Published:Updated:

சொல்வழிப் பயணம்! - 15

சொல்வழிப் பயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வழிப் பயணம்

ஓவியங்கள்: மினிமலிக்ஸ்

மலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீரா `ஒரே கடல்' என்ற படத்திற்கு வசனம் எழுதி, திரைக்கதையிலும் பங்காற்றியிருந்தார். மம்மூட்டியும் மீரா ஜாஸ்மினும் நடித்த அந்தப் படம், என்னுள் பல கேள்விகளை எழுப்பியது.

நமக்குள் எழுகிற கேள்விகள் இரண்டு ரகம். ஒன்று, நம்மைப் பற்றியது. மற்றொன்று, நமக்குத் தொடர்பற்ற ஆனால் நம்மை உலுக்கிப் போடுகிற கேள்விகள். நினைவில் கேள்விகளைச் சுமக்கிற மனிதர்களுக்கு நித்திரை இருப்பதில்லை.

இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சியில் கே.ஆர்.மீராவின், ‘அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்' புத்தகத்தை வாங்கி, நள்ளிரவில் 12 மணி போல வாசிக்க ஆரம்பித்தேன். அந்தக் கதை இவ்வாறு தொடங்குகிறது. `அப்பா, ஒரு முறை ராதிகாவை வழியில் ஒரு இடத்தில் மறந்து விட்டுவிட்டுப் போய்விட்டார். அவளுக்கு அப்போது பத்து வயது. ‘இங்கு சிறுநீர் கழிப்பது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது’ என்று அறிவிப்புப் பலகை வைத்திருக்கும் ஒரு சிறு காத்திருப்புக் கூரையின் கீழ் அவளை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழித்துவிட்டு வருவதாகச் சொல்லி அப்பா பக்கத்தில் இருந்த மது அருந்தும் கடைக்குப் போய்விட்டார். குடித்த பிறகு அப்பா, பெயர் பெற்ற ஒரு விலைமாதுவை நினைவுகூர்ந்தார். ராதிகாவை மறந்தார். விலைமாதுவின் வீட்டில் அன்று காவல்துறையின் ரெய்டு நடந்தது. அப்பாவைக் காவலர்கள் கைது செய்தனர். காத்துக்கொண்டிருந்த ராதிகா சோர்வடைந்தாள்.

இருள் வந்தது. வயதானவன் ஒருவன் பக்கத்தில் வந்தான். அப்பாவிடம் அழைத்துப் போவதாகச் சொல்லி அவளைத் தன் குடிசைக்கு அழைத்துப் போனான். அவளுக்குக் கஞ்சியும் மரவள்ளிக் கிழங்கும் கொடுத்தான். பாதித் தூக்கத்தில் அவளை வன்கொடுமை செய்தான். வெட்டி எடுத்த கற்களால் கட்டப்பட்டு, பூசப்படாத சுவர்களைக் கொண்ட அந்த அறையின் மூலையில் வட்டமாகச் சுற்றப்பட்ட ஒரு கயிறும், பதமான வாய்ப்பகுதியில் மரத் துணுக்குகள் பற்றிப் பிடித்திருந்த ஒரு மழுவும் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அறையில் கடுமையான ஒரு வாசனை பரவியிருந்தது. அது பச்சை மரத்தின் வாசனை. ராதிகாவிற்குப் பைத்தியம் பிடிக்க வைக்கும் நினைவு அது. சில வேளைகளில் ஒரு மின்னலைப்போல் அந்த நினைவு வந்து தாக்கித் தள்ளும். மூளையின் அறைகளில் துளைத்தேறி அடித்துத் தகர்த்து சற்று நேரம் அவளை, அவள் இல்லாதவளாக ஆக்கும்' என்று அந்தக் கதையை கே.ஆர்.மீரா ஆரம்பிக்கிறார்.

அதற்கு மேல் அந்தக் கதையை வாசிக்கத் திராணியற்றவனாகப் புத்தகத்தை மூடி வைத்தேன். குழந்தைகள்மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறைகள் பற்றிய நினைவு கொடுங்கனவைப் போல அந்த இரவை நிறைத்தது.

