சினிமா
தொடர்கள்
Published:Updated:

சிலந்தித் தீவு - சிறுகதை

சிலந்தித் தீவு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிலந்தித் தீவு - சிறுகதை

ஆயிஷா இரா.நடராசன்

நாங்கள் அந்தத் தீவில் போய் இறங்கும்போது விடிந்திருந்தது. எங்களை ஏற்றிச்சென்ற கடல் ஊர்தியை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. கப்பல் என்று நான் அழைப்பதை பேராசிரியர் சூரியதீபன் ஏற்கமாட்டார். ஆனால் அவரே தனது நேரடி வழிகாட்டுதலில் உருவாக்கிய அந்த ஊர்தி கடலிலும் கடற்கரை ஓரத்தில் மணலிலும் ஓடும் அமைப்பில் இருந்தாலும் அதற்கு ஒரு பெயர் இருக்கவேண்டுமே.

அவர் அதற்கு காலபாகஸ் என்று பெயரிட்டார். ஆனால் ஊர்தியில் பெயர்ப்பலகை எழுதும்போது மகா காலபாகஸ் என்று ஒரு மகாவைச் சேர்த்துக்கொண்டார்.

‘‘இங்கே... இந்தத் தீவிற்கு எதற்காக வந்திருக்கிறோம் சார்?’’ அவன்… ரகுராமன் திரும்பவும் கேட்கிறான்.

தனது பைனாகுலரால் ஒரு தொலைதூர பிரதேசத்தைக் கண்காணித்தபடி இருந்த பேராசிரியர் சூரியதீபன் வழக்கம்போல அந்தக் கேள்வியைச் சட்டை செய்யவில்லை. நீண்ட பயணம் என்பதால் காலபாகஸ் புஸ்புஸ் என்று புகைவிட்டு தனக்கு ஓய்வு தேவை என்பதைப் பறைசாற்றியது.

சிலந்தித் தீவு - சிறுகதை

‘‘பாத்து... பாத்துப்பா... தண்ணீர் படவே கூடாது... இன்னும் மேலே தூக்கு’’ என்று கத்திய பேராசிரியர் குரலுக்கு நடுவே நாங்கள் அந்த பிரமாண்ட பெட்டியை ஊர்தியிலிருந்து இறக்கினோம். கரையில் கொண்டுவந்து அவர் காட்டிய இடத்தில் வைத்தோம். ‘‘மேலும் ஆறு பெட்டிகள்’’ என்றார். ‘‘சரியாக இருபது நாள்கள் கழித்து வந்துவிடவேண்டும்.’’ கப்பல் ஊர்தியைத் திருப்பி அனுப்பினார் அவர். இருபது நாள்கள் அந்தத் தீவில்... எந்த மனிதனும் இல்லாத அந்தத் தீவில் விடப்பட்டுள்ளோம்.

நான், மாத்ருபூதம், ரகுராமன் மற்றும் பேராசிரியர் நாலு பேரும் எங்களது துணிமணி, கணினிப்பை சகிதம் கூடாரம் அமைக்கத் தேர்வான இடத்திற்கு விரைந்தோம். மாத்ருபூதம்தான் கூடார வல்லுநர். அதற்காகவே தேர்வுசெய்யப்பட்டவர். பேராசிரியர் மொத்தம் எழுபது பேரை நேர்காணல் செய்து அவரைக் கடைசியாகத் தேர்ந்தெடுத்தார். ‘‘நம் ஆய்விற்குக் கூடாரம்தான் மிக முக்கிய அம்சம்’’ திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்.

ஆனாலும் மாத்ருபூதம் கூடாரத்தை முழுமையாக அமைக்க எடுத்துக்கொண்ட ஆறு மணி நேரத்திற்கு நாங்கள் எதுவுமே சாப்பிடவில்லை என்பது ரகுராமனின் பெரிய குறை. அந்தக் குறை தெரியாமல் இருக்க தனது கைப்பையிலிருந்து கைநிறைய பேரீச்சம் பழங்களை எடுத்து பேராசிரியர் எங்களுக்குக் கொடுத்தார்.

‘‘இந்த ஆளரவமே இல்லாத தீவுக்கு நாம் எதற்கு வந்திருக்கிறோம்? இப்பவாவது சொல்லுங்க சார்!’’ என்றான் ரகுராமன். ‘‘ஊர்தியையும் திருப்பி அனுப்பிவிட்டீர்கள்.’’

