாட்டி செத்ததுக்கு வந்தவ, இங்கேயே இருந்துட்டா. என்னமோ போ... மனுஷங்க பொழப்பு எப்படிப் போகுதுன்னே தெரில.’’

பிழிந்த துணிகளைக் கொடியில் காய வைத்தவாறு சொன்னார்.

``ஒருத்தர் வாழறதுக்கு இன்னொருத்தர் வாழ்க்கையை அடகு வைக்கிற பொழப்பு மட்டும் பொம்பளைங்களுக்கு சாபமா இருக்குது’’

புலம்பலாய் அவர்பாட்டுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவனுக்கு இது கேட்க ஒருமாதிரியாகிப் போனது. மாலை வீட்டிற்கு வந்ததும் நிர்மலாவிடம் ஆனந்தின் அம்மா சொன்னதைப் பற்றிக் கேட்டான். அவள் உண்மையெனத் தலையை மட்டும் ஆட்டினாள். அவள் பக்கம் நியாயப்படுத்து வதற்கான எந்த வார்த்தையும் அவள் வசம் கிடைக்கவில்லை. இவனுக்கும் கேள்வி கேட்பதற்கான அனுபவமோ, விவரமோ இல்லை.

ஒரு நாள் நல்ல மழை, அவன் டியூஷனிலிருந்து வரும்போது தொப்பலாய் நனைந்தான். எல்லாரும் சிதறி ஓடினார்கள். சற்று விலகலாய் ``ராம் குட்டி, ராம் குட்டி’’ என லேசாய் கரகரத்த ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான். அவனுடைய சித்தி குடையுடன் அவனை நோக்கி ஓடி வந்தாள்.

``வா அங்க ஓரமா இருந்து மழை நின்னதும் போ’’ எனக் கையைப் பிடித்து இழுத்தாள்.

``இல்லா பாவாயில்ல, நான் போறேன், அம்மா தேடுவாங்க.’’

``அதுக்காக இந்த மழையில போவியா, ஒழுங்கா வா’’ என, கரடுமுரடான அவளது உள்ளங்கையால் அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஒரு பந்தலுக்குள் கூட்டிச் சென்றாள்.

அதற்குள் பாதம் மூழ்கும் வரை நீர் வந்துவிட்டிருந்தது. அது ஒரு சிறிய ஹோட்டல். மரப்பெஞ்சுகளும், மர டேபிளும் சீராகப் போடப்பட்டிருந்தன. ஒரு பக்கம் சூடாக தேநீரும் வடையும் ஒரு குல்லா மனிதர் போட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் அடுப்பில் எண்ணெய் கொதிக்க சுடசுட பூரிகள் சுட்டு அடுக்கடுக்காய் வைக்கப்பட்டிருந்தன.

இந்த மழையும், குளிர்காற்றில் பரவும் மசாலா வாசனையும் அவனுடைய பசியை இன்னும் கிளறிவிட்டது.

அவள் அவளுடைய சேலைத் தலைப்பால் அவனது தலையைத் துவட்டிவிட்டாள். இத்தனை மிக அருகில் அவளருகில் நிற்கவே வெறுப்பாய் இருந்தது, அவன் வேண்டாமென நகர்ந்தான்.

``பார்ரா’’ என்றபடி அங்கிருந்த அப்போதே சுடப்பட்டிருந்த பூரி இரண்டை வாழை இலையில் வைத்து மசாலாவையும் போட்டுக் கொடுத்தாள்.

``அண்ணா, என் கணக்குல எழுதிக்கோங்க. என் மகன்... என் அக்கா மகன்’’ எனச் சிரித்தபடியே சொன்னாள்.

கல்லாவில் அமர்ந்திருந்தவர் சரி எனத் தலையாட்டிவிட்டு மழையை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்.

ராம் மறுத்தான்.

``ஒழுங்கா சாப்பிடுடா. நான் சுட்ட பூரி தெரியுமா... உங்க சித்தி இங்கதான் இப்ப வேலை செய்றேன். நான் சமைச்சு சாப்பிட்டதில்லதான...’’ எனக் கொடுத்தாள். அவனுக்குப் பிடிக்கவில்லையென்றாலும் பசியில் ஏதும் சொல்லாமல் வாங்கி சாப்பிட்டான்.

எதிர்த்தாப்பில் இருந்த பெஞ்சில் ஒரு காலை குத்துக்கால்போல் வைத்து கன்னத்திற்கு ஒரு கையை முட்டுக்கொடுத்து சிரித்தபடியே பார்த்தாள்.