குழந்தைகள் என்ற சொல்லைக் கேட்கிற மனம் சற்று இலகுவாகும். அந்தச் சொல்லைக்கூட யாரும் சத்தமாக உச்சரிப்பதில்லை. அந்தச் சொல் தருகிற வாஞ்சை அலாதியானது. குழந்தைகள், சுதந்திரமான வண்ணத்துப் பூச்சிகளைப் போல பறந்திட எத்தனிக்கிறார்கள். இந்த உலகம் அப்படி சுதந்திரமானதாக இல்லாமல், கவனமாக இருக்க வேண்டியதாக இருக்கிறது என்கிற யதார்த்தம் அச்சுறுத்துகிறது. செய்திகள், சமூக வலைதளப் பதிவுகள் என எங்கும், குழந்தைகள்மீது நிகழ்கிற வன்முறை குறித்து நாம் அறிய முடிகிறது. நாம் வாழும் இதே மண்ணில் வாழ்கிற யாரோ ஒருவர் நிகழ்த்துகிற வன்முறைதானே அது. எப்படி அவர்களால் இதைச் செய்ய முடிகிறது? நம்மைப் போலவே உண்டு, உறங்கி, பாடி, நண்பர்களோடு கதைத்து வாழ்கிற ஒருவனின் மனதில் இந்த துர் எண்ணம் எப்படித் தோன்றுகிறது.

சொல்வழிப் பயணம்! - 15

இந்தக் கேள்விகள் என்னை நிம்மதியிழக்கச் செய்திருக்கின்றன. தெரியாதவர்களிடம் பார்த்துப் பழக வேண்டும் என அறிவுறுத்துகிற சூழலில், அறிந்தவர்களால் நிகழ்த்தப்படுகிற வன்முறையை எங்கே சொல்லித் தீர்ப்பது! வெளிவருகிற உண்மைகள் இப்படியிருக்கையில், மற்றொருபுறம் இதையெல்லாம் வெளியில் சொல்லாமல் மனதில் புதைத்து வைப்பவர்களின் துயரம் இன்னும் கொடியது. சிறு வயதில் நிகழ்ந்த ஒரு கொடுமையால் இன்றுவரை உளவியல் சிக்கலில் உழல்பவர்கள் எத்தனை எத்தனை பேர்.

மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னையில், லதாவின் `கழிவறை இருக்கை' புத்தகத்தை வெளியிட்டுப் பேசினேன். அந்தப் புத்தகத்தின் முன்னுரையிலேயே லதா, ‘என் 8, 9 வயதில் பக்கத்து வீட்டு மாமாக்கள் மூலமாக எனக்கு நடந்த வன்கொடுமையை 12, 13 வயதில் என் அப்பாவே செய்யத் தொடங்கினார்’ என எழுதியிருந்தார். லதா நல்ல நிலையில் இருக்கிறார். வேலை பார்க்கிற குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனாலும், இந்த விஷயத்தைப் பொதுவெளிக்குக் கொண்டு வருவதற்கான அவசியம் இருக்கிறது.

நாம் எப்போதுமே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக, புனிதப்படுத்த வேண்டியதாகப் பலவற்றை வைத்திருக்கிறோம். பல நேரங்களில் அங்குதான் வரம்பு மீறுகிறது. நாம் கட்டி வைத்திருக்கிற புனித பிம்பமே அதை வெளிக்கொணராமல் தடுக்கிறது. வட மாநிலங்களில் குழந்தையின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து, அந்தப் பிஞ்சு உயிரைக் கொன்ற செய்தி நம் எத்தனை பேரை நிம்மதியிழக்கச் செய்தது. அந்தத் தகப்பனும் அந்த மகளை நம்மைப் போலத்தானே கொஞ்சியிருப்பான். குழந்தைகளின் உடல் லேசாகக் கொதித்தாலே பதறிப்போய் மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடுகிறோம். அந்தக் குழந்தைகளுக்கு நிகழ்கிற வன்கொடுமைகளை எப்படித் தாங்கிக் கொள்வது. குழந்தைகள்மீது நிகழ்த்தப்படுகிற வன்கொடுமைகளில் பெரும்பாலானவை நெருங்கிய சொந்தங்களால் நிகழ்த்தப்படுகிறது என்ற புள்ளி விவரம், அத்தனை எளிதாகக் கடந்திட முடியாத ஒன்று. எட்டு வயதில் நிகழ்ந்த ஒன்றை, பல ஆண்டுகள் கழித்துப் புத்தகமாக எழுதி மனதின் சுமையை இறக்கி வைக்கும் பாடு சொல்லி மாளாதது.

