
ஓவியங்கள்: மினிமலிக்ஸ்
ஒரு திருமணத்துக்காகக் கோயம்புத்தூர் சென்றிருந்தேன். நண்பர்கள் இருவர் திருமணம் செய்துகொண்டனர். குறிப்பாக நண்பர்கள் என்று கூறுகிறேன். ஏனென்றால் அந்தத் திருமணத்தில் எந்த விதமான சடங்குகளும் சம்பிரதாயங்களும் கடைப்பிடிக்கப்படவில்லை. தாலிகூட கட்டிக்கொள்ளவில்லை. அதை ஒரு பெரிய விஷயமாக நான் கூறவில்லை. ஜெயகாந்தன், ‘புருஷன் பொண்டாட்டியாய் வாழ்வதில் என்ன சிறப்பு இருக்கிறது? நண்பர்களாய் வாழ வேண்டும்’ என்பார். அப்படி சத்ரியன் - கிருத்திகா இருவருமே திருமணத்துக்குப் பின் தங்களுடைய வாழ்க்கையை நண்பர்களாக வாழப்போகிறார்கள் என்பது மனதுக்கு அத்தனை மகிழ்ச்சியைக் கொடுத்தது. பலவிதமான திருமணங்கள், வாழ்க்கை முறை, சடங்குகள் என வந்தபோதும் `காதல்’ என்கிற ஒற்றைச் சொல்லைத்தான் வாழ்க்கை இறுகப் பற்றிக் கொள்கிறது. ஆணோ, பெண்ணோ தன் வாழ்வின் குறிப்பிட்ட பிராயத்தில் அதிகம் சிந்திப்பது காதலைப் பற்றித்தான்.
திருமணம் முடிந்து மழை தனதாக்கிக்கொண்ட அந்த இரவு, நான் திகட்டத் திகட்டக் காதல் வயப்பட்டிருந்த நாள்களை நினைவுபடுத்தியது. நான் காதலித்துக்கொண்டிருந்த காலத்தில், காதலர்களின் வழக்கமான ரொமான்ஸ், ஒரு நாளைக்கு இரண்டு மூன்று காதல் கடிதங்கள் என கடிகார முட்கள் நகரும். 24 மணி நேரமும் அதே சிந்தனையில் இயங்கிக்கொண்டிருந்தபோது, எனக்கு எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனிடமிருந்து அஞ்சல் அட்டை ஒன்று வந்தது. நண்பர்களின் மூலம் என் காதலைக் கேள்விப்பட்டிருந்த ச.தமிழ்ச்செல்வன், `ஒரு லட்சியவாதத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வதாக நம்ப வைத்த ஓர் இளைஞன், இப்படி காதல் வயப்பட்டு திசை திரும்புகிறானே’ என்கிற வருத்தத்தில் எழுதுவதாக அந்தக் கடிதம் இருந்தது. அதில், ‘அன்புள்ள பவா! நீங்கள் இரண்டு பேருமே காதலற்றவர்களாக வாழப்போகிற ஒரு தருணம் உங்கள் திருமண வாழ்க்கையில் கண்டிப்பாக நிகழப்போகிறது. எல்லாவற்றையும் இப்போதே சிந்திவிடாதீர்கள். காதலற்றவர்களாக வாழப் போகிற அந்தக் காலத்திற்காக, காதலைக் கொஞ்சம் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்’ என எழுதியிருந்தார்.

