
ஓவியங்கள்: மினிமலிக்ஸ்
சில ஆண்டுகளுக்கு முன்பு 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரு மாணவன் மாநில அளவிலான இடம் பிடிக்கிறார். மீடியா மைக்குகள் முன்பாக அவர் அதே வழக்கமான லட்சியத்தைச் சொல்கிறார். `மருத்துவராகி ஏழை மக்களுக்குச் சேவை செய்வேன்.' காலம் கடக்கிறது. ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களின் எல்லைகள் சந்திக்கும் புள்ளியில் உள்ள தெங்குமரஹாடா எனப்படும் பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. அங்கு மருத்துவம் பார்ப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பரிசலில் ஏறி ஆற்றைக் கடக்க வேண்டும். நடந்தே செல்ல வேண்டும். அந்த மக்களிடம் பேசி மருத்துவம் பற்றி விளக்க வேண்டும். இதையெல்லாம் செய்து அந்தத் தொல்குடிகளின் சுகாதாரத்துக்கெனப் பணி செய்கிறார், டாக்டராக மாறிய அந்த மாணவர் ஜெயமோகன். அம்மக்களுக்கெனப் பணி செய்துகொண்டே மேற்படிப்புக்காக நீட் தேர்வுக்கும் தயாராகிவந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தபோது அவருக்கு வயது 29. அவர் மரணச் செய்தி கேட்டு அவரின் தாயார் தற்கொலைக்கு முயன்றார். டாக்டர் ஆனதும் அவர் வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து சுக போகமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரின் வாழ்வு லட்சியவாத வாழ்வு. தான் என்ற சிந்தனை கடந்து சமூகம், மக்கள் என்று சிந்திக்கும் மனமும், எண்ணமும் வாய்க்கப்பெற்ற தாயுமானவர்கள் அவர்கள். அந்தத் தொல்குடிகளின் கிராமம் காலத்துக்கும் நினைவில் வைத்திருக்கும் பெயர் `ஜெயமோகன்.'

ஒரு நாளில் பலரால் தம் வாழ்வுக்கான, பிள்ளைகளுக்கான, வேலைக்கான சிந்தனைகளைத் தாண்டவே முடியாத சூழலில் இவர்களுக்கு எப்படி இந்தச் சிந்தனை வருகிறது? எது அவர்களைப் பொதுவாழ்வுக்கெனத் தங்களை ஒப்புக்கொடுக்கச் செய்கிறது? இந்த லட்சியவாதிகளை இரண்டு வகையாகப் பிரித்துவிடலாம். ஒன்று, தன்னளவில் ஒரு முக்கியமான லட்சியவாதியாக இருப்பான். அவன் மிக நேர்மையானவனாக, லஞ்சம் வாங்காதவனாக, யாருக்கும் துரோகம் இழைக்காதவனாக, குறைந்தபட்சம் தன் வாழ்க்கையில் நேர்மையானவனாக இருப்பவன். அவர்கள் என்னைப் பொறுத்தவரையில் சமூகத்தில் இரண்டாம் அடுக்கில் வைத்துப் பார்க்கக் கூடியவர்கள்தான். இதில் முதலிடம், லட்சியவாதத்தை இந்தச் சமூகத்திற்காக மாற்றுபவர்கள். தான் வாழ்கிற சமூகத்திற்கு, தான் ஒரு தனிநபராக இருந்து பங்களிப்பவர்கள் முக்கியமானவர்கள். அவர்கள்தான் இந்த வாழ்க்கையில் பின்பற்றத் தகுந்தவர்கள். இவ்வாறு