
ஓவியங்கள்: மினிமலிக்ஸ்
சில தினங்களுக்கு முன்னர் மூணாறு சென்றிருந்தேன். உடுமலைப்பேட்டையிலிருந்து 15-20 கி.மீ ஒரு மலையை நோக்கிய பாதையில் கார் சென்றது. வன ரூபமென முன்னிற்பதாக இருந்தது அந்த ஒத்தையடிபோன்ற தார்ச்சாலை. காரின் முன்னிருக்கையில் அந்த மலையினது காற்றின் பாதைகளைப் பார்த்தபடி சென்றேன். வனமென்றாலே வனத்தின் விலங்குகளும்தான். இதுபோன்ற காட்டுப் பகுதியில் செல்கையில் இப்போதெல்லாம் மனதில் இயல்பாகவே ஒரு பயம் தொற்றிக்கொள்கிறது. ஏதாவது யானை குறுக்கே வந்து நின்றுவிடுமோ என்கிற பயமல்ல. மனிதன் வீசியெறிந்த பீர் பாட்டில் காலில் தைத்து, மெல்ல தன் மரணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிற யானையின் நீர் கசியும் கண்களை எதிர்கொள்ள நேரிடுமோ என்கிற பயம்தான்.
மனிதனின் ஆகப்பெரிய சிறுமைகளில் ஒன்று, இயற்கைக்கு எதிராக நின்று இயற்கையைச் சிதைக்க முனைவதுதான். மனிதன், காட்டில் ஆகிருதியுடன் சுற்றித் திரியும் யானையை அழைத்து வந்து பாகனுடன் நிற்க வைத்து யாசகம் கேட்கவைத்து, வேடிக்கை காட்டவைத்து, கோயிலுக்குமுன் வேடிக்கைப் பொருளாக நிற்க வைத்து இயல்பைச் சிதைப்பான்.
`யானைகளைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பெண்களின் ஞாபகம் வரும். தங்களின் பலம் அறியாதவர்கள் அவர்கள்!' எனப் பிரபஞ்சன் சொல்லியிருப்பார். யானையை வைத்து நடத்தும் கேளிக்கைகளைப் பார்க்கையில் இந்த வரிகள்தான் நினைவுக்கு வரும்.
எனது 3 மணிநேர அந்தப் பயணத்தில், வனவிலங்குகள் அலைகிற, தண்ணீர் குடிக்கிற இடங்களைக் கடந்தே சென்றேன். வழியில் எந்த விலங்கையும் நான் பார்க்கவில்லை. நாம் விலங்குகளின் வாழ்விடத்தில் ஒய்யாரமாக இப்படிப் பயணம் செல்கிறோம். இதுவே, விலங்குகள் நம் வாழ்விடத்தில் இப்படியொரு பயணம் வந்தால் என்னவாகும் என நினைத்தேன். `ஊருக்குள் புகுந்த யானைகள் அட்டகாசம்' என்கிற தலைப்புச் செய்திதான் வரும். நிஜத்தில் நாம் வரைபடத்தை எடுத்துப் பார்த்தால், `வனத்திற்குள் புகுந்த மனிதர்கள் அட்டகாசம்!' என்கிற நிஜம் புரியும். விலங்குகளின் வாழ்விடம், வழித்தடம் இரண்டையும் அழித்து நாம் குடியிருப்புகளை உருவாக்கிக்கொண்டோம். வழித்தடங்களில் நாம் குடியிருப்புகளை அமைத்துவிட்டோம். நம் பேராசைக்கு இயற்கையை அள்ளி விழுங்கிக் கொண்டிருக்கிறோம். வனத்தையும், விலங்குகளையும் தனக்கு அடியாமைக்கிட நினைத்ததுதான் இந்த அழிவுகளுக்கான ஆதிப்புள்ளி.