``டேய்... நீ பொறந்ததும் உன்னை முதல்ல கையால தூக்குனது நாந்தான் தெரியுமா? இப்ப என்னடான்னா கண்டுக்காம போற... உங்கம்மா இதெல்லாம் சொல்லீருக்க மாட்டாளே...’’ எனச் சிரித்தாள்.

``உங்கம்மா தலைப்பிரசவத்துக்கு எங்க வீட்லதான் வந்து இருந்தா. உம் பாட்டியும் செத்துடுச்சு. எனக்கே அப்போ பதினேழோ பதினெட்டோதான் வயசு. ஆஸ்பத்திரிக்குக் கிளம்பறதுக்கு முன்னாடியே நீ பொறந்துட்ட. உங்கப்பா எட்டிக்கூடப் பாக்கல. உங்கம்மாவால எந்திரிக்கவே முடியாது. நாந்தான் உன்னைக் குளிப்பாட்டி, சுத்தப்படுத்தி, தூங்காம கவனிச்சுட்டு இருந்தேன். அதான் உன்மேல இப்பவும் தனிப் பிரியம். காசு பத்தாயிரம் கொடுத்தாதான் புள்ளைய கூட்டிட்டு வரணும்னு உங்கப்பா சொல்லிட்டார். பதினோராவது மாசம் ஆனதும், அக்கம் பக்கம் புரட்டி பத்தாயிரம் கொடுத்து உங்கப்பா வீட்டுக்கு அனுப்பினேன்.

அந்தக் கடனை உங்கப்பனா வந்து அடைப்பான். நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு உங்கம்மா கேட்டாளா? இருந்தாலும் இருக்கிற ஒரே சொந்தம்னு உங்க வீட்டுக்கு வந்தேன். ஆனா நீங்க என்னடான்னா. ஒரு பத்து ரூபா கேட்டாக்கூட கொடுக்காம விரட்டறீங்க. சரியான ஆளுங்கடா நீங்கல்லாம்’’ எனச் சொல்லிவிட்டு அதுக்கும் சிரித்தாள்.

சில நொடிகள் அமைதி யானாள். அவன் கை கழுவி வந்ததும் ``பூரி நல்லாருக்கா’’ எனப் பேச்சை திசை திருப்பி னாள். அவன் தலையை மட்டும் ஆட்டினான்.

மழை லேசானதும், அவன் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பினான். வீட்டில் வந்து அவன் அம்மாவிடம் சொன்னால் அடிப்பாள் எனச் சொல்லாமல் விட்டுவிட்டான்.

யசோதாவிற்குப் புதிதாய் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவனுடன் அடிக்கடி ஊர் சுற்றிக்கொண்டிருந்தாள். அவனுக்கும் மத்திம வயதிருக்கும். தாடி வைத்திருந்தான். அவன் பந்தல் மற்றும் மேடை அலங்காரங்கள் செய்து வந்தான். சினிமாவில் ஸ்டன்ட் நடிகராக இருந்துவிட்டு மீண்டும் ஊருக்கே திரும்பியிருந்தான்

அவர்கள் வீதியில் நடந்த பொங்கல் விழாவிற்குக்கூட அவன்தான் மேடை அமைத்தான். சம்பந்தமே இல்லாமல் யசோதா இவர்களது வீதியில் நாள் முழுவதும் வலம் வந்தது இதற்குத்தானா என இப்போது ராமிற்குத் தோன்றியது. வருஷம் பதினாறு படத்திலிருந்து ``பூப் பூக்கும் மாசம்’’ பாடலை திரும்பத் திரும்ப ஒலிப்பெருக்கியில் அவள் போட வைத்ததும் அவன் நினைவில் வந்து போனது.

எப்போதுமே கவலையில்லாமல் திரியும் யசோதா இன்னும் பொலிவாகியிருந்தாள். அவனுடன் டிவிஎஸ் வண்டியில் பின்னமர்ந்து சிரிக்க சிரிக்கப் பேசிக்கொண்டே யசோதா செல்வதை அவன் அடிக்கடி பார்த்தான். யசோதா அந்தப் பந்தல் போடுபவனை மணம் செய்துகொண்டாள் எனச் செவிவழி செய்தி வந்தது. எப்படியாவது அவளுக்கெனக் குடும்பம் அமைத்துக்கொண்டால் போதுமென அவன் குடும்பம் நினைத்தது.