ஜெயகாந்தனுடைய ‘குருபீடம்’ கதையைப் படித்திருக்கிறேன். ‘குருபீடம்’ என்கிற பெயரிலேயே ஜா.தீபா விகடனில் ஒரு கதை எழுதியிருக்கிறார். இந்த இரண்டு கதைகளையும் ஒப்பிடுவது என் நோக்கமல்ல. இரண்டும் வெவ்வேறு மனநிலையில், வெவ்வேறு மனிதர்களைப் பற்றி எழுதப்பட்ட கதைகள். ஆனால் இந்த இரண்டு கதைகளையும் ஒரே நேரத்தில் படிக்க ஆரம்பித்த எனக்கு, ஜா. தீபாவினுடைய குருபீடம், ஜெயகாந்தனுடைய குருபீடத்தைவிடப் பல மடங்கு உயரே நிற்பது தெரிந்தது.

சென்னையிலிருந்து சிவகங்கைக்குப் போகிறாள் ஐ.டி நிறுவனத்தில் உயர் பொறுப்பிலுள்ள ஒரு பெண். போகிற வழியில் பக்கத்து சீட்டில் இருப்பவள் இந்தப் பெண்ணோடு பேச்சுக் கொடுக்கிறாள். ‘நீ எங்கம்மா போற.' என்று கேட்கிறாள். ‘சிவகங்கையிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள ஒரு ஊருக்கு என் கல்யாணப் பத்திரிகையைக் கொடுக்கப் போகிறேன்’ என்கிறாள். ‘அங்க யாராவது சொந்தக்காரங்க இருக்கிறாங்களா?’ என்று கேட்கிறாள். ‘இல்ல, என் வாத்தியாருக்குப் பத்திரிகை கொடுக்கணும்’ என்று சொல்கிறாள் அந்தப் பெண். கூரியர், வாட்ஸப் எனப் பல வசதிகள் வந்த பிறகும், இவ்வளவு தூரம் இரவில் தனியாகப் பயணித்து நேரில் போய்ப் பத்திரிகை தருகிற இவளின் குரு பக்தியை மெச்சுவாள்.

சிவகங்கையில் போய் இறங்கி, அறை எடுத்துக் குளித்துவிட்டு, கையில் பத்திரிகையை எடுத்துக்கொண்டு டாக்ஸியில் அந்த ஆசிரியரைப் பார்ப்பதற்காகப் போவாள். டாக்ஸியில் போகும்போது ஒரு மனநிலை வரும். அது என்ன மனநிலை என்றால், ‘ஒருவேளை அந்த வாத்தியார் இறந்துபோயிருந்தால் என்னாவது’ என்று நினைப்பாள், அப்படி இறந்துபோய்விட்டிருந்தால் நாம் ஒன்றுமே பண்ண முடியாது, திரும்பி வந்துவிட வேண்டியதுதான். ஒருவேளை அவர் உயிரோடு இருந்தால், உயிரோடு இருப்பதற்கான நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் கண்டிப்பாக ஓய்வுபெற்று இருப்பார். அவள் ஸ்கூல் படித்த வருடத்தை எல்லாம் கணக்கிட்டு, அவர் ஓய்வு பெற்றிருப்பார் என்று கருதிப் போவாள்.

