
`நினைவில் காடுள்ள மிருகமாய்' இன்றும் தங்கியிருக்கிறது. ஜெய் தங்கியிருந்த அந்த ஒரு வருடத்தில், நிலத்திலேயே கிடந்தான்.
கடந்த சில வருடங்களில் திருவண்ணாமலையில் இருக்கும் எங்கள் பத்தாயத்துக்குப் பல இளைஞர்கள் வந்து பல நாள்கள் தங்கியிருக்கிறார்கள். தங்குதல் என்றால், முன்கூட்டியே திட்டமிட்டுத் துணிமணிகளுடன் பயணம் செல்வதுபோல வந்தவர்கள் அல்ல. எந்த முன்அறிவிப்புமின்றி மனம்போன போக்கில் கிளம்பிவந்தவர்கள். பலர் என்னை முதன் முறையாக அன்றுதான் நேரில் சந்தித்திப்பார்கள். பலர் என்னோடு பல நாள்கள் தங்கி, வாசித்து, கதை கேட்டு, என்னோடு சேர்ந்து விவசாயம் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இப்படி குறைந்தது இருபத்தைந்து இளைஞர்களைச் சொல்லலாம்.
அப்படி ஒரு நாள் தன் புல்லட்டில் வந்திறங்கினான் ஜெயக்குமார். கோயம்புத்தூரைச் சேர்ந்த அவன், ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில வருடங்கள் தங்கி விவசாயம் செய்திருக்கிறான். தமிழகத்திலிருந்து கிளம்பிப் பல மனிதர்கள், சில காதல்கள், அளவில்லா நட்பு எனச் சேர்த்துக்கொண்டு தேசங்களின் வரைகோடுகளைக் கடந்தவன். என் புத்தகங்களைப் படித்து, கதைகள் கேட்டு, என்னைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னான். என்னுடன் குறைந்தது ஒரு வருடம் தங்க வேண்டும் என்றான். அப்படியே தங்கினான். என் நிலத்தில் அவன் இஷ்டத்திற்கு விவசாயம் பார்த்தான்.

நான் இதுவரை விவசாயம் செய்து எந்த லாபத்தையும் எங்கள் வீட்டுக்குக் கொடுத்ததில்லை. ஆனால், நெல் விற்ற காசு என எழுபத்தைந்தாயிரம் ரூபாயை என் கையில் கொடுத்தான். நானே என்னைக் கையாலாகாதவன் போல் உணர்ந்தது, `நினைவில் காடுள்ள மிருகமாய்' இன்றும் தங்கியிருக்கிறது. ஜெய் தங்கியிருந்த அந்த ஒரு வருடத்தில், நிலத்திலேயே கிடந்தான். மழையும் வெயிலும் அவனுக்கு நிலம்தான். நானும் அறுவடை செய்திருக்கிறேன். ஆனால், அறுவடை என்பது அறுப்பதோடு சரி, அதை முறையாகக் கொண்டு சென்று விற்கவும் வேண்டும் என்கிற யதார்த்தம் பலரையும் போல எனக்கும் கைகூடவில்லை. ஜெய்யைப் புரிந்துகொள்ள முயன்று, பின்னர் தோற்றேன்.
ஆரம்பத்தில் என்னைச் சந்திக்கும் இளைஞர்கள் பின்னாள்களில் என் தோள்மீது கைபோட்டு என்னுடன் உரிமையோடு பழகுவார்கள். விவாதிப்பார்கள். அப்படி ஜெய் என்னை ஒரு முறை, ‘`நீங்க மட்டும் நெலத்துக்கு வராட்டி, நான் இன்னும் சுதந்திரமாய் விவசாயம் பார்ப்பேன். இதிலிருந்து லாபம் எடுப்பேன்’’ என்று என் அகங்காரத்தைத் தீண்டினான். நிலத்திலேயே பிறந்து, இங்கேயே உழன்று, இங்கேயே மடிய இருக்கிற என்னைப் பார்த்து, எங்கோ இருந்து வந்த ஒரு சின்னப் பையன் இப்படிக் கேட்கிறானே என்ற அங்கலாய்ப்பு என்னைப் புரட்டிப் போட்டது. ஒரு வகையில் ஜெய் என் அகங்காரத்தின் மீது நெருப்பு அள்ளி வீசினான்.
மனிதர்கள் அடைகாத்து வைத்திருக்கிற தன்னகங்காரங்கள் குரூரமானவை. அவை பல நேரங்களில் நம்மை பலிபீடத்தில் நிறுத்திவிடும். அவர்கள் ஒருபோதும் தாங்கள் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என இறுதிவரை உணரவே மாட்டார்கள். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.