இருப்பவர்கள் ஊடகத்தின் வெளிச்சம் படாதவர்களாக இருக்கலாம். யாருக்கும் பெரிதாக அறிமுகமாகாதவர்களாகக்கூட இருக்கலாம். அதுபோல் ஒரு நபரை நீங்கள் அடையாளம் கண்டீர்களானால், தொடர்ச்சியாக ஏதோ ஒரு வகையில் இந்தச் சமூகத்திற்குத் தன்னால் இயன்ற பங்கை அளித்துக்கொண்டே இருப்பார். இந்தச் சமூகத்தை ஏற்கெனவே இருக்கின்ற நிலைமையிலிருந்து ஓர் அங்குலமாவது அசைத்து மேலே தூக்கிவிட முடியுமா என முயற்சி செய்வாா். `மக்களுக்கு சேவை செய்வேன்!' என்கிற அரசியல் மேடைப் பேச்சல்ல அது. நிஜமான செயல். அதன் வீரியம் பெரிது. அதற்கான அர்ப்பணிப்பு பெரிது. கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், நம் அனைவரின் பணியும் இந்தச் சமூகத்தோடு தொடர்புடைய ஒன்றுதான். சமூகத்திலிருந்து பிரிந்து நாம் எதையும் செய்திட முடியாது. தொழில், முதலீடு எல்லாமே பிற மனிதர்களோடு பிணைந்ததுதான். ஆனால், எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சக மனிதர்களுக்காக மட்டுமே வாழ்கிற மனிதர்களை நாம் எளிதாகக் கடந்துபோகிறோம்.
அதிகாரத்தால் சுரண்டப்படுகிற எளியவர்களுக்காக கட்டணமில்லாமல் ஆஜராகும் வழக்கறிஞர்கள், வாழ்நாள் முழுக்கச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் செய்கிறவர்கள், ஏதோ ஒரு சமூகக் காரணத்துக்காக பதாகைகள் ஏந்தித் திரிகிற மனிதர்களை நாம் எவ்வளவு அலட்சியமாகப் பார்த்தபடி நகர்ந்திருப்போம். குடியை ஒழிக்க வேண்டும் என டாஸ்மாக்கிற்கு வெளியே போதை மனிதர்களின் காலில் விழுந்து கெஞ்சுகிற நபர்களைக் கேலிப்பொருளாகப் பார்க்கும் முகங்கள்தானே அதிகம். சாதிச் சான்றிதழ் கிடைக்காத தொல்குடிக் குழந்தைகளின் கல்விக்காக சதா வி.ஏ.ஓ ஆபீஸ்களுக்கு அலைகிற மனிதர்கள் எத்தனை மகத்தானவர்கள். கொரோனா காலத்திலும் ஆதரவற்றோர் பிணங்களை அடக்கம் செய்த தன்னார்வலர்கள் எத்தனை எத்தனை பேர். ஊதியம் உண்டென்றாலும் செவிலியர்கள் செய்கிற வேலைகளில் சம்பளம் மட்டும்தான் பிரதானமா?! இன்று நாம் அனுபவிக்கும் பல அரசின் சலுகைகள் தன்னலமின்றி பலர் நடத்திய போராட்டத்தின் விளைவுதான் என்பதை எத்தனை பேர் அறிவோம். `சார் குப்பைய பாக்ஸ்ல போடுங்க சார்!' எனக் கடற்கரையில் கெஞ்சுகிற மனிதர்கள் இருக்கிறார்கள்தானே! குழந்தைகளுக்கு இலவச டியூஷன் எடுக்கிற அக்காக்கள், மாணவர்களுக்கு பீஸ் கட்டுகிற ஆசிரியர்கள் எனச் சிறிதும் பெரிதுமான லட்சிய எண்ணங்கொண்டவர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள். ‘பொதுநலம்’ என்கிற சொல் எவ்வளவு ஆழமானது என்பதை உணர முடியும்.