ஒருமுறை அவனுக்கு ஒரு கனவு வந்தது. ஒரு பின்மதிய நேரத்தில் நிர்மலா கண் அசரும் நேரத்தில் அவன் பாட்டி வீட்டிற்குள் வந்து ``பசிக்குது... சாப்பிட ஏதாவது தா’’ என்கிறாள். நிர்மலா ``இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன். சாப்பிட ஏதுமில்லையே’’ என்று சொல்கிறாள். இதனால் பாட்டி கடுங்கோபம் கொண்டு அழுதபடி திட்டிக் கொண்டே செல்கிறாள். இந்தக் கனவு அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால் அவன் பாட்டியைப் பார்த்ததில்லை. கனவில் அவருடைய குரலைக்கூட உணர்ந்தான். அந்தக் கனவு கண்ட அடுத்த நாள் தன் அம்மா நிர்மலாவிடம் விவரித்தான்.

``ஏதாவது நினைச்சுட்டே படுத்திருந்திருப்ப அதான் கனவு வந்துருக்கு’’ என்றாள். அதன் பின் ஏதோ யோசித்தபடியே இருந்தாள் நிர்மலா.

சரியாக ஒருவாரமாகியிருக்கும். அதேபோல் ஒரு பின் மதிய நேரத்தில் யசோதா வந்தாள். மிகக் களைப்புடன் வெயில் அசதி அவள் முகத்தில் படர, எடுத்தவுடனே ``அக்கா பசிக்குதுக்கா, சாப்பிட ஏதாவது கொடு’’ எனக் கண்களைச் சுருக்கிக்கொண்டு கேட்டாள்.

நிர்மலாவிற்கு லேசான அதிர்வு. அன்று உண்மையாகவே உணவு காலியாகியிருந்தது. ராம் அந்தக் கனவைச் சொல்லாமலிருந்தால் சாப்பாடு இல்லை எனக் காசு கொடுத்து அனுப்பியிருப்பாள்.

அன்று யோசிக்காமல் சாதம் வடித்து, தக்காளித் துவையல் செய்து ஏதும் பேசாமல் பரிமாறினாள். சாப்பிட்ட பின் அவள் முகம் தெளிவானது. அந்த இதழோரம் அந்தக் குறு நகையும் அப்படியே இருந்தது. கழுத்தில் மஞ்சள் கயிற்றினைப் பார்த்தாள் நிர்மலா.

அவள் மணம் செய்ததைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. நிர்மலாவே வாய் திறந்து சொன்னாள்.

``இனியாவது திருந்தி, புருஷன், குடும்பம்னு செட்டா வாழப் பழகு. ஊர் சுத்தாத.’’

``சரிக்கா’’ என்று கிளம்பிவிட்டாள். அவன் கனவுபோலவே, யசோதா வந்து போனதை ராம் பள்ளியிலிருந்து வந்தவுடன் நிர்மலா சொன்னாள். அவன் கண்ணகல அப்படியா எனப் பார்த்தான்.

சமீபமாய் ராம் டியூஷனிலிருந்து வரும்போது அவன் கண்களில் யசோதா தட்டுப்படவில்லை. அவள் வீடு காலி செய்து அவனுடன் வேறெங்கோ போயிருக்கக் கூடும் என நினைத்தான். இருந்தும் அந்த ராம் குட்டி என்று உற்சாகம் கொப்பளிக்கும் குரலைத் தேடினான்.

யசோதாவை மணம் செய்தவன் மூன்று மாதம் அவளுடன் குடித்தனம் நடத்திவிட்டு, ஒருநாள் திடீரென எங்கோ சென்றுவிட்டான். தினமும் அவனை ஊர் ஊராய்த் தேடிக்கொண்டிருந்தாள்.

இந்தச் செய்தி ராமை மிகவும் பாதித்தது. முதன் முதலாய் தன் சித்திக்காகக் கண்ணீர் விட்டான். பல நாள்கள் கழித்து மீண்டும் அன்று தேவி பாரடைஸ் தியேட்டர் முன்பு அவன் சித்தியைப் பார்த்தான். லேசாகக் குன்றிப்போயிருந்தாள். கையில் சிகரெட் வைத்திருந்தாள். ராம் அவளைப் பார்த்ததும் சினேகமாய் சிரித்தான் முதன்முறையாய்.

அவள் அவனைப் பாராமல் வேகமாய் நடந்து போய்க்கொண்டிருந்தாள். அந்த இதழோரக் குறுநகையும் தொலைந்திருந்தது. அந்தச் சிறு நகரத்தில் அவள் கண்கள் எதையோ, யாரையோ தேடிக்கொண்டிருந்தன. பெருமழைக்கான அறிகுறியோடு காற்று வீசத் தொடங்கியது.