அறுவடையின்போது கோட்டைவிடும் இக்குணம் என் அப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது. மூன்று மாதங்களும் ராப்பகலாய் நிலத்தில் பாடுபடும் அப்பா, நெல் மூட்டைகளோ, மல்லாட்டை மூட்டைகளோ மண்டிக்கு ஏற்றப்படும் போதெல்லாம் என்னமோ தவறு செய்துவிடுவார். கைக்கு நாங்கள் எதிர்பார்த்த பணம் வராது. அவரின் இத்தோல்வியைக் கடைசிவரை அவர் ஒத்துக்கொண்டதேயில்லை.
தன் அகங்காரத்தை மூச்சு மாதிரி பாதுகாத்தவர். நான் ஒரு வகையில் என் அப்பாவின் தொடர்ச்சியில்லையென நினைத்துக்கொண்டிருந்தேன். ‘அப்பா மாதிரி மகன் இருப்பதில் என்ன பெருமை இருக்கிறது’ என எனக்குள்ளேயே பலமுறைக் கேட்டுக்கொள்வேன். என் பெயருக்கு முன்னால் அப்பாவின் இனிஷியலைக்கூடப் போட்டுக்கொள்ளக் கூடாது என்ற பிடிவாதத்தில் இருந்தேன்.
ஆனால் இதெல்லாம் புறவயமானவை. நான் அப்பாவின் தொடர்ச்சிதான் என்பதைக் காலம் மெல்ல மெல்ல எனக்குப் புரிய வைத்தது. அறுவடையைப் பணமாக்கத் தெரியாததிலிருந்து அதை ஆரம்பிக்கலாம்.
“நீ பொழைக்கத் தெரியாதவன்” என நிலத்தில் ஜெய் பலபேர் முன்னிலையில் பெருங்குரலெடுத்து என்னைப் பார்த்துக் கத்தினான். அதன் அனலைப் பொறுக்க முடியாமல் நான் அவசரமாக வீடடைந்தேன்.
அறையில் படுத்து நிதானமாக யோசித்தேன். ஜெய் மட்டும் என்ன, அவன் பொழைக்கத் தெரிந்தவனா? சம்பாதிக்க வேண்டிய இந்த வயதில் இப்படி பைக்கை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றி, யாருடைய நிலத்திலோ விவசாயம் செய்து, எந்த நாட்டுக் குழந்தைகளுடனோ விளையாடிக்கொண்டு சமூகம் வகுத்து வைத்திருக்கிற கோடுகளில் அடைபடாதவன்தான் அவனும், நானும். அவனுக்குக் கிடைத்த ஒரு தற்காலிக வெற்றி என்னைக் கேள்வி கேட்க வைத்திருக்கிறது, அவ்வளவுதான்.
பிரபஞ்சன் சொல்வது மாதிரி இந்தச் சமூக சட்டகத்திலிருந்து விலகினவர்கள். நாம் எல்லோருமே ஒரு வகையில் பிழைக்கத் தெரியாதவர்கள்தான். நம்மை மாதிரி பிழைக்கத் தெரியாதவர்கள் இருப்பதால்தான் நிறைய பிழைக்கத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.
ஒரு நாள் காலை நிலத்தில் என்னோடு பேசிக் கொண்டிருக்கையில்தான், இங்கேயே தங்கி ஒரு முழு நீளப் படத்தை எடுக்கப்போகிறேன் என்றான் ஜெய்.
இதில் அழியப்போகிறான் என்ற என் உள் அகங்காரம் ஒன்று என்னிலிருந்து சொல் வழியே எட்டிப்பார்த்து, பின் உள்ளுக்குள்ளேயே சென்றுவிட்டது.
சொன்ன மாதிரியே அடுத்த மாதமே ‘செந்நாய்’ என்ற தன் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தான். நான் அப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரமாக்கப்பட்டேன். வெற்றிகரமாகப் படப்பிடிப்பு முடிந்து, அப்படம் பல விருதுகளை அவனுக்குக் குவித்தது.
என் அகங்காரம் அவன்முன் மண்டியிட வேண்டும்தானே! அது என்னால் முடியாது, எந்த மனிதர்களாலும் முடியாது. அவர்கள் இன்னும் இன்னும் இந்த அகங்காரத்திற்காக தோற்றுக்கொண்டேயிருக்கவே விரும்புவார்கள்.
