Published:Updated:

சொல் வழிப் பயணம்!

சொல் வழிப் பயணம்!
News
சொல் வழிப் பயணம்!

யோசித்துப் பார்க்கையில் இவை அனைத்திலும் அவமானத்தின் நீட்சி இருக்கிறது. அவமானம் என்ற சொல் எவ்வளவு பெரிய மனிதனையும், அவனது பராக்கிரமங்களையும் சுருக்கி நிறுத்திவிடுகிறது

ஒரு பௌர்ணமி இரவில் நண்பர் மிஷ்கினுடன் பேசிக்கொண்டிருந்தேன். இரவு தனக்கே உரிய அமைதியை எங்கள் உரையாடலுக்காகக் கொடுத்திருந்தது. சினிமா, இலக்கியம், இசை என உச்சமெடுத்த அந்த உரையாடல் வாழ்க்கை குறித்தான ஒரு புள்ளியில் வந்து நின்றது. மிஷ்கின், ‘`பவா, சொல்லப்போனா இந்த வாழ்க்கைல நாம எவ்வளவு நாள் சந்தோஷமா இருந்தோம்னு விரல் விட்டு எண்ணிடலாம். அந்த அளவுக்குத்தான் இந்த வாழ்க்கை இருக்கு’’ என சர்வ சாதரணமாக ஒரு உண்மையைச் சொல்லி விட்டு உறங்கச் சென்றார். அந்த இரவை எனக்கு மேலும் ஒரு உறக்கமற்ற இரவாக்கின, மிஷ்கினின் அந்தச் சொற்கள். மனிதன் வாழக்கூடிய 60, 70 வருட வாழ்வில், விரல்விட்டு எண்ணக்கூடிய நாள்கள் மட்டும்தான் மகிழ்ந்திருக்கிறான் என்ற உண்மை என்னை உலுக்கியது. மகத்தான அற்புதத்தின் பயணமாகச் சொல்லப்படும் இந்த வாழ்வின் பெரும்பாலான நாள்கள் நமக்கு என்னவாகக் கழிகின்றன. கவலையால், துக்கத்தால், கண்ணீரால், துரோகத்தால், தோல்வியால் என மனிதன் தன் வாழ்வை வேறுவிதமாக அவன் விரும்பாமலேயே நிரப்பி வைத்திருக்கிறான்.

யோசித்துப் பார்க்கையில் இவை அனைத்திலும் அவமானத்தின் நீட்சி இருக்கிறது. அவமானம் என்ற சொல் எவ்வளவு பெரிய மனிதனையும், அவனது பராக்கிரமங்களையும் சுருக்கி நிறுத்திவிடுகிறது. அவமானம் எந்த மனிதனுக்கும் நிகழ்ந்துவிடக்கூடாத, ஆனால் நிகழ்ந்துகொண்டே இருக்கிற ஒரு துயரம். இதைப் பற்றி யோசிக்கையில் எனக்கு ரவியின் ஞாபகம் வந்தது.

ரவி என் 40 ஆண்டுக்கால நண்பன். புகழடைதல், பணம் சம்பாதித்தல், அல்லது எதிர் இருக்கையில் அமர்ந்துகொண்டு யாருக்காவது போதனை செய்தல் என்ற நிலைக்கு வந்தவர்களை மட்டுமே, இந்தச் சமூகத்தின் சட்டகம் வெற்றி பெற்றவர்களாகக் கொள்கிறது. ரவி, அதில் கொஞ்சமும் பொருந்திப் போகிறவனல்ல. சமீபத்தில் சென்னையில் ரோட்டரி கிளப்பின் விழா ஒன்றிற்குச் சிறப்பு அழைப்பாளனாக என்னை அழைத்திருந்தனர். நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விழாவுக்கு ரவி உள்ளிட்ட நண்பர்களுடன் சென்றிருந்தேன்.

சொல் வழிப் பயணம்!

முழுவதும் குளிரூட்டப்பட்டிருந்தது அந்த விழா அரங்கம். உரை முடிந்து உபசரிப்புக்கென உயர் ரக கேபினுக்குள் சென்றோம். அந்த விளக்குகள், செயற்கைக் குளிர், அந்த மனிதர்களும்கூட என் மனதுக்கு நெருக்கமாக இல்லை. செக்கச் செவேலென இருந்தவர்கள் உயர்ந்த மதுப்புட்டிகளை எடுத்து, `யாருக்கு வேண்டும்’ எனக் கேட்டபடி விருந்து அரங்கேறியது.