‘‘சொல்றேன், சொல்றேன்...’’ என்றார். பிறகு எழுந்து நின்றார். மரங்களின் ஊடாக ஏழெட்டு தப்படி நடந்தார். அங்கங்கே சிறுபாறைகள்மீது நாங்கள் இருவரும் அமர்ந்திருக்க, எங்களை நோக்கித் திரும்புகிறார்.

‘‘நாம் டார்வினின் தத்துவத்தைச் சரிபார்க்க இங்கே வந்திருக்கிறோம்’’ என்றார். தன் தங்கப்பல் தெரியச் சிரிக்கிறார். ஆம், இரண்டு தங்கப்பல் கட்டியவர் அவர்.

‘‘என்னது... டார்வின் கொள்கையா? சார்... நீங்கள் ஒரு நேனோ விஞ்ஞானி. உங்களுக்கும் உயிரியலுக்கும் என்ன சம்பந்தம்?’’ அவரைப் பற்றித் தெரியாமல் ரகுராமன் அலறினான்.

நான் சிரித்துக்கொண்டேன். பேராசிரியர் சூரியதீபன் ஒரு நேனோ விஞ்ஞானி என்பது நாடறிந்த விஷயம். அதிலும் மனித இயந்திரம், அதாவது ரோபோ நிபுணர். ரோபோக்கள் சம்பந்தமான மூன்று சர்வதேச விருதுகளையும் பெற்ற உலகிலேயே இன்னும் உயிர்வாழும் அறிஞர். ஆனால் நேனோ தொழில்நுட்பத்திற்கும் நுண்ணுயிர் உயிரியலுக்கும் எப்போதுமே ஒரு வகை தொடர்பு இருந்துதானேவருகிறது என்று நான் எண்ணினேன்.

மதியம் கடந்து மாலை நெருங்கும்போது அவர் ஒரு சிறிய பெட்டியைச் சுமக்க வைத்து, தீவின் மறுமுனைக்கு எங்களைக் கூட்டிச்சென்றார். உணவு உட்கொண்டது மட்டுமல்ல, நாங்கள் களைப்பு தீர நன்றாக உறங்கியுமிருந்தோம். சற்றே மேடாக இருந்த அந்த இடத்தில் நாங்கள் சரிவில் ஏறவேண்டி இருந்தது. ஏறத்தாழ மேட்டின் உச்சிக்குச் சென்றபோது அங்கே பெட்டியை வைக்கக்கூறி அதைத் திறந்தார்.

உருண்டை வடிவில் பந்துபோல பொன்னிறத்தில் கையடக்கமாக இருந்த ஒன்றை எடுத்து மண்ணில் உருட்டினார் பேராசிரியர். மாலை வெயிலில் அது பளபளத்தது. சூரிய ஒளியில் சூடேறிய கொஞ்ச நேரத்தில் பந்து விரிவடைந்தது. எட்டுக்கால்களும் இரண்டு மீசைபோன்ற கம்பி இழைக் கொம்புகளுமாக அந்த இயந்திரப் பூச்சி உயிர்பெற்றது. உணர்வுக்கொம்பு அந்தச் சமயத்தில் ஆண்டனா போல மேல்நோக்கி ஒருவிதமான பொறி கிளப்பிவிட, அது நகரத்தொடங்கியது.

சிலந்தித் தீவு - சிறுகதை

‘‘இதுதான் நம் ஸ்பைடர்-II ரக ரோபோ…’’ என்றார் பேராசிரியர்.

பிறகு எல்லாப் பெட்டிகளையும் தூக்கிவரச்செய்தார். அவற்றை அந்த மேட்டைச் சுற்றிலும் கவிழ்க்க வைத்தார். ஒவ்வொரு பெட்டியிலும் பலவகையான உலோகத் துண்டுகள் இருந்தன. இரும்பு, தாமிரம், பித்தளை, வெள்ளி, வெண்கலம்... இப்படி. ஒவ்வொரு பெட்டியில் இருந்தும் கொட்டியவை அங்கங்கே ஒரு உலோக மேடாக இருந்தன.

நாங்கள் இந்த வேலையை முடிப்பதற்குள் அவரது ஸ்பைடர் ரோபோ கடலில் இறங்கியிருந்தது. தண்ணீரில் முங்கி, பிறகு மீண்டும் வெளியேறி, கடற்கரை ஓரம் மணலில் ஒரு இடத்தில் நின்றது. சூரிய ஒளியில் தன் உணர்வுக் கொம்புகளைக் காட்டியபடி அசையாமல் இருந்தது.

