திவ்யாவுக்கு ரிப்போர்ட் செய்ய முடியாது என்பதை அழுத்தமாகச் சொல்லிவிட்டு மார்க்ஸ் அமர்ந்திருந்தான். மார்க்ஸ்க்கு அடுத்த இடத்தில் திவ்யாவையும் வேலை செய்ய சொல்ல முடியாது என்பதும் அனைவருக்கும் தெரிந்திருந்தது. சித்தார்த் மேனன் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது போல தாட்சா அவரைப் பார்த்தாள். அவர் முகத்தில் எப்போதும் போல் ஒரு மெல்லிய புன்னகை.
பிரசாத், மார்க்ஸையும் திவ்யாவையும் மாறி மாறி பார்த்தபடி இருந்தான். அவனால் புகையை உணரமுடிந்தது. ஆனால், நெருப்பு எப்போது பற்றிகொள்ளும் என்பதை கணிக்க முடியவில்லை.
மெதுவாக இருக்கையில் இருந்து எழுந்த மேனன், கையில் ஒரு மார்க்கர் பேனாவை எடுத்தார். போர்டில் எழுதியபடியே பேசத் தொடங்கினார்.
“மார்க்ஸ்... திவ்யா... சித்தார்த்... தாட்சா... யார் ரொம்ப முக்கியம்?” என நிறுத்தியவர் திரும்பிப் பார்க்க... அனைவரும் புரியாமல் போர்டையே பார்த்தபடி இருந்தனர். சில நொடி இடைவெளிக்குப்பின் ஆரஞ்ச் டிவி என போர்டில் எழுதினார் மேனன். தாட்சா முகத்தில் புன்னகை.
“சேனல்தான் நம்ம எல்லாரையும் விட முக்கியம். சேனலுக்கு மார்க்ஸும் வேணும், திவ்யாவும் வேணும். ஒருத்தருக்கு கீழ இன்னொருத்தர வேலை செய்ய வைக்கிறது நியாயம் இல்லை... அதனால, ஒரே ஒரு வழிதான் இருக்கு...''
திவ்யா எந்த சலனமும் இன்றி அமைதியாக இருப்பதாக வெளியே காட்டிக் கொண்டாள். ஆனால், அவள் மனம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது.
“ஏன் இரண்டு புரோகிராமிங் ஹெட் இருக்கக் கூடாது” என மேனன் கேட்க... தாட்சாவின் மனது அவளை அறியாமல் 'வாவ்' என்றது. “இப்ப நம்ம சேனல் 200 GRP-ல இருக்கு... அடுத்த 6 மாசத்துல நம்மளோட டார்கெட் 400GRP. அதுல 200 GRP க்கான பொறுப்பு மார்க்ஸோடது. இன்னொரு 200 GRP-க்கான பொறுப்பு திவ்யாவோடது!”
“திவ்யா நீ உனக்கான டீமை செலக்ட் பண்ணிக்கலாம். மார்க்ஸ் நீங்க உங்களுக்கான டீமை செலக்ட் பண்ணிக்கலாம். 8 சீரியல்ல 4 சீரியல் மார்க்ஸ் டீம் பண்ணட்டும். இன்னொரு 4 சீரியல் திவ்யா டீம் பண்ணனும். நம்ம பண்ற 8 நான் ஃபிக்ஷன் ஷோவையும் அதே மாதிரி ஒரு டீமுக்கு நாலு ஷோவா பிரிச்சுக்கலாம்.”
ஃபிக்ஷன், நான் ஃபிக்ஷன் என ஏதோ பெரியதாக யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம். கதை விடுகிற சீரியலை ஃபிக்ஷன் எனச் சொல்வார்கள். அதைத்தவிர பாட்டு, டான்ஸ், சமையல், காமெடி என மற்றவை எல்லாமே நான் ஃபிக்ஷன் ஷோதான்.
சிறு ஏமாற்றத்துடன் திவ்யா போர்டை பார்த்தபடியே இருந்தாள். மேனன் தொடர்ந்தார்.
