Published:Updated:

சொல்வழிப் பயணம்! - 17

சொல்வழிப் பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வழிப் பயணம்!

ஓவியங்கள்: மினிமலிக்ஸ்

சில நாள்களாக தண்ணீர் குடிக்கிறபோது மனம் பதைபதைக்கிறது. வேங்கை வயல் என்கிற ஒரு சிறிய கிராமத்தில் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த ஒரு விஷயம், எவ்வளவு பெரிய அநீதி. நம்மில் பலரும் யாராவது குடிக்கத் தண்ணீர் கேட்டால் மனமுவந்து வழங்குகிறோம். இயற்கையின் கொடை தண்ணீர். பிரபஞ்சத்தின் சொத்து. பொதுவான ஒன்று. தாகத்தில் தவித்த தருணங்களை ஒரு நொடி நினைத்துப் பார்த்தால் தண்ணீரின் அருமை நமக்குத் தெரியும். தண்ணீரற்ற ஒரு நாளை நம்மால் சிந்திக்க முடிகிறதா?

குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என பலரும் குடிக்கிற நீரில் மலம் கலந்தது மனித வக்கிரத்தின் உச்சம். அவர்கள் அந்தத் தண்ணீரை உண்மை புரியாமல் எத்தனை நாள் குடித்திருப்பார்கள், இந்தக் கொடூரம் தெரிந்தபிறகு எப்படிப்பட்ட மனவேதனை அடைந்திருப்பார்கள், அதன்பின் அவர்கள் தண்ணீருக்கு என்ன செய்தார்கள் என்பதெல்லாம் கற்பனை செய்து பார்த்தால்கூட நடுக்கம் ஏற்படுத்துகிற விஷயங்கள். நாகரிக சமூகம் என்ற நம் பெருமிதத்தின்மீது அந்தச் செயல் காறி உமிழ்கிறது. வார்த்தை அடுக்குகளால் விவரிக்க முடியாத ஒரு மனநிலையை, எல்லா மனிதர்களுக்குள்ளும் உருவாக்கியிருக்கிறது அந்த ஒற்றைச் சம்பவம்.

`யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற பரந்துபட்ட கோட்பாட்டை உலகுக்கு அறைகூவல் விடுத்தது நம் சமூகம். எல்லா மனிதர்களும் சமம்தான் என்கிற நிலையை நோக்கிப் பல நூற்றாண்டுகளாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறோம். அதை எண்ணித் தலைநிமிர ஆரம்பிக்கும்போதெல்லாம் இப்படி ஏதாவது ஒரு தலைக்குனிவு நம்மைத் தலைகுப்புறக் கவிழ்த்துப் போட்டுவிடுகிறது. இன்னமும் உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. வழக்கம்போல போலீஸ்காரர்கள், அச்சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களையே அந்தக் குற்றத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள். இப்படிப் பல தகவல்கள் வந்து குவிந்த வண்ணமிருக்கின்றன.

கடந்த வாரம் முழுக்க சமூக வலைதளங்களில் பேசிப் பேசித் தீர்த்த இந்த ஒரு விஷயம் மட்டும்தான் வெளியுலகத்துக்குத் தெரிந்தது. துக்கம் வெளியேறாமல் அடக்கி வைத்த கண்ணீரைப் போல பல வன்கொடுமைகள் இங்கு நடக்கின்றன.

வேங்கை வயல் ரணம் ஆறுவதற்குள்ளாகவே சேலம் மாவட்டத்தில் ஒரு தலித் இளைஞன் கோயிலுக்குள் நுழைந்துவிட்டார், அந்த இளைஞனை அவன் பெற்றோர் முன்னால் நிற்க வைத்து, ஒரு அரசியல் கட்சியினுடைய பிரமுகர் கெட்ட வார்த்தைகளால் அவ்வளவு அவமானப்படுத்துகிற ஒரு காணொலி பரவுகிறது. அந்த இளைஞர் குடித்துவிட்டு நுழைந்தார் என சமூக வலைதளங்களில் சிலர் பதிவிடுகிறார்கள்.