எங்களுடன் இருந்த ரவி, திடீரென வேறு ஒருவனாக எனக்குத் தெரிந்தான். அவன் கண்கள் ஏனோ உக்கிரமாக இருந்தன. விலையுயர்ந்த அந்த மதுவைப் பார்த்த ரவி வேகமெடுத்துக் கிளம்பி, ஒரு புட்டியை வாங்கிக் குடிக்கத்தொடங்கினான். ரவி அன்றைய தினத்துக்கு முன்பான கணக்குப்படி 15 ஆண்டுகளாகக் குடியை நிறுத்தியிருந்தவன். அவன் செயலை நான் அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். மது, ஐஸ் வாட்டர், உணவுகள் எனப் பணியாளர்கள் கேட்கக் கேட்க கோப்பை நிறைந்து நிறைந்து தீர்ந்தபடியாக அந்த உயர் விருந்து முடிந்தது.

ரவி வேட்கையுடன் குடித்த காட்சி, ஊர் திரும்பும்போதும் ஞாபகத்தை விட்டு அகல மறுத்தது.

தாம்பரம் கடந்து செல்கையில் ரவி மொபைலில் வந்தான். அவன் சொன்னது என்னைத் தடுமாறச் செய்தது. விழா முடிந்து மது சுதியில் காஞ்சிபுரம் வழியாக ரவியும் ஊர் திரும்பியிருக்கிறான். வழியில் ஒரு புளியமரத்தடியில் காரை நிறுத்திவிட்டு, சட்டையைக் கழற்றித் தரையில் கிடந்து ‘ஓ’வென அழுதுகொண்டிருப்பதாகச் சொன்னான் ரவி.

பதறிய நான், ‘`என்னாச்சு ரவி, ஏன் அவ்வளவு குடிச்ச?’’ என்றேன். போதையும் அழுகையும் கலந்த குரலில் ``உனக்குத் தெரியும் பவா, எங்க வீட்டுக்கு நான் ஒரே பையன். என் அம்மா புல்லறுத்து டி.எஸ்.டான் மஹால் கிட்ட வச்சு விப்பாங்க. ஒரு கட்டுப் புல் ஆறு ரூபா. எங்க வறுமை தாங்காம 12வது படிக்கிறப்ப பெரிய ஸ்டார் ஹோட்டலுக்கு வேலைக்கு வந்துட்டேன். இன்னைக்கு நடந்த மாதிரி பெரிய பெரிய ஆளுங்க கலந்துக்கற பார்ட்டி அங்க நடக்கும். அவங்க குடிச்சுட்டு வைக்கிற கிளாஸை எடுத்துக் கழுவுறது என் வேலை. நான் ஒருத்தரோட கிளாஸை எடுத்தப்போ, `என்னோட கிளாஸை ஏன்டா எடுத்த’ன்னு கேட்டு போதையில என்னைப் பளார்னு கன்னத்துல அறைஞ்சிட்டார். கண்ணெல்லாம் இருட்டி சுருண்டு விழுந்துட்டேன். அந்த நிமிஷத்துல ஒரு கம்பளிப்பூச்சி மாதிரி என்னை அவர் பார்க்கிறதா தோணுச்சு. எங்க அம்மாகூட என்னை அடிச்சதே இல்ல. கொஞ்ச நேரம் கழிச்சு சுதாரிச்சு எழுந்தேன். வாழ்க்கைல முதல்முறையா படபடப்பு, அவமானம், அழுகைன்னு ஒரு மாதிரி உடம்பு கூசுச்சு. ரோஷமா வேலையை விட்டுட்டு வெளிய போகவும் தெம்பில்ல. யாருக்கும் தெரியாம பின்பக்கமா ஓடி வந்தேன். மூச்சிரைக்க ஓடினேன், ஒரு மரத்துக்குக் கீழ உக்காந்து தேம்பித் தேம்பி அழுதேன்.