அந்த வரிகள் எனக்கு மிகுந்த சிரிப்பையும், `நாம் காதலற்றவர்களாக வாழப்போகிற ஒரு நாள் வருமா?’ என்கிற ஒரு அவநம்பிக்கையும் கொடுத்தன. `அதெல்லாம் நமது வாழ்க்கையில் வரவே வராது’ என என் காதல் நெஞ்சம் ரீங்காரமிட்டது. அந்த வரிகள் நிஜமென்பதை இந்த 28 வருட வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கிறது. மகத்தான காதலர்களும் ஒரு காலத்தில் ஏதோ ஒரு தருணத்தில் காதலற்றவர்களாக வாழ்கிற ஒரு நேரம் வாய்த்துக்கொண்டேதான் இருக்கிறது என்ற நிதர்சனம் புரிந்தது. `காதலிக்கிறபோது இருக்கிற மனிதன் இல்லை, திருமணம் செய்து கொண்ட பிறகு இருப்பவன்’ என்கிற வார்த்தைகளை நாம் தொடர்ந்து எதிர்கொள்கிறோம். நிஜம்தானே! மனிதன் அப்படி இருக்கமுடியாதென்பதுதான் உண்மை. காதலை எப்படிப் புறந்தள்ளிவிடக் கூடாதோ, அதேபோல திளைக்கத் திளைக்க சிலாகிக்கவும் கூடாது என்பதுதான் காலத்தின் யதார்த்தம். வெறுமனே அலங்கார உணவர்வெழுச்சிகள் மட்டுமே அல்ல காதல். நமக்குச் சொல்லப்படுகிற, காட்டப்படுகிற பெரும்பான்மையான காதல்கள், மேலோட்டமான மனித உணர்வுகளை அல்லது ஆண் பெண் உணர்வுகளைச் சித்திரிப்பதாக இருக்கின்றன. அந்தக் காதல் நமக்கு எழுகிற போது, அதன் பயணத்தில் நமக்குள் நிகழ்த்துவது ஒரு மாயப் போர். கொண்டாட்டம், மகிழ்ச்சி, அழுகை, சண்டை, பிரிவு என அந்தப் போரின் வழி அடைவதையெல்லாம் அடைந்த பிறகும் அந்த `காதல்’ நம்மிடம் எஞ்சி நிற்கிறதா என்பதுதான் நீடித்த கேள்வி. அக்கறை, பாசம், நேசம் கொள்கிற மனத்தைப் பிரிவு என்கிற ஒன்று ஏன் தகர்க்கிறது.
லைலா மஜ்னு காதலைப் பற்றி எழுத்தாளர் ஜெயந்தன் எழுதுகையில், ‘இந்த எழுத்தாளர்கள் தங்களுக்கு சௌகரியப்பட்ட ஓர் இடத்தில், நிறைவேறாத காதலையோ அல்லது நிறைவேறிய காதலையோ முடித்து விடுகிறார்கள். ஆனால் கதை அதோடு முடிவதில்லை, அங்கிருந்துதான் கதை தொடங்குகிறது’ என்கிறார். லைலா மஜ்னுவின் காதல், அவர்கள் திருமணத்தில் போய் முடிந்துவிட்டதாக ஜெயந்தன் எழுதுகிறார்.
அந்தக் கதையை எழுதுகிறவன் என்கிற முறையில், கல்யாணம் செய்து வைத்த தம்பதிகள் எப்படி வாழ்கிறார்கள் என்பதற்காக, ஒருமுறை அவர்களுடைய வீட்டிற்கு அந்த எழுத்தாளர் போகிறபோது அவர்கள் இருவருக்கும் குடும்பச் சண்டை நடந்துகொண்டிருக்கும். அந்தச் சண்டையின் உச்சமாக மஜ்னு சொல்வான் லைலாவைப் பார்த்து, ‘உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு, ஒரு அரேபியன் ஒட்டகத்தைக் கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம்; எனக்குத் தினமும் அரை லிட்டர் பாலாவது கிடைத்திருக்கும்!’ வீட்டுக்குப் போன அந்த எழுத்தாளர் அதைக் கேட்டுக்கொண்டே இருப்பார். உடனே லைலா பதிலுக்கு ‘போடா, உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டதைவிட, ஒரு பேரீச்சம் மரத்தைக் கல்யாணம் பண்ணியிருக்கலாம். தினமும் எனக்கு ஒரு கிலோ பேரீச்சம் பழமாவது கிடைத்திருக்கும்’ என்பார். இதுதான் நிதர்சனம் என்பதற்காகத்தான் ஜெயந்தன் இந்தக் கதையை எழுதியிருப்பார்.

ஆகச்சிறந்த காதல் ஜோடிகளாக நமக்குச் சொல்லப்படுகிற லைலா - மஜ்னு திருமணம் செய்திருந்தாலும் சண்டை வரும். நீடித்த அன்பின் ஊடே சிறு சிறு சண்டைகள் இருக்கத்தானே செய்யும். சண்டைகள் பிரிவிற்கான திறவுகோல் அல்லவே. அவை அன்பை அதிகப்படுத்தும் ஊற்றுக்கண்.