அந்த வீடியோவில் திருப்பித் திருப்பி படுமோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே, ‘‘நீ இந்தக் கோயிலுக்குள் நுழைந்ததால், இந்த ஊர்ல இருக்கிறவன் பாதிப் பேர் கோயிலுக்கே வரமாட்டேன் என்கிறான்’’ என்று சொல்கிறார். அப்படியான மனநிலை அந்த மக்களுக்கு இருந்தால், அந்த மக்களைத் திருத்துகிற பணியைத்தான் அரசியல் பிரமுகர் செய்ய வேண்டும். அத்தனை பேர் மத்தியில் இளைஞனை அவ்வளவு மோசமாகத் திட்டுவதை எதைச் சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. கட்சி அவரைத் தற்காலிகமாக நீக்கம் செய்ய, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அவர் கைது செய்யப்படுகிறார்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டும்தான் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடக்கிறதா என்றால், இல்லை என்பதுதான் யதார்த்தம். யாரோ சில நபர்கள் மட்டும்தான் இதைச் செய்திருக்கிறார்களா என்றால், இல்லை என்பதே நிதர்சனம். தலைவர்களும் எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் தொடர்ச்சியான இந்தப் பொது மனநிலையை மாற்றுவதற்குப் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் சாதி என்கிற விஷப் பாம்பின் குட்டிகள் பல்கிப் பெருகிக்கொண்டேதான் இருக்கின்றன. கண்ணுக்குத் தெரியா விஷம் ஒன்று காற்றில் பரவிக்கொண்டேதான் இருக்கிறது.

சொல்வழிப் பயணம்! - 17

உற்சாகமான மனநிலையில் இருக்கிற ஒரு மாணவனையோ, ஒரு அரசு ஊழியரையோ, ஒரு பொது மனிதனையோ `நீங்க என்ன ஆளுக?' எனக் கேட்கையில், மரத்திலிருந்து முறிந்து விழுகிற கிளைபோல அந்த மனநிலை உடைந்து கீழே விழுவதை யாராலும் உணர முடிவதில்லை. அந்தக் கேள்வி ஏற்படுத்துகிற உளவியல் சிக்கல் சொல்லி மாளாதது. திறமை, வெற்றி, பழகும் விதம், பதவி, நேசம் இவற்றையெல்லாம் தாண்டி தான் எந்தச் சாதி எனத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படுகிறது? அதைத் தெரிந்துகொள்வதால் என்ன கிடைத்துவிடப் போகிறது. மெல்ல மெல்லப் பேசி ஏதேதோ கேள்வி கேட்டு, சுற்றி வளைத்து, மனதுக்குள்ளாக ஒரு பெரும் திட்டம் தீட்டி சாதியைக் கண்டுபிடிக்கப் பிரயத்தனம் செய்யும் இந்த மனிதர்கள், தங்கள் பெயருக்குப் பின்னால் நான்கைந்து டிகிரிகளைப் போட்டுக் கொள்வதைப் பார்க்கையில் சிரிப்புதான் வருகிறது. எப்படியாவது ஒருவரின் சாதியைத் தெரிந்துகொள்ள வேண்டும் என எண்ணம் தோன்றும் நொடியில், மனிதன் தான் கற்றது, அடைந்தது எல்லாம் நிர்மூலமாகி சிறுமையானவனாகிறான்.

எப்போதோ பார்த்த ஒரு ஆப்பிரிக்கப் படம் ஞாபகம் வருகிறது. விஷவாயுக் கசிவால், ஒரு நகரத்தில் இருக்கிற எல்லா மனிதர்களுமே மரித்துப்போகின்றனர். ஒரேயொரு வெள்ளைக்காரப் பெண் மட்டும் உயிர் பிழைப்பாள். அவள், இங்கு தன்னைப் பார்த்துக்கொள்ள யார் இருக்கிறார்கள், தன்னை கவனிப்பதற்கு யார் இருக்கிறார்கள் என்கிற மனநிலையுடன் தன் ஆடைகளை எல்லாம் அவிழ்த்துவிட்டு நிர்வாணமாகத் தெருவில் நடக்க ஆரம்பிப்பாள். எல்லா வீடுகளும் அவளுடைய வீடுகள். எல்லாக் கடைகளும் அவளுடைய கடைகள். எல்லாத் தெருக்களும் அவளுடைய தெருக்கள். மனநிலை பாதிக்கப்பட்டு ஏதோ ஒரு வீட்டினுள் தன்னந்தனியாகப் படுத்துக் கிடக்கிறாள்.

அப்போது தொலைபேசி சிணுங்குகிறது. உடனே ஓடிப் போய், ஒரு துணியை எடுத்து அவள் தன்னைப் போர்த்திக்கொள்வாள். அவளுக்கு முன்னால் எந்த மனிதரும் இல்லை. எந்த ஆணும் இல்லை. ஆனால், ஒரு தொலைபேசி சிணுங்குகிறது என்றால், யாரோ ஒருவர் அழைக்கிறார். அவர் ஆணாக இருக்கலாம், பெண்ணாக இருக்கலாம், உயிரோடுதான் இருக்கிறார்கள் என்ற உணர்வில், அவள் அந்த ஆடையை எடுத்துப் போர்த்திக்கொள்வாள். தொலைபேசியை எடுத்துப் பேசத் தொடங்குவாள். எதிரில் ஒரு ஆண் குரல். அவள் ரொம்ப ஆசையாக, `நீயும் பிழைத்துவிட்டாயா?' என்று கேட்பாள். `ஆமாம், ஒரு லிப்ட்டில் மாட்டிக் கொண்டேன் அதனால் இந்த விஷவாயுக் கசிவிலிருந்து நான் தப்பித்துவிட்டேன்' என்பான். `நானும் லிப்டில் மாட்டிதான் பிழைத்தேன். நாம் உடனடியாக சந்திக்க வேண்டும்' என்பாள்.

