Published:Updated:

சொல்வழிப் பயணம்! - 10

சொல்வழிப் பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வழிப் பயணம்!

ஓவியங்கள்: மினிமலிக்ஸ்

அறிவியல்படி இந்த உலகம் ஒன்றுதான். ஆனால், வாழ்வியல்படி ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி உலகங்கள் இருக்கின்றன. பொதுவானது போன்று தெரிகின்ற இந்த உலகத்தில், ஆண்களும் பெண்களும் இரு வேறு உலகங்களில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருவரின் கண்ணீர் வேறு. இருவரின் மகிழ்ச்சியும் வேறு. இருவரின் எல்லைகள் வேறானது. அந்த எல்லைகளை மீறப் பிரயத்தனப்படும் கனவுகள் வெவ்வேறானவை. எல்லைகள் வரையறுக்கப்படுகிறபோதே மீறல்களும் நிழல்போலத் தோன்றிவிடுகிறது. அந்த மீறல்களுமே ஆண், பெண் இருவருக்கும் வெவ்வேறானதாகிறது. தன் நலனுக்காக, கனவுக்காக அனுதினமும் மீறல்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

பொதுவாகவே ஆண்களின் மீறல்கள் வெளிப்படையானவை. அது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் பெண்களின் மீறல்கள் பெரும்பாலும் அவள் மனம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றன. எல்லாவற்றையும் எளிதில் மீறிச் செல்கிற வாய்ப்பு பெண்களுக்கு அவ்வளவு எளிதில் வாய்ப்பதில்லை. அவர்களின் மீறல்களை சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடிவதுமில்லை. ஆண்களின் மீறல்களை பெரும்பாலும் பெண்கள் சகித்துக்கொள்ள வேண்டியதாகவே இருக்கிறது. குடும்பம் என்கிற பேராற்றில் பெண்கள் தங்கள் படகின் இரு துடுப்புகள் கொண்டும் அந்தச் சுழற்காற்றையும் சமன் செய்யவேண்டியிருக்கிறது. அவளையும் மீறி ஏதோ ஒரு கட்டுப்பாடு அவளைச் சுற்றி எந்நேரமும் உலவிக்கொண்டே இருக்கிறது.

சொல்வழிப் பயணம்! - 10

கிருஷ்ணன் நம்பி, ‘மருமகள் வாக்கு' என்கிற ஓர் அற்புதமான கதையை எழுதியிருப்பார். ஒரு குடும்பத்தில் எந்த வகையிலும் கணவனின் சொற்களை மீறவே முடியாத மனைவி இருப்பாள். ஆனால் அவளுக்குள்ளாக கறையான் புற்று போன்று மனதில் ஓர் ஆசை வளர்ந்துகொண்டே வரும். அது, என்றைக்காவது ஒரு நாள் இவன் வார்த்தைகளை நாம் மீறிவிட வேண்டும். என்றைக்காவது ஒரு நாள் இவனுக்குத் தெரியாமல் அதில் நாம் ஜெயித்தாக வேண்டும் என்கிற ஆசை. அந்த நாளும் வரும். அந்த ஊரில் நடக்கிற தேர்தலில் கணவன் `பூனை' சின்னத்தில் நிற்கின்ற ஒரு வேட்பாளரை ஆதரித்து மிகத் தீவிரமாகத் தேர்தல் வேலை பார்ப்பார். பூனைச் சின்னத்திற்கு எதிராகக் `கிளி' சின்னத்தில் இன்னொரு வேட்பாளர் நிற்பார். அந்த வேட்பாளர் யார் என்றே இவளுக்குத் தெரியாது, அவன் பெயர் என்ன, அவன் யாருடைய ஆள் என எதுவுமே இவளுக்குத் தெரியாது. ஆனால், இதுதான் நம்முடைய வாழ்க்கையில் கணவனை மீறுவதற்கு சரியான தருணம் என முடிவெடுத்து அந்தக் கிளிச் சின்னத்திற்கு வாக்களிக்கத் தீர்மானிப்பாள்.