ஜெய் என்னோடு பத்தாயத்தில் தங்கியிருந்த காலத்திலேயே பெங்களூரிலிருந்து என் மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.
“பவாப்பா, என் பெயர் சாமிநாதன். பல மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் சுற்றி அலைகிறேன். இந்த வயதுள்ள ஒரு இளைஞனுக்கு என்னென்ன கெட்டபழக்கங்கள் உண்டோ அத்தனையும் எனக்குண்டு. நீண்ட நாள்கள் உங்களோடு தங்க விருப்பம். கிளம்பி வரட்டுமா?”
கிளம்பி வரச்சொன்னேன். அந்தப் பையனின் உண்மை எனக்குப் பிடித்திருந்தது.
அதிகம் பேசாத, குழந்தைமை மாறாத முக அமைப்பு அவனுக்கு. நாங்கள் இருவரும் தொடர்ந்து உரையாடத் தொடங்கினோம். அநேகமாக சொற்களற்ற உரையாடல் அவை. கண்களாலும் தொடுதல்களாலும்.
மனுஷ்யபுத்திரனின் ஒரு புகழ்பெற்ற கவிதையைப் போல, நாம் உரையாடுவதற்குத் தவறான ஒரு உறுப்பையே பயன்படுத்துகிறோம். கைகள்தான் ரத்த நாளங்களின் வழியே செய்தியை இதயத்திற்கு அனுப்புகின்றன. என் கைகளை இன்னும் இறுகப்பற்றிக்கொள் என்பது மாதிரியான கவிதை வரிகள் அவை.
நானும் சாமிநாதனும் அப்படித்தான் ஒருவரை ஒருவர் உள்வாங்கிக்கொண்டோம்.
உடைந்து அழுவதற்குத் தயாராக இருக்கிற மனிதர்களுக்கு ஒரு தொடுதல் போதும். அவர்கள் கட்டி வைத்திருக்கிற அணைகள் உடைந்துவிடும்.
நம் தோளுக்கு நிகராக வளர்ந்த இளைஞர்கள் நம் முன்னால் உடைந்து அழுவது ஒரு வித ரணம், இருவருக்குமே! ஆனால் கண்ணீர் மட்டும்தான் நம் துயரத்தை, ஆற்றாமையை வெளியேற்ற நம் கைவசம் இருக்கிற ஒரே மொழி. நம்மை அரவணைத்து ஆறுதலளிக்கிற ஒருத்தியோ அல்லது ஒருவனோ கிடைத்துவிடுகிறபோது நம் மனத்துயரம் லேசாகிவிடுகிறது.
மெல்ல மெல்ல சாமிநாதன் தன் கடந்த கால வாழ்வை என் முன்னால் சொற்களால் கடந்துகொண்டிருந்தான்.
சாமிநாதனின் சொந்த ஊர் சிவகங்கை, பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது அவனுக்குள் அவள் வந்தாள். அதன்பிறகு இருவரின் உலகமும் ஒன்றென ஆனது. எதிர்காலத்தைப் பற்றிய பெருங்கனவுகளை இருவரும் சேர்ந்தே காண ஆரம்பித்தார்கள். அவனுக்கு இலக்கிய வாசிப்பிருந்தது. இதுவரை எழுதப்பட்ட கதைகளும் கவிதைகளும் தங்களுக்காகவே எழுதப்பட்டவை என இருவரும் நம்பினார்கள்.
படிப்பிற்குப் பின் அவளுக்குச் சிறப்பான ஒரு வேலை கிடைத்தது. டெல்லி சென்றாள். சாமிநாதனுக்கும் அப்படியே! அங்கிருந்து கூகுள் நிறுவன உயர்பதவி ஒன்றுக்குத் தேர்வாகியிருந்தார்கள். அடுத்த வாரம் விமானம் ஏறியாக வேண்டும்.
நாம் எதிர்பாராத ஒரு விநாடியில் நிகழும் சம்பவம்தானே மனிதக் கனவுகளை, வாழ்வை அப்படியே சிதைக்கிறது. தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது. அப்படி நடந்த ஒரு சாலை விபத்தில் அந்த இடத்திலேயே அவள் மரித்துப்போனாள்.
சாமிநாதனுக்கு வாழ்வு எல்லாமே கடந்த காலமாகிவிட்டது, நிகழ்காலமும் எதிர்காலமும் இருண்டுவிட்டது. அவள் உடலளவிலும், அவன் மன அளவிலும் சிதைந்துபோனார்கள்.