அவள் மிக ஆசையாக `உனக்கு என்ன வயசு?' என்று கேட்பாள். அவன் 28; அவள் 22 எனப் பகிர்ந்துகொள்வர். இவ்வளவு கொடுந்துயரத்திலும், சிறிய பூ அவர்கள் இருவரின் மனதிலும் பூக்கும். ஒரு கடற்கரை ஓரத்தில் அவள் கடலைப் பார்த்து அமர்ந்திருப்பாள். மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து வரும் அவன், அவளது தோளைத் தொடுவான். மிகுந்த காதலோடும் மிகுந்த காமத்தோடும் மிகுந்த அன்போடும் அவள், அவனைத் திரும்பிப் பார்ப்பாள். பார்த்த நொடி, அந்தக் கையை மின்சாரம் பட்டதுபோல உதறித் தள்ளுவாள். என்ன செய்வதென்றே தெரியாதபடி பதறுவாள். ஏனென்றால் அப்படித் தொட்டவன், ஒரு கறுப்பின இளைஞன். மனிதகுலமே அற்றுப் போய் ஒரே ஒரு மனிதன்தான் உயிர் பிழைத்திருக்கிறான் என்கின்ற நிலையிலும்கூட, அவன் கறுப்பினத்தைச் சேர்ந்தவன் என்பதனால் அவள் அப்படித் துடித்துப்போவதாக முடியும்.

தெரிசை சிவா எழுதிய `சடல சாந்தி' கதை அளவுக்கு, சாதியக் கொடுமைகளை உச்சமாக விவரித்த ஒரு தமிழ்க் கதையை நான் வாசித்ததில்லை. இந்தக் கதை தந்த உடல் அதிர்வும் நடுக்கமும் இன்னமும் நிற்கவில்லை. இந்தக் கதையைப் படித்த, கேட்ட பல வாசகர்களுக்கும் இந்த மனநிலையில்தான் இருந்திருக்கிறார்கள் என்பதை, பல நேர் பேச்சுகளில், பல குறுஞ்செய்திகளில், பல கட்டியணைப்புகளில் இன்னும் உணர்ந்துகொண்டே இருக்கிறேன்.

சக மனிதர்கள் சாதிய உணர்வை விட்டுவிட வேண்டும் என்று மனப்பூர்வமாக உணர முற்பட்டாலும், நம் தேசத்தின் இறுக்கமான சமூகக் கட்டமைப்பும், சாதியக் கட்டமைப்பும் அவர்களை அந்தக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவே ஆசைப்படுகிறது. நிர்பந்திக்கிறது. அதைப் பற்றிக்கொண்டால்தான் நீ அங்கீகரிக்கப்படுவாய் என அவனை அச்சுறுத்துகிறது. பலரும் அதற்கு பலியாகிறார்கள். சாதாரண மனிதர்கள் இதற்குப் பலியாவது ஆச்சரியமல்ல. படைப்பாளிகள், அரசு அலுவலர்கள், உயர் அதிகாரிகள் எனப் பலர் சாதிய உணர்வுகளில் தங்களுடைய வாழ்நாள் முழுக்க இருப்பதை நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அரசு அலுவலர்கள், உயர் பொறுப்பு வகித்தவர்கள் ஓய்வு பெற்ற மறுநாளே தேடிப் போகின்ற இடம், சாதி மற்றும் மத நிறுவனங்கள் அல்லது கட்சிகள். அவரது 30 - 35 ஆண்டுக் காலம் அரசுப் பணியில் அவரை ஒரு பொது மனிதன் என்று நம்பிக்கொண்டிருந்தது எவ்வளவு தவறான விஷயம் என்று நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். அவர்கள் ஒவ்வொரு விநாடியும், ஒவ்வொரு நிமிடமும், தங்களுடைய சாதிய உணர்வுகளுடன்தான் இருந்திருக்கிறார்கள்.

