Published:Updated:

சொல்வழிப் பயணம்! - 13

சொல்வழிப் பயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வழிப் பயணம்

ஓவியங்கள்: மினிமலிக்ஸ்

மனிதர்களைச் சார்ந்து மட்டுமே நம்மால் வாழமுடியாது. மாடு, ஆடு, நாய், பூனை என்று பல ஜீவராசிகளோடு இணைந்ததுதான் மனித வாழ்வு. ஜீவராசிகளின்மீது பெரும் காதல் கொண்டவர்களாகவும் அன்பு கொண்ட வர்களாகவும் பல மனிதர்கள் இருக்கிறார்கள். பல நேரங்களில் அவற்றுடன் பேசுகிறார்கள். மனிதனுக்கும் அவனின் வளர்ப்புப் பிராணிக்கும் இடையில் இருக்கிற சங்கேத மொழி யாராலும் புரிந்துகொள்ள முடியாதது. பல தருணங்களில் பிள்ளைகளால் கைவிடப்படுகின்ற முதியோர்கள் அல்லது குடும்பத்தில் நிராகரிக்கப்படுகின்ற மனிதர்களுக்கு இந்த வளர்ப்புப் பிராணிகளே பெருந்துணையாக இருக்கின்றன. கொரோனாத் தொற்றுக் காலத்தில், கோவிட் தாக்கிய என் எழுத்தாள நண்பர் ஒருவர், தனது கோடி ரூபாய் சொத்துகளை தான் ஆசை ஆசையாக வளர்த்து வந்த வளர்ப்பு நாய்களுக்கு உயில் எழுதி வைத்தார் என்கிற செய்தி ஆச்சரியப்பட வைத்தது. ஈடுசெய்ய முடியாத நேசத்தைத் தரவல்லவை பிராணிகள். நம் எல்லோரின் வாழ்விலும் மணி, ஜிம்மி, டைகர் எனப் பெயரிட்ட வாலாட்டும் உறவு ஒன்று இருந்ததுதானே!

என் அம்மா ஜிம்மி என்கிற நாயையும், மீனாம்மா என்கிற எருமைமாட்டையும் மிகவும் பிரியமாக வளர்த்தார். ஜிம்மி நீண்ட நாள்கள் எங்கள் வீட்டில் இருந்தது. அதற்குப் பிறகு இன்று வரையிலும் அந்தந்தக் காலங்களில் சில வளர்ப்பு நாய்கள் எங்கள் வீட்டிற்கு வருவதும், அகாலத்தில் இறந்துபோவதும், நோய்வாய்ப்பட்டு இறந்து போவதும் அல்லது விபத்தில் இறந்துபோவதும் அல்லது காணாமல்போய்விடுவதும் தொடர்ச்சியாக நிகழும். நான் பார்த்து, நீண்ட நாள்கள் என் வீட்டில் இருந்தது ஜிம்மி நாய்தான். அதை ஒரு காவல் தெய்வம் போல அம்மா நம்பினாள்.

சொல்வழிப் பயணம்! - 13

அப்பா ஊரில் இல்லாத நாள்களில் ஜிம்மி எங்களைப் பார்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கும் அம்மாவுக்கும் இருந்தது. ஒரு அபூர்வமான சம்பவம். எங்கள் வயலில் நெல் அறுவடைக்குத் தயாராக இருந்தது. இன்னும் இரண்டொரு நாளில் அறுவடையை முடித்துவிடலாம் என்கிற நிலையில் ஒரு பின்னிரவில் ஜிம்மி அம்மாவின் காலைச் சுரண்டி எழுப்பி அழைத்தது. அம்மா என்னையும் எழுப்பினாள். நாங்கள் டார்ச் லைட்டுடன் ஜிம்மியைப் பின்தொடர்ந்து சென்றோம். ஜிம்மி சத்தமெழுப்பாமல் முன்னால் போய்க்கொண்டே இருந்தது.