‘‘அது என்ன செய்கிறது பேராசிரியர்’’ என்றேன் நான். ‘‘தெரியவில்லையா… அது தன் பேட்டரியை சார்ஜ் செய்கிறது. தானியங்கி அமைப்பாக அதைச் செய்திருக்கிறேன். நாம் எதுவும் செய்யவேண்டியதே இல்லை. கடல்நீர்... சிலிக்கான்... சூரிய ஒளி... அதன் ஒரு உணர்வுக் கொம்பில் சிறு கண்ணாடிபோல் இருப்பதைப் பார்க்கலாம்... அது சிலிக்கானால் ஆனதுதான். ஸ்பைடர் ரோபோ தானாகவே தன் பேட்டரியை சார்ஜ் செய்யும் முறை அது’’ என்றார்.

நாங்கள் அதைப் பார்த்து வியப்பதற்கு முன் ஸ்பைடர் ரோபோ உலோகக் குவியல் நோக்கிச் சென்றது. சற்று நேரத்தில் பலவாறு பொறி பறக்க அது ஏதோ ஒரு வேலையில் மும்முரமாக இறங்கியது. ‘‘ஆஹா... நம் ஆய்வின் முதல் படிநிலை வெற்றி’’ என்றார் பேராசிரியர் நேனோ சூரியதீபன்.

ஒன்றரை மணி நேரம் ஸ்பைடர் ரோபோ ஏற்படுத்திய விதவிதமான சத்தங்களை வியப்போடு கேட்டு அதன் ஒவ்வொரு அசைவையும் நாங்கள் உற்று நோக்கினோம். ‘‘ஐயோ... சூப்பர்...’’ ரகுராமன்தான் முதலில் கூச்சலிட்டது.

இது அதிகம்தான்… ஸ்பைடர் ரோபோ தன் போலவே ஒரு ஸ்பைடர் ரோபோவைக் குட்டி போட்டிருந்தது. ‘‘ஆஹா... நம் ஆய்வின் இரண்டாவது ஸ்டெப்பும் வெற்றி’’ பேராசிரியரின் குரல்.

‘‘இது எப்படி சாத்தியம்?” என்றேன்.

‘‘இந்தப் பூச்சி ரோபோக்களை தங்களைத் தாங்களே பிரதியாக்கம் செய்து பிறப்பித்துக் கொள்ள முப்பரிமாண புரொடக்‌ஷனாக புரோகிராமிங் செய்திருக்கிறேன்’’ என்றார் பேராசிரியர்.

புதிதாகப் பிறந்திருந்த சிலந்தி ரோபோ இப்போது கடலை நோக்கிப் பயணித்தது. அதே காட்சிகள். கடல்நீரில் முக்கி எழுந்து சூரிய ஒளியில் தன்னைக் காட்டிக்கொண்டது. பிறகு நேராக அது உலோகக் குவியலுக்கு வந்தது. அது வருவதற்குள் முதலாவது சிலந்தி ரோபோ அடுத்த புதிய ரோபோக் குட்டியை உருவாக்கி முடித்திருந்தது.

‘‘உலோகக் குவியலில் சிலிகான் இருக்கிறதா’’ என்றேன் நான். ‘‘இல்லை இல்லை… எதற்குத் தனியாக’’ என்றார். கடற்கரை மணலைக் காட்டினார் பேராசிரியர் நேனோ சூரியதீபன். ‘‘மணலில் இருந்து அதை அதுவே எடுத்துக்கொள்ளும்.’’

‘‘ஆஹா... ஆனால் இவற்றை நம் ராணுவத்திற்கு வாங்குவார்கள் என்கிறீர்களே! இவற்றால் என்ன பயன்?’’

அதற்குள் அங்கே மொத்தமாக நான்கு சிலந்தி ரோபோக்கள் தங்களைத் தாங்களே உருவாக்கிக்கொண்டிருந்தன. மேலும் ‘இனப்பெருக்கம்’ தொடர்ந்தது.

