Published:Updated:

சொல்வழிப் பயணம்! - 14

சொல்வழிப் பயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வழிப் பயணம்

ஓவியங்கள்: மினிமலிக்ஸ்

புது வருடம் பிறந்திருக்கிறது. பனி பொழிகிற இரவொன்றில் மனிதர்களின் வாழ்த்துகள் நட்சத்திரங்களென ஒளிர உற்சாகத்துடன் பிறக்கிறது புது வருடம். சக மனிதர்கள் வாழ்த்துகிற, அணைத்துக்கொள்கிற, உடன்நிற்கிற பொழுதுகள் தருகிற நம்பிக்கை வேறு எதனாலும் கிடைக்காதது. பனி நிறைந்த இந்த மார்கழியில் புத்தாண்டு வருவது மனதுக்கு நெருக்கமான ஒன்று.

கண்ணதாசன், `மாதங்களில் அவள் மார்கழி' என்று ஒரு பெண்ணைப் பற்றிச் சொல்கிறார். அந்த ஒப்பீடே சிலிர்க்க வைப்பதாக இருந்தது. லேசான குளிர், உறுத்தாத வெயில், எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேலென்ற வயல்கள். அந்த நிலப்பரப்பு முழுக்க பூத்துக் குலுங்குகிற, பச்சைத்தாள் ததும்பி நிற்கின்ற, கொக்குகள் உதித்திருக்கிற இந்தக் காலம் சௌந்தர்யமான ஒன்று. கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது போல இந்தக் காலத்தில்தான் கிறிஸ்துமஸும், புத்தாண்டும் வருகின்றன. இந்த மார்கழியில்தான், கர்ம சிரத்தையாக அதிகாலையிலேயே குளிரில் குளித்து ‘சாமியே... ஐயப்பா!' என அடி நாதத்திலிருந்து வருகிற குரல்கள் காற்றுவெளியை நிரப்புகின்றன.

திருவண்ணாமலை மாடவீதியை ஒருமுறை சுற்றி வரலாம் என பைக்கில் கிளம்புகிறபோது, மனித நெரிசலால் அந்தச் சாலை அடைந்திருந்தது. மனிதர்கள் மகிழ்ச்சியுடன் கூட்டமாக ஓரிடத்தில் குவிந்து தங்களுக்குப் பிடித்தமானவற்றை வாங்குகிறதை இந்த வீதிகள் சில நாள்களாக இழந்திருந்தன. முகத்தில் நிறைந்திருந்த நம்பிக்கையுடன் மலையைச் சுற்றிக்கொண்டும், கோயிலுக்குச் சென்றுகொண்டும் மக்கள் பிரார்த்தனைகளை நோக்கி நகர்கிறார்கள். இன்னொரு பக்கம் ஆங்காங்கே இருக்கிற கிறிஸ்தவக் குடியிருப்புகளில் டிசம்பர் ஒன்றாம் தேதியில் ஆரம்பிக்கின்ற துதிகள், ஆரவாரமாக கிறிஸ்துவின் பிறப்பை இந்த உலகத்திற்குச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சகோதரர்கள் இருவர் தங்களின் தெய்வங்களைக் கூட்டாக வழிபடுகிற இந்த நாள்கள் எப்போதும் நிறைவானவையாகவே இருக்கின்றன.

சொல்வழிப் பயணம்! - 14

ஒவ்வொரு புத்தாண்டின்போதும் மனிதர்கள் புதுப்புது சபதங்களை எடுக்கிறார்கள். `இந்த ஒண்ணாம் தேதில இருந்து சிகரெட் பிடிக்கிறத விட்றலாம்னு இருக்கேன்டா!' என ஒவ்வொரு ஜனவரி 1-ம் தேதிக்கும் சபதம் எடுக்கிற சிகரெட் பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். `இதுதான் நண்பா கடைசி பெக்!' எனப் பலரும் டம்ளர்கள் மோதிக்கொள்ள சியர்ஸ் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