இந்த 55 வயசுலயும் அந்த அவமானம் எனக்குள்ள நெருப்பு மாதிரி எரிஞ்சுக் கிட்டே இருந்துச்சு. எங்க அசிங்கப்பட்டமோ அங்கயே நடந்த உபசரிப்பு என்னை ஒரு மாதிரி ஆக்கிடுச்சு. இன்னைக்கு அங்க இருந்தவங்க எல்லாம், என்னை அவமானப்படுத்தனவங்க, இல்லைன்னா அவங்களோட சந்ததிங்க, அவங்களோட தொடர்ச்சி என்கிற ஆத்திரம் எனக்கிருந்துச்சு. யார் என்ன நினைச்சாலும் பரவால்ல. எனக்கு நாசூக்கு தெரியல, நாகரிகம் தெரில, இப்படி என்ன வேணும்னாலும் நினைக்கட்டும், பரவாயில்ல. எனக்கிருந்த ஆத்திரத்துல, ஆதங்கத்துலதான் நான் அப்படிக் குடிச்சேன். இப்போ இந்தப் புளிய மரத்துக்கடில நின்னு என்னை மீறி வெடிச்சு அழறேன் பவா’ என ஆர்ப்பரித்தான். அவனது அழுகையில் கொஞ்சம் ஆங்காரமான சிரிப்பும் அப்போது கலந்திருந்தது போல் தோன்றியது. சிறுவனாக முகம் தெரியாத ஒருவனிடம் வாங்கிய அறை, 55 வயது வரை ரவியின் ஆழ்மனதில் சுமையாகத் தங்கியிருக்கிறது.

எழுத்தாளர் மண்டோ இதே உணர்வில் ‘அவமானம்’ என்கிற சிறுகதையை எழுதியிருக்கிறார். அதன் நாயகி சுகந்தி ஒரு பாலியல் தொழிலாளி. பழைய கட்டடத்தின் அறை ஒன்றிலுள்ள உயரிய கட்டில்தான் அவளது உலகம். அந்தக் கட்டிலுக்கு அடியில் செல்லமான ஒரு நாய் வளர்த்தாள். தனக்குப் பிடித்தமானவர்களோடு கட்டிலில் நேரம் செலவழிக்கும்போது, லாவண்டர் பூப்போட்ட வெள்ளைநிறச் சேலையை அணிந்திருப்பாள். அந்தச் சேலை அணிகிற நேரங்களில் தன் கவர்ச்சி மேலும் அதிகரிப்பதாகவும், கம்பீரம் மேலும் வியாபிப்பதாகவும் அவள் நம்புவாள்.

சுகந்தியின் அறையில் அவளுக்குப் பிடித்த நான்கு ஆண்களின் படங்கள் மாட்டப்பட்டிருக்கும்.பொதுவாக மனிதர் களிடமிருக்கிற திருட்டுத் தனமும், அயோக்கியத்தனமும் அந்த நான்கு பேரிடம் குறைவாக இருந்ததென சுகந்தி நம்பினாள். அதில் பூனாவில் போலீஸாக இருக்கும் மாதுவும் ஒருவன். அவன் வரும்போதெல்லாம் சுகந்தி அந்த லாவண்டர் பூப்போட்ட வெள்ளைநிறச் சேலையை அணிவாள். அவன் ஒவ்வொரு முறை வரும்போதும் ஒரே வசனத்தைத்தான் அவளிடம் சொல்வான். `நீ ஏன் இந்தச் சாக்கடைல கிடந்து கஷ்டப்படுற, வா என்னோட! உனக்காக நான் தனியா ஒரு வீடு எடுத்துத் தர்றேன்’ என்பான். ஆனால், ஒருபோதும் அவன் அதைச் செய்ததில்லை. இவளிடமிருந்துதான் பணம் வாங்கிச் செல்கிறான். ஒரு நாள் இரவு சுகந்தி குடித்து, சில மீன் துண்டுகளைச் சாப்பிட்டுவிட்டு உறங்கிக் கிடக்கிறாள். அப்போது, வாடிக்கையாளர் வந்திருப்பதாக புரோக்கர் அங்கு வருகிறான். ‘அவன் பணக்கார சேட். நிறைய பணம் தருவான். ஒரு வாரம் நீ ஓய்வெடுக்கலாம்’ எனச் செல்லி வற்புறுத்துகிறான். அவனே அவளிடம் `நீ போய் குளிச்சிட்டு லாவண்டர் பூப்போட்ட வெள்ளைநிறச் சேலையைக் கட்டிக்கோ’ என்பான். சிறு பூரிப்புடன் குளித்து மேக்கப் போட்டு, அந்தச் சேலையை அணிந்து காரின் அருகே போய் நிற்பாள். கார் கண்ணாடியைக் கீழிறக்காமல், உள்ளிருந்து அவளைப் பார்ப்பான் அந்த சேட். சில நொடிகளில், கரும்புகை எழுப்பியபடி விருட்டென கார் விரைந் திருக்கும். சுகந்தி, தான் எந்தப் புடவையில் பேரழகி என்று நம்பினாளோ, அதை ஒரு கார் உறுமலில் அவமதித்துச் சென்றதில் சித்தபிரமை பிடித்தவள் போல நிற்கிறாள். காரிலிருந்த சேட்டை அசிங்கமாகத் திட்டுவாள். `நான் அழகி இல்லையாடா!’ எனப் பெருங்குரலெடுத்து அலறி தன் தலைமுடியைக் கலைக்கிறாள். ஆங்காரத் துடன் அறைக்குத் திரும்பி, அந்த நான்கு புகைப்படங்களைப் பார்க்கிறாள். இந்த உலகத்தில் உள்ள எல்லா ஆண்களும் ஏதோ ஒரு விதத்தில் தன்னை அவமானப்படுத்தியதாக, பெண்களை அவமானப்படுத்திக் கொண்டிருப்பதாக உணர்கிறாள். அவளுக்குக் கோபம் பீறிட்டுக் கொண்டு வருகிறது. முதல் புகைப்படத்தைக் கழற்றி, திட்டிக்கொண்டே கம்பியில் ஆவேசத்தோடு அடிக்கிறாள்.

