Published:Updated:

சொல் வழிப் பயணம்! - 2

சொல் வழிப் பயணம்!
News
சொல் வழிப் பயணம்!

ஷோபா சக்தியின் புகழ்பெற்ற கதைகளில் ஒன்று, `விலங்குப் பண்ணை.’ புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவன், இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பத்திரிகையில் செய்தி வரும்

சில வருடங்களுக்கு முன்பு கேரளாவின் அட்டப்பாடியில் திருட்டுக் குற்றம் சுமத்தி மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட மது என்ற பழங்குடி இளைஞனின் புகைப்படம் சமூக வலைதளமெங்கும் விரவிக் கிடந்தது. புகைப்படம் வைரலான நேரத்தில் அவன் மரித்துப்போனதாகச் செய்திகள் வெளியாகின. ஒரு கடையில் அரிசி திருடியதாக அடித்துக் கொல்லப்பட்டிருக் கிறான் மது. பிரேதப் பரிசோதனையில், மதுவின் வயிற்றில் ஒரு பருக்கை உணவில்லை என அறிக்கை வந்தது. பரிதாபம் வழிந்து இருந்த மதுவின் கண்கள், இன்றுவரை தேசத்தை நோக்கி ஏதோ ஒரு கேள்வியை முன்வைத்து மூடாமல் விழித்திருப்பதாகவே எனக்குத் தோன்றும்.

பசி - பிரபஞ்சத்தின் அத்தனை உயிர்களுக்குமான பெருவலி. பசி என்கிற கொடும் பிராணி நம்முள் நிகழ்த்துகிற பாடுகளை அடக்குவது சுலபமானதல்ல. பசியின் பொருட்டே ஆதி மனிதனின் பயணம் தொடங்கியிருக்கக்கூடும். பசி தீர்ந்துவிட்ட பொழுதுகளில்தான் மனிதன் பிற சாத்தியங்களுக்கு ஆயத்தமாகிறான்.

ஷோபா சக்தியின் புகழ்பெற்ற கதைகளில் ஒன்று, `விலங்குப் பண்ணை.’ புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவன், இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பத்திரிகையில் செய்தி வரும். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த ஜெ.அன்ரனி அதிர்ச்சியடைவான். இறந்திருந்தவன் பெயர் ம.அன்ரனி. இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். முதல்முதலாக அவன் ம.அன்ரனியைச் சந்திக்கிறபோது, அவன் இவனிடம் சொன்ன வார்த்தை, `பசிக்குது.’ இவனும் வறுமையால் வாடிய குடும்பம். அவர்கள் அந்தச் சிறுவயதில் பசிக்கொடுமை தாங்காமல், அருகிலிருந்த காடுகளில் சென்று நுணாப் பழம் பறித்து சாப்பிட்டிருப்பார்கள். தேவாலயங்களில் அரங்கேற்றப்படும் `லாஸ்ட் சப்பர்’ நாடகங்களில் சாப்பாடு சாப்பிடும் திட்டத்துடன் மட்டுமே நடிப்பர். ம.அன்ரனி சில காலம் கழித்து இயக்கத்தில் சேர்ந்து பின், சென்னையில் இருவரும் எதேச்சையாகச் சந்தித்துக்கொள்வர். அப்போதும் அவன், `அறையில் நண்பர்கள் சாப்பிடல, காசு இருக்கா?’ எனக் கேட்பான். இப்போது அவன் இறந்த அந்தப் புகைப்படத்திலும், அவன் சாப்பிடுவதற்காகத் தட்டைக் கையிலேந்தி, சாப்பாட்டை உதட்டுக்கு எடுத்துச் சென்ற நேரத்தில் கொல்லப்பட்டிருப்பான். துப்பாக்கிக் குண்டுகள் அவன் வயிற்றைக் கிழித்திருக்கும். அவன் கொல்லப்பட்டது குறித்த அத்தனை செய்திகளும் தெளிவாக எழுதப்பட்டிருக்கும். `அவன் வயிற்றிலிருந்த பசி என்கிற தேவாங்குக்கும் நரிக்கும் இடையேயான புசுபுசுவென்ற வெண் மயிர்கள் கொண்ட மிருகத்தைப் பற்றி மட்டும் எந்தக் குறிப்புமில்லை’ என்பதாக அந்தக் கதையை ஷோபா சக்தி முடித்திருப்பார்.