மாமியாரும் கணவனும் சேர்ந்து பூனைச் சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்காக வேலை பார்ப்பார்கள். தேர்தல் நாள், இவள் வரிசையில் நிற்பாள். கணவன் நின்று எச்சரிப்பான். ‘பூனை ஞாபகம் வச்சுக்கோ..!' என்று சொல்வான். வரிசையில் நிற்கும் மாமியார் அவ்வப்போது திரும்பி, ‘பூனை ஞாபகம் வச்சுக்கோ..!' என்று சொல்வார். இந்தப் பெண், மனதிற்குள்ளாக தன் எண்ணத்தை நிறைவேற்றக் காத்திருப்பாள். வாக்குச்சீட்டு கொடுத்த உடனே தனியாகப் பார்ப்பாள். பூனையும் கிளியும் மாறி மாறி அவளுடைய கண்களில் வந்து போகும். இந்த இடத்தில் கணவனையும் மாமியாரையும் வென்றிட வேண்டும். இது தனக்கான ஒரு அந்தரங்கமான நிமிடம். தனக்கான ஒரு ரகசிய நிமிடம். ‘இந்த நிமிடத்தில் இவர்களை நான் வெற்றி அடைவதை யாருமே பார்த்துவிட முடியாது. கண்டிப்பாக இவர்கள், நான் பூனைக்குத்தான் ஓட்டு போடுவேன் என்று நம்பிக் கொண்டிருப்பர். ஆனால் யாரென்றே தெரியாத அந்தக் கிளிச் சின்னத்துக்காரனுக்குத்தான் நான் ஓட்டு போடுவேன். கணவனைப் பழி வாங்குவதற்காக, மாமியாரைப் பழி வாங்குவதற்காக’ என்று அவள் சக்கென்று முத்திரையைக் குத்துவாள். குத்திவிட்டு எடுத்துப் பார்ப்பாள். பார்த்தவுடனே பயங்கர அதிர்ச்சிக்குள்ளாவாள். அவள் பூனைக்குத்தான் வாக்களித்திருப்பாள். ஏனென்றால், அந்த வாக்குச்சீட்டைப் பார்க்கின்ற போதே கிளியும் பூனையுமாக அவளுக்கு மாறி மாறித் தெரியும். பூனைச் சின்னத்தில் தெரிகின்ற பூனைக்கு பதிலாக அவளுடைய கணவனும் மாமியாரும் தெரிவார்கள். அந்தப் பயத்திலேயே கிளிக்கு வாக்களிப்பதற்குப் பதிலாக அவள் பூனைக்கு வாக்களித்துவிடுகிறாள் எனக் கதை முடியும்.

ஒரு வகையில் பெண்கள் அந்தரங்கமான நிமிடங்களில்கூட, ரகசியமான நிமிடங்களில்கூட மனதளவில் தயக்கத்தை உணர்ந்தவர்களாகிறார்கள். குடும்பத்திற்கு, யாரோ வகுத்த கொள்கைக்கு, அன்பிற்கு என ஏதோ ஒன்றுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். எல்லாப் பெண்களின் மனதிலும் ரகசியங்கள் நிறைந்திருக்கின்றன. அதைப் பல நூற்றாண்டுகளாக ஆண்கள் புரிந்துகொள்ள முயன்று முயன்று தோற்கிறார்கள். பல நேரங்களில், புரிந்துகொண்டதாகவே நினைத்துத் தோற்கிறார்கள்.

 சமீபத்தில் நான் படித்த கண்மணி குணசேகரனின் ‘வாடாமல்லி' என்ற ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. அந்தக் கதையில் வருகிற மல்லிகாவிடம் ஒரு சிறிய மீறல் இருக்கும்.

விருத்தாசலத்திற்குப் பக்கத்தில் ஒரு முந்திரித் தோப்பில், தன் கணவன், குழந்தைகளோடு முந்திரிப் பழங்களைப் பறித்துக்கொண்டிருக்கின்ற மல்லிகாவிற்கு அம்மா வீட்டில் இருந்து போன் வந்திருக்கிறது. அம்மா ஏதோ ஒரு செய்தி சொல்கிறாள். மல்லிகா மௌனிக்கிறாள். மேலும் மௌனிக்கிறாள். யாருக்கும் தெரிந்துவிடாதபடி தன்னுடைய முகபாவனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கருதுகிறாள். ஆனால் அவள் கணவன் நுட்பமாகக் கவனித்து ‘என்னாச்சு.?' என்று கேட்கிறான். இவள் ‘ஒன்னுமில்ல..!' என ஒரே ஒரு வரி சொல்கிறாள். ‘எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல பன்னீர்னு ஒருத்தன் இருந்தான்ல, குடிகார நாய். அவன் ராத்திரி செத்துட்டானாம்!' என்கிறாள். கணவனும் எவ்வித முகபாவனையையும் காண்பித்துக்கொள்ளவில்லை.