தலைமுறைகள் கடந்த பிறகும் காதல் என்ற சொல் கடத்துகிற மின்சாரம் குறைவின்றிக் கிடப்பது ஓர் ஆச்சர்யம். ஆனால், தலைமுறைகளுக்கேற்ப அது புதுப்புதுச் சிக்கலாக நிற்பதும் கவனிக்க வேண்டியதாகிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய `விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் பெண்ணின் பார்வையிலிருந்து காதலை அணுகும் படம். அதில் உள்ள பல விஷயங்கள் இந்தக் காலத்தோடும் நிஜத்தோடும் உண்மையோடும் அல்லது உண்மைக்கு நெருக்கமாகவும் இருந்ததாக நான் கருதுகிறேன்.
பெரிய எதிர்ப்பு அந்தப் பெண் வீட்டில் இல்லை. ஆனால், அப்பாவின் விருப்பத்துக்கு எதிராக நாம் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணம் அந்தப் பெண்ணுக்குத் தோன்றிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் அது நிஜமான எண்ணம் இல்லை, ஒவ்வொரு நிமிடமும் கார்த்தியிடம் காதல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்தப் பையனிடமும் போக முடியவில்லை, அப்பாவிடமும் சமரசமாக முடியவில்லை. ஆனால் எந்த நேரத்திலும் இதை உடைத்துவிட்டு அந்தப் பையனுடன் சென்றுவிட்டால், அதற்காக மிகப்பெரிய எதிர்ப்போ, கோபமோ அப்பா காட்டமாட்டார்.அவர்களைப் பிரித்து வைக்கிற இடத்திலும் அப்பா இருக்க மாட்டார். அந்தப் பெண்ணிற்கு அதீதமான அன்பும் காதலும் கார்த்தியின் மீது எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவு அவர் அப்பாவின் மீதும் உள்ளது. அதுதான் படத்தின் மையமான இடம். இந்த மையமான இடத்தை நோக்கிக் கதை நகர்ந்துகொண்டே இருக்கிறபோது, பல இடங்களில் அந்தப் பெண்ணின் மீது நமக்குக் கோபம் வருகிறது. ‘இவள் ஏன் தேவையில்லாமல் குழப்பிக்கொள்கிறாள்... இவ்வளவு அன்பாக இருக்கிற பையனிடம் சென்றுவிட வேண்டியதுதானே’ என்று தோன்றுகிறது. ஆனால் போக முடியாது. ஏதோ ஒரு மனத்தடை. இதைச் சந்திக்காத பெண்கள் மிகக் குறைவு. அது பெண்கள் மட்டுமே உணரக்கூடிய மனவலி.
காதலைத் திருமணம் நோக்கி நகர்த்தும்போது, அது வெறும் காதலாக மட்டும் இருப்பதில்லை என்பதைத்தான் இந்தச் சமூகக் கட்டமைப்பு நமக்கு உணர்த்தியிருக்கிறது. பல நேரங்களில் அது பெண்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்துவிடுகிறது. சமூக அந்தஸ்துகளும், குடும்ப நியதிகளும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வெவ்வேறாக ஏற்படுத்தி வைத்திருப்பதன் சிக்கல் அது. காதல் நிகழ்வதைப் போலவே பிரிவதற்கும் எந்தக் காரணமும் தேவையில்லை என்பது எளிய உண்மை. பிரிவென்பது பல நேரங்களில் மதிப்பையும் அன்பையும் பறிகொடுத்துவிடாமல் இருப்பதற்கான நல்வழி.
உதயசங்கர், ‘ஆனால் இது அவனைப் பற்றி’ என்ற குறுநாவலை எழுதியிருக்கிறார். ஒரு மனிதனுக்கு ஒரு வாழ்க்கையில் ஒரு காதல்தான் வரும் என்பதெல்லாம் முழுக்க முழுக்க கற்பனைவாதம். ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து பெண்களைக் கடந்து போகிறான் என்பதுதான் இந்தக் குறுநாவலினுடைய மையமான இடம். நான்கு ஐந்து காதல்கள் அவனுக்கு இருந்தன என்று அதற்கு அர்த்தம் இல்லை. அவன் ஒரு பெண்ணோடு ரொம்பத் தீவிரமாகக் காதல் வயப்பட்டு இருக்கிற அந்தத் தருணத்திலேயே, எதிர்வீட்டில் ஒரு மார்கழியின் காலையில் கோலம் போட்டு, சாணத்தில் ஒரு பூசணிப்பூவை வைத்து மிக மிதமாக அழுத்திவிடுகிற கோமதியை அதிகாலை மென்பனியினூடே பார்க்கிறபோது, ‘ச்ச! இவ்வளவு நேர்த்தியான பெண் நம் வாழ்க்கையில் வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்’ என்று நினைப்பு எழும். ‘ஒரு நிமிடம் கடந்து போகும் அந்த உணர்வும் ஒரு முக்கியமான காதல்தான்’ என்று உதயசங்கர் கூறுகிறார்.