என் சிறுவயதில் ஜெயகாந்தனின் ‘ஒரு வீடு, ஒரு உலகம், ஒரு மனிதன்' கதையில் ஹென்றி என்கிற கதாபாத்திரத்தைப் படிக்கும்போது, அவரைப்போல் வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஜெயகாந்தனே அவ்வாறுதான் நினைத்தார். ஹென்றி மாதிரி தான் வாழ வேண்டும் என்று நினைத்து, ஹென்றியைப் போல் வாழ முடியாமல், அதே கதையில் வருகிற தேவராஜ் என்கிற ஒரு லாரி ஓட்டுநரைப் போல தான் வாழ முடிந்தது என்று ஜெயகாந்தன் கூறுகிறார். ஹென்றி என்பவன், ஜெயகாந்தனால் பின்பற்ற முடியாத அளவிற்கு உயரத்தில் இருப்பவன். நானும் என் வாழ்க்கையில் ஹென்றி போல் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் மட்டுமல்ல, அந்தக் காலகட்டத்தில் அந்த நாவலை வாசித்த பல பேர், தாங்கள் ஹென்றியைப் போல் வாழ வேண்டும் அல்லது தன்னுடைய மகன் ஹென்றியைப் போல் வாழ வேண்டும் என்று நினைத்திருக்கின்றனர்.
ஒரு லட்சியவாத மனிதனை, ஒரு சமூகம் சுவீகரித்துக்கொள்வது மிக மிக அபூர்வம். ஏனென்றால், இந்த வாழ்க்கையில் நல்ல உணவிற்கு, நல்ல உடைக்கு, நல்ல இருப்பிடத்திற்கு, நல்ல வாழ்க்கைக்கு என்று எல்லோரும் தொடர் ஓட்டம் ஓடியபடி இருக்கின்றனர். இவையெல்லாம் கிடைத்துவிட்டாலும், அதற்கும் மேல், அதற்கும் மேல் என்கிற பேராசை கிளர்கிறது. இந்த மாதிரியான லட்சியவாத மனிதர்களை நின்று கவனிப்பதற்கோ அல்லது அவர்களைப் பொருட்படுத்துவதற்கோகூட நேரமில்லாமல், பரபரப்பான சூழலில் இந்தச் சமூகம் இருக்கின்றது.
‘எதற்கு இந்த ஓட்டம்? ஏன் இவ்வளவு அவசரம்? ஒரு நாள் மொட்டை மாடியில் உட்கார்ந்து ஒரு முழு நிலவைப் பார்ப்பதற்கான தருணத்தை, உன்னுடைய மனதில் இருந்து துடைத்தெறிந்தது எது?’ என்கிற கேள்விகளுக்கு எந்த மனிதனிடமும் பதில்கள் இல்லை. ஆனால் ஓடிக்கொண்டே இருக்கிறான். இயங்கிக்கொண்டே இருக்கிறான். எதையோ சாதிக்கப் போவதாக நினைக்கிறான். ஆனால் இதில் எந்த ஒரு சாதிப்பும் இல்லை. ‘பணம் சம்பாதித்தல், அதைத் தன் பிள்ளைகளுக்குச் சேர்த்து வைத்தல், தன்னுடைய மருத்துவமனைச் செலவிற்கு ஒதுக்கி வைத்தல் என்கிற, லட்சியமே இல்லாத சொந்த வாழ்க்கைக்கான மையத்தில், மனிதர்கள் குவிமயமாக மாறிவிட்டார்களோ’ என்கிற பெரிய கவலை இருக்கிறது.
ஆனால் டாக்டர் அம்பேத்கர், மகாத்மா காந்தி மற்றும் பல தன்னலமற்ற மனிதர்களை சரித்திரம் தனக்குள் இறுக்கி வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. சரித்திரம் தவறவிட்ட பல மகத்தான மனிதர்கள் தெருவில், குடும்பத்தில், தேசத்தில் வாழ்ந்து எந்தச் சுவடும் இல்லாமல் மறைந்தும்போயிருக்கிறார்கள். இந்த மாதிரியான மனிதர்களைப் பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். தேடிக் கண்டுபிடித்து அவர்களுடைய அனுபவத்தை, தங்களுடைய செழுமைகளாக மாற்றி படைப்புகளுக்குள்ளாக நமக்குக் கொடுக்கிறார்கள்.