சரியாக எங்களுடைய நெல் வயலில் ஜிம்மி நிற்கிற தருணத்தில், அம்மா டார்ச் லைட்டை வயலில் அடிக்கிறாள். ஆறு அல்லது ஏழு ஆண்கள் இருப்பர். வயலில் அமர்ந்து பக்கத்தில் மூட்டைகளில், நெல்லை நிரப்பிக் கொண்டிருந்தனர். அரை மூட்டை, முக்கால் மூட்டை என நிரம்பி நிற்கிறது. எங்களைப் பார்த்ததும் எழுந்து ஓட ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே உள்ளூர் ஆட்கள். அம்மாவுக்கு அடையாளம் தெரிந்தவர்கள். அம்மா சத்தமாக ``யாரும் ஓடாதீங்க! வாத்தியார் ஊரில் இல்ல. நான் திரும்பிப் போறேன், வயித்துக்கு இல்லாமதானே திருடுறீங்க... எவ்வளவு முடியுதோ எடுத்துட்டுப் போங்க!’’ என்று சொல்லிவிட்டு பெரும் துக்கத்தோடு எங்கள் ஜிம்மி நாயைத் தடவிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி நடந்தார்.

எங்கள் வீட்டில் இருந்த மீனாம்மாவும் அம்மாவும் பல தருணங்களில் பேசிக் கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். மனிதர்களோடு பேசுவதைப் போன்று, அம்மா மீனாம்மாவுடன் பேசுவாள். ஒரு வகையில் அம்மாவின் துயரங்களையும் தனிமையையும் மீனாம்மாவும் ஜிம்மியும் எங்களைவிட அதிகமாகப் போக்கியிருக்கிறார்கள்.

என் மகளை இளம்வயதில் திருவண்ணாமலை கார்த்திகை தீப சந்தையை வேடிக்கை பார்க்க அழைத்துச் சென்றபோது, அவளுக்கு அங்கு இருக்கிற ஆயிரக்கணக்கான மாடுகளைவிட ஒரு குதிரைக்குட்டியை மிகவும் பிடித்திருந்தது. ‘‘இந்தக் குதிரைக்குட்டியை வாங்கிக் கொடுங்கப்பா’’ என்று கேட்டாள். அவளுக்காக வாங்கித் தந்தேன். அதற்கு நாங்கள் ‘புல்ஸாரி' என்ற பெயரிட்டோம். கிட்டத்தட்ட ஒரு வருடம் அதை வளர்த்தோம். குதிரை வளர்ப்பதில் பல சிரமங்கள் இருப்பதை நாங்கள் உணர்ந்து கொண்டபோது அந்தக் குதிரைக்குட்டியை நாங்கள் கைவிட வேண்டியதாகிவிட்டது.

குழந்தைகளின் உலகத்தில் விலங்குகள் பெறுகிற இடத்தை மனிதர்களால் ஒருபோதும் பெறமுடியாது. பிராணிகள் குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிற அபூர்வத்தை, பரவசத்தை, மகிழ்ச்சியை மனிதர்கள் தர முடியாது. அணிலைப் பார்க்கிறபோது, கிளிகள் பேசுகிறபோது குழந்தைகள் அடையும் மகிழ்ச்சியை, உற்சாகத்தை நாம் மற்ற நேரங்களில் பார்க்கவே முடியாது. பேசிப் பேசி நாம் கொடுக்கிற அன்பை, பிராணிகள் சின்னச்சின்ன அசைவுகளில் குழந்தைகளுக்கு உணர்த்திவிடுகின்றன. பூனைகளும் நாய்க்குட்டிகளும் மீன்களும் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளின் வாழ்வை மிகுந்த பிரியத்தோடு நிரப்புவையாக இருக்கின்றன. ஓவியர் பாஸ்கரன், பூனைகளை விதவிதமாக வரைந்து பார்த்திருக்கிறார். அவருக்குப் பூனை பாஸ்கரன் என்றே அதனால் பெயர் வந்தது. இன்னும்கூட ஓவியர் பாஸ்கரனின் மனதில் வரையப்படாத பூனைகள் வரிசை கட்டி நின்றிருக்கும். அவருடைய காதுகளில் அந்தப் பூனைகளின் ‘மியாவ்' சத்தம் எப்பொழுதும் கேட்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. சமகாலத்தில், நாய்களிலேயே நல்ல ஜாதி நாய்கள் என்று தரம் பிரிக்கப்பட்டதையும், அவை வீட்டின் காம்பவுண்டுக்கு வெளியே இருக்கின்ற மனிதர்களைவிட பிரத்யேகமாக கவனிக்கப்படுகின்றன என்பதையும் பார்க்கும்போதெல்லாம் என்னவோ மனம் ஒப்ப மறுக்கிறது.