டெல்லியிலிருந்து மரணித்த அந்த உடலை ஒரு ரயிலில் ஏற்றி அவன் ஊருக்குக் கொண்டுவந்தான். அந்த இரண்டு நாள் பயணம் இந்த உலகத்தில் யாருக்குமே வாய்க்கக்கூடாத ஒன்று. ஏதோ ஒரு பெட்டியில் உயிரற்றவளாக அவளும், நகரும் அந்த ரயிலில் உயிருள்ள பிணமாக அவனுமாக இரு முழு நாள்களைக் கடந்தார்கள்.
அடக்கம் முடிந்து அவன் மனம் போன பாதையில் நடக்கத் தொடங்கினான். வீடு, கார், பைக், அப்பா, அம்மா, கடை எல்லாமும் அவனிடமிருந்து வெகுதூரத்திற்குப் போய்விட்டார்கள்.
மனிதர்களற்ற பிரதேசத்தை நோக்கிப் போய்விட வேண்டுமெனப் போனான். ஆனால் அது முடியவில்லை. மறுபடி மறுபடி மனம் மனிதர்களை நோக்கியே முன்னகர்ந்தது. மனிதர்கள் முன்பே மண்டியிட்டது. தாங்கிக் கொள்ள முடியாத ஒரு தப்பித்தலுக்குத்தான் எனக்கு எஸ்.எம்.எஸ் செய்தான்.
ஏதோ ஒரு சாய்தல் அல்லது ஒரு தேறுதலுக்கான சொல் வேண்டிய தேடுதல் அது.
ஏற்கெனவே நாங்கள் எங்கள் மூன்றரை வயது மகன் சிபியை ஒரு சாலை விபத்தில் இழந்தவர்கள். எங்கள் வீட்டில் உள்ளவர்கள் சிபி திரும்பி வந்துவிட்டான் என நாதனின் வருகையால் நிரம்பினார்கள். இருண்டிருந்த எங்கள் அறைக்கு அவன் மெழுகுவத்தி வெளிச்சத்தோடு வந்தான்.
நிலம் எப்படி ஜெய்யின் கைகளுக்குள் போய் அடைந்துகொண்டதோ, அப்படி எங்கள் வீடு நாதனின் கைகளில் அடைக்கலமானது. வீட்டில் இருண்டுகிடந்த ஒவ்வொன்றுக்கும் அவன் வெளிச்சமூட்டினான்.
நாங்கள் தோளில் கைபோட்டுப் பேசுகிற தோழர்களானோம். வாசிப்பில் எங்கள் இருவருக்குமான ரசனைகள் வேறு வேறாக இருந்தன. என் மகனுக்கும் மகளுக்கும் அவன் ரசனை நூறு சதவிகிதம் ஒத்திருந்தது.
கொரோனா காலத்தின் ஒரு உக்கிரமான மதிய நேரம் அது. எங்கள் வீட்டின் அந்த உயரம் குறைந்த உணவு மேஜையின் முன் அமர்ந்து நாங்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். உரையாடலுக்கு மிக உகந்த இடம் என்னைப் பொறுத்தவரை சாப்பாட்டு மேஜைதான். அதுவும் உயரம் குறைந்த மேஜைகள், நம் மனதை இன்னும் நெருக்கமாக்குகின்றன.
அன்றைய உரையாடலை நான்தான் தொடங்கினேன். ஒரு வேளை அந்த உரையாடல் என் பொதுப்புத்தியிலிருந்து தொடங்கியிருக்கக்கூடும். இன்றைய இளைஞர்களின் ஒழுக்கம் சார்ந்ததாகக்கூட அது இருந்திருக்கலாம்.
ஏதோ ஒரு சொல்லால் சீண்டப்பட்ட நாதன் என்னை நேருக்கு நேர் பார்க்காமல், “என் வாழ்க்கையில் உங்களை மாதிரி வாழக்கூடாதுன்னு நினைக்கிறேன்பா” என்றான்.
இதோ இன்னொரு இளைஞன் என் அகங்காரத்தின் மீது நெருப்பை அள்ளிக் கொட்டுகிறான்.
“ஏன்” என்று என்னைக் கேட்கவிடாமல் அவ்விடத்தில் உறைமௌனம் தடுத்தது.

என் உபதேசத் தொனி, அல்லது ஒழுக்கம், அல்லது என் வெற்றி என நான் நம்பின ஏதோ ஒன்று அவனை மோசமாகச் சீண்டியிருக்கிறது.