சொல் வழிப் பயணம்! - 2

பசித்திருக்கிற விழிகள் கடத்துகிற வேதனையை வேறெதுவுமே நிகழ்த்திடுவதில்லை. 1960 காலகட்டத்தில் சீனா - இந்தியா போரின்போது ஏற்பட்ட பஞ்சம் இந்திய வரைபடமெங்கும் நிகழ்த்திய சதிராட்டம் சொல்லி மாளாதது. ஒருவகையில் மனிதன் தன் பசியுடன் நிகழ்த்தியதுதான் அவன் வாழ்வின் முதல் போராட்டம். பசியை உணராதவர்கள் வாழ்க்கையில் எந்தப் போராட்டக் குணத்தையும் அடையமாட்டார்கள் என அடிக்கடி தோன்றுவதுண்டு.

பலருக்கும் ஒரு வேளைச் சோற்றின் ரணம் தெரிந்திருக்கும். அவர்கள் பசி என்கிற ஆக்டோபஸின் அத்தனை கரங்களாலும் இறுக்கப்பட்டிருப்பர். நண்பர்களின் வீடுகளுக்கு சாப்பாட்டு நேரத்தைக் கணக்கிட்டு சைக்கிள் மிதித்திருப்பார்கள். அன்று, அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் சென்று பசியாற்றிக்கொள்கிற சூழல் இருந்தது. காசு, சொத்து, புகழ் சேர்க்கும் வெறியைவிட எப்படியாவது பசியைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற தணியாத தாகம் எல்லோருக்கும் இருந்தது.

பீகாரின் எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்தவனை, சென்னையின் புறநகரில் தஞ்சம் புகுந்து கட்டட வேலையைச் செய்ய வைப்பது பசிதான். நம் நாடோடிக் கதைகள் பலவற்றில் பிரதான பாத்திரமாக இருப்பது பசியே! பஞ்சம் பிழைக்க தூரதேசங்களுக்குக் குடும்பம் குடும்பமாகக் கிளம்பிச் சென்ற கதைகளை நம் மூதாதையர்கள் துயரத்தின் சுவடுகளுடன் சேர்த்துச் சுமந்திருக்கிறார்கள்.

பிரபஞ்சமெங்கும் பசி விரவிக்கிடந்ததைப் போலவே பசியைப் போக்கும் மனிதர்களும் உண்டு என்கிற சமன்பாடுதான் அன்றைய காலத்தின் நம்பிக்கையாக இருந்தது. கிராமத்தின் திண்ணைகள் இருந்தன. அந்தத் திண்ணையில் வழிப்போக்கர்கள், யாசகர்கள் அமரலாம். அவர்களுக்கு வீட்டிலிருப்பவர்கள் மோர், சாப்பாடு கொடுக்கும் வழக்கமிருந்தது. நவீனமாக வீடு கட்டத் தொடங்கியதும், நாம் முதலில் இடித்தது திண்ணையைத்தான்! இரும்பு கேட் போட்ட வீடுகளில் நாம் வாழத் தொடங்கிவிட்டோம். உணவுகள் பரிமாறிக் கொண்ட, பசியாற்றிக்கொண்ட அண்டை வீடுகள் அந்நியமாகிவிட்டன. யாசிக்கும் மனிதர்களுக்கு பசியை ஆற்றுவதைத் தாண்டி அச்சத்துடன் அவர்களை அணுகும் போக்கு அதிகரித்துவிட்டது.