“நம்ம சேனலுக்கு ரெண்டு புரோகிராமிங் ஹெட். ரெண்டு பேர்ல யார் ஸ்கோர் பண்ணாலும் ஜெயிக்க போறது சேனல்தான். 6 மாசத்துல இந்த டார்கெட்டை யார் சாதிச்சு காட்டுறாங்களோ அவங்க தனி புரோகிராமிங் ஹெட்டா கன்டினியூ பண்ணுவாங்க. மத்தவங்க அவங்களுக்கு கீழ வொர்க் பண்ணனும். இது ஒண்ணுதான் எனக்கு தெரிஞ்ச வழி.”

“என்ன கேட்டீங்கன்னா இது சரியா வரும்னு தோணல சார்!” என்றான் பிரசாத். “அதனாலதான் உன்ன கேக்கல” என்று சிரிக்காமல் சொன்னார் மேனன். பிரசாத்தின் முகம் சட்டென இருண்டது. அதை சிரித்து மறைத்து கொண்டான் பிரசாத்.
“என்ன மார்க்ஸ் என்ன நினைக்கிறீங்க?” என மேனன் கேட்டார்.
“சார், இந்தப் பதவியை நான் எனக்கு கிடைச்ச பவர்னு பார்க்கல சார். பெரிய பொறுப்புனுதான் பார்க்குறேன். நான் நினைச்சத பண்ற சுதந்திரம் எனக்கு வேணும்னு நான் எதிர்பார்த்தேன் அவ்வளவுதான். இந்த ஸ்ட்ரக்சர் எனக்கு ஓகே... திவ்யாவுக்கு சம்மதமான்னு கேளுங்க சார்” என்றான் மார்க்ஸ்.
சித்தார்த் மேனன் திரும்பி திவ்யாவை பார்த்தார்.
“திரும்பவும் எனக்கு நீங்க ஒரு டெஸ்ட் வைக்கிறீங்க... பரவாயில்ல சார்... இந்த சேலஞ்சை நான் ஏத்துக்குறேன். நான் யாருன்னு திரும்பவும் உங்களுக்கு ப்ரூவ் பண்றேன்!” கொஞ்சம் ஏமாற்றம் கலந்த குரலில் சொன்னாள் திவ்யா.
“டெஸ்ட் எல்லாம் இல்ல திவ்யா... எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு” என்றார் மேனன்.
“பாதி நம்பிக்கைன்னு சொல்லுங்க சார்... சீக்கிரமே உங்களோட முழு நம்பிக்கையும் நான் சம்பாதிச்சு காட்டுறேன் சார். எனக்கும் இந்த செட்டப் ஓகேதான் சார்."
சித்தார்த் மேனன் சிரித்தார்.
“நீ போட்டி போட வேண்டியது மார்க்ஸோட இல்லை திவ்யா... நம்மள சுத்தி ஏகப்பட்ட சேனல்கள் இருக்கு. அவங்கதான் நம்மளோட நிஜமான போட்டியாளர்கள்... உங்க டீமை இன்னைக்கே முடிவு பண்ணுங்க... வேலைய ஆரம்பிக்கலாம்!”
இருவரும் “யெஸ் சார்” என்றனர் ஒரே குரலில்.
“எக்ஸ்க்யூஸ்மீ மேனன் சார்” என்றான் பிரசாத்.
“சொல்லுங்க பிரசாத்” என சற்று கிண்டலான புன்னகையுடன் அவனை எதிர்கொண்டார் மேனன்.
“நம்ம ஃப்ளோர்ல புரோகிராமிங் ஹெட்டுக்குன்னு ஒரு ரூம்தான் இருக்கு” என மெல்லஆரம்பித்தான் பிரசாத்.
“அதனால?” என மேனன் கேட்க...