புத்தாண்டுகளில் தொடர்ச்சியாக இதுபோன்ற சபதங்கள் எடுக்கப்படுவதும், பின்பு அது மீறப்படுவதும் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. பலரும் இதற்கெனக் கவலைப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். இதுகுறித்தெல்லாம் மனச்சோர்வு கொள்ளத் தேவையில்லை. மனித மனங்கள் உலோகத்தால் செய்யப்பட்டவை அல்ல. முழுக்க முழுக்க ரத்தத்தாலும் சதையினாலும் ஆனது. ஆனால், நம் மனத்துக்கு ஒரு ஆற்றல் இருக்கிறது. `போதும், நிறுத்திக்கொள்!' என்கிற உள்ளுணர்வை அது தரும். உறவோ, செயலோ, எதுவாயினும் நிறுத்தவேண்டிய நேரத்தில் அதுவே நிறுத்திக்கொள்ளும்.

என்னுடைய பெரும்பான்மையான படைப்புகளை இந்தக் குளிர்காலத்தில்தான், இந்த மார்கழி மாதத்தில்தான் எழுதியிருக்கிறேன். வாசிப்பதற்குக்கூட ஒரு கோடைக்காலத்தைவிட மிக இலகுவான மனநிலையை வாசிப்பாளனுக்கு மார்கழிகள் உருவாக்குகின்றன. யாராவது ஒரு மனிதனை நிறுத்தி, ‘இந்த மொத்த நாள்களில் உனக்குப் பிடித்தமான மாதம் எது?’ என்று கேட்டால், ‘மே மாதம்’ அல்லது ‘சித்திரை மாதம்’ என்று சுட்டெரிக்கும் வெயில் மாதம் ஒன்றைச் சொல்லவே மாட்டான். வெயில் என்ற உணர்வை மனிதன் அனுபவிப்பனாக இருந்தாலும்கூட, ஏதோ ஒரு வகையில் அந்தச் சூடு அவனுடைய மனநிலையை மாற்றுகின்றது. ஆல்பெர் காம்யுவின் ஒரு கதையில், கடற்கரையில் ஒருவனைத் தன் வாளால் வெட்டி வீழ்த்திய ஒரு குற்றவாளியை கோர்ட்டில் விசாரிப்பர். ‘‘நீ எதற்காக அவனை வெட்டினாய்?’' என்று கேட்பார்கள். ‘‘ஒன்றுமே காரணம் இல்லை. அவன் யாரென்றே எனக்குத் தெரியாது. ஆனால், தாங்க முடியாத வெயிலில் நான் தவித்துக்கொண்டிருந்தபோது, இவன் ஒரு வாளைச் சுழற்றிக்கொண்டு வந்தான். அந்த எரிச்சல் தாங்க முடியாமல் அவனைக் கொலை செய்துவிட்டேன்'’ என்று பதில் சொல்வான். வெயிலின் உஷ்ணத்தைக் குறைத்திட கிராமங்களில் திருவிழாக்கள் நடத்தி மழை வேண்டுவது நம் மரபார்ந்த வழக்கமாக இருக்கிறது.

இந்த இனிமையான பருவநிலை தமிழர்களுக்கு தீபாவளியில் இருந்து தொடங்கிவிடுகிறது. மார்கழி மாதத்தில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் சாணம் தெளித்து, சின்ன சாண உருண்டை ஒன்றில், மஞ்சள் நிறத்தில் மினுமினுக்கும் அழகான பூசணிப்பூவை வைத்துச் செல்கிற அந்தக் காட்சியே ரம்மியமான உணர்வைத் தரும்.

சொல்வழிப் பயணம்! - 14

நான் இந்தப் பருவநிலைகளை வைத்து இரண்டு கதைகளை எழுதியிருக்கிறேன். ஒன்று, ‘சத்ரு’ என்கிற கதை. அது, மழையே இல்லாமல் பஞ்சத்தால் இறுகி வெடிப்புற்ற ஒரு நிலத்தின் கதை. அப்போது கடும் பஞ்சம். தாய்மார்கள் தங்கள் சிசுக்களுக்குப் பாலூட்ட முடியாத அளவுக்கான வறட்சி. ‘அம்மனுக்குக் கூழ் வார்த்து ஒரு பண்டிகையைக் கொண்டாடினால், மாரியம்மன் கண் திறந்து நம் நிலத்துக்கு மழை பெய்யும். இந்தப் பஞ்சமெல்லாம் போய்விடும்’ என அவர்கள் நம்புகிறார்கள்.