`நாய்கள் ஜாக்கிரதை’ என பயமுறுத்துகிற வீடுகள் நாகரிகமாகிவிட்டன. இரும்பு கேட்டைத் திறந்து அந்த வீடுகளில் நுழைந்து, `பசிக்கிறது’ என யாரிடமும் கேட்க முடியாது. சக மனிதனின் பசிக்குள் பிரவேசிக்கக்கூடாது, சக மனிதனின் வறுமையில் பங்கெடுக்கக்கூடாது, நம் சுக வாழ்க்கையில் அவர்கள் நுழைந்திடக்கூடாது என்ற மூன்று இரும்பு கேட்டுகளை மனதிற்குப் போட்டு வைத்துவிட்டோம்.

இரவு நேரத்தில் யாசிக்கும், `ராப் பிச்சைக்காரர்கள்’ பற்றி இந்தத் தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஜக்கம் என்றொரு ராப்பிச்சைக்காரர் சிறுவயதில் எங்கள் ஊருக்கு வருவார். ‘ஒழுங்காக சாப்பிடவில்லை என்றால் அவரிடம் பிடித்துக்கொடுத்துவிடுவதாகச் சொல்லி’ அம்மா பயமுறுத்துவார். அவர் மக்களிடம் உரிமையோடு சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டு, அங்கு தெருவிலிருக்கிற சில நாய்களுக்கும் அந்த உணவைப் பகிர்ந்துகொடுத்துவிட்டுச் செல்வார். ஜக்கம் என்கிற மனிதனை `சக மனிதனிடம் கெஞ்சினாலும் பரவாயில்லை. பசியாற்றிக்கொள் எனக் கட்டளையிட்டது எது’ எனத் தோன்றுவதுண்டு. நீண்ட தடியோடு நாய்களை விரட்டிக்கொண்டு ஜக்கம் வருகிற இரவுகள் இப்போது இல்லை. அல்லது ஜக்கம் போன்ற ஜீவன்கள் வெளியே வருவதேயில்லை.

இந்த தேசம் பசியவற்றவர்களின் தேசமாகிவிட்டதா என்றால், `நிச்சயம் இல்லை’ என்கிற உண்மை உங்கள் முகத்தில் அறையும். இன்றும் பசித்த வயிறுகள் தேசமெங்கும் அலைந்து கொண்டுதானிருக்கின்றன. மாநகரத்தின் `சப் வே’க்கள் தனி உலகம். அங்கு நாள் முழுவதும் பெல்ட்டுகளை, கீ செயின்களை விரித்து வைத்திருப்பவர்கள் யாரிடமாவது விற்றுவிட நினைப்பது தங்கள் பசியைத்தான். குப்பைத் தொட்டிகளைக் கிளறிக் கிளறி சாப்பிடுவதற்கு எதையாவது தேடும் மனிதர்களைத் திருடர்களாக மட்டுமே கற்பனை செய்துகொள்கிறவர்கள் பல பேர். பேருந்து நிலையங்களில், ‘யாரின் பார்வையாவது நம்மீது விழுந்து நம் பசி அகலாதா’ எனக் காத்துக்கொண்டிருக்கிற குழந்தைகளின் கண்களை நம்மால் எதிர்கொள்ள முடியுமா? இரும்பு கேட்டுகள் இவையனைத்தும் நடக்காதது போல நமக்கு மறைத்துவிடுகின்றன.

சோறு, பசி என்றால் நம் அனைவருக்கும் அம்மாக்களின் ஞாபகம்தான் வரும். என் அம்மா பெயர் தனம்மாள். அவர் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன், ஆர்.ஆர்.சீனிவாசன் என் அம்மாவை எடுத்த புகைப்படம் எப்போதும் என் நினைவை விட்டு அகலாதது. சாப்பிட்டு முடித்து பருக்கைகள் கையிலிருந்து விழாத கையுடன் அம்மா அந்தப் புகைப்படத்தில் இருப்பார். அம்மாக்கள் என்றால் பருக்கை; அம்மாக்கள் என்றால் சோறு; அம்மாக்கள் அன்னபூரணிகள். அடுப்படிகளில் கிடந்து நொறுங்குவதாலல்ல. அப்பாக்களெல்லாம் செய்வதறியாது திகைத்து நிற்கிற இவ்வுலகில் அம்மாக்கள்தான் நிலம் திருத்திப் பயிர்கள் விதைக்கிற வனதெய்வங்கள்.