நிறைய ஆண்கள் அதுபோன்று பெண்களைக் கடந்துகொண்டே இருக்கிறார்கள். ‘இந்தப் பெண் இவ்வளவு அழகாக இருக்கிறாளே! நேர்த்தியாக இருக்கிறாளே! மென்மையாக இருக்கிறாளே! கம்பீரமாக இருக்கிறாளே! இவளோடு நாம் வாழ்ந்தால் என்ன’ என்று அந்த ஒரு நிமிடம் காதல் வயப்படுவதும் ஓர் ஆணின் மனத்தோடு சேர்ந்த விஷயம்தான். இதை ஏற்றுக்கொள்கிற பொதுமனம், பெண்களுக்கும் இதுபோலத்தான் என்பதை ஏற்க மறுப்பதில்தான் காதல் சிக்கலான ஒன்றாகிறது. முதல் காதல், முதல் முத்தம், தாஜ்மஹால், வாழ்த்து அட்டை, ஒற்றை ரோஜா எனக் காதலின் சௌந்தர்யமான பக்கங்களைச் சிலாகிக்கிற நாம், எதை விவாதிக்க வேண்டுமோ அதைப் புறந்தள்ளிவிடுகிறோம்.
உலகின் மகத்தான துயரங்களில் ஒன்று தனிமை. அது எல்லாப் பாலினத்தவர்க்கும் பொதுவானது. இந்தத் தனிமையான நேரங்களில் நீங்கள் பேசுவதைக் கேட்பதற்கு ஆளில்லாமல், உங்கள் மொழிகளைக் கேட்பதற்குக் காதுகளில்லாமல், நடுங்கும் உங்கள் கரங்களை இறுகப் பற்றிக்கொள்வதற்கு இன்னொரு கையில்லாமல் தவிக்கின்ற தவிப்பு எந்த மனிதனுக்குமே வாய்க்கக்கூடாத ஒன்று.
உலகம் முழுக்க பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இப்படித் தவித்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்தத் தவிப்பைப் புரிந்துகொள்ள, இந்தத் தவிப்பைத் தன்னுடையதாக ஏற்றுக்கொள்ள அனைவருக்கும் மற்றொருவர் தேவை. சொற்களாலோ, இதயத்தாலோ, உடலாலோ, தன்னுடைய ஒரு ஈர முத்தத்தாலோ தனிமைகளைத் துடைத்தெறிகிற அந்த ஒரு கணம், ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் உன்னதமான தருணம்.
எல்லா உறவுகளைப் போலவே காதலுக்கும் இந்தச் சமூகம் ஒரு பொதுவிதியைக் கட்டமைக்கத் தவறவில்லை. அதை ஒரு வடிவத்துக்குள் சுருக்கி, அதற்கெனச் சில உருவங்களைக் கொடுத்து சமநிலை கலைத்திடுகிறது. இனம், மொழி, நிறம் என்ற எந்த வரையறைக்குள்ளும் அடைபடாத வான்பறவையல்லவா காதல். ஆனால் அதை வன்முறைகளின் களமாக அல்லவா நாம் நிறுத்தி வைத்திருக்கிறோம். ஆணவக் கொலைகள், ஆசிட் வீச்சுகள் எனக் காதலின் அத்தனை உன்னதங்களையும் சிதைத்துவிட்டோம். `நம்ம பேச்சைக் கேக்கலையே!’ என ஆணவக் கொலைக்குத் தயாராகிற மனதும், `நம்மளையே வேணாம்னு சொல்லிட்டாளே!’ என ஆசிட் வீச்சுக்கு எத்தனிக்கும் மனதும் வெவ்வேறல்ல. இந்த இரண்டும் வேரோடு அழிக்க வேண்டிய எண்ணங்கள். காதல் இன்னும் ஆண்களின், ஆதிக்கத்தின் பிடியிலிருப்பது முறையற்றது. காதலென்பது ஆழமான நம்பிக்கையளிப்பதும், தீர்க்கமான மரியாதை கொடுப்பதும், உளமார நேசிப்பதும்தான். யார் சொல்வதை யார் கேட்பது என்ற போட்டிக்கு அங்கு என்ன வேலை?