‘‘உங்களுக்கு எண் கூட்டல் தொடர் என்றால் தெரியுமா? பிபனாசித்தொடர். முதலில் ஒரே ஒரு ஸ்பைடர் ரோபோதான் இருந்தது. தற்போது எட்டு உள்ளன. நாளை காலை அறுபத்து நான்கு சிலந்தி ரோபோக்கள் இருக்கும். நாளை மறுநாள் ஐந்நூற்றுப் பன்னிரண்டு... இப்படியே போகும். பத்தே நாள்களில் இந்தத் தீவில் பத்து லட்சம் சிலந்தி ரோபோக்கள் இருக்கும். அவற்றுக்கு முப்பதாயிரம் டன் உலோகங்கள் தேவைப்படும்’’ என்றார். நாங்கள் கற்பனை செய்து பார்த்து விழிபிதுங்கினோம். நேனோ தொழில்நுட்பத்தின் அற்புதம்.

‘‘ஆனால்...’’ நான் கேள்வி தொண்டையில் அடைக்க, திணறினேன். ராணுவத்திற்கு இதனால்..?’’

‘‘எதிரி நாட்டுக்குள் இவற்றை அனுப்பிவிட்டால், மிகக்குறுகிய காலத்தில் எதிரி நாட்டின் மொத்த உலோகக் கையிருப்பையும் பூச்சி ரோபோக்கள் துவம்சம் செய்துவிடும். ஒரு நாட்டின் ராணுவத் தளவாடங்கள் முதல் ரயில் தண்டவாளம் வரை எதையும் விட்டுவைக்காது’’ என்றார். மர்மப் புன்னகை புரிந்தார். ‘‘ஒரே ஒரு சிலந்தி ரோபாவை எதிரி நாட்டிற்குள் விட்டாலே போதும்... தானியங்கிப் பேரழிவு… பொருளாதாரச் சீரழிவு… எல்லாம் நிகழ்ந்துவிடும்.’’

‘‘அதனால்தான் நமது அரசாங்கம் உங்களது இந்த ஆய்வுக்கு ரகசியமாகப் பணமும் ஒதுக்கி ராணுவத்தையும் துணைக்கு அனுப்பியதா?’’ என்றான் ரகுராமன்.

‘‘இங்கே என்ன ஆய்வு..?’’ என்றேன் நான்.

‘‘நான் இந்தச் சிலந்தி ரோபோக்களை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தவேண்டி இருக்கிறது. அவற்றின் இனப்பெருக்கத்தை மேலும் துரிதப்படுத்தவேண்டும். அதற்கு மேம்பட்ட சிலந்தி ரோபோக்களை அவையே சுயமாகப் பெருக்கவேண்டும். எனக்கு டார்வின் அங்கேதான் தேவைப்படுகிறார்’’ என்றார்.

ஆனால், அவர் சொன்ன காலக்கெடு ஆறே நாள்களில் அங்கே உருவாகியிருந்தது. நள்ளிரவு நேரம்... ஏதோ ஒன்று முதுகில் உராய, எனக்கு முழிப்புத் தட்டியது. எல்லாரும் உறங்குகிறார்கள். எங்கள் டெண்ட் முழுதும் அந்தச் சிலந்தி ரோபோக்கள் வந்திருந்தன. ‘‘சார்... சார்...’’ நான் அலறினேன்.

ஏற்கெனவே தீவு முழுவதும் இந்தச் சிலந்தி ரோபோக்களே எங்கும் தென்பட்டன. இருட்டைத் துழாவி ஒரு விளக்கை ஆன் செய்தார் மாத்ருபூதம் - டென்ட் இன்சார்ஜ். இருந்தாலும் எங்கள் கைப்பேசிகளின் மிச்சமிருந்த சார்ஜில் டார்ச் அடித்தோம். பேராசிரியரின் பூச்சி ரோபோக்கள், டென்ட் போடப் பயன்பட்ட இரும்புக் கழிகளையும் உணவு டின் உட்பட எல்லா உலோகங்கள் மீதும் ஊர்ந்து கொண்டிருந்தன. டேபிள் ஃபேனும் அம்பேல்.அடுத்த இரண்டு நாள்கள் வெட்டவெளியில் வாழ்ந்தபின் மூன்றாம் நாள் அதிகாலை, ‘‘இங்கே வாருங்கள்’’ எனப் பேராசிரியர் எங்களை ஆர்வத்தோடு அழைத்தார்.

அவர் காட்டிய திக்கில் நாங்கள் கண்ட காட்சி வித்தியாசமாக இருந்தது. ஒரு சிலந்தி ரோபோ மற்றொரு சிலந்தி ரோபோவைப் பிடித்து, தன் முள்கொம்பு ஒன்றால் தனித்தனியாக உரித்து உடைத்து எடுத்து உலோகத்தை மறுபடி சிதைத்து புதிய சிலந்தி ரோபோ செய்கிறது. அவை ஒன்றுக்கு ஒன்று யுத்தம் செய்கின்றன.