“இல்ல சார் அந்த ரூமை திவ்யா எடுத்துக்கட்டும். கீழ 10-வது மாடியில மார்க்ஸுக்கு ரூம் கொடுத்துடறேன் சார்” என பவ்யமாகச் சொன்னான் பிரசாத்.
மேனன் புன்னகையுடன் பிரசாத்தை பார்க்க... பிரசாத் அவசரமாக, “இல்ல சார்... அது இந்த ரூமை விட பெரிய ரூம் சார்” என்றான்.
“ஒண்ணு பண்ணுங்க பிரசாத். அவ்வளவு பெரிய ரூம் மார்க்ஸுக்குத் தேவைப்படாது அதனால...”
தாட்சாவுக்கு சித்தார்த் ஏதோ பன்ச் வைக்கப்போகிறார் என்பது புரிந்து மெல்ல சிரிப்பு வர...
“நீங்க டென்த் ஃப்ளோருக்கு ஷிப்ட் ஆயிடுங்க... திவ்யாவுக்கு உங்க ரூமை கொடுத்திடலாம்” என மேனன் முடித்தார்.
மார்க்ஸும், தாட்சாவும் சிரிப்பை அடக்க முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள... சொன்னது ஜோக்கா, சீரியஸா என கணிக்கமுடியாத பாவனையில் மேனன் இருந்தார். பிரசாத் நடுங்கிப் போனான். மார்க்ஸை நோக்கி வீசிய பூமராங் அவனை பார்த்தே திரும்பி வருமென அவன் எதிர்பார்க்கவில்லை. கார்ப்ரேட்டில் உங்களது அறை எப்படி முக்கியமோ அதைவிட முக்கியம் உங்களது பக்கத்து அறை யாருடயது என்பது. உங்களது பக்கத்து அறைக்காரர்கள் நிறுவனத்தின் முக்கியமான ஆட்களாக இருந்தால் உங்களையும் அந்த முக்கியமானவர்களில் ஒருவராக கம்பெனி கருதுகிறது என அர்த்தம். சாதாரணமானவர்களுக்கு அருகில் உங்களுக்கு அறை ஒதுக்கப்படுகிறது என்றால் கம்பெனி உங்களைப் பெரிதாக மதிக்கவில்லை என அர்த்தம்.
“என்ன பிரசாத் ஓகேதானே?” எனக் கேட்டார் மேனன்.
“இல்ல சார்... இங்கயே மார்க்ஸுக்கு ஒரு ரூம் ஏற்பாடு பண்ணிடுறேன் சார்'' எனப் படபடப்பாக சொன்னான் பிரசாத்.
“ரூம் இல்லைன்னு இப்பதான சொன்னீங்க” என மேனன் கேட்டார்.
“இல்ல... ஒரு எக்ஸ்ட்ரா ரூம் இருக்கு... மும்பையில் இருந்து யாராவது வந்தா தேவைப்படும்னு ஹோல்ட் பண்ணி வெச்சிருந்தேன். அதை மார்க்ஸுக்கு கொடுத்துடுறேன் சார்...”
“அந்த ரூமை திவ்யாவுக்கு குடுங்க... மார்க்ஸ் ஏற்கெனவே இருக்கிற ரூம்ல இருக்கட்டும்”
“யெஸ் சார்... யெஸ் சார்” எனப் பதறினான் பிரசாத்.
“பிரசாத்தின் அத்தனை ராஜ தந்திரங்களும் தோற்றுவிட்டனவே...” என தாட்சாவின் காதில் மார்க்ஸ் கிசுகிசுக்க....
“பாவம் பிரசாத் அவன் துப்பாக்கியை எடுத்து அவனையே சுட்டுக்குறான்” என மெல்லிய சிரிப்புடன் சொன்னாள் தாட்சா.
''திவ்யா உங்க ரூம் பார்க்கலாம் வாங்க” என பிரசாத் அங்கிருந்து தப்பி ஓட திவ்யா அவன் பின்னால் நகர்ந்தாள்.