சொல்வழிப் பயணம்! - 17

கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்த இரண்டு முக்கியமான படைப்புகள் என சித்தலிங்கையாவின் `ஊரும் சேரியும்', அரவிந்த மாளகத்தியின் `கவர்ன்மென்ட் பிராமணன்' ஆகிய புத்தகங்களை என்னால் பரிந்துரைக்க முடியும். இந்தத் தன்வரலாற்று நூல்களை வாசிக்கும்போது, ஒருவன் சாதிய அடையாளத்தால் எவ்வளவு துயரத்திற்குத் தன் வாழ்நாளை ஒப்புக்கொடுக்கிறான் என்பதை நம்மால் உணர முடியும்.

பக்கம் பக்கமாக எழுதித் தீர்த்துவிட்டோம். பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. சிறைத் தண்டனை, அறிவுரை, திரைப்படம், நாடகம், புத்தகம், நட்பு, காதல், அறிவியல், தத்துவம், விளையாட்டு என பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகும் சாதி இன்னும் தக்கவைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கீழ்வெண்மணி, மேலவளவு என்று எரித்துக் கொன்றதும், வெட்டி வீசியதும் ஊர் அடையாளங்களுடன் தழும்புகளாக நம் சமூக வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.

சொல்வழிப் பயணம்! - 17

இன்றும் எங்காவது தினம் தினம் ஒரு ஒடுக்குமுறை நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களைத் தாண்டி மற்றவர்களுக்கு இது வெறும் செய்தியாக மட்டுமே இருக்கிறது. எளிதாக அடுத்த வேலையைக் கவனிக்கத் தொடங்குகிறோம். இதுபோன்ற கொடுமைகளுக்கு ஏதாவதொரு வகையில் நம் எதிர்ப்பைப் பதிவு செய்வது மிக அவசியம். ஒரு படைப்பாளியாக என்ன செய்வீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. பல படைப்புகள்தான் இதுபோன்ற வரலாற்றுத் துயரங்களை ஆழமாகப் பதிவு செய்திருக்கின்றன. உடனடி எதிர்வினை அல்ல அது. ஆனால், அந்தத் துயரின் சாட்சியமாக, ரத்தமும் சதையுமான பதிவாக அது இருக்கும்.

நம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பான சூழல் இருக்கிறது. ஆனால், ‘அத்தனை மனிதர்களும் நம்மைப் போலவே பாதுகாப்பாக வாழ்கிறார்கள்’ என்று நினைக்கிற மனநிலை சாதிய மனநிலையைப் போன்றதுதான். உலகத்தின் எந்த மூலையிலிருக்கும் ஒரு நாட்டிற்குப் போய் குடியேறினாலும்கூட, அங்கு நம் சாதிக்காரர்கள் யார் இருக்கிறார்கள், அவர்களோடு எப்படி உறவு வைத்துக்கொள்வது என்ற தேடல்கள் தொடர்கின்றன.

சாதி என்கிற மிகச்சிறிய சொல்லைத் துடைத்தெறிய நாம் இன்னும் எத்தனை பலிகொடுக்கப் போகிறோம் என்கிற அச்சம் நம் தூக்கம் கலைக்கிறது. எல்லாமும் பெற்ற ஒரு மனிதன், எதற்கும் பயனற்ற சாதியைத் தக்க வைத்துக்கொண்டிருப்பது எதற்காக என்ற கேள்விக்கு எப்போது விடை கிடைக்கும்?! மனித மனதில், தான் மற்றொருவனைவிட உயர்ந்தவன் என்கிற எண்ணம் புரையோடிக் கிடக்கிறது. தான் உயர்ந்தவன் என நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயம் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. எதுவுமே பெருமிதமாக அதற்குக் கிடைக்காதபோது, தன் சாதியைப் பற்றிக் கொள்கிறான். நினைத்துப் பார்த்தால் சிரிப்பை வரவழைக்கிற விஷயம். ஆனால், அதன் வேர்கள் ஏற்படுத்துகிற ஆபத்து சகித்துக்கொள்ள முடியாதது.

கீழ் வெண்மணியில் எரிந்துபோன விவசாயக் கூலிகளுக்காகக் கவிஞர் இன்குலாப் எழுதிய வரிகள்தான நினைவுக்கு வருகின்றன. இடதுசாரி மேடைகளின் கலை இரவுகளில் பொங்குகிற ஆதங்கத்தோடு தோழர் ஒருவர் பாடுவார். `நாங்க எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க!' கேட்கிற பலர் கண்களில் கண்ணீர் நிறைந்து நிற்கும். ஆம், பற்றி எரிகிற நெருப்பில் நம் உடன் பிறந்தவர்கள் எரிகையில், மலம் கலந்த நீரைக் கண்டு, நம் உடன் பிறந்தவர்கள் தொண்டை வற்றிப்போய்க் கத்துகையில் நாம் எங்கே போனோம்?

- கரம்பிடித்துப் பயணிப்போம்