சொல்வழிப் பயணம்! - 13

கு.அழகிரிசாமியின் `வெறும் நாய்' என்கிற கதை உண்டு. ஒரு டாக்டர் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்ற ஒரு தென்னந்தோப்பை காவல் காக்கிற முனுசாமி, தோப்பின் அருகிலேயே குடிசை போட்டு வாழ்வான். அவன் ஒரு நாய் வளர்ப்பான். சாதாரணத் தெரு நாய். ரேஷன் கார்டுகளில் அந்த அற்புதமான தோழமையின் பெயர் இடம் பெற சட்டம் அனுமதிக்காமல் இருக்கலாம். ஆனால், முனுசாமியின் வீட்டில் `நான்கு பேர் இருக்கிறோம்' என்றுதான் முனுசாமி, அவன் மனைவி, மகள் மூவருமே சொல்வார்கள். அருகில் வசிக்கும் டாக்டரோடு தோழமைகொள்ள வேண்டும் என்கிற விருப்பம் முனுசாமிக்கு இருக்கும். அந்த டாக்டர், அவனை சாதாரண தென்னந்தோப்புக் காவலாளி என்பதற்காகத் தவிர்ப்பார். டாக்டர் காலையில் தன் உயர் ஜாதி நாயை சங்கிலியில் கட்டி நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வார். அந்த டாக்டரையும் அவரின் நாயையும் முனுசாமியின் நாய்க்குப் பிடிக்காது. அந்த நாயைப் பார்க்கும்போதெல்லாம் இரண்டு குரை குரைத்துவிட்டுப் போகும். அது அந்த டாக்டருக்கும் சேர்த்துதான்.

முனுசாமி டாக்டர்மீது வைத்திருக்கின்ற நட்பைக் காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படும். டாக்டருடைய வீடு ஒருநாள் தீப்பற்றிக்கொள்ளும். தெருவிலுள்ள மனிதர்கள் எல்லாம் சேர்ந்து தீப்பற்றி எரிகின்ற வீட்டைப் பார்த்து, ‘அடடா, எவ்வளவு கொடூரமா கொழுந்துவிட்டு எரியுது... பக்கத்து ரூமுக்குப் பரவிருச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல அவ்ளோதான் டாக்டர்!' என காம்பவுண்டைக்கூடத் தாண்டாமல் பேசிக் கொண்டிருப்பர். முனுசாமி முதுகெல்லாம் கரியாக, அனல் பரவிய அந்த வீட்டில் நுழைந்து பல பொருள்களை வெளியில் எடுத்துப் போட்டுக் காப்பாற்றித் தருவான். ‘டாக்டர் மிகுந்த பிரியத்தோடு தன்னைக் கட்டி அணைத்துக் கொள்ளவிருக்கிறார். இதுதான் தருணம்’ என்று முனுசாமி எதிர்பார்த்துக்கொண்டிருப்பான். டாக்டர் அவனுக்கு 100 ரூபாய் கொடுப்பார். ‘நீ எரியும் வீட்டிலிருந்து பொருள்களைக் காப்பாற்றினாய். அதற்கு உனக்கு 100 ரூபாய் கூலி’ என்று அந்த அன்பு விலை பேசப்படும்.

மனிதர்களை நாம் தொடர்ந்து விலை பேசிக்கொண்டே இருக்கிறோம். மனிதர்களிடமிருந்து கிடைக்கிற தோழமையைப் பணம் கொடுத்து, பொருள் கொடுத்து சமன் செய்துவிட முடியும் என்று நினைக்கிறோம்.