மேனனின் அருகில் வந்த மார்க்ஸ் “தேங்ஸ் சார்” என்றான். “எதுக்கு?” என எதையும் காட்டிக் கொள்ளாத பாவனையில் மேனன் கேட்டார்.
மார்க்ஸ் புன்னகையுடன், “வேலை செய்றதுக்கு ஆயிரம் கம்பெனி கிடைக்கும் சார்... ஆனா ஃபாலோ பண்ற மாதிரி ஒரு நல்ல பாஸ் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் சார்” என்றான்.
மேனன் புன்னகையுடன், “எனக்கு அப்படி ஒரு நல்ல பாஸ் கிடைச்சாரு. நான் அவரை மாதிரி காப்பி அடிக்க முயற்சி பண்றேன். அவர்தான் ஒரிஜினல்'' என்று சொல்லி சிரித்தார். மார்க்ஸ் புன்னகையுடன் தலையாட்டிவிட்டு நகர்ந்தான். தாட்சாவும் மேனனும் மட்டும் அறையில் இருந்தார்கள்.
தாட்சா, மேனனைப் பார்த்து புன்னகைத்தாள்!
“என்ன?” என வழக்கமான புன்னகையுடன் கேட்டார் மேனன்.
“ஐ'ம் இம்ப்ரஸ்டு” என சொல்லிவிட்டு தாட்சா எழுந்து நடந்தாள்.
“அப்படியா!” என சிரித்த சித்தார்த் மேனன் புன்னகையில் சின்ன வெட்கம் கலந்திருந்தது.

கேன்டீன், ஆட்கள் யாருமின்றி காலியாக இருந்தது. திவ்யா யோசனையுடன் கேன்டீனில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு முன்னால் இருந்த டேபிளில் டீ ஆறிக் கொண்டிருந்தது. மார்க்ஸ் மெதுவாக அவளுக்கு எதிரே வந்து உட்கார்ந்தான்.
திவ்யா சலனமின்றி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“சாரி” என்றான் மார்க்ஸ்.
“அப்ப உனக்கே தெரியுது நீ பண்றது தப்புன்னு!” என குத்தலாக கேட்டாள் திவ்யா.
“அதில்ல” என அவன் ஏதோ சொல்ல வர...
“எனக்கு பதிலா ஒரு ஆம்பள புரோகிராமிங் ஹெட்டா வந்திருந்தா அவனுக்கு கீழ நீ வேலை செஞ்சிருப்ப இல்ல... நான் ஒரு பொம்பளைன்றதால தான உனக்கு ஈகோ இடிக்குது” என்றபடியே குத்தலாகப் பார்த்தாள் திவ்யா.
“சத்தியமா இல்லை திவ்யா” என்றான் மார்க்ஸ்.
“தெரியும் உங்களை மாதிரி ஆளுங்களைப் பத்தி!”
“என்ன தெரியும் என்னைப் பத்தி?” என மார்க்ஸ் கோபமாக கேட்க...
“இப்ப என்ன சண்டை போட வந்திருக்கியா?”
“சண்டைக்கு வரலை... சமாதானமா போலான்னு சொல்றேன். நாம ஒண்ணா சேர்ந்தே வொர்க் பண்ணலாம்!”
“என்கிட்ட தோத்திருவமோன்னு பயப்படுறயா?” என திவ்யா கேட்க...
“பயமா, எனக்கா?'' எனச் சிரித்தான் மார்க்ஸ்.
“இங்க பார் உனக்கு பிடிச்ச ஷோஸ் மட்டும் நீ பண்ற... அதனாலதான் சேனல் 200 GRP தாண்ட மாட்டேங்குது. மக்ககளுக்குப் பிடிச்சதைப் பண்ணாதான் ஜெயிக்க முடியும்!”