என்னுடைய ‘மேய்ப்பர்கள்' நூலில் 22 நபர்களை மேய்ப்பர்களாகப் பதிவு செய்திருக்கிறேன். அந்த 22 நபர்களுமே என்னுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்கள். இந்த 22 நபர்களுக்குமே குடும்பங்கள் இல்லையா என்றால், குடும்பம் இருக்கிறது. இவர்களெல்லாம் தங்கள் குடும்பத்திற்குச் சொத்து சேர்த்து வைத்தார்களா என்றால், அது எனக்குத் தெரியாது. ஆனால் இவர்கள் இந்தச் சமூகத்தை அசைத்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘அறம்’ நூலில் வருகிற டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்கிற டாக்டர்.கே, ஒரு வனத்தில் ஒரு யானை இறந்துவிடக்கூடாது என்பதற்காக வாழ்கிறார். ஒரு யானை ஒரு வனத்தில் இருந்து இறக்கிறது என்றால் அந்த வனத்தை நாம் அழிப்பதற்குச் சமம் என்ற உயர்ந்த லட்சியவாதத்தோடு தன் வாழ்நாளெல்லாம் இயங்கிய மனிதர். தன் வாழ்நாளெல்லாம் ஒரு மிக உயர்ந்த லட்சியத்திற்காக இயங்கிக்கொண்டிருந்த மனிதராக அவரைக் காட்டுகிறார், ஜெயமோகன்.
கொங்கு மண்டலத்தில் பவானி என்ற ஊரில் ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர், வி.பி.குணசேகரன். பி.இ படித்து முடிக்கிறார். பொள்ளாச்சி மகாலிங்கம் அவருடைய உறவினர். அப்பா சொல்லி அவருடைய சக்தி சுகர்ஸில் பொறியாளர் வேலை கிடைக்கிறது. ஆனால் ஒரு லட்சியவாத மனிதன் இப்படி அரசு நிறுவனங்களிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ ஒரு முதலாளியின் கீழ் ஒருநாளும் இயங்கவே முடியாது. மனம் வேறெங்கோ அவர்களுக்குச் செயல்பட்டுக் கொண்டே இருக்கும். அதையும் மீறிப் பல பேர் ‘இதுதான் நமக்கு விதித்தது. இது இல்லை என்றால் நம்மால் சாப்பிட முடியாது, பட்டினி கிடந்து சாக வேண்டும்’ என்பதற்காக, லட்சியவாதத்தை இழந்துவிட்டு இந்த தேசத்தின் கோடான கோடி சாதாரண மனிதர்களைப் போல் வாழ்ந்து முடிக்கிறார்கள். ஆனால், குணசேகரன் நான்கைந்து ஆண்டுகள் வேலையில் தாக்குப்பிடிக்க முடியாமல் அதிலிருந்து வெளியேறிவிடுகிறார். இப்போது குணசேகரனுக்கு 75, 76 வயது இருக்கலாம். ஆண்டுக்கு நான்கைந்து முறையாவது அவரை எப்படியாவது சந்தித்துவிடுவேன். ‘பர்கூர் காடுகளில், தாமரைக்கரைப் பகுதிகளில், அந்தியூர்ப் பகுதியில் அவருக்குத் தெரியாத ஒரு பழங்குடி மனிதனின் வீடும் இல்லை. அவருக்குத் தெரியாமல் ஒரு பழங்குடிப் பெண்ணும் இல்லை. ஒரு குழந்தையும் இல்லை’ என்கிற அளவிற்குத் தொல்குடி மக்களோடு தன் வாழ்க்கையை முழுக்க முழுக்க இணைத்துக்கொண்டவர். அவர் குடும்பத்திடம் சென்று எவ்வளவு நாள் ஆகிவிட்டது? அவர் குடும்பத்தோடு இருக்கின்ற வாழ்க்கையில் எவ்வளவு நாள்கள் செலவழித்தார்? இதெல்லாம் நமக்குத் தெரியவே தெரியாது. ஆனால், அவருடைய கால்கள் அந்தத் தாமரைக்கரைக் காடுகளில், பர்கூர்க் காடுகளில் நடந்துகொண்டே இருக்கின்றன. அந்தக் கால்கள் அந்த வனப்பகுதியில் நடப்பது வேறு எதற்காகவும் இல்லை, இந்தப் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை ஓர் அங்குலமாவது நாம் அசைத்து மேலே தூக்கி விட முடியாதா என்கிற மிக உயர்ந்த லட்சியத்திற்காக!