படைப்பாளி எப்போதுமே உபதேசிப்பவன் இல்லை. வாழ்வை அதன் போக்கில் ஓட விட்டு வேடிக்கை பார்க்கும் ஒரு குழந்தைதான். அவன் உனக்குப் பிடிக்காத எதையோ சொல்ல முற்படும்போது அவன் உன் எதிரியாகிறான். எத்தனை வாசகர்கள் எழுத்தாளர்களின் எழுத்துக்கு நண்பர்களாக இருக்கிறார்களோ, அதைவிட அதிகமாக அதில் முரண்படுகிறவர்களும் இருக்கிறார்கள்.
நாதன் ஒரு வகையில் வெளிப்படை யானவன். என் மகன் சிபி இருந்திருந்தால் அவனும் ‘உன்னை மாதிரி வாழ விரும்பலைப்பா’ என என்னைப் பார்த்துச் சொல்லியிருப்பானோ என்ற பயம் வந்து என்னைச் சூழ்ந்துகொண்டது.
நாதன்தான் என் அகங்காரத்தை முதன்முதலில் சீண்டியவன் என எல்லோரும் சொன்னார்கள். இல்லை, அதற்கு முன் ஜெய், அதற்குமுன், அதற்குமுன் என வரிசை வரிசையாக என் முன்னே எத்தனையோ மனிதர்கள் நிற்கிறார்கள்.
நாம் ஏன் மனிதர்களை நேசிப்பதை விட்டுவிட்டு அவர்களைப் புரிந்துகொள்ள முயல்கிறோம். அந்த முயற்சியில்தானே விரிசல்களும் உடைதல்களும் நிகழ்கின்றன. நம் அகங்காரத்தை உடைக்க யார் முயன்றால் என்ன? அதில் ஏன் நாம் நமது தகுதியை நிர்ணயிக்க வேண்டும்?
வாழ்வில் பெயர் தெரியாத, உறவு தெரியாத யார் யாரோ நம் அகங்காரத்தைச் சீண்டுகிறார்கள். அல்லது சுடும் உண்மையை நமக்கு உணர்த்துகிறார்கள்.
ஜெய்யும் நாதனும் அவர்களில் பெயர் தெரிந்த இரு மகன்கள் எனக்கு.
ஒருவகையில் என் படைப்புகளில், அல்லது என் சக எழுத்தாளர்களின் படைப்புகளில் இம்மாதிரியான மனிதர்களே வெவ்வேறு பெயர்களில் விரவிக் கிடக்கிறார்கள்.
என் ‘வேட்டை’ கதையில் வருகிற ஜப்பான் கிழவனின் ஈகோவை ஒரு காடு அழிக்கிறது. ‘நான் சதா இந்தக் காட்டை ஜெயித்துக்கொண்டேயிருப்பேன்’ என்ற அகந்தையிலிருந்த அவனைத் தோல்வியுறச் செய்து குப்புற விழ வைக்கிறது. அதன்பின்தான் அவன் அந்தக் காட்டிடம் மண்டியிடுகிறான்.
ராஜம்மாளின் மீதான என் பால்ய காதலை என் நடுத்தர வாழ்வின் பெருமிதங்கள்தான் சிதைக்கின்றன. இந்த அகந்தையை என் சொந்த வாழ்வே அழிக்கிறது.
என் ‘மண்டித் தெரு பரோட்டா சால்னா’ என்ற கதையில் அப்பாவுக்கும் மகனுக்குமான அந்த ஈகோவைக் கடைசி வரையில் யாரும் அழிக்கமுடியவில்லை. இருவருமே ஆற்றின் வெவ்வேறு கரைகளில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஓடும் நதிநீரில் இறங்கிக் கைகளை விரித்து ஒருவரை நோக்கி ஒருவர் எந்த அகங்காரமுமின்றி முன்னேறிச் செல்கையில் அவர்களின் அகந்தை அந்த ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிடும். ஆனால் நம்மில் பெரும்பாலோர் ஆற்றின் கரைகளிலேயே நின்று விடுகிறோம். ஒரு வகையில் ஜெய், நாதன், ராஜம்மாள், ஜப்பான் கிழவன் என நிஜத்தில் சந்தித்த மனிதர்களும், கதையில் வரும் பாத்திரங்களும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள். இவர்கள் எல்லோரும் என்னைப் பார்த்தோ, அந்தக் காட்டைப் பார்த்தோ, அல்லது இந்த மானுடத்தைப் பார்த்தோ எழுப்பும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
ஏன் இத்தனை அகங்காரம் உனக்கு?
- கரம்பிடித்துப் பயணிப்போம்