‘‘இங்குதான் நிலைமை சுவாரஸ்யமாகிறது’’ என்றார் நேனோ பேராசிரியர். ‘‘டார்வின் கோட்பாட்டின்படி சூழலுக்குத் தக்கனவே பிழைத்திருக்கும் என்பதை நோக்கி நம் ஆய்வு முன்னேறுகிறது.’’

‘‘தீவின் உலோகம் அனைத்தும் பயன்பட்டுத் தீர்ந்தபின் ஒன்றன் மீது ஒன்று அவை தாக்குதல் நடத்தும். உலோகப் பஞ்சம் ஏற்படுவதால், தகுதியானவை மட்டுமே நிலைக்கும். அந்த ரோபோக்களை மேம்படுத்துவதே நமது நோக்கம்’’ அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கே ஜீவமரணப்போராட்டம் எந்தச் சத்தமும் இன்றி, ஆனால் ஒரு உள்நாட்டுக் கலவரம் மாதிரி தொடங்கியிருந்தது. தீவு முழுதும் ரோபோ போர்.

அடுத்த இரண்டு நாள்கள் பயங்கரமானவை. நாங்கள் எங்களது ஆடைப் பித்தான்கள், கைக்கடிகாரங்கள், கைப்பேசி உட்பட உலோக விஷயங்கள் யாவற்றையும் இழந்திருந்தோம். எங்களை வேட்டி கட்டவைத்தார் நேனோ பேராசிரியர். பேன்ட் ஜிப் முதற்கொண்டு காலி.

சிலந்தித் தீவு - சிறுகதை

ஆனால் நாங்கள் தீவில் வந்திறங்கிய பதினாறாம் நாள் துர்பாக்கியமான அந்தச் சம்பவம் நடந்துவிட்டது. அப்போது மதிய நேரம். நாங்கள் தீவில் கிடைத்த பழங்கள் சிலவற்றை உண்டு வயிறு நிரப்பினோம். ‘‘நம் கப்பல் திரும்பி வர இன்னும் நான்கு நாள்கள் உள்ளன’’ ஏக்கத்தோடு சொல்கிறான் ரகுராமன்.

பேராசிரியரைக் காணவில்லை. எங்களில் மாத்ருபூதம் சார்தான் முதலில் கவனித்தார். நாங்கள் திசைக்கு ஒருவராகப் பிரிந்து தேடத் தொடங்கினோம். பிறகு ஆய்வு தொடங்கிய மேட்டுப்பகுதியில் அவரை நான் கண்டேன். கையசைத்தார். தன் கையில் இரண்டு சிலந்தி ரோபோக்களை வைத்திருந்தார்.

‘‘ஆய்வு வெற்றி… வீரிய ரோபோக்கள் இதோ…’’ உற்சாகமாகக் கூவினார்.

அந்தச் சிலந்தி ரோபோக்களில் ஒன்று அவர் தலையில் ஏறியது. தனது உணர்வுக் கொம்பை வைத்து அவரைத் தாக்குகிறது. சட்டென்று எனக்குத் தோன்றியது. ‘‘சார்…. உங்கள் தங்கப்பல்… உலோகம்…’’ ஆனால் அதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது. அவரது கண்களை நோண்டி உலோகப்பல்லைப் பிட்டு எடுத்து அலற அலற அவரை வீழ்த்திவிட்டு இரண்டு சிலந்தி ரோபோக்களும் அந்த உலோகத்துண்டு தங்கப்பல்லுக்கு அடித்துக்கொள்ளத் தொடங்கின. எல்லாம் என் கண்முன் நடந்துவிட்டது.

பிறகென்ன... நாங்கள் அவரை இழந்திருந்தோம். ஒரு வழியாக நான்காம் நாள் அவரது கடல் ஊர்தி காலபாகஸ் வந்து எங்களை மீட்கும் வரை நாங்கள் உயிரைக் கையில் பிடித்தபடி தவித்த தவிப்பு. எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் போகலாம்... ‘சிலந்தித் தீவுக்குச் சுற்றுலா’ என்று யாராவது விளம்பரம் செய்தால் போகவேண்டாம்... ப்ளீஸ்.