அந்த நேரம் பார்த்து மாது அங்கு வருகிறான். மாதுவுக்கு இது எதுவுமே தெரிந்திருக்காது. ``சுகந்தி, நீ என் இந்தக் சாக்கடைல கிடந்து கஷ்டப்படுற...’’ என தனது வழக்கமான டயலாக்கைப் பேசத் தொடங்குவான். புகைப்படம் கீழே உடைந்து கிடப்பதை அப்போதுதான் பார்ப்பான். அடுத்த நொடி, அங்கு மாட்டியிருந்த அவன் புகைப்படத்தையும் கழற்றி, அவன் கண்முன்னே ஆக்ரோஷமாகப் போட்டு உடைப்பாள் சுகந்தி. ``எத்தனை தடவைடா இதையே சொல்லி ஏமாத்துவ!’’ என ஆர்ப்பரிப்பாள். அறையில் நிரம்பிய உக்கிரத்தின் நெருப்பில் மாட்டிய சிறுபுழுவென அவன் துடிப்பான். சுகந்தியின் ஆவேசத்தைத் தாங்க முடியாமல், அறையை விட்டு எழுந்து ஓடுவான். அவள் எல்லாப் புகைப்படங்களையும் ரோட்டில் வீசி உடைப்பாள். அவமானத்துக்குப் பிரதிபலிப்பாக என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வாள். கடைசியாக தன் நாயைக் கையில் தூக்கிக் கொஞ்சி, வருடி, முதல் முறையாக அதைத் தன் கட்டிலில் தன்னுடன் படுக்க வைப்பதாகக் கதை முடியும்.

சுகந்தி, ரவி என அவர்களுக்கு ஏற்பட்ட அவமானங்கள் நமக்கு அற்பமாகக்கூடத் தெரியலாம். ஆனால், அவமானத்தில் சின்னது, பெரியது எனப் பாகுபாடுகள் ஏதும் இல்லை. துளி நஞ்செனினும் உயிர் பறிக்கும் தானே! ஒரு சொல்லில், ஒரு பார்வையில், ஒரு அலட்சியமான புன்னகையில் ஏற்பட்டுவிடக் கூடிய அவமானங்களை நம் நெஞ்சம் அவ்வளவு எளிதில் மறந்திடுகிறதா..?

சொல் வழிப் பயணம்!