சொல் வழிப் பயணம்! - 2

என் அம்மா எப்போதுமே எங்கள் வீட்டின் 4 பிள்ளைகளுக்கு மட்டுமே உலை வைத்து நான் பார்த்ததேயில்லை. பலருக்குமாகவே எங்கள் வீட்டில் உலை கொதித்துக்கொண்டே இருக்கும். அம்மாக்களுக்குத்தான் எந்தப் பாகுபாடும் இருந்ததில்லை. பிள்ளைகள், பிச்சைக்காரர்கள், துறவிகள், விருந்தினர்கள், உயர்தர விருந்தினர்கள், செல்வந்தர்கள், ஏழைகள் என எந்த வேறுபாடுகளும் அம்மாக்களுக்குத் தெரியாது. யாராக இருந்தாலும், `சாப்பிட்டுட்டுப் போங்க’ தான். மீந்த உணவுகளைக்கூட பிரிட்ஜ்களில் அடுக்கி வைத்துவிட்டு மறுநாளும் தன் பிள்ளைகளுக்கென மட்டுமே கொடுக்கிற காலத்துக்கு நாம் நகர்வது அபாயகரமானது. எங்கள் கிராமத்தில் அதிகாலையில் எழுந்து கூலி வேலைக்குச் செல்கிறவர்கள், நீராகாரத்தை, தாங்களும் குடித்து, மண்ணில் குழிதோண்டி ஊற்றி நாய்க்கும் பருகக் கொடுப்பர். அந்த வாஞ்சையான குணத்தை நாம் வெளிக்காட்டாது எங்கு வைத்திருக்கிறோம்.

இலக்கியங்கள் பசியைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்துகொண்டே இருக்கின்றன. சக மனிதர்களுக்கு உணவு கொடுக்கிற கதைகள் எப்போதும் நம் மனதிலிருந்து உடைப்பாக எதையோ வெளியேற்றுகிறது. `சோற்றுக் கணக்கு’ சிறுகதையில், `கெத்தேல் சாகிப்பின் கைகள் அடர்ந்த ரோமங்களுடன் கரடியின் கைகளைப் போல் இருக்கும்’ என ஜெயமோகன் குறிப்பிடுவார். ஆனால், அந்தக் கைகள் அள்ளி அள்ளித் திணிக்கிற அன்னமும், மீன் துண்டுகளும், வாரிக் கொடுக்கிற இறைச்சிகளும், ‘அந்தக் கைகள் தாயின் மூன்றாவது முலை’ என்கிறார் ஜெயமோகன். வாழ்வின் உன்னதமான தருணம், பிறரின் பசியைப் போக்கும் கணங்களாக மட்டுமே இருக்க முடியும்.

திரைத்துறையைச் சேர்ந்த என் நண்பர் ஒருவர் என்னைச் சென்னைக்கு அழைத்திருந்தார். அவர் சாப்பிடுவதைக் கொண்டாடுபவர். என்னையும், என் மனைவியையும் ஒருமுறை சென்னைக்கு விருந்துக்காக அழைத்திருந்தார். எங்களுக்குப் பிடித்த மீன், மட்டன், சிக்கன் என அனைத்தையும் தயார் செய்திருந்தார். அப்போது யாரோ கதவைத் தட்டினார்கள். திறந்தால், இரண்டு இளைஞர்கள் அங்கு நின்றிருந்தனர். `அசிஸ்டென்ட் டைரக்டர் சான்ஸ் கேட்டு வந்தேன் சார்’ என்றான் அவர்களில் ஒருவன். சாப்பிட்டபடியே இயக்குநர், `எந்த ஊர்?’ என்று கேட்டார். `சீர்காழி’, `தென்காசி.’ எதிரிலிருந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் கூறினர். நான் நிமிர்ந்து அந்த இளைஞர்களைப் பார்த்தேன். அந்த நான்கு கண்களும் பசித்திருந்தன. `தம்பி சாப்ட்டீங்களா?’ எனக் கேட்டேன். பலரிடம் நாமும், நம்மிடம் பலரும் இந்தக் கேள்வியை பரஸ்பரம் கேட்டிருப்போம். ஆனால், பல நேரங்களில் இருதரப்பிலிருந்தும் `சாப்ட்டேன்’ என்ற பொய்யே பதிலாக வரும்.