“அவங்களுக்கு குப்பைதான் பிடிக்குதுன்றதுக்காக என்னால தினம் குப்பை கொட்ட முடியாது. அவங்க ரசனையை மாத்தணும். நல்ல புரோகிராம் பண்ணி அவங்களைப் பார்க்க வைக்கணும். அவங்களை குஷி படுத்துறக்காக கூத்தடிக்க முடியாது. நம்ம நிகழ்ச்சிகளால அவங்க வாழ்க்கையில சின்னதாவாவது ஒரு சேன்ஜ் வரணும். நல்ல வேல்யூசை கத்து கொடுக்கணும்.''
திவ்யா சிரித்தாள்...
“உன்னோட இந்த ஈகோவாலதான் சேனல் இந்த நிலைமையில இருக்கு. ஒரு ஸ்டேஜுக்கு அப்புறம் சேனல் வளரமுடியாம போனதுக்கு காரணமே நீதான்... நான் அப்படி இல்ல... மக்களுக்கு என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியும். அதை நான் பண்ணி ஜெயிச்சு காட்டுறேன். நீ யாரு அவங்களுக்கு புத்தி சொல்ல? அவங்களுக்குத் தெரியும் நல்லது கெட்டது எல்லாம். உன் அட்வைஸ் எல்லாம் அவங்களுக்குத் தேவை இல்லை. சேனலை மாத்திட்டு போயிட்டே இருப்பாங்க. அவங்களுக்கு சந்தோஷத்தை, ஆறுதலை டிவி தரனும். பொழுதுபோக்குதான் முதல்ல... அது உன்னோட ஷோஸ்ல இல்ல..!''
“இப்ப என்ன சொல்ல வர்ற?“
“மேனன் சார் வச்சிருக்கிற இந்தப் போட்டியில நான் ஜெயிச்சு காட்டுறேன். எனக்கு கீழ வேலை செய்யுறதுக்கு நீ தயாரா இரு!”
“நான் பண்ற ஷோக்கள் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. இது வேற ஊரு... இங்க மக்கள் வேற மாதிரி... நல்லதைத் தர யாரும் இல்ல. அதனால அவங்க பாக்கல. நல்ல விஷயம் குடுத்தா தாராளமா பார்ப்பாங்க... சப்போர்ட் பண்ணுவாங்க!”
திவ்யா சிரித்தாள்.
“வாய்ப்பே இல்லை... எல்லா ஊர்லயும் மாமியார் - மருமகள் சண்டைதான் விக்குது... புருஷனுக்காக விரதம் இருக்கிற பொண்டாட்டியதான் பொண்ணுங்களுக்கே பிடிக்குது. கணவனோட அன்புக்காக மனைவி ஏங்கிக்கிட்டே இருக்கிற கதைதான் உலகம் முழுக்க ஹிட்டாகுது. உன் ஊரு என் ஊரு எல்லாம் இல்ல... இந்தியா முழுக்க இந்தக் கதைகள்தான் வேலை செய்யுது. இங்கவும் அதுதான் வொர்க் ஆகும். நீ தப்பு... உன்னோட புரோகிராமிங் பிளான் தப்புன்னு ப்ரூவ் பண்றேன்...''
“பார்க்கலாம்.”
“பார்க்கலாம்.”
இருவரும் நாற்காலியை வேகமாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டு கோபமாக எழுந்தனர்.
தற்செயலாக அங்கு டீ குடிக்க வந்த பிரசாத்துக்கு அந்தக் காட்சி மன ஆறுதலை தந்தது. திரையில் அவர்கள் தரப்போகும் நிகழ்ச்சிகளை விட திரைக்குப் பின்னால் பல சுவாரஸ்யமான சண்டைகள் அரங்கேறப் போகிறது என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
இரண்டு நபர்கள் எளிதாக சமாதானமாகி விடலாம். ஆனால் இரண்டு வேறு கருத்துக்கள், இரு வேறு நம்பிக்கைகள் ஒரு போதும் ஒன்று சேர வாய்ப்பில்லை என்பது நமக்குத் தெரிந்ததுதானே!
ஆனால் நடந்தது என்ன...