மணமுறிவுக்குப் பிறகான காதல், இணையரின் இறப்புக்குப் பின்பான காதல், திருநங்கைகள் திருநம்பிகளின் காதல், 40 வயதுக்குப் பிறகான காதல் எனப் பொதுப்புத்தியில் எத்தனை காதல்கள் ஏளனம் செய்யப்படுகின்றன. தங்களுக்கு எழுந்த அதே உணர்வுதான் அது என்பதை ஏன் பலரது மனது ஏற்க மறுக்கிறது. எத்தனை தற்கொலைகள், எத்தனை பிரிவுகள், எத்தனை நிராகரிப்புகள் இந்தச் சமூகத்தின் பேச்சுகளால் நிகழ்ந்திருக்கின்றன. `அவுகளதான் பிடிச்சிருந்தது. வீட்டுல சொன்னா வெட்டிப் போட்ருப்பாக!’ எனத் திருமணமே செய்துகொள்ளாத வயதான பெரியம்மாக்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எந்த மனிதனுக்கும் எந்த மனுஷிக்கும் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதைத் தீர்மானிக்கின்ற அல்லது சற்றே உத்தேசிக்கின்ற ஒரு குணம் வேண்டுமானாலும் வாய்க்கலாம். ஆனால் இதுதான் நடக்கும் என்று தீர்மானிக்கின்ற எந்த மனிதர்களும் இந்த உலகில் இல்லை. அப்படியென்றால், எல்லோருமே இந்த வாழ்க்கையில் தாங்கள் போட்டு வைத்திருக்கின்ற இந்தக் கோடுகளுக்குள் அடங்குகின்ற ஆணையோ பெண்ணையோ தேர்ந்தெடுத்து, இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற நடைமுறையையும் திட்டமிட்டுவிடுவார்கள். ஆனால் உண்மையில் அப்படி நிகழ்வதில்லைதான்.
எவற்றையெல்லாம் ஒன்றாகக் கூடித் திட்டமிட வேண்டுமோ, அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு தனி மனித உணர்வான காதலுக்கு மட்டும் எதிர்ப்பெனக் கிளம்புவது எத்தனை அறிவற்ற செயல். பிரியமாக, உயிராக சிலாகித்தவர் தனக்கானவரில்லை என்றதும் ஏன் இந்த மனம் உடனே வெறுக்கிறது. அதெப்படி சாத்தியம். `குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பதுதானே நிஜம்.
75 வயதான கன்னியப்பன் பொம்மைகள் செய்து விற்பவர். பாக்கியம் அவர் மனைவி. 40 வயதில் பாக்கியத்தின் முதல் கணவர் விபத்தில் இறந்துவிட, கன்னியப்பனும் பாக்கியமும் திருமணம் செய்துகொண்டனர். கொரோனா உக்கிரத்தில் இருவரும் நோய்வாய்ப்பட்டனர். கன்னியப்பன் மரித்துப்போனார்.
அந்தச் செய்தியை அறிந்த பாக்கியம் கலங்கிய கண்களோடு, `அந்த மனுஷன் சொல்லிருக்காரு, எது வேணும்னா நடக்கும்... எல்லாத்தையும் கடந்துதான வாழணும்... கண் முன்னாடி இல்லாத யாரும், கூட இல்லாதவங்க ஆக மாட்டாங்கன்னு சொல்லியிருக்காரு!’ என கன்னியப்பன் செய்த பொம்மை ஒன்றைக் கையில் வைத்தபடி சொன்னது இன்னும் நெஞ்சில் நிறைந்திருக்கிறது.
எல்லாமற்ற பொழுதும், எல்லாமுமான பொழுதுகளிலும் காதலைக் கரம்பற்றி உடன் நிற்கிறது. அதை எதைக் கொண்டும் அழிக்கவியலாது என்பதுதான் காலம் சொல்லும் செய்தி.
- கரம்பிடித்துப் பயணிப்போம்...