சில வருடங்களுக்கு முன், யானையின் மீது எரியும் டயரைத் தூக்கி எறிந்து, யானை எரிந்துபோவதை மனிதர்கள் குரூரத்தோடு பார்த்த அந்தக் காட்சி மனித குரூரத்தின் உச்சம். மனிதர்கள் மட்டும்தான் இப்படி விலங்குகளின் இடத்தில் அராஜகமாக நுழைந்து அவற்றின் உலகை அழித்து தங்களின் ஆசைகளுக்காக, தற்காலிகப் பெருமிதங்களுக்காக விலங்குகளை வேட்டையாடிக்கொண்டே இருக்கிறார்கள். ஜமீன்தார் வீடுகளில் காட்டெருமையின் கொம்புகளை, யானையின் தந்தத்தைப் பார்க்கையில் அருவருப்பில் மனம் குமட்டுகிறது. பேராசையில் நிகழ்த்தப்பட்ட கொலைத் திருட்டின் சாட்சியங்கள் அவை.
கோவிட் பெருந்தொற்றுக்கு முன்பான தினமொன்றில் என் உறவினர் யானைக்குளத்துக்கு அழைத்தார். அது ஒரு ஊற்றுப்பகுதி. அங்குள்ள மதில் அருகே நின்று பார்த்தால், யானைகள் அதிலிறங்கி, குளித்து விளையாடிவிட்டு, அங்கிருக்கிற பாறைகளில் உடலை உரசி குழந்தைகள் மழைநீரில் விளையாடுவதைப் போல விளையாடிச் செல்லும். வாழ்வில் நான் கண்ட ஒப்பற்ற தரிசனம் அது. ஆசையும், குதூகலமுமாகக் கிளம்பிச் சென்றேன். பல மணி நேரம் காத்திருந்தோம். குழந்தைகள் மழைநீரில் விளையாடுகிற காட்சிகள் நிகழவேயில்லை. அந்தப் பகுதியில் கூட்டமாக வந்து சுதந்திரமாகக் கொண்டாடிச் செல்கிற யானைகள் ஏன் வரவேயில்லை என்பது அதிர்ச்சியாகவும் கோபமாகவும் குற்றவுணர்வாகவும் இருந்தது.
ஜெயமோகனுடைய `யானை டாக்டர்' என்கிற நிஜக் கதையைப் பலமுறை நான் சொல்லியிருக்கிறேன். டாக்டர் கே என்கிற கிருஷ்ணமூர்த்தி கால்நடைப் பராமரிப்புத் துறையில் பணிசெய்த ஒரு மருத்துவர். கால்நடைப் பராமரிப்புத் துறையில் வேலை பார்த்த எல்லா மருத்துவர்களையும் வரலாறு ஞாபகம் வைத்துக்கொள்ளவில்லை. வனத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தவரும், யானைகளுக்குக்காகத் தன்னை அர்ப்பணித்தவருமான ‘டாக்டர் கே’வை வனமும் அதன் மைந்தர்களும் வன தெய்வமென என்றும் நினைவில் வைப்பர். ஓய்வுபெற்ற கால்நடைப் பராமரிப்புத்துறை டாக்டராக யாருக்குமே அவரை நினைவிருக்காது.
பச்சரிசி சாதத்தை வடித்துக் கொட்டியது போன்று புழுக்கள் நெளிந்துகொண்டிருக்கின்ற எப்போதோ மரித்துப்போன ஒரு யானையின் உடம்பில், முட்டி வரை ரப்பர் ஷூக்களை மாட்டிக் கொண்டு அந்த யானைக்குப் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர் கே தான் நமக்கு நினைவில் இருப்பார். பல யானைகளுக்கு உயிர்காத்த மீட்பன். மனிதன் வீசிய பீர் பாட்டில்களை, அவர் யானைகளின் சீழ் பிடித்த கால்களிலிருந்து பிடுங்கி எறிந்திருக்கிறார். வன உயிர்களை உறவென நேசித்த வனதேவதையின் மைந்தன் அவர். அடிபட்ட குழந்தை தாயிடம் ஓடுவதுபோல, காலில் பீர் பாட்டில் தைத்த ஒரு யானைக் கன்று 70 கி.மீ ஓடி டாப்ஸ்லிப்புக்கு வந்து, டாக்டர் கே-யை வைத்தியம் பார்க்க அழைத்தது ஒரு வரலாற்று நெகிழ்ச்சி. இவர்போன்ற மனிதம் நிறைந்த மனிதர்கள்தாம், மனித குலம் இயற்கைக்குச் செய்த துரோகத்துக்குத் தங்கள் செயல்களால் பாவ மன்னிப்பு கோருகிறார்கள்.