ஆனால், அதற்குப் பிறகு மல்லிகா முந்திரிக் கொட்டைகளைப் பிரித்துப் போடவில்லை, முந்திரிப் பழங்களைச் சேகரிக்கவில்லை. தன் இரண்டு பிள்ளைகளை மட்டும் முந்திரி பறிக்க அனுப்புகிறாள். பிறகு கணவனைப் பார்த்து, ‘அவன் ரொம்ப நாள் வாழ்ந்ததே பெருசு’ என்று சொல்கிறாள். கணவன் ஏதோ ஒன்றை யூகித்தவனாக ‘நான் வேணும்னா ஊர்ல இருக்குற சொந்தக்காரங்களுக்கு எல்லாம் போய்ச் சொல்லட்டுமா? நாலு சாதி சனத்தோட சாவுக்குப் போனாதானே கெளரவமா இருக்கும்' என்கிறான். உடனே மல்லிகா அதை நிராகரிக்கிறாள், ‘ஆமா... அவரு பெரிய இவரு. அப்படியே வாழ்வாங்கு வாழ்ந்துட்டாரு, குடிகார நாயி! அதுக்கு வந்து நம்ம ஊர் ஜனங்களைக் கூட்டிட்டுப் போணும், அதெல்லாம் ஒன்னும் வேணாம்' என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறாள்.

தனக்கு மிகவும் பிடித்த இளம்பச்சை நிறப் புடவையைக் கட்டிக்கொண்டு எதுவும் பேசாமல் புறப்பட்டுப் போகிறாள். எங்கே போகிறேன் என்றுகூட தன் கணவனிடம் சொல்லவில்லை. அவள் பாதித் தெரு கடந்த பிறகு கணவன் கூப்பிட்டு, ‘நான் வேணும்னா, வண்டில வந்து பஸ் ஸ்டாண்ட்ல விடட்டுமா?’ என்கிறான். அந்தக்குரல் இவள் காதில் விழுகிறது. ஆனால் அவள் அதைக் கேட்காதது போல விறுவிறுவென்று நடந்துகொண்டே இருக்கிறாள். ஒரு வகையில் இது மௌன மீறல்தான். ‘இது அவனுக்கும் எனக்குமான ஒரு சிறிய பந்தம். தயவுசெய்து சாதி ஜனமோ, கணவனோ அல்லது குழந்தைகளோ உள்ளே வந்து இந்தப் பரிசுத்தமான மௌனத்தைக் கலைத்துவிடாதீர்கள்’ என்று அதற்கு அர்த்தம். அவள் போய்க்கொண்டே இருக்கிறாள். விருத்தாசலத்தில் இருக்கின்ற ஒரு மிகப்பெரிய பூக்கடையில் ஒரு பெரிய மாலையாக வாங்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறுகிறாள். அந்தப் பூ மாலையை ஆட்டோவின் குலுங்கலுக்கு ஏற்ப தன்னோடு அணைத்துப் பிடித்துக் கொள்கிறாள். ஒரு வகையில் அது, அவள் பன்னீரை அணைத்துக்கொள்வது போலத்தான். பன்னீரின் நினைவுகள் மேலெழுந்து ஓடுகின்றன.

பன்னீரும் மல்லிகாவும் காதலர்கள். இரண்டு பேரும் ஒரு நாள் ஊமச்சிக் குளத்தைத் தாண்டுகிறபோது, ஊரில் உள்ள பங்காளிகள் எல்லாம் திரண்டு வந்து அவர்களை மறித்து, அடித்து, உதைத்துப் பிரிப்பார்கள். 15 நாள்களில் மல்லிகாவுக்குத் திருமணம் நடந்துவிடும். கணவனுக்கோ குழந்தைகளுக்கோ ஒரு சிறிய குறையும் இல்லாமல், அவள் அந்தக் குடும்பத்தைக் கட்டுசெட்டாக நகர்த்திக்கொண்டு போவாள். அவளிடம், இழந்த அந்தக் காதல்மீது வருத்தம் இருப்பதாகத் தெரியாது. கணவனுக்கு அவள்மீது மிகுந்த பிரியமும் மிகுந்த மரியாதையும் ஏற்படும். ஆனால் ஒரு முறை கணவன் ஊருக்குச் சென்றிருந்தபோது, அவனுடைய உறவினர்கள் அவளுக்கும் பன்னீருக்கும் இருந்த காதலைப் பற்றி அவனிடம் சொல்வார்கள். ஆனால் அதை அவன் மிகச் சுலபமாகக் கடந்துவிடுவான். அதைப் பற்றி அவன் கவலைப்படவே மாட்டான்.