சரியாக அந்தப் பள்ளி, அதற்கு அடுத்த தெருவில் இருக்கிற அவருடைய வீடு. ரொம்ப தூரத்தில் டாக்ஸியை நிறுத்திவிட்டு வாத்தியாரைப் பார்க்கப் போவாள். வீட்டின் கதவைத் தட்டியவுடன் வயதான அம்மா வந்து கதவைத் திறப்பார். உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைப்பார். வாத்தியார் வெளியே வருவதற்கு முன்னால் இரண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிக்கொள்வார்கள்.

சொல்வழிப் பயணம்! - 15

‘மூக்கும் முழியுமா எவ்வளவு அழகா இருக்குற, ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?’ என்று மிக இயல்பாக ஆசிரியரின் மனைவி கேட்பார். ‘இல்ல, கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு பயமா இருந்துச்சு' என்று இவள் சொல்வாள். வாத்தியார் வந்துவிடுவார். வாத்தியார் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அவரும் ஒரு இருக்கையில் அமர்ந்துகொள்வார். `என்னை ஞாபகம் இருக்கா சார்?’ என்று கேட்பாள். அவரால் ஞாபகப்படுத்த முடியாது. ‘என்னை உண்மையிலேயே உங்களுக்கு ஞாபகம் இல்லையா சார்’ என்று அழுத்திக் கேட்பாள். ஏதோ ஒரு சிறிய பொறி தட்டியது போன்று வாத்தியார் முகம் லேசாக மாறுவதை அவளும் கவனிப்பாள்.

அந்த விநாடி வாத்தியார் திரும்பி தன் மனைவியைப் பார்த்து, ‘உள்ளே போய் சர்பத் கலக்கிக் கொண்டு வா’ என்று சொல்வார். ‘இல்லம்மா, அப்புறம் சர்பத் குடிக்கலாம், நீங்களும் உட்காருங்க' என்று இவள் சொல்வாள். சொல்லிவிட்டு தன் பெயரை, தான் படித்த வருடத்தை அந்த ஆசிரியரிடம் இந்தப் பெண் ஞாபகப்படுத்துவாள்.

இப்பொழுது வாத்தியாரின் முகம் முழுக்க இருண்டுவிட்டிருக்கும். `ஏன் சார் அப்படிப் பண்ணுனீங்க?' என்று ஆரம்பிப்பாள். ‘அன்னைக்கு எல்லா ஸ்டூடன்ட்ஸையும் போகச் சொல்லிட்டு என்னை மட்டும் ஏன் சார் இருக்க வச்சீங்க. எந்த முன்முடிவுகளும் இல்லாமல் நான் இருந்தேன். நீங்கள், முன் முடிவுகளில் எவ்வளவு தயாராக இருந்திருக்கிறீர்கள். அன்றைக்கு என்னிடம் நடந்துகொண்ட முறையில் நான் எவ்வளவு சிதைவுற்றேன். 30 வருடங்களாக அந்தக் காயம் இன்னும் என்னிலிருந்து ஆறவே இல்லை சார். சென்னை நகரில் நெரிசலான பேருந்தில் பயணம் செய்கிறபோது, ஆயிரம் தேள்கள் ஒரே நேரத்தில் மூளையில் கொட்டுவதைப் போன்று ஒரு பெண்ணின் மூளையில் கொட்டுவதை நீங்கள் எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறீர்களா சார்?’ என்று கேட்கிறாள்.

ஆசிரியர் தலைகுனிந்தபடி இருக்க, அவள் தொடர்கிறாள். ‘என்ன செய்வது என்று தெரியாமல் 40, 50 பேர் பயணிக்கின்ற அந்த பஸ்ஸிலிருந்து விடுபட்டு ஒரே நொடியில் கீழே குதித்து ஒன்றரை வருடம் கோமாவில் இருந்த ஒரு பெண்ணை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா சார்? என் வாழ்க்கையில் திருமணம், தாம்பத்ய உறவு என்கின்ற எல்லாவற்றையும் நிராகரிக்கும்படி நீங்கள் ஏற்படுத்திய அந்தப் பெரிய காயம் என்னை இவ்வளவு சிதைக்கும் என்று என்றைக்காவது நீங்க யோசித்துப் பார்த்ததுண்டா சார்?