டாக்டர் கொடுத்த பணத்தை வாங்காமல் முனுசாமி மிகுந்த ஏமாற்றத்தோடு தன்னுடைய குடிசைக்குத் திரும்புவான். அவன் மனைவிக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது அந்த டாக்டர் வீட்டிற்குச் செல்வான். ‘‘நான் வந்திருக்கிறேன் என்று டாக்டர்கிட்ட சொல்லுங்க!'’ என்பான். ‘பலர் தயங்கியபோது, தான் மட்டுமே தீயில் குதித்து இந்த வீட்டை அன்று காப்பாற்றினோம்’ என்கிற நம்பிக்கையோடு அவன் சொல்லி அனுப்புவான். இவனுடைய பெயர் அந்த டாக்டரின் காதில் ஏறவே ஏறாது. இவனுடைய குரல் அந்த டாக்டருக்குக் கேட்கவே கேட்காது. எல்லா நோயாளிகளையும் போல நடத்தப்பட்டு, எல்லா நோயாளிகளிடமும் காசு வாங்குவதைப் போன்று இவனிடமும் காசு வாங்கிக்கொண்டு அனுப்புவார். ‘நீ தென்னந் தோப்பைக் காவல் காக்கின்ற காவலாளி, நான் ஒரு டாக்டர். உனக்கும் எனக்கும் வேறு என்ன உறவு இருக்க முடியும்' என்று சொல்லாமல் சொல்கிற பல செய்திகள் அவர் நடத்தையில் இருப்பதை அவன் கவனிப்பான். ஏமாற்றத்துடன் குடிசைக்குத் திரும்புவான்.

ஒருநாள் முனுசாமியின் நாய்க்கும், டாக்டருடைய நாய்க்கும் பிரச்னை ஏற்பட்டு பெரிய சண்டையாக மாறும். அப்போது, முனுசாமியினுடைய நாய் அந்த டாக்டரையே கடித்துவிடும். இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாதவனாக முனுசாமி இருப்பான். ‘எப்போதும் மீந்துபோன கஞ்சியையோ கூழையோ எடுத்து அந்த நாய்க்கு ஊட்டுகிற அவன் மனைவி, அன்றைக்கு ஒரு நாள் மட்டும் அந்த நாய்க்கு நல்ல சோறு சமைத்துப் போட்டாள்’ என்று அழகிரிசாமி அந்தக் கதையை முடிக்கிறார்.

அந்தக் கதைக்கு ‘வெறும் நாய்' என்று பெயரிட்டிருப்பார். ஒருவகையில் அழகிரிசாமியினுடைய மனித நெருக்கம் என்பதும், விலங்குகள் மனிதர்கள்மீது வைத்திருக்கின்ற நெருக்கமும் இந்தக் கதையின் மூலம் வெளிப்படும். தங்களுக்கு மேலான அந்தஸ்தில் இருக்கிற மனிதர்களிடம் எப்படியாவது உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று பலர் தங்களுடைய கைகளை நீட்டிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் உயரத்தில் இருக்கின்ற மனிதர்கள், அந்த நட்பை, அந்தத் தோழமையை ஏற்றுக்கொள்ள மறுத்து அவர்கள் நீட்டிய கரங்களைத் தட்டி விடுபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பிராணிகள் ஏதோ ஒரு வகையில், இதைக் கவனித்துக்கொண்டே இருக்கின்றன. அவை கைவிடப்பட்டவர்களுக்காகக் கரம் நீட்டிக்கொண்டே இருக்கின்றன.

`திருடன் மணியன் பிள்ளை' நூலில் வருகிற மணியன் பிள்ளையை நான் நான்கைந்து முறை சந்தித்திருக்கிறேன். அந்தப் புத்தகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பகுதியைப் பற்றி அவரிடம் உரையாடியிருக்கிறேன். கொல்லத்தில் ஒரு பெரிய பணக்காரர் வீட்டில் திருட வேண்டும் என்று மணியன் பிள்ளை முடிவெடுத்து, ஒரு நள்ளிரவில் கச்சிதமாகத் தன்னுடைய திருட்டை முடித்து வீடு திரும்புவார். இரவு நடந்த அந்தத் திருட்டை மணியன் பிள்ளைதான் செய்திருக்க வேண்டும் என உறுதியாக நம்புவார் அந்தப் பணக்காரர். அவர் மிகவும் சாதாரணமாக, `நேத்து நம்ம வீட்டுக்கு ராத்திரி வந்தீங்க போல இருக்குது' என்று மணியன் பிள்ளையிடம் வந்து கேட்பார். முதலில் உறுதியாக மறுத்துக்கொண்டே இருப்பார் மணியன் பிள்ளை. `நான் வரவில்லை. நான் திருடவில்லை!’ என சமாளிப்பார்.