கரடியைக் காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு வந்து சைக்கிள் ஓட்டப் பழக்குவது ஒரு கொடுமை. அதைக் கைதட்டி வேடிக்கை பார்த்துச் சிரிப்பதும் கொடுமை. யானை டாக்டர் கதையில் சொல்வது போல, ``அந்த நரி சூழ்ச்சி செஞ்சுடுச்சுடா!’’ என்று டெல்லியில் இருந்து இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி சொல்வான். அதற்கு, ``நரியைக் கேவலப்படுத்தாத! எந்த நரியும் சூழ்ச்சி பண்ணி நான் பார்த்ததே இல்லை!’’ என்று சொல்வார். மனிதன் பொதுப்புத்திப் பார்வையை விலங்குகளிடத்திலும் இப்படி நிகழ்த்திவிடுகிறான். பைவ் ஸ்டார் ஹோட்டலில் உட்கார்ந்துகொண்டு எந்த மனிதர்களைக் கவிழ்க்கலாம். எந்தப் பங்குச் சந்தையைத் தரைமட்டமாக்கலாம். எந்த மனிதருடைய வளர்ச்சியை நிர்மூலமாக்கலாம் எனத் திட்டமிடுகிறான்.
எந்த நரியோ, நாயோ ஒரு டீக்கடையிலோ ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலிலோ, அல்லது காட்டுக்குள்ளோ உட்கார்ந்துகொண்டு தீர்மானம் போட்டதாக, விவாதித்ததாக, செயல்படுத்தியதாக இதுவரையிலும் வரலாறே இல்லை. இதை எல்லாவற்றையும் செய்கின்ற கீழ்மையுள்ள விலங்கு மனிதன்தான். ஆனால் இந்தக் கீழ்மை தன்மீது வந்துவிடக்கூடாது என்பதற்காக திரும்பத் திரும்ப, இவை எல்லாவற்றையும் நரி என்றால் சூழ்ச்சி செய்யும், நாய் என்றால் நன்றியோடு இருக்கும், யானை என்றால் அதைப் பழக்கி யாசகம் கேட்கலாம் எனப் பல்வேறு தந்திரங்களைத் தன் வாழ்நாள் முழுக்க அவன் இயற்கைக்கு எதிராகவும், விலங்கினங்களுக்கு எதிராகவும் செய்துகொண்டே இருக்கிறான். இரண்டரை வருடம் வீரப்பனோடு இருந்து, அதற்குப் பிறகு 20 வருடங்கள் நியாயமற்ற ஆயுள் தண்டனை பெற்று இப்பொழுது வெளியே வந்திருக்கும் அன்பு ராஜிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சிலிர்க்க வைக்கிற ஒரு அனுபவத்தைச் சொன்னார்.