எங்கள் கிராமத்துக்குப் பக்கத்தில் சின்னச்சின்னப் பாறைகளைக் கல் உரல்களாகக் குடைந்திருப்பார்கள். ஊர்ப் பெண்கள் எல்லாரும் அரிசி, உளுத்தம் பருப்போடு சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்தக் கல் அருகே உட்கார்ந்து மாவாட்டுவார்கள். அந்தக் காட்சியே கவிதையாக இருக்கும். எல்லாப் பெண்களும் ஒரே இடத்தில் கூடி நின்று, தங்கள் ஊர்க்கதையை, தாங்கள் வாழ்ந்த கதையை, தாங்கள் வாழப்போகிற கதையை, பேசிக்கொண்டே மாவாட்டி முடிப்பார்கள். அதுபோன்றதொரு மதிய நேரத்தில் மாவாட்டுகிற ஒரு பெண்ணின் முன் ஒரு நிழல் விழுகிறது. அந்த நிழல் யாருக்குச் சொந்தமென அவள் அண்ணாந்து பார்க்கிறபோது, தனது இரண்டு குழந்தைகளுடன் கறுத்த நிறத்தில் ஒரு பெண் வந்து நிற்கிறாள். அந்தப் பெண்ணின் கண்களில் ஒரு கைப்பிடி அரிசியை அள்ளிக் கொட்டலாம். அவ்வளவு பள்ளம் விழுந்த கண்களைக் கொண்டவளாக அவள் இருக்கிறாள். அந்தக் குழந்தைகள் சாப்பிட்டுப் பல நாள்கள் ஆகியிருக்கும் என்பது அவர்களின் வெறித்த பார்வையின் மூலம் தெரிகிறது. அந்தப் பெண் தன் கையில் ஒரு கறுப்புச் சட்டியை வைத்திருக்கிறாள். ‘‘எனக்குக் கொஞ்சம் மாவு கடன் கொடு. நாளைக்குத் திருப்பி தந்துடுறேன்'’ என்கிறாள். அதற்கு அந்தப் பெண் ஒரு வறட்டுச் சிரிப்பை உதிர்த்துவிட்டு, ‘‘மாவு கடன் கேட்பதைக்கூட ஒத்துக்கொள்வேன். அது எப்படி நாளைக்குத் தந்துருவேன்னு சொல்ற?’' என்பாள்.

அவள் கண்களில் மிகுந்த நம்பிக்கையோடு ‘‘நாளை கட்டாயம் தந்துடுவேன். இப்போ கடன் கொடு’' என்கிறாள். எந்த நம்பிக்கையும் இல்லாமல் இவள் ஆட்டிக்கொண்டிருக்கும் மாவிலிருந்து இரண்டு கை மாவை அள்ளி அள்ளி அவளுடைய அந்தக் கறுப்புச் சட்டியில் போட்டுக்கொண்டே இருக்கிறாள். போடப் போட மாவு அப்படியே பொங்கிப் பெருக்கெடுத்து வந்துகொண்டே இருக்கிறது. இந்தக் கருணையான தருணத்தை மாரியம்மன் பார்க்கிறாள். திடீரென மாரியம்மனின் கண்ணிலிருந்து ஒரு சொட்டு நீர் வழிகிறது.

இதே நேரத்தில் அந்த மாரியம்மனுக்குக் கூழ் வார்ப்பதற்காக வைத்திருந்த தானியங்களை ஒரு திருடன் திருடிவிடுகிறான். ஊர் மக்கள் எல்லாரும், `பஞ்சத்தாலதான் நாங்களே இந்தக் கூழை வார்க்கிறோம். இதுக்காக வச்சிருந்ததைத் திருடப் பார்க்கிறாயே’' என திருடனைப் பிடித்துக் கட்டி வைத்து மரண தண்டனை வழங்க முடிவெடுப்பார்கள்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிற ஒரு கட்டிலில் அவனைக் கட்டிப்போடுவர். அதிகாலையில் ஒட்டந்தழையைப் பறித்துக்கொண்டு வருகிற கிழவியிடம் தண்டனைப் பொறுப்பு ஒப்படைக்கப்படும். ஒட்டந்தழையை அரைத்து அவனுடைய கைகளில் ஊறவைத்தால், அவன் உடல் விறைத்துச் செத்துப்போவான் என ஊர் மொத்தமும் நம்பிக்கொண்டு போகிறது. இரவு முழுக்கவும் திருடன் தனிமையில் மரணபயத்தோடு கிடக்கிறான்.