ஒருமுறை குணசேகரன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார், ‘’ஒரு பழங்குடி ஒரு முறத்தில் விதை சாமையையோ, விதை கேழ்வரகையோ, விதை கம்பையோ அந்த மானாவரி நிலத்தில், மலையில் விதைக்கிறபோது கடவுளுக்கு நன்றி செலுத்தி வேண்டுகிறான். ‘கடவுள் தின்றது போக, காத்தவன் தின்றது போக, கள்வன் தின்றது போக, கண்டவன் தின்றது போக, பறவைகள் தின்றது போக, எனக்கும் கொஞ்சம் விளையணும் சாமி' என்று வேண்டிக்கொள்கிறான். இந்த மனத்தைத்தான் பொதுச்சமூகம் தவறவிட்டிருக்கிறது. இந்த அர்ப்பணிப்பான மனத்தைத்தான் பொதுச் சமூகம் கவனிக்கத் தவறியிருக்கிறது.’’

‘கடவுள் தின்றது போக, காத்தவன் தின்றது போக, கள்வன் தின்றது போக, கண்டவன் தின்றது போக, பறவைகள் தின்றது போக, எனக்கும் கொஞ்சம் விளையணும் சாமி’ என ஒரு பழங்குடி மனிதனின் வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகளைவிடப் பெரிய வாழ்க்கை வேதம் எது இருக்க முடியும்!
சில தசாப்தங்களுக்கு முன்பு, பஞ்சத்தால் தேசம் பல உயிர்களை இழந்த நாள்களின் பிறகு ஒரு மாற்றம் நிகழ்ந்தது. கல்வி என்கிற மாபெரும் சக்தியைப் பெற்றிட பலர் எத்தனித்தனர். கிராமப்புறத்திலிருந்து முதல் தலைமுறையாக மருத்துவம் படிக்க, பொறியியல் படிக்க மாணவர்கள் கிளம்பினர். தாய்மார்கள், `நல்லபடியா போய்ட்டு வாங்க சாமி!' என ஆரத்தி எடுத்து, கண்ணீர் பெருக்க தங்கள் நம்பிக்கையை அனுப்பி வைத்தனர். அவர்கள் அந்தக் கிராமத்தின் நம்பிக்கையாகக் கிளம்பினர். நம் சமூகம் கடந்த 40 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி, அந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், கலெக்டர்கள் தந்த மகத்தான பங்களிப்புதான்.

பொதுநலத்தோடு இன்றும் பல லட்சியவாதிகள் இயங்குகிறார்கள். இன்றும் மாநகரப் பூங்காக்களிலும், அரசு நூலகங்களிலும் அரசுப் பணிக்கெனப் படிக்கிறவர்களில் ஊதியம் மட்டுமே இலக்காக இல்லாத சிலர் நிச்சயம் இருப்பர். அவர்கள் பரிசலில் ஏறிப் பயணிப்பர். கால்கடுக்க நடப்பர். அவர்களின் நடைகளின் விளைவாக இந்தச் சமூகமும் ஓர் அங்குலம் நகர்ந்துகொண்டே இருக்கும்.
- கரம்பிடித்துப் பயணிப்போம்