சொல்வழிப் பயணம்! - 15

‘மூக்கும் முழியுமாய் இருக்கிற, 25 வயசுக்குள்ளயே கல்யாணம் பண்ணி இருக்கலாமேம்மா! 30 வயசாகியும் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?’ என்று உங்கள் மனைவி கேட்கிறார். அவரிடம் என்ன பதில் சொல்ல முடியும் சார்? நீங்கள் அன்றைக்கு என்னிடம் அப்படி நடந்துகொண்ட பிறகு மறுபடியும் மறுபடியும் ஒரு வார்த்தையைச் சொல்லிக்கொண்டே இருந்தீர்கள். ‘இதை யார்கிட்டயும் சொல்லிடாத... யார்கிட்டயும் சொல்லிடாத’ என்று. நான் இந்த 30 வருடங்களில் யார்கிட்டயும் சொல்லல சார்.

ஆனால், என் டாக்டரிடம் மட்டும் சொல்ல வேண்டியதாகிவிட்டது. டாக்டர்தான், ஒருவேளை திரும்பி உங்களைப் போய்ப் பார்த்து இதை உங்களோடு பகிர்ந்து வந்தால், திருமண வாழ்க்கையின்போது என் மனது லேசாகலாம் என்று சொன்னார். அந்த ஒரே காரணத்தால் மட்டுமே இங்கு வந்தேன்’ என்பாள்.

ஒரு ஆதூரத்துக்காக அந்த வாத்தியார் தன் மனைவியைத் தொட முயல்கிறார். ஆனால், ஒரு அற்பப் புழுவை பார்ப்பது போன்று அவர் மனைவி அந்த ஆசிரியரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கதையை முடிப்பதற்கு முன்னால், ‘அம்மாச்சி' என்று மிகுந்த குதூகலத்தோடு ஒரு மூன்று வயதுக் குழந்தை ஓடி வந்து தன் பாட்டியின் மடியில் உட்கார்ந்து கொள்வதை அந்தப் பெண் பார்ப்பாள். அவள், பக்கத்துத் தெருவில் கட்டிக்கொடுத்திருக்கிற ஆசிரியரின் மகளின் மகள். ‘உங்க பேத்தியா சார்?’ என்று அந்தப் பெண் கேட்பாள். இரண்டு பேருமே மௌனமாக இருப்பார்கள். ‘குழந்தையை எப்ப சார் பள்ளிக்கூடத்துல சேர்க்கப் போறீங்க?' என்று கேட்பாள். அதோடு அந்தக் கதை முடியும்.

ஆழ்மனதில் தேங்கிக் கிடக்கும் இப்படிப்பட்ட சுமையோடு எத்தனை எத்தனை பேர் இந்த மண்ணில் தங்கள் நிகழ்காலத்தைக் கழித்து வருகிறார்கள். யாரிடம் பகிர்ந்துகொள்வது, பகிர்ந்துகொண்டால் என்ன நினைப்பார்கள் என மன அழுத்தத்தோடு வாழ்கிறவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவது! தன் கணவன், காதலன், காதலி, அம்மா, அப்பா என யாரிடமும் பகிர முடியாத பாரத்தோடு பல குழந்தைகள் பயத்துடன் வளர்கிறார்கள். ஒவ்வொரு முறை குழந்தைகளின் முகம், பெயர் மறைக்கப்பட்டு இதுபோன்ற செய்திகள் வெளிவரும்போதெல்லாம் ஒன்று தோன்றும். தேசம், மொழி, கடவுள் போல குழந்தைகளும் பொதுவானவர்கள். ஒரு குழந்தைக்கு நிகழ்கிற கொடுமையின்போது மனம் பதறுகிற நாம், நம் குழந்தைகளை அணைத்துக்கொள்கிறோம். அந்தக் கரங்கள், ஆலம் வேர்கள் போலப் படர்ந்து அனைத்துக் குழந்தைகளையும் அரவணைக்க வேண்டும். இந்தக் கொடுமைகளைச் சுட்டெரிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமானது.

- கரம்பிடித்துப் பயணிப்போம்