ஆனால், அந்த இளைஞர்களின் பசி அவர்களை உண்மையைச் சொல்ல வைத்தது. `காலைல கோயம்பேட்ல டீ குடிச்சதுணா, சாப்டவேயில்ல!’ என்றனர். பதறிய இயக்குநர், `மாஸ்டர், இவங்களுக்கு சாப்பாடு குடுங்க’ என்றார். இரண்டு தட்டுகளில் சாப்பாடு போட்டு, கறிக் குழம்பு ஊற்றிக் கொடுத்தார். எங்கள் தட்டுகளில் இருந்த மீன் துண்டுகளை எடுத்து அந்த இளைஞர்களின் தட்டுகளில் வைத்தோம். பசியின் பரபரப்பில் வேக வேகமாகச் சாப்பிட்டனர் அந்த இளைஞர்கள். சாப்பிட்டு விட்டு என்னைத் தனியே அழைத்தவர்கள், `அசிஸ்டென்ட் டைரக்டர் வேலைகூட வேணாம்ணா. இதுபோதும்’ எனக் கண்கள் கலங்கி நன்றி தெரிவித்தனர். பசியின் பாரத்தை இறக்கி வைத்தவர்களுக்கு அத்தனை எளிதில் நம்மால் நன்றி சொல்லிவிட முடியாது.

நம் எல்லோருடைய வாழ்விலும் நம் கொடும் பசியை அகற்றியவர்கள் இருக்கின்றனர். அப்பா, அம்மாக்களை இழந்த குழந்தைகளின் பசியை யார் அடையாளம் காண்பர்! நேரத்துக்குச் சோறு கொடுக்க ஆளற்ற முதியவர்கள் தங்கள் பசியை எப்படி ஆற்றிக்கொள்கிறார்கள்; சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வேலை தேடி வருகிற இளைஞர்கள் பசியின் பொருட்டு வாழ்வோடு நிகழ்த்துகிற யுத்தச் சத்தம் மாநகர இரைச்சல்களில் மங்கிப்போகின்றன. உணவங்களின் விலைப்பட்டியலைப் பார்த்துவிட்டு அவமானத்தோடு எத்தனை ஆயிரம் பசித்த வயிறுகள் வெளியேறுகின்றன. `மத்தியானம் வரைக்கும் தூங்கிட் டோம்னா ஒரு வேளை சாப்பாடை மிச்சப்படுத்தலாம் மாப்ள!’ என்கிற கணக்குகள் இன்னும் தீட்டப் படுகின்றனவே!

யாரெனத் தெரியாத பெரிய திருமண நிகழ்ச்சிகளில் புதுத்துணி உடுத்திக்கொண்டு பயமும் பசியுமாக சாப்பிட்டுவிட்டு பதறி வெளியேறு பவர்களின் பசியை எப்படித் தவிர்ப்பது. `ஒரு வாய் சாப்பாடு போட்டாங்க’ எனப் பலரின் நினைவில் எத்தனை எத்தனை முகங்கள் நிறைந்திருக்கின்றன. ஒருவேளை அவை அத்தனையுமே ஒரே முகங்கள்தாம். மதிய உணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம், அம்மா உணவகம் என அரசியல் கடந்து மக்களுக்கான திட்டங்களாக முன் நிற்பவை பசி தீர்ப்பவைதானே! ஆதரவற்ற நோயாளிகளுக்கு வீட்டிலிருந்து சுவையாக சமைத்து எடுத்து வரும் செவிலியர்கள் எத்தனை நேசம் கொண்டவர்கள். மனநலம் பிறழ்ந்தவர்களுக்கான பள்ளிகளில் அவர்களைப் பார்த்துக்கொள்ளும் ஆயாக்கள், சோறு ஊட்டுகிற அன்னையாகியல்லவா உணவளிக்கிறார்கள்.