பஞ்சத்தில் கேட்ட பெண்ணுக்கு மாவை அங்கே அந்தப் பெண் அள்ளி அள்ளிக் கொடுத்த பொழுதில் மாரியம்மனின் கண்ணிலிருந்து துளிர்த்த கண்ணீர், பெருக்கெடுத்து மழையாக மாறி ஜகமே அழிந்துபோகிற அளவுக்குப் பெருமழை பெய்கிறது. அந்த மழையின் வீரியத்தில் விஷத்தழையைப் பறித்துக்கொண்டிருந்த ரங்கநாயகிக் கிழவி செத்துப்போய் மல்லாந்து கிடக்கிறாள். மழை வெள்ளத்துடனே அதிகாலையில் நடந்து வருகிற அந்த ஊர் மனிதர்களிடம் கொலைவெறி அகன்றுவிடுகிறது. நேற்றிரவு திருடவந்து கட்டிப் போடப்பட்டவனை, எல்லாரும் மிகுந்த அன்போடு பார்க்கிறார்கள். அவன் இப்போது தன்னைக் கொல்ல வருகிறவர்களை ஏறெடுத்துப் பார்க்கிறான். அவன் கண்களில், `என்னை மன்னித்து விட்டுவிடுங்கள்' என்ற கெஞ்சல் இருக்கிறது. இவன் சொல்லாமலே எல்லா மனிதர்களும் இவனுடைய கட்டுகளை அவிழ்த்து விடுகிறார்கள். ‘‘போ...மாரியாத்தா கண்ணத் திறந்துட்டா. மழை பெய்ஞ்சிருச்சு, போய் உழைச்சுச் சாப்பிடு’' என்று அவனை விடுதலை செய்கிறார்கள். அவன் ஒரு மேடேறிச் சென்று திரும்பிப் பார்க்கிறான். ஊர் ஈரத்தில் நனைந்திருந்தது என்று அந்தக் கதை முடிகிறது.

பருவநிலைகளுக்கும் மனித மனங்களுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. இந்தப் பருவநிலைகள் மனிதரின் மனங்களை பாதிக்கின்றன. பருவநிலைகள் மனித மனங்களில் கருணையை ஊற்றெடுக்கவும் செய்கிறது. மனித மனங்களில் ஊறிக் கிடக்கிற வன்மத்தையும் வக்கிரத்தையும் அது பெருவாரியாகக் குறைக்கிறது. காலமும் சூழலும் மனதை திசைதிருப்பக்கூடிய வழிகாட்டிகள் என்பதைப் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். நீங்கள் கொடுக்கிற மன்னிப்பும், காட்டுகிற கருணையும் நிச்சயம் ஒரு நாள் கொடிய மனதையும் மாற்றும். வெறுப்பை வெல்கிற வல்லமை கருணைக்கு உண்டு.

கிறிஸ்துமஸ் தினங்களில் தெருவில் பிரார்த்தனைப் பாடல்களைப் பாடியபடி வருவோரின் குரல்கள் பெரும் நம்பிக்கையைத் தரக்கூடியவை. மேரி வில்லியம்ஸ் என்பவருக்கு இரண்டு குழந்தைகள் இறந்து மூன்றாவதாக அவள் கருவுற்றிருப்பாள். குறி சொல்கிற ஒருவர், இந்தக் கருவும் தங்காது எனக் குறி சொல்லிச் செல்வார். அந்தக் குறி சொல்கிறவர் வாய் பேச முடியாதவர். இருந்தாலும் அவர் குறி சொல்வதைப் பலரும் குறிப்பால் உணர்ந்து கொள்வார்கள். அவர் சொன்ன அந்த வார்த்தைகளால் மேரி வில்லியம்ஸ் துடிதுடித்து நம்பிக்கையற்று உழன்று போவாள். அவள் வானத்து நட்சத்திரங்களைப் பார்ப்பாள். அந்த நட்சத்திரங்கள் தன் வீட்டைக் கடந்து போய்விட்டால் தன் குழந்தை பிழைத்துக்கொள்ளும் என்று அவள் நினைத்துக்கொள்வாள். ஆனால் அந்த நட்சத்திரங்கள் நகர்ந்தே போகாது.