இதையெல்லாம் நினைத்துக்கொண்டே மல்லிகா அந்த இறப்பிற்குச் செல்வாள். நிறைய வெடிச் சத்தங்கள் கேட்கும், உறுமி மேளங்கள் கேட்கும். இவளைப் பார்த்தவுடன், அதிரும் இசைச் சத்தங்கள் எல்லாம் ஒரு நிமிடத்தில் அடங்கிப்போகும். இவள் மௌனமாக பன்னீரின் பிரேதம் வைக்கப்பட்டிருக்கின்ற ஐஸ் பெட்டியை நோக்கி நடப்பாள். பன்னீரின் மனைவி மீனாட்சி, ‘அக்கா! நம்மள எல்லாம் விட்டுட்டுப் போயிட்டாரு!' என்று ஒரு நிமிடம் கதறுவாள். அவளைத் தன்னுடைய கையால் தள்ளிவிட்டு, பன்னீருக்கு அந்த ஆள் உயர மாலையைச் சாற்றுவாள். கொஞ்ச நேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அவள் திரும்புவதாக கண்மணி குணசேகரன் அந்தக் கதையை முடித்திருப்பார்.

சொல்வழிப் பயணம்! - 10

மிகவும் அபூர்வமான கதை இது. நான் குறிப்பிட்ட இரு கதைகளுமே மீறல் என்கிற பதம் கொண்டது. `மீறல்' என்கிற சொல் புதிரானது. ‘தவறான ஒன்றோ’ என ஐயம் கொள்ளச் செய்திடக்கூடியது. அதன் நியாயத்தை உணரத்தான் முடியும். அதை உணராமல், சரியாகக் கையாளத் தெரியாமல், பல பிரிவுகள், கடக்க முடியாத துயரங்கள் இம்மண்ணில் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. பெண்களின் மனம் முழுக்க இத்தகைய நிறைவேறாத காதல்கள், நிறைவேறாத ஆசைகள், நிறைவேறாத லட்சியங்கள், மீற முடியாத கட்டுப்பாடுகள் நிறைந்துகிடக்கின்றன. மனதில் குவிந்து கிடக்கும் இவையெல்லாம் ஒருநாள் பாரம் தாங்காமல் வெடிக்கையில் சிலர் உடைந்துபோகிறார்கள். சிலர் கொதித்தெழுகிறார்கள். இரண்டிலும் அதிகம் பெண்களே பாதிப்படைகிறார்கள்.

அறமற்ற அத்துமீறல்கள் தொடர்ச்சியாக இந்தச் சமூகத்தில் எளியவர்களின் மீதும், பெண்கள் மீதும் கட்டவிழ்க்கப்படுகின்றன. அந்த அத்துமீறல்களுக்கெதிரான கலகமே அவர்களின் அடிப்படை உரிமை. ஏகாத்திபத்தியங்களுக்கு எதிரான தொழிலாளர்களின் மீறல்தானே தொழிற்புரட்சி. சாதியும் பிரிவினையும் புரையோடிப்போன இந்தத் தேசத்தில் மனங்களின் மீறல்தானே `காதல்.'

மனதுக்கு சரியெனப் படும் அறத்தை, பலர் வேண்டாமெனத் தடுத்த லட்சியத்தை எனப் பல மீறல்களைச் செய்துதானே பலரும் நம்மை இந்தச் சமூகத்திற்கு நிரூபித்திருக்கிறோம். காலத்துக்கேற்ப கேள்விகளாய் எழுந்த மீறல்கள்தான் அறிவியலில், கலையில் பல புதிய திறப்புகளைத் திறந்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் பிரதானமாக நிற்கும் ஆண் - பெண் உறவில் மட்டும் மீறலில் ஏன் இந்தப் பாகுபாடு தொடர்கிறது. எழுகிற மீறல்களைத் தனக்குள்ளே புதைத்துவிடுகிற மனங்கள் வாழ்நாளெல்லாம் ஒளியிழந்த விண்மீன்களென இயல்பை இழந்து நிற்கின்றன. ஒளிகூடிய விண்மீன்களாகப் பிரகாசிப்போம்.

- கரம்பிடித்துப் பயணிப்போம்