நம் அனைவரையுமே புரட்டிப் போட்ட கொரோனா காலத்தை நம்மால் மறந்திட முடியாது. அந்த நேரத்தில் ருசி கடந்து கிடைப்பதை அல்லவா உண்டு பசியாறினோம். அந்தப் பெருந்தொற்றை அரசோடு சேர்த்து விரட்டியது எத்தனை எத்தனை மனிதர்களின் நேசக்கரம் என்பதைப் பலரும் அறிவோம். கஜா, தானே, சென்னைப் பெருவெள்ளம் என உணவுக்குக் கேடு வந்த நாள்களில் பைக்குகளில், மினி ஆட்டோக்களில் சாப்பாட்டுப் பொட்டலங்களோடு விரைந்த மனிதர்களல்லவா நாம். இன்றும் கொட்டும் மழையில் சிவப்பு, ஆரஞ்சு டி-ஷர்ட்கள் சகிதம் உணவுப் பைகளுடன் யாரோ ஒருவரின் பசியைப் போக்கத்தானே விரைகிறார்கள் டெலிவரிபாய்கள். பசியின் ரணம் மனிதனின் மனதை எதற்கும் தயார்படுத்தும்.

அரைப்படி நெல் அதிகம் கேட்டதற்காக நெருப்பில் வெந்து புரட்சியாக மறைந்தவர்களின் கனல் இன்றும் குறையாமல் இருக்கிறது. தேசங்களுக்கிடையேயான அதிகாரப் போட்டிகள், ரொட்டித் துண்டுகள் கிடைக்காமல் இறைஞ்சுகிற குழந்தைகளைத்தானே கண்முன் நிறுத்துகின்றன. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதி நாள்களில் நடந்த அரச வன்முறையில், அருகிலிருக்கிற எளிய மீனவர்கள்தானே வெவ்வேறு கருவறையிலிருந்து வெளிவந்த பிள்ளைகளுக்குச் சோறு புகட்டினர். தேசத்தின் முதுகெலும்பான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராடியபோது சமைத்து உதவிடச் சென்றவர்கள் எத்தனை எத்தனை பேர். தான் கொண்ட கொள்கைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த போராளிகள், சாதிச் சான்றிதழ் வேண்டி அரசு அலுவலகங்களில் `சாகும் வரை உண்ணாவிரதம்’ அறிவிக்கும் தொல்குடிகளுக்குப் பசியைத் தாண்டிய பெருவலியை யார் தந்தது. பசிக்காகக் கையேந்துகிறவர்களுக்குக் கொடுக்கப் பணமில்லாமல், அல்லது, இருந்தும் தயங்கும்போது மனம் லேசான குற்றவுணர்ச்சியை அடைகிறதே, அது ஏன்?

`என் பசியைப் புரிந்துகொள்!’ என இறைஞ்சி, முறையீடு செய்கின்ற கண்கள் எப்போது இளைப்பாறும். பசியாறும் முன் பருக்கைகள் சிதற ம.அன்ரனியைச் சுட்டது யார்? மனிதம் கெட்டித் தட்டிப்போய் அதைச் செய்ததால் யாருக்குப் பயன்; இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் பதிலற்றுக் கிடக்கின்றன. யோசிக்கையில் ஒன்று மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது. கெத்தேல் சாகிப்பின் தாய் முலையான கைகள்தான் இந்தச் சமூகத்தில் நிறைந்திருக்க வேண்டுமே தவிர, மதுவைக் கொல்வதற்காக நீண்ட கரங்களல்ல.

- கரம்பிடித்துப் பயணிப்போம்