சொல்வழிப் பயணம்! - 14

தன் நம்பிக்கைகளை எல்லாம் அவள் இழந்துவிட்ட ஒரு கிறிஸ்துமஸ் காலத்தின் பகலில் தெருவில் பஜனை வருவார்கள். பஜனையில் வருகிற கிறிஸ்துமஸ் தாத்தாக்களுக்கு அனைத்து வீடுகளிலும் இனிப்புகளையும், மிட்டாய்களையும் கொடுப்பார்கள். தன் குழந்தை இறந்துவிடும் என நம்பிக்கொண்டிருக்கிற மேரி வில்லியம்ஸின் வீட்டு வாசலில் அவர்கள் வந்து நிற்பார்கள். அவள், ‘எதற்காக இந்தக் குதூகலம்’ எனக் கேட்பாள். அவர்கள், `கன்னி மரியாளுக்குக் குழந்தை ஏசு பிறந்திருக்கிறார்!’ என்பார்கள். அந்த ஒரு வார்த்தையில் மேரி வில்லியம்ஸ் உயிர்பெற்றவளாக மாறுவாள். அளவற்ற குதூகலம் அவள் மனதில் நிறையும். வீட்டிற்குள் நுழைந்து கேக், இனிப்பு வகைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வந்து அந்தக் குழுவிற்கு அள்ளிக்கொடுப்பாள்.

கன்னி மரியாளுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்ற வார்த்தையைக் கேட்டவுடன், ‘எந்தச் சேதாரமும் இல்லையா?’ எனக் கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் மேரி வில்லியம்ஸ் கேட்பாள். ‘இல்லை’ என அவர்கள் சொல்வார்கள். அப்படியானால் என் குழந்தைக்கும் எந்தச் சேதாரமும் இருக்காது என அவள் நம்புவாள்.

இந்தக் காலத்துக்கும், இந்தப் பருவநிலைக்கும், இந்தப் பனிக்கும், இந்த மனநிலைக்கும் பொதுவான ஒன்றிருக்கிறது. அது, சக மனிதனிடம் நாம் காட்ட வேண்டிய கருணை. அந்தக் கருணை வழியாக அவனுக்குக் கிடைக்கும் நம்பிக்கை.

‘யாருக்கோ குழந்தை பிறந்திருக்கிறது’ என்கிற அந்த வார்த்தை மேரி வில்லியம்ஸுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது. ஒரு பெண்ணின் கருணை பெரு மழையாகப் பொழிந்து வறட்சியைப் போக்குகிறது. இந்த உலகத்தில் நிகழ்ந்த அத்தனை வன்முறை, கலகங்களின் முடிவிலும் கருணையும் நம்பிக்கையும் மட்டுமே எஞ்சி நிற்கும். பெருந்திரளான இந்த மனிதர்களில் பலரும் தனித்தே கிடக்கிறோம். பற்றுவதற்கான நம்பிக்கையற்று நாம் நிற்கிற இந்தப் பொழுதுகளில் யாருக்கோ நிகழ்ந்த ஒரு நன்மை, யாருக்கோ கிடைத்த ஒரு மன்னிப்பு, நமக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும். மனிதன் தன்மீதான கருணைக்காகவும், தனக்கு நம்பிக்கை தரவேண்டியும் இந்தப் பனிக்காலத்தில் அத்தனை பிரார்த்தனைகளை நிகழ்த்துகிறான். அந்தப் பிரார்த்தனைகளின் பலன் சக மனிதர்களாலேயே அவனுக்கு நிகழும். கலங்கி நிற்கிற நேரங்களிலெல்லாம் வந்து நிற்கிற தோழமையின் முகமெனப் புதுவருடம் நம்பிக்கையுடன் நகரட்டும். அது நகரும் திசையெல்லாம் வானம் போல நம்பிக்கையும் கருணையும் சுரக்கட்டும்.

- கரம்பிடித்துப் பயணிப்போம்