ஒரு இரவில், சமைப்பதற்காக மூன்று மலைக்கு நடுவில் இருக்கின்ற ஒரு இடத்தில் அடுப்பு பற்ற வைக்கிறார்கள். அப்படிப் பற்றவைத்துச் சோறு வெந்துகொண்டிருக்கிற அந்தச் சமயத்தில், அந்த மலையிலிருந்து வெறித்தனமாக ஒரு யானை ஓடி வருவதை வீரப்பன்தான் கவனிக்கிறார். அவர் `யானை டா யானை டா' என்று கத்துகிறார். எல்லோரும் தலைதெறிக்க பக்கத்தில் இருக்கிற புதர்களை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் ஓடுவதற்குக்கூட அவகாசம் அளிக்காமல் அந்த யானை அவர்களைச் சமீபித்துவிடுகிறது. வேறு வழியில்லாமல் நேருக்கு நேராக அதனுடைய வட்டகத்தைப் பார்த்து வீரப்பன் சுடுகிறார். இரண்டு, மூன்று ரவுண்டு அவர் சுட்ட பிறகு கொஞ்ச தூரம் ஓடிப்போய் அந்த யானை கீழே விழுகின்றது. இறந்து போன யானையைப் பார்க்க அவர்கள் எல்லோரும் போகிறார்கள். யானையின் உடம்பில் குண்டடிபட்ட இடத்திலிருந்து ரத்தம் கொப்பளிக்கின்றது. ஒரு புகை வருகின்றது, தோட்டாக்களில் இருந்து வந்த புகை. எல்லாவற்றையும் பார்க்கிறபோதுதான், வீரப்பன் சொல்கிறார், ``இந்த யானை நாம சுடலன்னாலும் செத்துப்போயிருக்கும்டா!' என்று சொல்லுகிறார். அவர்கள் யானையின் உடலின் மீது தங்கள் கண்களைப் பாய விடுகிறார்கள். அந்த யானையின் உடம்பில் கிட்டதட்ட 80-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் ஏற்கெனவே பட்டதற்கான வடுக்கள் இருக்கின்றன. அப்படியென்றால் அந்த யானையின் தந்தத்தை எடுப்பதற்காக, ஏற்கெனவே அந்தக் காட்டில் உள்ள வனக் கொள்ளையர்கள் அல்லது தந்தத்தைக் கடத்தி விற்பவர்கள் அத்தனை முறை முயன்று மரணத்தின் கடைசி நொடியைக் கடப்பதற் காகத்தான் அந்த யானை அந்த மலையிலிருந்து தலைதெறிக்க ஓடி வந்திருக்கிறது. ஒரு வனத்திற்குள் இவ்வளவு ஆகிருதியாக நடமாடும் ஒரு யானையைக் கொல்வதற்கு அதன்மீது 80 தோட்டாக்கள் பிரயோகிக்கப் பட்டிருக்கிறது என்றால் மனிதனின் பேராசைக்கு என்னதான் தீர்வு?

நண்பர்களே, இன்னும் கொஞ்சம் நாள்களில் தமிழில் `எலிபன்ட் விஸ்பரர்' என்று ஒரு புத்தகம் வரப்போகிறது. அது ஒரு புனைவற்ற எழுத்துகளைக் கொண்ட புத்தகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். என் மகள் மானசி அந்த புத்தகத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் கிட்டத்தட்ட அவளுடைய அறை முழுக்க சின்னச் சின்ன யானைப் பொம்மைகளை வைத்து யானைகளிடையே வாழ்ந்துகொண்டிருப்பதை நான் பலமுறை கவனித்துக் கடந்திருக்கிறேன். அவள், யானைகள் பற்றி எழுதியிருக்கின்ற ஆய்வாளர்களுடனும், யானைகளைப் பற்றித் தெரிந்திருக்கின்ற நண்பர்களுடனும் அது சம்பந்தமாகப் பேசிக்கொண்டே இருக்கிறாள்.
ஆப்பிரிக்க நாட்டில், ரிசர்வ் ஃபாரஸ்ட் போன்ற ஒரு காட்டுக்குள் 17 யானைகள் வேறு வழியில்லாமல் சாகப்போகின்றன. அந்த யானைகளை யாராவது காப்பாற்ற முடியுமா என்கின்ற கோரிக்கையை ஏற்று அவற்றைக் காப்பாற்றுவதற்காக லண்டனிலிருந்து போகிற ஒரு மனிதனைப் பற்றிய, மனிதர்களுக்கும் யானைகளுக்கும் உள்ள உறவையும் அன்பையும் பற்றிய புத்தகம் அது. அவருடைய இறப்பின்போது காட்டுக்குள் இருக்கிற அந்த யானைகள் ஒவ்வொன்றாக வந்து அவருக்கு அஞ்சலி செலுத்திய ஒரு காட்சி மறக்க முடியாததாக இருக்கிறது. புனைவைவிட உச்சத்தில் இருக்கின்ற இந்தக் காட்சிகள் நம்மை அதிசயிக்க வைக்கின்றன.