`அத்தனை பேர் முன்னாடி அப்படி ஒரு கேள்விய கேட்டுட்டான்’ என காலம் முழுவதும் முகத்தில் விழிக்காத பகைமையை அவமானம்தான் கொடுக் கிறது. கையில் பணமில்லாத நாள்களில் வட்டிக்காரன் வீட்டுக்கு வரும்போது, `உள்ள போய் படிடா’ எனக் குழந்தைகளை அனுப்புவது அவமானப்படுதல் குறித்த முன்னெச்சரிக்கை தானே! பல பேர் முன்னிலையில் `சோத்துல உப்புப் போட்டுத்தான் சாப்புடுறியா?’ என்ற கேள்விகளின் வழியே எத்தனை பேர் அவமானப்பட்டு நின்றிருப்பர். சாதியின் பெரைச் சொல்லி பள்ளிகளில், கல்லூரிகளில், பணியிடங்களில் அவமானப்படுத்தப்படுவோர் வேதனை அவ்வளவு எளிதில் கடக்கக்கூடியதா? `எனக்குன்னு செல்ஃப் ரெஸ்பெக்ட் இருக்குல்ல’ என்றுதானே பலரும் கோர்ட் வராந்தாக்களில் விவாகரத்துக்கு நிற்கிறார்கள். தீரா பிரியம், காதல், பாசம், நட்பு, பெரும் உதவி என முன் நிகழ்ந்த அத்தனை உன்னதங்களையும் ஒற்றை அவமானம் நொடியில் ஒன்றுமில்லாமல் போகச் செய்கிறது. காந்தி, அம்பேத்கர் எனப் பெருந்தலைவர்கள் பலரும் அவமானம் என்ற உணர்வை அகற்றி மாண்பை மீட்கத்தானே போராடினர். எங்கோ பட்ட அவமானத்தை வென்றிடத்தானே வாழ்நாள் முழுக்க மனிதன் ஓடுகிறான். உறவுகளின், பிரியமானவர்கள் வழியே நிகழ்கிற அவமானங்களைச் செரிக்க முடியாமல், எதையோ நிரூபிக்க வேண்டுமென்ற யோசனையில்தானே இரவில் தூக்கமின்றி இன்சோம்னியாக்களாக அலைகிறோம்.

ஆனைக்கட்டியின் ஆற்றங்கரையில் நடந்த கதையாடலில் அவமானம் சிறுகதையை 200 வாசகர்களுக்குச் சொன்னேன். கதையின் முடிவில் யாரும் யாருடனும் பேசவில்லை. ஒரு கனத்த அமைதி அங்கு நிலவியது. அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீர் நிறைந்து நின்றது. அது அவர்களின் இறந்தகால வடுவாக மனதில் தேங்கியிருக்கும் அவமானத்தின் துளி. திடீரென ஆற்றிலிறங்கி 40 நண்பர்கள் குளிக்கத் தொடங்கினர்.மின்மினிப் பூச்சிகள் பூமிப்பந்துபோலத் திரிந்து கொண்டிருந்த அந்த ஆற்றின் கரையிலிருந்து நான் அவர்களைப் பார்த்தேன். தங்களின் கண்ணீரை, நீங்காத அந்தத் துயரத்தை அவர்கள் அந்த நதியில் துடைத் தெறிவதாய் நம்பினார்கள். அந்த நதியில் கலந்த அவர்களின் கண்ணீர் போல, நம் சக மனிதனின் கண்ணீரையும் கலைப்பதுதானே மகத்துவம். இந்தப் பிரபஞ்சம் உயிர்களை அப்படித்தானே பாரபட்சமின்றி நேசிக்கின்றது. அவமானப்பட்ட வர்களுக்கென ஓடும் நதி, அவமானப் படுத்தியவர்களையும் அரவணைக்கிறது என்பது எவ்வளவு பெரிய உண்மை. அந்த நதியின் அரவணைப்புக்காக லட்சக்கணக்கான மக்கள் ரவியைப் போல காத்திருக்கின்றனர். அவர்களை அரவணைப்பதில் மனித வாழ்வின் அற்புதம் அடங்கியிருக்கிறது.

- கரம்பிடித்துப் பயணிப்போம்

சொல் வழிப் பயணம்!

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் பவா செல்லதுரை தமிழின் முக்கியமான கதைசொல்லி. திருவண்ணாமலையில் வம்சி பதிப்பகம் நடத்திவருகிறார். ஆன்மாவை ஊடுருவும் மொழியின் துணைகொண்டு கதைகள் சொல்லி ஆற்றுப்படுத்துபவர்.