இறுதியாக அந்தப் பணக்காரர், ``நீங்கள் வந்ததோ, திருடியதோ எனக்குப் பெரிய விஷயமில்லை. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்துகொள்ளத்தான் நான் இவ்வளவு தூரம் வந்தேன். நான் கிட்டத்தட்ட சிங்கங்களுக்கு இணையான இரண்டு நாய்களை வீட்டில் வளர்க்கிறேன். என்னுடைய வயதான காலத்தில் இந்த இரண்டு நாய்களும் என்னைப் பாதுகாக்கும், காப்பாற்றிவிடும் என நேற்று இரவு வரையிலும் நம்பிக்கொண்டு இருந்தேன். அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது. அந்த நாய்களை எப்படி வசியப்படுத்தினீர்கள், எப்படி ஏமாற்றினீர்கள் என்று மட்டும் என்னிடம் சொல்லுங்கள்’’ எனக் கேட்பார்.

முதலில் உறுதியாக மறுத்து வந்த மணியம் பிள்ளை, கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெரியவருக்குத் தன்னுடைய களவின் நுட்பங்களைச் சொல்கிறார். அப்போது, அந்த நாய்களை ஏமாற்றிய விதத்தைச் சொல்கிறார் மணியன் பிள்ளை.

சொல்வழிப் பயணம்! - 13

`` வீட்டுக்குள் நுழைந்தேன். உங்கள் ஃபிரிட்ஜில் மத்தி மீன்கள் சுத்தம் செய்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை எடுத்து லேசாக சமைத்து நீங்கள் கொடுப்பது போன்று சாதத்தில் கலந்து உள்ளிருந்து தட்டுகளை அந்த நாய்களை நோக்கி நகர்த்தினேன். தங்கள் வீட்டிலிருந்துதான் யாரோ உணவு அளிக்கிறார்கள், தங்களின் எஜமானருக்குத் தெரிந்தவர்தான் யாரோ உணவு அளிக்கிறார்கள் என்று அவை ஏமாந்தன. அதன்பின் களவை வெற்றிகரமாகச் செய்து முடித்தேன்’’ என்கிறார்.

அந்தப் பணக்காரர் நிதானமாகக் கேட்டுவிட்டு கனத்த இதயத்தோடு வீட்டுக்குத் திரும்புகிறார். வீட்டிற்கு வந்து அந்த இரண்டு நாய்களையும் பார்க்கிறார். ‘இவை நம்மைக் கைவிட்டுவிட்டன. குடும்பம் கைவிட்டதுபோல, இந்த நாய்களும் தன்னை நிராதரவாளனாக மாற்றிவிட்டன’ என அவருக்குத் துக்கம் மேலெழுகிறது. அவர் அந்த நாய்களின் முன்னால் கிட்டத்தட்ட மண்டியிட்டு உட்கார்ந்து, அந்த நாய்களோடு பேசுகிறார். ``இந்த முதுமைக் காலத்தில் நீங்கள் என்னைக் காப்பாற்றிவிடுவீர்கள், என்னைப் பாதுகாப்பீர்கள் என்று நான் எவ்வளவு நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் நீங்கள் கேவலம் ஒரு மத்தி மீனுக்காக இப்படிச் சோரம் போய்விட்டீர்களே!’’ என்று அந்த நாய்களிடம் பேசுகிறார்.

அந்த நாய்கள் இரண்டும் தம் எஜமானன், தமக்கு முன்னால் மண்டியிடுவதையும் கண்ணீர் விடுவதையும் கருணையோடு கேட்கின்றன. அந்த இரண்டு நாய்களும் உணவே சாப்பிடாமல் பத்து நாள்கள் பட்டினியாக இருந்து ஒன்றன்பின் ஒன்றாக இறந்துபோயின. இதை என்னிடம் மணியன் பிள்ளை துக்கத்தோடு சொன்னார்.

பிராணிகள் கடத்துகிற தன்னலமற்ற அன்பை, சதா நமக்காக நிரூபிக்கிற அவற்றின் நேசத்தை குழந்தைகள் போலவே நாமும் புரிந்துகொள்கிற நாளில் அன்பெனும் சொல்லை நம்மால் உணரமுடியும்.

- கரம்பிடித்துப் பயணிப்போம்...