இவ்வளவு அலாதியான ஒரு விலங்கை, மனிதரைவிடப் பல மடங்கு மேன்மையான விலங்கை, நாம் நம்முடைய சந்ததிகளுக்கு, `ஒரு காலத்தில் யானை என்று ஒரு விலங்கு இருந்தது’ என்று சொல்லப் போகிறோமா?! இப்படி ஒரு மிகப்பெரிய துயரம் என்னிடம் இருக்கிறது. கோவை சதாசிவம் காடுகளைப் பற்றியும், யானைகளைப் பற்றியும் நிறைய எழுதிக்கொண்டிருப்பவர். ஒரு காட்டின் அருகேயிருக்கிற பழங்குடியினரின் சிறிய வீட்டை நோக்கி துவம்சம் செய்யும் வேகத்தில் வருகிறது ஒரு யானைக் கூட்டம். மனைவியோடும் குழந்தைகளோடும் அந்தத் தொல்குடி மனிதன் வெளியே வந்து, அந்த யானைக்கு முன் மண்டியிட்டு தன்னுடைய வயிற்றில் அடித்துக் கொண்டு, ``எங்க வயித்தில் அடிச்சிடாத! எங்கள அனாதையாக்கிடாத!’’ என்று கெஞ்சுகிறான். தந்தை யானை நின்று நிதானித்துவிட்டு அந்தக் குடிசையைத் தாக்காமல் திரும்பிப் போய்விட்டதை கோவை சதாசிவம் பதிவு செய்திருக்கிறார்.
இவ்வளவு இரக்கம் நிறைந்த, அன்பு கொண்ட விலங்கிடம் நாம் எவ்வளவு குரூரமாக நடந்துகொள்கிறோம். மனிதனின் அளப்பறிய ஆசை, இந்தக் காடுகளை எல்லாம் அழித்து பிளாட் போட்டால் என்ன? இந்த மலைகளை எல்லாம் அழித்து ரிசார்ட் கட்டினால் என்ன? அப்படி என்றால் இந்த மலைகளிலும் இந்தக் காடுகளிலும் யார் வந்து தங்குவார்கள்.
நதிகளையும் விலங்குகளையும் வனத்தையும் கொண்டதாக நம்முடைய தமிழ்நாடு இருக்கிறது. ஆனால் இந்தப் பேராசை பிடித்தவர்களின் வெற்றுப் பெருமிதங்களுக்கு இயற்கையை நாம் சூறையாடிக்கொண்டே இருக்கிறோம். ஒரு அருவருப்பின் நீட்சியாக இது போய்க்கொண்டே இருக்கிறது. இதை எப்போது தடுத்து நிறுத்தப் போகிறோம்? விலங்குகளின் குணத்தை அவற்றின் கீழ்மையைச் சுட்டிக் காட்டுகிற குறை சொல்கிற நாம் நம்மை எப்போது சரிசெய்துகொள்ளப் போகிறோம். வனம் நம்மை ரிலாக்ஸ் செய்கிற இடமல்ல. வன உயிர்கள், நாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பொம்மைகள் அல்ல. காரிலோ, பைக்கிலோ காடுகளில் உலா செல்கையில் நன்றாகக் கவனித்துக் கேளுங்கள், ஒரு ஓலம் கேட்கும். அது வனத்தாயின் அழுகுரல். தாயின் ஓலத்தை நிறுத்த வேண்டியதுதான் மனிதனின் தலையாய கடமை.
- கரம்பிடித்துப் பயணிப்போம்